சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 27, 2017

இறைவனைக் காணும் திவ்யதிருஷ்டி!



கீதை காட்டும் பாதை 45

கீதையின் பதினோராம் அத்தியாயமான விஸ்வரூப சந்தர்சன யோகத்தின் துவக்கத்திலேயே அர்ஜுனன் தன் பேராவலை வெளிப்படுத்துகிறான்.

தாமரைக்கண்ணா! சகல பூதங்களின் தோற்றம், மறைவு இவைகளைப் பற்றியும் அழிவில்லாத உன் மகிமைகளைப் பற்றியும் விரிவாக நீ உரைக்க நான் கேட்டேன்.

பரமேஸ்வரா! உன்னைப் பற்றி நீ என்ன சொன்னாயோ அது அப்படித்தான்; வேறுவிதமாக இல்லை. ஆயினும் புருஷோத்தமா! உன்னுடைய ஈஸ்வர ரூபத்தைக் காண நான் விரும்புகிறேன்.

ப்ரபோ யோகேஸ்வரா! அந்த ரூபத்தை நான் பார்க்கலாம் என்று நீ எண்ணுவாயானால் அழிவில்லாத உன் வடிவத்தை எனக்குக் காட்டியருள வேண்டும்.

உடனிருப்பவன் இறைவன், அவனுடைய உண்மையான திருவுருவும் இந்த மனித உருவமல்ல என்பது உணர்ந்த பின் அர்ஜுனனுடைய இந்த ஆவல் எழுகிறது. அர்ஜுனன் யோகியல்ல. தலைசிறந்த பக்தன் என்றும் அவனைச் சொல்ல முடியாது. இந்த இரண்டுமே இறைவனைத் தரிசிக்க உதவுபவை. இந்த இரண்டுமே இல்லாத நிலையில் அந்த பரம்பொருளின் ஈஸ்வர ரூபத்தைக் காணும் தகுதி தனக்கு இல்லை என்கிற உணர்வு அவனிடம் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் ‘அந்த ரூபத்தை நான் பார்க்கலாம் என்று நீ நினைத்தால் உன் ஈஸ்வர ரூபத்தைக் காட்டியருள வேண்டும்என்று கோரிக்கை விடுக்கிறான்.

கருணை மயமான ஸ்ரீகிருஷ்ணர் அவன் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. அவர் கூறுகிறார்.

அர்ஜுனா! நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் உள்ள என் உருவங்களைப் பார். அவை பற்பல விதமாகவும், தெய்வீகமாகவும், பற்பல வர்ணனைகளைக் கொண்டதாகவும் இருப்பதைப் பார்.

என்னுடைய இந்த தேகத்திலேயே சராசரப் பிரபஞ்சம் முழுவதையும் இன்னும் நீ எதை எதைப் பார்க்க விரும்புகிறாயோ அவைகள் எல்லாவற்றையும் இப்போது பார்.

ஆனால் உன்னுடைய இந்தக் கண்களால் என்னைப் பார்க்க முடியாது. தெய்வீகமான பார்வையை உனக்குத் தருகிறேன். அதனால் என்னுடைய ஈசுவர சம்பந்தமான யோக மகிமையைப் பார்.

மனிதக் கண்களின் சக்திகளுக்கு எல்லைகள் உண்டு, வரம்புகள் உண்டு. கண்ணால் கண்டால் தான் நம்புவேன் என்று அவன் பிடிவாதம் பிடிக்க முடியாது. காற்றும் மின்சாரமும் அவன் கண்ணால் பார்த்து இருக்கிறது என்று முடிவு செய்வதில்லை. அவற்றின் செயல்திறன்களை வைத்தும், விளைவுகளை வைத்துமே அவன் அவை இருப்பதாக நம்புகிறான். இப்படி இயற்கையின் சக்திகளையே கூட அவனால் நேரடியாகக் காண முடியாத போது இறைவன் விஸ்வரூபத்தை அவனால் புறக்கண்களால் எப்படிப் பார்த்து விட முடியும்? எனவே அதைக் காணும் விசேஷ சக்தியை, திவ்ய திருஷ்டியை ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அளிக்கிறார்.  

(இந்த திவ்ய திருஷ்டி மட்டுமல்ல எந்தப் பேருண்மையைக் காணவும், உணரவும் முடியும் பெரும் சக்தியையும் இறைவன் அளித்தால் ஒழிய ஒருவருக்குக் காணவோ, உணரவோ முடிவதில்லை. யாரெல்லாம் பேருண்மைகளை உணர்கிறார்களோ அவர்களெல்லாம் இறைவனால் ஆசிர்வதிக்கவும், அனுக்கிரக்கவும் பட்டவர்கள் என்பது பொருள்.)

வயலுக்குப் பாய்ச்சிய நீர் புல்லுக்கும் பாய்ந்தது போல அர்ஜுனனுக்கு கிடைத்த அந்த மகத்தான வாய்ப்பு, திருதராஷ்டிரனுக்கு குருக்‌ஷேத்திரத்தில் நடப்பதை எல்லாம் நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டிருந்த சஞ்சயனுக்கும் கிடைக்கிறது. தர்மாத்மாவும், புண்ணியாத்மாவுமான சஞ்சயன் திருதராஷ்டிர மன்னனிடம் மெய்சிலிர்த்து இப்படி வர்ணிக்கிறான்.

திருதராஷ்டிர மகாராஜனே! யோகங்களுக்கெல்லாம் பெருந்தலைவனான ஹரி இப்படிச் சொல்லி அர்ஜுனனுக்குத் தன்னுடைய ஜகதீஸ்வர ரூபத்தைக் காண்பித்தான்.

பல முகங்கள், பல கண்கள், பல அற்புதக் காட்சிகள், பல திவ்யாபரணங்கள், பல திவ்யாயுதங்கள், இவைகளைக் கொண்டதும், திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்ததும், திவ்யமான சந்தனத்தைப் பூசியதும், எல்லா ஆச்சரியங்களுக்கும் இருப்பிடமும், ஒளிவீசுவதும், காலத்தைக் கடந்ததும், எல்லாத் திக்குகளிலும் முகங்களையுடையதுமான தன் ரூபத்தைக் காட்டினார்.

ஆகாயத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒரே காலத்தில் கிளம்பினால் அது அந்த மஹாத்மாவினுடைய ஒளிக்குச் சமமாக இருக்கும்.

பலவிதமாகப் பிரிந்துள்ள உலகம் யாவும் அந்த தேவதேவனின் சரீரம் ஒன்றிலேயே இருப்பதை அர்ஜுனன் கண்டான்.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். வார்த்தைகளுக்கு அடங்காத அற்புதங்களே ஆனாலும் அந்த பேரானந்த அனுபவத்தைப் பெற்றவனால், அறிந்த வார்த்தைகளால், முடிந்த வரை விவரிக்காமல் இருக்க முடிவதில்லை. கடலை, துளிகளின் உவமையினால் விளக்கி விளங்க வைக்க முடியுமா? ஆனாலும் முயற்சி செய்து வர்ணிக்கிறது மனித மனம்.

எத்தனை முகங்கள், எத்தனை உருவங்கள், எத்தனையெத்தனை காட்சிகள், எல்லைகள் இல்லாத பேராச்சரியங்கள் என்று இறைவனின் விஸ்வரூபம் விரிந்து கொண்டே போக மெய் மறந்து தரிசிக்கிறார்கள் அர்ஜுனனும், சஞ்சயனும். ஆகாயத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒரே நேரத்தில் தோன்றினால் அந்த ஒளி மகாத்மாவான ஸ்ரீகிருஷ்ணரின் ஒளிக்குச் சமமாக இருக்கும் என்று தனக்குத் தெரிந்த மட்டில் வர்ணிக்கிறான் சஞ்சயன்.  

பல கோடி கோடிகளாய் பிரிந்து வியாபித்திருக்கும் உலகங்கள் யாவும் தேவர்களுக்கெல்லாம் தேவனான ஸ்ரீகிருஷ்ணர் சரீரத்திலேயே இருப்பதை அர்ஜுனன் காண்கிறான். அனைத்துக்கும் மூலமான இறைவனிடத்தில் அனைத்தையுமே ஒரே சமயத்தில் காண முடிந்தால் பின் இந்த உலகத்தில் காண வேண்டியது என்ன இருக்க முடியும்?

வேறுபாடுகள் மாயையினால் உருவாக்கப்படுகின்றன. இறைவனை உணர்ந்தவர்கள் வேறுபாடுகளுக்குப் பின்னால் இருக்கும் ஒருமைப்பாட்டை உணர்கிறார்கள். எல்லாவற்றுக்கும் இறைவனே மூலம் என்றால் பயப்படவோ, கவலைப்படவோ என்ன இருக்கிறது?

பாதை நீளும்....


என்.கணேசன்

Thursday, February 23, 2017

இருவேறு உலகம் – 18


செந்தில்நாதன் ஹரிணியைப் போனில் தொடர்பு கொண்டு க்ரிஷ் குறித்து நேரில் பேச வேண்டும் என்று சொன்ன போது, உடனடியாக வார்த்தைகள் சற்றுக் கடுமையான தொனியிலேயே வந்தன. அவனப் பத்தி என் கிட்ட ஏன் பேச வர்றீங்க, அவனோட வீட்டாளுங்க கிட்ட பேசுங்க

செந்தில்நாதன் அமைதியாகச் சொன்னார். “அவரோட வீட்டாள்க கிட்ட பேசிட்டேன். அவர் நண்பர் மணீஷ் கிட்டயும் பேசிட்டேன். உங்க கிட்டயும் பேச வேண்டியிருக்கு.....

அப்போது தான் அவள் விபரீதமாக ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தது போல் தோன்றியது. கடுமை காற்றில் பறக்க அவள் திகிலோடும் பதற்றத்தோடும் மெல்லக் கேட்டாள். “என்னாச்சு அவனுக்கு...?

அவர் சுருக்கமாகச் சொன்னார். சொன்னவுடன் இப்போதே வரலாம் என்றவள் தன் விலாசத்தையும் தெரிவித்தாள். அவள் குரல் மிகவும் தாழ்ந்து போயிருந்தது.

க்ரிஷ் கம்ப்யூட்டரில் தெரிந்த ஹரிணியின் முகத்திற்கும் இப்போது நேரில் தெரியும் முகத்துக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை செந்தில்நாதனால் பார்க்க முடிந்தது. க்ரிஷ் கம்ப்யூட்டரில் மகிழ்ச்சியும் துடிப்புமாய் தெரிந்த ஹரிணி இப்போது கவலையும் வாட்டமுமாய்த் தெரிந்தாள். க்ரிஷ் காணாமல் போனது குறித்து அவர் போனில் சுருக்கமாகச் சொன்னதை மீண்டும் விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அந்த நேரத்தில் அவள் முகத்தில் தெரிந்த வலிமிகுந்த உணர்வுகள் அவள் க்ரிஷைக் காதலிக்கிறாள் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் அவருக்குத் தெரிவித்தன....

செந்தில்நாதன் அங்கு வருவதற்கு முன்பே அவளைப் பற்றியும் தகவல்கள் சேகரித்து விட்டே வந்திருந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள், தாய் இன்ஷூரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக வேலை பார்க்கிறார், பள்ளிப் படிப்பை மதுரையில் முடித்தவள், கல்லூரிப் படிப்பின் போது தான் சென்னை வந்தவள், கல்வியில் மட்டுமல்லாமல் சமூக சேவையிலும், பெண்ணுரிமையிலும் முன்னணியில் இருப்பவள்...

செந்தில்நாதன் அவளிடமும் மணீஷிடம் க்ரிஷ் பற்றி கேட்ட ஆரம்பக் கேள்விகளைக் கேட்டார். அவள் பதில்களும் அவன் பதில்களை ஒட்டியே இருந்தன. ஆராய்ச்சிகள் பற்றி அவை முடியும் முன் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டான், கேட்டாலும் சொல்ல மாட்டான், அவனுக்கு யாரும் எதிரிகள் இல்லை, சமீபத்திய ஆராய்ச்சி பற்றித் தெரியாது....

கடைசி ஆராய்ச்சி மாயமாக மறையும் தன்மை குறித்ததாக இருக்குமா, அவன் கடைசியாக நிறைய தேடிப்படித்த விஷயம் அது என்று அவர் கேட்ட போது அவள் மணீஷ் காட்டிய எதிர்விளைவைக் காட்டவில்லை. மாறாக அவள் முகத்தில் பெருமிதம் ஒரு கணம் எட்டிப் பார்த்தது. “இருக்கலாம் சார். அவன் மனசுக்குள்ள ஒரு கேள்வி எழுந்துடுச்சுன்னா விடை கிடைக்கற வரைக்கும் ஓய மாட்டான்.... நான் யார் கிட்டயும் இது வரைக்கும் பார்த்திருக்காத ஒரு தன்மை அது....

சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு திடீரென்று அவளையே கூர்ந்து பார்த்தபடி செந்தில்நாதன் கேட்டார். முதல்ல எல்லாம் அவர் வீட்டுக்கு நீங்க அடிக்கடி போவீங்க, ஆனா சில மாதங்களா போறதில்லைன்னு கேள்விப்பட்டேன்.... என்ன காரணம்?

ஒரு கணம் சிலையாகச் சமைந்த அவள் பின் மெல்ல சுதாரித்துக் கொண்டாள். பின் உண்மையை விவரித்துச் சொல்லி விடாமல், அதே நேரம் பொய்யும் சொல்லிவிடாதபடி யோசனையோடு சரியாக வார்த்தைப்படுத்தி உண்மையைச் சொன்னாள். அவன் வீட்டுக்குப் போனா எப்பவுமே அவன் படிச்சுட்டோ, எழுதிட்டோ, ஆராய்ச்சி பண்ணிட்டோ இருப்பான். சில நேரங்கள்ல நாம போயிருக்கறதைக் கூட மறந்துடுவான். போய் அவனை ஏன் தொந்தரவு செய்யணும்னு கடைசி தடவ தோணிடுச்சு. அதனால அதுக்கப்பறம் போகல....

அவள் ஒரு சாதாரண விஷயம் போலவே அதைச் சொன்னாலும் அவன் வீட்டிற்குக் கடைசியாகப் போன அந்த நாளில் நடந்ததை அவளால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது....

காதலிப்பதாக அவனும் அவளிடம் இதுவரை தெரிவித்ததில்லை. அவளும் அவனிடம் தெரிவித்ததில்லை. காதலை வார்த்தைகளால் சொல்லித் தெரியப்படுத்த வேண்டிய நிலையை எப்போதோ தாங்களிருவரும் தாண்டி விட்டதாக அவள் நினைத்திருந்தாள்... அவனுடன் இருக்கும் கணங்கள் மிகவும் உயிர்ப்புள்ள கணங்கள்... எத்தனையோ நாட்கள் நேரிலும், போனிலும் மணிக்கணக்கில் பேசியிருக்கிறார்கள். அதே போல எத்தனையோ நாட்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கையில் ஒவ்வொரு புத்தகத்துடன் சேர்ந்து உட்கார்ந்து படித்திருந்திருக்கிறார்கள். பேச்சு கூட அவசியம் இல்லை என்கிற நிலையைத் தாங்கள் எட்டி விட்டிருந்ததாக அவள் பெருமையுடன் நினைத்திருக்கிறாள்.

அவன் அவள் வீட்டுக்கு வருவது மிக அபூர்வம். ஆனால் அவள் அடிக்கடி அவன் வீட்டுக்குப் போவாள். அவளுடைய தாய் “நீ தான் நாய் மாதிரி அவன் பின்னாடியே போயிட்டிருக்காய். அவன் அப்படி வர்றானா பார்என்று அடிக்கடிக் குத்திக் காண்பித்தாலும் அவள் அதை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. இந்தக் கணக்கெல்லாம் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமாக அவளுக்குப் பட்டது. அந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளும் தன்மை அவளிடம் இருந்ததால் தங்களுக்குள் விரிசல் வரும் என்று அவள் என்றுமே நினைத்ததில்லை. ஆனால் அப்படி ஒரு நாளும் வந்தது....

எப்போதுமே அவள் அவனுடைய வீட்டுக்குப் போகும் போது அவன் ஏதாவது படித்துக் கொண்டோ, ஆராய்ந்து கொண்டோ இருந்தால் முதலில் பார்த்துப் புன்னகைத்து விட்டு மறுபடித் தன் வேலையில் சுமார் பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஈடுபட்டு விட்டு ஒரு சரியான கட்டத்தில் அதை  நிறுத்தி விட்டுத் தான் அவள் பக்கமே திரும்புவான். அவளுக்கு அதில் வருத்தமே இருந்ததில்லை. அது உச்சக்கட்ட செயல்திறத்தின் நல்லதொரு பழக்கம் என்று கூட அங்கீகரித்தாள்.  அன்றும் அவளைப் பார்த்தவுடனேயே புன்னகைத்து விட்டு எதையோ குறிப்பிடெடுத்துக் கொண்டிருந்த வேலைக்குக் கவனத்தைத் திருப்பிக் கொண்டான். பத்து நிமிடம் பதினைந்தாகியது.... பதினைந்து நிமிடம் அரை மணியாக நகர்ந்தது. அரை மணி ஒரு மணியாகியது. ஒரு மணியாகிய போது பொறுமை இழந்தாள். ஒன்றரை மணியாக ஆரம்பித்த போது அவளுக்கே அது அநியாய அலட்சியமாகத் தோன்ற ஆரம்பித்தது. இரண்டு மணியான பிறகு அவமானமாகவே தோன்றவே அங்கிருந்து எழுந்து வந்து விட்டாள். மனம் கொதிக்க ஆரம்பித்து விட்டது.

கண்டிப்பாக நினைவு திரும்பியவுடன் போன் செய்வான் அப்போது கடுமையாகப் பேச வேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள். அவன் பேசவேயில்லை. அது அவள் ஆத்திரத்தைப் பலமடங்காகப் பெருக்கியது. இரண்டு நாட்கள் கழித்து கல்லூரியில் சந்திக்கையிலாவது அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்பான் என்று எதிர்பார்த்தாள். அவன் அப்போதும் அதுபற்றி எதுவும் பேசவோ, கேட்கவோ இல்லை. பொதுவாக எப்போதும் போலப் பேசினான். அவன் கேட்ட கேள்விகளுக்கு இறுக்கமான முகத்துடன் அவனுக்குப் பதிலளித்துப் பார்த்தாள். அதுவும் அவனுக்கு உறைத்ததாகத் தெரியவில்லை.     

வேறு யாராவதாக இருந்திருந்தால் சரிதான் போடா என்று உதறிவிட்டுப் போயிருப்பாள். அவனிடம் அப்படி விலக அவள் மனம் அனுமதிக்கவில்லை. பொக்கிஷமாக நினைத்துப் பார்க்க எத்தனையோ தருணங்கள் தந்திருக்கிறான். நட்பு என்கிற எல்லையை மீறி காதலின் நெருக்கமான தருணங்களில் இருவரும் திளைத்திருக்கிறார்கள்.

அவன் மிக நல்லவன். அனாவசியமாக யார் மனதையும் புண்படுத்தாதவன். நியாயம் தவறாதவன். சின்ன முகபாவனை மாற்றத்தைக் கூட கவனிக்க முடிந்தவன், அதற்கான காரணத்தை ஆழமாக உணர முடிந்தவன். அடுத்தவர் உணர்வுகளில் இருந்து பார்க்க முடிந்தவன்.... அப்படிப்பட்டவன் அவளிடம் அப்படி நடந்து கொண்டதற்கான காரணம் அவளுக்குப் புரியவே இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது.  காதல் வட்டத்தில் இருந்து வெளியே வந்து நட்பு வட்டத்திலேயே தங்கி விட அவன் முடிவெடுத்திருப்பது புரிந்தது. அவன் அலைவரிசையில் அவளும் அடிக்கடி இணைய முடிந்தவள். அதனால் அது அவளுக்குப் புரிந்தது. காதலையே தெரிவிக்காதவன் விலகுவதற்காகக் காரணம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லையே....

ஆனால் அவளுக்கு வலித்தது. நிறையவே வலித்தது. பல நாட்கள் யாருக்கும் தெரியாமல் தனியாக அழுதிருக்கிறாள். அதை வெளிக்காட்டாமல் அவனுடன் அதற்குப் பின் சின்ன இடைவெளியுடனேயே பழக ஆரம்பித்தாள். ஏன் என்ற காரணத்தை ஏதாவது ஒரு தருணத்திலாவது அவன் சொல்வான் என்று எதிர்பார்த்தாள். அவள் ஏதாவது தவறு செய்திருந்து அவன் தெரிவித்தால் அதற்கு மன்னிப்புக் கேட்கக் கூட அவள் தயாராக இருந்தாள். ஆனால் முன்பு அப்படி நெருங்கி இருந்ததற்கான எந்த அடையாளமும் அவனிடம் பின் தென்படவில்லை.  பல சமயங்களில் காரணத்தை அவனிடம் வாய்விட்டே கேட்க வேண்டும் என்று தீவிரமாக நினைத்திருக்கிறாள். அவனாகச் சொல்லப் பிரியப்படாத ஒன்றை வலுக்கட்டாயமாகக் கேட்பதும் தனக்குக் கேவலம் என்றும் கூடவே தோன்றியதால் அதைத் தவிர்த்திருக்கிறாள்.....

செந்தில்நாதன் அதற்குப் பிறகும் நிறைய கேள்விகள் கேட்டார். அவளும் பதில் சொன்னாள். அவர் போன பிறகுத் தனதறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டு அவள் அழ ஆரம்பித்தாள். “ஒன்னும் சொல்லாட்டிக் கூடப் பரவாயில்லை.... எங்கயாவது தூரத்துல இருந்தே உன்னைப் பார்த்துட்டு வாழ்ந்துட்டுப் போயிடலாம்னு நினைச்சேன்.... இப்ப காணாமக் கூடப் போயிட்டியேடா.... டேய் பாவி நமக்குள்ள இருந்த பந்தத்துக்கு என்னடா அர்த்தம்.. கடைசி வரைக்கும் அதையும் சொல்லாமயே போயிட்டியேடா... எங்கடா போனே? உன் மனசுல என்னப் பத்தி என்னடா நினைச்சுட்டிருந்தே?...


மாஸ்டர் என்றழைக்கப்பட்ட மனிதர் கையில் க்ரிஷுக்கு நெருக்கமானவர்கள் புகைப்படங்களும், அவர்களைப் பற்றிய குறிப்புகளும் ஏராளமாக இருந்தன. ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொரு புத்தகமே எழுதி விடும் அளவு தகவல்கள் இருந்தன. எதையும் விட்டு விடாமல் பொறுமையாக எல்லாவற்றையும் படித்தார்.  பல வருடங்கள் பழகியவர்கள் கூடப் புரிந்து கொள்ள முடியாத எத்தனையோ புரிதல்கள் இப்போது  அவர்களைப் பற்றி அவருக்கு ஏற்பட்டிருந்தன. எல்லோரையும் ஆழமாகவே தெரிந்து கொண்ட பின் முடிவாக அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அந்த நபர் மூலம் களத்தில் இறங்கத் தீர்மானித்தார்.

(தொடரும்)
என்.கணேசன்


Thursday, February 16, 2017

இருவேறு உலகம் - 17


க்ரிஷ் மாயமாக மறையும் தன்மை குறித்த ஆராய்ச்சிகளில் இறங்கியிருக்க வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டவுடன் மணீஷிடம் தெரிந்த திடீர் மாற்றத்தை செந்தில்நாதன் திகைப்புடன் பார்த்தார். என்ன ஆயிற்று இவனுக்கு?

உடனடியாக மணீஷ் சமாளித்தான். “வாயுத் தொந்தரவு பல நேரங்கள்ல ஹார்ட் அட்டேக் மாதிரியே வந்து பயமுறுத்திடுதுஎன்று சொல்லிக் கொண்டே கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். எனக்கு இந்தப் பிரச்னை அடிக்கடி வரும்..... என்ன கேட்டீங்க?...

அவர் அவனைக் கூர்ந்து பார்த்தபடியே மறுபடியும் தன் கேள்வியைக் கேட்டார். முழுமையாக சுதாரித்திருந்த அவன் வாய்விட்டுச் சிரித்தான்.... காமிக்ஸ்ல வர்ற மேட்டரை எல்லாம் க்ரிஷ் ஆராய்ச்சிக்கு எடுத்துகிட்டிருப்பான்னு எப்படி சார் நினைக்கிறீங்க

செந்தில்நாதன் அவன் மீது வைத்த பார்வையை விலக்காமல் சொன்னார். “க்ரிஷ் கடைசியா கூகுள்ல தேடிப்படிச்ச விஷயங்கள்ல இதுவும் ஒன்னு. அதான்.....

மணீஷ் மனதில் மறுபடி கலவரம் தலையெடுத்தாலும் வேகமாக யோசித்ததில் க்ரிஷின் ஆராய்ச்சி அவர் சொல்வது போல இருக்க வழியில்லை என்று தோன்றியது. அதற்கான காரணங்களை அவரிடம் வெளிப்படையாகவே சொன்னான். “அவன் ஆராய்ச்சிக்கும் அந்த மலைக்கும் அமாவாசைக்கும் இடையே ஏதோ சம்பந்தம் இருக்கு சார். அதனால தான் அவன் அங்கே போயிருக்கிறான்.  மாயமா மறைகிற ஆராய்ச்சிக்கும் அந்த மலைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?
அவருக்கு அவன் சொல்வது சரியாகவே தோன்றியது. தலையசைத்து விட்டு அடுத்த கேள்வியை அவனிடம் கேட்டார். “க்ரிஷ் யாரையாவது காதலிக்கிறாரா?

சாதாரணமாக ஆமாம் அல்லது இல்லை என்று உடனே  சொல்லக்கூடிய பதிலைச் சொல்ல அவன் சில வினாடிகள் எடுத்துக் கொண்டு எச்சிலை விழுங்கி விட்டு “எனக்குத் தெரிஞ்சு இல்லை.....என்றான்.

அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டே அவர் கேட்டார். “அவருக்கு நீங்களும், ஹரிணியும் தான் நெருங்கிய நண்பர்கள்னு கேள்விப்பட்டேன்.... ஹரிணி அவருக்கு நண்பர் மட்டும் தானா இல்லை அவங்களுக்கிடையே காதலும் இருக்கா?

அவன் முகம் இறுகியது. “எனக்குத் தெரிஞ்சு நட்பு மட்டும் தான்என்று சற்று வேகமாகவே சொன்னான்.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் அவன் ‘எனக்குத் தெரிஞ்சுஎன்று சொன்னதை அவர் மனதில் அடிக்கோடிட்டார். பிறகு அவனிடம் வேறு சில கேள்விகள் கேட்டு விட்டு அவர் கிளம்பினார். கிளம்புவதற்கு முன் “எனக்கு உங்கள் உதவி இனியும் தேவைப்படலாம். அப்படி தேவைப்பட்டால் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்....என்றார்.

மறுபடியுமா?என்று மனதில் வெடித்தாலும் ஓ கே சார். ஆனா அதுக்கு முன்னாடியே க்ரிஷ் கிடைச்சுடுவான்னு நம்பறேன்...என்று புன்னகையுடன் அவன் கூறினான்.

அவனுக்குப் பேசும் போது கூர்மையாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆளைப் பிடிக்கவில்லை. தர்மசங்கடமான கேள்விகள் வேறு.... அவர் போன பிறகு பஞ்சுத்தலையருக்குப் போன் செய்தான். “அந்த ஆளு இப்ப தான் போறார். எனக்கு சுத்தமா அந்த ஆள பிடிக்கல. கூர்மையா சந்தேகப்படற மாதிரியே பாக்கறார்

பஞ்சுத்தலையர் அவனிடம் சொன்னார். “அப்படிப் பார்க்கறது போலீஸ்காரன் புத்தி. அதை பெரிசா எடுத்துக்காதே. நீ மட்டும் அமைச்சர் மகனா இல்லாம இருந்தா இந்த மரியாதையும் இருந்திருக்காது. உன் மேலயே முழுசந்தேகம் இருக்கற மாதிரி தான் கேள்விகளும், தோரணையும் இருந்திருக்கும். அதை விடு. அவன் என்னவெல்லாம் கேட்டான். நீ என்னவெல்லாம் சொன்னேன்னு சொல்லு

அவன் எல்லாவற்றையும் சொன்னான். எல்லாம் கேட்டு விட்டு அவர் சொன்னார். “உன் ஃப்ரண்ட் நெஜமாவே மாயமா மறையற ஆராய்ச்சில ஜெயிச்சு மாயமா மறஞ்சிருக்க மாட்டானே... அந்த மலை, அமாவாசை, அந்த மாயமா மறையற ஆராய்ச்சி மூணுக்கும் இடையே ஏதாவது சம்பந்தம் இருந்து அது உனக்கும் எனக்கும் தெரியாம இருந்தா?

“அட நீங்க வேற ஏன் சும்மா பீதியை கிளப்பறீங்க?


வாரணாசியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து சேர்வதற்கு முன்பே அந்த மனிதர் பாம்பு கடித்து இறந்தவனுடைய முழுத்தகவல்களையும் பெற்று விட்டிருந்தார். இறந்தவன் வாடகைக் கொலையாளி என்றும் அவன் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் கொலை செய்வதில் வல்லவன் என்றும் மரணம் பாம்புக்கடியால் ஏற்பட்டது  என்று எல்லோரையும் நம்ப வைத்து விடுவான் என்றும் தகவல் கிடைத்தது. இது போல் பல கொலைகள் செய்திருக்கிறானாம்.... அந்தப் பாம்புக்கடியாலேயே அந்த வாடகைக் கொலையாளியும் செத்திருப்பது இயற்கையின் தீர்ப்பாகி விட்டது என்று எண்ணியவனாக அந்த மனிதர் மெலிதாய் புன்னகைத்தார்....

விமான நிலையத்தில் அக்கம் பக்கம் பார்க்காமல் நேர் பார்வையுடன் வெளியே வந்தார். வெளியே வந்தவர் தன் பார்வையைச் சுற்றிலும் ஒரேயொரு முறை சுழற்றினார். பெயரே இல்லாமல் ஒரு வெள்ளை அட்டையைத் தூக்கிப் பிடித்தபடி வெள்ளைச் சீருடையில் ஒரு ஆள் ஓரமாக நின்றிருந்ததைக் கவனித்து நேராக அவனருகே சென்றார்.  அந்த ஆள் அவர் அருகே சென்றதும் தலை குனிந்து வணங்கினார். அந்த மனிதன் லேசாகத் தலையசைத்தான். பின் இருவரும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பகுதி நோக்கி நடந்தார்கள். ஒரு வெள்ளைக் கார் அருகே வந்ததும் அந்த வெள்ளைச் சீருடை ஆள் நின்று கார் சாவியை அந்த மனிதரிடம் நீட்டினான். வாங்கிக் கொண்டு லேசாக அந்த மனிதன் தலையசைத்தார். அந்தச் சீருடை ஆள் போய் விட்டான். அந்த மனிதர் அந்த வெள்ளைக்காரில் ஏறி ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் பார்வை அந்த இடத்தின் சூழலை வேகமாக அலசியது. பின் காரை நிதானமாகக் கிளப்பினார்.

கார் பல சாலைகளைக் கடந்து பின் ஓ எம் ஆர் சாலையில் நிதானமாகச் செல்ல ஆரம்பித்தது. அவர் கண்கள் யாராவது பின் தொடர்கிறார்களா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டன. இல்லை..... சில மைல்கள் பயணத்திற்குப் பின் கார் ஒரு பெரிய பழைய பங்களாவை அடைந்தது. அவர் காரில் இருந்து இறங்கிய போது பைஜாமா ஜிப்பா அணிந்திருந்த, தாடி வளர்த்திருந்த இளைஞன்  இரு கைகளையும் கூப்பிக் கொண்டே அந்த மனிதரை வரவேற்றான்.

அவனைப் பார்த்து அந்த மனிதர் மெலிதாகப் புன்னகைத்தார். அவன் அவரைப் பங்களாவிற்குள் அழைத்துச் சென்றான்.

உள்ளே சென்றமர்ந்ததும் அந்த மனிதர் சொன்னார். “நான் இனி சில காலம் இங்கேயே தங்க வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்....

பயபக்தியுடன் அவன் சொன்னான். “சந்தோஷம் மாஸ்டர். அதை நான் யூகிச்சு எல்லா ஏற்பாடும் செய்தாச்சு...”  பின் ஒரு அச்சிட்ட வெள்ளைத்தாளை அவரிடம் நீட்டினான். அதில் முப்பது பெயர்களும் அவர்கள் செல்போன் நம்பர்களும் இருந்தன. பெரிய பதவிகளிலும், அந்தஸ்திலும் இருந்த மனிதர்கள் அவர்கள். மேலோட்டமாய் அந்தத் தாளைப் பார்வையிட்ட அவர் அதை மடித்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். பின் கேட்டார். அந்த வாடகைக் கொலையாளியை அனுப்பினது யார்னு தெரிஞ்சுதா?

“கடைசியா அவன் அதிகம் பேசினது ஒருத்தர் கிட்ட தான். மந்திரி மாணிக்கத்தோட தாய் மாமன் அவர். பேர் சங்கரமணி. ஆனா எல்லாரும் கூப்பிடறது சகுனின்னு. ஆள் கேரக்டரும் அப்படி தான். வாடகைக் கொலையாளி வீட்டாளுகளுக்கு அவனோட மொபைல் போன் கிடைக்கல. ஆச்சரியம் என்னன்னா அந்தக் கொலையாளி செத்த பிறகும் அந்த மொபைல்ல இருந்து சகுனி செல்லுக்கு மூணு கால்ஸ் போனது தான்..... சகுனி அரண்டு போய் கால்ஸ ட்ரேஸ் பண்ணச் சொல்லியிருக்கார். அந்தக் கால்ஸ் அவரோட ஏரியாவுல இருந்தே தான் போயிருக்குன்னு பதில் வந்திருக்கு. இப்ப வீட்ட சுத்தி செக்யூரிட்டி போட்டிருக்கார் மனுஷன்....

மாஸ்டர் என்றழைக்கப்பட்ட அந்த மனிதர் மிகவும் கவனமாக அந்தத் தகவலைக் கேட்டார். ஒரு பெரிய நிகழ்ச்சி ரகசியமாய் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் திடீர் என்று உபகதையாய் இடையே புகுந்து என்ன நடந்திருக்கிறது என்றே தெரியாமல் திரும்பி வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்த போது வேடிக்கையாக இருந்தது.

அவங்க எதுக்கு அந்தப் பையன் க்ரிஷ்ஷ கொல்ல முயற்சி பண்ணினாங்கன்னு தெரிஞ்சுதா?

“இல்லை.... இத்தனைக்கும் ரெண்டு மந்திரி குடும்பங்களும் பல வருஷங்களா  நெருக்கமாத் தான் இருக்காங்க. மாணிக்கத்தோட பையன் மணீஷ் க்ரிஷோட நெருங்கின நண்பன்....

மாஸ்டர் சொன்னார். “அரசியல்வாதிகள் நெருக்கம் தண்ணில பாசி மாதிரி. எத்தனை வருஷமா பழகினாலும் வேர் பிடிக்காது.....

அவனும் சில காலமாகப் பல அரசியல்வாதிகள் கூடப்பழகி வருபவன். அவர் சொன்னதைக் கேட்டுப் புன்னகைத்து விட்டுச் சொன்னான். “மந்திரி மாணிக்கம் சிங்கப்பூர் போயிட்டு இன்னைக்குத் தான் திரும்பி வர்றார்....

“அந்த ஆள் எப்படி?

“அமுக்கமான ஆள்

“க்ரிஷோட அப்பா

“அவர் நல்ல மனுஷன்...

“அவங்களுக்கு க்ரிஷ் கிட்ட இருந்து ஏதாவது தகவல் வந்திருக்கா?

“இல்லை.... சி.எம். இதை ரகசியமா விசாரிக்க செந்தில்நாதன்கிற போலீஸ் அதிகாரிய நியமிச்சிருக்கார். அவர் திறமையானவர்....


இத்தனை பேரில் யார் மூலமாக களத்தில் இறங்குவது என்று மாஸ்டர் யோசிக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)
என்.கணேசன்


Monday, February 13, 2017

Thursday, February 9, 2017

இருவேறு உலகம் – 16


ன்ன தான் தயார் நிலையில் இருந்தாலும் கூட செந்தில்நாதன் வந்து போகும் வரை மன அழுத்தத்தைத் தவிர்க்க முடியாது என்றே மணீஷுக்குத் தோன்றியது. இத்தனைக்கும் பஞ்சுத்தலையர் சொன்னது போல் என்ன செய்திருக்கிறோம், என்ன நடந்திருக்கிறது என்றே தெளிவில்லாத நிலை தான் இப்போது. ஆனாலும் குற்றமுள்ள மனது குறுகுறுத்துக் கொண்டே இருந்தது....

பஞ்சுத்தலையர் வீட்டில் அவன் இருக்கும் போது தான் செந்தில்நாதன் போன் செய்திருந்தார். க்ரிஷ் குறித்துப் பேச வேண்டும் என்று சொன்னவரிடம் ஏன் என்ன விஷயம் என்று குரலில் முழு திகைப்பைக் காட்டி, அவர் தெரிவித்த தகவலில் அதிர்ச்சியைக் காட்டி சின்ன சந்தேகம் கூட அவருக்கு வராதபடி கவனமாக இருந்திருந்தான். க்ரிஷ் காணாமல் போனது குறித்துத் தெரிவிக்க தன்னிடம் எந்தப் புதிய தகவலும் இல்லை என்பதை நாசுக்காக அவன் சொல்லியும் அவர் அவனை நேரில் சந்திக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் அவனுக்கு ஒத்துக் கொள்ள வேண்டியதாகப் போயிற்று. அவரை வீட்டுக்கு வரச் சொல்லி விட்டுத் தானும் வீட்டுக்கு விரைந்தான்.

அவன் வீடு போய்ச் சேர்ந்து கால் மணி நேரத்தில் செந்தில்நாதன் அங்கு வந்து சேர்ந்தார். அவர் அவனைப் பற்றி ஓரளவு தகவல்கள் சேகரித்து விட்டே வந்திருந்தார். மணீஷ் அமைச்சர் மாணிக்கத்தின் ஒரே மகன், பள்ளிப் படிப்பை ஊட்டி கான்வெண்டில் படித்தவன், படிப்பில் கெட்டிக்காரன், மூன்று வருடங்களுக்கு முன் தாயை இழந்தவன், இரண்டு குடும்பங்களுக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்பின் காரணமாகச் சிறிய வயதிலிருந்தே க்ரிஷின் நண்பன், சென்னை ஐஐடியில் தான் கல்லூரிப் படிப்பில் இருவரும் இணைந்தார்கள், க்ரிஷைப் போலவே அரசியலில் ஈடுபட விரும்பாதவன் ....

அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் கவலை தோய்ந்த முகத்துடன் மணீஷ் அவரிடம் கேட்டான். “சார் க்ரிஷ் பத்தி எதாவது தகவல் ....?

‘இல்லைஎன்று தலையசைத்த செந்தில்நாதன் கேட்டார். “உங்களுக்குத் தெரிந்து க்ரிஷ்க்கு எதிரிகள் யாராவது இருக்காங்களா?

“இல்லை

“அவரை யாராவது பின் தொடர்றதாகவோ, சந்தேகப்படற மாதிரி அவர் கிட்ட நடந்துகிட்டதாகவோ எப்பவாவது உங்க கிட்ட சொல்லிருக்காரா?

யோசிப்பதாகச் சிறிது காட்டி விட்டு மணீஷ் இல்லை என்றான்.

பதில் தெரிந்திருந்தாலும் கூடக் கேட்டார். “நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல்ல இருந்தே ஒன்னா படிச்சவங்களா?

“இல்லை சார். நான் ஊட்டி கான்வெண்ட்ல படிச்சேன். க்ரிஷ் சென்னைலயே தான் படிச்சான்..... காலேஜ்ல இருந்து தான் கூடப்படிக்கிறோம்.... ஐஐடில

“ரெண்டு பேருமே காலேஜ்ல ஒரே வகுப்பா?

“ஆமா

செந்தில்நாதனின் அடுத்த கேள்விகள் கல்லூரி சூழல், நண்பர்கள் பற்றியதாக இருந்தன. மணீஷ் அந்த விஷயத்தில் மறைக்க ஏதுமில்லாததால் உண்மையையே சொல்லிக் கொண்டு வந்தான்.

“சமீப காலமா க்ரிஷ் என்ன ஆராய்ச்சியில் இறங்கியிருந்தார்னு தெரியுமா?

“சமீப காலங்கள்ல அமானுஷ்யமான விஷயங்கள்ல அதிகமா ஆர்வம் காண்பிச்சான்.... ஆனா ஆராய்ச்சி அது சம்பந்தமா செஞ்சானான்னு தெரியல...

“பொதுவா அவர் செய்யற ஆராய்ச்சிகள் பத்தி உங்க கிட்ட அவர் பகிர்ந்துக்குவாரா

“பகிர்ந்துக்கறதுண்டு. ஆனா எல்லாமே முடிவடைஞ்சதுக்கு அப்புறமா தான்.... இது தான் உண்மைன்னு அவன் கண்டுபிடிக்கறதுக்கு முன்னால அது சம்பந்தமா வாயே திறக்க மாட்டான்.... அது சம்பந்தமான பேச்சு வர்றப்ப கூட அவன் கிட்ட இருந்து ஒரு கருத்தைப் பிடுங்க முடியாது.....

சொல்லும் போது சின்னதாக ஒரு கசப்பைக் குரலில் வெளிப்படுத்தாமல் இருக்க மணீஷால் முடியவில்லை. அந்த விஷயத்தில் க்ரிஷ் உண்மையிலேயே அழுத்தக்காரன்....

“அவர் ஒவ்வொரு அமாவாசையும் அந்த மலைக்குப் போகிறது உங்களுக்குத் தெரியுமா?

பிரச்னைக்குரிய பகுதி வந்து விட்டது என்பதை உணர்ந்த மணீஷ் கவனமாகப் பதில் அளித்தான். தெரியும்....  ஒரு அமாவாசை சாயங்காலம் நான் அவன் வீட்டுக்குப் போயிருந்தேன்.... அவன் அங்கே போக கிளம்பிகிட்டிருந்தான்....

“ஏன் போகிறாருங்கறதயும் அவர் சொன்னாரா...?

“சொன்னான்

செந்தில்நாதன் நிமிர்ந்து உட்கார்ந்தார். “என்ன சொன்னார்?

“ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்க வேண்டியிருக்குன்னு சொன்னான். பொதுவா எதாவது ஆராய்ச்சில இருக்கறப்ப நாம என்ன செய்யறேன்னு கேட்டா அவன் சொல்ற ஒரே பதில் அது தான்....

அதுக்கு மேல ஒன்னும் நீங்க கேக்கலயா?

“கேட்டா அது அவன் காதுல விழாது..... கேள்வியே அனாவசியம்னு அவன் நினச்சா பதிலும் அனாவசியம்னு காதுலயே விழாத மாதிரி இருந்துடுவான்....என்று சொன்ன மணீஷ் தன் வாழ்வில் பின்பற்ற ஆசைப்பட்டு முடியாமல் அவஸ்தைப்படும் ஒரு விஷயமாகவே அது இருந்தது. அந்த விஷயத்தில் க்ரிஷைப் போலவே இருக்க மணீஷ் எத்தனையோ முறை முயன்று தோற்றிருக்கிறான்.... பதில் சொல்லா விட்டாலும் உள்ளே கோபம் கொதித்துக் கொண்டாவது இருக்கும்....

அங்கே அவர் என்ன மாதிரியான ஆராய்ச்சி செஞ்சிகிட்டிருந்திருப்பார்னு நினைக்கிறீங்க?

அந்தக் கேள்வி சின்னதாய் எரிச்சலைக் கிளப்ப அதை அப்படியே அடக்கிக் கொண்டு அவன் சொன்னான். அவன் ஆராய்ச்சிகள் விஷயத்துல நாம எதையுமே யூகிக்க முடியாது....

“மாயமா மறைகிற தன்மை பத்தி அவர் ஏதாவது ஆராய்ச்சியில் இறங்கி இருக்க வாய்ப்பிருக்கா?செந்தில்நாதன் க்ரிஷ் கடைசியாக ஆர்வம் காட்டிய பல விஷயங்களில் ஒன்றை பொதுவாகத் தேர்ந்தெடுத்து சும்மா தான் கேட்டார்.

ஆனால் இப்படி ஒரு ஆராய்ச்சி பற்றி சற்றும் எதிர்பாராமலிருந்த மணீஷுக்கு உடனடியாக முகம் வெளுத்தது. உடல் வியர்த்தது..... க்ரிஷ் சாகாமல் தன் ஆராய்ச்சியில் வெற்றி பெற்று மாயமாக மறைந்திருப்பானோ?...  


ந்த மனிதருக்கு வயது சுமார் ஐம்பதிருக்கும். கம்பீரமான தேஜஸுடன் கங்கைக் கரையில் அமைதியாக அமர்ந்திருந்தார். மாலை நேரங்களில் கங்கை பிரத்தியேக அழகு பெற்று விடுகிறது. அவர் அழகை ரசிப்பவர். நதியானாலும், கடலானாலும், மலையானாலும், மழையானாலும், மனிதர்களானாலும் காணக்கிடைக்கிற அழகை அவர் ரசித்து லயிக்காமல் இருப்பதில்லை. தூரத்தில் சில யாத்திரீகர்கள் கங்கையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள். சில இளைஞர்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.....

அவர் செல்போன் மெலிதாக இசைத்தது. அவர் என்றுமே செல்போன் ஒலியை மெலிதாகவே வைத்திருப்பார். ஒலிப்பது அவருக்கு மட்டும் கேட்டால் போதும். எந்த சந்தடியிலும் அந்த மெலிதான சத்தம் அவருக்குக் கேட்கும்.... செல்போனைக் கையில் எடுத்து அழைப்பது யாரென்று பார்த்தார். உமா நாயக் என்ற பெயர் பளிச்சிட்டது.  ISTRAC ல் வேலை செய்யும் பெண் விஞ்ஞானி.....

கங்கையைப் பார்த்துக் கொண்டே  ஆங்கிலத்தில் “சொல்என்றார்.

“சென்னையிலிருந்து ஒரு புதுத்தகவல்அவளும் ஆங்கிலத்தில் சொன்னாள்.

“என்னது?

“அந்த அமாவாசை இரவு ஒரு ஆள் அட்டைப் பெட்டியை எடுத்துகிட்டு  மலையேறினான்னு சொன்னேனே. அவன் இறந்துட்டான்....

“எப்படி?

“பாம்பு கடிச்சு செத்திருக்கான்.... டிவியில் நியூசில் வினோத் தற்செயலா பார்த்திருக்கான்... பார்த்துட்டு எனக்கு சொன்னான்.....

வினோத் ISTRAC ல் வேலை செய்யும் ஆராய்ச்சியாளன்.... அந்த மனிதர் கண்கள் தானாக மூடின. மூளை வேகமாக இயங்க ஆரம்பித்தது. “பாம்பு கிடைச்சுதா...

“இல்லை.... அந்த ஏரியா ஜனங்க பீதியோட இன்னும் தேடிகிட்டிருக்கறதா ந்யூஸ்ல சொன்னாங்களாம்....

“உன் டைரக்டருக்கு சொன்னாயா?

“சொன்னேன்.... அந்த மனுஷன் அதுக்கு பெரிய முக்கியத்துவம் தரல...

“முட்டாள்என்று சொல்லியபடி அந்த மனிதர் எழுந்தார். எந்தத் தகவலும் அதன் முக்கியத்துவம் அறிந்தவர்களுக்கு மட்டுமே உதவ முடியும். முட்டாள்கள் எதன் அருமையையும் கடைசியாக மட்டுமே உணர்கிறார்கள்.

சரி.... அந்தக் கருப்பு படங்கள் பத்தி ரிப்போர்ட் ஏதாவது வந்துச்சா

“இன்னும் வரலை....

“வந்தவுடனே போன் செய்என்றவர் நடக்க ஆரம்பித்தார். அதன் பின் அவர் கவனம் கங்கை பக்கம் செல்லவில்லை. கிடைத்த தகவலைத் தீர்க்கமாக யோசிக்க ஆரம்பித்தார். முடிவில் ‘களத்தில் முதல் காய் நகர்த்தப்பட்டு விட்டதுஎன்பது புரிந்தது.


அவரும் களமிறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது!

(தொடரும்)
என்.கணேசன்