குழந்தை சிவாஜியால் ஜீஜாபாய் எத்தனையோ கவலைகளை மறந்தாள் என்றால்
எத்தனையோ கவலைகள் அடையவும் செய்தாள். கணவன், மூத்த மகன், தாய், தாய்வீடு என மனம் கவலையடையும்
போதெல்லாம் குழந்தை சிவாஜியைக் கொஞ்சி, அவனுடன் விளையாடி ஜீஜாபாய் பெரும் ஆசுவாசத்தை
உணர்ந்தாள். ஆனால் சிவாஜி வளர வளர அவனுக்கு வரவிருக்கும் ஆபத்துகளை எண்ணி அவள் கவலையும்
பட்டாள். அதற்குக் காரணமாக இருந்தது அகமதுநகர் அரசியலும், அதன் குழப்பத்தில் அவள் கணவன்
ஷாஹாஜி ஆடிய ஆடுபுலி ஆட்டமும் தான்.
ஒரு
அரசன் முட்டாளாகவும், சிந்திக்காமல் அவசர முடிவுகளை எடுப்பவனாகவும் இருந்தால் அவன்
அழிவதோடு அவனைச் சேர்ந்தவர்களையும் சேர்த்தே அழிப்பான் என்பதற்கு அகமது நகர் சுல்தான் முர்தசா இரண்டாம் நிஜாம் ஷா சரியான உதாரணமாக இருந்தான். அவன் தன்னுடைய பிரச்சினைகளுக்குக் காரணங்களை
தன்னிடத்தில் தேடியதில்லை. பிரச்சினைகளின் காரணங்கள் தன்னிடம் இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டதும்
இல்லை. அவற்றை அவன் அடுத்தவர்களிடமே பார்த்தான். அவர்களே காரணம் என்று உறுதியாக நம்பினான்.
அவர்களைப் பகைத்துக் கொண்டான். இது ஆரம்பத்திலிருந்தே அவனுடைய வழக்கமாக இருந்தது. லாக்கோஜி
ஜாதவ்ராவைக் கொன்று யாதவர்களைப் பகைத்துக் கொண்ட அவன் தன் முதல் அமைச்சரான ஃபதேகான்
மீதும் சந்தேகம் கொண்டு அவனைச் சிறையிலடைத்தான். அந்தப் பதவியில் தக்ரீப்கான் என்பவனை
நியமித்தான். ஃபதேகானைப் போலவே தக்ரீப்கானும் திறமையற்றவனாக இருந்தான். அதனால் அவன்
மீது கோபப்பட்டு அவனிடமிருந்து முதலமைச்சர் பதவியைப் பறித்து ஃபதேகானை சிறையிலிருந்து
விடுவித்து அவனிடமே திரும்பக் கொடுத்தான். தக்ரீப்கான் கோபித்துக் கொண்டு போய் முகலாயப்
படையில் சேர்ந்து கொண்டான். முதலமைச்சராகத் திரும்ப ஆக்கப்பட்ட போதும் ஃபதேகானும் தன்னைச்
சிறையிலடைத்த சுல்தானை மன்னிக்கவில்லை. மனதில் பகையைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தவன்
சுல்தானுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்ற வதந்தியைப் பரப்பினான். சுல்தான் முர்தசா இரண்டாம்
நிஜாம் ஷாவின் நடவடிக்கைகளும் அப்படியே இருந்ததால் யாரும் அந்த வதந்தியைச் சந்தேகிக்கவில்லை.
சுல்தானை அரண்மனையிலேயே காவலில் வைத்த ஃபதேகான் ஒரு நாள் ரகசியமாக சுல்தானின் கழுத்தை
நெறித்துக் கொல்லவும் செய்தான். பத்து வயது இளவரசனை அரியணையில் பெயருக்கு அமர்த்தி
தானே அரசாட்சி செய்ய ஆரம்பித்தான். அதிகாரம் அவன் கைக்குப் போவதை ரசிக்காத பிரபுக்கள்
கலகம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களில் இருபத்தைந்து பேர் கொல்லப்பட்டனர்.
இந்தக்
குழப்ப நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஷாஹாஜி தீர்மானித்தார். கணிசமான
படையைத் திரட்டிக் கொண்டு, பீஜப்பூர் சுல்தானிடம் நட்பு வைத்துக் கொண்டு கூட்டு சேர்ந்து
அகமதுநகருக்குச் சொந்தமான சில கோட்டைகளைக் கைப்பற்றினார். ஷாஹாஜி பீஜப்பூர் சுல்தான் கூட்டணி ஒருபுறம், பிரபுக்களின்
கலகங்கள் ஒருபுறம் வலுவடைய ஃபதேகான் நிலைமை மோசமாவதை உணர்ந்து முகலாயப் பேரரசர் ஷாஜஹானிடம்
சரணடையத் தீர்மானித்து பேச்சு வார்த்தைகளை ரகசியமாய் நடத்த ஆரம்பித்தான்.
இந்தத்
தகவல் கிடைத்த போது ஜீஜாபாய் ஆபத்தை உணர்ந்தாள். ஷாஹாஜியை அடக்க விரும்புபவர்கள் சிவாஜியையும்
அவளையும் சிறைப்பிடிக்கலாம்….. அவள் தன்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவள் மகனுக்கு
ஒன்றும் ஆகிவிடக்கூடாது….. மகனுக்குக் கதைகள் சொல்லி, அவனுடன் விளையாடி, அவன் மழலையை
ரசித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும், அதே நேரத்தில் அகமதுநகர்
அரசியல் நிலவரங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தாள்.
மகனுக்குக்
கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது சிலசமயம் யாராவது அகமதுநகர் நிகழ்வுகள் பற்றிப் பேசிக்
கொண்டிருப்பது காதில் விழுந்தால் கதையை நிறுத்தி அதைக் கவனிப்பது உண்டு. சுவாரசியமாகக்
கதை கேட்டுக் கொண்டே அவள் மடியில் அமர்ந்திருக்கும் சிவாஜி அவள் இடையில் நிறுத்தும்
போது சிணுங்கி மழலையில் “சொல் அம்மா….. ஏன் நிறுத்தி விட்டாய்…… உனக்கு கதை மறந்து
விட்டதா?” என்று கேட்பான். ஜீஜாபாய் புன்னகையுடன் கதையைத் தொடர்வாள்.
அவள்
சொல்கின்ற கதைகள் பெரும்பாலும் இராமாயணமும், மகாபாரதமுமாகவே இருக்கும். அந்தக் கதைகளை
உணர்ச்சி பூர்வமாக அவள் சொல்வாள். கதைகளில் முழுவதுமாகவே மூழ்கி சிவாஜி கேட்பான். இராமன்
காட்டுக்குப் போய் கஷ்டப்படுவதைக் கேட்டு கண்கலங்குவான். இலங்கையில் அனுமன் வாலுக்குத்
தீ வைக்க, அந்தத் தீயால் அனுமன் இலங்கையில் பல இடங்களுக்குத் தீ வைத்ததைக் கேட்டு குதூகலமாய்
சிரிப்பான். இராம இராவண யுத்தத்தை ஜீஜாபாய் விவரிக்கையில் மெய்மறந்து கேட்பான்…. அதே
போல் மகாபாரதக் கதைகளிலும் பாண்டவர்களின் வனவாசம் அவன் கண்ணீரை வரவழைக்கும். திரௌபதியின்
துகிலிருக்கும் காட்சியில் கிருஷ்ணரின் அருளால் சேலை இழுக்க இழுக்க வந்து கொண்டிருந்ததைக்
கேட்கையில் பிரமிப்பு அவன் கண்களில் தெரியும். பீமன் துச்சாதனனையும், துரியோதனனையும்
கொல்லும் காட்சிகளை அவள் சொல்லும் போது அவன் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். நல்லவர்களால்
கெட்டவர்கள் வதைக்கப்படும் காட்சிகளை மட்டும் “இன்னொரு தடவை சொல் அம்மா” என்று சிவாஜி
ஆனந்தமாய்க் கேட்பான். அவள் மறுபடி சொல்வாள்….
மகன்
உறங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் அவனையே பார்த்து ரசித்தபடியும், கவலைப்பட்டபடியும்
ஜீஜாபாய் விழித்திருந்த நேரங்கள் அதிகம். அவனுடன் உறங்கிக் கொண்டிருக்கும் நேரங்களில்
கூட, சிறிய வித்தியாசமான சத்தங்கள் கேட்டாலும் மனம் பதைத்து எழுந்து விடுவாள். அவள்
குழந்தையை யாராவது தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள் என்ற பயம் நாட்கள் போகப் போக அதிகரித்ததே
ஒழிய குறையவில்லை.
இப்படி
அவளுக்குப் பயம் வளர்ந்த காலக்கட்டத்தில் தான் பெரியதொரு முகலாயப் படை அகமது நகர் நோக்கி
வருகிறது என்றும் ஃபதேகானின் பேரம் படிந்தது என்றும் ஒற்றர்கள் மூலம் தகவல் ஜீஜாபாய்க்கு
வந்து சேர்ந்தது. அகமதுநகர் அழிவது உறுதி. அந்த அழிவில் பங்கு போட்டுக் கொள்ள வருபவர்களை
முகலாயப் படை சகிக்காது என்பதும் நிச்சயம். ஷாஹாஜி இந்தச் சூழ்நிலையில் தானாகக் கண்டிப்பாகப்
பின்வாங்குபவர் அல்ல. அதனால் அவரைப் பின்வாங்க வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை முகலாயர்கள்
கண்டிப்பாகச் செய்வார்கள். ஷாஹாஜியின் இரண்டாம் மனைவியும் மூத்த மகன் சாம்பாஜியும்
பீஜாப்பூரில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எட்டும் தூரத்தில் இருப்பது ஜீஜாபாயும்,
சிவாஜியும் தான். அதனால் இன்றில்லா விட்டாலும் நாளை இருவரையும் எதிரிகள் நிச்சயம் நெருங்கத்
தான் செய்வார்கள். இந்த அனுமானத்திற்கு வந்திருந்த ஜீஜாபாய் தன் மகன் பாதுகாப்புக்கு
ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தாள்.
சிவாஜியைப்
பாதுகாக்க ஷாஹாஜியின் நம்பிக்கைக்குரிய ஆட்களிடம் அவனை ஒப்படைக்கலாம். ஆனால் ஒற்றர்கள்
மூலம் முகலாயர்களும் அந்த ஆட்களையும், அவர்கள் சரித்திரங்களையும் அறிய முடியும் என்பதால்
எளிதாக அந்த ஆட்களோடு சிவாஜியையும் முகலாயர்கள் சிறைப்பிடித்து விட முடியும். ஒற்றர்கள்
அறியும் அளவுக்குப் பிரபலமாய் இருக்காத ஒரு ஆள் வேண்டும், அவன் பூரண நம்பிக்கைக்குரியவனாய்
இருக்க வேண்டும், சிவாஜியைப் பத்திரமாகவும் ரகசியமாகவும் பாதுகாக்க முடிந்த ஆளாகவும்
இருக்க வேண்டும். தன்னுடன் இருக்கும் கூட்டத்தில் அப்படி ஒரு மனிதனைத் தேடிக் கடைசியில்
ஜீஜாபாய் சத்யஜித்தைக் கண்டுபிடித்தாள்.
சத்யஜித்
அதிகம் பேசாத அமைதியான இளைஞன். முரட்டுத்தனமான, கட்டுமஸ்தான உருவம் கொண்டவன் என்றாலும்
அவன் அன்பான மனிதனாகவும் தெரிந்தான். அவன் சிவாஜியைப் பார்க்கும் போதெல்லாம் அவன் விழிகளில்
தெரிந்த மென்மையும், அன்பும் சிவாஜி மேல் அவனுக்கு ஏற்பட்டிருந்த ஒரு பிரத்தியேக அன்பை
ஜீஜாபாய்க்கு அடையாளம் காட்டியது. அவனைப் பற்றி ரகசியமாய் மற்றவர்களிடம் விசாரித்தாள்.
சகாயாத்திரி மலைத்தொடரில் பிறந்து வளர்ந்தவன். வீரமானவன். நம்பகமானவன் என்பது தெரிந்தது.
தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தவும் தயங்கும் அளவு கூச்சமானவனாக அவன் இருந்திரா விட்டால்
இன்னேரம் ஏதாவது ஒரு படையில் பெரிய பதவியில் இருந்திருக்கலாம் என்று சொன்னார்கள். ஜீஜாபாய்க்கு
அவன் பொருத்தமானவனாகத் தெரிந்தான்.
ஜீஜாபாய்
அவனிடம் தன் மகனைப் பார்த்துக் கொள்ளும் வேலையை அவ்வப்போது தந்து மறைந்திருந்து அவன்
எப்படிப் பார்த்துக் கொள்கிறான் என்பதைக் கூர்ந்து கவனித்தாள். அவன் சிவாஜி மேல் பாசத்தை
அதிகமாய் பொழிந்தான். அவனிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்ததில் அவனுக்கு சிவாஜியைப் போலவே
தோற்றத்தில் ஒரு குழந்தை இருந்ததும், அந்தக் குழந்தையும், அதன் தாயும் ஒரு விபத்தில்
இறந்து போனதும் தெரிய வந்தது. பின் மறுமணம் செய்து கொள்ளாதது ஏன் என்று ஜீஜாபாய் கேட்ட
போது மனைவியையும், குழந்தையையும் மறக்க முடியவில்லை என்றும் அவனுக்கு குடும்பம் என்ற
ஒன்று விதிக்கப்படவில்லை போலிருக்கிறது என்றும் அவன் மெல்லிய சோகத்தோடு சொன்னான். ஜீஜாபாய்
தன் மகன் பாதுகாப்புக்கு இவனே தகுந்த ஆள் என்று தீர்மானம் செய்தாள். அன்றிலிருந்து
சிவாஜியை அவனுடன் அதிகம் இருக்க விட்டாள். அவனுக்குக் குழந்தையைக் கொஞ்சவோ, அவனுடன்
விளையாடவோ அதிகம் தெரியவில்லை. ஆனால் குழந்தை சிவாஜி என்ன சொன்னாலும் சிறிதும் சங்கடமில்லாமல்
செய்து அவனை மகிழ்விக்கத் தெரிந்திருந்தது. ’என்னை விட்டு என் குழந்தை இவனுடன் இருந்தாலும்
குழந்தையை அழாமல் பார்த்துக் கொள்வான்’ என்று ஜீஜாபாய் எண்ணிக் கொண்டாள்.
இந்த
நேரத்தில் முகலாயப்படை அகமதுநகர அரியணையில் இருந்த சிறுவனைக் கைது செய்து குவாலியர்
கோட்டையில் அடைத்த செய்தியும் தன் கட்டுப்பாட்டில் இருந்த எல்லாவற்றையும் முகலாயர்களிடம்
ஒப்படைத்து விட்டு, வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட
தொகை தனக்குக் கிடைக்கும்படி ஃபதேகான் முகலாயப்பேரரசரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டான்
என்ற செய்தியும் ஜீஜாபாய்க்கு வந்து சேர்ந்தது. அன்றே ஷிவ்னேரியிலிருந்து கிளம்பி பைசாபூர்
கோட்டைக்குச் சென்று விடும்படி ஷாஹாஜியின் ரகசிய ஓலையும் ஜீஜாபாய்க்கு வந்து சேர்ந்தது.
ஆபத்து
நெருங்குவதை ஜீஜாபாய் தன் அடிமனதில் உணர்ந்தாள். ஆனால் எதையும் மறுக்கவோ, வேறுவிதமாய்
தீர்மானிக்கவோ அவளுக்குச் சுதந்திரம் இல்லை. வேறுவழியில்லாமல் ஷிவாய் தேவி கோயிலிற்கு
மகனுடன் சென்று மனமுருக வேண்டிக் கொண்டு அன்றிரவே ஜீஜாபாய் ஷிவ்னேரியிலிருந்து கிளம்பினாள்.
(தொடரும்)
என்.கணேசன்