மகாசக்தி மனிதர்கள்-59
இந்தியா ஈன்றெடுத்த மகான்கள் ஏராளம். அவர்களால் உலக மக்கள் பலரும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரே இடத்தில் இருந்து கொண்டு, சாமானியர்கள் மட்டுமல்லாமல் அரசர்கள், அரசியல் தலைவர்கள், அறிஞர்களையும், அவர்கள் மட்டுமல்லாமல், உலக ஞானிகளையும் தன்னிடத்தே ஈர்த்த தனிச்சிறப்பு ரமண மகரிஷிக்கு உண்டு.
1879 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழியில் சுந்தரம் ஐயர், அழகம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த வேங்கடரமணன் எல்லாவற்றையும் துறந்து துறவியானது தன் பதினாறாம் வயதில். மதுரையில் வசிக்கும் அவரது சித்தப்பா வீட்டில் அவர் தங்கி இருந்த போது திடீரென்று ஒருவித மரண அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. ஆரம்பத்தில் பயமாக அவரை ஆட்கொண்ட அந்த அனுபவத்தில், அந்த அனுபவத்தை அலசும் வேறொன்று அவருக்குள் விழித்துக் கொண்டது. இறந்து முடிவது எது என்று அது கேள்வி கேட்டது. இறப்பது உடலே அல்லவா என்றும் உடலோடு சேர்ந்து இறக்காத ஆன்மா நிரந்தரமானதல்லவா என்ற ஞானம் எழுந்தது. நான் என்று உடலோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு பார்க்காமல், என்றும் அழிவில்லாத ஆன்மாவே நான் என்ற தெளிவு அறிவுபூர்வமாக மட்டும் எழாமல் உணர்வு பூர்வமாகவும் அவருக்கு விளங்கியது. அதற்கு மேல் அந்த உடலோடு சம்பந்தப்பட்ட உறவுகளில் சேர்ந்திருக்க அவருக்கு முடியவில்லை. எல்லாம் துறந்து ரயில் ஏறி திருவண்ணாமலை வந்து சேர்ந்தவர் அதன் பிறகு அங்கேயே வாழ்ந்தார். (பிற்காலத்தில் அவர் குடும்பத்தினரும் அவருடன் வந்து சேர்ந்து கொண்டார்கள்.)
பிராம்மண சுவாமி என்று மற்றவர்களால் ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட அவர் அங்கு பாதாள லிங்கம், விருப்பாக்ஷி குகை, கந்தாஸ்ரமம் முதலான இடங்களில் தங்கி ஆழமான தியான நிலையில் லயித்து வாழ்ந்தார். அவருடைய ஆன்மிக சக்தி சிறிது சிறிதாக அங்குள்ள மக்களை ஈர்க்க ஆரம்பித்தது. பின் வெளியூர்களில் இருந்தும் அவரை நாடி ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். கடைசியாக அவர் திருவண்ணாமலை அடிவாரத்தில் வந்து தங்க அங்கு ஒரு ஆசிரமம் உருவானது. காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சம்ஸ்கிருத பண்டிதர் ஒருவர் அவரை ரமண மகரிஷி என்றழைக்க ஆரம்பிக்க பின் அந்தப் பெயரே நிலைத்தது.
அதிகம் பேசாமல், அடுத்தவரைக் கவர யுக்திகள் எதையும் கையாளாமல், ஆன்ம ஞானத்தைத் தவிர வேறெதையும் முக்கியம் என்று நினைக்காமல் தன் தனிஉலகில் வாழ்ந்த அந்த மகானைச் சுற்றி ஒரு உலகம் உருவாக ஆரம்பித்தது. உண்மையான ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் காந்தமாக பல மாநிலங்களில் இருந்தும், நாடுகளில் இருந்தும் அவரால் ஈர்க்கப்பட்டார்கள். எந்த மகாசக்தியையும் உடையவராகத் தன்னை எப்போதுமே காட்டிக் கொள்ளாத அவருடைய மகாசக்தியைப் பலர் பல விதங்களில் உணர ஆரம்பித்தார்கள். அப்படிப்பட்ட சில அனுபவங்களைப் பார்ப்போம்.
ரமண மகரிஷிக்கு எதையுமே யாருமே வாய்விட்டுச் சொல்ல வேண்டி இருந்ததில்லை. சொல்லாமலே அறியும் சக்தியை அவர் பெற்றிருந்தார். குலுமணி நாராயண சாஸ்திரி என்ற பண்டிதர் வால்மீகியின் ராமாயணத்தை சம்ஸ்கிருத மொழியில் உரைநடை வடிவில் படைத்திருந்தார். அதை ரமண மகரிஷிக்குப் படித்துக் காட்டும் ஆவல் அவருக்கு இருந்தது. அதற்காக திருவண்ணாமலை கிளம்பிய அவர் ரமணருக்கு சமர்ப்பிக்க சில வாழைப்பழங்களையும் வாங்கிக் கொண்டு போனார். போகிற வழியில் சின்ன விநாயகர் கோயில் ஒன்றைப் பார்த்த அவருக்கு ஒரு வாழைப்பழம் விநாயகருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்படித் தோன்றிய போதும் கோயிலுக்குள் நுழையாத அவர் ரமண மகரிஷியைச் சந்திக்க விரைந்தார்.
ரமணரைக் கண்டு வணங்கி அந்த வாழைப்பழங்களைக் காணிக்கையாக வைத்தார். அதை ஆசிரமத்து ஊழியர் எடுத்து உள்ளே கொண்டு போக முயன்ற போது ரமணர் சொன்னார். “பொறு. விநாயகருக்குத் தர நினைத்திருந்த வாழைப்பழத்தை அவர் எடுத்துக் கொள்ளட்டும்”. நாராயண சாஸ்திரி வியந்தபடி ஒரு வாழைப்பழத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டார்.
அவர் வியப்பில் இருந்து மீள்வதற்கு முன்பே ரமணமகரிஷி அவரிடம் சொன்னார். “நீங்கள் ராமாயணத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிக்கலாமே!” நாராயண சாஸ்திரியின் வியப்பு பிரமிப்பாக நீண்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
ஒரு முறை பிஜி தீவில் குடிபெயர்ந்திருந்த சில ஹிந்திக்காரர்கள் அவரைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்கள் “உங்கள் வாழ்க்கை வரலாறு பல மொழிகளில் வந்திருக்கின்றன. ஆனால் ஹிந்தியில் வரவில்லையே” என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
ரமண மகரிஷி சொன்னார். “கொஞ்சம் பொறுங்கள். ஹிந்தியில் என் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார்”
உடன் இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அவர்களுக்குத் தெரிந்து ஹிந்தியில் ரமணரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆட்கள் யாரும் இல்லை. ஆனால் ரமணர் சொன்னபடியே சில நிமிடங்களில் வெங்கடேஸ்வர சர்மா என்பவர் ரமணரின் சரிதத்தை ஹிந்தியில் எழுதியிருந்து அதைச் சமர்ப்பிக்க நேரடியாக அங்கு வந்து சேர்ந்தார்.
மற்றவர்கள் எண்ணங்களை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல் அவர்களது பிரச்னைகளுக்குத் தீர்வையும், அவர்களது கேள்விகளுக்குப் பதிலையும் தானாகவே ரமண மகரிஷி தருவது பலரது அனுபவமாக இருந்திருக்கிறது.
வருடா வருடம் ஆசிரம பக்தர்கள் அவரது பிறந்த நாளில் அன்ன தானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். கோபாலப் பிள்ளை என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணரின் தீவிர பக்தர். அவர் தானும் பணம் போட்டு மற்ற பக்தர்களையும் தொடர்பு கொண்டு பணம் வசூல் செய்து அந்த அன்னதானத்திற்கு அரிசி வாங்கித் தருவது வழக்கம். அவர் தொலை தூரத்திற்கு மாற்றலாகிப் போய் விடவே அந்த ஒரு வருடம் அன்னதானம் எப்படிச் செய்வது என்ற கவலை ஆசிரம பக்தர்களுக்கு ஏற்பட்டது.
ஒருவர் ரமணரிடம் சென்று “சென்ற வருடம் பத்து மூட்டை அரிசியில் அன்ன தானம் செய்தோம். இந்த முறை ஒரு மூட்டை அரிசி கூட தேறாது போல இருக்கிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். அதைக் கேட்டுக் கொண்ட மகரிஷி எதுவும் சொல்லவில்லை. அன்றைய தினம் நள்ளிரவில் ஆசிரமக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்து பார்த்த போது இரண்டு வண்டிகளில் அரிசி மூட்டைகள் வந்திருந்தன. ஆசிரமத்து ஆட்கள் அது வரை பார்த்திராத ஒரு புதிய நபர் தன் பெயரைக் கூடத் தெரிவிக்காமல் இந்த அரிசியைத் தானமாகத் தருவதாக முன்பே மனதில் வேண்டிக் கொண்டிருந்ததாகவும் அதை இப்போது நிறைவேற்றுவதாகவும் கூறி அரிசியைத் தந்து விட்டுச் சென்றார். இது போல பல முறை ஆசிரமத்தின் அத்தியாவசியத் தேவைகள் குறைபடும் போதெல்லாம் ஆச்சரியகரமாக நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது.
பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தத்துவ ஞானி இந்தியாவில் உண்மையான யோகி ஒருவரைக் காணும் பொருட்டு நம் நாட்டுக்கு வந்தவர். பல விதமான ஆட்களைப் பார்த்து விட்டுக் கடைசியாக ரமணரைக் கண்டார். அவரைக் காணும் முன் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று மனதில் பட்டியல் இட்டுக் கொண்டு வந்தவர் ரமணர் முன் அமர்ந்தார். ரமணர் அவரைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் ரமணரின் சக்தி வாய்ந்த ஆன்மீக அலைகள் தன்னை ஆக்கிரமிப்பதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். அவரது கேள்விகள் ஒவ்வொன்றாக மனதிலிருந்து விடுபட்டன. பின் பேரமைதி அவரைச் சூழ ஆரம்பித்தது. அவர் அந்தக் கணமே ரமண மகரிஷியே தான் தேடி வந்த உண்மையான யோகி என உணர்ந்தார்.
ரமண மகரிஷி திருவண்ணாமலையை விட்டு வேறெங்கும் செல்லா விட்டாலும் கூட வெளியூர் அல்லது வெளிநாட்டிலும் கூட அவரைக் கண்டு பேசிய அனுபவங்கள் நிறைய உண்டு.
ராபர்ட் ஆடம்ஸ் (Robert Adams) என்ற அமெரிக்கர் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர். இளமையிலேயே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் இருந்த அவர் ஏழு வயதாக இருக்கும் போது அடிக்கடி வெள்ளைத் தலைமுடியும், வெள்ளைத் தாடியும் கொண்ட ஒரு நபர் அவருக்குப் புரியாத ஒரு மொழியில் அவரிடம் உரையாடுவது போல் காட்சிகள் கண்டார். அதை அவர் பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் தங்கள் மகனின் கற்பனைக் கதையாக நினைத்துக் கொண்டார்கள். சில வருடங்கள் கழித்து ராபர்ட் ஆடம்ஸ் ஆன்மிக புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கையில் புத்தகத்தில் அச்சிட்டிருந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்த போது அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது. அது அவர் அடிக்கடி முன்பு காட்சியில் பார்த்த உருவம் தான். அப்படி ஒரு மனிதர் உண்மையாகவே இருக்கிறார் என்பதும் அவர் இந்தியாவைச் சேர்ந்த ரமண மகரிஷி என்பதும் அப்போது தான் அவருக்குத் தெரிந்தது.
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி- தினத்தந்தி-02-10-2015
(மகாசக்தி மனிதர்கள் தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக தினத்தந்தி பதிப்பில் வெளியாகி உள்ளது. ஆன்மிக, அற்புதசக்திகளில் ஆர்வம் உள்ள வாசகர்கள் தவறாமல் வைத்திருக்க வேண்டிய நூல் அது என்பதால் வாங்கிப் பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)
சென்னை தீவுத்திடலில் ஜூன் 1 முதல் 13 தேதி
வரை நடக்கும் புத்தகத்திருவிழாவில் மகாசக்தி மனிதர்கள் தினத்தந்தி பதிப்பக கடை எண்
554லிலும், என் மற்ற நூல்கள் ப்ளாக்ஹோல் மீடியா கடை எண் 316லும் தள்ளுபடி விலையில்
கிடைக்கும்.