சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 23, 2017

கர்மக்கடன் முடிகையில் அனைத்தும் முடியும்!




சில அபூர்வ சக்திகள் தகுதியற்ற மனிதர்களிடமும் கிடைத்து விடுகின்றன என்பதற்கு விமலானந்தாவைத் தந்திரமாக ஏமாற்ற நினைத்த ஜீனசந்திர சூரியே உதாரணம். முன்பே குறிப்பிட்டது போல ஜோதிடத்தில் அவர் பெற்றிருந்த பாண்டித்தியம் அபாரமானது. அதிலும் அசர வைக்கும் அம்சம் என்ன என்றால் சில அபூர்வ சக்திகள் மூலமாக குழந்தை பிறப்பதற்கு முன்னாலேயே இந்தத் தேதியில், இந்த மாதிரியான ஜாதக அமைப்பில் குழந்தை பிறக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து விடுகின்ற அதிஅபூர்வ சக்தியையும் ஜீனசந்திர சூரி அவ்வப்போது வெளிப்படுத்தியதுண்டு. அப்படி அவர் விமலானந்தாவிடமும் வெளிப்படுத்தினார்.

விமலானந்தாவுக்குத் திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகியிருந்த போதும் குழந்தைகள் இல்லை. சில முறை கர்ப்பமாகியும் சிசு கர்ப்பத்தில் தங்காமல் கலைந்தும், குறைப்பிரசவம் ஆகியும் அவர் மனைவி பெரும் வேதனையில் இருந்தார். மருத்துவர்கள் பலவீனமான கர்ப்பப்பையைக் காரணமாகச் சொன்னார்கள். விமலானந்தாவோ இது போன்ற தனிப்பட்ட காரியங்களில் தன் சக்தியைப் பயன்படுத்துவதில் உடன்பாடு இல்லாதவராக இருந்தார். இந்த சமயத்தில் தான் ஜீனசந்திர சூரி விமலானந்தாவிடம் வந்து ‘உனக்கு இந்தத் தேதியில் இந்த ஜாதக அமைப்பில் ஒரு மகன் பிறப்பான். இப்படிப்பட்ட குணாதிசயங்களுடன் இருப்பான்என்று தேதி, ஜாதகம், குணாதிசயங்கள் எழுதிக் கொடுத்தார்.

விமலானந்தாவின் மனைவி அப்போது க்வாலியரில் உள்ள தன் தாய் வீட்டுக்கு நீண்ட கால ஓய்வுக்குச் சென்றிருந்தார். அதனால் விமலானந்தா சிரித்துக் கொண்டே “நீங்கள் சொல்லும் தேதியில் குழந்தை பிறக்க வேண்டுமானால் என் மனைவி தற்போது இங்கிருக்க வேண்டும். அவள் தாய் வீட்டில் நீண்ட கால ஓய்வுக்குப் போயிருப்பதால் எனக்கு அப்படிப் பிறக்க வழியே இல்லைஎன்றார். ஆனால் ஜீனசந்திர சூரி “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நடக்கும் பாருங்கள்என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

ஜீனசந்திர சூரியிடம் எத்தனை தான் சக்திகள் இருந்தாலும், தன் பழைய அனுபவங்கள் காரணமாக அவரை முழுமையாக நம்ப முடியாத விமலானந்தா, அந்த மனிதர் ஏதாவது ஏமாற்று வேலைகள் செய்தாலும் செய்வார் என்ற யோசனையில், க்வாலியரில் இருக்கும் மனைவிக்கு அங்கேயே மேலும் சில காலம் ஓய்வு எடுக்கும்படியும், மும்பைக்குத் தற்போது வர வேண்டாம் என்றும் தந்தியனுப்பினார். ஆனால் யாரோ ஒரு உறவினர் விமலானந்தாவின் மனைவியிடம் உன் கணவருக்கு ஏதோ ஆபரேஷன் நடந்திருக்கிறது.  அதை உன்னிடம் மறைக்கத் தான் நீ இப்போது மும்பை வர வேண்டாம் என்று சொல்கிறார்என்று சொல்லி விட்டார். இதைக் கேட்டவுடன் பதறிப்போய் அவர் மனைவி அடுத்த ரயிலைப் பிடித்து மும்பை வந்து விட்டார்.

அப்போது தான் விதி எவ்வளவு வலிமையானது என்பதை விமலானந்தா உணர்ந்தார். ஜீனசந்திர சூரி சொன்னது போலவே விமலானந்தாவின் மனைவி அந்த மாதம் கருத்தரித்தார். அவர் கூறிய தேதியிலேயே, கூறிய கிரக அமைப்பிலேயே ஆண்குழந்தை ஒன்று விமலானந்தாவுக்குப் பிறந்தது. ராணு என்று பெயரிட்டார்கள். படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்தவனாய், அறிவாளியாய் ராணு வளர்ந்தான். ஆனால் ராணுவின் ஜாதகத்தில் அவன் அற்பாயுசில் இறப்பான் என்ற அமைப்பும் இருந்தது. மகா சூட்டிப்பும், அறிவும், அன்பும் நிறைந்த ராணுவை வீட்டில் எல்லோரும் மிகவும் நேசித்தார்கள். விமலானந்தாவோ அவன் மேல் உயிராய் இருந்தார். விமலானந்தாவுக்கு சில ஆண்டுகளில் இன்னொரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் ஜாதக அமைப்பில் அவன் தான் குடும்பத்தின் மூத்த பிள்ளையாய் வளர்வான் என்றும் இருந்தது.  அதையும் விமலானந்தா அறிந்திருந்தார்.

மகா மயானமான மணிகர்ணிகா காட்டில் பத்து மாதங்கள் தங்கி தவ வாழ்க்கை வாழ்ந்து மனித வாழ்க்கையின் அநித்தியத்தை எல்லோரையும் விட நன்றாகவே உணர்ந்திருந்த விமலானந்தாவுக்குத் தன் பேரன்பு மகனை இழக்க மட்டும் மனம் வரவில்லை.

ராணு இறப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பு ஜீனசந்திர சூரி அவரிடம் வந்து “உன் மகன் விரைவிலேயே உன்னை அழ வைக்கப் போகிறான்என்று சொல்லி விட்டுப் போனார். அதன் பின் மகன் விஷயத்தில் கூடுதல் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் விமலானந்தா இருந்தார். சூரத்தில் ஒரு வேலையாகச் சில காலம் விமலானந்தா போக வேண்டி இருந்தது. அப்போது ராணுவுக்கு டான்சில் ஆபரேஷன் செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்லி இருந்தார்கள். எந்தச் சின்ன ஆபரேஷனும் இது போன்ற கட்டங்களில் ஆபத்தாகவே முடியும் என்று உணர்ந்திருந்த விமலானந்தா சூரத் செல்வதற்கு முன் “எக்காரணத்தைக் கொண்டும் ராணுவுக்கு ஆபரேஷன் செய்யக்கூடாதுஎன்று மனைவியிடம் உத்தரவிட்டுச் சென்றிருந்தார். ஆனால் அவர் சொன்னதைக் கேட்காமல் அவர் மனைவி மகனுக்கு ஆபரேஷன் செய்வித்து விட்டார். அது பற்றிக் கேள்விப்பட்ட பின் கோபமடைந்த விமலானந்தா உள்ளுணர்வால் உந்தப்பட்டு, மகனைப் பள்ளிக்குக் கண்டிப்பாக அனுப்ப வேண்டாம். அது அவனுக்கு ஆபத்துஎன்று மனைவியிடம் எச்சரிக்கை விடுத்தார்.  அதையும் அவர் மனைவி அலட்சியம் செய்து மகன் வீட்டில் தங்கியிருக்க மறுத்தான் என்ற காரணத்திற்காக பள்ளிக்கு அனுப்பினார். நான்கே நாட்களில் ராணு போலியோவால் பாதிக்கப்பட்டான்.

சூரத்தில் இருந்த விமலானந்தாவுக்கு மகன் மரணத் தருவாயில் இருப்பதாய் ஒரு காட்சி தெரிந்தது. உடனே அவர் அவசரமாக மும்பை திரும்பினார். அவர் வீடு வந்து சேர்ந்த போது ராணு படுத்த படுக்கையாகி விட்டிருந்தான். விமலானந்தா தன் ஆன்மிகத் தேடலில் சக்தி வாய்ந்த ஒரு அகோரி பாபாவின் கைத்தடியைப் பெற்றிருந்தார். உடனே ராணுவின் படுக்கையின் அடியில் அந்தக் கைத்தடியை வைத்தார். அந்தப் படுக்கையில் இருக்கும் வரை ராணு மரணமடைய மாட்டான் என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் அவர் இல்லாத வேளையில் அவர் மகன் ராணு, உறவினர் ஒருவரிடம் தன்னை எடுத்து வேறு படுக்கைக்கு மாற்றச் சொன்னான். அகோரி பாபாவின் கைத்தடி பற்றியோ, ராணுவின் நிலைமை பற்றியோ அறிந்திருக்காத அந்த உறவினர் ராணுவைத் தூக்கி வேறு படுக்கையில் படுக்க வைத்தார். சிறிது நேரத்தில் விமலானந்தா அங்கு வந்த போது ராணு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். ஓடி வந்து அவனைத் தூக்கிய விமலானந்தாவின் கைகளிலேயே அவன் உயிர் பிரிந்தது.

அனைத்து ஞானத்தையும் பெற்றிருந்த போதும் சொந்த மகன் இறந்த போது விமலானந்தாவுக்கு அந்த ஞானம் உடனடியாக உதவவில்லை. அவர் உடைந்து போனார். ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய முயற்சிகளை மீறி மகாகாலாவின் சித்தமே வெற்றி பெற்றிருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். அவர் எதிர்ப்பையும் மீறி மனைவி ஆபரேஷனுக்கு ஒத்துக் கொண்டு செய்வித்தது, பள்ளிக்கும் அனுப்பியது, அவர் மகன் அகோரி பாபாவின் கைத்தடி இருந்த படுக்கையை விட்டு மாறியது அனைத்திலும் காலனின் சித்தமே கைகூடி இருக்கிறது. சில மாதங்கள் நடைப்பிணமாய் விமலானந்தா இருந்தார். ராணு இறந்து மூன்று மாதங்களில் ஜீனசந்திர சூரியும் ஒரு சொற்பொழிவின் போது அப்படியே சாய்ந்து மரணமடைந்தார்.

விமலானந்தாவுக்கு இரண்டு குருநாதர்கள் இருந்தார்கள். அவர்கள் பெயர்களையும் தன் நூல்களில் ராபர்ட் ஈ ஸ்வொபோதா வெளியிடவில்லை. அவர்கள் சீனியர் குருமகராஜ், ஜுனியர் குருமகராஜ் என்றே அழைத்தார். ஜுனியர் குருமகராஜை அடிக்கடிச் சென்று தரிசிக்கும் விமலானந்தா நான்கு மாதங்கள் கழித்துச் சென்று இரண்டு மணி நேரம் வாயிற்கு வந்தபடி வசை பாடினார். அந்தக் குருமகராஜ் அற்புத சக்திகள் படைத்தவர். அவர் ராணுவைக் காப்பாற்றி இருக்கலாம் என்பது அவருடைய மனத்தாங்கலாய் இருந்தது. ‘ஒரு துறவியான உங்களுக்கு என் மனவேதனை எப்படித் தெரியும்என்று ஆரம்பித்து இரண்டு மணி நேரம் வசை பாடியதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து குருமகராஜ் சொன்னார். “மகன் மீது இவ்வளவு பாசம் வைத்திருந்ததாய் சொல்கிறாயே ஏன் அவனுடனேயே நீ செத்துப் போகவில்லை. அப்படிச் சாகாமல் எது தடுத்தது? தினமும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறாய். ஒவ்வொருவரும் அவரவர் கர்மக்கடன் (ருனானுபந்தம் என்ற சமஸ்கிருதச் சொல்லை இங்கு பயன்படுத்தினார்) முடிகிற வரை தான் ஓரிடத்தில் ஒருவருடன் இருக்க முடியும். உன் ராணுவை ஒவ்வொருவரிடத்திலும் பார்க்க நீ கற்றுக் கொண்டால் லட்சக்கணக்கான ராணுகள் இன்றும் உனக்கிருக்கிறார்கள்

மகனுடனேயே இறந்து போகாமல் தன்னைத் தடுத்தது இந்த உலகில் எஞ்சி இருக்கும் கர்மக்கடன்களே என்கிற உண்மையையும், உடம்புக்குத் தான் அழிவு, ஆத்மாவுக்கு அழிவில்லை என்ற உண்மையையும் அந்தக் கணத்தில் மறுபடி ஆழமாக உணர்ந்து அமைதியானார் விமலானந்தா. அதன் பின் ராபர்ட் ஈ ஸ்வொபோதா போன்ற எத்தனையோ சீடர்கள் மகன்களைப் போல அவருக்குக் கிடைத்தார்கள். நேசித்தார்கள். அந்திமக் காலம் நெருங்குகையில் ராபர்ட் ஈ ஸ்வொபோதா குருவைப் பிரியப் போகிறோமே என்ற பெருந்துக்கத்தால் ‘நீங்கள் விரும்பினால் மேலும் பல்லாண்டு வாழ முடியுமே. எங்களுக்காக அதைச் செய்யக்கூடாதா?என்று கேட்டார். தன் குரு சொன்ன அதே கருத்தை தன் சீடனிடம் விமலானந்தா சொன்னார். “கர்மக்கடன் முடிந்த பின் வாழ்வது வீண். அது அடுத்த புதிய கர்மங்களை உருவாக்கி மறுபடியும் பிறவிகளில் சிக்க வைக்கும்.என்று விமலானந்தா கனிவுடன் சொன்னார். இதைச் சொல்லிச் சில மாதங்களில் விமலானந்தா அமைதியுடன் காலமானார். அவர் விருப்பப்படியே அவருக்கு ஈமக்கடன்களை ராபர்ட் ஈ ஸ்வொபோதாவே செய்தார்.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 11.7.2017

8 comments:

  1. Arumai aya vaalthukal: aanma patriya puthagam iruthaal theriyapaduthugal.

    ReplyDelete
  2. ஆன்மீகத்தில் ஆர்வமுடையவர்களுக்கு இந்தப்பதிவில் மிக நல்ல கருத்துகளைக் கொடுத்துள்ளீர்கள். சபாஷ்

    ReplyDelete
  3. நிறைய நிகழ்வுகள் சுவரஸ்மாக இருந்தன....பயனுள்ள சில கருத்துக்கள் அருமை.

    ReplyDelete

  4. What power surpasses fate? Its will
    Persists against the human skill
    Thirukkural 380

    ReplyDelete
  5. மீண்டும் படித்தேன் அருமை

    ReplyDelete