சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 7, 2018

இருவேறு உலகம் – 86


க்ரிஷ் அமெரிக்காவுக்குப் போய் ஸ்டீபன் தாம்சனைச் சந்தித்துப் பேசி எதிரி பற்றிய தகவல்களை அறிந்து வருவது தான் நல்லது என்று தீர்மானித்த பிறகு உதய் இரண்டு விஷயங்களை அதிமுக்கியமாக நினைத்தான். ஒன்று க்ரிஷின் பாதுகாப்பு. இன்னொன்று க்ரிஷ் போய் வருவது குறித்த ரகசியத்தைப் பாதுகாப்பது. இந்தியாவில் க்ரிஷின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பிரச்னை இல்லை. வெளிநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்கிற போது நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. ஒருவேளை இந்தப் பயணம் குறித்து எதிரிகள் அறிந்து விட்டால் வெளிநாட்டில் க்ரிஷை பாதுகாப்பது மிகவும் கஷ்டம் என்று தோன்றியது. உடனே அவன் அமெரிக்காவில் இருக்கும் தன் நண்பன் ஒருவனிடம் பேசினான். அமெரிக்காவில் நம்பகமான தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் நிறைய இருக்கின்றன என்றும் அங்கு க்ரிஷ் கால் வைத்தவுடன் அவன் பாதுகாப்பை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் பாதுகாப்புக் கட்டணம் மட்டும் சற்று அதிகமாக இருக்கலாம் என்றும் அந்த நண்பன் சொன்னான். உதய் பணம் ஒரு பிரச்னையே இல்லை என்று சொல்லி பாதுகாப்புக்கான ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி விட்டான். அவன் அடியாட்களை விசாரித்ததில் இப்போது யாரும் க்ரிஷைக் கண்காணிக்கவோ, பின் தொடர்வதோ இல்லை என்று உறுதியாகச் சொன்னார்கள். உதய் தம்பியிடம் சொன்னான். “நீ அமெரிக்கா போறதை யார் கிட்டயும் சொல்லாதே…..”

க்ரிஷ் சொன்னான். “மாஸ்டர் கிட்டயும், ஹரிணி கிட்டயும் மட்டும் சொல்றேன்…..”

ஹரிணியிடம் சொல்வதாகச் சொன்ன உடனேயே உதய் சிரித்தான். “அன்னைக்கு வாங்கின அடி நல்லா வேலை செஞ்சிருக்கு போல. இப்ப எல்லாம் அவ கிட்ட நீ எதையும் மறைக்கறதே இல்லை….”

க்ரிஷ் அண்ணனை முறைத்தான். ஆனால் அவன் கை அவனையுமறியாமல் கன்னத்தை மெல்லத் தடவியது. அதைக் கவனித்த உதயின் சிரிப்பு அதிகமாகியது.

பழைய புத்தி அண்ணனை அடிக்கச் சொன்ன போது உடனே மாஸ்டர் சொன்னது நினைவுக்கு வந்து அடிக்கப் போகும் எண்ணத்தை க்ரிஷ் விலக்கித் தானும் சிரித்தான். தம்பி அடிக்க வருவான் என்று எதிர்பார்த்துத் தயாராக இருந்த உதய்க்கு அவன் அப்படிச் செய்யாமல் இருந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தம்பியை சீண்டி அவனுடன் சண்டை போடுவதில் கிடைக்கும் சந்தோஷம் நழுவிய ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு  சொன்னான். “அவ கிட்ட சொன்னா அவ மணீஷ் கிட்ட சொல்லிட வாய்ப்பிருக்கு…..”

க்ரிஷ் சொன்னான். “மணீஷ் கிட்டக் கூட சொல்லாதேன்னு தெளிவா சொல்லிடறேன்….”

க்ரிஷ் ஸ்டீபன் தாம்சனிடம் போனில் பேசி அப்பாயின்மெண்ட் வாங்கினான். இந்தியாவில் இருந்து பேசுவதாகச் சொன்னவுடனேயே இந்தியா பற்றிய நல்ல நினைவுகளை அவனிடம் பகிர்ந்து கொண்ட அவர் அடுத்த வார ஆரம்பத்திலேயே அவனுக்கு அப்பாயின்மெண்ட் கொடுத்தார். எதற்காகக் காண அவன் வருகிறான் என்று அவர் கேட்ட போது அவர் எழுதிய புத்தகம் சம்பந்தமான சில விஷயங்களை அவருடன் விவாதிக்க நினைப்பதாக க்ரிஷ் சொன்னான். ஏதோ அவர் சொல்ல வாய் திறந்து பின் நிறுத்திக் கொண்டது போல் க்ரிஷுக்குத் தோன்றியது. என்னவாக இருக்கும் என்று யோசித்ததில் விடை கிடைக்கவில்லை.


க்ரிஷ் நேரில் ஹரிணியிடம் தன் அமெரிக்கப் பயணத்தைச் சொல்லி மணீஷ் உட்பட யாருக்கும் தெரிய வேண்டாம் என்ற போது ஹரிணி தங்கள் நண்பனான மணீஷிடம் சொல்லாமல் இருக்கக் காரணத்தை க்ரிஷின் கண்களில் தேடினாள். கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் போகிறவன் சீக்கிரமே வந்து விடுவான் என்பது அவளுக்குப் பெரும் ஆசுவாசத்தைத் தந்தது. ”நீ அங்கே போறதும் உன்னோட அந்த எதிரி பத்தி விசாரிக்கத் தானா?” என்று அவள் கேட்ட போது அவன் ஆமென்று தலையசைத்து விட்டு செந்தில்நாதன் இமயமலை சாது மூலமாக எதிரி பற்றி அறிந்து சொன்னதைச் சொன்னான். ஹரிணிக்கு எதிரியின் நோக்குவர்மத் திறனையும் கேட்டு பிரமிப்பு அதிகமாகியது. இப்படிப்பட்டவன் க்ரிஷுக்கு எதிரியாக இருக்கிறானே என்று எண்ணிய போது அவளுக்குப் பயமும், கவலையும் மனதில் படர ஆரம்பித்தது. க்ரிஷின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சொன்னாள். “ஜாக்கிரதையா இருடா க்ரிஷ்”

க்ரிஷ் தலையசைத்தான். சிறிது நேரம் இருவரும் கைகளைக் கோர்த்தபடி பேசாமல் மௌனமாக இருந்தார்கள். அந்த ஸ்பரிசத்தில் மனம் லேசாவது போல் ஹரிணி உணர்ந்தாள். சிறிது நேரம் கழித்துச் சொன்னாள். “இந்த மாதிரி சக்திகள் பத்திக் கேட்கறப்பவே பிரமிப்பாய் இருக்கு. இல்லையா?”

“இந்த பிரம்மாண்டமான சக்திகள் முழுசா இல்லாட்டியும் ஓரளவாவது, முயற்சி செய்தா ஒவ்வொருவனுக்கும் முடியற விஷயம்னு மாஸ்டர் சொல்றார். நாம நம்மை அறியாமலேயே அந்த சக்திகளை சில நேரங்கள்ல தொட்டுடறோம்கிறார் அவர்…..” என்றவன் அவன் எங்கோ இருந்து அம்மா என்றழைத்ததை இங்கிருந்து பத்மாவதி உணர்ந்து திரும்பிப் பார்த்ததை மாஸ்டர் குறிப்பிட்டதைச் சொன்னான். ”அன்பு அதிகமாகறப்ப அந்த மாதிரி மன அலைகள்ல இணைப்பு ஏற்பட்டுடும்னு சொல்றார்”

ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டு பிரமித்த அவள் பின் மெல்லக் கேட்டாள். “நீ அந்த நாட்கள்ல என்னை ஒரு தடவையாவது நினைச்சுப் பார்த்தாயா?”

பிடித்திருந்த அவள் கையை இறுக்கிய க்ரிஷ் “நிறைய தடவை” என்றான்.

“எனக்கு மட்டும் ஏண்டா அப்ப எல்லாம் ஒன்னும் தோணலை….. உன் அம்மா அளவுக்கு நான் உன்னை நேசிக்கலையோ”

க்ரிஷ் குறும்பாகச் சொன்னான். “இருக்கலாம்…..”

“கொன்னுடுவேன் ராஸ்கல்” என்று ஹரிணி மிரட்டினாள். ஆனாலும் அவனை அந்த நாட்களில் உணராமல் போனது அவளுக்கு நெருடலாகவே இருந்தது. சிறிது மௌனமாயிருந்து விட்டுக் கேட்டாள். “ நீ எப்ப போறே?”

“மூணு நாள்ல. ஏன் கேட்கிறே”

“நாம ஏன் இந்த எண்ண அலைகள் மூலமா ஒருத்தருக்கொருத்தர் தொடர்பு கொள்ள முடியுதான்னு சோதனை செஞ்சு பார்க்கக் கூடாது….?”

புன்னகையுடன் அவன் சம்மதித்தான். இந்த மூன்று நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் சோதனை செய்து பார்க்க முடிவு செய்தார்கள். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் அவள் அவனுக்கும், மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் அவன் அவளுக்கும் ஏதாவது தகவல் அனுப்ப வேண்டும் என்றும் ஒரு மணி நேரம் கழித்து போன் மூலம் பேசி சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். அன்பின் அலைகள் மூலமாக மானசீகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றால், அப்படி க்ரிஷுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டே ஆக வேண்டும் என்று தீவிரமாக ஹரிணி எண்ணினாள்….


டுத்ததாக க்ரிஷ் மாஸ்டரிடம் தன் அமெரிக்கப் பயணத்தைச் சொல்லப் போனான். மவுண்ட் அபுவில் இருந்து இமயமலை வரை செந்தில்நாதன் எதிரி பற்றிச் சேகரித்த தகவல்களைச் சொல்லி மேலதிக விவரங்கள் அறிய அமெரிக்கா செல்வதாக அவன் சொன்ன போது மாஸ்டருக்குக் குழப்பத்தைத் தவிர்க்க முடியவில்லை. சக்தி படைத்த எதிரியைக் கண்டுபிடிப்பதற்காக அவன் எங்கிருந்து கற்றிருக்கக் கூடும் என்று க்ரிஷ் கேட்ட போது கற்றுத்தரக்கூடிய இடங்களையும், மனிதர்களையும் பற்றிச் சொன்ன போது கூட அவன் அப்படி ஒரு எதிரியை இந்த விசாரணையில் கண்டுபிடிக்க முடியாதென்றல்லவா அவர் நினைத்திருந்தார்….

யோசித்துப் பார்த்த போது ஒருசில நிமிடங்களில் பல்லாயிரம் மைல்கள் கடக்க முடிந்த எதிரி தார்ப்பாலைவன பக்கிரியிடமும், இமயமலை போதை சாதுவிடமும் கற்றுக் கொள்ளச் செல்வதென்பதை அவர் அறிவு ஏற்க மறுத்தது. க்ரிஷ் சொல்வதைப் பார்த்தால் க்ரிஷை அமேசான் காடுகள் வரை கொண்டு போய் காப்பாற்றிய ஆள் வேறு, இந்த ஆள் வேறு என்பதாக அல்லவா தோன்றுகிறது. ஆனால் அன்னிய சக்தி நம் பூமியை ஆட்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. அது தன் திட்டத்திற்குத் தூய்மையிலும் தூய்மையான, அறிவிலும் உச்சமான ஒருவனைத் தன் கைப்பாவையாகப் பயன்படுத்தப் போகிறதுஎன்று பரஞ்சோதி முனிவர் சொன்ன தகவல் க்ரிஷ் சொன்ன வேற்றுக்கிரகவாசியையும், க்ரிஷையும் அல்லவா அடையாளம் காட்டுவதாக இருக்கிறது. அவரைப் போன்ற ஒரு மகான் வாக்கு பலிக்காமல் இருக்காதே! இப்போது செந்தில்நாதன் கண்டுபிடித்துச் சொன்ன தகவல்கள், மூன்றாவதாக இன்னொருவனையும் அல்லவா களத்தில் இறக்கி இருக்கிறது. யாரிவன்? இவன் உத்தேசம் என்ன? இது என்னப் புதுக்குழப்பம் என்று ஆழ்ந்த ஆலோசனையில் மாஸ்டர் இறங்கினார்.

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. Very interesting as usual.

    ReplyDelete
  2. ஆழ்மன சக்தி பற்றி கிரிஷ் பகிர்ந்து கொண்டது அருமை...
    பரஞ்சோதி முனிவர் முனிவர் சொன்ன வாக்கில்... மர்ம மனிதன் ஏதேனும் குழப்பம் ஏற்படுத்தியிருப்பானோ....?

    ReplyDelete
    Replies
    1. மர்ம மனிதன் தான் பரஞ்சோதி முனிவர் சொன்ன தூய்மையிலும் தூய்மையானஇ அறிவிலும் உச்சமான ஆளோ!!!?

      Delete
  3. விறுவிறுப்பாக நகர்கிறது.

    ReplyDelete
  4. மர்மமே உருவானவன். அவன் தான் ஹீரோ
    என்ற தோற்றம் உருவாகிறது என் மனதில்

    ReplyDelete