சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 2, 2017

இருவேறு உலகம் – 15



க்ரிஷின் கம்ப்யூட்டரில் ஆராய்ந்ததில் செந்தில்நாதனுக்கு சில உபயோகமான தகவல்கள் கிடைத்தன. க்ரிஷ் தனது கம்ப்யூட்டரில் ஏராளமான தகவல்களை முறையாகப் பிரித்து வைத்திருந்தான். புத்தகங்களை விட இரு மடங்கு அதிகப் பிரிவுகளில் தகவல்களையும், கட்டுரைகளையும், ஆராய்ச்சிகளையும் அதில் சேமித்து வைத்திருந்தான். எல்லாவற்றையும் மேலோட்டமாகப் பார்ப்பதற்கே சில நாட்கள் ஆகும் போலத் தெரிந்தது. செந்தில்நாதன் அவன் இணையத்தில் சமீப காலங்களில் அதிகமாகத் தேடியதும், படித்ததும், டவுன்லோடு செய்ததும் எவை என்று தேடிப் பார்த்தார். பறக்கும் தட்டுகள், விண்கலங்கள்,  வேற்றுக்கிரக மனிதர்கள்,  ஆவியுலகம், ஆவிகள், சித்தர்கள், மாயமாகும் தன்மை ஆகியவை குறித்து தான் கடந்த சில மாதங்களில் அவன் அதிகம் மூழ்கி இருந்திருப்பது தெரிந்தது.

அவர் அருகில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த உதய்க்கு அம்மா சொன்ன ஆவி சமாச்சாரம் தான் தம்பி காணாமல் போயிருக்க காரணமாய் இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. கூடவே மாயமாகும் தன்மை பற்றி நிறைய ஆய்வுக்கட்டுரைகள் வேறு அவன் படித்திருக்கிறானே..... உதய் செந்தில்நாதன் ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்தான். ஆனால் செந்தில்நாதன் தன் கருத்தையோ, சந்தேகத்தையோ தெரிவிக்காமல் சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஓரளவு க்ரிஷ் சமீப காலத்தில் ஆர்வம் காட்டிய விஷயங்களை மனதில் குறித்துக் கொண்ட செந்தில்நாதன் அவரோட இ-மெயில் செக் பண்ண முடியுமா?என்று கேட்டார்.

“அதுவும் ஓப்பனா தான் இருக்கும் ....”  என்றான் உதய். அவன் சொன்னபடியே தான் இருந்தது. செந்தில்நாதன் க்ரிஷ் அனுப்பியிருந்த மெயில்களையும், அவனுக்கு வந்த மெயில்களையும் படித்துப் பார்த்தார். வந்திருந்த மெயில்கள் பெரும்பாலானவை அவனிடம் ஏதாவது சந்தேகம் கேட்டும், தகவல்கள் கேட்டும் வந்தவையாக இருந்தன. அவன் அனுப்பி இருந்த மெயில்கள் எல்லாம் அந்த மெயில்களுக்கு பதில் மெயில்களாகத் தான் இருந்தன. மற்றவை அவன் பள்ளி, கல்லூரி நண்பர்கள், ஆசிரியர்களுக்கு அனுப்பி இருந்ததும், அவர்களிடமிருந்து வந்திருந்தவையுமாக இருந்தன. பிறந்த நாள் வாழ்த்துகள், பொதுவான நலம் விசாரிப்புகள் தான் அவற்றின் சாராம்சமாகவும் இருந்தன. அதிலிருந்து, க்ரிஷ் தன் சமீபத்திய ஆராய்ச்சிகள் குறித்த எந்தத்தகவலையும், யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

செந்தில்நாதன் இப்போதைக்கு இவ்வளவு போதும் என்று நினைத்தவராக எழுந்தார். உதய் அவர் எதாவது சொல்வார் என்ற எதிர்பார்ப்போடு அவரைப் பார்த்தான். அவர் சொல்வதற்குப் பதிலாகக் கேள்வி தான் கேட்டார். “மணீஷ், ஹரிணி ரெண்டு பேரும் அடிக்கடி இங்கே வருவாங்களா?

உதய் சொன்னான். “மணீஷ் வாரத்துக்கு ரெண்டு தடவையாவது வருவான். ஹரிணியும் முதல்ல எல்லாம் வாரத்துக்கு ஒரு தடவையாவது இங்கே வருவாள். ஆனா இந்த மூணு மாசமா வரலை....

“ஏன்?

“தெரியல....

க்ரிஷ் அவங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் அடிக்கடி போவாரா?

“அவன் போறது அபூர்வம் தான்

க்ரிஷ் வரலைன்னவுடனே நீங்க யாராவது இவங்க ரெண்டு பேருக்கும் போன் செஞ்சு எதாவது சொன்னீங்களா, விசாரிச்சீங்களா?

“இல்லை.... 

“க்ரிஷ் காணாம போன பிறகு அவங்க போன் செஞ்சாங்களா?

“இல்லைபோன் செஞ்சு கேட்கணுமா?உதய் கேட்டான்.

“வேண்டாம்.... அவங்க ரெண்டு பேரோட மொபைல் நம்பர் குடுங்க. நான் அப்பறமா பேசிக்கறேன்

உதய் தந்தான். அவர் குறித்துக் கொண்டார்.


ஞ்சுத்தலையருக்கு அவர் வீட்டுப் பகுதியிலிருந்து தான் அந்த மர்மநபர் போன் செய்திருக்கிறான் என்ற செய்தியை ஜீரணிக்கவே கஷ்டமாக இருந்தது. யாரவன்? இந்தப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டு அவரை அவன் கவனித்துக் கொண்டிருக்கிறானோ? போன் செய்த பிறகு அவர் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை ரசித்துக் கொண்டிருக்கிறானோ? மனதின் ஆழத்தில் இனம் புரியாத ஒருவித பயம் வேர்விட ஆரம்பித்தது. சிங்கம் போல் இருந்த அவரை எவனோ ஒருவன் இப்படியொரு நிலைமைக்குத் தள்ளி விட்டானே என்று கோபமாகவும் இருந்தது.

உடனே போன் செய்து ஒரு நபருக்கு ஆணையிட்டார். “என் வீட்டுப் பக்கத்துல சந்தேகப்படற மாதிரி யாராவது சுத்திகிட்டிருந்தா புடிச்சி விசாரி.... என்ன விஷயமா?.... பெருசா ஒன்னுமில்ல..... எவனோ வீட்டை வேவு பார்க்கிறானான்னு சந்தேகமா இருக்கு..... நேத்துல இருந்து தான்..... இல்லை.... டிபார்ட்மெண்ட்ல புகார் பதிவு பண்ண விரும்பல..... ஏன்னா இது சந்தேகம் தானே ஒழிய உறுதியில்ல..... உடனே ஆள் ஏற்பாடு பண்ணு.

இத்தனை நடந்தும் கிழம் நிலைகுலைந்து போகாமல் என்ன செய்ய வேண்டுமோ செய்கிறதே..... அப்பா இந்த ஆளை இத்தனை காலமாய் கூடவே வைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் இந்த சாமர்த்தியம் தான்....என்று மணீஷ் மனதில் நினைத்துக் கொண்டான்.

“நேத்து செந்தில்நாதன் க்ரிஷ் வீட்டுல என்ன கேட்டானாம்?கிழவர் கேட்டார்.

“வழக்கமா கேக்கற கேள்விகள் தான் போலருக்கு. க்ரிஷ் ரூம்ல உக்காந்து கம்ப்யூட்டர் எல்லாம் செக் செஞ்சிருக்கிறாராம்.... ராத்திரி பத்து மணி வரைக்கும் அங்கே இருந்தார்னு சொன்னாங்க

என்ன கண்டுபிடிச்சானாம்.....

“அந்த ஆள் எதுவும் சொல்லலையாம்…..”

சொல்ல மாட்டான் அழுத்தக்காரன்..... ஆமா நீ கருப்பா பெரிய பறவை எதாவது இது வரைக்கும் பார்த்திருக்காயா?

“நான் காக்கா தவிர வேற கருப்பான பறவையே பார்த்தது கிடையாது.....

“நான் சொல்ற பறவை காக்காவை விட நாலஞ்சு மடங்கு பெருசு.... அந்த மலையடிவாரத்துல நான் பார்த்தேன்.... ஒரு வேளை உன் ஃப்ரண்டு அந்தப் பறவைய ஆராய்ச்சி பண்ணப் போயிருப்பானோ?.... உன் கிட்ட பேசறப்ப அந்த மாதிரி ஏதாவது பறவை பத்தி சொன்னானா?

கிழத்துக்கு பயத்தில் புத்தி பேதலித்து விட்டதா இல்லை பார்வைக் கோளாறா என்று சந்தேகத்தோடு மணீஷ் பார்த்தான்.

அவன் பார்வையைப் படித்த பஞ்சுத்தலையர் கோபப்பட்டார். “பிரமையல்ல. நிஜமாவே பாத்தேன்டா படிச்ச முட்டாளே.....

அவர் அதிக கோபம் கொள்ளும் போது மட்டுமே அவனிடம் “டாபோட்டுப் பேசுவார். மற்ற நேரங்களில் ஒருமையில் பேசுவாரே ஒழிய “டாவிகுதி சேராது.

“அமாவாசை இருட்டில் நீங்க என்ன பாத்தீங்களோன்னு நினைச்சேன்....என்ற மணீஷ் உடனே மொபைலை எடுத்து கூகுளில் very large black bird என்று தேடினான். வட அமெரிக்கப் பகுதியில் உள்ள அண்டங்காக்கைகள் பற்றிய தகவல்கள் வந்தன....

“அந்த மாதிரி பறவைகள் வட அமெரிக்கால தான் இருக்காம்.... நம்ம நாட்டுல எல்லாம் இல்லையாம்.....என்றான்.

“அபூர்வமா ஒன்னு ரெண்டு இந்தப்பக்கம் வந்து, அந்த மலைப்பக்கம் சுத்திகிட்டிருந்திருக்கலாம். அதை அவன் ஆராய்ச்சி செய்யப் போயிருக்கலாம்.....

“அப்படியே ஆனாலும் அது அமாவாசைக்கு அமாவாசை தான் வருமா என்ன?...

அவன் சந்தேகமும் அவருக்கு நியாயமாகத் தான் தோன்றியது. அந்த நேரத்தில் அவரது வேலையாள் போன் செய்தான். “ஐயா சன் செய்திகளப் பாருங்கய்யாஎன்றான்.

பஞ்சுத்தலையர் அவசர அவசரமாக டிவியில் சன் செய்திகளைப் பார்த்தார். செய்தியாளர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். “.... இவர் உடலைப் போஸ்ட் மார்ட்டம் செய்த அறிக்கையில் இவரைக் கடித்த பாம்பு கடும் விஷம் கொண்ட பாம்பு என்றும் கடித்த ஓரிரு நிமிடத்திலேயே உயிர் போக்க வைக்கும் விஷத்தன்மை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததால் இந்தப் பகுதி மக்கள் மத்தியில் பாம்பு குறித்த பீதி நிலவி வருகிறது. பகுதி மக்கள் பாம்பை மிகவும் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்....

திரையில் வாடகைக் கொலையாளியை நெருக்கத்தில் காண்பித்தார்கள். அவன் முகத்தில் பீதி தெரிந்தது. உயிரோடிருக்கையில் அவன் உணர்ந்த கடைசி உணர்வு பிணமான பின்னும் அப்படியே தங்கி விட்டதாய் பஞ்சுத்தலையருக்குத் தோன்றியது. கடைசியாக யாராவது ஆளைப் பார்த்தானா இல்லை அந்தப் பாம்பைப் பார்த்தானா...?

பஞ்சுத் தலையருக்கு அவன் அந்தப் பாம்பு இருந்த அட்டைப் பெட்டியை அவர் அருகே கொண்டு வந்த போது அவர் பின் வாங்கியதை ரசித்த காட்சி நினைவுக்கு வந்தது. உடனே லேசான புன்னகை இப்போது அவருக்கு வந்தது. “அப்ப என் பயத்தை ரசிச்சியேடா பாவி... இப்ப நீயே கடிபட்டு பயத்தோடவே செத்துட்டியே. இது வரைக்கும் நான் எடுத்துகிட்ட வேலைல ஒருதடவ கூட தோத்ததில்லைன்னு பெருமையா சொன்னியே, இப்ப இந்த வேலைல ஜெயிச்சிட்டு செத்தாயா, தோத்துட்டு செத்தாயா? ஒன்னுமே புரியலயே


தே நேரத்தில் பெங்களூருவில் அந்த ஆராய்ச்சியாளனும் அந்தச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தமிழ்நாட்டில் க்ரிஷ் மறைவு பற்றி ஏதாவது செய்திகள் வெளியாகின்றனவா என்று ஒவ்வொரு சேனலாகப் பார்த்துக் கொண்டிருந்த போது தற்செயலாக அவன் இந்தச் செய்தியைப் பார்த்தான். அமாவாசை இரவில் அந்த மலைக்கு ஒரு அட்டைப்பெட்டியோடு வந்தவன் பிணமாகக் காட்டப்பட்டது அவனுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தற்செயல் தானா, இல்லை அந்த அமாவாசை இரவு நிகழ்ச்சியோடு தொடர்புடையதா?...

(தொடரும்)
என்.கணேசன்       


5 comments:

  1. சிறப்பு. பஞ்சுத்தலையர் புலம்பல் சூப்பர் காமெடி. வாரம் ஒரு அத்தியாயம் போதவில்லை. இருமுறை பதிவிடும் கோரிக்கை முன் வைக்கிறேன்.

    ReplyDelete
  2. தங்களின் தனிதன்மையே புதினத்தின்
    தனிசிறப்பு

    ReplyDelete
  3. In every ur story ur creations of ur hero personality is very very interesting and in excellent perfection... I like it...becoming very big fan of u

    ReplyDelete