ப்ரத்யுக்ஷா: கதாசிரியர்கள் எல்லோரும் "நல்ல எழுத்தாளர்" என்பதை விட "நல்ல entertainer" ஆகா இருக்க வேண்டும். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
கதையின் ஓட்டத்தில் ஒரு விஷயம் தேவை அல்லது இதுக் கதைக்குத் தேவையில்லை என்று எவ்வாறு தீர்மானிக்கின்றீர்கள்?
நான்: ஒரு எழுத்தாளன் சொல்கின்ற விஷயங்கள் நல்லதாக இருப்பது மட்டுமல்ல அவை வாசகர்கள் மனதைக் கவரும்படி இருப்பதும் முக்கியம். அப்போது தான் அந்த எழுத்தாளன் நல்ல எழுத்தாளன் ஆகிறான். நல்ல Entertainer ஆக மட்டுமே இருப்பது அந்த எழுத்தாளனுக்குப் பெருமை சேர்க்கிற தகுதி அல்ல என்பது என் கருத்து. அந்தந்த நேரப் போக்கிற்காக மட்டும் எழுதும் எழுத்தாளன் காலப்போக்கில் மதிக்கப்படுவதில்லை, மாறாக மறக்கப்படுகிறான்.
மொத்தக் கதைக்குப் பொருந்துகிற விதத்தில் அமைகிற விஷயம் தேவை, அந்த ஓட்டத்தைத் தடை செய்வதாகவோ, பொருந்தாததாகவோ இருக்கும் விஷயம் தேவை அற்றது. அதை ஒரு நல்ல எழுத்தாளன் எழுதுகிற போதே உணர்ந்து சேர்க்கவோ, அகற்றவோ முடியும்.
ப்ரத்யுஷா: உங்களுக்கு மெயில் மூலமாக, கமெண்ட்ஸ் மூலமாக, போன் கால் மூலமாக எத்தனையோப் பாராட்டுக்கள் வந்ததாக கூறினீர்கள். கேட்டபோது "You deserve it sir" என்றுக் கூறத் தோன்றியது. அதே போல் நேரில் உங்கள் முகத்திற்கு நேராக ஒருவர் பாராட்டும் போது எப்படி உணர்வீர்கள். முகமறியா ஒருவர் பாராட்டுவதற்கும், எதிரில் வந்து ஒருவர் பாராட்டுவதற்கும் வித்தியாசம் இருக்குமே…
நான்: பாராட்டுகள் ஒரு எழுத்தாளனுக்கு உரம் போன்றது. அடுத்த படைப்புகள் மேலும் சிறப்பாக வர உதவும். போனில், மெயிலில், நேரில் என்று எப்படி வந்தாலும் மகிழ்ச்சி தான். நேரில் பாராட்டு வரும் போது அது சற்று மிகையாக இருக்கும் பட்சத்தில் சிறிது தர்மசங்கடம் தான். பொதுவாக பாராட்டுகளில் எனக்கு உரித்தான அளவை மட்டும் உள்ளே எடுத்துக் கொண்டு மீதியை பாராட்டுபவர்களின் அன்பின் வெளிப்பாடு என்று விட்டு விட பழகிக் கொண்டிருக்கிறேன்.
ருத்ரா: மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது? ஒரு சில விஷயங்கள் அறிவுக்கு தெரிந்தாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. அறிவுக்கு தெரிந்த ஒன்றை எப்படி மனதுக்கு உணர்த்துவது?
நான்: ஒரு அளவுக்கு மேல் எதையுமே மிக சீரியஸாக எண்ணாமல் இருப்பது தான் புத்திசாலித்தனம். ஏன் என்றால் அவ்வளவு சீரியஸாக எண்ண எப்போதுமே அவசியம் இல்லை. நீர்க்குமிழி வாழ்க்கையில் எது சாசுவதம்? எல்லாம் ஒரு நாள் முடியும் என்ற தலைப்பில் ’வாழ்ந்து படிக்கும் பாடங்களில்’ கடைசியாக எழுதிய பாடத்தை, முடிந்தால் படிக்கவும். மன அழுத்தம் தானாக குறையும்.
மனம் தன்னுடைய விருப்பு வெறுப்பைக் கொண்டே சிந்திக்குமே ஒழிய நமக்கு நல்லது கெட்டது வைத்து சிந்திக்காது. அதனாலேயே மனதிற்கு எதையும் புரிய வைப்பதற்கு ஓரளவுக்கு மேல் மெனக்கெடுவது வீண். சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு மனம் ”ஆனால்....” என்று ஆரம்பிக்கும். அதனால் மனம் சொல்லிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் விரைந்து அறிவு சரியாகச் சொல்கிறதை செயல்படுத்தி விட வேண்டும். சொல்வது சுலபம். செயல்படுத்துவது கஷ்டம் தான். ஆனால் அது ஒன்று தான் வழி.
கார்த்திகா: உங்களோட Autograph வாங்கின முதல் நபர் யார்ன்னு சொல்ல முடியுமா? முதலில், உங்ககிட்ட ஒருத்தர் Autograph கேட்கும் போது நீங்க எப்படி Feel பண்ணீங்க..
நான்: ஆழ்மனதின் அற்புதசக்திகள் நூலைக் கொண்டு வந்து என்னிடம் தந்து ஒரு வாசகர் அதில் என் கையெழுத்தைக் கேட்டார். அவர் பெயர் நினைவில்லை. எல்லா முதல் நல்ல அனுபவங்களைப் போலவே அதுவும் இனிமையாகவே இருந்தது. ஆனால் ஆட்டோகிராஃப் கையெழுத்துக்கள் தாள்களில் தங்குவதை விட என் எழுத்துக்கள் வாசகர்களின் மனதில் அதிகம் தங்குமானால் அதுவே அதிக இனிமையானதாகவும், நிறைவானதாகவும் நினைக்கிறேன்.
கார்த்திகா: நீங்கள் நிறைய முறை படித்த ஐந்து புத்தகங்கள் என்ன என்னன்னு சொல்ல முடியுமா??
நான்: நான் அதிக முறை படித்த ஐந்து புத்தகங்கள் இவை-
1) கல்கியின் “பொன்னியின் செல்வன்”
2) Dr.Wane W.Dyer எழுதிய “You’ll see it when you believe it”
3) Deepak Chopra எழுதிய “Ageless Body and Timeless Mind”
4) Eckhart Tolle எழுதிய “A new earth”
5) Christian D Larson எழுதிய “Your forces and How to use them”
ப்ரியா: "Paraman Ragasiyam" book was suggested by my Grandpa(My own Grandpa's friend, to be precise). Apparently he picked the book in Book fair and loved it immensely. I read and true to his words felt really overwhelmed. Coming to the point, while deciding your story plot do you decide the "Target audience" too??
நான்: கதைக்கரு தேர்வான பின் அதை சுவாரசியமாக சொல்ல முடிந்த அம்சங்கள் அனைத்தையும் நான் அதில் சேர்த்துக் கொள்கிறேன். ஒரு குறிப்பிட்ட "Target audience" க்காக நான் எழுதுவதில்லை. சிலர் சில பகுதிகளை சிலாகித்து அதிகம் ரசிப்பார்கள். மற்றவர்கள் வேறு சில பகுதிகள் அதிகம் ரசிப்பார்கள். ஆனாலும் மொத்தமாய் அனைத்து தரப்பினரும் ரசிக்க ஏதோ ஒன்று என் நாவல்களில் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றேன்.
கார்த்திகா: எழுத்து - இதை தவிர உங்களுடைய மற்ற பொழுது போக்குகள் என்ன..??
நான்: ஆரம்ப காலத்தில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு படிப்பது தான். கதைகள், இலக்கியம், வரலாறு, வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், தன்னம்பிக்கை நூல்கள், ஆன்மிக நூல்கள், மனோதத்துவம், தத்துவம் என்று எல்லாம் படிப்பேன்.
அடுத்ததாக இசை. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி பாடல்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக பழைய பாடல்கள் கேட்க மிகவும் பிடிக்கும்.
ஒருகாலத்தில் நிறைய திரைப்படங்களும் பார்ப்பேன். இப்போது நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை.
(தொடரும்)
வணக்கம்
ReplyDeleteமனஅழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது பற்றியும் எப்படி திறமையாக படைப்புக்களை எழுத வேண்டும் என்ற விடயங்களை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இது வரை இந்த பேட்டியில் கேட்டிருந்த பல கேள்விகள் என் மனதில் கூட எழுந்தவை தான். கேட்ட பெண்மை டாட் காமிற்கு நன்றி. தங்கள் பதில்களில் கண்ணியம், நேர்மை, ஞானம் இருக்கிறது. தெளிவும் இருக்கிறது. நன்றி கணேசன் சார்.
ReplyDeletenice
ReplyDeleteசிவகாமி சபதம் படிச்சதில்லையா சார்.
ReplyDeleteபடிக்கலேன்னா 😄😄ப்ளீஸ் படிக்கவும். உங்க நாவலுக்கு அது இன்னும் மெருகூட்டும்னு நினைக்கிறேன் சார்