சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 29, 2015

கீதையையும் பைபிளையும் இணைத்த யோகி!


மகாசக்தி மனிதர்கள்-29

பிரியாநாத் கராரின் வாழ்க்கை மனைவியின் மரணத்திற்குப் பின்னால் மாறிப் போனது. ஆன்மிகத்திலும், வேதாந்த தத்துவங்களிலும் உண்மையாகவே நாட்டம் இருந்த அவருக்கு ஒரு குருவின் வழிகாட்டல் அந்தக் கணத்தில் அதிகமாகத் தேவைப்பட்டது. .அந்த சமயத்தில் கோஸ்வாமி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வாரணாசியில் ஒரு யோகியிடம் ஏதோ உபதேசம் பெற்று திரும்பி வந்தார். அவர் தினமும் தன் அறையின் உள்ளே கதவை மூடிக் கொண்டு ஒரு ஆன்மிகப் பயிற்சியைச் செய்து வந்தார். பிரியாநாத் கரார் அவரிடம் என்ன செய்கிறீர்கள் என்று விசாரித்த போது அவர் ‘வாரணாசியில் இருக்கும் ஒரு யோகியிடம் கற்று வந்த பயிற்சியைத் தினம் செய்து வருகிறேன்என்று மட்டும் பதில் அளித்தார். ஆனால் யார் அந்த யோகி என்பதையோ, என்ன பயிற்சி என்பதையோ சொல்ல அந்த கோஸ்வாமி மறுத்து விட்டார். அக்காலத்தில் சில தீட்சை பெற்றவர்கள் தங்கள் குருவைப் பற்றியோ, அவரிடம் கற்றுக் கொண்ட வித்தைகள் பற்றியோ மிக நெருங்கியவர்களிடம் கூடச் சொல்ல மாட்டார்கள். அப்படித் தெரிவித்தால் அந்த வித்தைகளின் பலிதம் குறைந்து விடும் என்கிற அச்சம் தான் அதற்குக் காரணம்.

திடீரென பிரியாநாத் கராரின் மனம் அந்த வாரணாசியில் இருக்கும் யோகியைக் காணத் துடித்தது.  அதற்கான சரியான காரணம் அவருக்கே விளங்கவில்லை. பெரும்பாலான ஆன்மிக முடிவுகளுக்கு அறிவு ரீதியான பதில் கிடைப்பதில்லை அல்லவா? பிரியாநாத் கரார், பெயரோ விலாசமோ கூடத் தெரியாத தன் குருவைத் தேடி வாரணாசிக்குக் கிளம்பினார். ரயிலில் வாரணாசியை வந்தடைந்த அவருக்கு அங்கு ஒரு குருவைத் தேடுவது என்பது திருப்பதியில் மொட்டையைத் தேடுவது போலத் தான். பல விதமான துறவிகள், குருக்கள் வாரணாசியில் ஆயிரக் கணக்கில் இருந்தார்கள்.

தன் மனதில் இருந்த குருவைப் பலரிடமும் விசாரித்து கிடைத்த பதில்களில் இருந்து தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு கடைசியில் ஒரு யோகியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வீட்டில் ஒரு அறையில் அந்த யோகி யோகாசனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரில் சில சீடர்கள் அமர்ந்திருந்தார்கள். அங்கே பேரமைதி நிலவியது. அந்த அமைதியில் அவர்கள் ஆழ்ந்து போயிருந்தார்கள். அந்தக் காட்சி பிரியாநாத் கராரின் அந்தராத்மாவை அசைத்தது. இந்த அமைதியைத் தேடி அல்லவா அவர் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்! அவர் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் அந்த சீடர்கள் அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டார்கள். அந்த யோகி மட்டும் தனித்திருந்தார். பிரியாநாத் கரார் எழுந்து அவர் காலடியில் வணங்கினார். “பல ஜென்மங்களாக நீங்களே எனக்கு குருவாய் இருந்திருக்கிறீர்கள் என்று உணர்கிறேன்என்ற வார்த்தைகள் அவர் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்தன.

அந்த யோகி பெருங்கருணையுடன் புன்னகைத்தார். கங்கையில் குளித்து விட்டு வா சீடனே. உனக்கு தீட்சை அளிக்கிறேன்என்று கனிவுடன் சொன்னார். பிரியாநாத் கரார் அவர் சொன்னபடியே கங்கையில் குளித்து விட்டு வந்தார். அவருக்கு கிரியா யோகா பயிற்சிக்கான தீட்சை அந்த யோகியால் தரப்பட்டது. அந்த யோகி வேறு யாருமல்ல, மகா அவதார் பாபாஜியின் நேரடிச் சீடரான ஷ்யாம்சரண் லாஹிரி மஹாசாயா தான். (இவருக்காக தான் தங்கத்தால் ஆன மாளிகையை இமயமலையில் மகா அவதார் பாபாஜி உருவாக்கினார் என்பதை மகாசக்தி மனிதர்கள் 13, 14 அத்தியாயங்களில் படித்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்).

1884 ஆம் ஆண்டு அவரது சீடரான பிரியாநாத் கரார் தான் பிற்காலத்தில் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி என்ற பெயரில் பிரபல யோகியானவர்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி உடனடியாக துறவியாகி விடவில்லை. கிரியா யோகா தீட்சை துறவுக்கானதும் அல்ல. சில ஆன்மிகப் பயிற்சிகளை குறிப்பிட்ட முறைப்படி தொடர்ந்து செய்ய குருவிடம் இருந்து கற்றுக் கொண்டு திரும்பவும் வீட்டுக்கே வந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி மேலோட்டமாக அந்தப் பயிற்சிகளை மேற்கொள்கிறவராக இருக்கவில்லை. எதிலும் ஆழம் வரை செல்லும் அவர் தூய்மையும் உறுதியும் கொண்ட மனதுடன் யோக மார்க்கத்தில் முழுமையாக ஈடுபட்டார். அவ்வப்போது வாரணாசிக்குப் போய் குருவிடம் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டும் தன்னை மெருகு படுத்திக் கொண்டும் இருந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி யோக மார்க்கத்தில் விரைவாகவே நல்ல முன்னேற்றம் அடைய ஆரம்பித்தார். அது பலரை அவரைப் பின்பற்ற வைத்தது.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் இருக்கும் மிட்னாப்பூரில் அவருக்கு நிறைய சீடர்கள் உருவாகி இருந்தார்கள். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அப்போதும் கூடத் தன் ஆன்மிகத் தாகத்தைத் தீர்க்கும்படியாக எங்காவது மகான்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் அங்கு போய் பலனடைந்து வரும் பழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தார். அவருடன் அந்தச் சீடர்களும் போவார்கள். அப்படிப் போகும் போது ஒரு நதியை அவர்கள் படகில் அடிக்கடி கடக்க வேண்டி இருக்கும்.

அப்படி ஒரு முறை சென்று படகில் அவர்கள் மிட்னாப்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது படகில் திடீரென்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தியான சமாதியில் லயிக்க ஆரம்பித்தார். திடீரென்று படகை பனியும் சூழ்ந்து கொள்ள படகை ஓட்டி வந்த அவருடைய சீடர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி இந்த உலகில் இருப்பதாகத் தெரியவில்லை. படகை பனிமூட்டம் சூழ்ந்து கொண்டதால் போகிற வழியும் தெரியவில்லை.

ஒரு சீடர் பீதியுடன் “மிட்னாப்பூர் எங்கிருக்கிறது?என்று கேட்டார்.
தியான சமாதி நிலையிலேயே இருந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி எதோ ஒரு உலகில் இருந்து பதில் அளிப்பவர் போலச் சொன்னார். “மிட்னாப்பூர்... இந்த உலகில் இல்லை....

சிறிது நேரத்தில் அவர் பழைய நிலைக்கு வந்தார். பனியும் விலகியது. ஆனால் அந்த சமாதி நிலையில் அவர் எந்த உலகத்தில் இருந்தார், என்ன உணர்ந்தார் என்பதை தன் சீடர்களிடம் விவரிக்கவில்லை. சிறு வயதில் இருந்தே அது போன்ற சக்திகளை பிரபலப்படுத்திக் கொள்கிறவர்கள் மீது அவருக்கு சந்தேகம் அதிகம் இருந்ததாலோ என்னவோ தன் சக்திகளைப் பற்றியும் அவர் அதிகம் யாரிடமும் விவரிப்பதில் நாட்டம் கொள்ளவில்லை.

மாறாக அவருடைய உபதேசம் எல்லாம் வேதாந்த தத்துவங்களை எளிமையாக்கி மக்களிடம் பரப்பும் விதமாகவே இருந்தது. அவருடைய குருவான லாஹிரி மஹாசாயா அவரிடம் பகவத் கீதைக்கு எளிமையாகத் தெளிவுரை எழுதச் சொல்ல, அவர் அப்படியே செய்தார். 

1894 ஆம் ஆண்டு அலகாபாத்தில் கும்பமேளாவுக்குப் போய் விட்டுத் திரும்புகையில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்த யாரோ அவரை “சுவாமிஜி, சுவாமிஜிஎன்று அழைப்பது கேட்டது. அப்போது ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி துறவியாகி இருக்கவில்லை என்பதால் வியப்புடன் திரும்பிப் பார்த்தார். தெய்வீகக் களையுடன் நின்று கொண்டிருந்த அந்த சாதுவுக்கு லாஹிரி மஹாசாயாவின் சாயல் இருந்தது.  நான் துறவியல்லஎன்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தெரிவித்தார்.

அதற்கு அந்த சாது “இன்றில்லா விட்டாலும் நாளை ஆவீர்கள். அதனால் தான் அப்படி அழைத்தேன்என்று சொன்னார். உற்றுப் பார்த்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரிக்கு அந்த சாது வேறு யாருமல்ல மகா அவதார் பாபாஜி தான் என்பது புலனாகியது. பரவசத்தில் என்ன செய்வதென்று அறியாமல் திக்குமுக்காடிப் போன ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி பேரானந்தத்துடன் வணங்கினார்.

அப்போது பாபாஜி அவரிடம் பைபிளையும் கீதையையும் இணைத்து இந்த மதங்களில் உள்ள ஒருமைத் தன்மையை உலகத்திற்குப் புரியும்படி ஒரு நூலாக எழுதச் சொன்னார். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி கிறிஸ்துவ மிஷினரி கல்லூரியில் படிக்கையில் பைபிளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தது நினைவிருக்கலாம். அடிப்படையில் எல்லா மதங்களுக்கும் மத்தியில் இருந்த ஒருமைத் தன்மையை விளக்கும் பொறுப்பை பாபாஜி அவருக்கு அளித்தார்.

அதை ஏற்றுக் கொண்ட ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் இருப்பிடத்திற்கு வந்தருளும்படி பாபாஜியை வேண்டிக் கொண்டார். பாபாஜி மறுத்தார். தன் குருவின் குருவுக்கு எதுவுமே தராமல் விடைபெற மனதில்லாத ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அவரை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு தன் இருப்பிடத்திற்கு வந்து பல பொருள்களை எடுத்துக் கொண்டு திரும்பி அதே இடத்திற்கு வந்த போது பாபாஜி அங்கிருக்கவில்லை. அங்கு விசாரித்த போது யாருமே அவர் சொல்கிற அடையாளங்கள் இருக்கிற சாதுவைத் தாங்கள் பார்க்கவே இல்லை என்றார்கள். பாபாஜி இல்லாதது ஏமாற்றம் அளித்தாலும் தனக்கு மட்டுமே காட்சி அளித்திருந்த பாபாஜிக்கு அவர் சொன்ன நூலை எழுதி வெளியிடுவதே உண்மையான சமர்ப்பணம் என்பதை பாபாஜி மறைமுகமாகத் தெரிவித்திருப்பதாக ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி உணர்ந்தார்.

(தொடரும்)   

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி: 04-03-2015



Thursday, June 25, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 51



க்‌ஷய் பயந்தது போல் டார்ச் வெளிச்சம் அவர்கள் இருந்த பக்கம் உடனடியாக நகரவில்லை.  டார்ச்சை வைத்திருந்தவன் திடீரென்று தன் சகாவிடம் கேட்டான். “யார் அவன்?

“எவன்?

“நாம் தேடுபவன்...

“ஏதோ தீவிரவாதி என்று சொன்னார்கள்

“அப்படியானால் அந்தப் பையன்?

“தெரியவில்லை. இரண்டு பேரும் முக்கியமானவர்களாகத் தான் இருக்க வேண்டும். இல்லா விட்டால் லீ க்யாங்கின் வலது கையான வாங் சாவொ இங்கு வரை நேரடியாக வந்திருக்க மாட்டான்

ஏதோ யோசனையுடன் டார்ச்சை கீழ் இறக்கியவன் அறையின் மறுபக்கம் வரை டார்ச் விளக்கை ஒளிர விட்டுக் கொண்டே வந்தான். அவனுடைய சகாவும் அவனைப் பின் தொடர்ந்தான். துப்பாக்கியை இருவரும் தயார் நிலையிலேயே வைத்திருந்தார்கள். இப்போது இருவரும் நேரடியாக அக்‌ஷய்க்கு கீழே நின்றிருந்தார்கள்.  டார்ச் விளக்கு மட்டும் நான்கு பக்கமும் சுழன்றது. டார்ச் விளக்கை வைத்திருந்தவன் ஏதோ யோசனையுடன் டார்ச்சை மறுபடி ஒருமுறை மேலே திருப்ப யத்தனிக்கையில் வெளியே வராந்தாவில் தடால் என்று சத்தம் கேட்டது.

இருவரும் அடுத்த கணம் வராந்தாவில் இருந்தார்கள். அங்கே புத்த பிக்குவின் பிரதான சீடன் கை நிறைய எங்கிருந்தோ அள்ளிக் கொண்டு வந்திருந்த புத்தகங்களைக் கீழே போட்டு விட்டு நின்றிருந்தான். அவர்கள் இருவரும் துப்பாக்கியை நீட்டிய போது கைகளை மேலே உயர்த்தி விட்டு பேந்தப் பேந்த முழித்தான். “என்னைச் சுட்டு விடாதீர்கள்.... சுட்டு விடாதீர்கள்

அவனையும் கீழே விழுந்திருந்த புத்தகங்களையும் இருவரும் மாறி மாறி பார்த்தார்கள். ஒருவன் கேட்டான். “என்ன இது?

சீடன் நடுநடுங்கிக் கொண்டே “புத்....தகங்கள்என்றான்.

“அது தெரிகிறது. ஏன் கீழே போட்டாய்?

“கை... தவறி .....விழுந்து விட்டன  

அவர்கள் அவனை முறைத்து விட்டு பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் டார்ச் வைத்திருந்தவன் மறுபடி அறைக்குள் நுழையத் திரும்பினான். ஆனால் அவன் சகா அவன் தோளைத் தொட்டு நிறுத்தினான். “எல்லாம் தான் பார்த்தாகி விட்டது. திரும்பப் பார்க்க என்ன இருக்கிறது?

அவன் ஒரு கணம் யோசித்தான். பின் தலையசைத்து விட்டு அறையைப் பூட்டி விட்டு அவன் சகாவுடன் கிளம்பி விட்டான்.   

அவர்கள் வருவதைப் பார்த்த புத்தபிக்குவுக்கு மாரடைப்பே வந்து விடும் போல இருந்தது. அவர்கள் வாங் சாவொவிடம் சாவியை நீட்டினார்கள்.

வாங் சாவொ கேட்டான். “அறைக்குள் நன்றாகத் தேடினீர்கள் அல்லவா? அவர்கள் இல்லையே

“இல்லை

புத்த பிக்குவுக்குத் தன் காதுகள் பழுதாகி விட்டனவோ என்ற சந்தேகம் வந்தது. திகைப்புடன் அவர்களையே பார்த்தார். வாங் சாவொ சாவியை வாங்கி விட்டுத் தலையசைக்க அவர்கள் இருவரும் கிளம்பி விட்டார்கள். வாங் சாவொ சாவியை புத்த பிக்குவிடம் வீசினான். அந்த இருவர் தான் மைத்ரேயனும், அவனுடைய பாதுகாவலனும் கிடைக்கவில்லை என்று அவனிடம் தெரிவித்த கடைசி ஆட்கள். இந்தக் கால் மணி நேரத்திற்குள் மற்றவர்களும் வந்து தெரிவித்து விட்டுப் போயிருந்தார்கள். சம்யே பிரதான மடாலயத்திற்குள் இருவரும் இல்லை.....! பின்னால் இருக்கும் அரைகுறை கட்டிடங்களுக்குள் மறைந்திருக்கலாம்..... இல்லை என்றால் முன்பே இங்கிருந்து போயுமிருக்கலாம்.....

வாங் சாவொவின் உள்ளுணர்வில் ஏதோ ஒரு நெருடல் வந்து தங்கியது. கண்களை மூடிக் கொண்டு சிறிது யோசித்தான்.  உள்ளே நுழைகையில் கண்ணைச் சிமிட்டி சிமிட்டி ஏதோ சொல்ல முயன்றவன் நினைவுக்கு வந்தான். அந்த முட்டாள் கோங்காங் மண்டபத்தில் துஷ்ட சக்தியால் தாக்கப்பட்டவன் என்று அவனைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் சொன்னதும் நினைவுக்கு வந்தது. அதற்கும் மைத்ரேயனுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை தான். ஆனாலும் அந்த சம்பவத்தில் ஏதோ ஒன்று நெருடியது.

திடீரென்று வாங் சாவொ எழுந்தான். “கோங்காங் மண்டபத்தை நான் பார்க்க விரும்புகிறேன்என்றான்.

புத்தபிக்கு உடனே அவனைக் கூட்டிக் கொண்டு போனார். வாங் சாவொ அந்த மண்டபத்தில் இருந்த துஷ்டசக்தி சிலைகளை சந்தேகக்கண்களோடு பார்த்தான். அவை வெறும் சிலைகள் தானா இல்லை அதனுள்ளே அல்லது அதன் பின்னால் யாராவது ஒளிந்து கொண்டிருக்கக்கூடுமா என்றெல்லாம் அவன் சந்தேகப்பட்டது தெரிந்தது.

“சிலைகளைத் தொடாதீர்கள்என்றிருந்த அறிவிப்புப் பலகையை லட்சியம் செய்யாமல் இரண்டு சிலைகளைத் தொட்டும் ஆட்டியும் பார்த்து வெறும் சிலைகள் தான் அவை என்பதை அவன் உறுதி செய்து கொண்டான்.  பின் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து மெல்ல வெளியேறினான்.



றைக்கதவு பூட்டப்பட்டவுடனே கீழே இறங்கி விடாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டுப் பின் அக்‌ஷய் மைத்ரேயனைப் பிடித்துக் கொண்டே கீழே குதித்தான். இப்போது தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. மயிரிழையில் ஆபத்தில் இருந்து தப்பித்தது பேராச்சரியமே. அவன் மைத்ரேயனைப் பார்த்துப் புன்னகைக்க மைத்ரேயனும் புன்னகைத்தான். அக்‌ஷய்க்கு மைத்ரேயனைப் பார்த்து மீண்டும் ஒரு முறை பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

மரப்பலகையில் மைத்ரேயனைப் பிடித்துக் கொண்டு அவன் படுத்திருந்த போது அவனுடைய ஒரு கை அந்தச் சிறுவனின் நெஞ்சில் தான் இருந்தது. அதனால் மைத்ரேயனுடைய ஒவ்வொரு இதயத்துடிப்பையும் அவன் கை உணர்ந்து கொண்டு தான் இருந்தது. அவர்கள் மரப்பலகையில் ஏறிய கணத்தில் இருந்து அங்கிருந்து இறங்கி விட்ட இந்தக் கணம் வரை அந்த இதயத்துடிப்பு ஒரே சீராகத் தான் இருந்தது.

முதல் முறை அந்தத் துப்பாக்கி வீரன் டார்ச் விளக்கை அறையின் முன்பக்கத்தில் மேலே காட்டிய போதும் சரி அவர்களுக்கு நேர் கீழே அந்த துப்பாக்கி வீரர்கள் நின்று கொண்டிருந்த போதும் சரி அக்‌ஷய் இதயம் மாரத்தான் ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தது. எந்தக் கணத்திலும் அமைதி இழக்காதவன் என்று பெயரெடுத்தவன் அக்‌ஷய். ஆனால் அந்த அமைதி கட்டுப்பாட்டினால் வரும் அமைதி. பதட்டம், படபடப்பு அனைத்தும் ஏற்பட்டாலும், அதைக் கட்டுப்படுத்தி ஏற்படுத்திக் கொள்ளும் அமைதி. ஆனால் இந்தச் சிறுவனின் அமைதி இயல்பானது. பதட்டம், பரபரப்பு என்று எதையுமே அவன் உணரவேயில்லை என்பதை அவனுடைய சீரான இதயத்துடிப்பே பறைசாற்றி விட்டிருக்கிறது.  

அக்‌ஷய் ஒரு பெருமூச்சு விட்டு கட்டிலில் அமர்ந்தான். மைத்ரேயன் வந்து அவன் அருகே ஒட்டி அமர்ந்து கொண்டான். இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் புத்தபிக்குவும் அவரது சீடனும் வராந்தாவில் பேசிக் கொள்வது கேட்டது. அதன் பின் புத்தபிக்கு கதவைத் திறந்து கொண்டு சீடனுடன் உள்ளே வந்தார்.

அவர் கண்களில் பக்திப்பரவசம். பேரானந்தத்துடன் குரல் தழுதழுக்கச் சொன்னார். “மைத்ரேயரே அவர்களிடம் சிக்காமல் இருந்து பெரும் அற்புதத்தை நிகழ்த்தி விட்டீர்கள்

மைத்ரேயன் உடனடியாக எந்த ஒளிவு மறைவுமில்லாமல் அக்‌ஷயைக் காட்டிச் சொன்னான். “நான் ஒன்றும் செய்யவில்லை. எல்லாம் இவர் தான்.....

புத்தபிக்கு அக்‌ஷயைப் பார்த்துக் கைகூப்பினார். “உங்களுக்கு நாங்கள் நிறையவே கடன்பட்டிருக்கிறோம் அன்பரே...... நீங்கள் எப்படித் தப்பித்தீர்கள்?

அக்‌ஷய் சுருக்கமாகச் சொன்னான். பின் சொன்னான். “கடைசியில் காப்பாற்றியது உங்கள் சீடன் தான்...

சீடன் அக்‌ஷயையும் மைத்ரேயனையும் பார்த்து கைகூப்பினான். மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்த புத்தபிக்கு பிறகு வருத்தத்துடன் அக்‌ஷயிடம் சொன்னார். அவர்கள் உங்கள் இருவரின் புகைப்படங்களை வைத்துக் கொண்டு தேடிக் கொண்டிருக்கிறார்கள் அன்பரே

அக்‌ஷய் அவரிடம் மெல்லக் கேட்டான். “என்னுடைய எந்தப் புகைப்படம் அவர்களிடம் இருக்கிறது?

தாங்கள் இப்போதிருக்கும் கோலம் தான் அன்பரே

அக்‌ஷய் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. சிறிது மௌனம் சாதித்து விட்டுக் கேட்டான். “மைத்ரேயனின் புகைப்படம்?

“அவர் அதில் பள்ளிச் சீருடையில் இருக்கிறார் அன்பரே”

அவனுடைய திட்டத்தையும், உண்மையான மைத்ரேயன் யார் என்பதையும் அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் என்பது அக்‌ஷய்க்கு உறுதியாகியது. எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பது விளங்கவில்லை. ஆனால் இனி பழைய பாஸ்போர்ட்டுடன் திபெத்தை விட்டுத் தப்பித்தல் இயலாத காரியம் என்பது மட்டும் சந்தேகத்திற்கிடமில்லாமல் விளங்கியது....!



வாங் சாவொ லீ க்யாங்கைத் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்தான். சம்யே மடாலயத்தில் மைத்ரேயனும் அவன் பாதுகாவலனும் கிடைக்காமல் இருந்தது அவனுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தது. சம்யே மடாலயத்தின் பின்பக்கப் பரந்த வெளியிலும் அவர்கள் கிடைக்கவில்லை... சம்யே மடாலயத்தில் இருந்து அவர்கள் கிளம்பி எங்கேயோ போயிருந்திருக்க வேண்டும்.... இதைத் தன் தலைவனிடம் சொல்லப் போவதில் அவன் சிறிது அவமானத்தை உணர்ந்தான். தொடர்பு கொள்ள முயன்ற போதெல்லாம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருடனான ஒரு சந்திப்பில் லீ க்யாங் இருக்கிறான் என்ற தகவல் தான் அலுவலகத்தில் இருந்து அவனுக்குக் கிடைத்து வந்தது.

ஆறாவது முயற்சியின் போது லீ க்யாங் பேசக் கிடைத்தான். வாங் சாவொ மைத்ரேயனும் அவன் பாதுகாவலனும் சம்யே மடாலயப்பகுதியில் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்கிற தகவலை வருத்தத்துடன் தெரிவித்தான்.  பின் தொடர்ந்து சொன்னான். “சம்யே மடாலயம் நோக்கி அவர்கள் இருவரும் ஒரு ஜீப்பில் வந்ததைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சம்யே மடாலயத்திலிருந்து அவர்கள் போனதை யாரும் பார்த்தவர்கள் இல்லை. ஒரு வேளை அவர்கள் அங்கிருந்து கிளம்பி இருட்டில் போயிருக்கலாம். அதனால் அவர்கள் யார் கண்ணிலும் படாமல் இருந்திருக்கலாம்.....

லீ க்யாங் அவன் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டாலும் தன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

சம்யே மடாலயத்தில் கண்சிமிட்டி மனிதனுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் மெல்ல அவனிடம் வாங் சாவொ தெரிவித்தான். ”....அந்த கோங்காங் மண்டபமும் போய் பார்த்தேன். ஆனால் அங்கே பயங்கரமான சிலைகள் இருந்ததே ஒழிய சந்தேகப்படும்படியாக வேறு எதுவும் இருக்கவில்லை...... அந்த ஆளுக்கும் மைத்ரேயனுக்கும் சம்பந்தம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் அவன் நடவடிக்கை விசித்திரமாய் பட்டதால் உங்களுக்குத் தெரிவித்தேன்....

வாங் சாவொ சொன்னதை மனதில் அசை போட்ட லீ க்யாங் உஷாரானான். சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “நீ மருத்துவர் என்று அந்த ஆள் நினைக்க ஏதாவது காரணம் இருந்திருக்க முடியுமா?

“இல்லை.... என் கூட இருந்தவர்களும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள்..... அப்படி இருக்கையில் அந்த ஆள் அப்படி நினைக்க வாய்ப்பே இல்லை

பின் ஏன் நீ மருத்துவர் என்று நினைத்து அவன் குணப்படுத்த உதவச் சொல்வதாய் அந்த பிக்கு சொல்கிறார். மேலும் நீ சொல்வதைப் பார்த்தால் அவனை ஆம்புலன்ஸில் ஏற்றத் தான் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஏற்கெனவே மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குப் போய்க்கொண்டிருக்கிறவன் வழியில் கிடைக்கும் எவனோ ஒருவனிடம் தன்னைக் குணப்படுத்தச் சொல்வானா?

வாங் சாவொவுக்கு லீ க்யாங்கின் வாதம் சரியாகவே பட்டது. இது தன் சிற்றறிவுக்கு எட்டவில்லையே என்று அவன் தன் மேலேயே கோபம் கொண்டான். பின் ஏன் அந்த புத்தபிக்கு அப்படிச் சொன்னார்? உண்மையில் அந்த கண்சிமிட்டி மனிதன் சொல்ல வந்ததென்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதில் அறிவது முக்கியம் என்று வாங் சாவொ உணர ஆரம்பித்தான்.

(தொடரும்)

என்.கணேசன்


Tuesday, June 23, 2015

குறும்புச் சிறுவனின் ஆன்மிகப் பயணம்!

மகாசக்தி மனிதர்கள்-28

ங்கை நதிக்கரையோரம் செராம்பூர் என்ற ஊரில் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டமுள்ள பெற்றோருக்கு 1855 ஆம் ஆண்டு பிறந்த பிள்ளை பிரியாநாத் கரார். இளம் வயதிலேயே அவர் தந்தையை இழந்தாலும் அவர் குடும்பம் வசதியான குடும்பமாக இருந்ததால் பள்ளிக்குச் செல்வதிலும், கல்வி கற்பதிலும் அவருக்குப் பிரச்னைகள் இருக்கவில்லை. இயல்பிலேயே அறிவுக்கூர்மை, தைரியம், பல துறைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்த அவருக்குப் பல மொழிகள் படிக்கும் ஆர்வமும் இருந்தது. அதனால் அவர் இளம் வயதிலேயே பெங்காலி, ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் பாண்டித்தியம் கொண்டவராக விளங்கினார். ஆனால் கூடவே குறும்பும் நிறையவே அவரிடம் இருந்தது.  

சிறு வயதிலேயே எதைக் கேள்விப்பட்டாலும் அது எந்த அளவு உண்மை என்று அறிவதில் அவர் அதிக அக்கறை காட்டினார்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

என்று திருவள்ளுவர் சொன்னதைச் சிறுவயதில் இருந்தே கடைபிடித்தவர் நம் பிரியாநாத் கரார்.

மகனின் குறும்பை அடக்கி பயமுறுத்தி வைக்க அவரது தாய் ஒருமுறை ஒரு இருட்டான அறையில் பேய் வாசம் செய்வதாகச் சொல்ல, அடுத்த கணம் அவர் அந்த இருட்டான அறைக்கு விரைந்தார். பேயை அந்த அறையில் காண முடியவில்லை என்பதில் அவருக்கு பெரிய வருத்தமும் கூட ஏற்பட்டது.  அன்றிலிருந்து மகனிடம் பேய்க்கதைகள சொல்வதை அவர் தாய் தவிர்த்தார்.

அவரிடம் ஒரு யோகி தினமும் இரவு அந்தரத்தில் மிதந்தபடி தியானம் செய்வார் என்று பலரும் சொன்னார்கள். அவர் தன்னிடம் கூறியவர்களிடம் எல்லாம் கேட்டார், “நீங்கள் அதை நேரில் கண்டிருக்கிறீர்களா?”.  சிலர் தாங்கள் கண்டதில்லை, மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம் என்று  சொன்னார்கள். சிலர் தாங்கள் கண்டதில்லை, ஆனால் தங்களுக்குத் தெரிந்தவர்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். சிறுவன் பிரியாநாத் கராருக்கு அந்தப் பதில்கள் திருபதி அளிக்கவில்லை. இந்தியாவில் அக்காலத்திலும் கூட போலிகள் நிறைய இருந்ததால் கேள்விப்பட்ட தகவல் உண்மையா பொய்யா என்று அறியும் ஆர்வம் அந்தச் சிறுவனுக்கு ஏற்பட்டது.

அந்த யோகியின் இருப்பிட விலாசம் தெரிந்து கொண்டு நேராக தானே அங்கு ஒரு மாலை நேரத்தில் சென்று விட்டார். யாருக்கும் தெரியாமல் அந்த யோகியின் அறைக்குள் சென்று பிரியாநாத் கரார் கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டார். இரவு வந்தது.  அந்த யோகி தனதறைக்கு வந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார். பின் கட்டிலில் அந்த யோகி படுத்துக் கொண்டார்.

காலம் சென்று கொண்டே இருந்தது. பிரியாநாத் கரார் அடிக்கடி ரகசியமாய் அந்த யோகி அந்தரத்தில் மிதக்க ஆரம்பிக்கிறாரா என்று கவனித்துக் கொண்டே இருந்தார். யோகி மிதக்க ஆரம்பிக்கிறது போல் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து போய் பிரியாநாத் கரார் கட்டிலுக்கு அடியிலிருந்தபடியே கேட்டே விட்டார். “ஏன் இன்னும் நீங்கள் மிதக்க ஆரம்பிக்கவில்லை

திடுக்கிட்டுப் போன யோகி எழுந்து கட்டிலுக்கு அடியே எட்டிப் பார்த்து “பொடியனே, நீ இருப்பதால் தான் எனக்கு இன்று இன்னும் சமாதி நிலை எட்ட மாட்டேன்கிறதா?என்று திட்டி விரட்டி விட்டார். ஒரே ஓட்டத்தில் அந்த இடத்தைக் காலி செய்த பிரியாநாத் கராருக்கு அன்று அந்த ஆள் நிஜமாகவே யோகி தானா, அந்த சக்தி உண்மையாகவே இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இது போன்ற பெரும்பாலான அசாதாரண சக்திகள் பெற்றவர்கள் பற்றிய கதைகள் எல்லாம் கட்டுக்கதைகளே என்கிற எண்ணம் அவரிடம் தங்கி விட்டது.

பிரியாநாத் கரார் குடும்பத்திற்கு கோஸ்வாமி என்ற குலப்பெயர் கொண்ட குடும்பத்துடன் நெருங்கிய நட்பு இருந்தது. அந்த கோஸ்வாமி குடும்பத்தினரும் ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்கள் ஆன்மிகப் பெரியோரைத் தங்கள் வீட்டுக்கு அழைத்து கௌரவித்து அவர்கள் உபதேசங்களையும், ஆன்மிகக் கருத்துகளையும் கேட்பது வழக்கம். அப்படி ஒரு முறை ஒருவரை அழைத்திருந்தார்கள். அந்த நபர் சம்ஸ்கிருத சுலோகங்களைக் கரைத்துக் குடித்தவராக இருந்தார். என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு சில சம்ஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி இதில் பதில் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அதற்கு திருப்தி அளிக்கக் கூடிய கருத்துச் செறிவு மிக்க மேலதிக விளக்கங்கள் அவரிடமிருந்து கிடைக்கவில்லை.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதிலும் பிரியாநாத் கரார் அப்போதே சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமை பெற்றிருந்தார். அந்த சம்ஸ்கிருத வல்லுனர் மொழிப் புலமை பெற்றிருந்த போதும் ஆன்மிக மெய்யறிவு இல்லாதவர் என்பது பிரியாநாத் கராரின் அபிப்பிராயமாக இருந்தது. வேத நூல்களில் இருந்து மேற்கோள்கள் மட்டும் காட்டி விட்டு அது ஏன் சரி என்ற அறிவார்ந்த விளக்கமோ, அனுபவ விளக்கமோ தர முடியாமல் இருப்பது மெய்ஞானம் அல்ல என்று அவர் எண்ணினார்.

அந்த சம்ஸ்கிருத வல்லுனர் இது போல சுலோகங்களைப் பதிலாகச் சொல்லிக் கொண்டிருக்கையில் அவர் காது கேட்கும் படி தன் வயதை ஒத்த சிறுவர்களிடம் சற்று தள்ளி இருந்தபடி இவரும் ஒரு சுலோகத்தைச் சொல்லி இது மெய்ஞானத்தை அடைய ஒரே வழி என்று சொல்லிக் கொண்டிருந்தார். சிறுவர்களுக்கு அந்தச் சுலோகத்தின் பொருள் என்ன என்று விளங்கவில்லை. அவர்களிடம் தாழ்ந்த குரலில் பிரியாநாத் கரார் சொன்னார். “இதை அடைய ஒரே வழி தெருவெல்லாம் சிறுநீர் கழித்துக் கொண்டு போவதேஎன்பது தான் நானே உருவாக்கிய இந்த சம்ஸ்கிருத சுலோகத்தின் பொருள்”.  அங்கிருந்த சிறுவர்களுக்குத் தங்கள் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த சம்ஸ்கிருத வல்லுனருக்கு பிரியாநாத் கரார் உருவாக்கிய சுலோகத்தின் பொருளும் கேலியும் புரிய சிறிது நேரம் பிடித்தது. கடுமையாக சினம் கொண்ட அவர் ராஸ்கல் நீ என்ன சொன்னாய்? என்னையே கேலி செய்கிறாயா?என்று கேட்டுக் கொண்டே நெருங்குவதற்குள் பிரியாநாத் கரார்  அங்கிருந்து ஓட்டமெடுத்து விட்டார்.

அங்கிருந்த கோஸ்வாமி வீட்டுப் பெரியவர்கள் பிறகு தனியாக பிரியாநாத் கராரை அழைத்துக் கடிந்து கொண்டார்கள். அப்போது பிரியாநாத் கரார் சொன்னார். “எதையுமே உணர்ந்து விளக்குவதற்கு அந்த ஆளுக்குத் தெரியவில்லை. . நான் சொன்னதும் ஒரு சம்ஸ்கிருத சுலோகம் தான். அதனால் என்ன பலன்? எதையும் விளங்கிக் கொள்ளாமல் சும்மா சுலோகங்களைச் சொல்வதால் மட்டும் யாராவது ஞானம் பெற முடியுமா? அதைச் சுட்டிக் காட்டத் தான் நான் அப்படிச் செய்தேன் பெரியவர்களுக்கு அவர் சொன்னதில் உள்ள உண்மையை மறுக்க முடியவில்லை.

இப்படி வயதிற்கு மீறிய அறிவுக்கூர்மையும், உண்மையானதை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும் என்கிற கொள்கையும் கொண்ட பிரியாநாத் கரார் கல்வியிலும் வேகமாக முன்னேறினார். ஒரு கிறிஸ்துவ மிஷினரி கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற அவருக்கு பைபிள் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது.  இந்திய வேதாந்த நூல்களைப் போலவே அவர் பைபிளையும் ஆழமாகப் படித்தார். கிறிஸ்துவ மிஷனரிக் கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் கல்கத்தா மருத்துவக் கல்லூரியிலும் சுமார் இரண்டாண்டுகள் பயின்றார்.

கல்வியை முடித்த அவர் தங்கள் குடும்ப சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டார். அவருடைய தாய் அவருக்கு ஒரு பெண் பார்த்து மணம் முடித்து வைத்தார். எதிர்காலத்தில் ஒரு சிறந்த யோகியாய் ஆகப் போகிற அவரைக் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியாய் நிலைத்து விட விதி விடவில்லை. ஒரு பெண் குழந்தையைப் பெற்றுத் தந்து அவர் மனைவி இறந்து விட்டார். பிரியாநாத் கராரிடம் இயல்பாகவே இருந்த ஆன்மிக வேட்கை அதிகரித்தது.

ஒரு மகாசக்தி மனிதராய் எப்படி அவர் மாறினார், அவரது பிற்காலப் பிரபலமான பெயர் என்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போமா?

-          என்.கணேசன்

-          நன்றி: தினத்தந்தி: 27-03-2015

Thursday, June 18, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 50


வாங் சாவோ புத்த பிக்குவிடமிருந்து வாங்கிய சாவியை தன்னிடம் பூட்டி இருந்த அறை பற்றிச் சொன்ன துப்பாக்கி வீரனிடம் தந்தான். அந்தத் துப்பாக்கி வீரன் தன் சகாவுடன் வேகமாகப் போனான். போகும் இருவரையும் படபடக்கும் இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த புத்த பிக்கு அவர்கள் மைத்ரேயனையும், அந்தப் பாதுகாவலனையும் அந்த அறையில் பார்த்து விட்ட பிறகு என்ன ஆகும் என்று பயந்தார். அந்தப் பாதுகாவலன் மின்னல் வேகத்தில் நகரக் கூடியவன், சாமர்த்தியமானவன் என்பதெல்லாம் இந்த மடாலயத்திலேயே நிரூபணம் ஆகி இருந்த போதும் அவன் சமாளிக்க வேண்டி இருப்பது வாங் சாவொவின் இரண்டு துப்பாக்கி வீரர்களை மட்டும் அல்ல என்கிற உண்மை அவரை கதிகலங்க வைத்தது. தன் அலுவலக அறை வழியாக வெளியே பல இடங்களில் தெரிந்த துப்பாக்கி வீரர்களைக் கவலையுடன் பார்த்தார்.  இத்தனை பேரையும் அவன் சமாளிப்பானா, மைத்ரேயர் ஏதாவது மகிமையை நிகழ்த்துவாரா, அவர்கள் பிடிபடுவார்களேயானால் அவர்களை ஒளித்து வைத்து இருந்ததற்கு கிடைக்கும் தண்டனை என்னவாக இருக்கும் போன்ற கேள்விகள் பெரிதாக எழும்பி அவரை அழுத்தின.

அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வாங் சாவொ சந்தேகத்துடன் கேட்டான். நீங்கள் எதற்கோ பயப்படுவது போல் தெரிகிறதே?

புத்த பிக்கு வறண்ட புன்னகை ஒன்றை வரவழைத்தார். “நீங்கள் இருக்கிற போது பிரச்னை இல்லை, நீங்கள் இல்லாத போது அந்தத் தீவிரவாதி வந்தால் என்ன செய்வது என்று யோசிக்கிறேன். எந்த வழியும் பிடிபடவில்லை”.  அப்போதைக்கு அவர் ஏதோ சொல்லி சமாளித்தாரே ஒழிய மைத்ரேயனையும் பாதுகாவலனையும் ஒருவேளை அவர்கள் பிடித்து விட்டால் இப்படி பொய் பேசியதற்கும் சேர்த்து இந்த அதிகாரி தண்டிப்பான் என்ற பயம் வந்தது....

வாங் சாவொ அவரைத் தைரியப்படுத்தினான். “கவலைப்படாதீர்கள்.  அவர்களை கூடிய சீக்கிரமே உயிரோடோ பிணமாகவோ பிடித்து விடுவோம்....”  அவன் வார்த்தைகள் நாராசமாக அவர் காதுகளில் ஒலித்தன. வெளிறிய முகத்துடன் அவர் தலையசைத்தார்.


புத்த பிக்குவின் அறையில் இருந்த அக்‌ஷய் வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்தது அந்தத் துப்பாக்கி வீரர்கள் ஆரம்பத்தில் அந்த அறையின் பூட்டை வெளியே இழுத்துப் பார்த்த போது தான். யாரோ சாவி இல்லாமல் பூட்டை இழுத்துப் பார்க்கும் சிறிய சத்தம் அமைதியாக அமர்ந்திருந்த அவனை உஷார்ப்படுத்தியது. மூளையின் அத்தனை செல்களும் பரபரப்பாய் வேலை செய்த போதும் தன் மன அமைதியை இழக்காமல் எழுந்து நின்றான்.

அவன் கண்கள் அந்த அறையை தீர்க்கமாய் பார்வையிட்டன. ஆபத்து காலத்தில் எதுவுமே பிரச்னையாகலாம், அதே போல எதுவுமே சரியாக உபயோகப்படுத்தும் போது அனுகூலமும் ஆகலாம். அந்த அறையில் தங்களுக்கு அனுகூலமாகவும்,  ஆபத்தாகவும் இருக்கும் அம்சங்களை வேகமாக ஆராய்ந்து பார்த்தான்.

அந்த அறையில் இரண்டு ஜன்னல்கள் இருந்தன. ஒன்று கதவருகே இருந்த, வரவேற்பறையைப் பார்க்க முடிந்த ஜன்னல். இன்னொன்று அறையின் மறுகோடியில் இருந்த, மடாலயத்தின் வெளியே பார்க்க முடிந்த ஜன்னல். முன்னெச்சரிக்கையாக வரவேற்பறைப் பக்கம் இருந்த ஜன்னலை புத்த பிக்கு காலையில் போகும் போதே சாத்தி விட்டுப் போயிருந்தார். வெளியே நன்றாகப் பார்க்க முடிந்த ஜன்னல் திறந்தால் மட்டுமே நல்ல வெளிச்சம் அறைக்குள் வரும். ஆனால் அப்படித் திறந்தால் வெளியே இருப்பவர்கள் உள்ளே இருப்பவர்களைப் பார்க்க முடியும் என்பதால் மறுகோடியில் இருந்த ஜன்னல் அவர்கள் இருவரும் வந்த பின் திறக்கப்பட்டிருக்கவில்லை.

மின் விளக்குகளை புத்தபிக்கு போகும் போதே அணைத்து விட்டுப் போய் இருந்ததால் அறையில் இப்போது வெளிச்சம் தந்து கொண்டிருந்தது நெருப்பு மூட்டும் பகுதியில் எரிந்து கொண்டிருந்த விறகுகளும், மறு மூலையில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கும் மட்டுமே.  அக்‌ஷய் அந்த திறக்காத ஜன்னலை சத்தமில்லாமல் மெல்ல சிறிது திறந்து பார்த்தான். தூரத்தில் துப்பாக்கியுடன் வீரர்கள் தெரிந்தார்கள். சத்தமில்லாமல் பழையபடி ஜன்னலை மூடிய அக்‌ஷய் அமைதி மாறாமல் அறையை மறுபடி கவனமாக ஆராய்ந்தான். பின் கூரையைப் பார்த்தான். மிக உயரமாகத் தான் மேல் கூரை இருந்தது. மேலே உயரத்தில் ஒன்று முற்பகுதியிலும் மற்றது பிற்பகுதியிலுமாய் இரண்டு மரப்பலகைகள் அரை அடி அகலத்தில் அறையின் குறுக்கே சென்றிருந்தன. அவன் பார்வை அந்த மரப்பலகைகளில் தங்கியது.

பின் அக்‌ஷய் மின்னல் வேகத்தில் இயங்கினான். அறையின் கடுங்குளிரைத் தடுத்துக் கொண்டிருந்த எரியும் விறகுகளை முதலில் அணைத்தான். இப்போது அனல் துண்டுகள் மட்டும் நெருப்பைக் கசிய விட்டுக் கொண்டிருக்க ஆரம்பித்தன. மறுமூலையில் எரிந்து அகல் விளக்கை எடுத்துக் கொண்டு வந்து அறையின் முன் பகுதியிலேயே வைத்தான். இப்போது அறையின் முன்பகுதியில் மங்கலான வெளிச்சமும், மற்ற பகுதியில் இருட்டும் நிலவியது.

பின் அக்‌ஷய் புத்தக அலமாரியை நெருங்கினான். அங்கு புத்தகங்களின் மேல் சம்யே மடாலய வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட சில அச்சிட்ட காகிதங்கள்  இருந்தன. அதில் சிலவற்றை எடுத்து தனித்தனியாக நன்றாக சிறுசிறு மடிப்புகளாக மடித்து வைத்துக் கொண்டு வெளிப்புறத்தை நோக்கித் திறக்கும் ஜன்னலை நெருங்கினான்.

மெல்ல சத்தமில்லாமல் அந்த ஜன்னல் கதவைத் திறந்து அந்த காகித மடிப்புகளை வெளிப்பார்வைக்குத் தெரியாமல் இடுக்குகளில் கவனமாக வைத்து இறுக்க மூடினான். பின் ஜன்னல் கதவைத் திறக்கும் கைப்பிடியை சிரமப்பட்டு அகற்றினான். பின் மைத்ரேயனிடம் கேட்டான். “ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. சிறிது நேர அசௌகரியத்தைப் பொறுத்துக் கொள்ள முடியுமா?

மைத்ரேயன் அக்‌ஷயின் ஒவ்வொரு செயலையும் அது வரை கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அக்‌ஷய் அப்படிக் கேட்டவுடன் சின்னப் புன்னகையுடன் தலையாட்டினான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அக்‌ஷய் அவனை நிறுத்தி விட்டு அங்கிருந்த மின் விளக்கு பல்பை எடுத்து அதை இரண்டு மூன்று முறை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்தான். பல்பின் உள்ளே மின் இழை ஒன்று அறுபட்டது. அதைக் கவனமாக அப்படியே பழையபடி மாட்டி விட்டு வேகமாக ஓடி வந்து மைத்ரேயனைப் பிடித்துக் கொண்டு சுவரில் கால் வைத்து எம்பி அந்த அறையின் பிறபகுதியில் குறுக்கே சென்றிருந்த மரப்பலகையைப் பிடித்துக் கொண்டு அப்படியே அதில் மல்லாக்க படுத்துக் கொண்டு மைத்ரேயனைத் தன் மீது பத்திரமாய் படுக்க வைத்துக் கொண்டான்.

“என்ன ஆனாலும் சரி பயப்பட வேண்டாம். எதுவும் செய்யப்போகவும் வேண்டாம். எந்த சத்தமும் செய்யாமல் அமைதியாக இரு. நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்.என்று தாழ்ந்த குரலில் அக்‌ஷய் மைத்ரேயனிடம் சொல்ல மைத்ரேயன் தலையாட்டினான்.

சில வினாடிகளில் வாங் சாவொ கையிலிருந்து சாவி வாங்கியிருந்த துப்பாக்கி வீரர்கள் இருவரும் பூட்டைத் திறந்து கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தார்கள். இருவரில் ஒருவன் “மின் விளக்கைப் போடுஎன்றான். மற்றவன் சுவரில் ஸ்விட்சைத் தேடினான். விளக்கொளி விழும் இடத்திலேயே ஸ்விட்ச் தெரிய அதை அழுத்தினான். விளக்கு எரியவில்லை. மின் விளக்கைப் போடச் சொன்னவன் அகல் விளக்கை எடுத்து உயர்த்தி பல்பைப் பார்த்தான். மின் இழை அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. அது போதாதென்று அறையின் முற்பகுதியில் அணைய முற்பட்டிருந்த விறகுக் கனல்களும், சின்னதாய் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கும் அவர்கள் இருவர் முகங்களிலும் அதிருப்தி ரேகைகளை ஏற்படுத்தின. வரவேற்பறையை நோக்கித் திறக்கும் ஜன்னலை மெல்லத் திறந்தார்கள். சற்று மங்கலான வெளிச்சம் மட்டுமே கூடியது.

அகல் விளக்கை வைத்துக் கொண்டிருந்தவன் அறையின் மையப்பகுதிக்கு மெல்ல வந்தான். மறு கோடியில் இருந்த ஜன்னல் அவன் கவனத்தை ஈர்த்தது. “அந்த ஜன்னலைத் திற. கண்டிப்பாக வெளிச்சம் வரும்என்று அவன் சொல்ல மற்றவன் சென்று அந்த ஜன்னலைத் திறக்க முயற்சி செய்தான். கைப்பிடியும் இல்லாத அந்த ஜன்னல் திறக்க மறுத்தது.

“இந்த ஜன்னலுக்குக் கைப்பிடியும் இல்லை. இறுக்கமாய் இருக்கிறது”  என்று  சொல்லி அவன் தட்டித் திறக்கப் பார்த்தான். ஜன்னலின் மரக்கட்டைகள் சற்று நெருக்கமாகவே இருந்ததால் அவனால் ஜன்னல் கதவைத் திறக்க அதிக பலம் பிரயோகிக்க முடியவில்லை.

“சரி விடுஎன்றான் அகல் விளக்கைப் பிடித்துக் கொண்டிருந்தவன். மற்றவன் தன் கால்சட்டைப் பையில் இருந்து ஒரு சிறிய டார்ச்சை எடுத்தான்.

மேலே மரக்கட்டையில் படுத்திருந்த அக்‌ஷய் மிகவும் ஜாக்கிரதையானான். பொதுவாகவே ஒரு அறையில் யாராவது இருக்கிறார்களா என்று தேடுபவர்கள் கீழே மூலை முடுக்கெல்லாம் தேடினாலும் அறையில் பரண் இருந்தால் ஒழிய மேல்தட்டில் ஆட்களைத் தேடுவதில்லை. முழு வெளிச்சமும் உள்ள அறையில் மேல்தட்டில் உள்ள ஒரு மரப்பலகையில் ஆள் இருப்பதை பார்வையில் விளிம்பில் ஒருவர் உணர்ந்தாலும் உணர வாய்ப்புண்டு. அரைகுறை வெளிச்சத்தில், அதுவும் அகல்விளக்கு போன்றதன் வெளிச்சத்தில் பார்க்கும் போது அவர்களின் நிழல்களே அறைக்குள் பிரம்மாண்டமாய் விரியும் போது மேல்தட்டில் மரப்பலகையில் இருக்கும் தங்களைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு குறைவு என்று கணக்கிட்டு தான் அக்‌ஷய் இத்தனை ஏற்பாடுகள் செய்திருந்தான்.

ஆனால் டார்ச் விளக்கு சற்று அபாயமானது தான்.   குறிப்பிட்ட நோக்கம் எதுவுமில்லாமல் கூட விளையாட்டாய் மேல் நோக்கி ஒளி பாய்ச்சும் வாய்ப்பும் உண்டு. அப்படி ஒரு நிகழ்வு நேரும் பட்சத்தில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புண்டு. அப்படி ஆனால் இருவரையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதில் பெரிய வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு அன்பாய் அடைக்கலம் குடுத்த புத்தபிக்கு எதிரிகளிடம் மாட்டிக் கொள்வார். அவர்கள் அவரை எப்படிச் சித்திரவதை செய்து உண்மையை வரவழைக்க முயல்வார்கள் என்பதைச் சொல்ல முடியாது....

டார்ச் விளக்கால் அறையை நிதானமாக அந்த துப்பாக்கி வீரன் சுற்ற மற்றவன் அகல் விளக்கை ஓரமாக வைத்து விட்டு துப்பாக்கியை குறி வைத்துக் கொண்டு பார்வையைச் சுழற்றினான். புத்தக அலமாரியை டார்ச் வெளிச்சம் அடைந்த போது சந்தேகத்துடன் அவன் மெல்ல புத்தக அலமாரியை நெருங்கினான். புத்தக அலமாரியின் பின்புறம் படர்ந்திருந்த இருட்டில் யாராவது ஒளிந்திருக்கக் கூடும் என்று அவன் எதிர்பார்த்த்து போல் இருந்தது. டார்ச் பிடித்திருந்தவனும் இடது கையில் டார்ச்சை வைத்துக் கொண்டு வலது கையில் துப்பாக்கியைத் தயாராக வைத்தபடி சற்று தள்ளி நெருங்கி வந்தான்.

புத்தக அலமாரிக்குப் பின்னால் யாரும் இல்லை என்று ஆனதும் அவர்களது அடுத்த கவனம் சுவர் ஓரமாக வைத்திருந்த புத்தபிக்குவின் நீண்ட மரப்பெட்டி மீது திரும்பியது. அதையும் திறந்து பார்த்தார்கள். அதில் புத்தபிக்குவின் சில உடைகளும் உடமைகளும் இருந்தன. இரண்டு கட்டில்களுக்கு அடியில் பார்த்தார்கள். அப்படிப் பார்க்கும் போதெல்லாம் துப்பாக்கி விசையின் மீது அவர்கள் விரல்கள் தயாராக இருந்தது. அறையின் முற்பகுதியின் மேலே டார்ச் விளக்கைக் காட்டி அவர்கள் பார்த்த போது அக்‌ஷய் மைத்ரேயனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். இப்போது அந்த வீரர்களின் பின்புறத்தில் அவர்கள் இருந்ததால் கண்டுபிடிக்கப்படவில்லை.  ஆனால் அந்த வீரர்கள் திரும்பி டார்ச் ஒளியை அதே போல மறுபக்க மேல் பாகத்திலும் பாய்ச்சினால் மைத்ரேயனும், அக்‌ஷயும் அவர்கள் பார்வையில் படுவது உறுதி.

மயிரிழையில் ஆபத்து காத்திருக்கிறது என்பதை உணர்ந்த அக்‌ஷய்க்கு அவன் கட்டுப்பாட்டையும் மீறி இதயம் வேகமாக ஓட்டமெடுத்தது. அந்த ஓட்டமும் அவனுக்காக அல்ல மைத்ரேயனுக்காகவும், அந்த புத்த பிக்குவுக்காகவும்......! எந்தக் கணமும் புலி போல் பாய அக்‌ஷய் தயாரானான்.

(தொடரும்)
என்.கணேசன்

Monday, June 15, 2015

புலிகளை வென்றதோடு புலன்களையும் வென்றவர்


மகாசக்தி மனிதர்கள்-27

சங்கிலியையே அறுத்துக் கொண்டு பாயும் ஆவேசமும், வலிமையும் கொண்ட அந்த கொடும்புலி பாய்ந்து தோள் சதையையும் ருசி பார்த்ததில் ஷ்யாமகண்ட உபாத்யாயா இரத்த வெள்ளத்தில் அப்படியே கீழே சாய்ந்தாலும் உடனடியாக சுதாரித்துக் கொண்டார். ஆனால் மனித ரத்தத்தின் ருசி பார்த்து விட்ட அந்த பசித்த புலியை ஒரு கையால் மட்டும் சமாளிக்க வேண்டிய நிலையில் அவர் இருந்தார். இடது கையால் அவர் வேகமாக புலியைத் தாக்க புலியும்  அவரைக் கடுமையாகத் தாக்கியது. கூண்டுக்குள் இரத்த வெள்ளம் வழிந்தோட ஆரம்பித்தது.

கூடியிருந்த கூட்டத்தினர் அவர் உயிரை ராஜா பேகம் பறித்து விடும் என்று பயந்து போய் கத்தினார்கள். “புலியைச் சுட்டுத் தள்ளுங்கள்.... புலியைச் சுட்டுத் தள்ளுங்கள்”.  ஆனால் காவலாளிக்கு புலியும், ஷ்யாமகண்ட உபாத்யாயாவும் வேகமாகப் புரண்டு இடம் மாறிக் கொண்டிருந்ததால்  துப்பாக்கியைச் சரியாகக் குறிபார்க்கவும் முடியவில்லை. கடைசியில் ஷ்யாமகண்ட உபாத்யாயா அந்தப் புலியைக் கீழே தள்ளி அதன் மீது விழுந்து தன் எடையைக் கூட்டி அதை அசைய விடாமல் செய்து சகல பலத்தையும் திரட்டி தன் இடது கையால் இடி போல சரமாரியாகப் புலியைத் தாக்க ராஜா பேகம் புலி சோர்ந்து போய் மயங்கி சாய்ந்தது. பின்பு மிக ஜாக்கிரதையாக அந்தப் புலியை மறுபடியும் பலமாகக் கூண்டுக் கம்பியில் கட்டி விட்டு வெற்றியுடன் ஷ்யாமகண்ட உபாத்யாயா வெளியே வந்தார். இந்த முறை கூடி இருந்தவர்களின் கரகோஷம் இரண்டு மடங்காக இருந்தது. கூடி இருந்த அனைவரும் ஒருமனதாக அவரைப் பாராட்டினார்கள். ஆனால் எப்போதும் வெற்றி அடைந்த பின்பு அடையும் பெருமிதம் அவருக்கு அப்போது ஏனோ இருக்கவில்லை.

கட்ச் பீகார் அரசர் அவருடைய வெற்றியை ஒத்துக் கொண்டு அவருக்கு ராஜா பேகம் புலியையும் பணத்தையும்  பரிசளிக்க ஷ்யாமகண்ட உபாத்யாயாவின் வெற்றி எல்லோராலும் பரிபூரணமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அந்தப் புலியோடு சண்டையிட்ட போது ஏற்பட்ட காயங்களில் விஷக்கிருமிகள் தாக்கி  துறவி முன்பு எச்சரித்தது போல ஷ்யாமகண்ட உபாத்யாயா கடும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். மரணத்தின் விளிம்புக்கே சென்று விட்ட அவருக்கு மருத்துவம் மிகவும் தாமதமாகத் தான் பலனளிக்க ஆரம்பித்தது. அவர் குணமாக ஆறு மாதங்கள் தேவைப்பட்டன. அந்த ஆறு மாத காலம் அவருக்கு சுயபரிசோதனைக் காலமாக மாறியது. அவர் மனம் பழைய வாழ்க்கை முறையில் சலிப்பை உணர்ந்தது.

சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து தன் சொந்த ஊருக்குத் திரும்பிய அவர் புதிய மனிதராய் மாறி இருந்தார்.  அவருடைய தந்தையிடம் முன்பு ஒரு துறவி எச்சரிக்கை விடுத்திருந்தது எத்தனை சரியாகப் போயிற்று என்பதை அவர் அடிக்கடி எண்ணிப் பார்த்தார். அந்தத் துறவி ஒரு மகானாக இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. அந்த மகானை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்ற பேராவல் அவருக்குள் எழ ஆரம்பித்தது. அதைத் தன் தந்தையிடமும் தெரிவித்தார்.

அவர் விருப்ப்பபடியே திடீரென்று ஒரு நாள் அந்தத் துறவி அவரைச் சந்திக்க வந்தார். மனதில் இருக்கும் கொடிய விலங்குகளை வெல்லாமல் வனத்தில் இருக்கும் விலங்குகளை வெல்வதில் என்ன பலன்?என்று கேட்டார். அந்தக் கேள்வியில் இருந்த உண்மை அவர் மனதில் தைத்தது.

அந்தத் துறவி மேலும் தொடர்ந்து சொன்னார். என்னுடன் வா. உன் மன விலங்குகளை அடக்கி உன்னை நீ வெற்றி கொள்வது எப்படி என்று நான் கற்றுத் தருகிறேன். இத்தனை நாட்கள் சில நூறு மனிதர்கள் முன் உன் சாதனையைக் காட்டப் பழக்கப்பட்டிருக்கிறாய். பிரபஞ்சத்தின் தேவதைகள் முன் உன்னை நீ வென்று சாதனையைக் காட்ட இனி பழகிக்கொள்.

தன் வாழ்வில் அந்தத் தருணத்திற்காகவே இது வரை காத்திருந்ததாய் ஷ்யாமகண்ட உபாத்யாயா உணர்ந்தார். உடனடியாக அவர் அந்தத் துறவியை குருவாக ஏற்றுக் கொண்டு சன்னியாசியாக மாறினார். அந்தத் துறவி வேறு யாருமல்ல. திபெத்திய பாபா தான்.

திபெத்திய பாபா தன் முதல் தவத்தை தான் மிகவும் நேசித்த ஆட்டை மனதில் நிறுத்திச் செய்தது நினைவிருக்கலாம். அப்படி ஆரம்பித்து அஷ்டமகா சித்திகளை அடைந்திருந்த அவருக்கு மற்ற மனிதர்களுடைய எண்ணங்கள் மட்டுமல்ல, விலங்கினங்களின் உணர்வுகளையும் படிக்க முடிந்திருந்தது. அதனால் தான் அவர் புலி இனத்தின் உணர்வுகளைப் படித்து ஷ்யாமகண்ட உபாத்யாயாவுக்கு எச்சரிக்கை விடுக்க முடிந்தது. அஷ்டமகாசித்திகளைப் பெற்றிருந்த அவருக்கு எதிர்காலத்தையும் அறிய முடிந்திருந்ததால் தான் ஆறு மாத காலம் நோய்வாய்ப்பட வேண்டி இருக்கும் என்பதையும் தெரிவித்திருந்தார்.

அப்படிப்பட்ட மகாசக்தி வாய்ந்த திபெத்திய பாபாவுடன் ஷ்யாமகண்ட உபாத்யாயா இமயமலைக்குப் பயணமானார். அவருடைய குருவான திபெத்திய பாபா அவருக்கு வைத்த பெயர் “சோஹம் சுவாமி”.  சோஹம் என்றால் சமஸ்கிருதத்தில் நானே அதுஎன்று பொருள். தன்னிடம் இருக்கும் இறைத்தன்மையை உணர்ந்த சுவாமி என்ற பொருளில் அழைக்கப்பட்ட அவருடைய ஆன்மிகப் பயணம் 1899 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. புலிகளை அடக்குவதை முழுமையாக விட்டு விட்டு ஆன்மிக மார்க்கத்தில் அவர் பயணிக்க ஆரம்பித்தாலும், அவரை குரு வைத்த சோஹம் சுவாமி என்ற பெயரில் அழைப்பதை விட அதிகமாய் புலி சுவாமி என்ற பெயரிலேயே பலரும் அழைத்தார்கள்.

புலன்களை முழுமையாக வெல்வதற்கு புலிகளை வெல்வதை விட கூடுதல் மகாசக்தி தேவை அல்லவா? புலி சுவாமியிடம் இயல்பாகவே அமைந்திருந்த மன உறுதி துறவறத்திலும் முழுமையான புலனடக்கத்துடன் இருந்து மன விலங்குகளை அடக்கி சாதனை புரிய வைத்தது. அது வரை அவர் ஓய்ந்து விடவில்லை.  

ஆன்மிக ஞானத்திலும் முத்திரை பதித்த புலி சுவாமி தான் பெற்ற ஞானத்தை பிற்கால மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் நைனிடாலிலும் ஹரித்வாரிலும் ஆசிரமங்கள் அமைத்தார். சோஹம் கீதா, சோஹம் சம்ஹிதா, பொது அறிவு, உண்மை, முதலான நூல்களையும் எழுதி அறிவுபூர்வமான ஆன்மிகத்தைப் பரப்பினார். பொது அறிவு என்ற நூலில் ஆன்மிகம் என்ற பெயரில் பின்பற்றப்படும் மூட பழக்க வழக்கங்களை அவர் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

அவருடைய உபதேசங்களில் மிக முக்கியமான கருத்து மனிதன் தன்னை உடல்ரீதியாக அடையாளம் கண்டு உடலே தான் என்று இருத்தல் ஆகாது என்பதே. உடலே தான் என்று எண்ணுகையில் கர்வமும், அச்சமும் மனிதனுக்கு வரலாம். ஆனால் அழிவற்ற ஆத்மாவாகவே தன்னை அறியும் போது மட்டுமே அவன் பிரச்னைகளில் இருந்து விடுபட்டவனாகிறான் என்கிறார் புலி சுவாமி. உடலே தான் என்று வாழ்ந்து, உடல் ரீதியாக நாடு போற்றும் பலத்தையும் பெற்று, பின் தெளிவு பெற்ற அவருடைய உபதேசத்தின் உண்மைக்கு அவருடைய வாழ்க்கை வரலாறே சான்று அல்லவா?

அடுத்த வாரம் இன்னொரு சுவாரசியமான மகாமனிதரைப் பார்ப்போம்.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 20-03-2015