க்ரிஷ் உறக்க நிலையிலிருந்து மீண்ட போதிலும்
அவனால் கண்விழிக்க முடியவில்லை. அரைமயக்க நிலையிலேயே அவன் இருந்தான்.
வேற்றுக்கிரகவாசியை இப்போது அவனால் உணர முடியவில்லை. அவன் அருகில் இல்லை
போலிருக்கிறது. எங்கே போனான்?
‘நான் சீக்கிரமே போய்
விடுவேன். இனி நீ தனியாகவே எல்லாவற்றையும் சந்திக்க வேண்டியிருக்கும்….’ என்று அவன் சொல்லியிருந்தது க்ரிஷுக்கு நினைவு வந்தது. அப்படிப் போயே
விட்டானோ? சேச்சே... சொல்லிக் கொள்ளாமல் அப்படிப் போயிருக்க மாட்டான். அவன்
நல்லவன்.... நண்பன்.... கசப்பான உண்மைகளைத் தேனில் குழைக்காமல் சொல்பவன்... அது
கூட ‘எல்லாம் சரியாக இருக்கிறது என்கிற கற்பனை மயக்கத்தில் இருந்து விடாதே. உன்
உலகில் எல்லாமே அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது’ என்பதை
உணர்த்துவதற்காகச் சொல்வதாகச் சொன்னான்.
அந்த
அழிவைத் தேடித்தரவிருக்கும் தீய சக்திகளை அவன் கேன்சர் செல்கள் என்றான்.
இப்போதிருக்கும் மயக்க நிலையிலும் கூட க்ரிஷ் மனதில் அவன் சொன்ன உவமானம் ஆழமாகப்
பதிந்திருந்து பயமுறுத்தியது.
“மனிதனின்
உடம்பில் இருக்கிற ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு வேலை இருக்கிறது. அந்த வேலையைக் கச்சிதமாய் செய்து முடித்து
விட்டு அது இறந்து விடும். அது உருவாகி அழிவது உடம்பை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும்
உண்டான, அதற்கு விதிக்கப்பட்ட வேலையைச் செய்வதற்குத் தான். அதற்கு வேறெந்த
தனிப்பட்ட நோக்கமும் இல்லை. ஆனால் கேன்சர் செல்கள் அப்படி அல்ல. அவை உடல்நல
நோக்கம் இல்லாமல் தனி தன்னல நோக்கத்துக்காக இயங்குபவை. அவை வேலையை முடித்து
அழிந்து போகாமல், பெருகிக் கொண்டே போகிற தன்மை கொண்டவை. அப்படிப் பெருகி வலிமை
அடைந்து மற்ற ஒழுங்கான செல்களைச் செயல் இழக்க வைப்பவை. அப்படியே விட்டால் தாங்கள்
அழிவதற்கு முன் தாங்கள் இருக்கும் உடலை அழித்து விடும் தன்மை உடையவை....”
பல்லாயிரக்கணக்கான
கோடிகளில் சொத்து சேர்த்துக் குவித்தும் திருப்தி அடையாமல் அசுரப்பசியோடு மேலும்
மேலும் சேர்த்துக் கொண்டு போகும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கேன்சர்
செல்களாக நினைக்கத் தான் க்ரிஷுக்குத் தோன்றியது. சில கோடிகளில் அவர்களது
அடிப்படைத் தேவைகள் மட்டுமல்லாமல் மிக ஆடம்பரத் தேவைகள் கூட முடிந்து விடும். அப்படி
இருக்கையில், எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல்
உழன்று கொண்டிருக்கையில், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய செல்வத்தைக் கூடச்
சுரண்டியெடுத்து, தங்கள் தேவைகளையும், சம்பாத்தியங்களையும் நியாயம் இல்லாத
முறையில் சிலர் பெருக்கிக் கொண்டே போகிற போக்கு ஒரு சமுதாயத்தின் அழிவின் போக்காகவே
அவனுக்குத் தோன்றியது.
இன்று வார்டு மெம்பர்களின் சம்பாத்தியமே கோடிகளில் இருப்பதாகச்
சொல்கிறார்கள். அப்படியென்றால் மற்றவர்களின் சம்பாத்தியம் எந்த அளவில் இருக்கும்
என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவன் அண்ணன் ஒரு எம்.பி., அவன் தந்தை ஒரு அமைச்சர்
என்றாலும் கூட இதை அவனால் நியாயப்படுத்த முடியவில்லை. மிக நெருக்கமான அன்பான குடும்பமாக இருந்தாலும் கூட அவர்கள் இருவரும்
அவனிடம் தங்கள் சம்பாத்தியம் பற்றிப் பேசியதில்லை. எதிர்க்கட்சிகளிடமும்,
ஊடகங்களிடமும் எச்சரிக்கையாக இருந்ததை விட அவர்கள் அவனிடம் அதிக எச்சரிக்கையுடன்
இருந்தார்கள்....
அவன் எண்ணங்கள் அப்படியே நின்று போய் அவன் கண் முன் இருட்டினூடே ஒரு
பாழடைந்த கோயில் தெரிந்தது. உள்ளே அரைகுறை வெளிச்சத்தில் கோரமான பத்ரகாளி சிலை
தெரிந்தது. பத்ரகாளி உக்கிரமாகத் தெரிந்தாள். மெல்ல பத்ரகாளியின் விழிகள் அசைந்தன.
பத்ரகாளியின் கண்கள் நெருப்பென ஜொலித்தன. அந்த அரைகுறை வெளிச்சமும் அந்தக்
கண்களிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அந்தக் கண்கள் அவனையே
பார்த்தன. அடுத்ததாக காளியின் எட்டு கைகளும் மெல்ல அசைந்தன.
வலக்கரங்கள் நான்கில் சூலம், கத்தி, உடுக்கை, கிளி
இருந்தன. இடக்கரங்கள் நான்கில்
பாசம், கேடயம், மணி, கபாலம் ஏந்தியிருந்தாள். எல்லாமே ஒரு கணம் தத்ரூபமாய்த் தோன்றின. எங்கிருந்தோ
உடுக்கை சத்தம் கேட்டது. காளி நடனமாட ஆரம்பித்தாள். அவளுடன் சேர்ந்து
அண்டசராசரங்களே ஆடுவது போல் க்ரிஷ் உணர்ந்தான். தாளலயத்துடன் வேகமாக காளி ஆடிய
போது ஒவ்வொரு அசைவிலும் பிரம்மாண்ட அழகை க்ரிஷ் பார்த்தான். திடீரென்று உடுக்கை
சத்தம் நின்றது. காளி மறுபடியும் சிலையானாள். மயான அமைதி நிலவ ஆரம்பித்தது.
அப்போது தான் தூரத்தில் இருட்டில் நின்று கொண்டு யாரோ ஒருவன் அந்தக் கோயிலைப்
பார்ப்பதைக் க்ரிஷ் கண்டான். அவன் வந்திராவிட்டால் காளியின் நடனம்
தொடர்ந்திருக்குமோ? பார்க்கும் ஆளின் முகம் தெளிவாகத் தெரியவில்லை ஆனால் அவன்
கண்கள் அந்த இருட்டில் அமானுஷ்யமாய் ஜொலித்தன. அந்த ஆள் சிறிது நேரம் சிலை போல
நின்று அந்தக் கோயிலையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் மெல்ல அவன் கோயிலை நோக்கி
நடக்க ஆரம்பித்தான். கோயிலின் உள்ளே நுழைவதற்கு முன் அவன் திரும்பிப் பார்த்தான்..
உடனே எல்லாம் மறைந்து போயின.... யாரவன்?
க்ரிஷ் இது கனவாகத் தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தான்.
ஏனென்றால் கனவுகள் தான் இப்படி திடுதிப்பென்று முடியும்...... இப்படி
நினைக்கையிலேயே மறுபடி அந்தப் பாழடைந்த கோயில் தெரிந்தது. இப்போது அது மாலை இளம் வெயிலில் தெரிந்தது.
கனவாக இருந்தால் இப்படித் தொடராதே என்று க்ரிஷ் யோசித்தான். கோயிலுக்குள் பத்ரகாளி
சிலை மறுபடி தெரிந்தது. காளி சிலையைச் சுற்றிலும் குப்பைகள் வறண்ட இலைகள் கிடந்தன. அந்தக் குப்பைகளைப்
பொருட்படுத்தாமல் பத்ரகாளி மோன நிலையில் இருந்தாள். மங்க ஆரம்பித்த அந்த மாலை
வேளையில் அந்தக் கோயிலை நோக்கி கம்பீரமான ஒருவர் நடந்து கொண்டிருந்தார். இவர் தான்
முந்தைய காட்சியில் இருட்டில் பார்த்த ஆளோ என்ற சந்தேகம் க்ரிஷுக்கு வந்தது. இவர்
கண்களும் தீட்சண்யமான கண்கள் தான். ஆனால் இந்தக் கண்களில் பரிசுத்தம் தெரிந்தது.
திடீரென்று அந்தக் காட்சியும் மறைந்தது. க்ரிஷ் வேற்றுக்கிரகவாசியின் அருகாமையை
உணர்ந்தான்....
க்ரிஷ் பூரண விழிப்படைந்தான். “உன்னால் எனக்கு ஒரு வித்தியாசமான கனவு
பாதியில் நின்று விட்டது...”
“அது கனவும் அல்ல. பாதியில் நிற்கவுமில்லை. இரண்டும் உண்மையான
காட்சிகள் தான்.....”
க்ரிஷ் திகைத்தான்.
மாஸ்டர்
தனக்குள் எழுந்த கோபத்தையும், ஏமாற்றத்தையும் சில வினாடிகளில் விலக்கிக் கொண்டார்.
கோபத்திலும், சுய பச்சாதாபத்திலும் சமநிலை இழக்க வேண்டிய தருணம் அல்ல இது. கண்களை
மூடிக் கொண்டு மூச்சை நன்றாகச் சில முறை இழுத்து விட்டார். பின் திரிசூலம்
வரைந்திருந்த கல்லை மெல்ல இழுத்தார். சிரமம் இல்லாமல் வந்தது. ’அவன் எப்படி எடுத்திருப்பான்?’ என்ற கேள்வி மனதில் வந்து போனது. சுவரை உடைக்காமல், மற்ற கல்களையும் சேதப்படுத்தாமல்
எப்படி கச்சிதமாக எடுத்து அப்படியே திரும்ப வைத்திருக்கிறான் என்று மனதில்
வியந்தவராக அந்தக் கல்லைக் கீழே வைத்தார். கல்லைப் பெயர்த்த இடத்தில் பார்த்த போது
எடுத்த கல்லின் கீழ் இருந்த கல்லின் நடுவே ஒரு பெரிய துளை தெரிந்தது. அதனுள் அவர்
கையை விட்டார். சின்ன மர டப்பா ஒன்று அவர் கையில் பட்டது. அதை வெளியே எடுத்தார்.
டப்பாவைத் திறந்து பார்த்தார். காலியாக இருந்தது. அது கண்டிப்பாகக் காலியாக
இருந்திருக்க வழியே இல்லை. மிக முக்கியத் தகவல் ஒன்று அந்த நாளில் அந்த முகூர்த்த
வேளையில் அவர் கைக்குக் கிடைப்பது மிக அவசியம் என்று குரு சொல்லியிருந்தார்.
அவர்கள் இயக்கத்தின் ரிஷிமார்கள் பல்லாண்டு காலமாய் தவமிருந்து கட்டிக் காத்த
சக்திக்கான குறிப்பு ஏதோ இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
அதை எதிரி எடுத்துக் கொண்டு போய் விட்டான்.....
அவனுக்கு எப்படி இந்த இடம் பற்றியும், அந்தக் குறிப்பு பற்றியும் தெரியும்? அவன்
எப்போது இங்கு வந்து எடுத்துக் கொண்டு போனான்? அந்தக் குறிப்பில் என்ன இருந்தது?
அதை எதிரி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறதா என்ற
கேள்விகள் சரமாரியாக அவர் மனதில் எழுந்தன.
திரும்பவும் அந்த மர டப்பாவை அப்படியே முன்பு இருந்த இடத்தில் வைத்து விட்டு,
கல்லையும் பழைய இடத்திலேயே பொருத்தி விட்டு தளர்ச்சியுடன் பத்ரகாளி சிலைக்கு முன்
வந்து நின்றார்.
‘பூஜைகள் நின்று போனவுடன் உன் சக்திகளும்
முடிந்து போய் விட்டதா? ரகசியமாய் வைக்க எத்தனையோ இடங்கள் இருக்கையில் உன்
சன்னதியில் உன் பின்னால் உன் பாதுகாப்பில் எங்கள் ரிஷிகள் வைத்திருந்தார்களே.
அதைக் காப்பாற்றியிருக்க வேண்டியது உன் கடமையல்லவா? ஏமாற்றி விட்டாயே தாயே!’ என்று அவர் மனம் புலம்பியது.
ஒரு கணம் காளி சிலை உயிர்பெற்றது போலத்
தோன்றியது. பத்ரகாளி தத்ரூபமாய் நின்றது போல் அவர் உணர்ந்தார். அது அந்தக் கண
நேரம் மாத்திரமே. அடுத்த கணம் காளி கல்லாகவே மாறியிருந்தாள். மெய்சிலிர்த்துப்
போய் காளியைப் பார்த்தவர் தரையில் இருந்த குப்பைகளைப் பொருட்படுத்தாமல்
சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து வணங்கி விட்டு எழுந்தார். அவர் எழுகையில் அவர்
குருவின் பேனா கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் இருபகுதியாகப் பிரிந்தது.
பேனாவின் உள்ளே ‘ரீஃபில்லை’ச் சுற்றி ஒரு காகிதம் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
திகைப்புடன் அதைக் கையில் மாஸ்டர் எடுக்கையில்
யாரோ வரும் காலடியோசை கேட்டது.
(தொடரும்)
என்.கணேசன்
மதுரை தமுக்கம் மைதானத்தில் 01.09.2017 முதல் 12.09.2017 வரை நடக்கும் புத்தகத்திருவிழாவில் என் நூல்கள் அரங்கு எண் 219ல் சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கும். வாசகர் அனைவரும் வாரீர்!
என்.கணேசன்