சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 11, 2018

இருவேறு உலகம் 65

ரித்வாரில் கூட்டியிருந்த கூட்டத்திற்கு இது வரை வந்திராத அளவுக்கு உறுப்பினர்கள் வந்திருந்தனர். இருக்கைகள் எல்லாம் நிறைந்து போய், நின்றிருக்கும் இடத்திலும் நெருக்கமாகவே உறுப்பினர்கள் நிற்க வேண்டி இருந்தது. மாஸ்டர் கூட்டம் கூட்டியதன் காரணத்தை முன்பே தெரிவித்திருக்கா விட்டாலும் காரணம் கசிந்து விட்டிருக்கிறது, அதை அனைவரும் அறிந்திருந்தாகள் என்பதை அங்கு நிலவிய இறுக்கத்திலிருந்தும், முகங்களில் தெரிந்த கோபத்தை வைத்தும் அவரால் ஊகிக்க முடிந்தது. அன்பும் அமைதியும் நிறைந்திருந்த அந்த ரகசிய ஆன்மிக இயக்கம் குருவின் மரணத்திற்குப் பின்னால் ஒரேயடியாக மாறி விட்டதை அவர் வருத்தத்துடன் உணர்ந்தார். ஒவ்வொரு வன்முறையும் தொடர்ந்து வரக்கூடிய பல வன்முறைகளுக்கான விதைகளை விதைத்து விட்டே போகின்றது. வன்முறையின் இயல்பே அது தான். குருவின் மரணம் மூலமாகவும் அதுவே சாதிக்கப்பட்டிருக்கிறது….. அமைதிக்கான இயக்கத்திலேயே வன்முறை இதைச் சாதித்திருந்தால் உணர்ச்சிக்களமான மற்ற இடங்களில் அது என்ன தான் செய்யாது என்று மாஸ்டர் வியந்தார். விஸ்வம், சுரேஷ், பெண் விஞ்ஞானி உமாநாயக் போன்ற அவருக்கு நெருக்கமானவர்கள் கவலையுடன் அந்தக் கூட்டத்தின் கோபத்தைக் கவனித்தது தெரிந்தது.

மாஸ்டர் விரிவாகப் பேசுவதற்கு முன் அவர்கள் கோபத்தை அவர்கள் வார்த்தைகளிலேயே கேட்க விரும்பி சொன்னார். ”அனைவருக்கும் வணக்கம். மிகக்குறுகிய கால அவகாசத்தில் அழைத்திருந்தாலும் அதை ஏற்று இத்தனை பேர் இந்தக் கூட்டத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. உங்களில் பலரும் ஏதோ தெரிவிக்க ஆசைப்படுவது போல் தெரிகிறது. உங்கள் கருத்துகளைக் கேட்டு விட்டுப் பேசினால் நான் அதையும் கருத்தில் எடுத்துக் கொண்டு பேசியது போல் இருக்கும். அதனால் முதலில் உங்கள் கருத்துக்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்…..”

இதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை போல் தெரிந்தது. அவர்களில் பலரும் அவர் பேசியதைக் கேட்டதற்குப் பிறகுத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கக் காத்திருந்தது போல் இருந்தது. அவர்கள் தங்களுக்குள் சிறிது நேரம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டார்கள். பிறகு சிறிய கனத்த மௌனத்திற்குப் பின் ஒரு இளைஞன் பேசினான். “மாஸ்டர், நம்முடைய இயக்கம் அமைதியான ஆன்மிக இயக்கம். நமக்கு யாரிடமும் விரோதம் இல்லை. உலக நலனே நம் நோக்கம். இப்படிப்பட்ட அமைதி இயக்கத்தின் குருவை அநியாயமாக ஒருவன் கொன்றிருக்கிறான். அவனாகவே நமக்கு எதிரியாக மாறியிருக்கிறான். அந்த எதிரியால் உலகமே அழியும் நிலைமைக்குப் போகும் என்ற எச்சரிக்கை நமக்கு நம் மூத்தவர்கள் மூலம் கிடைத்திருக்கிறது. அந்த அழிவுக்கு அவன் பயன்படுத்தப் போகிற கருவியாக இருக்கப் போகிறவன் பற்றியும் தகவல் கிடைத்திருக்கிறது. அந்தக் கருவிக்கு நீங்கள் குருவாகப் போகிறீர்கள், சில ரகசியக்கலைகள் சொல்லித் தரப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டு கொந்தளித்து விட்டோம். இது எதிரியை வலிமைப்படுத்துவது போல் ஆகி விடாதா?”

அவன் பேசி முடித்த போது பலரும் தங்கள் ஒட்டு மொத்தக் கருத்தைக் கச்சிதமாய் அவன் பேசியிருக்கிறான் என்பது போல பார்வையால் பாராட்டு தெரிவித்தார்கள். ஒரு முதியவர் அதைத் தொடர்ந்து சொன்னார். “எதிரியின் ஆயுதம் என்று தெரிந்த பிறகு அதை அழிப்பது தானே புத்திசாலித்தனம். அதை விட்டு விட்டு அதைக்கூர்மைப்படுத்திக் கொடுப்பது நம்முடைய அழிவை அல்லவா வேகப்படுத்தும்”

ஒரு சிலர் கைதட்டினார்கள். பின் அமைதி நிலவியது. இன்னும் யாராவது கூடுதலாகச் சொல்கிறார்களா என்று மாஸ்டர் பார்த்தார். ஆனால் கோபத்துடன் தெரிந்த அத்தனை பேர் கருத்தும் இருவர் பேச்சில் வெளிப்படுத்தி விட்டது போல் தெரிந்தது.

மாஸ்டர் அமைதியாகப் பேச ஆரம்பித்தார். ”இந்த இயக்கத்தில் எல்லோரையும் விட அதிகமாக குருவுக்கு நெருங்கியவன் நான். அதிகமாக அவரை நேசிப்பவனும் நான் தான். ஒரு போக்கிரியாகவோ, வீணாய் போனவனாகவோ வாழ்ந்திருக்க வேண்டிய என்னை மாற்றியது அந்த மாமனிதர். அகங்காரமாய் பேசிய என் வார்த்தைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் எனக்குள்ளே ஏதோ ஒன்று உருப்படியாக இருக்கிறது என்று கண்டுபிடித்து என்னை அழைத்து வந்து மாற்றியது அவர் தான். இன்றைக்கு எனக்கிருக்கும் ஒவ்வொரு சிறப்பும் அவர் போட்ட பிச்சை. அவருக்கு நான் பட்டிருக்கும் கடனை இந்த ஒரு பிறவியில் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் அந்த எதிரி மீது உங்கள் எல்லோரையும் விட அதிகமான ஆத்திரம் எனக்கிருக்கிறது. கோபம் நல்லதல்ல என்று பாடம் நடத்துபவன் நான். ஆனால் இந்தக் கோபத்தை மட்டும் நான் பத்திரமாய் ஒரு மூலையில் பாதுகாத்து வைத்திருக்கிறேன். எதிரியை அழிப்பதில் மட்டுமே அந்தக் கோபத்தை நான் தீர்க்க முடியும். அதில் எத்தனை பாவம் எனக்குச் சேர்ந்தாலும் சரி அதைத் தலைமேல் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கான தண்டனையை இறைவன் தந்தால் அதை முணுமுணுப்பில்லாமல் நான் ஏற்றுக் கொள்ளவும் செய்வேன்…”

மிகுந்த கட்டுப்பாட்டுடன் அவர் பேசிய போதும் அவர் உணர்ச்சிகரமாக ஆணித்தரமாகப் பேசியது ஒவ்வொருவர் இதயத்தையும் தொட்டதை சுரேஷ் கவனித்தான். எல்லோரும் இனி என்ன சொல்லப்போகிறார் என்பதில் மிக ஆர்வமாக இருந்தது தெரிந்தது.

”ஜீவசமாதி அடைவதற்கு முன் நம் மூத்த சித்தர் பரஞ்சோதி முனிவர் அன்னிய சக்தி நம் பூமியை ஆட்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. அது தன் திட்டத்திற்குத் தூய்மையிலும் தூய்மையான, அறிவிலும் உச்சமான ஒருவனைத் தன் கைப்பாவையாகப் பயன்படுத்தப் போகிறது என்று சொல்லி இருந்தார். அதன்படியே இஸ்ரோ தயவால் அந்த எதிரியையும், அந்தக் கைப்பாவை க்ரிஷையும் அடையாளம் கண்டோம். எதிரி மகாசக்தி வாய்ந்தவன். சந்தேகமே இல்லை. க்ரிஷைக் கடித்த பாம்பு விஷத்திற்கான முறிவு அமேசான் காடுகளில் இருக்கும் மூலிகைக்கு இருக்கிறது என்று தெரிந்து சில நிமிடங்களில் அவனை அங்கே கொண்டு போயிருக்கிறான். கிட்டத்தட்ட 16000 கிலோமீட்டர் தூரத்தை சில நிமிஷங்களில் கொண்டு போயிருக்கிறான். அதுவும் Astrosat  என்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவுக்கு எடுத்து அனுப்பிய புகைப்படங்களில் படாமல் கொண்டு போயிருக்கிறான். இது அசாத்திய சக்தி. அது ஏலியன் தானா இல்லை ஏலியன் போர்வையில் வேறு எதாவது சக்தியா என்பதில் எனக்கு இன்னமும் தெளிவில்லை. அது எதுவாகவே இருந்தாலும் அப்படிப்பட்ட சக்திக்கு பூமியை அழிப்பது பெரிய காரியமல்ல. சுலபமாகச் செய்து விடும். ஆனால் அது பூமியை ஆட்கொள்ள நினைக்கிறது. ஆள நினைக்கிறது. அதற்கு க்ரிஷை பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது. அதற்காகவே அவனைக் காப்பாற்றி திரும்பவும் கொண்டுவந்து விட்டிருக்கிறது. க்ரிஷ் நம்பிக்கையின் காரணமாக அவனுடைய உணர்வு நிலைக்குள் புகுந்து விட அதை அனுமதித்திருக்கிறான். அதற்குப் பின் அவனுக்குள் அது என்னென்ன ‘ப்ரோகிராம்’கள் போட்டு மாற்றியிருக்கிறதோ தெரியவில்லை. க்ரிஷ் நேரில் வந்த போது என் யோகசக்தியால் அவனுக்குள் ஊடுருவி அதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்தேன். முடியவில்லை. எதிரி அவனுக்குள் யோகசக்தியும் துளைக்க முடியாத அரணை ஏற்படுத்தி இருக்கிறான். இப்போது எதிரி மறைந்து விட்டான். க்ரிஷைத் திரும்பவும் கொண்டு வந்து விட்ட போது Astrosat எடுத்திருந்த புகைப்படங்களிலும் எதிரி எந்தத் தடயமும் விட்டுப் போகவில்லை. க்ரிஷ் அவன் போய் விட்டான் என்கிறான். ஆனால் அவன் உண்மையாகவே போய் விட்டானா இல்லையா என்பது தெரியாது. அவன் அப்படிப் போயிருந்தாலும் சரி, போகாமல் பூமியிலேயே எங்காவது ஒளிந்திருந்தாலும் சரி அவனை நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை…. இனி எதுவானாலும் சரி அவனை நாம் க்ரிஷ் மூலமாகவே தான் எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்….. ”

மற்றவர்களைப் போலவே மர்ம மனிதன் மாஸ்டரின் வார்த்தைகளை மிகவும் கூர்ந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். மாஸ்டரின் கடைசி வாக்கியங்கள் நூறு சதவீதம் உண்மை என்று தோன்றியது. எதிரி என்ற வார்த்தையை மாஸ்டர் சொன்னது தவறாக இருக்கலாம். அவர் சொன்ன எதிரி உண்மையில் மர்ம மனிதனுக்குத் தான் எதிரி. மாஸ்டர் சொன்னது போல் அந்த எதிரி என்ன ப்ரோகிராம்களை  க்ரிஷுக்குள் புகுத்தியிருக்கிறானோ அது க்ரிஷ் உட்பட யாருக்கும் தெரியாது என்பதே யதார்த்த நிலை. மாஸ்டர் சொன்னது போல் இனி அந்த ஏலியனை க்ரிஷ் மூலமாகத் தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த அனுமானத்தையே மர்ம மனிதனும் எட்டியிருந்தான். அதனால் இப்போதைக்கு க்ரிஷ் தான் அவன் எதிரி. ஆனால் முதல் முறையாக எதிரியைப் புரிந்து கொள்ள முடியாமல் கையாள வேண்டி வந்திருப்பது அவனுக்குச் சகிக்க முடியாத நிலைமையாக இருந்தது…..

மனதை க்ரிஷிடம் இருந்து திருப்பி மாஸ்டரின் பேச்சுக்கு மர்ம மனிதன் கொண்டு வந்தான். கடைசியில் மாஸ்டர் இங்கிருப்பவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வந்து ஏற்றுக் கொள்ள வைப்பாரா, இல்லை ராஜினாமா செய்து விட்டு விலகிக் கொள்வாரா என்பதை அறிய ஆர்வமாய் இருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன் 

9 comments:

  1. மாஸ்டரின் இயக்கத்துக்குள்ளேயே மர்ம மனிதன் இருக்கிறானா? ஏலியன் க்ரிஷுக்குள் போட்டிருக்கும் ப்ரோகிராம்கள் என்ன? இனி என்ன ஆகிறது என்றெல்லாம் அறிய ஆவல். புத்தகம் போட்டு விடுங்கள் சார். ஒரேயடியாகப் படிக்க வேண்டும் போல் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இருவேறு உலகம் நூல் இரண்டு நாள்களில் அச்சில் வந்துவிடலாம். வந்தவுடன் தெரிவிக்கிறேன்.

      Delete
  2. Fantastic speech by master. Very emotional and at the same time soul touching speech.

    ReplyDelete
  3. மாஸ்டர் பேச்சு தெளிவாகவும், அருமையாகவும் இருந்தது.... இனியும் மாஸ்டர் பேச்சை அந்த இயக்கம் ஏற்கவில்லையெனில்... இயக்கம் தவறான பாதையில் தான் செல்லும்....
    மர்ம மனிதன் ஏதேனும் சேட்டை செய்வானோ....?

    ReplyDelete
  4. அருமையான பேச்சு
    இயக்கம் அவர் கருத்தை ஏற்றுக்கொண்டதா இல்லையா என தெரிவிக்காமலேயே அத்தியாயத்தை முடித்து விட்டீர்களே
    waiting

    ReplyDelete
  5. மாஸ்டர் ,ஏலியன் தான் எதிரி என்று தவறாக கணித்து விட்டாரோ....
    மர்ம மனிதனும் ஆன்மிக இயக்கத்தில். இருக்கிறானே......!
    க்ரிஷின் மூலமாக உண்மை எதிரி யார் என்று மாஸ்டரால் அறிய இயலுமா....?

    ReplyDelete
  6. Any update about the book, I am traveling by train for couple of days. If your book is there, it is good for me.

    ReplyDelete
  7. Printers assured that they will give the books today evening. I'll inform in blog immediately after the book's arrival. (It is getting delayed because of binding work as the book is 672 pages)

    ReplyDelete