சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 14, 2018

இருவேறு உலகம் – 87

னிதன் மிக உறுதியாக ஒன்றை நம்பும் போது எல்லாவற்றையும் அந்த நம்பிக்கையின்படியே மாற்றிக் கொண்டு காண்கிறான். அதன்படியே ஏற்றுக் கொள்கிறான் அல்லது ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். ஒவ்வொன்றையும் பிரபஞ்ச சக்தியின் அங்கமென்ற நிலையிலேயே இருந்து, விருப்பு வெறுப்பில்லாமல் அலசி ஆராய்ந்து உண்மையைத் தெரிந்து தெளிய வேண்டும் என்று மாணவனுக்குப் பாடம் நடத்தி இருந்த போதிலும், அதைத் தானே தவற விட்டு விட்டதாய் மாஸ்டர் முதல் முறையாய் உணர்ந்தார். அவர் நம்பியதற்கு எதிரான எதையும் தெரிந்து கொள்ளக்கூட ஆர்வம் காட்டவில்லை….

குற்றவுணர்ச்சியுடன் மாஸ்டர் க்ரிஷைக் கேட்டார், “க்ரிஷ் அந்த அமாவாசை ராத்திரிக்குப் பிறகு நீ திரும்பி வரும் வரை என்ன நடந்ததுன்னு உன்னால மறைக்காமல் சொல்ல முடியுமா?”

க்ரிஷ் எதையும் ஒளிக்காமல் அவரிடம் சொன்னான். வாரணாசி பாழடைந்த காளி கோயிலுக்கு எதிரி போனதையும், அவர் போனதையும் அவன் காட்சியாய்க் கண்டதைச் சொன்ன போது அவர் சிலையாய் சமைந்தார். ‘முதல் ஆள் உன் எதிரி. இரண்டாம் ஆள் உன்னை எதிரியின் ஆளாய் பார்க்கிறவர். முதல் ஆளுக்கு ரகசியம் முக்கியம், இரண்டாம் ஆளுக்கு முகூர்த்தம் முக்கியம்!......’ காளிகோயிலில் இருந்த அவர்களுடைய ரகசியக் குறிப்பை எதிரி எடுத்துச் சென்றதை அவர் வேறு ஒருவரிடமும் இது வரை சொல்லி இருக்கவில்லை. அவருக்கு முன்பே எதிரி அந்தக் கோயிலுக்குப் போன காட்சியை க்ரிஷ் கண்டிருப்பது தற்செயல் அல்ல…..

“ஒன்றே ஒன்றைச் செய்திருக்கிறேன். உன் எதிரி எல்லார் உள்ளங்களையும் படிக்க முடிந்த அளவு உயர்ந்த சக்தி படைத்தவன். அவன் கூட உன் மனதைப் படிக்க முடியாத அளவு உனக்குள் ஒரு மிக நுட்பமான ப்ரோகிராம் போட்டு சக்தி வாய்ந்த பாதுகாப்பு வளையம் போட்டிருக்கிறேன்.” க்ரிஷ் மனதை அவரால் ஏன் ஊடுருவ முடியவில்லை என்பது இப்போது புரிந்தது. க்ரிஷை லாரி விபத்திலிருந்து காப்பாற்றிய சில நிமிடங்களில் வேற்றுக்கிரகவாசி பூமி எல்லையைத் தாண்டிப் போனது உண்மையாகவே இருக்க வேண்டும். அப்படியானால் க்ரிஷை அவர் சந்தித்த முதல் சந்திப்பில் அவர் மனதை ஆக்கிரமிக்கப் பார்த்தது அந்த வேற்றுக்கிரகவாசியாக இருக்க வாய்ப்பில்லை. உண்மையான எதிரி வேறு…. அவர் தான் குழம்பி இருக்கிறார்…. ஆனாலும்  அதே தெளிவில் அவரால் தொடர்ந்து இருக்க முடியவில்லை. பரஞ்சோதி முனிவர் சொன்னது க்ரிஷை எதிரி பயன்படுத்தி பேரழிவை ஏற்படுத்த முயற்சிப்பது போல் தான் தோன்றியது….. குழப்பம் நீடித்தது.

க்ரிஷ் விடைபெறும் போது, முன்பே சொன்ன இரண்டாம் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்படி சொல்லிவிட்டு அவர் கண்களை மூடியபடி சொன்னார். “நீ வாரணாசி கோயிலில் இருட்டிலும் எதிரியை நிழலாகவாவது பார்த்திருக்கிறாய். அந்தக் காட்சியை அடிக்கடி உன் மனதில் கொண்டு வா. மேலும் நன்றாகக் கவனி. முதல் தடவை பார்த்த போது உன் மேல்மனம் கவனிக்க மறந்திருந்த எத்தனையோ விஷயங்களை கண்டிப்பாக உன்னால் தெரிந்து கொள்ள முடியும். உன் அலைவரிசைக்கு ஒரு தடவை கிடைத்த அவன் கண்டிப்பாக இனியும் கிடைக்காமல் போக வாய்ப்பில்லை……”

அவன் போய் அரை மணி நேரத்தில் ஹரிணி மாஸ்டருக்குப் போன் செய்தாள். ஐந்தே நிமிடம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டவள் க்ரிஷின் தாய் க்ரிஷை உணர்ந்தது போல, தான் உணராமல் போகக் காரணம் என்ன என்று கேட்ட போது மாஸ்டர் சத்தமில்லாமல் சிரித்தார். ஒரு ஆணின் வாழ்க்கையில் தாயிற்கும், மனைவிக்கும் போட்டி ஏற்படுவது எல்லா இடங்களிலும் நிகழக்கூடிய வேடிக்கையாகவே தோன்றியது.

“…அதுக்கு அவரை நான் நேசிக்கிறது கம்மிங்கற அர்த்தமா மாஸ்டர், அவங்கம்மா அளவுக்கு நான் அவனை நேசிக்கலையா….?”

மாஸ்டர் புன்னகையுடன் சொன்னார். “அப்போ அவன் மேலே நீ கோபமாகவும் இருந்தாயே ஹரிணி. அது உங்களுக்கிடையே அலைவரிசைகளை அடைச்சு நின்னுருக்கலாம்……”

அவளுக்கு ஓரளவு மனம் சமாதானமடைந்தது. ”சரி நாங்க ரெண்டு பேரும் தொலை தொடர்பு ஏற்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்ய உத்தேசிச்சுருக்கோம்….. அதுக்கு எனக்கு ஏதாவது டிப்ஸ் குடுங்க மாஸ்டர்….”

மாஸ்டர் சில நிமிடங்கள் பேசினார். அவள் முழு ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டாள்.


ன்றிரவெல்லாம் யோசித்தும், மறுநாள் காலை யோசித்தும் க்ரிஷுக்கு என்ன தகவல் அனுப்புவதென்பதை ஹரிணியால் முடிவு செய்ய முடியவில்லை. மிக வித்தியாசமான, கண்டுபிடிக்கவே மிகவும் கஷ்டமான ஏதாவது ஒன்றை அனுப்பி அதை அவன் சரியாகப் பெற்று சொன்னால் தான் உண்மையான வெற்றி என்று அவளுக்குத் தோன்றியது.  பல வித்தியாசமான தகவல்களை யோசித்து ஒவ்வொன்றையும் ஒதுக்கி வைத்துக் கடைசியில் ஹரிணி திருக்குறளைத் தேர்ந்தெடுத்தாள்.

மாஸ்டர் எந்த ஆழ்மனசக்தியைப் பயன்படுத்துவதற்கும் அமைதியான பரபரப்பில்லாத மனநிலை முக்கியம் என்று சொல்லி இருந்தார். முதலில் உணர்வு ரீதியாக அவனை நெருங்கி இருந்தால் அனுப்பும் தகவல் வெற்றிகரமாகச் சென்றடையும் என்றும் சொல்லி இருந்தார். தியானம் எல்லாம் அவளுக்கு சரிப்பட்டு வராது என்று தோன்றியது. அதனால் அவளுக்கு மிகவும் பிடித்தமான வீணை இசையை அரை மணி நேரம் கேட்டாள். மனம் தானாக லேசாகியது. க்ரிஷை நினைத்தாள். உணர்வு ரீதியாக அவனை நெருங்கி இருப்பதாக நினைக்க முயற்சித்தாள். அவன் அருகிலேயே இருப்பது போலவும் காதலோடு அவனைப் பார்ப்பது போலவும் நினைத்தாள். நெருக்கம் என்றவுடன் அவனை முத்தமிடத் தோன்றியது. இதெல்லாம் சரியான வழியா  என்று தெரியவில்லை. ஆனாலும் முத்தமிடத் தோன்றியது. நெருக்கமாக உணர்வது தான் முக்கியம் என்பதால் அப்படி உணர கற்பனையில் முத்தம் தருவது தவறில்லை என்று தோன்றியது. முத்தமிட்டாள். முன்பே உணர்ந்ததைத் திரும்பவும் உணர்வது எளிதாக இருந்தது. ஆழமான முத்தத்திற்குப் பிறகு வழக்கம் போல் விலகிக் கொண்டு திருக்குறள் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அவனுக்குத் தருவது போல் கற்பனை செய்தாள். முன்பே நிச்சயித்தபடி சுமார் பத்து நிமிடம் ஆழமாக நினைத்து தகவல் அவனைச் சென்றடைவதாக மனதில் காட்சிப்படுத்திப் பார்த்தாள்.

அந்த நேரத்தில் அமைதியாக தனதறையில் அமர்ந்திருந்த க்ரிஷ் அவளிடம் இருந்து வரும் தகவல் என்ன என்பதை உணரக் கண்களை மூடிக் காத்திருந்தான். அவளையே நினைத்துக் கொண்டிருந்தான். அவள் எதிரில் இருப்பது போல நினைத்தான். அதொன்றும் கஷ்டமாக இல்லை. சுலபமாக அவள் அங்கு இருப்பதாக நினைக்க மட்டுமல்லாமல் உணரவும் முடிந்தது. தகவலுக்காக அவன் காத்திருந்தான். ஆனால் தகவலுக்குப் பதிலாக அவளே அருகில் வந்தாள். அவனைக் காதலுடன் பார்த்தாள். முத்தமிட்டாள்….. அவன் உதடுகள் அவள் உதடுகளைத் தெளிவாகவே உணர்ந்தது….. கண்களைத் திறந்து கொண்டான். மனம் தனியாகச் சுதந்திரம் வாங்கிச் செயல்பட்டது போல் இருந்தது….. முக்கியமான பரிசோதனைகள் நடக்கும் போதும் முரண்டுபிடிக்கும் மனதின் மீது கோபம் வந்தது. அதையும் ஒரு தடையாக எண்ணி விலக்கி மூச்சுப்பயிற்சிகள் செய்து மனதை அமைதியாக்கி அவன் தகவலுக்காக காத்திருந்தான்…… ஒன்றும் வந்து சேரவில்லை. மனம் கற்பனையாக எதையெல்லாமோ நினைக்க ஆரம்பித்தது…..

அவள் ஒரு மணி நேரம் கழித்து ஆர்வத்துடன் போன் செய்தாள். “என்னடா அனுப்பின தகவல் கிடைச்சுதா? என்னன்னு சொல்லு பார்க்கலாம்….”

“ஒன்னும் வரலை”

அவள் ஏமாற்றமடைந்தாள். “என்னடா இப்படிச் சொல்றே”

“நீ என்ன தகவல் அனுப்பினாய்?”

“திருக்குறள் படிக்கற மாதிரி…..”

“இங்கே நான் உணர்ந்தது என்ன தெரியுமா?” க்ரிஷ் குரலைத் தாழ்த்திக் கேட்டான்.

“என்ன?”

க்ரிஷ் தன் அறைக்கதவைப் பார்த்தான். உதய் இது மாதிரி சமயங்களில் மூக்கில் வியர்த்தது போல அங்கே வந்து சேர்வான்…. நல்ல வேளையாக அவன் ஹாலில் சத்தமாக யாரிடமோ போனில் பேசுவது கேட்டது…… க்ரிஷ் மெல்லச் சொன்னான். “நீ முத்தம் தர்ற மாதிரி தான் உணர்ந்தேன்……”

ஹரிணி ஆனந்தமாகக் கேட்டாள். “சத்தியமாவாடா….. நான் அதுல தான் ஆரம்பிச்சேன். நெருக்கமா இருக்கறதா உணர்றது அதுல சுலபமா இருந்துச்சு….. ஆனா அது ரெண்டு நிமிஷம் தான். அப்புறமா எட்டு நிமிஷம் திருக்குறளைத் தாண்டா நினைச்சேன்…. முத்தம் அளவுக்கு திருக்குறள் ஆத்மார்த்தமா நினைக்கல போல……”

க்ரிஷ் சிரித்துக் கொண்டே சொன்னான். “தயவு செஞ்சு இனிமே இந்த மாதிரி எதையும் ஆரம்பிக்காதே….. என் கவனத்தைக் கலைக்காதே…..”

“சரி சரி பாடத்தை ஆரம்பிக்காதே. என்னோட முதல் பரிசோதனை பாதி வெற்றியடைஞ்சுடுச்சு. அது போதும் எனக்கு. சாயங்காலம் நீ அனுப்பற செய்தி எனக்கு கிடைக்குதா பார்க்கலாம்” என்று சொல்லி பேச்சை அவசரமாக முடித்துக் கொண்டாள்.  

க்ரிஷ் அடுத்து செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். எதிரியைப் பற்றி அவர் சொன்னது இப்போதும் அவன் காதுகளில் ஒலித்தது. ”உன் அலைவரிசைக்கு ஒரு தடவை கிடைத்த அவன் கண்டிப்பாக இனியும் கிடைக்காமல் போக வாய்ப்பில்லை……” அவர் சொன்னபடி உடனடியாக முயற்சி செய்யத் தோன்றியது….

(தொடரும்)
என்.கணேசன்


3 comments:

 1. Master's realization is touching and the telepathy experiments between the lovers is romantic as well as realistic. Super sir.

  ReplyDelete
 2. அருமையான தத்துவத்துல ஆரம்பித்தற்கு ஏற்ப.... அதன் வேகத்துலையே... இந்த பகுதி முழுவதும் அருமையாக இருந்தது...

  ஒருவேளை பரஞ்சோதி முனிவர் சொன்ன ஆள்... மர்ம மனிதனாக இருக்குமோ? மர்ம மனிதனைத்தான்... தீய சக்தி தேர்ந்தெடுத்திருக்கிறதோ?

  டெலிபதி பற்றி தாங்கள் ஆழ்மன சக்திகளில் குறிப்பிட்டதை... இங்கு கிரிஷ்,ஹரிணி மூலம் பயன்படுத்தும் முறைபற்றி கூறியதற்கு நன்றிகள்...

  ReplyDelete
 3. க்ருஷ தன் ஆழ்மன சக்தியால்
  மர்ம மனிதனை உணர்வானா ...

  ReplyDelete