சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, December 20, 2016

எதெல்லாம் இறைவன்?


கீதை காட்டும் பாதை 44

கவான் பக்தர்களின் உள்ளத்திலே தங்கி அஞ்ஞான இருளை நீக்கி வழி காட்டுவதாகக் கூறியதைக் கேட்ட அர்ஜுனன் மேலும் இறைவனை முழுமையாக அறிந்து கொள்ளவும், வணங்கவும் விருப்பம் கொள்கிறான். உடனே  “நீயே பரம்பொருள், நீயே பரஞ்சோதி, நீயே தூயவன், நீயே உயர்ந்தவன், நீயே நிலைத்தவன்......என்றெல்லாம் துவங்கி, “எந்த விபூதிகளால் (சிறப்புகளால்) இந்த உலகங்களை வியாபித்து நிற்கிறாயோ அந்தத் திவ்ய விபூதிகளை ஒன்று விடாமல் எனக்குச் சொல்லி அருள் புரிவாயாகஎன்றும் “பகவானே! பக்தி யோகம் கொண்டவனான நான் எப்பொழுதும் நினைவில் வைத்து உன்னை முழுவதும் எப்படி அறிவேன்? எந்தெந்த உருவங்களில் உன்னை நான் தியானிக்க வேண்டும்? என்றும் கேட்கிறான்.

இறைவனை அவ்வப்போது மறந்து விடுவது தான் மனிதனின் நெடுங்காலப் பிரச்னையாக இருக்கிறது. மீண்டும் இறைவனை நினைவில் கொண்டு வருவதற்குள் அவனுக்கு எத்தனை எத்தனையோ தடமாற்றங்கள், தடுமாற்றங்கள், எத்தனை  எத்தனையோ பிரச்னைகள் ஏற்பட்டு விடுகின்றன. எனவே இதையெல்லாம் தவிர்க்க எப்போதும் இறைவனை எப்படி நினைவு வைத்திருப்பது, எந்தெந்த உருவங்களில் வணங்குவது என்று அறியும் ஆர்வத்தில் அர்ஜுனன் கேட்டதற்கு ஸ்ரீகிருஷ்ணர், “விவரித்துச் சொன்னால் முடிவே இராது அதனால் முக்கியமானவைகளை மட்டும் சொல்கிறேன்என்று சொல்லி விவரிக்க ஆரம்பிக்கிறார்.

அர்ஜுனா! எல்லா உயிரினங்களின் உள்ளத்திலும் ஆத்மாவாக இருக்கிறேன். எல்லா உயிரினங்களின் முதலும், நடுவும், முடிவும் நானே.

ஜோதிகளுக்குள் ஒளிமிக்க சூரியன் நான், வேதங்களில் நான் சாம வேதம், மலைகளுக்குள் நான் மேருமலை, நீர்நிலைகளில் நான் சமுத்திரம், பொருளுள்ள சொற்களுக்குள் ஓரெழுத்தான பிரணவம் நான், நதிகளில் கங்கை நான், வித்தைகளுக்குள் ஆன்ம வித்தை நான், எழுத்துக்களுள் அகரம் நான், எல்லாவற்றையும் பறித்துக் கொள்ளும் மரணம் நான், பிறக்கப் போகிறவைகளின் பிறப்பு நான், காலங்களில் வசந்தம் நான், மாதங்களில் மார்கழி நான், ஏமாற்றுபவர்களிடமுள்ள சூதாட்டம் நான், வெற்றி நான், முயற்சி நான், வ்ருஷ்ணி குலத்தவர்களுக்குள் வாசுதேவன் நான், பாண்டவர்களுக்குள் அர்ஜுனன் நான், முனிவர்களில் வியாசர் நான், ரகசியங்களுக்குள் மௌனம் நான், ஞானிகளின் ஞானம் நான்

ஒவ்வொன்றிலும் எது சாராம்சமாக இருக்கிறதோ, எது மேன்மையிலும் மேன்மையாக இருக்கிறதோ அதெல்லாம் நானே என்று சொல்கிற ஸ்ரீகிருஷ்ணர் இடையே, ஏமாற்றுபவர்களிடமுள்ள சூதாட்டம் நான் என்று சொல்வது பலருக்குத் திகைப்பை ஏற்படுத்தலாம். அந்தக் காலத்தில் ஏமாற்றுப் பேர்வழிகளின் உச்சத்திறமை சூதாட்டத்திலேயே வெளிப்பட்டு வந்தது. இந்தக் காலத்தைப் போல பலப்பல ஏமாற்று வழிகள் அக்காலத்தில் இல்லை. அப்படிப்பட்ட சூதாட்டத்தில் கூட மனிதர்கள் ஈர்க்கப்பட்டார்கள் என்றால் இறைவனின் ஏதோ ஒரு அம்சம் அதில் இருந்திருக்கிறது, அதுவே ஈர்த்திருக்கிறது என்றாகிறது.

சூதாட்டத்தினால் மனைவியை இழந்து, ராஜ்ஜியம் இழந்து, போர்க்களம் வரை வந்து நின்று கொண்டிருக்கிற அர்ஜுனனிடம் சூதாட்டமே நான் என்று சொன்னதோடு ஸ்ரீகிருஷ்ணர் நிற்கவில்லை. வாசுதேவன் நான், அர்ஜுனன் நான், வியாசர் நான் என்றும் கூறுகிறார். இங்கு கீதோபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறவர் பரம்பொருள் ஆனதாலேயே, வாசுதேவன் நான் என்று சொல்வதும், அர்ஜுனனை நீ என்று சொல்லாமல் மூன்றாவது நபர் போல பெயர் சொல்லிக் குறிப்பிடுவதும் அவசியமாக இருந்திருக்கிறது என்கிற சூட்சுமத்தை உணர வேண்டும்.

அது மட்டுமல்ல குருக்‌ஷேத்திரத்தில் நின்று கொண்டு கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிற அர்ஜுனன், பரம்பொருளாக உச்சத் தியான நிலையிலே உபதேசித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீகிருஷ்ணர், இதை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிற வியாசர் எல்லாமே நான் என்றால் இறைவனைத் தவிர, இறைவனின் லீலையைத் தவிர வேறெதுவும் அங்கில்லை என்றல்லவா ஆகிறது.   

இது வரை சொன்னதை எல்லாம் சேர்த்து ரத்தினச்சுருக்கமாகத் தொகுத்துக் கூறுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

எது எது சிறப்புடையதோ, ஒளியுடையதோ, சக்தியுடையதோ அதெல்லாம் என் தேஜஸின் ஒரு அம்சத்தால் உண்டானதென்று அறிவாயாக.

எதிலாவது ஏதாவது ஒரு சிறப்பு இருக்குமானால் அது இறைவனின் ஒரு அம்சத்தால் ஏற்பட்டிருக்கிறது என்கிறது கீதை. இறைவனின் அம்சம் இல்லாவிட்டால், அவன் அருள் இல்லா விட்டால் அந்தச் சிறப்பு அமைந்திருக்க வாய்ப்பில்லை. இதை மனப்பூர்வமாக உணர்ந்தவனுக்கு கர்வம் கொள்ளக் காரணம் இல்லாமல் போகிறது. எந்தத் துறையிலும், எந்த விஷயத்திலும், நமக்கென்று ஒரு தனித்திறமை இருக்குமானால் அது பரம்பொருளின் அம்சங்களில் ஒரு சிறு துளி நம்மிடம் அமைந்திருக்கிறது என்று பொருள். அதனால் பிரத்தியேகமாய் ஏதாவது சிறப்பு பெற்றிருப்போமானால் அதற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டுமே ஒழிய கர்வம் கொள்ளக்கூடாது.

பத்தாம் அத்தியாயமான விபூதி யோகத்தின் முடிவில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

இவ்வாறு விரிவாக அறிவதன் தேவை தான் என்ன அர்ஜுனா? இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் என் யோகசக்தியின் ஒரு அம்சத்தினால் தாங்கிக் கொண்டு இருக்கிறேன்.

ஒரு பிரம்மாண்டத்தை அடிப்படையாகப் புரிந்து கொண்டவர்களுக்கு அதன் அம்சங்களைத் தனித்தனியாக அறிந்து கொள்வதின் அவசியம் இல்லை. ஒன்றினுடைய சாராம்சம் புரிந்து விட்டால் அதைப் பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. பல நேரங்களில் ஆயிரக்கணக்கான தகவல்களை தனக்குள் திணித்துக் கொண்டு போகிறவன், ஒட்டு மொத்த சாராம்சத்தைத் தொலைத்து விடும் அபாயம் இருக்கிறது. எனவே இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் என்னுடைய யோகசக்தியின் ஒரு அம்சத்தினாலேயே  தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிய ஸ்ரீகிருஷ்ணர் அந்த ஒன்றை அறிந்து கொள்வது போதும் என்று சொல்லி பத்தாவது அத்தியாயமான விபூதி யோகத்தை நிறைவு செய்கிறார்.

பாதை நீளும்....


என்.கணேசன்

2 comments:

  1. கணேசனின் எழுத்திலும் னு கூட சேர்த்துக்கலாம் !

    ReplyDelete
  2. எதெல்லாம் இறைவன் என்பதற்கான விளக்கம் தெளிவாக இருந்தது...
    "எப்போதும் இறைவனை எப்படி நினைவு வைத்திருப்பது,?" என்ற‌ வாசகத்திற்க்கு இன்னும் கொஞ்சம் விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete