சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 11, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 49

 மாராவின் ஆளை வெளியே நின்று கொண்டிருந்த ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். ஆம்புலன்ஸின் உள்ளே அமர்ந்து கொண்டிருந்த ஒடிசலான இளைஞனைப் பார்த்தவுடன் மாராவின் ஆளுக்கு புது தெம்பு பிறந்தது. அவன் அவர்கள் ஆள். ஏதாவது வழி செய்வான், தாங்க முடியாத வலியிலிருந்து அவனைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால் அந்த ஒடிசல் இளைஞன் அவனைப் பார்த்து புன்னகை கூடச் செய்யவில்லை. உணர்ச்சியே இல்லாமல் புதிதாக ஒருவனைப் பார்ப்பது போல் பார்த்தான். இது நல்ல அறிகுறி அல்ல. மாராவின் ஆளுக்கு அந்தக் குளிரிலும் குப்பென்று வியர்த்தது.

ஆம்புலன்ஸ் அங்கிருந்து மெல்ல நகர ஆரம்பித்தது. அந்த ஒடிசல் இளைஞன் அவனைப் பார்த்து சொன்னான். “நீ தவறு செய்து விட்டாய் நண்பா.

இந்த வாசகத்தை ஒருவரைத் தீர்த்துக் கட்டும் முன்பு அவர்கள் இயக்கத்தில் சொல்வது வழக்கம். எந்தக் காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிப்பது தான் நியாயம் என்று அவர்கள் இயக்கம் உறுதியாக நம்பியது. மாராவின் ஆளே இது போல் தெரிவித்து இரண்டு பேரைக் கொன்றிருக்கிறான். தானும் அப்படியே கொல்லப்படுவோம் என்பதை அவன் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

ஒடிசல் இளைஞன் அமைதியாகவே சொன்னான். “வாங் சாவொவிடம் நீ மைத்ரேயனின் பாதுகாவலனைக் காட்டிக் கொடுக்க முயன்றது மிகப்பெரிய தவறு. மைத்ரேயனும் அவன் பாதுகாவலனும் நமக்கு எதிரிகளாக இருக்கலாம். மைத்ரேயனின் பாதுகாவலன் உனக்கு இழைத்தது கொடுமையாக இருக்கலாம். ஆனால் லீ க்யாங்கும் நமக்கு நண்பன் அல்ல. நம் இயக்கம் இருக்கிறதே அவன் கவனத்துக்கு வராமல் இன்று வரை இருக்கிறது. இன்று நீ மைத்ரேயனையும் அவன் பாதுகாவலனையும் காட்டிக் கொடுத்தால் அவர்கள் இருவரும் பிடிபடுகிறார்களோ இல்லையோ மைத்ரேயனுக்கு சீனாவைத் தவிர வேறு எதிரிகளும் இருப்பது லீ க்யாங் கவனத்துக்கு வரும். ஒரு சின்ன இழை கிடைத்தால் போதும் மீதியை அவன் தோண்டி எடுக்காமல் விடமாட்டான். அது நம் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.... இதை எல்லாம் யோசித்துப் பார்க்காமல் நீ அவசரப்பட்டு விட்டாய். வெற்றி நூறு சதவீதம் என்கிற உறுதி இல்லாத பட்சத்தில் நீ மைத்ரேயனைக் கொல்ல கோங்காங் மண்டபத்தைத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது. அங்கு அது வெற்றியில் முடியாமல் பதிலுக்கு அங்கேயே நீ இப்படி தாக்கப்பட்டு நம் இயக்கத்துக்கே அவமானத்தைப் பெற்றுத் தந்திருக்கிறாய்.....

மாராவின் ஆள் கண்களில் கெஞ்சல் தெரிந்தது. அந்த ஒடிசல் இளைஞன் முகத்தில் ஒரு கணம் இரக்கம் வந்து போனது. அவன் சொன்னான். “கோங்காங் மண்டபத்தில் நீ தோற்று ஏற்படுத்திய அவமானத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் உன்னைக் குணப்படுத்த என்ன வழி என்று ஆரம்பத்தில் நிறையவே ஆராய்ந்திருந்தோம். உன்னைத் தாக்கியவனைத் தவிர வேறு நாலைந்து திபெத்திய லாமாக்கள் மட்டுமே அவன் போட்ட முடிச்சை அவிழ்க்க வல்லவர்கள். அவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவர்கள் உன்னைக் குணப்படுத்த முன் வரவில்லை. உன்னைப் போன்ற ஒருவனைக் காப்பாற்றினால் அதற்குப் பின் நீ செய்யும் எல்லா தீய கர்மாக்களிலும் அவர்களுக்கும் பங்கு வந்து சேர்ந்து விடும் என்று சொல்லி அவர்கள் மறுத்து விட்டார்கள். அதனால் எதிர்காலத்தில் உன்னைத் தாக்கியவனை வைத்தே உன்னைக் குணப்படுத்தவும் ஏதோ திட்டம் தீட்ட வேண்டும் என்கிற அளவு மாரா நினைத்திருந்தார்.... 

‘நான் சொல்ல வந்ததைத் தான் வாங் சாவொ புரிந்து கொள்ளவில்லையே. அதனால் எந்தப் பிரச்னையும் வந்து விடவில்லையே. பின் ஏன் எனக்குத் தண்டனைஎன்று மாராவின் ஆள் கேட்கவில்லை. முட்டாள்தனத்தை அவர்கள் இயக்கம் என்றுமே பொறுத்துக் கொண்டதில்லை. மன்னிக்கப்படுபவன் மறுபடியும் அந்தத் தவறை செய்வான் என்பதை அவர்கள் இயக்கம் உறுதியாக நம்பியது....

மாராவின் ஆளுக்கு வாங் சாவொவிடம் அவன் கண்ணசைவில் சொல்ல முற்பட்டதை இவ்வளவு வேகமாக மாராவிடம் சொல்லி மரண தண்டனை பெற்றுத் தந்தது யார் என்ற சந்தேகம் வந்தது. இவனாகவும் இருக்கலாம்... சம்யே மடாலயத்தில் இருக்கிற அவனது மற்ற சகாக்களாகவும் இருக்கலாம்...

மைத்ரேயனைக் கொல்ல அவன் பயன்படுத்த இருந்த விஷ ஊசியை ஒடிசல் இளைஞன் கையில் எடுத்து அவன் கையில் லேசாகச் சொருகினான். மனதில் எழுந்த கடைசி சந்தேகத்திற்கு பதில் தெரிந்து கொள்ளாமலேயே மாராவின் ஆள் இரண்டு நிமிடங்களில் இறந்து போனான்.

அவன் இறந்து போனதை உறுதிப்படுத்திக் கொண்ட ஒடிசல் இளைஞன் ஆம்புலன்ஸில் டிரைவருக்குப் பின்பிறம் இருந்த தடுப்புக் கண்ணாடியைத் தட்டினான். ஆம்புலன்ஸ் நின்றது. ஒடிசல் இளைஞன் ஆம்புலன்ஸில் இருந்து இறங்கிக் கொண்டான். அவன் டிரைவரைப் பார்த்துத் தலையசைத்தான். அங்கு வரை குறைந்த வேகத்தில் வந்திருந்த ஆம்புலன்ஸ் உள்ளே ஒரு பிணத்துடன் வேகமாகப் பறந்தது.

சம்யே மடாலயத்தை நோக்கி ஒடிசல் இளைஞன் நடக்க ஆரம்பித்தான். மைத்ரேயன் வாங் சாவொவிடம் பிடிபட்டாலும் சரி, பிடிபடாமல் தப்பித்துச் சென்றாலும் சரி அந்த இளைஞனுக்கு மைத்ரேயன் அங்கிருந்து போகும் வரை அங்கு வேலை இருக்கிறது!.


வாங் சாவொ  அந்த புத்த பிக்கு மைத்ரேயனைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். “இவனை எங்கே பார்த்திருக்கிறீர்கள்?”  என்று கேட்டான்.

புத்த பிக்கு மடாலயத்தின் பின்பக்கம் கையைக் காண்பித்தார். இந்தப் பையன் மடாலயத்தின் பின் வெளியில் சுற்றிக் கொண்டிருப்பதைப் பல முறை பார்த்திருக்கிறேன்....

“கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?

“இரண்டு மாதம் இருக்கும். ஏன் கேட்கிறீர்கள்?

வாங் சாவொ இங்கு நான் மட்டும் தான் கேள்வி கேட்பேன் என்பது போல் பதில் சொல்லாமல் அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு கேட்டான். “இந்த இரண்டு மூன்று நாட்களில் இவனை இங்கே பார்த்திருக்கிறீர்களா?

புத்த பிக்கு இயல்பாய் பதில் சொல்லப் படாதபாடு பட்டார். “இல்லை

வாங் சாவொ புத்த பிக்கு உடையில் இருந்த அக்‌ஷய் புகைப்படத்தைக் காட்டி கேட்டான். “இந்த ஆளை?

இல்லைபதில் சொன்ன பிறகு புத்த பிக்குவுக்கு பதிலை வேகமாகச் சொல்லி விட்டோமோ என்ற சந்தேகம் வந்தது. அதற்கு ஏற்றாற் போல் வாங் சாவொ அவரை சந்தேகத்துடன் பார்க்கவே “இந்த பிக்குவை நான் இதற்கு முன் பார்த்ததில்லைஎன்று சொன்னார்.

வாங் சாவொ அவர் மேல் வைத்த பார்வையை எடுக்காமல் “இந்த ஆள் பிக்கு அல்ல. ஒரு தீவிரவாதி. இந்த ஆளுக்கு அடைக்கலம் தந்தாலோ, இந்த ஆள் பற்றிய தகவல் தெரிந்து அதைச் சொல்லாமல் இருந்தாலோ அது அரசுக்கு நீங்கள் செய்கிற துரோகம் ஆகும்என்று சொன்னான்.

புனித ஆடையைத் தீவிரவாதிகளும் போட ஆரம்பித்திருப்பது காலத்தின் கோலம்என்றார் புத்த பிக்கு. அவர் அபிப்பிராயத்திற்கு அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் சிறிது நேரம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இதை விட அவன் கேள்வி கேட்பதே நல்லது என்று புத்த பிக்குவுக்குத் தோன்ற ஆரம்பித்தது. நேரம் செல்லச் செல்ல அவர் இதயத்துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவரது பூட்டிய அறையைப் பார்த்து விட்டு வந்து விடுவார்களா இல்லை அதற்குள்ளும் பார்த்தே தான் தீர்வது என்று அடம்பிடிப்பார்களா? அப்படிப் பிடிவாதமாக திறந்து காட்டச் சொன்னால் என்ன செய்வது?

அவருக்குப் பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது.   அதைக் கவனித்த வாங் சாவொ சந்தேகத்துடன் அவரிடம் கேட்டான். “என்ன விஷயம்? ஏதோ தவறு செய்து விட்டு பயப்படுவது போல் தெரிகிறது?

புத்த பிக்கு கஷ்டப்பட்டு சமாளித்தார். “எதோ தீவிரவாதி என்கிறீர்கள். அவனை இங்கே தேடுகிறீர்கள். நீங்கள் போன பிறகு அவன் இங்கே வந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். பயமாக இருக்கிறது.... இது போன்ற சூழ்நிலைகளுக்கு நான் பழக்கமானவன் அல்ல

அவன்  சந்தேகம் தீராமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். பேசிக் கொண்டே இருந்தால் சற்று சமாளிக்கலாம் என்று தோன்றியதால் அவர் அவனிடம் கேட்டார். “அந்தப் பையனுக்கும் இந்த ஆளுக்கும் என்ன சம்பந்தம்? அந்தப் பையனை இந்த ஆள் கடத்திக் கொண்டு வந்து விட்டானா என்ன?

வாங் கண்கூட இமைக்காமல் சொன்னான். “ஆமாம்

“கடத்திக் கொண்டு வருபவர்கள் மடாலயத்திற்கா வருவார்கள்? நீங்கள் வேறெங்காவது தேடுவது நல்லது

“இங்கே கிடைக்கா விட்டால் மற்ற இடங்களில் கண்டிப்பாகத் தேடுவோம். அவர்கள் இருவரையும் இந்தப் பகுதியில் பார்த்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறதுஎன்று  வாங் சாவொ சொன்னான்.

“பல முறை அந்தப் பையனை இந்த மடாலயத்தின் சுற்றுப் பகுதியில் பார்த்திருந்தாலும் அவன் ஒரு முறை கூட இந்த மடாலயத்தின் உள்ளே காலடி எடுத்து வைத்தவனல்ல. அதனால் எதற்கும் வெளிப்பக்கமே நன்றாகத் தேடுங்கள்

வெளிப்பக்கமும் ஆட்கள் இரண்டு பேரையும் தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. தப்பிக்க முயன்றால் சுட்டுக் கொன்று விடுவோம்

புத்தபிக்குக்கு மனதில் எழ ஆரம்பித்திருந்த பீதியைக் கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டமாக இருந்தது.

அந்த நேரமாகப் பார்த்து இரண்டு துப்பாக்கி வீரர்கள் வாங் சாவொ அருகில் வந்தார்கள். அவர்களில் ஒருவன் வாங் சாவொ காதில் என்னவோ சொன்னான். வாங் சாவொ புத்த பிக்குவை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே கேட்டான். “இங்கு ஏதோ ஒரு அறை பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்களே. அது உண்மையா?

ஒரு கணம் புத்தபிக்குவின் இதயத்துடிப்பு நின்றே போனது. மெல்ல சொன்னார். “அது அடியேனுடைய அறை தான். மடாலயத்தைச் சுற்றிப் பார்க்க வருபவர்கள் தெரியாமல் என்னுடைய அறைக்கும் போய் விடுகிறார்கள். அது தொந்தரவாக இருப்பதால் தான் நான் அங்கில்லாத போது பூட்டிக் கொண்டு வந்து விடுவது வழக்கம்.

வாங் சாவொ கேட்டான். “சாவி எங்கே?

ஒரு கணம் சாவி தொலைந்து விட்டது என்று நாடகமாடலாமா என்று புத்த பிக்குவுக்குத் தோன்றியது. அப்படிச் செய்தால் அவர்கள் சந்தேகம் உறுதியாகி விடும். கதவை உடைத்துக் கொண்டு போய்த் தேடினாலும் தேடுவார்கள். போதிசத்வரே, இது என்ன சோதனை?

வாங் சாவொ அவரையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கவனித்தார். இடுப்பில் சொருகி இருந்த சாவியை எடுத்து அவனிடம் காட்டினார். “சாவி என்னிடம் தான் இருக்கிறது. பூட்டிய அறைக்குள் அவர்கள் போயிருக்க சாத்தியமில்லை

அவர்கள் பார்த்து விடுவதில் உங்களுக்கு நஷ்டம் இல்லையேஎன்று சொல்லி வாங் சாவொ கை நீட்ட அவர் வேறு வழியில்லாமல் சாவியைத் தந்து விட்டார்.  ஆனால் அவர் இதயமே நின்று விடும் போல் இருந்தது.

அவர்கள் இருவரும் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்?

(தொடரும்)
என்.கணேசன்     



8 comments:

  1. Very interesting. Great writing.

    ReplyDelete
  2. வரதராஜன்June 11, 2015 at 6:53 PM

    விறுவிறுப்பாகச் செல்கிறது கணேசன். தொடரும் என்ற சொல் வரும் வரை சம்யே மடாலயத்திலேயே இருந்து பார்ப்பது போல் தோன்றியது.

    ReplyDelete
  3. " இப்படி பண்றீங்களேண்ணா. . ."

    (ஓரு வாரம் காக்க வைப்பதை கூறுகிறேன்).

    பகிர்வுக்கு நன்றி அண்ணா. . .

    ReplyDelete
  4. வீறு வீறுப்பாக செல்கிறது.....நன்றி

    ReplyDelete
  5. Really superb. We are unable to wait for one week

    ReplyDelete
  6. Excellent...enjoyed thoroughly...waiting for next week...

    ReplyDelete