வருண் காலை கண்விழித்த போது மைத்ரேயன்
தியானத்தில் அமர்ந்திருந்தான். ‘இவனுக்குத் தூக்கமே கிடையாதா?’ என்று வருண்
ஆச்சரியப்பட்டான். ஆனால் முந்தைய நாளின் துக்கமும், வெறுப்பும் போய் அவன் மனம்
அமைதியடைந்திருந்தது. அதனால் தான் நீண்ட நாட்களுக்குப் பின் இப்படி நிம்மதியாகத்
தூங்க முடிந்ததோ என்று வருண் நினைத்தான். நேற்று இரவு மைத்ரேயன் சொன்னது இப்போதும்
வருண் காதில் ரீங்காரம் செய்தது. ”“உன்னை உன் அக்ஷய் அப்பா நிறையவே
நேசிக்கிறார். இடையில் யார் வந்தாலும் சரி அந்த பாசம் சிறிதும் குறையாது.....”
அந்த
வார்த்தைகளுக்காகவே மைத்ரேயன் மீது அவனுக்கு ஒருவித பாசம் பிறந்திருந்தது. இப்போது
மைத்ரேயனுடைய தியானத்தில் அந்த அறையே சாந்தமாய் இருப்பது போல் வருண் உணர்ந்தான். மைத்ரேயன்
தியானத்தில் இருந்து மீண்டு அவனைப் பார்த்த போது வருண் நட்புடன் புன்னகைத்தான்.
மைத்ரேயனும் புன்னகைத்தான்.
அன்று
முழுவதும் வருணின் நடவடிக்கைகள் வீட்டாரை ஆச்சரியப்படுத்தின. வெளியே மழை பெய்து கொண்டிருந்ததால் வெளியே
எங்கேயும் போகாமல் கௌதமும், மைத்ரேயனும் வீட்டுக்குள்ளேயே கேரம் ஆடிக் கொண்டிருந்தார்கள். ”நானும் வருகிறேன்” என்று சொல்லி வருண் அவர்களுடன் ஆடச்
சேர்ந்து கொண்டான். மைத்ரேயனுக்கு அந்த ஆட்டத்தில் சில புதிய ஆடுமுறைகளைச்
சொல்லித் தந்தான். சிரித்துப் பேசினான்.
கௌதம்
தண்ணீர் குடிக்கும் சாக்கில் சமையலறை வந்து அம்மாவிடம் கேட்டான். “அண்ணன் திடீர்னு
திருந்திட்டானா? என்ன ஆச்சரியம்!”
சஹானா
அவனிடம் சொன்னான். “அவன் இப்படியே இருக்கட்டும். நீ எதாவது சொல்லப் போகாதே.
பழையபடி கோபப்பட்டாலும் படுவான்.”
கௌதம் புரிந்தவனாய் தலையாட்டி விட்டுப் போய் விளையாட்டைத் தொடர்ந்தான்.
கௌதம் புரிந்தவனாய் தலையாட்டி விட்டுப் போய் விளையாட்டைத் தொடர்ந்தான்.
சிறிது
நேரம் கழித்து எல்லோரும் கார்ட்டூன் சேனல் பார்க்கையில் தூர உட்கார்ந்திருந்த மைத்ரேயனைத்
தூக்கி அக்ஷய் பக்கத்தில் உட்கார வைத்து விட்டு வருண் அக்ஷயின் காலருகே
உட்கார்ந்து கொண்டான். ’அப்பாவின்
காலருகே உட்கார்வதும் சுகமாய் தான் இருக்கிறது’ கௌதம்
ஓடி வந்து அண்ணனுக்கு முத்தம் கொடுத்தான். அண்ணன் அவன் நண்பனை ஏற்றுக் கொண்டது.
அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது.
கார்ட்டூன்
சேனலில் ஒரு ஐஸ்க்ரீம் விளம்பரம் போட்டார்கள். கௌதம் மைத்ரேயனிடம் கேட்டான்.
“உனக்கு என்ன ஐஸ்க்ரீம் பிடிக்கும்?”
மைத்ரேயன்
சொன்னான். “நான் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதேயில்லை”
கௌதம்
ஆச்சரியத்தோடு நண்பனைப் பார்க்க, வருண் வெளியே பார்த்தான். மழை நின்றிருந்தது.
வருண் எழுந்து மைத்ரேயனிடம் சொன்னான். “வா இப்போதே போய்
சாப்பிடலாம்.”
மைத்ரேயன்
எழுவதற்கு முன் கௌதம் எழுந்து நின்றான். “வா” என்று அவனும் மைத்ரேயனை
அழைத்தான். மைத்ரேயன் மெல்ல எழுந்தான்.
அக்ஷய் எச்சரிக்கையுடன் வருணிடம் கேட்டான். “இவர்களை எங்கே
கூட்டிக் கொண்டு போகிறாய்?”
“பயப்படாதீர்கள்.
தெருக்கோடியில் இருக்கிற ஐஸ்க்ரீம் பார்லருக்குத் தான். இந்தத் தெருவைத் தாண்ட
மாட்டோம்.” என்ற வருண் கௌதமையும்,
மைத்ரேயனையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
வாசலில் நின்று கொண்டு அக்ஷயுடன், சஹானாவும், மரகதமும் கூட அவர்களைப்
பார்த்தார்கள். இருவர் கைகளையும் பிடித்துக் கொண்டு அந்த ஈரத் தெருவில் வருண் நடந்து போவதைக் கண்டு மரகதம்
ஆச்சரியப்பட்டாள். “அந்தப் பையனிடம் நிஜமாகவே எதோ சக்தி இருக்கிறது. நம் வருணை
இப்படி மாற்றி விட்டானே”
சஹானா
சொன்னாள். “சொல்லப் போனால் பல நாள் கழித்து இன்று காலையில் இருந்து தான் வருண்
சந்தோஷமாகவே இருக்கிறான்.”
அக்ஷய்
எதுவும் சொல்லவில்லை. அன்று முழுவதும் வீடு சந்தோஷமாக இருந்தது. வருண்
மைத்ரேயனுக்கும் கௌதமுக்கும் பட்டங்கள் தயாரித்துக் கொடுத்தான். மொட்டை மாடியில்
மூவரும் பட்டம் விட்டார்கள். அவர்கள் போட்ட சத்தம் வீட்டையே அமர்க்களப்படுத்தியது.
இரவு
மைத்ரேயன் தனியாகக் கிடைக்கையில் அக்ஷய் அவனிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “என்
பிள்ளைகள் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களைப் பிரியும் போது நீ
எந்த சலனமும் இல்லாமல் விட்டுப் பிரிந்து விடுவாய். அவர்களால் அப்படி இருக்க
முடியாது.....”
மைத்ரேயன்
அமைதியாகக் கேட்டான். “என்றோ ஒரு நாள் சாகப்போகிறோம் என்பதற்காக இன்று வாழ்ந்து
விடாமல் இருந்து விடுகிறோமா என்ன?”
அக்ஷய்
பேச்சிழந்து போய் அவனையே பார்த்தான். இப்போதும் கூட அவன் எந்த சலனமும் இல்லாமல்
அவர்களை விட்டுப் பிரிந்து போய் விடுவான் என்பதை மறுக்கவில்லை.....
மாரா இரவு பத்தரை மணி நேரத்தில் சம்யே
மடாலயத்திற்குள் நுழைந்தான். அவனுக்காக காத்திருந்து கதவைத் திறந்து விட்ட அவன்
ஆட்கள் இருவரும் சத்தமில்லாமல் கதவை மறுபடியும் மூடினார்கள். அவர்கள் கைகளில்
இருந்த இரு விளக்குகளின் ஒளி மட்டுமே அந்த நுழைவாயிலின் உட்புறத்தின் இருளை ஓரளவு
போக்கியது. அந்த அரைகுறை ஒளியில் மாரா அழகாக மட்டுமல்லாமல்
ஆபத்தானவனாகவும் ஜொலித்தான். அவனிடம் இருந்து சக்தி வாய்ந்த அலைகளை உணர்ந்த அந்த
ஆட்கள் அவனை வணங்கி நின்றார்கள். உள்ளே நுழைந்த அவன் தாழ்ந்த குரலில் தன்
ஆட்களிடம் கேட்டான். “எல்லாம் தயார் தானே”
அவர்கள்
பயபக்தியுடன் தலையசைத்தார்கள். மாரா கோங்காங் மண்டபத்தை நோக்கி கம்பீரமாக நடக்க
அவனைப் பின் தொடர்ந்த அவர்களில் ஒருவன் மெல்லக் கேட்டான். ”இன்று உங்கள்
வருகையை இந்த மடாலயத்து புத்தபிக்குகள் உணராமல் இருக்க முடியாது போல் இருக்கிறதே.
பரவாயில்லையா?”
மாரா புன்னகையுடன் சொன்னான். “இன்று அவர்களின் கடவுளே என்னை
அறிந்து கொள்ளப் போகிறான். அதனால் இந்த பிக்குகளுக்குத் தெரிவது தப்பில்லை.
யாராவது என்னை சந்திக்க வருவதானாலும் வரட்டும். எனக்கு எந்த ஆட்சேபணையும்
இல்லை.....”
கோங்காங்
மண்டபத்திற்குள் நுழைந்தவுடன் கேட்டான். “எங்கே மைத்ரேயனின் காவி உடை?”
சம்யே மடாலயத்தின் தலைமை பிக்குவிடம் அவரது
பிரதான சீடன் ஓடி வந்தான். “புதிதாக ஒருவன் வந்திருக்கிறான்.... கோங்காங் மண்டபம்
நுழைந்திருக்கிறான்...... ஆபத்தானவனாய் தெரிகிறான்.....”
நேற்று
தாரா தேவதை சொன்னது நினைவுக்கு வர தலைமை பிக்கு மெல்ல எழுந்தார். இது வரை
மடாலயத்தில் மாறுவேடத்தில் இருந்தவர்கள் ஏதோ ரகசியப் பூஜைகள் செய்து
கொண்டிருந்தார்கள். இப்போது புதிதாயும் வேறு ஒருவன் வந்திருப்பதும், அவன்
ஆபத்தானவனாய் தெரிவதும் அலட்சியப்படுத்தும் விஷயமல்ல. கோங்காங் மண்டபத்தில் இன்று புதிதாய் என்ன நடக்கிறது
என்பதை அறிந்து கொள்வது முக்கியம் என்று நினைத்தவராய் கிளம்பினார். பின்னாலேயே
விளக்கோடு வர பிரதான சீடன் முற்பட அவனைப் பார்த்து விளக்கு வேண்டாம் என்று சைகை
செய்தார். இந்த மடாலயத்தில் அவரால் இருட்டிலும் நடக்க முடியும். எல்லாம் அவர்
பல்லாயிரம் முறை நடந்த தடங்களே! அவர் சத்தமில்லாமல் நடக்க பிரதான சீடனும் அப்படியே
அவரைப் பின் தொடர்ந்தான்.
கோங்காங்
மண்டபத்தைப் பார்க்க முடிந்த தொலைவில் இருட்டில் நின்று கொண்டு தலைமை பிக்கு
பார்த்தார். கருப்பு உடை அணிந்த ஒரு அழகான இளைஞன் மண்டபத்தின் மையத்தில் வஜ்ராசனத்தில்
அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு இருந்தான். அவன் பின்னால் இருவர் கருப்பாடைகள்
அணிந்து கொண்டு சற்று தள்ளி இருபுறமும் தலைகவிழ்த்து கண்மூடி நின்று
கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் புத்தபிக்குகள் வேடத்தில் சம்யே மடாலயத்தில்
இருப்பவர்கள் தான்....
திடீரென்று
அந்த இளைஞன் கண்களைத் திறந்து இருட்டில் நின்று கொண்டிருந்த அவரை நேராக
அமானுஷ்யமாகப் பார்த்தான். அவருக்கு ரத்தம் உறைவது போல் இருந்தது. இருட்டில்
இருந்த போதும் அவரைப் பார்க்க முடிந்த அவனது தீட்சண்யமான பார்வை அவரை அவன் பக்கம்
இழுப்பது போல் உணர்ந்தார். தன் சகல பலத்தையும் திரட்டிக் கொண்டு தலைமை பிக்கு பின்
வாங்கினார். இனி அங்கு நிற்பது ஆபத்து என்று அவர் உள்ளுணர்வு எச்சரித்தது. அந்த
நேரத்தில் தான் அந்த இளைஞனின் மடியில் மைத்ரேயன் உடுத்தி இருந்த காவி உடை இருந்ததை
அவர் கவனித்தார். அவர் மனம் பதறியது.
அதற்கு
மேல் அங்கு நிற்காமல் அவர் தன்னறைக்கு விரைந்தார். “இனி என்ன செய்வது?” என்று பிரதான சீடன் அவரைப்
பின் தொடர்ந்தபடியே கவலையுடன் கேட்டான். அவருக்கே தெரியாத ஒன்றை அவர் எப்படி
சொல்வார்?
சிறிது யோசித்து விட்டு அவர் சேடாங் நகர புத்தமடாலயத்தில்
இருக்கும் மூத்தவருக்குப் போன் செய்தார். மூத்தவர் அனுபவஸ்தர். மகா ஞானி. அவர்
ஏதாவது வழி சொல்வார்....
“ஹலோ” மூத்தவர் குரல்
கம்பீரமாகக் கேட்டது.
பதற்றத்துடன் தற்போது சம்யே மடாலயத்தில் நடப்பதை தலைமை பிக்கு விவரித்தார்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட மூத்தவர் சில வினாடிகள்
மௌனம் சாதித்து விட்டு “வந்திருப்பவன் மாரா....” என்று தாழ்ந்த
குரலில் சொன்னார். குரலில் முன்பு இருந்த கம்பீரம் இப்போது விடை பெற்றிருந்தது.
தலைமை பிக்கு தன் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தார்.
லேசாக குரல் நடுங்க நேற்றிரவு தாரா தேவதை சொன்னதையும் தெரிவித்து விட்டுக்
கேட்டார். “இப்போது நான் என்ன செய்யட்டும்?”
”பிரார்த்தனையைத்
தவிர நாம் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை. அதைச் செய்வோம்” என்று சொன்னதோடு
மூத்தவர் பேச்சை முடித்துக் கொண்டார்.
கவலையுடன்
தலைமை பிக்கு திரும்பிய போது சம்யே மடாலயத்து பிக்குகள் பலரும் கவலையுடன்
அவருக்குப் பின்னால் நின்றிருந்தனர். மாரா தன் வருகையை அவர்களுக்கும்
உணர்த்தி இருக்க வேண்டும்.... அவர்களிடம்
தலைமை பிக்கு சொன்னார். ”பிரார்த்திப்போம்”
அவர்கள்
தலையசைத்தார்கள். பிரார்த்தனையில் அமர்ந்த போது தலைமை பிக்கு உட்பட யாருக்கும்
மனம் ஒருமைப்படவில்லை. எல்லோர் மனதிலும் இனி என்ன நடக்கப் போகிறதோ என்ற பீதி தான்
பிரதானமாக இருந்தது.
(தொடரும்)
என்.கணேசன்