சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 26, 2014

ஆழ்வார்களின் ஆன்மிகமும், அறிவியலும்!


அறிவார்ந்த ஆன்மிகம் - 39

மகாவிஷ்ணுவின் மகத்தான குணங்களில் மயங்கி அவர் நினைவிலேயே ஆழ்ந்து போனதால் அந்த அடியார்கள் ஆழ்வார்கள் என்றழைக்கப்பட்டார்கள். கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிமு பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் பாடல்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்றழைக்கப்படுகிறது.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், மதுரகவியாழ்வார் ஆகிய பன்னிரண்டு ஆழ்வார்கள் உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையுமெல்லாம், கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி பாடிய பாடல்கள் அவை.

நாலாயிர திவ்யபிரபந்தம் வெறும் பக்தி இலக்கியமாக மட்டும் அல்ல. அந்தப் பாடல்களில் பக்தியோடு சமூக நோக்கு உண்டு, மனித நேயம் உண்டு, ஆன்மிக ஞானத்தின் சாராம்சம் உண்டு, ஏன் அறிவியல் கூட உண்டு. அவற்றை சிறிது பார்ப்போம்.

ஆழ்வார்களின் பக்தியிலும் பரந்த கண்ணோட்டம் உண்டு. பொய்கையாழ்வார் பாடிய ஒரு பாடல் இது.

''தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் அப்பேர் - தமருகந்தது
எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்'' .-                 

எந்த உருவத்தை விரும்புகிறோமோ அது அவன் உருவம். எந்தப் பெயரைக் கொடுக்கிறோமோ அது அவன் பெயர். எந்தவிதமாக சிந்தித்து இடைவிடாமல் தியானம் செய்வீர்களோ அந்த விதமாகவே இருப்பான் சக்கரத்தான் ஆகிய இறைவன்என்று சொல்கிறார் அவர். பக்தி தான் ஆழ்வார்களின் அடித்தள நாதம். உருவமோ, பெயரோ, தன்மைகளோ இல்லாத இறைவன் பக்தர்கள் விரும்புகின்ற உருவத்தில், பெயரில், தன்மைகளில் பொருந்தி விடுகிறான் என்று சொல்கின்ற பரந்துபட்ட நோக்கு அவர்களுடையது.

அதே போல இறைவன் தங்களுக்கு என்ன தந்தாலும் அது நன்மைக்கே என்று எண்ண முடிந்த அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுடையதாக இருந்த்து.
           வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் 
           மாளாத காதல் நோயாளன்போல் மாயத்தால் 
           மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டு அம்மா! நீ 
           ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே! 

என்று பாடினார் குலசேகராழ்வார். வித்துவக் கோட்டு அம்மானே! மருத்துவர் கத்தியால் அறுத்துச் சூடு போட்டாலும் அவர் மீது வெறுப்பு கொள்ளாத, அன்பு குறையாத நோயாளி போல,  நீ உன் மாயத்தால் நீங்காத துன்பத்தைத் தந்தாலும் உனக்கு அடிமையாய் உன் அருளையே எதிர்பார்த்து இருப்பேன்   என்ன அழகான உதாரணம் பாருங்கள்.

எல்லாம் இறைவனே என்று சொல்லி சரணாகதி அடையும் பக்தி ஆழ்வார்களுடையது. தங்கள் தவறுகளையும் பலவீனங்களையும் ஒத்துக் கொள்வதிலும் நீயே வழிகாட்ட வேண்டும் என்று சொல்வதிலும் அவர்களுக்கு சிறிதும் தயக்கம் இல்லை. நம்மாழ்வார் பாடிய அழகான பாடல் ஒன்றில் இந்த உணர்வு மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

இவையன்றே நல்ல இவையன்றே தீய
இவையென் றிவையறிவ னேலும் இவையெல்லாம்
என்னால் அடைப்புநீக் கொண்ணா திறைவனே
என்னால் செயற்பால தென்?

அவர் சொல்கிறார். “இவை நல்லது இவை கெட்டது என்று எனக்குத் தெரிகிறது என்றாலும் இவற்றை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லையே இறைவனே! என்னால் செய்ய முடிந்தது என்ன இருக்கிறது. எல்லாம் நீயே அல்லவா?சஞ்சலங்கள் நிறைந்த வாழ்வில் ஒவ்வொரு பக்தனும் அவ்வப்போது புலம்பும் நிலையே அல்லவா இது?  

நாலாயிர திவ்விய பிரபந்தத்தை எழுதிய ஆழ்வார்கள் உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள், உயர்நிலைகளில் இருப்பவர்கள் மட்டுமே அல்ல. எல்லாக் குலத்தவர்களும் அந்தப் பட்டியலில் இருந்தார்கள். அரசர் முதல் கள்வர் வரை   பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள். சாதி வித்தியாசம் பார்க்காமல் இருப்பது வைணவக் கருத்துக்களில் பிரதானமாக இருந்தது.


"பழுதிலா ஒழுகலாற்று பலசதுப்பேதிமார்கள்
இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்களாகில்
தொழுமின் நீர்”  

என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாடுகிறார். இழிகுலத்தவர்களேயானால் கூட இறைவனின் அடியார்கள் என்றால் அவர்கள் தொழத் தக்கவர்கள் என்ற கொள்கையில் ஆழ்வார்கள் உறுதியாய் இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். சாதி, மதப் பிரிவினைகள் பெரிதாக இருந்த காலத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு நிலை எடுத்திருந்தது ஆழ்வார்களின் சமத்துவத்திற்கான சமூகப் புரட்சி சிந்தனையே அல்லவா?

இனி ஆழ்வார்களின் அறிவியல் சிந்தனையைப் பார்ப்போம்.  ஆண்டாள் பாடுகிறார்.

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

மழைக் கடவுளே…! எதையும் நீ ஒளிக்காதே.. கடலுக்குள் புகுந்து அதிலிருந்து தண்ணீரை முகர்ந்து, பின் ஆகாயம் ஏறி கண்ணன் உருவம் போல் கறுத்து, அழகிய தோளுடைய பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல் மின்னல் அடித்து, அவனது சங்கு போல் இடி முழங்கி, அவனது சாரங்கம் (வில்) அம்புகளைப் பொழிவதைப் போல உலகம் அனைத்தும் வாழவும், நாங்கள் மார்கழி நீராடவும் பெய்திடுவாய்…!!!

கடலுக்குள் நீர் முகர்ந்து, பின் மேலே போய் கருமேகமாகி இடி மின்னல் போன்ற பக்க விளைவுகளோடு உலகம் வாழப் பெய்யுமாறு மழையை வேண்டுகிற இந்தப் பாடலில் ஆண்டாள் மழை பொழிவது எப்படி என்கிற விஞ்ஞானத்தை, ஒன்பதாம் நூற்றாண்டிலேயே, தெளிவாக அறிந்திருந்தது போல் அல்லவா தோன்றுகிறது?

அதே போல இன்னொரு பாடலில் பொய்கையாழ்வார் இப்படிப் பாடுகிறார்.

என்று கடல் கரைந்தது ? எவ்வுலகம் நீறேற்றது ?
ஒன்றும் உணரேன் நான் அன்று அது
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது நீ
படைத்திடந்து உண்டு உமிழ்ந்த பார்.

இதன் விளக்கம் இது தான். “எப்போது கடலைக் கடைந்தாய்? எப்போது உலகை நீர் கொண்டு நிரப்பினாய்? இது எதுவும் எனக்குத் தெரியாது. அன்றொரு நாள் கடலை அடைத்து பாலம் அமைக்கிறாய், அதை உடைக்கிறாய், அதிலே படுத்தும் உறங்குகிறாய். இவ்வுலகைப் படைக்கிறாய்; பெயர்த்தெடுக்கிறாய்; அதை உண்டு உமிழ்கிறாய்.

இதில் அடைத்து உடைத்து என்ற வரிக்கு சக்தியை ஒரு புள்ளியில் அடைத்து வெடிக்கச் செய்து பிரபஞ்சம் உருவாக்கிய Big Bang Theory யின் சாயல் இருப்பதாக சில அறிஞர்கள் வியாக்கியானம் செய்கிறார்கள்.

இப்படி ஆழ்வார்களின் அழகான பாசுரங்களில் பக்தி மட்டுமல்லாமல் அறிவியல் மற்றும் சமூக பிரக்ஞையும் மிக உயர்ந்த அளவில் இருப்பது நம்மை வியக்க வைக்கிறதல்லவா?

-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 03.12.2013

3 comments: