சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 30, 2017

என் இரண்டு புதிய நூல்கள் வெளியீடு!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம். 
இன்று எனது இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன. ஒன்று ஆழமனசக்தி அடையும் வழிகள். இன்னொன்று  என் சிறுகதைகள். ஒன்றின் முன்னுரையும், உள்ளிருக்கும் தலைப்புகளும்,  இன்னொன்றின் சிறுகுறிப்பும் இதோ-

ஆழ்மனசக்தி அடையும் வழிகள்! - 

முன்னுரை-

ழ்மனதின் அற்புத சக்திகள் நூலுக்கு வாசகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பது அமோகமானது. அந்த நூல் மூன்றாண்டுகளில் ஐந்து பதிப்புகள் தாண்டி இப்போதும் மிகவும் வேகமாக விற்பனையாகி வருகிறது. மிகவும் படித்த அறிவார்ந்த வாசகர்களில் இருந்து, அதிகம் கல்வியறிவு இல்லாத சாதாரண வாசகர்கள் வரை பல தரப்பு மக்கள் வாங்கிப் படிக்கும் புத்தகமாக அது இன்றும் இருந்து வருகிறது. இன்றும் வாரம் ஓரிரு வாசகராவது என்னைத் தொடர்பு கொண்டு ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூல் குறித்து பாராட்டு தெரிவிக்கிறார்கள், சந்தேகம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்கிறார்கள், ஆழ்மனசக்திக்கு வகுப்புகள் ஏதாவது நடத்துங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். மொத்தத்தில் இன்றும் வாசகர்கள் பேசுகிற, படித்து மகிழ்கிற, மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிற ஒரு உன்னத நூலாக அது இருந்து வருகிறது.


ஆழ்மனதின் அற்புத சக்திகள் குறித்து நான் சேர்த்து வைத்திருக்கிற தகவல்கள் ஏராளம். அவற்றில் ஒரு பகுதியை மட்டுமே ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலில் தந்திருக்கிறேன். அந்த சக்திகள் நான் குறித்து சிந்தித்ததும், சோதித்துப் பார்த்ததும் கூட கொஞ்ச நஞசமல்ல. அந்த அற்புத விஷயங்களின் பிரம்மாண்டத்தில் நான் பிரமித்துப் போயிருக்கிறேன். 

 அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிதுஎன்ற அவ்வையின் வார்த்தைகள் சத்தியமானவை. மனிதனின் ஆழ்மனதில் அமிழ்ந்திருக்கும் சக்திகள் மகத்தானவை. அவை சாதாரண மனிதனின் கற்பனைக்கும் எட்டாதவை. அவற்றை அவன் முறையாகப் பயன்படுத்த முடிந்தால் அவனால் எட்ட முடியாத உயரங்கள் இல்லை, செல்ல முடியாத தொலைவுகள் இல்லை, சாதிக்க முடியாத சாதனைகள் இல்லை. அவன் கற்பனையே அவன் எல்லை என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த பிரம்மாண்ட சக்திகளைப் பற்றி மேலும் விரிவாக விளக்கும் விதமாகவே இந்த நூலை எழுதுகிறேன். அவை குறித்த ஏராளமான, ஆழ்மன அற்புத சக்திகள் நூலில் சொல்லாத, கூடுதல் விஞ்ஞான ஆராய்ச்சிகளை இந்த நூலில் எழுதியுள்ளேன். அந்த விஞ்ஞான ஆராய்ச்சிகள் பற்றியும், கருத்து தெரிவித்த பேரறிஞர்கள் பற்றியும் சொல்லா விட்டால் சொல்கின்ற தகவல்கள் என் அதீத கற்பனையாகக் கூட வாசகர்களுக்குத் தோன்றலாம். மேலும் ஆராய்ச்சிகள் மூலம் விளக்கும் மகத்தான சக்திகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை விரிவாகவே இதில் விளக்கியுள்ளேன்.  ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூல் படித்து விட்டுப் பல வாசகர்கள் கேட்ட சந்தேகங்களுக்குப் பதிலையும், அவர்கள் அனுபவங்கள் குறித்த என் கருத்துகளையும் ஒரு தனி அத்தியாயமாகவே தந்திருக்கிறேன்.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலின் இரண்டாம் பாகமாக வரும் இந்த நூலைத் தனியாகவே வாசகர்கள் படித்தும் பயன்பெறலாம். ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூல் படித்த வாசகர்களுக்கு அடுத்த கட்ட வழிகாட்டுதலாக இந்த நூல் அமையும். உடல் நலம், மன நலம், வளமான நிறைவான வாழ்க்கை ஆகியவற்றிற்கு ஆழ்மனசக்திகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் இந்த நூலில் தந்துள்ளேன்.

அன்பு வாசகர்களே, இந்த நூலை ஆழமாகப் படியுங்கள். அடிக்கடி படியுங்கள். படித்ததை நிறைய சிந்தியுங்கள். சொல்லி இருப்பவைகளில் முடிந்ததை எல்லாம் பின்பற்றிப் பாருங்கள். பின் உங்கள் வாழ்க்கை சாதாரண வாழ்க்கையாக இருக்காமல் ஒரு அற்புத வாழ்க்கையாகி விடும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

பிரபஞ்ச சக்தியின் ஆசிர்வாதமாகவே இந்த நூல் உங்கள் கையில் கிடைத்திருக்கிறது. பயன்படுத்தி சிறப்படையுங்கள் என்று மனதார வாழ்த்துகிறேன். வாருங்கள், உங்களுக்கு சகல உரிமையும் உள்ள ஒரு பிரம்மாண்ட சக்தி உலகிற்குச் செல்வோம்....

அன்புடன்
என்.கணேசன்


விலை ரூ 200/-


நூலின் அத்தியாயத் தலைப்புகள்
1.   ஆழ்மனம்-ஒரு ஆழமான பார்வை
2.   ஆழ்மனம் இயக்கும் செல்கள்- விஞ்ஞானப் பார்வை
3.   தவறான நம்பிக்கை தடுமாறும் வாழ்க்கை!
4.   நோய் எதிர்ப்பு சக்தியை நிர்ணயிக்கும் ஆழ்மனம்!
5.   ஒருவரை இளமையாக்கும் ஆழ்மனம்!
6.   மயக்க மருந்தில்லா அறுவை சிகிச்சைகள்!
7.   மரணத்தை வென்று மருத்துவர்களைக் குழப்பியவர்கள்!
8.   மருத்துவம் அறியாத ஆழ்மன மகத்துவம்!
9.   குணமாகும் தருணங்களில் உணர்ந்தது என்ன?
10. விஞ்ஞானம் அளக்க முடிந்த ஆழ்மன சக்திகள்!
11. ஆழ்மனசக்தியும் மரபணுத் தகவல் கட்டமைப்பும் (DNA)
12. எதை நீங்கள் ஈர்க்கிறீர்கள்?
13. எண்ணங்களில் உள்ளது சூட்சுமம்!
14. எண்ண வைரஸ்களை நீக்குங்கள்!
15. ஆக்கபூர்வ எண்ணங்களை வலிமையாக்குங்கள்!
16. ஆழ்மன செயல்திட்டங்களைத் திருத்துங்கள்!
17. ஆழ்மனதை வசப்படுத்த சில வழிகள்!
18. ஓய்வான மனநிலையின் மகத்துவம்!
19. காட்சிப்படுத்தும் கலைப்பயிற்சிகள்!
20. மூளையை முழுத்திறனோடு வைத்திருக்க வழிகள்!
21. ஆழ்மனசக்தியில் தியானத்தில் பங்கு!
22. உங்களை மாற்றிக் கொள்வதெப்படி?
23. உண்மையான உள்ளுணர்வைப் பெறுவதெப்படி?
24. தொலைதொடர்பு சக்தி பெறுவதெப்படி?
25. கனவுகள் மூலம் ஆழ்மனச் செய்திகள்!
26. சக்தி அலைகளைப் படிக்கும் யுக்தி!
27. தொலைநோக்கு சக்தி பெற முடியுமா?
28. உடலை விட்டு வெளியே பயணிக்க முடியுமா?
29. போதை வழி வரும் சக்திகள்
30. மேலும் சில சக்தியாளர்கள்!
31. பன்முக ஆளுமை என்னும் அதிசயம்!
32. மேலும் சில ஆராய்ச்சியாளர்கள்!
33. வாசகர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள்!
34. முடிவல்ல ஆரம்பம்!


என்.கணேசன் சிறுகதைகள்


விலை. ரூ 220/- 

என் அனைத்து சிறுகதைகளிலும் மானுடமே அடித்தள நாதமாக இருந்திருக்கிறது. பெரும்பாலான சிறுகதைகளில் மனிதனின் உயர்குணங்களே சிறப்பான அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. அன்பு, காதல், கருணை, மன்னிப்பு, பெருந்தன்மை, வாழும் கலை, அறிவுபூர்வமான அணுகுமுறை ஆகியவையே கருவாகவும், பாடமாகவும் அமைந்திருக்கின்றன. கடவுளில் இருந்து கடைகோடி மனிதர்கள் வரை கதாபாத்திரங்களாக இருக்கும் இச்சிறுகதைகளைப் படித்து முடிக்கையில் நினைவில் தங்குவதும், மின்னுவதும் மானுடமாக இருக்கும். 

இந்த இரு நூல்களையும் வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

வெளிநாட்டு, உள்நாட்டு வாசகர்கள் முழுமையான தகவல்கள் அறிய-
https://blackholebooks.wordpress.com/books-purchase/

அன்புடன்
என்.கணேசன்

Thursday, October 26, 2017

இருவேறு உலகம் - 54

வன் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களில் அவனைப் பார்த்தவுடன் உடனடியாக ஹரிணிக்குக் கண்களில் நீர் தளும்பியது. மணீஷ் அதைக் கவனித்த போது அவன் இதயத்தில் இரத்தம் கசிந்தது. ‘உண்மைக் காதலில் ஊடல்கள் வந்தாலும் நிரந்தரமாய் விரிசல்கள் விழுவதில்லையோ’! அவன் அங்கு வந்த போது அவளும் வந்து க்ரிஷுக்காகக் காத்திருந்ததைப் பார்த்த போதே மனம் நொந்திருந்தான். அவன் வேதனையை மாணிக்கம் மட்டுமே கவனித்தார். சங்கரமணி க்ரிஷிடம் என்னென்ன மாற்றங்கள் தெரிகின்றன என்பதைக் கூர்ந்து கவனித்துக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார். செந்தில்நாதனும் அவன் மேல் வைத்திருந்த பார்வையைச் சிறிது கூட விலக்கவில்லை.

க்ரிஷை ஓடிப் போய் மணீஷ் கட்டியணைத்துக் கொண்டான். ”எப்படிடா இருக்கே?”

அவனால் இதெல்லாம் எப்படி முடிகிறது என்று க்ரிஷ் வியந்தான். நடிப்பும் பாசாங்குமே சிலரது வாழ்க்கை முறையாக இருந்து விடுகிறது… “ஃபைன் டா”

எல்லோரும் உள்ளே போனார்கள். சங்கரமணிக்கு உடனடியாக க்ரிஷ் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கும் எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மற்றவர்களை முந்திக்கொண்டு சொன்னார். “நல்ல வேளை நீ நல்லபடியாய் வந்தே. நாங்க எல்லாருமே உனக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு துடிச்சுப் போயிட்டோம்…. நாங்க வேண்டாத தெய்வமில்லை…. செய்யாத பிரார்த்தனையில்லை…..”

க்ரிஷ் அவரைக் கூர்மையாய் பார்த்துக் கொண்டே புன்னகையுடன் சொன்னான். “உங்க பிரார்த்தனை என்னைக் காப்பாத்திடுச்சு தாத்தா…”

அவன் பொடி வைத்துப் பேசுவது போலத் தோன்றினாலும் அதை அலட்சியம் செய்த சங்கரமணி “உனக்கு என்ன தான் ஆச்சு…. இத்தனை நாள் எங்கிருந்தே?” என்று கரிசனமாகக் கேட்டார்.

அத்தனை பேரும் அவன் பதிலை எதிர்பார்த்து ஆவலாய்க் காத்திருப்பதைப் பார்த்த க்ரிஷ் தன் குடும்பத்திடம் சொன்ன சுருக்கமான பொய்யையே கடைசி வரை மாற்றாமல் சொல்லிக் கொண்டிருப்பது என்று முடிவு செய்தான். அந்த மலையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது காலை எதோ கடித்தது போல் உணர்ந்ததாகவும், உடனே நினைவிழந்ததாகவும் சொன்னான். பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் சொன்னான்.

“… இடையில கொஞ்சம் நினைவு திரும்பினப்ப ஏதோ காட்டுப்பகுதில இருக்கற மாதிரி தெரிஞ்சுது….. அது எங்கேன்னு தெரியல….. அரைமயக்கமா இருந்துச்சு. வீட்டுல கவலைப்படுவாங்களேன்னு தோணுச்சு. கஷ்டப்பட்டு உதய்க்கு மொபைல்ல ஒரு மெசேஜ் அனுப்புனது மட்டும் தான் தெரியும். மறுபடியும் மயக்கமாயிட்டேன்….. யாரோ காட்டுவாசிகள் என் வாய்ல ஏதோ மூலிகை சாறை விடற மாதிரி அரை மயக்கத்துல தெரிஞ்சுது. அது நிஜமா கனவான்னு கூட இப்ப குழப்பமா இருக்கு. மறுபடியும் நினைவு திரும்பினப்ப பழையபடி அந்த மலை மேல் இருக்கேன்…..”

’முழுப்பூசணிக்காயை சோத்துல மறைக்கிறானே இந்த எடுபட்ட பயல்’ என்று சங்கரமணி திகைத்த போது செந்தில்நாதன் க்ரிஷிடம் சொன்னார்.

“உங்க அண்ணாவும் அவர் ஆள்களும் அந்த மலையிலயும் சுற்றியும் உங்களைத் தேடியிருக்காங்க…. அப்புறம் நாங்களும் தேடியிருக்கோம்…. நீங்க அந்த சுற்றுவட்டாரத்திலயே இருக்கல…..”

சொல்லி விட்டு ‘இதற்கென்ன சொல்கிறாய்?’ என்பது போல அவனையே கூர்ந்து பார்த்தார். க்ரிஷ் அவர் யார் என்பதை யூகித்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவரையே பார்த்தான். செந்தில்நாதன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு அவரிடம் சொன்னான்.

“நான் மயக்க நிலைல இருந்ததால எங்கே போனேன் எப்படிப் போனேன்னு எதுவும் புரியல…. அதை நீங்க தான் கண்டுபிடிச்சுச் சொல்லணும்…..”

அவனை ஊடுருவிப் பார்த்தபடியே இருந்தாலும் அவரால் அவனிடமிருந்து எதையும் யூகிக்க முடியவில்லை. ஆனாலும் பார்வையை எடுக்காமல் அவர் சொன்னார். “நீங்க அனுப்பின மெசேஜ் தென்னமெரிக்கால இருந்து வந்ததா டவர் சிக்னல் சொல்லுது….”

க்ரிஷ் அலட்டிக் கொள்ளாமல் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான். “அதெப்படி சார் நான் தென்னமெரிக்கா வரைக்கும் நடந்து போயிருக்க முடியும்?”

பதில் சொல்ல வேண்டியவனே சாமர்த்தியமாய் கேள்வி கேட்டு விட்ட போது செந்தில்நாதனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

சங்கரமணி க்ரிஷிடம் கேட்டார். “உன் கால்ல எதோ கடிச்சுதுன்னு சொன்னியே, எது கடிச்சுது…. எங்க கடிச்சுது?”

”ஏதோ பாம்பு கடிச்ச மாதிரி இருக்கு” என்ற க்ரிஷ் தன் வலது கால் கட்டைவிரலைக் காட்ட அத்தனை பேரும் அந்தக் காலில் இருந்த காய வடுவைப் பார்த்தார்கள். சங்கரமணிக்கு வாடகைக் கொலையாளி பொய் சொல்லவில்லை என்பது இப்போது தான் உறுதியாகியது. ‘ஆனாலும் அவன் செத்துட்டான். காயத்தோட நீ குத்துக்கல் மாதிரி நிக்கறே….. என்னடா நடந்துச்சு…..’ என்று மனதிற்குள் அவர் புலம்பினார்.

சிறிது நேரம் க்ரிஷ் எல்லோரிடமும் சகஜமாய் பேசினான். அப்படிப் பேசுகையில் ஹரிணியிடம் கூட நட்பின் தொனியில் “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான். நலமாய் இருப்பதாய் வாயளவில் சொன்னாலும் அவள் கண்களில் நெருப்பு எரிந்தது. சற்று முன் அவனை முதலில் பார்த்தவுடன் கண்ணீரால் நிரம்பிய கண்கள் இப்போது எதிர்மாறாய் அவனை எரித்த போது இனி ஒரு பூகம்பத்தைச் சந்தித்தே ஆக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான். அவனுக்கு உதய் மீது கோபம் வந்தது. ’அவன் தான் அம்மாவிடம் உளறிக்கொட்டியதைப் போல இவளிடமும் ஏதோ சொல்லி இருக்க வேண்டும். அதனால் தான் இவள் இங்கு மறுபடி வந்திருக்கிறாள். அவன் காதல் பற்றி நிச்சயமாய் தெரிந்திருக்கா விட்டால் அவன் காணாமல் போனது தெரிந்து வருத்தப்பட்டிருந்தாலும், திரும்பி வந்தது தெரிந்து சந்தோஷப்பட்டிருந்தாலும் ரோஷமில்லாமல் இங்கு வந்திருக்க மாட்டாள்…’

எல்லோருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்த பத்மாவதி ஹரிணியை தன்னுடன் அழைத்துக் கொண்டு போனாள். மற்றவர்கள் காபி குடித்துக் கிளம்பி விட்டார்கள்.

க்ரிஷ் தனதறைக்குப் போய் முதலில் குளித்து விட்டு வந்து தன் நாற்காலியில் அமர்ந்தான். இந்த அறையில் மாஸ்டர் வந்து சிறிது நேரம் இருந்திருக்கிறார் என்பது நினைவுக்கு வந்தது. நிக்கோலா டெஸ்லா சொன்னது போல் அவர் இங்கு சக்தி, அலைவரிசை, அதிர்வுகளைப் படித்திருப்பாரோ? படித்து எதையெல்லாம் தெரிந்து கொண்டிருப்பார்?
அவன் யோசித்துக் கொண்டிருந்த போது அவன் அறைக்கதவு திறந்தது. திரும்பினான். ஹரிணி. அவள் கதவைத் தாளிட்டாள். அவனைச் சுட்டெரிக்கும் பார்வையால் பார்த்தபடியே அருகில் வந்தாள். மிகவும் நெருங்கி வந்தாள். அவன் அலட்சியப்படுத்திய நாளுக்குப் பிறகு அவள் ஒரு போதும் இந்த நெருக்கத்தில் வந்ததில்லை. கோபத்திலும் மிக அழகாக அவள் இருப்பதாய் அவன் மனம் சொன்னது.  

அருகே வந்தவள் அவன் எதிர்பாராத விதமாய் அவனை ஓங்கி ஒரு அறை அறைந்தாள். “ஏண்டா அன்னிக்கு என்கிட்ட அப்படி நடந்துகிட்டே?” அழுது கொண்டே கேட்டாள்.

சிவந்த கன்னத்தில் கையை வைத்துக் கொண்டே க்ரிஷ் அவளிடம் என்ன சொல்வது என்று யோசித்தான்.

“பொய் சொன்னா கொன்னுடுவேன்…. நீ கண்டுக்காம இருந்தப்ப பேசாம போன ஹரிணியா நான் இப்ப இல்லை. சொல்லு. அன்னிக்கு என்கிட்ட ஏன் அப்படி நடந்துகிட்டே… உண்மையைச் சொல்லு….” கோபமும் துக்கமுமாய் அவள் கேட்ட போது அவனால் பொய் சொல்ல முடியவில்லை.

”ஹரிணி… என் ஜாதகத்துல எனக்கு கண்டம் இருக்கு…”

“நீ எப்ப இருந்து ஜாதகத்தை நம்ப ஆரம்பிச்சே?”

“அம்மா அப்பா தான் நம்பறாங்க. ஆனா அவங்க நம்பற மாதிரியே தான் நிலைமை இருக்கு…. நான் போயிட்டா நீ தாங்க மாட்டேன்னு தெரியும். அதான் இருக்கறப்பவே விலகிட முடிவு செஞ்சேன்…. அப்ப தான் நான் போன பிறகு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சுக்க உனக்கு சுலபமா இருக்கும்னு நினைச்சேன்…..”

“முட்டாளே, நீ இல்லாமல் எனக்கென்னடா நல்ல வாழ்க்கை…” என்றவள் அழுதபடியே அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டாள். அவன் மனம் ஒரு கணம் எல்லாவற்றையும் மறந்தது. அந்த முத்தத்தை ஆழமாக்கினான். அதில் அவள் கோபம் முழுவதுமாய் கரைந்து போனது.

ஒரு கட்டத்தில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு விலகி சிறு மௌனத்திற்குப் பிறகு அவள் கேட்டாள்.

“என்னடா ஆச்சு. சும்மா அவங்க கிட்ட கதையையே என்கிட்ட சொல்லாதே”

க்ரிஷ் அமைதியாகவும் உறுதியாகவும் சொன்னான். “உன் கிட்ட பொய் பேசப் பிடிக்கல. ஆனா உண்மை சொல்ற நிலைமைலயும் நான் இல்லை…. தயவு செஞ்சு எதுவும் கேட்காதே…. இப்ப மாத்திரம் இல்லை. நானா சொல்ற வரைக்கும் எப்பவுமே கேட்காதே….. வற்புறுத்திக் கேட்டா பொய் தான் சொல்ல வேண்டி வரும் …..”

அவள் திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.

அவன் கெஞ்சலுடன் சொன்னான். “ப்ளீஸ்”

அவன் காரணமில்லாமல் அப்படிச் சொல்ல மாட்டான். காதலிப்பதாலேயே எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என்று நினைப்பதும் சரியல்ல என்று அவளுக்குத் தோன்றியது.

அவள் மெல்லச் சொன்னாள். “சரி எனக்கு ஒரே ஒரு சத்தியம் பண்ணு”

“என்ன?”

“என்னைக்குமே நீ என்னை விட்டு விலகிப் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு. சாவோட துக்கத்தை விட இருக்கறப்பவே விலகறது பலமடங்கு துக்கம்டா. ரெண்டு பேர்ல ஒருத்தர் இறந்துட்டா கூட இருக்கறப்ப எவ்வளவு நேசிச்சோம், நெருக்கமாய் இருந்தோம்னெல்லாம் நினைச்சுட்டே மீதி வாழ்க்கைய கழிச்சிடலாம். ஆனா இருக்கறப்பவே விலகிட்டா அதுக்கு கூட வழியில்லாமல் விலகின கசப்பு நம்ம வாழ்க்கைய நரகமாக்கிடும்டா”


(தொடரும்)

என்.கணேசன்

Monday, October 23, 2017

கர்மக்கடன் முடிகையில் அனைத்தும் முடியும்!




சில அபூர்வ சக்திகள் தகுதியற்ற மனிதர்களிடமும் கிடைத்து விடுகின்றன என்பதற்கு விமலானந்தாவைத் தந்திரமாக ஏமாற்ற நினைத்த ஜீனசந்திர சூரியே உதாரணம். முன்பே குறிப்பிட்டது போல ஜோதிடத்தில் அவர் பெற்றிருந்த பாண்டித்தியம் அபாரமானது. அதிலும் அசர வைக்கும் அம்சம் என்ன என்றால் சில அபூர்வ சக்திகள் மூலமாக குழந்தை பிறப்பதற்கு முன்னாலேயே இந்தத் தேதியில், இந்த மாதிரியான ஜாதக அமைப்பில் குழந்தை பிறக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து விடுகின்ற அதிஅபூர்வ சக்தியையும் ஜீனசந்திர சூரி அவ்வப்போது வெளிப்படுத்தியதுண்டு. அப்படி அவர் விமலானந்தாவிடமும் வெளிப்படுத்தினார்.

விமலானந்தாவுக்குத் திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகியிருந்த போதும் குழந்தைகள் இல்லை. சில முறை கர்ப்பமாகியும் சிசு கர்ப்பத்தில் தங்காமல் கலைந்தும், குறைப்பிரசவம் ஆகியும் அவர் மனைவி பெரும் வேதனையில் இருந்தார். மருத்துவர்கள் பலவீனமான கர்ப்பப்பையைக் காரணமாகச் சொன்னார்கள். விமலானந்தாவோ இது போன்ற தனிப்பட்ட காரியங்களில் தன் சக்தியைப் பயன்படுத்துவதில் உடன்பாடு இல்லாதவராக இருந்தார். இந்த சமயத்தில் தான் ஜீனசந்திர சூரி விமலானந்தாவிடம் வந்து ‘உனக்கு இந்தத் தேதியில் இந்த ஜாதக அமைப்பில் ஒரு மகன் பிறப்பான். இப்படிப்பட்ட குணாதிசயங்களுடன் இருப்பான்என்று தேதி, ஜாதகம், குணாதிசயங்கள் எழுதிக் கொடுத்தார்.

விமலானந்தாவின் மனைவி அப்போது க்வாலியரில் உள்ள தன் தாய் வீட்டுக்கு நீண்ட கால ஓய்வுக்குச் சென்றிருந்தார். அதனால் விமலானந்தா சிரித்துக் கொண்டே “நீங்கள் சொல்லும் தேதியில் குழந்தை பிறக்க வேண்டுமானால் என் மனைவி தற்போது இங்கிருக்க வேண்டும். அவள் தாய் வீட்டில் நீண்ட கால ஓய்வுக்குப் போயிருப்பதால் எனக்கு அப்படிப் பிறக்க வழியே இல்லைஎன்றார். ஆனால் ஜீனசந்திர சூரி “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நடக்கும் பாருங்கள்என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

ஜீனசந்திர சூரியிடம் எத்தனை தான் சக்திகள் இருந்தாலும், தன் பழைய அனுபவங்கள் காரணமாக அவரை முழுமையாக நம்ப முடியாத விமலானந்தா, அந்த மனிதர் ஏதாவது ஏமாற்று வேலைகள் செய்தாலும் செய்வார் என்ற யோசனையில், க்வாலியரில் இருக்கும் மனைவிக்கு அங்கேயே மேலும் சில காலம் ஓய்வு எடுக்கும்படியும், மும்பைக்குத் தற்போது வர வேண்டாம் என்றும் தந்தியனுப்பினார். ஆனால் யாரோ ஒரு உறவினர் விமலானந்தாவின் மனைவியிடம் உன் கணவருக்கு ஏதோ ஆபரேஷன் நடந்திருக்கிறது.  அதை உன்னிடம் மறைக்கத் தான் நீ இப்போது மும்பை வர வேண்டாம் என்று சொல்கிறார்என்று சொல்லி விட்டார். இதைக் கேட்டவுடன் பதறிப்போய் அவர் மனைவி அடுத்த ரயிலைப் பிடித்து மும்பை வந்து விட்டார்.

அப்போது தான் விதி எவ்வளவு வலிமையானது என்பதை விமலானந்தா உணர்ந்தார். ஜீனசந்திர சூரி சொன்னது போலவே விமலானந்தாவின் மனைவி அந்த மாதம் கருத்தரித்தார். அவர் கூறிய தேதியிலேயே, கூறிய கிரக அமைப்பிலேயே ஆண்குழந்தை ஒன்று விமலானந்தாவுக்குப் பிறந்தது. ராணு என்று பெயரிட்டார்கள். படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்தவனாய், அறிவாளியாய் ராணு வளர்ந்தான். ஆனால் ராணுவின் ஜாதகத்தில் அவன் அற்பாயுசில் இறப்பான் என்ற அமைப்பும் இருந்தது. மகா சூட்டிப்பும், அறிவும், அன்பும் நிறைந்த ராணுவை வீட்டில் எல்லோரும் மிகவும் நேசித்தார்கள். விமலானந்தாவோ அவன் மேல் உயிராய் இருந்தார். விமலானந்தாவுக்கு சில ஆண்டுகளில் இன்னொரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் ஜாதக அமைப்பில் அவன் தான் குடும்பத்தின் மூத்த பிள்ளையாய் வளர்வான் என்றும் இருந்தது.  அதையும் விமலானந்தா அறிந்திருந்தார்.

மகா மயானமான மணிகர்ணிகா காட்டில் பத்து மாதங்கள் தங்கி தவ வாழ்க்கை வாழ்ந்து மனித வாழ்க்கையின் அநித்தியத்தை எல்லோரையும் விட நன்றாகவே உணர்ந்திருந்த விமலானந்தாவுக்குத் தன் பேரன்பு மகனை இழக்க மட்டும் மனம் வரவில்லை.

ராணு இறப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பு ஜீனசந்திர சூரி அவரிடம் வந்து “உன் மகன் விரைவிலேயே உன்னை அழ வைக்கப் போகிறான்என்று சொல்லி விட்டுப் போனார். அதன் பின் மகன் விஷயத்தில் கூடுதல் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் விமலானந்தா இருந்தார். சூரத்தில் ஒரு வேலையாகச் சில காலம் விமலானந்தா போக வேண்டி இருந்தது. அப்போது ராணுவுக்கு டான்சில் ஆபரேஷன் செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்லி இருந்தார்கள். எந்தச் சின்ன ஆபரேஷனும் இது போன்ற கட்டங்களில் ஆபத்தாகவே முடியும் என்று உணர்ந்திருந்த விமலானந்தா சூரத் செல்வதற்கு முன் “எக்காரணத்தைக் கொண்டும் ராணுவுக்கு ஆபரேஷன் செய்யக்கூடாதுஎன்று மனைவியிடம் உத்தரவிட்டுச் சென்றிருந்தார். ஆனால் அவர் சொன்னதைக் கேட்காமல் அவர் மனைவி மகனுக்கு ஆபரேஷன் செய்வித்து விட்டார். அது பற்றிக் கேள்விப்பட்ட பின் கோபமடைந்த விமலானந்தா உள்ளுணர்வால் உந்தப்பட்டு, மகனைப் பள்ளிக்குக் கண்டிப்பாக அனுப்ப வேண்டாம். அது அவனுக்கு ஆபத்துஎன்று மனைவியிடம் எச்சரிக்கை விடுத்தார்.  அதையும் அவர் மனைவி அலட்சியம் செய்து மகன் வீட்டில் தங்கியிருக்க மறுத்தான் என்ற காரணத்திற்காக பள்ளிக்கு அனுப்பினார். நான்கே நாட்களில் ராணு போலியோவால் பாதிக்கப்பட்டான்.

சூரத்தில் இருந்த விமலானந்தாவுக்கு மகன் மரணத் தருவாயில் இருப்பதாய் ஒரு காட்சி தெரிந்தது. உடனே அவர் அவசரமாக மும்பை திரும்பினார். அவர் வீடு வந்து சேர்ந்த போது ராணு படுத்த படுக்கையாகி விட்டிருந்தான். விமலானந்தா தன் ஆன்மிகத் தேடலில் சக்தி வாய்ந்த ஒரு அகோரி பாபாவின் கைத்தடியைப் பெற்றிருந்தார். உடனே ராணுவின் படுக்கையின் அடியில் அந்தக் கைத்தடியை வைத்தார். அந்தப் படுக்கையில் இருக்கும் வரை ராணு மரணமடைய மாட்டான் என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் அவர் இல்லாத வேளையில் அவர் மகன் ராணு, உறவினர் ஒருவரிடம் தன்னை எடுத்து வேறு படுக்கைக்கு மாற்றச் சொன்னான். அகோரி பாபாவின் கைத்தடி பற்றியோ, ராணுவின் நிலைமை பற்றியோ அறிந்திருக்காத அந்த உறவினர் ராணுவைத் தூக்கி வேறு படுக்கையில் படுக்க வைத்தார். சிறிது நேரத்தில் விமலானந்தா அங்கு வந்த போது ராணு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். ஓடி வந்து அவனைத் தூக்கிய விமலானந்தாவின் கைகளிலேயே அவன் உயிர் பிரிந்தது.

அனைத்து ஞானத்தையும் பெற்றிருந்த போதும் சொந்த மகன் இறந்த போது விமலானந்தாவுக்கு அந்த ஞானம் உடனடியாக உதவவில்லை. அவர் உடைந்து போனார். ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய முயற்சிகளை மீறி மகாகாலாவின் சித்தமே வெற்றி பெற்றிருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். அவர் எதிர்ப்பையும் மீறி மனைவி ஆபரேஷனுக்கு ஒத்துக் கொண்டு செய்வித்தது, பள்ளிக்கும் அனுப்பியது, அவர் மகன் அகோரி பாபாவின் கைத்தடி இருந்த படுக்கையை விட்டு மாறியது அனைத்திலும் காலனின் சித்தமே கைகூடி இருக்கிறது. சில மாதங்கள் நடைப்பிணமாய் விமலானந்தா இருந்தார். ராணு இறந்து மூன்று மாதங்களில் ஜீனசந்திர சூரியும் ஒரு சொற்பொழிவின் போது அப்படியே சாய்ந்து மரணமடைந்தார்.

விமலானந்தாவுக்கு இரண்டு குருநாதர்கள் இருந்தார்கள். அவர்கள் பெயர்களையும் தன் நூல்களில் ராபர்ட் ஈ ஸ்வொபோதா வெளியிடவில்லை. அவர்கள் சீனியர் குருமகராஜ், ஜுனியர் குருமகராஜ் என்றே அழைத்தார். ஜுனியர் குருமகராஜை அடிக்கடிச் சென்று தரிசிக்கும் விமலானந்தா நான்கு மாதங்கள் கழித்துச் சென்று இரண்டு மணி நேரம் வாயிற்கு வந்தபடி வசை பாடினார். அந்தக் குருமகராஜ் அற்புத சக்திகள் படைத்தவர். அவர் ராணுவைக் காப்பாற்றி இருக்கலாம் என்பது அவருடைய மனத்தாங்கலாய் இருந்தது. ‘ஒரு துறவியான உங்களுக்கு என் மனவேதனை எப்படித் தெரியும்என்று ஆரம்பித்து இரண்டு மணி நேரம் வசை பாடியதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து குருமகராஜ் சொன்னார். “மகன் மீது இவ்வளவு பாசம் வைத்திருந்ததாய் சொல்கிறாயே ஏன் அவனுடனேயே நீ செத்துப் போகவில்லை. அப்படிச் சாகாமல் எது தடுத்தது? தினமும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறாய். ஒவ்வொருவரும் அவரவர் கர்மக்கடன் (ருனானுபந்தம் என்ற சமஸ்கிருதச் சொல்லை இங்கு பயன்படுத்தினார்) முடிகிற வரை தான் ஓரிடத்தில் ஒருவருடன் இருக்க முடியும். உன் ராணுவை ஒவ்வொருவரிடத்திலும் பார்க்க நீ கற்றுக் கொண்டால் லட்சக்கணக்கான ராணுகள் இன்றும் உனக்கிருக்கிறார்கள்

மகனுடனேயே இறந்து போகாமல் தன்னைத் தடுத்தது இந்த உலகில் எஞ்சி இருக்கும் கர்மக்கடன்களே என்கிற உண்மையையும், உடம்புக்குத் தான் அழிவு, ஆத்மாவுக்கு அழிவில்லை என்ற உண்மையையும் அந்தக் கணத்தில் மறுபடி ஆழமாக உணர்ந்து அமைதியானார் விமலானந்தா. அதன் பின் ராபர்ட் ஈ ஸ்வொபோதா போன்ற எத்தனையோ சீடர்கள் மகன்களைப் போல அவருக்குக் கிடைத்தார்கள். நேசித்தார்கள். அந்திமக் காலம் நெருங்குகையில் ராபர்ட் ஈ ஸ்வொபோதா குருவைப் பிரியப் போகிறோமே என்ற பெருந்துக்கத்தால் ‘நீங்கள் விரும்பினால் மேலும் பல்லாண்டு வாழ முடியுமே. எங்களுக்காக அதைச் செய்யக்கூடாதா?என்று கேட்டார். தன் குரு சொன்ன அதே கருத்தை தன் சீடனிடம் விமலானந்தா சொன்னார். “கர்மக்கடன் முடிந்த பின் வாழ்வது வீண். அது அடுத்த புதிய கர்மங்களை உருவாக்கி மறுபடியும் பிறவிகளில் சிக்க வைக்கும்.என்று விமலானந்தா கனிவுடன் சொன்னார். இதைச் சொல்லிச் சில மாதங்களில் விமலானந்தா அமைதியுடன் காலமானார். அவர் விருப்பப்படியே அவருக்கு ஈமக்கடன்களை ராபர்ட் ஈ ஸ்வொபோதாவே செய்தார்.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 11.7.2017

Thursday, October 19, 2017

இருவேறு உலகம் – 53


பேராபத்திலிருந்து தப்பி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாலும் பத்மாவதியைத் தவிர மற்ற மூவர்களால் அதிர்ச்சியிலிருந்து முழுவதுமாக மீண்டு விட முடியவில்லை. மரணத்தை எட்டிப்பார்த்து விட்டு வந்த அதிர்ச்சியில் அவர்கள் மௌனமாக அமர்ந்திருக்க பத்மாவதி கண்களை மூடி ஒருசில நிமிடங்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டு உதயைப் பார்த்துப் பெருமையாகச் சொன்னாள். “எப்பப்பாரு அந்தச் சாமி, இந்தக் கோயில்னு அலையறேன்னு கிண்டலடிப்பியேடா இப்ப நம்மள யாருடா காப்பாத்துனது? ஒரு நிமிஷம் அந்த லாரி நின்னிருக்காட்டி பரலோகம் போய்ச் சேர்ந்திருப்போமேடா. இப்ப என்னடா சொல்றே?”

அதிர்ச்சி மனநிலையிலிருந்து மீள தாயிடம் சிறிது வம்பு பேசலாம் என்று உதய்க்குத் தோன்றியது. “எப்பவுமே நீ கும்பிடற கடவுள் நம்மள காப்பாத்துச்சா, இல்ல எப்பவுமே இவன் சொல்ற கர்மா நம்மளக் காப்பாத்துச்சான்னு இப்பவும் தீர்மானமா தெரியலயேம்மா”

இறுக்கம் உடனடியாகக் குறைந்து க்ரிஷும், கமலக்கண்ணனும் பத்மாவதியைப் பார்க்க அவள் மூத்த மகனை முறைத்தாள். ”காப்பாத்துனது கர்மாவா இருந்திருந்தா உன்னை எப்படிடா காப்பாத்தியிருக்கும். நரம்பில்லாத நாக்கால கண்டபடி பேசறே. கலாட்டா செய்யறே. இதெல்லாம் காப்பாத்தற கர்மாவாடா”

உதய் பதில் எதுவும் சொல்லாமல் ஒரு பாடலை மட்டும் பாடினான்.
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே


க்ரிஷும் கமலக்கண்ணனும் புன்னகைக்க பத்மாவதி சொன்னாள்.  “ஆமா அந்த நாக்கை சின்னதுலயே இழுத்து வச்சு சூடு போடாதது என் தப்பு தான்”

உதய் தந்தையிடம் சொன்னான். “எப்படிப்பா இந்த லேடி கூட இவ்வளவு வருஷம் குடும்பம் நடத்தினீங்க. நீங்க பொறுமையின் சிகரம்ப்பா”

“வேற வழி தெரியலயேப்பா…” என்று சிவாஜி பாணியில் கமலக்கண்ணன் உருக்கமாகச் சொல்ல பத்மாவதி அவரை முறைத்தாள். அவர் அடக்கமாக ஜன்னல் வழியாகத் தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

உதயும் மேற்கொண்டு வாயைக் கிளறாததால் பத்மாவதி சகஜநிலைக்குத் திரும்பி  சொன்னாள். “வீட்டுக்குப் போனவுடனே அந்த மாஸ்டர் சாமிக்கும் இவன் வந்துட்டான்னு சொல்லணும். ஞான திருஷ்டில அவர் பார்த்துச் சொன்ன மாதிரியே இவன் நல்லபடியா வந்து சேர்ந்தானே. அவருக்கு என்னவொரு சக்தி…. என்னவொரு தேஜஸ்…”

க்ரிஷ் சந்தேகத்தோடு கேட்டான். “யாரது மாஸ்டர் சாமி?”


மாணிக்கத்தின் வீட்டில் ஒரு இழவு வீட்டின் துக்கம் சூழ்ந்திருந்தது. க்ரிஷ் திரும்ப வருகிறான், அவனை அழைத்து வர அவன் குடும்பமே போயிருக்கிறது என்ற செய்தி அவர்களுக்குப் பெரிய சோகச் செய்தியாய் இருந்தது. 

மணீஷ் தந்தையையும் தாத்தாவையும் பார்த்து “இனி என்ன செய்யறது?” என்று கேட்டான். ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற அவசரம் அவன் கேட்ட தொனியில் இருந்தது..

மாணிக்கம் அமைதியாய் சொன்னார். “முதல்ல இப்ப என்ன நடந்திருக்குன்னு புரிஞ்சுக்குவோம். அப்பறமா என்ன செய்யறதுன்னு யோசிப்போம்…”

”அதுவும் சரி தான்” என்று சங்கரமணி தன் கருத்தைச் சொன்னார். மணீஷ் தலையசைத்தான். தொடர்ந்து மூவரும் மௌனமாக இருந்தாலும் என்ன நடந்திருக்கிறது என்பதை உடனே புரிந்து கொண்டால் தேவலை என்று மூவருக்கும் தோன்ற ஆரம்பிக்க அவர்களுக்கு இருப்பு கொள்ளவில்லை. மாணிக்கமும், மணீஷும் உடனடியாக க்ரிஷ் வீட்டுக்குக் கிளம்ப சங்கரமணியும் அவர்களுடன் சேர்ந்து கிளம்பினார்.

மாணிக்கம் ’நீங்களுமா?’ என்பது போல் மாமாவைப் பார்த்தார். கமலக்கண்ணன் குடும்பத்தினர் அவரைப் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாகக் காண்பிக்க ஆரம்பித்த பிறகு சங்கரமணியும் அந்த வீட்டுக்குப் போவதைத் தவிர்க்க ஆரம்பித்திருந்தார்.  ஆனால் இன்று அவரால் போகாமல் இருக்க முடியவில்லை. அவர் வெளிப்படையாகவே மருமகனிடம் சொன்னார். “அவங்க என் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளினாலும் சரி, இன்னைக்கு நேர்ல பார்த்து நிலவரத்தை புரிஞ்சுக்கலன்னா எனக்கு தலையே வெடிச்சுடும்….”

அவர் ஒரு முடிவு செய்து விட்டால் பின் அதை யாராலும் மாற்ற முடியாது என்பதைப் புரிந்திருந்த மாணிக்கம் தங்களுடன் அவரையும் அழைத்துச் சென்றார். மூவரும் பதற்றத்தோடும், பரபரப்போடும் க்ரிஷைக் கண்டு எல்லாவற்றையும் அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தார்கள்…


மாஸ்டரைப் பற்றியும் அவர் அவர்கள் வீட்டுக்கு வந்து க்ரிஷ் அறையில் சிறிது நேரம் இருந்து தன் ஞான திருஷ்டியால் அறிந்து சொன்னதையும் மூவரும் சேர்ந்து விவரிக்க க்ரிஷ் அதிர்ந்து போனான். அவர்கள் சொல்வதைப் பார்த்தால் அவன் மனக்கண்ணில் ஒருமுறை படர்ந்த திடீர் காட்சியில் வாரணாசியில் இருந்த பாழடைந்த காளி கோயிலுக்குச் செல்வது போல் கண்ட அந்த இரண்டாம் நபர் போலத் தோன்றியது. அவரைத் தான் வேற்றுக்கிரகவாசி “உன்னை எதிரியின் ஆளாகப் பார்க்கிறவர்” என்று சொல்லியிருந்தான். அந்த மாஸ்டர், மாணிக்கம் மூலமாகத் தான் இவர்களுக்கு அறிமுகமாயிருக்கிறார்…. க்ரிஷ் கோபத்தோடு கேட்டான். “அவரை எல்லாம் எதுக்கு வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்தீங்க…..?”

பத்மாவதி தான் கோபத்தோடு பதிலளித்தாள். “ஆராய்ச்சிக்குப் போறவன் வர நாளாகும்னு சொல்லிட்டுப் போயிருந்தா நாங்க ஏண்டா அவரைத் தேடி போறோம்…. இவன் பாட்டுக்கு சொல்லிக்காமப் போவானாம்…. நாங்க யாரையும் கேக்கக் கூடாதாம்….. அந்த மகான் நம்ம வீட்டுக்கு வந்ததே பெருசு….”

க்ரிஷுக்கு அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. பத்மாவதி அதே வேகத்தோடு உதயிடம் கேட்டாள். “டேய் நான் உன்னை ஹரிணிக்குப் போன் செய்யச் சொன்னேனா இல்லையா?”

உதய் சொன்னான். “நான் தான் கார் ஓட்டரேனில்ல. நீயே உன் மருமகள் கிட்ட சொல்றது தானே”

அவன் உன் மருமகள் என்று அம்மாவிடம் சொன்னவுடன், அவனை முறைத்துப் பார்த்து விட்டு வெட்கம் கலந்த தர்மசங்கடத்துடன் அம்மாவிடம் க்ரிஷ் சொன்னான். “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ கொஞ்சம் சும்மா இரும்மா”

”நீ இருடா சும்மா. ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத் தான் தெரியும். பொண்ணு மனசக்கூட புரிஞ்சுக்க முடியாதவன் எத்தனை ஆராய்ச்சி பண்ணி என்னடா பிரயோஜனம்…. உன்னைச் சொல்லித் தப்பில்ல…. இந்த ஆம்பளகளே இப்படித் தான்…. உங்களுக்குத் தேவைன்னா ஈஷிகிட்டு வருவீங்க.. என்ன வேணும்னாலும் செய்வீங்க….. ஆனா மத்த சமயத்துல கண்டுக்கவே மாட்டீங்க…..”

அவள் பொரிந்து தள்ளியவுடன் உதய் தம்பியைப் பின்னால் திரும்பிப் பார்த்து உருக்கமாய் சொன்னான். “டேய் க்ரிஷ்…. உன்னால ஆண் இனத்துக்கே எந்த அளவு கெட்ட பேர் பார்த்தியா?”

க்ரிஷ் கோபமும், சிரிப்புமாய் கலந்து அண்ணனை முறைக்க, பத்மாவதி ஹரிணியிடம் பேசினாள். “ஹலோ….. நான் க்ரிஷோட அம்மா பேசறேன்மா. க்ரிஷ் வந்துட்டாம்மா. அவனைக்கூட்டிகிட்டு நாங்க வீட்டுக்குத் தான் போயிட்டிருக்கோம்…. அவன் கிட்ட பேசறியாம்மா….. வீட்டுக்கு வந்து பேசிக்கிறியா….. சரி வாம்மா….. நாங்க அரை மணி நேரத்துல போய்ச் சேர்ந்துடுவோம்…..”

க்ரிஷுக்கு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை. எல்லாமே இன்னும் குழப்ப நிலையில் தான் இருக்கின்றன. எதிரி மகாசக்திகள் படைத்தவன் என்பது தவிர அவனைப் பற்றி எந்த விவரமும் அவனுக்குத் தெரியாது. ஒரு முறை கொல்ல முயன்று தோற்றுப் போன மாணிக்கம் குடும்பம் அடுத்த முயற்சி எப்போது எடுக்கும் என்று தெரியாது. இந்த மாஸ்டர் என்கிற மனிதர் மகாசக்தி வாய்ந்தவராகத் தெரிகிறார். அவரும் அவனை எதிரியின் பட்டியலில் தான் வைத்திருக்கிறார். இத்தனை எதிரிகள், இத்தனை ஆபத்தான சூழ்நிலைகள் இருக்கையில் ஹரிணி அவன் பக்கம் வருவதையே அவன் விரும்பவில்லை. அவனை வெறுத்தாவது காலப்போக்கில் மறந்து அவள் பாதுகாப்பான நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். இவர்கள் புரியாமல் அவளை அவன் வாழ்க்கையில் மறுபடி வரவழைக்கப் பார்க்கிறார்கள்…..

கமலக்கண்ணன் “அண்ணனுக்கும் சொல்லணும்…..” என்றார். அண்ணன் என்று பொதுவாக அவர் சொன்னால் அது ராஜதுரையைத் தான். க்ரிஷ் திகைப்புடன் அவரைப் பார்க்க அவர், அவனைக் கண்டுபிடிக்க முதலமைச்சர் செந்தில்நாதனை நியமித்த தகவலையும் சொன்னார். அவன் காணாமல் போன விஷயம் முதலமைச்சர் வரைக்கும் போய் விசாரணை வரை வந்து விட்ட நிலையில் வீடு போய் சேர்ந்தவுடனேயே அவன் பலருக்கும் காணாமல் போனது எப்படி, திரும்பி வந்தது எப்படி என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பது புரிய வந்தது. என்னவென்று சொல்வான். சொன்னால் யார் நம்புவார்கள்?

‘என் வாழ்க்கையில் வந்து பெரிய குழப்பத்தை எல்லாப் பக்கங்களிலும் உருவாக்கி விட்டு நீ போய் விட்டாய். இனி நான் எதை, எங்கிருந்து, எப்படி சமாளிப்பேன்” என்று வேற்றுக்கிரகவாசியிடம் மானசீகமாய்க் கேட்டான். எப்போதும் வேற்றுக்கிரகவாசி பதில் சொல்கிறானோ இல்லையோ கேள்வி சென்று அவனை அடைந்து விட்டதை க்ரிஷால் உணர முடியும். இப்போது அந்த உணர்வில்லை. அவன் போயே போய் விட்டான்…..

மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கையில் கார் அவன் வீட்டின் முன் வந்து நின்றது. அவனை வரவேற்க மாணிக்கம், மணீஷ், சங்கரமணி, ஹரிணி, செந்தில்நாதன் ஆகியோர் நின்றிருந்தார்கள். அத்தனை பேர் கண்களும் அவனைக் கூர்மையாகப் பார்க்க மனநிலையை மறைத்துக் கொண்டு க்ரிஷ் புன்னகையுடன் காரிலிருந்து இறங்கினான்.

(தொடரும்)
என்.கணேசன்

Tuesday, October 17, 2017

இருவேறு உலகம் – 52

ப்ரேக் பிடிக்காமல் எதிரே வந்து கொண்டிருந்த லாரியைத் தவிர்க்க வேண்டுமானால் அந்தக் குறுகலான தெருவில் இருபக்கமும் இருந்த பெரும்சுவர்களில் தான் மோத வேண்டும். அந்தச் சுவர்களும் ஒரு தொழிற்சாலையின் கனமான சுவர்கள். லாரியில் மோதுவது போலவே அந்தச் சுவர்களில் மோதுவதும் உயிருக்கு ஆபத்தையே விளைவிக்கும். காரை விட்டு பக்கவாட்டில் நான்கு பேரும் குதித்தால் காயங்களோடு உயிர் தப்பலாம். தப்பாமலும் போகலாம். ஆனால் அதை மற்றவர்களுக்குச் சொல்லித் தெரிவிக்கக் கூட நேரம் இல்லை. அதற்கு மூளையும் வேலை செய்யவில்லை.  வேகமாகப் பின்வாங்கலாம் என்றால் பின்னால் ஒரு ஜீப் நெருக்கமாகவே வந்து கொண்டிருந்தது. அந்த ஜீப்காரன் நிலவரத்தைக் கவனித்தானா இல்லையா என்றும் தெரியவில்லை. அவனுக்கு நிலவரத்தைத் தெரிவிக்கவும் நேரமில்லை. என்ன செய்வது என்று புரியாமல் உதய் காரைப் ப்ரேக் போட்டு நிறுத்தினான்…..

க்ரிஷும், கமலக்கண்ணனும் கூட அப்போது தான் ஆபத்தின் உச்சக்கட்டத்தை உணர்ந்தார்கள். உதயைப் போலவே அவர்களும் அதிர்ச்சியில் செயலற்று உறைந்து போனார்கள். உதய் ப்ரேக் போட்டவுடனேயே பின்னால் நெருக்கமாக வந்து கொண்டிருந்த ஜீப்காரனும் உடனடியாகப் ப்ரேக் போட்டு ஜீப்பை நிறுத்தினான்

லாரி மட்டும் கட்டுப்பாடில்லாத வேகத்தோடு அவர்கள் காரை நெருங்குவதற்கு ஒரு அடி முன்னால் வரை  வந்து திடீரென்று நின்றது. நான்கு பேரும் நம்ப முடியாத அதிர்ச்சி கலந்த திகைப்புடன் அந்த அதிசயத்தைப் பார்த்தபடி சிலையாக சமைந்திருந்த போது க்ரிஷ் மனதில் வேற்றுக்கிரகவாசி சொன்னான்.

இந்த முறையும் நீ தப்பித்து விட்டாய். க்ரிஷ். நல்ல வேளையாக நான் பூமியின் தொடர்பு எல்லையை விட்டுப் போய் விடவில்லை. அமேசான் காடுகளில் சிலவற்றை ஆராய்ச்சிக்காக எடுத்துச் செல்ல குறித்து வைத்திருந்தேன். அதை எடுத்துக் கொண்டு கிளம்புவதற்கு நேரமாகி விட்டது. எல்லையை நெருங்கும் போது தான் உனக்கு வந்திருக்கும் ஆபத்து தெரிந்தது. லாரியை நான் தான் நிறுத்தி வைத்திருக்கிறேன்…..”

உதய் காரிலிருந்து வேகமாக இறங்க மற்றவர்களும் இறங்கினார்கள். எதிரே வந்த லாரியின் டிரைவர் க்ளீனர் இருவரும் இறங்கினார்கள். இருவர் முகத்திலும் பீதியும், அதிர்ச்சியும் அளவுக்கடங்காமல் விரிந்தன. உதய் தன் குடும்பம் பின்னால் நிற்கிற நினைவு கூட இல்லாமல் வாயிற்கு வந்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் சொல்லி அவர்களைத் திட்டினான். வடநாட்டுக்காரர்களான அவர்கள் நடுங்கியபடி அவன் எதிரில் நின்றார்கள். அவர்கள் எதிர்த்தோ, கோபமாகவோ ஒரு வார்த்தை பேசி இருந்தால் உதய் அவர்களை அடித்துப் புரட்டி எடுத்திருப்பான்….. அவர்கள் பீதி குறையாமல் பேச்சிழந்து நின்றது அவனிடமிருந்து அடிபடாமல் காப்பாற்றியது. பிறகு மராட்டி கலந்த ஹிந்தியில் அவர்கள் வண்டி ப்ரேக் திடீர் என்று வேலை செய்யவில்லை என்றும் கஷ்டப்பட்டு தான் வண்டியை நிறுத்த முடிந்ததாகவும் பரிதாபமாகச் சொன்னார்கள்.

ஆனால் க்ரிஷ் மனதில் வேற்றுக்கிரகவாசி சொன்னான். “இப்போது உன்னைக் கொல்ல முயற்சி செய்திருப்பது உன் உண்மையான எதிரி க்ரிஷ். இனி நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இரண்டாவது முறையும் அவன் தன் உயிரைக் காப்பாற்றியிருப்பது க்ரிஷ் மனதில் அளவிட முடியாத நன்றியுணர்வை ஏற்படுத்தியது. “நன்றி நண்பா

வேற்றுக்கிரகவாசி விடைபெறும் முன் அவசரமாகச் சொன்னான். “….” நான் பூமி எல்லையில் இப்போது இருக்கிறேன்இனி சிறிது நேரத்தில் தொடர்பு எல்லையைத் தாண்டிப்போய் விடுவேன். இனி நான் உனக்கு உதவவோ தொடர்பு கொள்ளவோ முடியாதுஜாக்கிரதையாயிரு…..”

வேற்றுக்கிரகவாசியிடமிருந்த தொடர்பு விடுபட்டது. லாரி டிரைவர், க்ளீனர் இருவரையும் க்ரிஷ் கூர்ந்து பார்த்தான். பார்க்க பரமசாதுக்களாய் தோற்றமளித்த இவர்களும் வாடகைக் கொலையாளிகள் தான் என்பதை நம்பக் கஷ்டமாய் இருந்தது. இவர்களைப் பிடித்து விசாரிப்பது பெரிய காரியமல்ல. ஆனால் இவர்கள் மூலம் அந்த எதிரியை அவன் அடைய முடியாது என்று உள்ளுணர்வு சொல்லியது. அவன் திரும்ப வந்தது அவன் குடும்பத்திற்கே தெரிந்து சுமார் இரண்டரை மணி நேரம் தான் ஆகியிருக்கும். அப்படி இருக்கையில் அதையும் உடனே தெரிந்து கொண்டு இவ்வளவு விரைந்து கொலை முயற்சியில் இறங்கியிருக்கும் அந்தச் சக்தி வாய்ந்த மனிதனை இந்தக் கொலையாளிகளே நேரடியாய் அறிந்திருக்க வாய்ப்பேயில்லை......

இப்படிப்பட்ட எதிரியை இனி எப்படி சமாளிப்போம் என்பது க்ரிஷுக்குப் பிடிபடவில்லை. இனியொரு முறை ஆபத்து வந்தால் காப்பாற்ற வேற்றுக்கிரகவாசி கூட இல்லை…..


ர்ம மனிதனிடம் மனோகர் வந்து தகவல் சொன்ன போது அவன் கண்களைச் சுருக்கி விஷப்பார்வை பார்த்தான். அதிகமாய் அமைதி இழக்காத அவன் அபூர்வமாய் மிகுந்த கோபம் அடைகிற போது மட்டுமே அப்படிப் பார்ப்பான்அந்த நேரங்களில் அவன் மேலும் ஆபத்தானவன்....

மனோகர் அவசரமாகச் சொன்னான். “அவங்க மேலே தவறு இருக்கறதா தெரியல. எல்லாமே கச்சிதமா தான் திட்டம் போட்டுச் செஞ்சிருக்காங்க. அந்த ப்ரேக் பிடிக்காத லாரி எப்படி நின்னுச்சுன்னு அவங்களுக்கு இப்பவுமே பிடிபடல. டிரைவர் சொல்றான் பல யானை பலத்துல யாரோ பிடிச்சு நிறுத்தின மாதிரி ஒரு அங்குலம் கூட நகராம நின்னுச்சுன்னு. அவன் பல வருஷமா லாரி ஓட்டறவன். அந்த நிலைமைல அவனே மனசு மாறி அதை நிறுத்த முயற்சி செஞ்சிருந்தாக்கூட முடிஞ்சிருக்காதுங்கறான். அவன் சர்வீஸ்ல இப்படியொரு அதிசயத்தை பார்த்ததில்லைங்கறான். கடைசில அந்த லாரியை ஸ்டார்ட் பண்ணக்கூட முடியலை அவங்களால. ஏதோ ஜாம் ஆன மாதிரி நின்ன வண்டிய இன்னொரு லாரி மூலமா தான் இழுத்துட்டு போய் ரோட க்ளியர் பண்ணியிருக்காங்க. மெக்கானிக்னால கூட லாரிய சரி செய்ய முடியல. என்ன ப்ரச்சனைனே தெரியாம அவனும் குழம்பறதா இப்ப தான் டிரைவர் போன் செஞ்சான்.....”

மர்ம மனிதன் ஒருசில வினாடிகள் கண்களை மூடியிருந்து விட்டுத் திறந்தான். மனோகரைப் பார்த்துபோகலாம்என்று சைகை செய்ய மனோகர் அந்த இடத்தை விட்டுப் போனால் போதும் என்று வேகமாக நகர்ந்தான்.

மர்ம மனிதன் மனம் கேள்விப்பட்ட விஷயங்களை ஆழமாய் அசை போட்டது. க்ரிஷ் என்கிற விதை சாதாரணமாய் அழிகிற மாதிரி தெரியவில்லை.... சதாசிவ நம்பூதிரியின் அந்த விதை உதாரணம் இப்போதும் அவனுக்கு நெருடலாக இருந்தது. ” அந்தப் பையன் சாகாமல் இருந்தான்னா சாதாரணமா இருந்துட மாட்டான்…” என்ற வார்த்தைகள் இப்போதும் அவன் காதுகளில் ஒலித்தன. க்ரிஷ் சாகவில்லை. அவனை ஏதோ ஒரு சக்தி சாக விடவில்லைகட்டுப்பாடு இல்லாமல் தறிகெட்டு ஓடும் லாரியை எங்கோ இருந்தபடி ஒரு சக்தி அப்படியே தடுத்து நிறுத்துகிறது என்றால் அது சாதாரண சக்தியாய் இருக்க வாய்ப்பில்லை... அது அந்தக் கருப்புப் பறவை சம்பந்தப்பட்ட சக்தியாகத் தான் இருக்க வேண்டும். அது ஏதாவது சித்தர், அல்லது யோகியாக இருக்கலாம் அல்லது  அது ஒரு ஏலியனாகக் கூட இருக்கலாம். இஸ்ரோ ஏலியன் என்ற கோணத்தில் தான் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது…..

எதையுமே ஆரம்பத்திலேயே அழிப்பது சுலபம். வளர விட்டு அழிப்பது கஷ்டம்…. அறிவாளிக்கு அந்த இரண்டாவது வழி அனாவசியமும் கூட. அதனால் தான் சதாசிவ நம்பூதிரியின் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடனேயே மர்ம மனிதன், க்ரிஷ் வீடு போய் சேர்வதற்கு முன் அவனை அழித்து விட முடிவெடுத்து மின்னல் வேகத்தில் இயங்கினான். ஏதோ ஒரு சக்தி இடைமறித்திருக்கா விட்டால் இன்னேரம் அவன் க்ரிஷை முடித்தே விட்டிருப்பான்…… உடனடியாக சென்னை போக அவன் மனம் துடித்தது. நேரடியாகவே இறங்கி எல்லாம் முடித்து விட்டு வர அவன் ஆசைப்பட்டான். ஆனால் இரண்டு விஷயங்கள் அந்த எண்ணத்தை உடனடியாகச் செயல்படுத்த விடாமல் தடுத்தன.

முதலாவதும், முக்கியமானதுமாய் மாஸ்டர். அவர் சென்னையில் இருக்கிறார். அவர் கண்டிப்பாக க்ரிஷை அடிக்கடி சந்திப்பார். அல்லது க்ரிஷோடு தொடர்பில் இருப்பார். அப்படிப்பட்ட நிலையில் யார் க்ரிஷ் வழியில் குறுக்கிட்டாலும் அது அவர் கவனத்திற்கு வராமல் போகாது. க்ரிஷை காப்பாற்றிய சக்தி தான் எதிரியாக அவனை இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். அந்த எண்ணத்தை ரகசியமாக விதைத்ததே மர்ம மனிதன் தான். அதை அவன் மிகக் கவனமாக அவர் சிறிதும் அறியாமல் செய்திருக்கிறான். க்ரிஷையும் மாஸ்டரையும் எதிரெதிர் அணியில் இருக்க வைத்ததன் உத்தேசமே தப்பித் தவறி மாஸ்டர் கவனம் சரியான திசையில் போய் விடக்கூடாது என்பதற்காகத் தான். இப்படியொரு சூழ்நிலையை புத்திசாலித்தனமாக உருவாக்கி விட்டு இப்போது சென்னைக்குப் போய் மாஸ்டர் கவனத்திற்குத் தட்டுப்பட அவன் விரும்பவில்லை.

இரண்டாவது க்ரிஷைக் காக்கும் சக்தி. தமிழ் நாட்டில் பாம்புக்கடி பட்டவனை அமேசான் காடுகளுக்குக் கொண்டு போய் காப்பாற்றுகிற சக்தி, எங்கோ இருந்து கொண்டு க்ரிஷ் விபத்தில் சிக்காதபடி காப்பாற்றும் சக்தி சாதாரணமாக இருக்க வாய்ப்பில்லை. அந்த சக்தியைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் க்ரிஷ் பாதையில் நேரடியாகக் குறுக்கிட அவன் விரும்பவில்லை.

ஆனாலும் க்ரிஷை அவன் நேரடியாக மதீப்பீடு செய்தேயாக வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்…..

(தொடரும்)
(வழக்கம் போல் அடுத்த வியாழன் அன்று அடுத்த அத்தியாயம் வரும்)

என்.கணேசன்
(வாசக அன்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்)