சிவாஜி
தன்னைச் சரியாகத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு முன் முகலாயர்களின் பகையைச் சம்பாதித்துக்
கொள்ள விரும்பாமல் தான் இத்தனை காலம் அவர்களிடம் எந்தப் பிரச்னையும் செய்யாமல் ஒதுங்கியே
இருந்தான். ஒரே காலத்தில் இரண்டு பக்கங்களில் பிரச்னை வைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை.
தற்போது தெற்கில் கர்நாடகத்திலும் வடக்கில் சிவாஜியிடமுமாக ஒரே நேரத்தில் இரண்டு பக்கங்களிலுமே அலி ஆதில்ஷாவுக்குப் பிரச்னை இருந்ததால்
தான் அவனை சிவாஜியால் தோற்கடிக்க முடிந்தது. அதே நிலைமையில் தானும் சிக்க விரும்பாமல்
தான் சிவாஜி பீஜாப்பூர் அரசை சமாளித்து வரும் இந்த நேரத்தில் முகலாயர்களிடம் ஒதுங்கியே
இருந்தான். ஆனால் சிவாஜியின் அடுத்த இலக்கு தாங்களாக இருக்கலாம் என்று ஔரங்கசீப் ஊகித்து
விட்டது போல் இருந்தது அவன் செயிஷ்டகானை அத்தனை பெரிய படையுடன் அனுப்பி விட்டிருந்த
செய்தி.
சிவாஜி உடனடியாக நண்பர்களையும், ஆலோசகர்களையும், படைத்தலைவர்களையும்
அழைத்து கலந்தாலோசித்தான்.
“செயிஷ்டகான் படை நம் எப்பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது
சிவாஜி” தானாஜி மலுசரே கேட்டான்.
“பூனாவை நோக்கித் தான் வந்து கொண்டிருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது.
மூன்று நாட்களில் அவர்கள் பூனாவை நெருங்கி விடக்கூடும்.” என்று சொன்ன சிவாஜியிடம் அடுத்த
ஆணையை அனைவரும் எதிர்பார்த்தார்கள்.
சிவாஜி சொன்னான். “ராஜ்கட் கோட்டைக்கு இடம் பெயர்வோம்”
இது போன்றதொரு நிலைமை எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும்
என்று முன்கூட்டியே எதிர்பார்த்திருந்த சிவாஜி சகாயாத்ரி மலைத்தொடரில் இருக்கும் ராஜ்கட்
கோட்டையை முன்பே மிகவும் வலிமைப் படுத்தி இருந்தான். அங்கு இடம் பெயர்வது சுலபமானது
மட்டுமல்ல, தேவைப்படும் போது விரைவாக பூனாவுக்குத் திரும்பி வருவதும் சாத்தியமே.
செயிஷ்டகான்
அகமது நகரிலிருந்து பூனாவை நோக்கித் தன் படையுடன் வந்து கொண்டிருந்த போது அதிருப்தியான
மனநிலையிலேயே இருந்தான். சிவாஜியை வென்று வருவது அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே தன் தகுதிக்குக்
குறைவான வேலையாகவே தோன்றி வந்தது. ஷாஜஹான் காலத்திலிருந்தே பல போர்கள் கண்டவன் அவன். சிறந்த போர்த்தளபதி மட்டுமல்ல
சிறந்த நிர்வாகியுமாகக் கருதப்படுபவன் அவன். முந்தைய முகலாயச் சக்கரவர்த்தியின் மனைவியின்
தம்பி அவன். இன்றைய சக்கரவர்த்தியின் தாய் மாமன் அவன். இன்று முகலாய சாம்ராஜ்ஜியத்தில்
ஔரங்கசீப்புக்கு அடுத்தபடியாக பலராலும் மதிக்கப்படுபவன். இப்படிப் பல பெருமைகள் கொண்ட
அவனை, சுண்டைக்காயான சிவாஜியை வெல்ல ஔரங்கசீப் அனுப்புவது கௌரவக்குறைவான நியமனமாகவே
அவனுக்குத் தோன்றியது.
தக்காணப் பீடபூமியின் முகலாய கவர்னராக அவன் இருந்த போதும்
அவனே சிவாஜியை வெல்லச் செல்ல வேண்டியதில்லை என்றும், அவனிடம் திறமை வாய்ந்த சில படைத்தளபதிகள்
இருக்கிறார்கள் என்றும் சூசகமாக செயிஷ்டகான் ஔரங்கசீப்பிடம் சொல்லிப் பார்த்தான். ஆனால்
அவர்களால் எல்லாம் அது முடியாத காரியம் என்று ஔரங்கசீப் எடுத்த எடுப்பிலேயே மறுத்த
போது, மருமகன் அனாவசியமாக சிவாஜியை உயர்த்திப் பார்ப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவன்
அதை ஔரங்கசீப்பிடம் நாசுக்காகச் சொல்லியும் பார்த்தான்.
ஔரங்கசீப் அமைதியாகச் சொன்னான். “இலக்கு மிகத் தெளிவாக ஒருவனுக்கு
இருக்குமானால், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய அவன் தயாராகவும் இருப்பானானால் அவனைக்
குறைத்து மதிப்பிடுவது அவன் எதிரி செய்யக்கூடிய மகத்தான முட்டாள்தனமாக இருக்கும் மாமா”
செயிஷ்டகானுக்கு ஔரங்கசீப்பின் கூர்மையான அறிவு குறித்து
எந்தச் சந்தேகமும் இல்லை. தன்னைச் சுற்றி இருப்பவர்களைத் துல்லியமாகக் கணிக்க முடிந்தவன்
ஔரங்கசீப். குழப்பமான சூழ்நிலைகளிலும் ஆழமாய் உள் சென்று தெளிவான முடிவுகளை எடுக்க
வல்லவன் அவன். ஆனால் பேரறிவுக்கு இணையாக சந்தேகப் புத்தியும் அவனிடம் நிறையவே இருந்தது.
ஒவ்வொருவரும் அவனுக்கு எதிராகச் செயல்பட்டு விடுவார்களோ என்ற சந்தேகக் கண்ணோடு தான்
பார்ப்பான். அதனாலேயே பெரும்பாலான சமயங்களில் அதிஜாக்கிரதையாகவே அனைவரிடமும் இருப்பான்.
அந்த அதிஜாக்கிரதை உணர்வு சற்று அதிகமாக மேலோங்கியதால் தான் இப்போது ஔரங்கசீப் சிவாஜியை
வலிமையான எதிரியாக நினைக்கிறானோ என்று செயிஷ்டகானுக்குத் தோன்றினாலும் அதை வெளியே சொல்லும்
தைரியம் அவனுக்கு வரவில்லை.
ஔரங்கசீப்பை எதிர்த்துப் பேசும் தைரியம் அவனுடைய மூத்த சகோதரி
ஜஹானாரா பேகத்தைத் தவிர மற்றவர்களுக்கு இருக்கவில்லை. அவள் ஒருத்தி தான் மனதில் தோன்றுவதை
எல்லாம் வெளிப்படையாக அவனிடம் நேரடியாகவே சொல்லக்கூடியவள். அவள் சொல்வது பிடிக்கா விட்டாலும்
அவள் அவனை வளர்த்தவள் என்ற காரணத்தினாலும், அவள் இயல்பிலேயே நியாய உணர்வு மிக்கவள்,
நல்லவள் என்ற காரணத்தினாலும் ஔரங்கசீப் அவளைப் பொறுத்துக் கொண்டானே ஒழிய மற்றவர்கள்
யாராக இருந்தாலும் எதிர்த்துப் பேசுபவர்களை எதிரியாகக் கருதும் மனப்போக்கு அவனிடம்
இருந்தது. அதனாலேயே பயந்து மருமகனிடம் அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் செயிஷ்டகான் தக்காணப்
பீடபூமிக்குக் கிளம்பி விட்டிருந்தான்.
பெரும்படையை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்திச்
செல்வது எளிமையான காரியம் அல்ல. தனி மனிதர்கள் செல்வது போல விரைந்து சென்று விட முடியாது.
மெல்லச் செல்லும் படை எப்போது பூனா சென்று சேருமோ என்ற சலிப்புணர்வு மேலோங்க செயிஷ்டகான்
தன் படைத்தலைவனிடம் கேட்டான். “எப்போது பூனா சென்று சேர்வோம்?”
“இரண்டு நாட்கள் ஆகும் பிரபு” என்றான் அவனது படைத்தலைவன்.
சிவாஜியை அவன் சுண்டைக்காய் என்று துச்சமாக நினைத்தாலும்
படைத்தலைவன் கருத்து என்னவாக இருக்கும் என்று அறியும் ஆவல் மேலிட செயிஷ்டகான் படைத்தலைவனிடம்
கேட்டான். “சிவாஜி இந்த முறை நம்மிடம் சிக்க
வேண்டும் என்று சக்கரவர்த்தி எதிர்பார்க்கிறார். அவர் எதிர்பார்ப்பை நம்மால் எளிதில்
நிறைவேற்ற முடியுமா?”
படைத்தலைவன் சொன்னான். “அவனுடைய கோட்டைகளையும் இடங்களையும்
நம் படைவலிமையால் கைப்பற்றுவது எளிது தான் பிரபு. ஆனால் அவனையே பிடிப்பது அவ்வளவு எளிதான
காரியம் அல்ல. அவன் மலை எலி போன்றவன் பிரபு. மலையே தீப்பிடித்து எரிந்தாலும் மலையில்
வாசம் செய்யும் எலி அந்தத் தீக்கிரையாகி விடுவதில்லை. அது மிக ஆழமான, பாதுகாப்பான பொந்துகளுக்குள்
பதுங்கிக் கொண்டு விடும். தீ அணைந்து வெப்பம் தணிந்த பின் தான் அது வெளியே வரும். அவனும்
ஆள் அகப்பட மாட்டான் பிரபு. சகாயாத்ரி மலைத்தொடர் அவனுக்குச் சொந்த வீட்டை காட்டிலும்
நெருக்கமானது. அவன் விளையாடி வளர்ந்த இடம் அது. யாரும் அறியாத இடங்களில் எளிதாக அவனால்
பதுங்கிக் கொள்ள முடியும்”
செயிஷ்டகான் அந்தப் பதிலில் ஏமாற்றமடைந்தான். ஔரங்கசீப் கோட்டைகளையும்,
இடங்களையும் கைப்பற்றுவதற்கு முக்கியத்துவம் தரவில்லை. சிவாஜியைப் பிடிப்பதற்குத் தான்
முக்கியத்துவம் தந்துள்ளான். நினைத்த அளவு வேகமாக வேலையை முடித்துக் கொண்டு திரும்ப
முடியாது போலிருக்கிறதே என்று எண்ணி செயிஷ்டகான் பெருமூச்சு விட்டான்.
சிவாஜி
தன் குடும்பத்தோடும், படையோடும் பூனாவை விட்டுக்
கிளம்பி விட்டான். செல்வதற்கு முன் பூனாவின்
நிர்வாக அதிகாரிகளையும், குடிமக்களில் முக்கியஸ்தர்களையும் அழைத்துச் சொன்னான்.
“முகலாயப் படைகள் இங்கே வருகிற போது நீங்கள் யாரும் அவர்களை
எதிர்க்க வேண்டாம். இப்போதைக்கு அவர்கள் சொல்கிற
படியே நடந்து கொள்ளுங்கள். அவர்கள் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டும் மதித்துமே நடந்து கொள்ளுங்கள்.
இது நமக்குத் தற்காலிக அசௌகரியமே. அவர்கள் இங்கு நிரந்தரமாகத் தங்கி விட நான் அனுமதிக்க
மாட்டேன். இது நம் பூமி. என்றும் இது நம்முடையதாகவே இருக்கும்….”
அவன் மிக அமைதியாகவும், உறுதியாகவும் சொன்ன விதம் அவர்கள்
மனதில் ஆழமான நம்பிக்கையை விதைத்தது. அவர்களைப் பொருத்த வரை அவன் வாக்கு தெய்வத்தின்
வாக்கைப் போல நிச்சயமானது. அவன் சொன்னதைத் தவிர வேறு விதமாக நடக்க வாய்ப்பே இல்லை.
அவர்கள் அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்லி வழி அனுப்பி வைத்தார்கள்.
சிவாஜியின் குடும்பமும் படையும் பூனாவிலிருந்து சகாயாத்ரி
மலைத் தொடரில் ராஜ்கட் கோட்டையை நோக்கி வேகமாகக் கிளம்பியது. பயணம் தொடங்கிய சிறிது
நேரத்திற்குள் சிவாஜியின் மனைவி சாய்பாய் மயக்கம் அடைந்து விழுந்தாள். வைத்தியர் விரைந்து
வந்து அவளுக்கு முதலுதவி சிகிச்சை செய்து மயக்கம் தெளிய வைத்தார். மயக்கம் தெளிந்து
கண் விழித்த போதும் சாய்பாய் பலவீனமாகவே காணப்பட்டாள்.
பயணத்தை நிறுத்தி, இளைப்பாற்றி, முழுமையான சிகிச்சை செய்த
பின் பயணம் தொடர அவர்களிடம் காலமில்லை. தாமதிக்கும்
ஒவ்வொரு கணமும் கூடுதல் ஆபத்தை விளைவிக்கலாம்….
எல்லோரும் செய்வதறியாமல் திகைத்துக் கலங்கி நிற்கையில் சிவாஜி
அதிகம் யோசிக்காமல் மனைவியைத் தூக்கி தன் மேல் சாய வைத்தபடி இருத்திக் கொண்டு குதிரையை
வேகமாகச் செலுத்தினான். சற்று முன் செயலிழந்து
திகைத்து நின்றவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீண்டு தெளிவு பெற்று அவனை வேகமாகப் பின்
தொடர்ந்தார்கள்.
(தொடரும்)
என்.கணேசன்