சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 29, 2016

உலகப் பழமொழிகள் – 11



101. உண்மை என்ற பாணத்தை விடும் முன் அதன் முனையைத் தேனில் தோய்த்துக் கொள்.


102. உன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாக நினைக்க வேண்டுமென்று நீ விரும்பினால் மௌனமாயிரு.


103. பூமி தழலாய் கொதித்தாலும் நாம் அதன் மீது தான் நடக்க வேண்டி இருக்கிறது.


104. அவமரியாதைகளையும் மாத்திரைகளையும் சுவைத்து ருசி பார்த்துக் கொண்டிருக்காமல் அப்படியே முழுங்கி விட வேண்டும்.


105. பிச்சைக்காரனுக்கு நீ எதுவும் போடாவிட்டாலும் பரவாயில்லை. அவன் பையைக் கிழிக்க வேண்டாம்.


106. மனிதர்கள் மலை தடுக்கி விழுவதில்லை. கல் தடுக்கியே விழுகிறார்கள்.


107. அதிசாமர்த்தியம் வேண்டாம். உன்னை விட அதிக சாமர்த்தியசாலிகள் சிறையில் இருக்கிறார்கள்.


108. தூக்க முடியாத கல்லை உருட்டு.


109. நல்லது போனால் தெரியும். கெட்டது வந்தால் தெரியும்.


110. அறிவின்மை கேவலம். அதை விடக் கேவலம் அறிய மனமில்லாமை.



-         தொகுப்பு: என்.கணேசன்



Thursday, February 25, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 87



சானிடம் பேசும் போதே அக்‌ஷய் ஆபத்தை உணர்ந்தான். காரணம் அலைபேசியில் அவன் காதில் மிக மெல்லியதாய் கேட்ட கூடுதல் ஒலி. கிட்டத்தட்ட காற்றின் மெல்லிய் ‘ஸ்..ஸ்...ஸ்’ இரைச்சலில் பத்தில் ஒரு மடங்காய் கேட்ட அந்த ஒலி மிக நுட்பமான காதுகளுக்கே எட்டக்கூடியது. அவனது முந்தைய அனுபவங்களில் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படும் போதெல்லாம் அந்தக் கூடுதல் ஒலி அவன் காதுகளுக்குக் கேட்டிருக்கிறது. அதனாலேயே அவன் ஆசானிடம் பேசும் போது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. மைத்ரேயன் பெயரைச் சொல்லாமல் பூஜைப் பொருள் என்றே குறிப்பிட்டான். சூட்சும புத்தி கொண்ட ஆசான் அதைப் புரிந்து கொண்டு அதே வழியில் பதில் பேசியது அவனுக்குப் பிடித்திருந்தது. ஒட்டுக் கேட்கும் அளவு உஷாராய் இருப்பவர்கள் அவர்கள் பேச்சைப் புரிந்து கொள்ளாமல் போய் விடப்போவதில்லை என்ற போதும் முழுமையாக உறுதிப்படுத்தி விடுவதும் இல்லை அல்லவா?

பேசி முடித்த பின் அந்த அலைபேசியில் இருந்து ‘சிம்’மை அகற்றி ஒரு மரத்தடியில் கையால் சின்னதாய் பள்ளம் செய்து அதில் போட்டு மறுபடி மண்ணால் மூடி, அருகில் பரவி இருந்த உலர்ந்த இலைகளை காலால் இழுத்து இங்கும் பரப்பி விட்ட அக்‌ஷய் தன் பையில் இருந்து வேறொரு ’சிம்’மை எடுத்து அலைபேசியில் பொருத்தினான்.

மைத்ரேயனை அழைத்துக் கொண்டு மரங்கள் உள்ள பகுதியிலேயே ஓரமாக நடந்தபடியே அலைபேசி மூலம் இன்னொரு எண்ணை அக்‌ஷய் அழைத்தான். அலைபேசி எடுக்கப்பட்டு சுமார் முப்பது வினாடிகள் வரை எந்த சத்தமும் எதிர்ப்புறத்தில் இருந்து இல்லை.

அக்‌ஷயாகப் பேசினான். “நேபாளம் வந்து சேர்ந்து விட்டோம்.....”

உடனடியாக எதிர்தரப்பு கேட்டது. “எங்கே?”. குரல் அவனுக்குப் பரிச்சயமான குரல். இந்திய உளவுத்துறை மைத்ரேயன் விவகாரத்தில் அக்‌ஷய்க்கு உதவி செய்ய ஏற்பாடு செய்திருந்த அதே மனிதனின் குரல் தான்.

அக்‌ஷய் அந்த இடத்தைச் சொன்னான்.

“இன்னும் இரண்டு மணி நேரத்தில் நம் ஆள் ஜீப் ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கே வந்து சேர்வான். அவன் வரும் போது உங்களுக்கு வேறெதாவது கொண்டு வர வேண்டுமா?”

“முதலில் நாங்கள் குளிக்க வேண்டும். நாங்கள் ஆட்டிடையர்கள் உடையில் இருக்கிறோம்.... எங்களுக்கு சாதாரண உடைகள் வேண்டும்.... முதலில் நாங்கள் புத்தகயாவுக்குப் போக வேண்டும்....”

அவன் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை..... அக்‌ஷய் மைத்ரேயனிடம் சொன்னான். “உன்னை பத்திரமாக திபெத்தில் இருந்து அழைத்துக் கொண்டு வந்தால் முதலில் புத்தகயாவுக்கு அழைத்து வருவதாக வேண்டி இருக்கிறேன்....”

மைத்ரேயன் தலையசைத்தான். அக்‌ஷய் தொடர்ந்து சொன்னான். “புத்த கயாவில் இருந்து என் வீட்டுக்கே போகப் போகிறோம்....”

மைத்ரேயன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். அக்‌ஷய்க்கு அவன் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது. “நான் உங்கள் வீட்டுக்கே வருகிறேனே.... எனக்கு எந்த மடாலயமும் வேண்டாம்.....” .

எல்லாம் அவன் நினைக்கிறபடியே நடக்கிறது. இனி என்ன நினைத்து வைத்திருக்கிறானோ!


சேகரைச் சந்தித்து வந்ததில் இருந்து வருண் தனதறையில் தான் அதிகம் இருக்கிறான். யாரிடமும் பேசுவதைத் தவிர்த்தான். யாராவது அவனிடம் பேசினால் அவர்களிடம் எரிந்து விழுந்தான். அவனைப் புரிந்து கொள்ள வீட்டில் யாருக்கும் முடியவில்லை.

ஆரம்பத்தில் எதிர் வீட்டுப் பெண்ணிடம் சண்டை போட்டு விட்டு மனநிலை சரியில்லாமல் இருக்கிறான் என்று சஹானா நினைத்தாள். ஆனால் ஒரு இரவு நேரத்தில் பேயைப் பார்த்தது போல அவன் ஓடி வந்து வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திய போது ப்ரச்னை வேறு ஏதோ என்பதை உணர்ந்தாள்.

“என்னடா? யாரைப் பார்த்து இப்படி ஓடி வருகிறாய்?” என்று மகனைக் கேட்டாள்.

சந்தோஷமாக வாழ்ந்து வரும் அம்மாவிடம் அவன் கண்டிப்பாக அதைச் சொல்லி விடக்கூடாது என்பதை மட்டுமே எல்லாவற்றிலும் அதிமுக்கியமாக அவன் அந்தக் கணம் நினைத்தான். சேகர் என்ற அந்த மனிதனுடன் வாழ்ந்த போது அம்மா எப்படி இருந்தாள் என்பது இப்போதும் நன்றாக அவனுக்கு நினைவிருக்கிறது. அவளை இனி ஒரு கணமும் அப்படி அவன் பார்க்க விரும்பவில்லை.

“ஒரு தெரு நாய்.....” என்று மட்டுமே சொல்லி விட்டுத் தன் அறைக்குள் அடைக்கலம் புகுந்த வருண் அன்றிரவு உறங்கவில்லை. இதை எப்படி இனி சமாளிப்பது என்று பல விதங்களிலும் யோசித்தான். நடந்ததை எல்லாம் சிந்தித்துப் பார்த்த போது அந்தத் ‘தெரு நாய்’ வந்தனா வீட்டு மாடியில் தான் குடியிருக்க வேண்டும் என்பதை அவனால் யூகிக்க முடிந்தது. வந்தனாவிடம் அந்த நாய் தான் அந்தப் புகைப்படத்தைத் தந்திருக்க வேண்டும்...

முடிந்து போனதாகவே இருந்த போது கூட அவனால் அந்த மனிதனை தகப்பன் ஸ்தானத்தில் நிறுத்த முடியவில்லை. அக்‌ஷயை அப்பா என்று அழைக்க ஆரம்பித்த பின் அவன் மனதில் இருந்து அந்த ஆள் பலவந்தமாய் அழிக்கப்பட்டு விட்டான். முந்தைய தந்தையாகக் கூட அவனால் அந்த ஆளை நினைக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் இப்போது திரும்பி உயிரோடு வந்து உரிமை கொண்டாடுவதை அவன் எப்படி ஏற்க முடியும்?

மறு நாள் மாலை அவன் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய போது ’ஒரு மாமா இந்தக் கடிதத்தை உங்களிடம் தரச் சொன்னார்’ என்று சொல்லி ஒரு சிறுவன் கொடுத்து விட்டுப் போனான். அறைக்குள் வந்து பிரித்துப் படித்தான்.

“என்னிடம் இன்று நிறைய பணம், நிலங்கள், வசதி எல்லாம் இருக்கிறது. இல்லாமல் இருப்பது உறவு மட்டும் தான். உரிமையோடு வீட்டுக்கு வந்து உன்னை அழைக்க முடியாத சூழ்நிலை என்றாலும் உலகில் எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதால் கடைசியாக ஒரு முறை உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடன் வருகிறாயா? வந்தால் ஒரு ராஜகுமாரனைப் போல் உன்னை நான் பார்த்துக் கொள்வேன்.... நீ காதலிக்கும் வந்தனாவை உனக்குத் திருமணம் செய்து வைப்பேன்.... என் மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என்று இனி வாழ ஆசைப்படுகிறேன்.

நீ என்னுடன் வருவதாக இருந்தால் நாளை காலை ஏழு மணிக்கு விமான நிலையத்துக்கு வா. வரவில்லை என்றால் எனக்கு விதித்தது இவ்வளவு தான் என்று போய் விடுவேன். இனி எந்தக் காரணம் கொண்டும் உன்னை வந்து தொந்தரவு செய்ய மாட்டேன்.....”

கடிதத்தில் கையெழுத்து கூட இல்லை. வருண் மறு நாள் நான்கு மணியில் இருந்தே எதிர்வீட்டை ரகசியமாய் கண்காணித்தான். காலை ஆறு மணிக்கு எதிர்வீட்டு முன் கால் டாக்சி வந்து நின்றது. கையில் ஒரு சூட்கேஸோடு வெளியே வந்த சேகர் ஒரு கணம் எதிர் வீட்டைப் பார்த்தான். வருணின் இதயத்துடிப்பு அந்தக் கணம் நின்று போனது. சேகர் கால் டாக்சியில் ஏறினான். கால் டாக்சி போன பிறகு கூட சிறிது நேரம் ஜன்னல் அருகே நின்று கொண்டே இருந்தான். போன கார் திரும்பி வந்து விடுமோ என்ற பயம். நல்ல வேளையாக அப்படி அது திரும்பி வரவில்லை. இரவு எதிர் வீட்டைக் கண்காணித்தான். கீழே வந்தனா வீட்டில் தான் நடமாட்டம் தெரிந்ததே ஒழிய மாடியில் இல்லை. ஆனாலும் கூட அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எல்லாரிடமும் சகஜமாய் பழக முடியவில்லை.....

திடீர் என்று பாட்டி ஓட்டமும் நடையுமாய் அவன் அறைக்குள் நுழைந்தாள். “வருண் உன் அப்பா கிட்ட இருந்து தகவல் வந்திருக்குடா”. அவளுக்கு  மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

வருணின் குழப்பமான மனநிலை சேகரிடமிருந்து தகவல் வந்திருப்பதாக அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டது. எழுந்து நின்று மரகதத்தின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கடுமையாகச் சொன்னான். “அந்த ஆளை என் அப்பா என்று சொல்லாதீர்கள் என்று எத்தனை தடவை சொல்வது.....”

மரகதம் திகைத்துப் போனாள். “டேய். அக்‌ஷயை சொன்னேன்....”

அவன் கைகளின் இறுக்கம் தானாகத் தளர்ந்தது. மரகதம் சொன்னாள். “அவன் இந்தியா வந்து விட்டானாம். நாளை வீட்டுக்கு வரப் போகிறான்.....”

பாட்டியின் கைகளை வருண் கண்களில் ஒத்திக் கொண்டான். அவன் கண்கள் ஆனந்தமாய் கலங்கின.



புத்தகயா மண்ணில் மைத்ரேயனுடன் சேர்ந்து கால் வைத்தது முதல் மனம் லேசானது போல் அக்‌ஷய் உணர்ந்தான். மைத்ரேயன் புத்தரின் அவதாரம் என்பதாலோ? மைத்ரேயன் உணர்வுகள் எப்படி இருக்கின்றன என்று அறிய அவனைக் கூர்ந்து பார்த்தான்.

மைத்ரேயன் ஏதோ நினைவுகளில் ஆழ்ந்திருந்ததாகத் தோன்றியது. மகாபோதி ஆலயத்தில் கூட்டம் அதிகம் இருந்தது. அக்‌ஷய் மைத்ரேயன் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். உள்ளே அவனுடன் நடக்கும் போதும் மனம் மிதப்பதைப் போல அக்‌ஷய் உணர்ந்தான்...

மகாபோதி மரத்தருகே வந்த போது காலம் அறுபட்டது. சுற்றிலும் இருந்த ஆட்கள் மறைந்தார்கள். அந்த மரத்தைத் தவிர எல்லாமே மறைந்தன. உற்றுப் பார்த்தால் முன்னால் தெரிந்த போதி மரம் கூட மாறித் தெரிந்தது. அந்த மரத்தின் கிளைகளினூடே சூரியனின் பிரகாசம் தங்கமென மின்னியது. இயற்கை அந்தக் கணத்தைக் கொண்டாடியது போல் எல்லாமே பேரழகாய் மாறின. திடீரென மைத்ரேயன் அந்த மரத்திற்குக் கீழே தனியாகத் தெரிந்தான். அடுத்த சில கணங்கள் எல்லாமே வெறுமையாயின. நிகழ்காலக் காட்சியும் இல்லை. கனவுக் காட்சி போல தெரிந்த அந்தக் காட்சியும் இல்லை. ஏதோ மாயத்திரையைப் போட்டு யாரோ மறைத்தது போல் இருந்தது. திடீரென்று திரை விலகியது போல் நிகழ்காலத்தில் இருந்தான். பிரமிப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தான். நின்ற இடத்திலேயே தான் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். சுற்றி இருந்த யாரும் எந்த வித்தியாசமும் பார்த்திராதது போல தான் இருந்தது. இன்னும் மைத்ரேயன் கை அவன் கைப்பிடிக்குள் தான் இருந்தது. எதுவுமே அங்கே ஆகி இராதது போலத் தான் இருந்தது. காலமும் ஓரிரு வினாடிகளைத் தாண்டி இருக்க வழியில்லை. ஆனால்.... ஆனால்....

(தொடரும்)

என்.கணேசன்

Monday, February 22, 2016

காலமாகிய பின்னும் கலெக்டரிடம் பேசிய யோகி!


மகாசக்தி மனிதர்கள்-51.


தென்னிந்திய யாத்திரையை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தொடர்ந்த போது வழியில் ஆடு மேய்க்கும் இளைஞன் ஒருவன் அவரால் ஈர்க்கப்பட்டு வணங்கினான். வெங்கண்ணா என்ற பெயருடைய அவனை ஆசிர்வதித்த சுவாமிகள் எப்போதாவது பெரும் துன்பம் வரும் காலத்தில் அவரை நினைத்துக் கொள்ளச் சொல்லி விட்டுச் சென்றார்.

சில காலம் கழித்து அந்தப் பகுதியில் ஆதோனி பகுதியை ஆண்டு வந்த நவாப் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய தூதன் பக்கத்து தேச ராஜா உள்ளூர் மொழியில் எழுதிய கடிதத்தைக் கொண்டு வந்து தந்தான். நவாபிற்குப் பாரசீக மொழி தான் தெரியுமே ஒழிய உள்ளூர் மொழி தெரியாது. தூதனும் அரபு நாட்டவன் தான். அதனால் அவனுக்கும் உள்ளூர் மொழி தெரியாது. அந்த கடிதத்தை அரசவைக்குப் போய் படித்துக் கொள்ளும் அவகாசம் இல்லாததால் நவாப் அதை அப்போதே படித்துத் தெரிந்து கொள்ள அவசரப்பட்டார். அப்போது அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த வெங்கண்ணா அவர் கண்ணில் பட்டான்.

அவனை அழைத்து அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்ட நவாப் ஆணை இட்டார். வெங்கண்ணா தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று சொன்னான். மொழி தெரியாததால் அவன் சொன்னதன் பொருளைப் புரிந்து கொள்ளாத நவாப் அவன் தன் ஆணைக்குக் கட்டுப்பட மறுப்பதாக எண்ணி அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டா விட்டால் கடும் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று மிரட்டினார். கலங்கிப் போன வெங்கண்ணாவுக்கு அப்போது ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் சொல்லி விட்டுப் போனது நினைவுக்கு வந்தது. அவரை மனதில் எண்ணி வணங்கினான். உடனடியாக அவனால் அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டவும் பொருள் கூறவும் முடிந்தது.

வெங்கண்ணா படித்துக் காட்டிய தகவல் நவாபுக்கு அனுகூலமானதாக இருந்ததால் அவனை உடனடியாக ஆதோனியின் திவானாக நவாப் நியமித்தார். கல்வியறிவே இல்லாமல் இருந்த அந்த ஆட்டிடையன் கல்வியறிவை ஒரு கணத்தில் பெற்றதுடன் திவானாகவும் ஆக முடிந்தது ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அருளால் தான் என்று உணர்ந்து அவருடைய பரம பக்தனாக மாறினான்.

ஆண்டுகள் பல கழிந்தன. மறுபடி ஆதோனி பகுதிக்கு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் வரவே வெங்கண்ணா நவாபிடம் சுவாமிகளின் மகாசக்தி தன் விஷயத்தில் எப்படி செயல்பட்டது என்று கூறி அவர் இந்தப்பகுதிக்குத் தற்போது வந்திருக்கிறார் என்பதைத் தெரிவித்தான்.

வெங்கண்ணா சொன்னதை நவாபால் நம்ப முடியவில்லை. அந்த மகானைச் சோதிக்க எண்ணினார். ஒரு வெள்ளித்தட்டில் மாமிசங்களை வைத்து அதைப் பட்டுத் துணியால் மூடி எடுத்துக் கொண்டு போய் அவர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளைச் சந்தித்தார். அந்தத் தட்டினைப் பழங்கள் என்று சொல்லி சுவாமிகளிடம் தந்தார். அந்த பட்டுத்துணி மேல் தன் கமண்டலத் தீர்த்தத்தைத் தெளித்து விட்டு சுவாமிகள் அந்தப்பட்டுத் துணியை விலக்கிய போது அந்த வெள்ளித் தட்டில் பலவிதமான கனிகள் இருந்தன.

நவாப் திகைத்துப் போனார். ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஒரு மகானே என்பதை உணர்ந்து கொண்ட அவர் சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக ஏதாவது தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். ”பொன்னோ, பொருளோ, நிலமோ எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று நவாப் சொல்ல சுவாமிகள் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள மன்சாலி என்ற கிராமத்தைக் கேட்டார். அது ஒரு வறட்சியான கிராமம். அதை ஒரு ஹாஜியாரிடம் ஏற்கெனவே தானமாக நவாப் தந்திருந்தார். எனவே வேறு செழிப்பான இடத்தைக் கேட்குமாறு நவாப் கூறினார்.

ஆனால் அந்த மன்சாலி கிராமப்பகுதி துவாபர யுகத்தில் ஸ்ரீராமனை வணங்கி பிரகலாதன் யாகம் செய்த இடமாக அறிந்திருந்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், தருவதானால் அந்தக் கிராமத்தையே தரும்படி சொன்னார். ஹாஜியாருக்கு மன்சாலி கிராமத்திற்குப் பதிலாக வேறு ஒரு கிராமத்தைத் தந்து விட்டு நவாப் மன்சாலி பகுதியை சுவாமிகளுக்குத் தானமாகத் தந்தார். அங்கு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மடம் அமைத்துத் தங்கினார். அதுவே இன்று மந்திராலயம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

1671 ஆம் ஆண்டு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவசமாதி அடையத் தீர்மானிக்கிறார். அவர் சீடர்களில் முக்கியமானவரான அப்பண்ண ஆச்சாரியர் சுவாமிகள் மீது பேரன்பும் பெரும் பக்தியும் வைத்திருந்தவர். அவர் இருக்கையில் ஜீவ சமாதி அடைய விட மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டு சுவாமிகள் அவருக்குத் துங்கபத்திரை நதியைக் கடந்த ஒரு இடத்தில் ஒரு வேலையைத் தந்து அனுப்பி விடுகிறார்.

பின் பிரணவ மந்திரத்தை உச்சரித்து கையில் ஜபமாலையை உருட்டியபடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு கடைசியில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் சமாதி நிலையை அடைகிறார். அவர் தியானத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே அவரைச் சுற்றி சமாதி எழுப்பி வந்த அவருடைய சீடர்கள் கடைசியில் அவர் கையிலிருந்து ஜபமாலை நழுவிக் கீழே விழுந்தவுடன் கடைசி கல்லையும் வைத்து சமாதியை மூடுகிறார்கள்.

அப்பண்ண ஆச்சாரியருக்கு ஜீவசமாதி நடக்கும் விஷயம் துங்கபத்திரையின் மறு கரையில் இருக்கும் போது தெரிய வருகிறது. உடனே ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளைப் போற்றி சம்ஸ்கிருதத்தில் “ஸ்ரீ பூர்ண போதா...” என்று துவங்கும் 32 சுலோகங்கள் கொண்ட ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரம் இயற்றிக் கொண்டே கிளம்புகிறார். துங்கபத்திரையில் வெள்ளம் ஏற்பட்டு அவர் அதைக் கடந்து வர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் அவர் ஸ்தோத்திரம் சொல்லச் சொல்ல துங்கபத்திரையில் வெள்ளம் வடிந்து அவர் வர வழி ஏற்பட்டது என்று கூறுகிறார்கள். எப்படியோ 32வது சுலோகத்தின் நிறைவுக்குக் கடைசி ஏழு எழுத்துக்கள் இருக்கையில் அவர் வந்து சேர்கிறார். அந்த நேரத்தில் ஜீவசமாதியின் கடைசி கல்லும் வைக்கப்பட்டு விடுகிறது.

பெரும் துக்கத்தில் ஆழ்ந்து போன அப்பண்ண ஆச்சரியரால் அந்தக் கடைசி ஏழு எழுத்துக்களைக் கூற முடியவில்லை. அந்தச் சுலோகத்தை நிறைவு செய்ய வேண்டிய கடைசி எழுத்துக்கள் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் ஜீவ சமாதியில் இருந்து சுவாமிகளின் குரலில் தெளிவாக வந்தன. ”ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி” என்ற அந்த கடைசி சொற்கள் சுவாமிகளின் அன்பின் அடையாளமாகவும் ஆசிர்வாதமாகவும் எண்ணி அப்பண்ண ஆச்சாரியர் மனம் நெகிழ்ந்தார். இன்றும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரம் மிகவும் பவித்திரமானதாகவும், தங்கள் துயர் தீர்க்கும் சக்தி வாய்ந்ததாகவும் அவருடைய பக்தர்கள் நம்புகிறார்கள்.

ஜீவசமாதி அடைந்த பின்னரும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இன்றும் அவரைப் பூஜிக்கும் பக்தர்கள் தங்கள் வாழ்வில் அற்புதங்களை உணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் 1800 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சி ஆவணமாக்கப்பட்டு இருக்கிறது என்பதால் அதை மட்டும் பார்ப்போம்.

அப்போது சர் தாமஸ் மன்ரோ பெல்லாரி மாவட்டத்தின் கலெக்டராக இருந்தார். மெட்ராஸைத் தலைமையகமாக்க் கொண்டு இயங்கி வந்த அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் மந்திராலயத்தில் இருந்து வர வேண்டிய வரிகள் சரியாக வசூலிக்கப்படுவதில்லை என்று தெரிவித்து அது குறித்து விசாரிக்க சர் தாமஸ் மன்ரோவையே அனுப்பியது. சர் தாமஸ் மன்ரோ நேரடியாக மந்திராலயம் சென்றார். அப்போது ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் ஜீவசமாதியிலிருந்து வெளி வந்து சர் தாமஸ் மன்ரோவிடம் உரையாடினார் என்று கூறுகிறார்கள். ஆங்கிலம் மட்டுமே அறிந்த சர் தாமஸ் மன்ரோவுக்கு மட்டுமே சுவாமிகள் தெரிந்திருக்கிறார். அவருக்கு மட்டுமே சுவாமிகளின் குரல் கேட்டிருக்கிறது. அவருக்கு சுவாமிகளின் மந்த்ராட்சதம் என்ற குங்குமம் கலந்த அரிசியும் கிடைத்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அங்கிருந்து திரும்பிய சர் தாமஸ் மன்ரோ மந்திராலயத்தில் இருந்து வரி வசூல் செய்வதற்கு விலக்கு தெரிவித்து பிறப்பித்த ஆணை ’மன்சாலி ஆதோனி தாலுகா’ என்ற தலைப்பில் (Madras Government Gazette in Chapter XI and page 213) இன்றும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் மந்திராலயத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வரி வசூலித்தே ஆக வேண்டும் என்கிற உறுதியோடு மந்திராலயம் நுழைந்த அந்தக் கலெக்டர் மனம் மாறி அந்த மடத்திற்கு வரி வசூலில் இருந்து விலக்கு அளித்தது ஒரு அற்புதமே அல்லவா? சர் தாமஸ் மன்ரோ பின்னர் மெட்ராஸ் கவர்னராகவும் உயர்ந்தவர். அதற்கும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் அருளே காரணமாக இருந்திருக்குமோ?


அடுத்த வாரம் இன்னொரு மகாசக்தி மனிதரைப் பார்ப்போம்.

(தொடரும்)

என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 7.8.2015

Thursday, February 18, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 86


சீன உளவுத்துறையில் லீ க்யாங் உபதலைவனாக இருக்கும் போது அவர்களது ரகசியக் கோப்பு ஒன்று திருட்டுத்தனமாகப் பார்வையிடப்பட்டிருக்கிறது என்பதும், அதைப் பார்வை இட்டவர்கள் தகவல்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் சகிக்க முடியாத அவமானமாகவே அவனுக்குத் தோன்றியது. தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்ட லீ க்யாங் அந்த கோப்பின் வரலாறைத் தனக்கு அனுப்பி வைக்கச் சொன்னான்.

உளவுத்துறையில் ஒரு அதிரகசியமான கோப்பு உருவாக்கப்பட்ட பின் அதைப் பார்வையிடும் ஒவ்வொரு நபரின் தகவலும் தானாக அந்தக் கோப்போடு சேர்ந்து விடும். மிக மேல்மட்ட அதிகாரிகளே தங்கள் பணியாளர் எண்ணும், ரகசியக் கடவுச்சொல்லையும் போட்டு அந்தக் கோப்பைத் திறந்து படிக்க முடியும். அப்படிப் படிக்கும் போதே அது பற்றிய குறிப்பு  அந்தக் கோப்போடு சேர்ந்து பதிவாகி விடும். இந்த ஆள் இந்த தேதியில் இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை இந்தக் கோப்பைப் படித்துக் கொண்டிருந்தார் என்பது பின் எப்போது அதன் வரலாற்றைப் பார்த்தாலும் தெரிந்து விடும். யாருமே அதை அழிக்க முடியாது. அந்த அளவுக்கு மிக உயர்ந்த தொழில் நுட்பத்துடன் உருவாக்கி இருந்தார்கள். அதை யாரோ ஊடுருவி இருக்கிறார்கள். தடயத்தை அழித்தும் இருக்கிறார்கள். அதன் மூலம் சீன உளவுத் துறையையே பரிகசித்திருக்கிறார்கள். 

கண்களை மூடி சிறிது நேரம் யோசித்து முடித்த லீ க்யாங் ஒரு எண்ணுக்குப் போன் செய்தான். “உன்னிடம் பேச வேண்டும். உடனே வா

“இப்போது நான் வெளியே போய்க் கொண்டிருக்கிறேன். நாளை வந்தால் பரவாயில்லையா?

“நாளை வெளியே போய்க் கொள். இப்போது இங்கே வா.

லீ க்யாங் இணைப்பைத் துண்டித்தான். அப்போது அமானுஷ்யனின் கோப்பும், அந்தக் கோப்பின் வரலாறும் அவனுக்கு ஃபேக்ஸில் வந்து சேர்ந்தன.

அந்தக் கோப்பின் வரலாற்றுப் பக்கத்தைத் தள்ளி வைத்து விட்டு அமானுஷ்யனை லீ க்யாங் படிக்க ஆரம்பித்தான். படிக்கும் போது அவன் தன்னை மறந்து போனான். முடிக்கும் போது இப்படியும் ஒரு மனிதனா என்று அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. என் தேசத்தில் இவன் பிறக்காமல் போனானே என்று மனதிற்குள் அங்கலாய்க்காமல் இருக்க அவனால் முடியவில்லை. தலிபான் தீவிரவாதிகளைத் தனியொருவனாக அவன் சமாளித்த விதம் அவனை பிரமிக்கவே வைத்தது. மைத்ரேயனுக்கு இவனை விட மேலான ஒரு பாதுகாவலன் கிடைக்க முடியாது என்றே அவனுக்குத் தோன்றியது.

லீ க்யாங் தீவிரவாதிகளை தன் முதல் எதிரிகள் பட்டியலிலேயே தான் வைத்திருந்தான். அழிக்க மட்டுமே முடிந்த கோழைகளை அவனால் எப்போதுமே ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. அவர்கள் தங்களையே மாய்த்துக் கொள்ளத் துணிவதைக் கூட அவனால் வீரமாகக் கருத முடியவில்லை. சாவது வீரமல்ல. வாழ்வது தான் வீரம். யாரையும் அழிப்பது சாக்சம் அல்ல. நல்லதாக எதையாவது உருவாக்குவதும் பாதுகாப்பதும் தான் சாகசம். இது அவனது ஆணித்தரமான கருத்து. அதனாலேயே தீவிரவாதிகளை எந்த நாட்டுக்கு எதிராகவும் ஊக்குவிப்பதை அவன் ஆதரித்ததில்லை. அந்த நாட்டை முடித்து விட்டு இந்த நாட்டுக்கும் அந்தத் தீவிரவாதிகள் வரத்தான் செய்வார்கள் என்பது நிச்சயம் என்று அவன் நினைத்தான்..... அந்த அழிக்கும் சக்தியால் எதையும் அழிக்காமல் சும்மா இருக்கவே முடியாது..... வேறெதற்காவது கோபப்படும்... வீறுகொண்டு எழும்.... காரணம் நியாயமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை....

அவன் அறையில் ஒரு வித்தியாச தோற்றம் கொண்ட இளைஞன் எட்டிப் பார்த்தான். தலை முடியில் நான்கைந்து சாயங்களைப் பூசி இருந்தான். குறுந்தாடி வைத்திருந்தான். வெளிறி சற்று கிழிந்து போன நீல நிற ஜீன்ஸையும் “நான் வாழப் பிறந்தவன்என்ற வாசகம் பதித்த ஒரு பனியனையும் அவன் அணிந்திருந்தான். நவீன நாகரிகத்தின் பல மாறுதல்களை லீ க்யாங் அவனைப் பார்த்தே அறிந்திருக்கிறான். ஆனால் அவனிடம் மாறாத ஒன்று அவன் கணினி, இணையம் இரண்டின் பயன்பாட்டிலும் கொண்டிருந்த மேதைமை. அதில் ஏதாவது யாராவது கண்டுபிடித்தார்கள் என்றால் உடனடியாக அவன் கவனத்திற்கு வராமல் போகாது. அதை ஆழமாகப் படித்து முழுமையாகப் பயன்படுத்திப் பார்க்காமல் அவன் ஓய மாட்டான்.

மற்ற நேரங்களில் கேளிக்கைகளிலும், விதவிதமான பைக்குகளை வேகமாக ஓட்டுவதிலும் கழிக்கும் அவன் லீ க்யாங்கின் கவனத்திற்கு வந்த பின் அவனிடம் உளவுத்துறைக்கே தெரிவிக்காத சில ரகசியப் பணிகளை லீ க்யாங் ஒப்படைத்து வந்தான். அந்தப் பணிகளை அவன் மிகக் கச்சிதமாக முடித்தும் தந்தான். எல்லாவற்றிற்கும் மேலாக ரகசியத்தைக் காப்பதில் லீ க்யாங்குக்கே திருப்தி ஏற்படுத்தினான். பல முறை பல விதங்களில் பரிசோதித்து விட்டுத் தான் அவனை லீ க்யாங் பயன்படுத்த ஆரம்பித்தான். அவன் செய்து கொடுத்த வேலைகளுக்கு லீ க்யாங் தாராளமாக பணமும் தந்து வந்தான்.

அந்த இளைஞனின் நடை உடை பாவனை எல்லாமே அவன் அறிவுக்குச் சம்பந்தமில்லாமல் கோமாளித்தனமாக இருந்ததால் அவனை லீ க்யாங் கோமாளி என்றே அழைத்தான். அந்தப் பட்டப்பெயர் அவனை பாதித்ததில்லை. அதை விட மோசமான பட்டப்பெயர்களில் சிலர் அழைத்திருக்கிறார்கள். எதையும் லட்சியம் செய்யாத நவநாகரிக இளைஞனாக அவன் இருந்தான்.

“வா கோமாளிஎன்று லீ க்யாங் உள்ளே அழைத்தான்.

“உங்களால் என்னுடைய முக்கிய வேலை ஒன்றை முடிக்க முடியாமல் போய் விட்டதுஎன்று சொன்னபடியே வந்து எதிரே அமர்ந்தான்.  லீ க்யாங்கைப் பார்த்து பயக்காத வெகுசிலரில் அவன் ஒருவன்.

“நாட்டை விட வேறெதுவும் அவ்வளவு முக்கியமில்லை. உன்னைப் போன்ற இளைஞர்கள் கேளிக்கைகளில் காட்டும் ஈடுபாட்டில் கால் பாகத்தைத் தேசத்தின் மீது காண்பித்தால் நம் நாடு இன்னும் எவ்வளவோ உய்ர்ந்திருக்கும்....

“என் அப்பா மாதிரியே பேசுகிறீர்கள். அவர் வீடு என்கிறார். நீங்கள் நாடு என்கிறீர்கள். அது தான் வித்தியாசம். சரி எதற்காகக் கூப்பிட்டீர்கள். அதைச் சொல்லுங்கள்

லீ க்யாங் சொன்னான். அந்தக் கோப்பின் வரலாற்றுப் பக்கங்களையும் தந்தான். கோமாளி மேலோட்டமாகப் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்து கடைசி பக்கத்தில் கடைசி பதிவை மட்டும் கவனமாகப் பார்த்தான். நான்கு நாட்களுக்கு முந்தைய தேதி மட்டுமே இருந்ததே தவிர யார் அதைத் திறந்து பார்த்தார்கள் என்ற தகவலோ எந்த நேரத்தில் இருந்து எந்த நேரம் வரை பார்த்தார்கள் என்ற தகவலோ இல்லை.

லீ க்யாங் சொன்னான். “கம்ப்யூட்டரில் பார்த்தால் கூடுதல் தெளிவு உனக்கு கிடைக்கும் என்றால் அதற்கும் ஏற்பாடு செய்கிறேன்

கோமாளி யோசிக்காமல் சொன்னான். “தேவையில்லை. உங்களுக்கு என்னால் என்ன ஆக வேண்டும் என்று சொல்லுங்கள்.

எனக்கு இதைத் திறந்து பார்த்தது எங்கள் ஆட்கள் தானா இல்லை வெளியாளா என்பது தெரிய வேண்டும். அடுத்ததாக யார் இதைச் செய்தார்கள் என்று கண்டுபிடிப்பதெப்படி என்று தெரிய வேண்டும். சென்ற வருடம் தான் எங்கள் பாதுகாப்பு முறையை புதிய தொழில் நுட்பத்தை வைத்துப் புதுப்பித்தோம்.....

விஞ்ஞான வளர்ச்சியில் போன வாரம் என்பதே பழையது தான்.... ஆனால் இதை வெளியாள் திறந்து பார்க்க முடிகிற அளவில் நாம் பலவீனமாக இல்லை. இதைத் திறந்து பார்க்கும் அதிகாரமுள்ள உங்கள் உளவுத்துறை ஆள் யாரோ தான் இதைத் திறந்து பார்த்திருக்கிறார். ஆனால் அதை அவர் பார்த்தது தெரிய வேண்டாம் என்று நினைத்து அழித்திருக்கிறார். அதற்கு அவருக்கு யாராவது நிபுணர்கள் உதவி இருக்கலாம். வந்த சுவட்டை அழித்து விடுவது இப்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியில் கஷ்டமானதல்ல்.....
  
வெளியாள்தங்கள் இரகசியக்கோப்பை திறந்திருக்க முடியாது என்பது ஒரு பக்கத்தில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தாலும், அதிகாரம் இருந்து உபயோகித்த நபர் அந்த விஷயம் வெளியே தெரிய வேண்டாம் என்று நினைத்து அதை அழித்திருப்பது இன்னொரு பக்கத்தில் பேராபத்தை லீ க்யாங்குக்கு உணர்த்தியது. கிடைத்த தகவலைத் தவறாகப் பயன்படுத்துகிறவன் மட்டுமே அதை மறைக்க முயற்சிக்க முடியும்.....

“அந்த ஆள் யார் என்று தெரிந்து கொள்ள என்ன வழி?

“இப்போதைக்கு வழி இல்லை. எதிர்காலத்தில் அப்படி அந்த ஆள் இன்னொரு விஷயத்தில் முயற்சி செய்தால் வேண்டுமானால் கையும் களவுமாகப் பிடிக்கலாம்.

“எப்படி?

“யாராவது அப்படி தகவல்களை அழிக்க முயன்றால் அது வெற்றிகரமாக முடிந்தாலும், உடனேயே அந்தப் பயனாளி குறித்த தகவல் உங்களுக்கும், உங்கள் தலைவருக்கும் வந்து சேரும்படி புதிய “ப்ரோகிராமைரகசியமாய் இணைக்கலாம்.....

“அப்படி ஒரு “ப்ரோகிராமைஉருவாக்க உனக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?

“வெளிப்பார்வைக்கு எந்த மாறுதலும் தெரியாதபடி இணைக்கிற ப்ரோகிராமை உருவாக்க எனக்கு குறைந்த பட்சம் 15 நாள் வேண்டும்

“இன்றே அந்த வேலையை ஆரம்பி


சான் சர்வ ஜாக்கிரதையாக ஹலோ சொன்னார். அந்த எண் அவருக்குத் தெரிந்த எண் அல்ல.

அக்‌ஷய் ஒரு கணம் தாமதித்து விட்டுச் சொன்னான். “ஐயா தாங்கள் கேட்ட பூஜைப் பொருளைக் கொண்டு வந்திருக்கிறேன்....

ஆசான் அவன் குரலை அறிவார். ஆனால் அவன் மிக ஜாக்கிரதையாக அந்தத் தகவலை சங்கேத மொழியில் சொல்லக் காரணம் அவன் பக்கம் இருந்த சூழ்நிலையா, அவர் பக்கம் அவன் சந்தேகிக்கும் சூழ்நிலையா என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.

“மகிழ்ச்சி அன்பரேஅவர் மனம் உண்மையாகவே நிறைந்து போயிருந்தது.

“தங்களிடம் எப்படிச் சேர்ப்பது?

அவரை ஆட்கள் வெளியே கண்காணிப்பதை இரண்டு நாளாக அவர் அறிவார். எச்சரிக்கையுடன் சொன்னார். “தாங்களே தங்களிடம் வைத்திருங்கள் அன்பரே., நானே நேரில் வந்து பெற்றுக் கொள்கிறேன்

அவன் மறுபடி சற்று தாமதித்து விட்டு “சரி ஐயாஎன்றான். இணைப்பு துண்டிக்கப்பட்டது.


லீ க்யாங்குக்கு இந்தப் பேச்சின் நகல் உடனடியாகப் போய் சேர்ந்தது. அமானுஷ்யனின் சரித்திரத்தைப் படித்திருந்த அவனுக்கு அவன் மைத்ரேயனைக் கொண்டு போய் சேர்த்தது இப்போது பிரமிப்பை ஏற்படுத்தவில்லை. யாரும் யோசித்துப் பார்க்காத ஏதோ ஒன்றை அவன் செய்திருக்க வெண்டும்.... அவன் அதை எப்படி சாதித்திருப்பான் என்கிற தகவல் தெரிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே லீ க்யாங்கிடம் பெரிதாகத் தங்கியது.

லீ க்யாங் அமைதியாக ஆணையிட்டான். “ஆசானை உங்கள் பார்வையில் இருந்து ஒரு கணமும் நழுவ விடாதீர்கள். அந்த ஆளைக் குறைத்து எடைபோட்டு விடாதீர்கள். அடுத்ததாக ஆசானிற்கு வந்த போன் எண் உங்களிடம் இருக்கிறதல்லவா? அந்த போன் எண்ணில் இருந்து வேறெந்த எண்களுக்கு எல்லாம் அழைப்பு போகிறது என்பதைக் கண்காணித்து உடனடியாக எனக்குத் தெரிவியுங்கள்

(தொடரும்)
என்.கணேசன்
  


Monday, February 15, 2016

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் யோகசக்தி!



மகாசக்தி மனிதர்கள்-50

மிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த எத்தனையோ மகான்களில் மிக முக்கியமானவர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள். 1595 ஆம் ஆண்டில் சிதம்பரத்திற்கு அருகே இருக்கும் புவனகிரியில் பிறந்த அவருக்கு அவருடைய பெற்றோர் திம்மண்ண பட்டரும், கோபிகாம்பாளும் இட்ட பெயர் வேங்கடநாதன். திருப்பதி யாத்திரை போய் வேண்டிக் கொண்டு பிறந்த பிள்ளை என்பதால் அந்த ஏழுமலையான் பெயரையே மகனுக்கு வைத்திருந்தனர். வேங்கடநாதனின் தாத்தா கிருஷ்ண பட்டர் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் வீணை வித்வானாக இருந்தவர். அந்த வீணை புலமையும், பெற்றோரின் ஆன்மிக தாகமும் வேங்கடநாதனுக்கு சிறு வயதிலேயே வந்து சேர்ந்திருந்தது. துவைத வேதாந்தத்தை கும்பகோணத்தில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் என்பவரிடம் கற்றுத் தேர்ந்த வேங்கடநாதன் தகுந்த வயதில் சரஸ்வதி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஒரு மகனையும் பெற்றுக் கொண்டார்.

புனித நூல்களில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றிருந்த வேங்கடநாதன் வேத பாடங்களை மாணவர்களுக்குச் சொல்லித்தரும் பணியை மேற்கோண்டார். ஆனால் செய்த பணிக்கு பணம் வசூல் செய்யும் வித்தை மட்டும் வேங்கடநாதன் அறியாததால் வறுமை நிரந்தரமாகவே அவரிடம் தங்கி இருந்தது. ஆனால் அவரிடம் பிற்காலத்தில் பெரிய யோகியாகும் லட்சணங்கள் இளமைக்காலத்திலேயே தெரிய ஆரம்பித்தன.

கும்பகோணத்தில் அவர் வசிக்கையில் ஒரு செல்வந்தரின் வீட்டில் நடக்கும் ஒரு விருந்துக்கு அவருக்கு அழைப்பிருந்தது. அவர் அங்கே தன் மனைவியை அழைத்துக் கொண்டு போனார். அந்தச் செல்வந்தரின் மகன் உணவுக்காக வந்த ஏழை அந்தணன் என்று அவரை எண்ணி சாப்பிடப் போகும் உணவுக்காக இந்த அந்தணன் உழைக்கட்டுமே என்று நினைத்தான். அங்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்குப் பூச சந்தனத்தை அரைத்துத் தரும்படி அவரிடம் சொன்னான்.

வேங்கடநாதனும் முகம் சுளிக்காமல் சந்தனத்தை அரைக்க ஆரம்பித்தார். நூற்றுக்கணக்கில் விருந்தாளிகள் இருந்ததால் மணிக்கணக்கில் சந்தனம் அரைக்க வேண்டி இருந்தது. மந்திரங்களை மனதிற்குள் சொல்லிக் கொண்டே வேங்கடநாதர் தேவையான அளவு சந்தனத்தை அரைத்து முடித்தார்.  அந்த சந்தனத்தைப் பூசிக் கொண்ட விருந்தினர்களும், வீட்டார்களும் தீயால் சுடப்பட்ட எரிச்சலை உணர ஆரம்பித்தார்கள். குளிர்ச்சியான சந்தனத்தைப் பூசிக் கொள்கையில் இந்த உஷ்ணம் உருவாக என்ன காரணம் என்று ஆச்சரியப்பட்ட அந்த செல்வந்தர் நடந்தது என்ன என்று விசாரித்தார். நடந்ததை அறிந்த அந்தச் செல்வந்தருக்கு வேங்கடநாதன் அறிஞர் மட்டுமல்ல தெய்வாம்சம் பொருந்தியவரும் கூட என்பது விளங்க ஆரம்பித்தது. உடனடியாக வேங்கடநாதனிடம் சென்று அவர் மனம் கலங்கி மன்னிப்பு கோரினார்.

வேலை செய்வதை ஒரு கவுரவக்குறைவாக எண்ணாத வேங்கடநாதன் தான் வேண்டுமென்றே சந்தனத்தில் உஷ்ணத்தை உருவாக்கவில்லை என்று சொல்லி சந்தனம் அரைக்கையில் மனதில் சொல்லிக் கொண்டிருந்த அக்னி சுக்த மந்திரமே அந்த உஷ்ணத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.  அனைவருக்கும் ஒரே வியப்பாக இருந்தது. வேங்கடநாதன் அவர்கள் மனதில் எழுந்த வியப்பையும், அவர்கள் உடலில் உணர்ந்த உஷ்ணத்தையும் போக்க அவர்கள் முன்னிலையிலேயே மழைக்கடவுளான வர்ண தேவனுக்கான வேத மந்திரங்களைக் கூறிக் கொண்டே சந்தனத்தை அரைத்துக் கொடுத்தார். அதைப் பூசிக் கொண்ட போது மிகுந்த குளிர்ச்சியை அனைவரும் உணர ஆரம்பித்தனர். இறையருள் பரிபூரணமாகப் பெற்ற ஞானி அவர் என்பதை உணர்ந்து பக்தியுடன் வணங்கவும் செய்தனர்.

தூய்மையான மனதுடன் மந்திரங்களை உச்சரிக்கையில் அந்த மந்திரங்கள் எந்த மாதிரியான சக்தி வாய்ந்த விளைவுகளை உருவாக்குகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். பெரும்பாலான மனிதர்கள் எந்திரத்தனமாகவே இறைவனுடைய நாமத்தையும், மந்திரங்களையும் சொல்லிக் கொண்டு போகிறார்கள். பின் இத்தனை ஜபித்தும் எந்த நல்ல பலனும் விளையவில்லையே என்று வருந்தவும் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி நல்லதோர் பாடம்!

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் வேங்கடநாதனின் புகழ் பரவ ஆரம்பித்தது. அவருடைய குருவான ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் வேங்கடநாதனே தனக்குப் பின் தன் மத்வபீடமடத்தின் மடாதிபதியாக வர வேண்டும் என்று விரும்பினார். மடாதிபதியாக வேண்டும் என்றால் துறவறம் பூண வேண்டும். வேங்கடநாதன் தன் மனைவியையும் மகனையும் துறந்து விட்டு துறவியாக விரும்பவில்லை.

அவருடைய குருவான ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரின் உடல்நிலை கவலைக்கிடமாக ஆரம்பித்தது. அவர் மீண்டும் தன் பிரியமான சீடனிடம் வேண்டிக்கொண்டார். அன்று இரவே சரஸ்வதியே கனவில் வந்து இல்லறத்தில் இருந்து ஒருசிலரின் பொறுப்புகளை மட்டும் மேற்கொள்ளப் பிறந்தவனல்ல நீ. துறவறம் பூண்டு லட்சக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டப் பிறந்தவன் நீஎன்று சொல்லி விட்டு மறைய தனக்கென்று இறைவன் வகுத்திருக்கும் விதி என்னவென்று வேங்கடநாதர் உணர்ந்தார். விரைவில் தன் மகனுக்கு உபநயனம் செய்து விட்டு மடத்திற்குச் சென்று துறவறம் மேற்கொண்டார். அப்போது அவருடைய குரு ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என்று பெயரைச் சூட்டினார்.

கணவர் துறவியாகும் செய்தியால் மனம் வருந்திய அவர் மனைவி சரஸ்வதி கடைசியாக ஒரு முறை தன் கணவர் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள். உடனே மடத்தை நோக்கி ஓடினாள். மடத்தினர் அவளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.  மனமுடைந்து போன அவள் திரும்பி வரும் வழியில் இருந்த ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.  கடைசி ஆசையும் நிறைவேறாமல் ஆவியாக அவர் மனைவி மடத்திற்குப் போனாள். ஆனால் ஆவி உருவிலும் அவளால் அவரை நெருங்க முடியவில்லை.

மனைவி மரணித்து ஆவியாக வந்திருக்கிறாள் என்பதைத் தன் யோகசக்தியால் அறிந்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தன் கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை அவள் ஆவியிருந்த பக்கம் தெளிக்க மனைவி ஆவி நிலையிலிருந்து விடுபட்டு, பிறப்பு இறப்பு இரண்டையும் அறுத்த மோட்ச நிலையை அடைந்து விட்டாள். பல பிறவிகள் எடுத்து அடைய முடிந்த மோட்ச நிலை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு மனைவியாக இருந்து செய்த சேவையால் அப்பிறவியிலேயே அவளுக்குக் கிடைத்து விட்டது.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளிடம் மத்வபீடத்தை ஒப்படைத்த பின் அவர் குரு ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் இறைவனடி சேர்ந்தார். துவைத சித்தாந்த்ததையும், மெய்ஞானத்தையும் பரப்புவதில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தீவிரமானார்.  துறவுக்கு முன்பே சக்திகளைப் பெற்றிருந்த அவர் துறவுக்குப் பின் மகாசக்தி வாய்ந்தவராக உருவானார்.

பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பன்னிரண்டு ஆண்டுகள் மழையே பெய்யாமல் கடும்பஞ்சம் தஞ்சாவூர் பகுதியில் நிலவியது. அப்போது தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த சேவப்ப நாயக்கர் மகானாகிய ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் உதவியை நாடினார். மழை வேண்டி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் செய்த வேள்வியால் உடனே பெருமழை பெய்ய ஆரம்பித்தது.

நாட்டின் பஞ்சநிலை போய் செழிப்புநிலை உருவாகியதால் உவந்து போன மன்னர் சேவப்ப நாயக்கர் விலை உயர்ந்த தங்கச்சங்கிலி ஒன்றை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்குப் பரிசாகத் தந்தார். துறவிக்கு தங்கமென்ன வைரமென்ன! ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அந்தத் தங்கச் சங்கிலியை அப்படியே நன்றாக எரிந்து கொண்டிருந்த ஹோம குண்டத்தில் போட்டு விட்டார். மன்னருக்கு அதில் மனவருத்தம் ஏற்பட்டது. அவருடைய மனவருத்தத்தைக் கண்ட ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் உடனே ஹோமகுண்டத்தில் கையை விட்டு அந்தத் தங்கச் சங்கிலியை வெளியே எடுத்தார். என்னவொரு ஆச்சரியம் என்றால் அவர் கையிலும் தீக்காயம் இல்லை, தங்கச் சங்கிலியும் சிறிதும் கருகவில்லை.  பிரமித்துப் போன மன்னர் அந்த மகானைத் தொழுது விட்டுச் சென்றார். அவர் ஸ்ரீ ராகவேந்திரரின் பரம பக்தராகவும் மாறினார்.

அதன் பின்னர் தென்னிந்தியாவில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்றார். சென்ற வழிகளில் எல்லாம் அவர் அற்புதங்கள் தொடர்ந்தன. ஒரு நாட்டில் அவர் பயணம் செய்து கொண்டிருந்த போது அந்த நாட்டு இளவரசன் பாம்பு கடித்து விஷமேறி இறந்து போனான். ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் சக்திகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த மன்னர் அவரிடம் வந்து கதறியழ, சுவாமிகள் அந்தப் பாம்பையே இளவரசன் உடம்பில் இருந்த விஷத்தைத் திரும்பவும் எடுக்க வைத்து அவனைப் பிழைக்க வைத்தார்.

இந்தச் செய்தியும் நாடெங்கும் பரவியது. இதை நம்பாத சில குறும்புக்கார இளைஞர்கள் அவர் போலி என்பதை வெளிப்படுத்த திட்டமிட்டனர். அதன்படி அவர்களில் ஒருவன் இறந்தது போல் நடிக்க வேண்டும் என்றும் அவர் எழு என்று சொல்கிற போது எழக்கூடாது என்றும் அவர்கள் சொல்கிற போது மட்டும் எழ வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி  சுவாமிகள் வரும்போது அவனைப் படுக்க வைத்து அவன் மேல் வெள்ளைத் துணி போர்த்தி அழுது புலம்பி அவரிடம் உயிர் திருப்ப வேண்டினார்கள். அவர் “அவன் ஆயுட்காலம் முடிந்தது. ஒன்றும் செய்ய முடியாதுஎன்று சொல்லவே அவர்கள் அவரைக் கேலி பேசி அவனை எழுந்திருக்கச் சொன்னார்கள். ஆனால் அவன் எழவில்லை. உண்மையாகவே இறந்து போயிருந்தான்.

(தொடரும்)

என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி-3.7.2015

Thursday, February 11, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 85



”யார் அந்த ஆள்?” என்று மைத்ரேயனிடம் அந்த வீரன் தாழ்ந்த குரலில் கேட்ட போது அக்‌ஷய் தானே அதற்குப் பதில் சொல்லி நிலைமையைச் சமாளிக்கத் தான் உடனடியாக நினைத்தான். ஆனால் அது அந்த வீரனின் வீண் சந்தேகத்தைத் தூண்ட வாய்ப்பு இருப்பதாக அவன் உள்ளுணர்வு எச்சரித்தது. அந்த வீரன் நேபாள மொழியில் கேட்டது என்ன என்றாவது மைத்ரேயனுக்குப் புரிந்திருக்குமா என்பது தெரியவில்லை.

ஆனால் மைத்ரேயன் குழம்பவில்லை. அந்த வீரனைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே “அப்பா” என்று நேபாள மொழியிலேயே பதில் அளித்தான். அந்த வீரன் மைத்ரேயனின் வீங்கிய கன்னத்தை கனிவுடன் வருடி விட்டு அவனை வண்டிக்குள் ஏற விட்டான்.

பின் அவன் அக்‌ஷயிடம் கஷ்டப்பட்டு பொறுமையை வரவழைத்துக் கொண்டு அறிவுரை சொன்னான். “பிள்ளையைப் பாசத்தோடு வளர்க்கப் பார். உனக்கு வயதாகும் காலத்தில் அவன் உன்னைப் பற்றி நினைக்க நல்லது நிறைய இருந்தால் தான் அப்போது உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வான்.....”

அக்‌ஷய் லேசான குற்ற உணர்ச்சியை முகத்தில் காட்டித் தலையசைத்தான். அடுத்த கணமே தூரத்தில் தெரிந்த ஆடுகளைப் பரிதாபமாகப் பார்த்துத் தன் பற்றி அந்த வீரன் கொண்டிருந்த அபிப்பிராயத்தை உறுதிப்படுத்தினான். அவர்கள் வண்டி ஏறியதைக் கண்ட குட்டி ஆடு புல்லைத் தின்பதை விட்டு வேலி அருகே வந்து நின்று கொண்டு மைத்ரேயனையே பார்த்தது. அவனைப் பார்த்து ஒரு வித்தியாசக்குரலில் ஓலமிட்டது. அதைக் கேட்ட பெரிய ஆடும் தனக்குப் பிடித்தமான புல்லை சாப்பிடுவதையும் விட்டு வேலியோரம் வந்து நின்று அவர்களையே பார்த்து நின்றது. மைத்ரேயன் அந்த ஆடுகளை அமைதியாகப் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டான்.

வாகனத்தின் கதவை அந்த வீரன் சாத்தி விட்டு டிரைவருக்குக் குரல் கொடுத்தான். “போகலாம்”

வாகனம் கிளம்பியது. போகும் போது கம்பியிட்ட ஜன்னல் வழியே அக்‌ஷய் அந்த ஆடுகளைப் பார்த்தான். இப்போது இரண்டு ஆடுகளுமே சேர்ந்து ஓலமிட்டன. முதலில் வேலியைக் கடந்த வேகத்தில் திரும்பிக் கடந்து வர முடியவில்லை போல் இருந்தது. சிறிது தூரம் வேலியோரமாகவே இரண்டும் ஓடி வந்தன. ஆக்‌ஷய்க்கு மனம் என்னவோ செய்தது. அவன் மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அந்தப் பக்கமே திரும்பவில்லை.....

சில வினாடிகளில் அவை இரண்டும் பார்வையில் இருந்து மறைய கனத்த மனதுடன் அக்‌ஷய் திரும்பி உட்கார்ந்தான். எல்லையிலேயே அந்த ஆடுகளை விட்டுப் பிரிவது தான் திட்டமே என்றாலும் கூட இந்த இரண்டு நாட்களில் அவை நெருக்கமாக விளையாடிப் பழகியதை நினைக்கையில் சின்னதாய் ஒரு சோகத்தை அவனால் உணராமல் இருக்க முடியவில்லை. மைத்ரேயன் தான் அந்த ஆடுகளுடன் அதிக நட்பாய் இருந்தவன் என்றாலும் பிரிவில் பாதிக்கப்படாமல் அவன் இருக்க முடிந்தது, யோசித்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இல்லை. பெற்ற தாயை விட்டுப் பிரிந்து வரும் போதும் அவன் பாதிக்கப்படவில்லை..... மைத்ரேயன் திரும்பிய போது அவனுடைய வீங்கிய கன்னம் பார்வைக்கு வர அக்‌ஷய் மீண்டும் கடுமையான குற்ற உணர்ச்சிக்கு உள்ளானான். அவன் தன் மகன்களையே இது வரை ஒரு முறை கூட அடித்தவன் அல்ல. வேறு வீட்டுப் பிள்ளை, வேறு நாட்டுப் பிள்ளை, அதுவும் புத்தனின் அவதாரமாகக் கருதப்படுபவன்... மைத்ரேயனின் தாயின் கண்ணீர் மல்கிய முகம் நினைவுக்கு வந்தது. மனம் ரணமாகியது....

செல்லும் வழியில் இரண்டு இடங்களில் வாகனத்தை நிறுத்தி அந்த டிரைவரிடம் சில வீரர்கள் சில வார்த்தைகள் பேசினார்கள். நல்ல வேளையாக உள்ளே இவர்கள் இருப்பதை அந்த டிரைவர் பேச்சினூடே சொல்லவில்லை...

ராணுவ கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியை நெருங்கிய பின் அந்த வாகனத்தை பிரதான கதவு அருகே நிறுத்தி விட்டு அந்த டிரைவர் அலுவலக அறைக்குக் கையெழுத்திடச் சென்றான். அவன் அங்கு போய் வரும் வரை அக்‌ஷய் மிக எச்சரிக்கையாகவே இருந்தான். ஆனால் டிரைவர் போன வேகத்திலேயே வந்து வாகனத்தைக் கிளப்பினான். சிறிது தூரம் சென்ற பிறகு ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு வந்து பின் கதவைத் திறந்து விட்டான். “இறங்குங்கள்”

இருவரும் இறங்கினார்கள். அவர்களிடமிருந்து வந்த நெடி அவன் மூக்கைத் துளைத்தது. அவன் மூக்கைப் பிடித்துக் கொண்டே அக்‌ஷயிடம் வறண்ட குரலில் சொன்னான். “இனி இது போல் முட்டாள்தனமாய் போய் விடாதீர்கள். என்ன ஏது என்று விசாரிக்காமலேயே சுட்டு விடுவார்கள். இப்போது நிலைமை மிக மோசமாக இருக்கிறது. உங்கள் அதிர்ஷ்டம் என் நண்பன் கண்ணில் மட்டும் பட்டது....”

அக்‌ஷய் தலையசைத்தான்.

“தயவு செய்து வாரத்திற்கு ஒரு தடவையாவது குளியுங்கள்”

சொல்லி விட்டு அவன் வாகனத்தில் ஏறிப் போய் விட்டான். வாகனம் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு அக்‌ஷய் சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு பக்கம் அடர்ந்த மரங்களும் மறுபக்கம் யாரும் இல்லாத பொட்டல்வெளியுமாகத் தான் அந்த இடம் இருந்தது. கண்கள் கலங்க அவன் மைத்ரேயனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு உடைந்த குரலில் சொன்னான். “என்னை மன்னித்து விடு மைத்ரேயா!…”

அவன் விரல்கள் மைத்ரேயனின் வீங்கிய கன்னத்தை மென்மையாக வருடின. மைத்ரேயன் புன்னகைத்தபடி தன் கையால் அக்‌ஷயின் வாயைப் பொத்தி விட்டுச் சொன்னான். “என் கன்னம் வீங்காமல் இருந்திருந்தால் அந்த வீரனுக்கு என் மேல் கருணை பிறந்திருக்காது”

அக்‌ஷய்க்கு அவன் புரிந்து கொண்டது குற்ற உணர்ச்சியை ஓரளவு குறைத்தது. அவன் தன் சந்தேகத்தைக் கேட்டான். “அந்த ஆள் நேபாள மொழியில் என்னை யார் என்று கேட்ட போது உனக்குப் புரியுமா என்பது சந்தேகமாய் இருந்தது...”

மைத்ரேயன் சொன்னான். “என் வீட்டுப்பக்கம் ஒரு நேபாளி நண்பன் இருக்கிறான். அவன் வீட்டுக்கு நான் போவதுண்டு. அதனால் நேபாள மொழி ஓரளவு தெரியும்....”

“நீ தடுமாறி இருந்தால் அவன் கண்டிப்பாக சந்தேகப்பட்டிருப்பான்...... நல்ல வேளை...”

”முக்கியமாக நீங்கள் எல்லையிலிருந்து உள்ளே வருவது போல் காட்டிக் கொள்ளாமல் உள்ளே இருந்து எல்லை நோக்கிப் போவது போல் காட்டியது நல்ல திட்டம். அதற்கு அந்த ஆடுகளும் உதவியாக இருந்தன....”

அவனாக அந்த ஆடுகள் பேச்சை எடுத்ததால் அக்‌ஷய் சொன்னான். “பாவம் அந்த ஆடுகள் நம்மைப் பார்த்து ஓலமிட்டன. சிறிது தூரம் வேலியோரமாகவே ஓடியும் வந்தன... நீ தான் கவனிக்கவில்லை... உன்னுடன் மிக நெருக்கமாக இருந்தனவே, விட்டு வருகையில் உனக்கு வருத்தமாகவில்லையா?”

மைத்ரேயன் சாந்தமாகப் புன்னகைத்து விட்டுச் சொன்னான். “நம் வாழ்க்கையில் யார் எத்தனை காலம் நம்முடன் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது விதி தான். அவ்வப்போது சில பேரைச் சேர்க்கும், சில பேரை விலக்கும். இதில் விதி நம் அபிப்பிராயங்களை லட்சியம் செய்வதில்லை. வாழ்க்கை முழுவதும் இப்படித் தான் என்று இருக்கையில் யார் நம் வாழ்க்கையில் வந்தாலும் அவர்கள் இருக்கும் வரை அன்பாகவும், இணக்கமாகவும் இருந்து விட்டு, அவர்கள் போகும் போது புரிதலோடு விடை கொடுப்பது தானே புத்திசாலித்தனம்....”

அக்‌ஷய்க்கு அவன் சொன்ன விதம் பிடித்திருந்தது. அறிவுக்கு எட்டும் எத்தனையோ விஷயங்கள் இதயத்தை எட்டுவதில்லை. இவனைப் பொருத்த வரை அறிவும் இதயமும் இணைந்தே செயல்படுவது போலத்தான் தெரிகிறது. அக்‌ஷயே கூட பொதுவான செயல்பாடுகளில் அப்படித்தான் என்றாலும் அன்பு, பாசம், குடும்பம் என்று வரும் போது சிறிது பலவீனமாகி விடுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.....

மைத்ரேயன் தொடர்ந்து சொன்னான். “உங்கள் திட்டமே கூட ஆடுகளை ஒரு கட்டத்தில் விட்டுப் போக வேண்டும் என்பதாக அல்லவா இருந்திருக்கும்.... “

ஆம் என்று ஒத்துக் கொண்டான் அக்‌ஷய். மைத்ரேயன் சொன்னான். “அந்த ஆடுகள் நாளையே என்னை மறந்து விடும்.....”

“ஆடுகள் சரி.... உன் தாய்?” அக்‌ஷயால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“உடன் இல்லா விட்டாலும் எங்கோ மகன் பாதுகாப்பாக இருக்கிறான் என்று என்று நினைத்து ஆறுதல் அடையலாம்....” மைத்ரேயன் அமைதி மாறாமல் சொன்னான்.

எந்தத் தாய்க்குமே அது எல்லா நேரங்களிலும் சாத்தியம் அல்ல என்பது அக்‌ஷய்க்குத் தெரியும். ஏனென்றால் அவனே சிறிய வயதில் காணமால் போனவன் தான். அவன் தாய் அந்தப் பிரிவினால் எப்படி நடைப்பிணமாய் வாழ்ந்தாள் என்பதை அறிவான். எங்கிருந்தாலும் அவன் நலமாய் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனைகளிலும், விரதங்களிலும் அவள் கழித்த விதத்தை எண்ணிப் பார்த்தான். இவன் தாயும் அப்படித் தான் பிரார்த்தித்துக் கொண்டிருப்பாள் என்று தோன்றியது.....

மைத்ரேயன் கேட்டான் ”அந்த வீரன் நம்மை இப்படி வண்டியில் ஏற்றி அனுப்புவான் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?”

அவன் எண்ண ஓட்டத்தை திசை திருப்பத்தான் இந்தக் கேள்வியை அவன் கேட்பதாக அக்‌ஷய்க்குத் தோன்றியது. அக்‌ஷய் சொன்னான். “இதை நான் எதிர்பார்க்கவில்லை. இன்னும் ஒன்றிரண்டு வித்தைகளையாவது காட்ட வேண்டி இருக்கும் என்று நினைத்திருந்தேன்.....”

தூரத்தில் ஏதோ வாகனம் வரும் சத்தம் கேட்டது. மைத்ரேயனுக்கு சமிக்ஞை செய்த அக்‌ஷய் பாதையிலிருந்து வேகமாக விலகி அருகே மரங்கள் அதிகம் இருந்த பகுதிக்கு ஓட மைத்ரேயனும் அதே வேகத்தில் பின் தொடர்ந்தான். மரங்களின் பின்னால் இருந்து பார்த்தார்கள். இராணுவ வாகனம் ஒன்று எல்லைக் காவல் பகுதிக்கு நிதானமாகச் சென்றது.

அக்‌ஷயும் மைத்ரேயனின் ஒரு அகலமான மரத்தின் கீழே அமர்ந்து கொண்டார்கள். அக்‌ஷய் தன் தோளில் சுமந்து கொண்டிருந்த பையில் ஒரு பகுதியை கத்தியால் அறுத்து ஒளித்து வைத்திருந்த ஒரு அலைபேசியை வெளியே எடுத்தான். மைத்ரேயனின் பையை வாங்கி அதிலும் ரகசியமாய் ஒளித்து வைத்திருந்த ’சிம்’மை எடுத்து அலைபேசியில் பொருத்தி விட்டு ஆசானுக்குப் போன் செய்தான்.

ஆசான் சில மாதங்களுக்கு முன் தான் இந்த ரகசிய எண்ணை உபயோகிக்க ஆரம்பித்திருந்தார். அதுவும் மிக முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே அதை அவர் பயன்படுத்தி வந்தார். சொல்லப்போனால் இந்த மூன்று மாதங்களில் அவர் அதை எட்டு முறை தான் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் லீ க்யாங் நியமித்திருந்த ஒற்றர் படை அந்த எட்டாவது முறையில் அவர் எண்ணைக் கண்டுபிடித்து விட்டது. நவீன உபகரணங்களுடன் அவர் பேசும் அனைத்தையும் ஒட்டுக் கேட்க ஏற்பாடு செய்திருந்த அந்த ஒற்றர் கூட்டம் 24 மணி நேரமும் அதன் கண்காணிப்பில் இருந்தது.

அக்‌ஷய் ஆசானின் எண்ணுக்குப் போன் செய்தவுடனேயே சின்ன அதிர்வுடன் ஒரு சிவப்பு விளக்கு அந்த உபகரணத்தில் எரிய, ஒரு ஒற்றன் விரைந்து ஒட்டுக் கேட்கத் தயாரானான்.


(தொடரும்)

என்.கணேசன்

Monday, February 8, 2016

சில வார்த்தைகள் - சில அர்த்தங்கள்!


 நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சில வார்த்தைகளுக்கு அகராதியில் எப்படி அர்த்தங்கள் இருந்தாலும் நம் கணக்கில் நிஜமான அர்த்தங்கள் வேறாகவே இருப்பதுண்டு. அப்படி பலர் சொல்லும் சில வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தங்கள் இது தான்.

பிழைக்கத் தெரியாதவன்: நாம் செய்யும் அல்லது செய்ய நினைக்கும் அயோக்கியத்தனங்களைச் செய்து பிழைக்காதவன்.

தலைக்கனம் பிடித்தவன்: ஒருவன் நம்மை விட அதிக புத்திசாலியாக இருந்து  அதை நம்மிடமே வெளிப்படுத்துபவன்.

நண்பன்: நமக்குத் தேவைப்படும் உதவிகளை எல்லாக் காலங்களிலும் செய்து கொண்டே இருப்பவன்.

எதிரி: அந்த உதவிகளை ஏதாவது சந்தர்ப்பத்தில் செய்யாதவன் (அல்லது) நிறுத்துபவன்.

அறுவை: நாம் பேசி அவன் கேட்க வேண்டும் என்று நினைக்கையில் அவன் பேசி நம்மைக் கேட்கச் செய்பவன்.

தேசபக்தி: அடுத்த வீட்டுக்காரன் மேல் வரும் ‘கொலை வெறிஅண்டை நாட்டுக்காரன் மேல் வருமானால் அது தேசபக்தி.

தரமான பொருள்: அமிஞ்சிக்கரையில் தயாராகும் பொருள் மீது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதாய் முத்திரை இருக்குமானால் அது தரமான பொருள்.

துன்பத்தில் இன்பம்: நமக்குத் துன்பம் வரும் போது அடுத்தவனுக்கு இரு மடங்கு துன்பம் வருமானால் அது துன்பத்தில் இன்பம்.

ஆத்திகவாதி: தனது ஒவ்வொரு துன்பத்திற்கும் இறைவனைத் திட்ட முடிந்த பாக்கியசாலி.

பொறுமைசாலி: நாம் திட்டுவதன் அர்த்தம் புரிந்து கொள்ளாததால் அமைதியாக இருப்பவன்.

என்ன நண்பர்களே எல்லாம் சரிதானே!

-என்.கணேசன்  



Friday, February 5, 2016

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் - நான்காம் பதிப்பு!


வாசகர்களின் பேராதரவின் காரணமாக ’வாழ்ந்து படிக்கும் பாடங்கள்’ நூலின் நான்காம் பதிப்பு வெளியாகி உள்ளது.

வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பாடங்களும் இந்த நூலில் உண்டு. வெற்றிக்கும், மன அமைதிக்கும், பிரச்னைகளில் இருந்து மீள்வதற்கும், தைரியத்திற்கும் இந்த நூலில் வழிகள் எளிமையாகவும் வலிமையாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. 

ஒரு பள்ளி இந்த நூலின் 350 பிரதிகளை வாங்கி தங்கள் பள்ளியின் மேல் வகுப்பு மாணவர்களுக்குப் பரிசளித்திருக்கிறது. மற்ற பலரும் கூட இந்த நூலை பரிசளிக்க உகந்ததாகக் கருதுகிறார்கள்.

பல வாசகர்கள் தங்களுக்கு குழப்பமான, வருத்தமான காலங்களில் எல்லாம் இந்த நூலை எடுத்துப் படிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

இரண்டரை வருடங்களில் நான்கு பதிப்புகள் இந்த நூல் கண்டிருப்பது இந்த நூலுக்கு ஆணித்தரமான அங்கீகாரம் என்றே சொல்ல வேண்டும். 

இந்த நூலை வாங்கவும், தங்கள் பகுதியில் எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசி எண்ணிலோ, blackholemedia@gmail.com மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

என்.கணேசன்

Thursday, February 4, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 84


க்‌ஷய் மின்னல் வேகத்தில் இயங்கினான். தன் தோள்பையில் வைத்திருந்த கடைசி புல்கட்டை வேகமாக வேலிப்பக்கம் வீசினான். அந்த வேலியைத் தாண்டிப் போய் புல்கட்டு விழுந்தது. பெரிய ஆடு பெரும் தாவலுடன் அந்தப் புல்கட்டை நோக்கி ஓடியது. பின்னாலேயே குட்டியும் ஓடியது.

மைத்ரேயனைப் பார்த்து ரகசிய சமிக்ஞை செய்த அக்‌ஷய் நேபாள மொழியில் “பிடி... பிடி.... ஆட்டைப் பிடி” என்று கத்திக் கொண்டே ஓட மைத்ரேயனும் அவன் பின்னால் ஓடினான். திடீரென்று எதிர்பாராமல் வந்த சத்தமும் களேபரமும் அந்த துப்பாக்கி வீரனை அதிரச் செய்து விட்டது.

துப்பாக்கியை அக்‌ஷயை நோக்கிக் குறிபார்த்தபடியே அந்த துப்பாக்கி வீரன் ஆணையிட்டான். ”அப்படியே நில். கைகளை மேலே உயர்த்து. நகர்ந்தால் சுட்டு விடுவேன்....”

அக்‌ஷய் கைகளை மேலே உயர்த்தி திரும்பியபடி நேபாள மொழியில் சொன்னான். “என் ஆட்டைப் பிடியுங்கள்.... ஆட்டைப் பிடியுங்கள்.....”

தன்னிடமே ஆட்டைப் பிடிக்கச் சொல்லும் அந்தப் படிப்பறிவில்லா ஆட்டிடையனை எரிச்சலோடு பார்த்துக் கொண்டே துப்பாக்கி வீரன் நெருங்கினான். அவர்களிடமிருந்து குமட்டும் ஒரு நெடி வந்தது. குளித்து எத்தனை நாள் ஆயிற்றோ?

அக்‌ஷய் ஆடுகள் வேலி நோக்கி ஓடுவதை முகத்தில் சகல கவலையையும் தேக்கிப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு மைத்ரேயனை நோக்கிக் கத்தினான். “டேய் நீயாவது ஓடிப் போய்ப் பிடி. ஆடு வேலி தாண்டி விடப்போகின்றது”

மைத்ரேயன் இரண்டடி எடுத்து வைத்திருப்பான். துப்பாக்கி வீரன் அவனிடமும் ஆணையிட்டான். “நில் சிறுவனே. நகர்ந்தால் உன்னையும் சுட்டு விடுவேன்...”

மைத்ரேயன் அப்படியே நின்று விட்டான். அக்‌ஷய் அந்தத் துப்பாக்கி வீரனைக் கோபித்துக் கொண்டான். “நீங்களும் எங்கள் ஆட்டைப் பிடிக்க மாட்டேன்கிறீர்கள். எங்களையும் பிடிக்க விட மாட்டேன் என்கிறீர்கள். என்ன ஆள் நீங்கள்?”

படிப்பறிவில்லாத அறிவிலியால் மட்டுமே இப்படிப் படைவீரனிடம் ஆட்டைப் பிடிக்கச் சொல்லிக் கோபித்துக் கொள்ளவும் முடியும். அந்த வீரனுக்கு ஒரே நேரத்தில் கோபமும், சிரிப்பும் வந்தன.

அந்த நேரத்தில் பெரிய ஆடு பெரும் தாவலில் வேலியைத் தாண்டியது. தாண்டிப் போய் அந்த புல்கட்டைச் சாப்பிட ஆரம்பித்தது. குட்டியும் அதே போல் தாவித் தாயைச் சேர்ந்து கொண்டது. உள்ளே நுழையும் போது அவை இரண்டையும் கஷ்டப்பட்டு உள்ளே எடுத்து வைத்ததை அக்‌ஷய் நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

துப்பாக்கி வீரன் அக்‌ஷயிடம் கடுமையான குரலில் கேட்டான். “இது தடை செய்யப்பட்ட பகுதி. எப்படி நீங்கள் இங்கு வந்தீர்கள்?”

“எங்கள் கிராமத்தில் இருந்து ஆடு மேய்த்துக் கொண்டு வந்தோம். திடீரென்று அந்தப் பெரிய ஆடு இந்தப்பக்கமாய் ஓடி வர ஆரம்பித்து விட்டது. அதைப் பிடிக்க பின்னால் ஓடி வந்தோம்.....”

“எது உங்கள் கிராமம்?”

எல்லையில் இருக்கும் கிராமத்தின் பெயரை அக்‌ஷய் சரியாகச் சொன்னான். அவன் பேசிய நேபாள மொழியும் அந்த எல்லைப் பகுதி மக்களின் சொல்லாடலிலேயே இருந்தது. அந்த வீரன் யோசித்தான். அவனுக்கு சில மணி நேரங்கள் முன்பு தான் இந்த எல்லை வழியாகவும் திபெத்தில் இருந்து ஊடுருவல் நிகழலாம் என்கிற சந்தேகம் தெரிவிக்கப்பட்டு, நுழைபவர்களைப் பிடித்து ஒப்படைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் எல்லையில் இருந்து உள்ளே வரவில்லை. உள்ளே இருந்து வந்து எல்லை வேலியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.....

அவன் யோசிப்பது அக்‌ஷய்க்கு ஆபத்தை உணர்த்தியது. “கொஞ்சம் அனுமதித்தால் என் ஆடுகளைப் பிடித்துக் கொண்டு வந்து விடுகிறேன்... “

“வேலி தாண்டியா?” படைவீரன் அந்த முட்டாளை திகைப்புடன் பார்த்து விட்டுக் கடுமையான குரலில் சொன்னான். ”உன்னைப் பார்த்தவுடனே சுட்டுத் தள்ளி இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிக்கு வந்தது மட்டுமல்லாமல் எல்லை தாண்டிப் போகிறேன் என்று வேறு சொல்கிறாயா?”

“சரி நான் போகவில்லை. நீங்களே ஆடுகளைப் பிடித்துக் கொடுங்கள்” என்று அக்‌ஷய் சொல்ல அவனுக்குக் கோபம் வந்து விட்டது.

“நாட்டைக் காப்பாற்ற நிற்கிற வீரனிடம் ஆட்டைப் பிடிக்கச் சொல்கிறாயா அல்பனே” என்று அவன் கோபத்துடன் கேட்டான். அவன் பார்வை அவர்கள் இருவரின் தோள்களில் இருந்த பைகள் மீது தங்கியது. “ஆடு மேய்க்கிறவர்கள் ஏன் பைகளை சுமந்து வந்திருக்கிறீர்கள்...”

அக்‌ஷய் உடனடியாகச் சொன்னான். “நாங்கள் ஆடுகளை பக்கத்து கிராமங்களில் விற்கக் கிளம்பினோம். அதனால் தான் பைகள் எடுத்துக் கொண்டு கிளம்பி இருக்கிறோம்....”

“பின் ஏன் இந்தப்பக்கம் வந்தீர்கள்”

“இப்போதெல்லாம் ஆடுகளையும் எடை போட்டு தான் வாங்குகிறார்கள். இந்த செழிப்பான மலைப்பகுதியில் நன்றாக மேய்ந்தால் ஆடுகளின் எடை கூடும், கிடைக்கின்ற பணமும் அதிகமாக கிடைக்கும் என்கிற ஆசையில் தான் மலையின் கீழ்பகுதிக்கு வந்தோம். ஆனால் அந்த ஆடுகள் திடீரென்று இந்தப்பக்கம் ஓடி வர ஆரம்பித்து விட்டன....”

எல்லை வீரன் முகத்தில் இருந்து அதை அவன் நம்பினானா இல்லையா என்பது தெரியவில்லை.

அக்‌ஷய் பரிதாபமாய் அந்த ஆடுகளை ஒருமுறை பார்த்து விட்டு மைத்ரேயனைக் கோபத்துடன் பார்த்துச் சொன்னான். “எல்லாவற்றுக்கும் உன் அலட்சியம் தான் காரணம். மந்தபுத்திக்காரனே. அந்தப் பெரிய ஆட்டை உன் பொறுப்பில் தானே விட்டிருந்தேன்.”

மைத்ரேயன் இப்போது கச்சிதமாக மந்தபுத்திப் பார்வையுடனேயே நின்றிருந்தான். படைவீரன் அவனை ஒருவித வாத்சல்யோடு பார்த்தான். ஆனால் கூடவே சின்ன சந்தேகத்தோடே அவர்களைப் பார்ப்பதை அக்‌ஷய் கவனித்தான். இவனை அதிகம் யோசிக்க விடுவது ஆபத்து என்று உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. வேறு விதமாக அவனை சிந்திக்க விடாமல் ஏதாவது செய்தாக வேண்டும்....

அக்‌ஷய் மனதைக் கல்லாக்கிக் கொண்டு மைத்ரேயனை ஓங்கி ஒரு அறை அறைந்தான். அவனது அறையால் மைத்ரேயன் இரண்டடி பின்னால் போனான். அவன் கன்னம் சிவந்து விட்டது. அக்‌ஷயின் கைவிரல்களின் அச்சு அந்தக் கன்னத்தில் நன்றாகத் தெரிந்தது.

அந்தப் படைவீரனுக்கு மைத்ரேயன் வயதில் ஒரு மகன் இருந்தான். அவனும் இந்த சிறுவனைப் போலவே மூளை வளர்ச்சி சற்று குன்றியவன் தான். எதுவும் உடனடியாக அவனுக்கு விளங்காது. கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அந்தச் சிறுவன் பரிதாபமாக நின்றது அவன் மனதை உருக்கியே விட்டது. மீண்டும் கையை ஓங்கிய அக்‌ஷயை அவன் முறைத்துப் பார்த்தபடி சொன்னான். “மூர்க்கனே. விளையாட்டுப் பையனை இந்த அதிகாலை நேரத்தில் ஆடு மேய்க்க வைத்து விட்டு இப்படிக் காட்டுத்தனமாகவும் அடிக்கவும் செய்கிறாயே. இன்னும் அவனை அடித்தால் உன்னை சுட்டே விடுவேன்...”

மைத்ரேயனை முகம் பார்க்கிற தைரியம் கூட அக்‌ஷய்க்கு வரவில்லை. அவன் வேலி தாண்டி புல்கட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆடுகளையே கவலையோடு பார்த்தான். அந்தச் சிறுவனை விட ஆடுகளையே முக்கியமாய் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் முட்டாள் கிராமவாசியை இகழ்ச்சியோடு பார்த்த படைவீரன் கேட்டான். “நீங்கள் இந்தப் பக்கம் வந்ததை வழியில் எந்தக் காவல் வீரரும் பார்க்கவில்லையா?”

“அவர்கள் எங்களைப் பார்த்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆடுகள் பின்னாலேயே வந்து கொண்டிருந்த நான் யாரையும் பார்க்கவில்லை.....”

அவன் அப்போதும் அந்த ஆடுகளையே பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த படைவீரன் எரிச்சலோடு சொன்னான். ”நீ ஆடுகளைத் தவிர யாரையும் பார்க்க மாட்டாய் முட்டாளே. மற்ற காவல் வீரர்கள் உங்களைப் பார்த்திருந்தால் சுட்டிருந்தாலும் சுட்டிருப்பார்கள். எங்கள். எல்லை வீரர்களின் வேலை மாற்ற நேரம் இது, இந்த இடைவெளி நேரத்தில் நீ வந்ததால் தப்பித்தாய்...”

அந்த கிராமத்தான் காதில் அவன் சொன்னது விழுந்த மாதிரியே தெரியவில்லை. இவன் இப்போது திரும்பப் போகையில் மற்ற வீரர்கள் பார்த்தால் எதிரிகள் என்று நினைத்து சுட்டாலும் சுட்டு விடுவார்கள்.... அந்த காட்டான் சாவதில் அந்த எல்லை வீரனுக்கு எள் அளவும் வருத்தமில்லை. ஆனால் அவன் மகனைப் போன்ற மந்தமான அந்த சிறுவன் பலியாவதை மனம் ஏற்கவில்லை. முதலிலேயே கன்னம் வீங்க பரிதாபமாய் நிற்கும் சிறுவனை இப்போது பார்க்கவே பாவமாய் இருக்கிறது. திடீர் என்று அந்த வீரனுக்கு ஒரு ஆலோசனை தோன்றியது. வீரர்களை இந்த வேலை மாற்ற நேரத்தில் எல்லையின் இந்தப் பகுதிக்கு அழைத்து வந்த இராணுவ வாகனம் இன்னும் போயிருக்க வாய்ப்பில்லை. அந்த டிரைவர் வாகனத்தில் இருந்து இறங்கி புகைபிடித்துக் கொண்டு இருந்ததை சற்று முன் தான் அவன் பார்த்தான்.... அந்த டிரைவர் அவனுடைய நண்பனும் கூட....

உடனடியாக தன் அலைபேசி மூலமாக அவனைத் தொடர்பு கொண்டான். ”கிளம்பி விட்டாயா? .... நம் எல்லைக் கிராமத்து ஆட்டிடையர்கள் இரண்டு பேர் ஆடுகளோடு இந்த வேலி வரை வந்து விட்டார்கள்..... அவர்களை நம் காவல் எல்லை தாண்டி விட்டு விடுகிறாயா..... இல்லையில்லை.... ஆடுகள் வேலி தாண்டிப் போய் விட்டன..... ஆட்களைக் கொண்டு போய் விட்டால் போதும்.... சரி வா”

இரண்டே நிமிடங்களில் இராணுவ வாகனம் வந்தது. அந்த எல்லைப்படைவீரன் அக்‌ஷயையும், மைத்ரேயனையும் அந்த வாகனத்தில் ஏறச் சொன்னான். அக்‌ஷய் “ஆடு....” என்று பரிதாபமாகச் சொன்னான்.

துப்பாக்கியை அவன் முன் நீட்டியபடி அந்த வீரன் சொன்னான். “உடனடியாக வண்டி ஏறுகிறாயா இல்லை., உன் கால் பாதத்தில் சுட்டு உன்னை உள்ளே தூக்கிப் போடட்டுமா?”

அக்‌ஷய் பயந்து போனது போல் நடித்துக் கொண்டே வண்டி ஏறினான். மைத்ரேயன் வண்டி ஏறும் முன் அவனிடம் தாழ்ந்த குரலில் நேபாள மொழியில் அந்த வீரன் கேட்டான். ”யார் இந்த ஆள்”

அக்‌ஷய் உடனே ஆபத்தை உணர்ந்தான். நேபாள மொழியில் அந்த வீரன் என்ன கேட்கிறான் என்பதாவது மைத்ரேயனுக்குத் தெரியுமா?



லீ க்யாங் அலை பேசி இசைத்தது. எடுத்துப் பேசிய லீ க்யாங் கேட்டான். “என்ன?”

“அமானுஷ்யன் என்ற பெயரில் இந்தியாவில் ஒரு சுவாரசியமானவன் இருந்திருக்கிறான். அவன் அரசாங்க ஒற்றனாக இல்லா விட்டாலும் அரசாங்கத்திற்கு தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க பல வருடங்களுக்கு முன் உதவியாக இருந்திருக்கிறான். அந்தத் தகவல்கள் நம் நாட்டின் காஷ்மீர் தரப்பு ரகசிய ஃபைல்களில் அதிரகசியப் பிரிவில் இருக்கின்றன.......”

லீ க்யாங் பரபரப்புடன் சொன்னான். “உடனடியாக அவனைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் அனுப்பு”

“இதோ அனுப்புகிறேன்.... அப்புறம் இன்னொரு தகவல்”

“என்ன?”

“நான்கு நாட்களுக்கு முன்பு தான் அந்த ரகசிய ஃபைலை வேறு யாரோ பார்வையிட்டிருக்கிறார்கள். ஆனால் பார்வையிட்டவர் தகவல்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன”

லீ க்யாங் அதிர்ந்தான்.


(தொடரும்)

என்.கணேசன்

Tuesday, February 2, 2016

ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?- மூன்றாம் பதிப்பு!


வாசகர்களின் பேராதரவினால் ”ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?” நூலின் மூன்றாம் பதிப்பு வெளியாகி உள்ளது.

ஜோதிட நுட்பங்கள் அறியாத, புரியாத, சாதாரண மனிதர்களுக்கு ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும், எப்போது ஜாதகம் பார்க்க வேண்டும், எப்போதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை, ஜாதகத்தைப் பயன்படுத்துவது எப்படி, நேர்மையற்ற ஜோதிடர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி, போலிகளைக் கண்டுபிடிப்பதெப்படி, பெயரை மாற்றினால் விதி மாறுமா, அதிர்ஷ்டக் கற்களை அணிந்து கொண்டால் கஷ்டங்கள் விலகி விடுமா, கிரகங்களின் நன்மை தீமைகளை பூஜை புனஸ்காரங்களால் மாற்றி விட முடியுமா,  கோசாரம் முக்கியமா, ஜாதகம் முக்கியமா, எல்லாமே ஜாதக விதிப்படி தான் என்றால் மனிதனின் அறிவுக்கும், முயற்சிகளுக்கும் மதிப்பே இல்லையா, ஜோதிட சாஸ்திரத்தில் எதை எந்த அளவு நம்பலாம், என்றெல்லாம் நேர்மையாகச் சொல்லக் கூடிய புத்தகம் இது.

முக்கியமாக நல்லதாகவோ, கெட்டதாகவோ எப்படி ஜாதகம் அமைந்து விட்ட போதிலும் அதைப் பயன்படுத்தி நன்மைகளை பெருக்கிக் கொள்ளவும், தீமைகளைக் குறைத்துக் கொள்ளவும் அறிவுபூர்வமான வழிகளை இந்த நூலில் நீங்கள் காணலாம். 

இது வரை நூலை வாங்கிப் படிக்காதவர்கள், இந்த நூலை வாங்கவும், தங்கள் பகுதியில் எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசி எண்ணிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

என்.கணேசன்

Monday, February 1, 2016

வெட்டிய கை ஒட்டிய அதிசயம்!

மகாசக்தி மனிதர்கள் - 49

மூன்று மாதங்கள் வரை மணலில் புதைந்திருந்த காலத்திலும் சமாதி நிலையில் இருந்து விடுபடாமல் சதாசிவ பிரம்மேந்திரர் இருந்த செய்தி அவருடைய குருவான பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகளை எட்டிய போது ’அப்படியொரு நிலையை எப்போது என்னால் எட்ட முடியும்’ என்று வியந்தாராம்.

குருவையே அப்படி வியக்க வைத்த சதாசிவ பிரம்மேந்திரர் எத்தனையோ சக்திகளைப் பெற்றிருந்த போதும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ, தன்னை ஒரு மகானாகக் காட்டிக் கொள்ளவோ எப்போதும் முயன்றதில்லை. அவருடைய அந்த சக்திகள் இயல்பாக தேவைப்பட்ட இடங்களில் வேலை செய்தன. அதற்கு சம்பந்தப்பட்டவர் போலவே அவர் காட்டிக் கொண்டதில்லை.

ஒரு முறை ஒரு தானியக் குவியலில் அமர்ந்தவர் அப்படியே சமாதி நிலையில் லயித்திருக்க ஆரம்பித்து விட்டார். அந்த விவசாயி அவரை தானியம் திருட வந்த கள்வன் என்று நினைத்து ஒரு கம்பால் அவரை அடிக்க ஓங்கினான். ஆனால் அவன் கை அப்படியே நின்று விட்டது. அவர் விழித்து அவனைப் பார்த்த போது தான் அவனால் கையைக் கீழே இறக்க முடிந்தது. அவன் அவரைத் திருடன் என நினைத்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்பதற்கு முன் அவர் அங்கிருந்து போயுமிருந்தார்.

ஒரு முறை திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் சிலர் வண்டியில் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நெடிய கட்டை போல் அவர் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களில் ஒருவன் அவரை அழைத்து கட்டைகளை எடுத்துத் தரச் சொன்னான். எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் அவரும் எடுத்துத்தந்து அந்த மரக்கட்டைகளை வண்டியில் ஏற்றுவதற்கு உதவினார். வேலை முடிந்த பின் அவர் மறுபடி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அந்தக் கயவர்கள் தங்களுக்கு உதவிய ஒருவர் என்கிற நன்றியும் இல்லாமல் “இந்தக் கட்டை எங்கே போகிறது?” என்று கூவி ஏளனமாகக் கேட்டார்கள். சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வண்டியில் ஏற்றி இருந்த கட்டைகள் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. அப்போது தான் அவர்களுக்கு அவர் ஒரு யோகி என்பது புரிந்தது.

இன்னொரு சமயம் ஒரு பண்டிதன் அவருடைய பூர்வாங்கம் தெரியாமல் அவருக்குக் கிடைக்கும் புகழைக் கண்டு பொறாமைப்பட்டான். பல சம்ஸ்கிருத நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அவன் அவர் வேத நூல்கள் பற்றிய பரிச்சயமே இல்லாதவர் என்றும், அவர் வாழும் வாழ்க்கை வேதங்களின் அங்கீகாரம் இல்லாதது என்றும் அவரிடம் நேரில் வந்து குற்றம் சாட்டினான். சதாசிவ பிரம்மேந்திரர் அப்போது அங்கே அருகில் இருந்த ஒரு வண்ணானின் நாக்கில் சில எழுத்துக்கள் எழுத அந்தப் படிப்பறிவில்லாத வண்ணான் வேத மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டான். அந்த மந்திரங்கள் ஒரு ஞானியின் வாழ்க்கை முறையை விவரிப்பதாக இருந்தன. அவை அனைத்தும் சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கையை ஒத்ததாகவும் இருந்தன.


இப்படி அவருடைய சக்திகளை உணர்ந்தவர்கள் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, அரசர்களும் தான். ஒரு முறை அவர் பயணத்தின் போது வழியில் ஒரு நவாபின் (சில குறிப்புகள் ஒரு படைத்தலைவன் என்கின்றன) அந்தப்புரத்துக்குள் புகுந்து விட்டார். ஆடைகள் இல்லாத ஒரு பித்தர் என்று அவரை எண்ணிய அந்தப்புர பெண்மணிகள் அலறி அடித்துக் கொண்டு ஒதுங்கினார்கள். ஆனால் அவரோ சுற்றுப்புற சூழலே உணராமல் அந்தப்புரத்தைக் கடந்து கொண்டு இருந்தார். இந்தத் தகவல் நவாபின் செவிகளை எட்டியது.

கோபம் கொண்ட நவாப் அந்தப் பித்தனின் கையை வெட்டிக் கொண்டு வரும்படி சிப்பாய்களிடம் ஆணை இட்டான். சிப்பாய்கள் விரைந்து வந்து சதாசிவ பிரம்மேந்திரரின் ஒரு கையை வெட்டினார்கள். கை வெட்டப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்த போதும் சிறிதும் சலனப்படாத அவர் சென்று கொண்டே இருந்தார். அந்தச் செய்தியும் நவாபின் செவிகளை எட்டியது. திகைத்துப் போன நவாப் அந்த வெட்டப்பட்ட கையை எடுத்துக் கொண்டு ஓடி அவரை அடைந்து மன்னிப்பு கேட்டான். அந்தக் கையை அவனிடம் இருந்து வாங்கி மீண்டும் பொருத்திக் கொண்டு அவர் போய்க் கொண்டே இருந்தார். கையை வெட்டியதற்குக் கோபம் கூடக் கொள்ளாத அந்த யோகி சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளை என்றோ கடந்திருந்தார் என்றல்லவா இதிலிருந்து நமக்குப் புரிகிறது.

கி.பி.1730 முதல் 1768 ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து கவுரவிக்க விரும்பினார். தன் ஆட்சி எல்லைக்குள்ளே இருந்த அந்த யோகியைத் தானே நேரில் சென்று அழைக்கவும் செய்தார். மௌன விரதம் மேற்கொண்டிருந்த சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் அப்படி அரண்மனைக்கு எல்லாம் வர மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட மன்னர் ஆன்மீகம் குறித்த கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டார். அதற்காவது அவரிடம் இருந்து பதில் வந்தால் அது தனக்கு அவரது ஆசிர்வாதமாக இருக்கும் என்று மன்னர் எண்ணினார். சதாசிவ பிரம்மேந்திரர் மணலில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி மந்திரத்தைப் பதிலாக எழுதி விட்டுச் சென்றார். விஜய ரகுநாத தொண்டைமான் தன் அங்கவஸ்திரத்தில் அந்த மணலைக் கட்டி எடுத்துக் கொண்டு சென்று அரண்மனையில் பூஜித்து வந்ததாகச் சொல்கிறார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரரின் அருளைப் பெற்ற இன்னொரு மன்னர் சரபோஜி மன்னர். அவரது அமைச்சராக இருந்த மல்லாரி பண்டிட் என்பவர்  சதாசிவ பிரம்மேந்திரரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், அவரும் ஆசிர்வதித்து தனது “ஆத்மவித்யா விலாசம்என்ற நூலை அளித்ததாகவும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் வரலாற்று ஆவணமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு பிரம்ம ஞானியாகவே வாழ்ந்து வந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் வாழ்வு கடைசிக் கட்டத்தை நெருங்குவதை உணர்ந்தார். அருகில் இருந்த அவரது பக்தர்களிடம் தனது சமாதியை கரூரை அடுத்த நெரூரில் அமைக்கும்படி எழுதிக் காட்டினார். அந்தப் பக்தர்கள் பெருந்துக்கம் அடைந்தனர். கண்களை மூடிக்கொண்டு கடைசி யாத்திரைக்குத் தயாராக இருந்த சதாசிவ பிரம்மேந்திரரிடம் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்திய அவர்கள் “இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு வழி காட்டுங்கள்என்று வேண்டினார்கள். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் கடைசி கீர்த்தனையை எழுதிக் காட்டினார்.

“சர்வம் பிரம்மமயம்- ரே ரே  சர்வம் பிரம்மமயம்... என்று துவங்கும் அந்தக் கீர்த்தனையில் எல்லாமே இறைமயம் தான். அப்படி இருக்கையில் கடவுளை எங்கே தேட வேண்டும். அந்தப் பிரம்மத்தில் அல்லவா நாமும் இருக்கிறோம் ..” என்ற பொருள் இருக்கிறது.  1755 ஆம் ஆண்டு சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி அடைந்து இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். நெரூரில் அவரது ஜீவ சமாதியைக் கட்ட புதுக்கோட்டை மன்னர் உதவி இருக்கிறார். இன்றும் அவரது ஜீவசமாதிக்குப் பல ஆன்மிக அன்பர்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். சென்றவர்கள் அங்கு அவரது ஆன்மிக அலைகளை உணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

அவரது ஜீவசமாதிக்கு “ஒரு யோகியின் சுயசரிதையை எழுதிய பரமஹம்ச யோகானந்தரும் சென்று வழிபட்டிருக்கிறார். அதையும் சதாசிவ பிரம்மேந்திரர் புரிந்த சில அற்புதச் செயல்களையும் அந்த நூலில் குறிப்பிட்டும் இருக்கிறார்.

அடுத்த வாரம் இன்னொரு மகாசக்தி மனிதரைக் காண்போமா?

(தொடரும்)    
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி -24.07.2015