சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 3, 2014

கார்த்திகை தீபத்தின் சிறப்பு!


அறிவார்ந்த ஆன்மிகம்-36

பண்டைக் காலம் முதலே கார்த்திகை தீப விழாவை ஒரு பெரிய பண்டிகையாக நம்மவர்கள் விசேஷமாகக் கொண்டாடி வருகிறார்கள். திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து திரும்பப் பெற்றான் என்றும், மகாபலிச் சக்கரவர்த்தி தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்றும், அந்த அளவு சக்தி வாய்ந்தது கார்த்திகைத் தீப விழா என்றும் புராணங்கள் கூறுகின்றன.

கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டதற்கு நம் பழந்தமிழ் இலக்கியங்களில் சான்றுகள் நிறையவே இருக்கின்றன. திருஞானசம்பந்தர், திருமயிலையில், நந்தவனத்தில் பாம்பு தீண்டி இறந்து கலசத்தில் சாம்பலாக இருக்கும் பூம்பாவை எனும் இளம்  கன்னியை  மீண்டும்  உயிர்ப்பித்தருள திருப்பதிகம்  பாடிய போது   கார்த்திகை விளக்கீடு காணாத போதியோஎன்று பாடியுள்ளார். கார்த்திகைத் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?’ என்று அதன் பொருள்.               

''நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி...''என்று இன்னொரு பழந்தமிழ்ப் பாடல் கூறுகிறது. நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல் அழகுடையவளாய் என்பது இதன் பொருள்.

கார்த்திகை விளக்கீடு என்றழைக்கப்பட்ட இந்தப் பண்டிகையை கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருநாளில் கோயில்களிலும், வீடுகளிலும் வரிசையாகத் திருவிளக்கேற்றிக் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்தத் திருநாளைக் கொண்டாடுவதற்கான காரணத்தை இரண்டு புராணக்கதைகள் கூறுகின்றன.

சிவபெருமானின் அடி – முடி காண முடியாமல் திகைத்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் தீபஜோதியாய சிவபெருமான் காட்சி தந்து அருள்பாலித்த திருநாள் திருக்கார்த்திகை திருநாள் என்கிறார்கள்.
கந்தபுராணத்தில் இன்னொரு கதை சொல்லப்படுகின்றது. தேவர்களின் துயர்  தீர்ப்பதற்கு என்று சிவபெருமான்  தன் நெற்றிக் கண்களினின்றும் தோற்றுவித்த ஆறு தீப்பொறிகளும் சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நின்றன. அந்தத்  திருக் குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் தம்  மடியேந்தி பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.

திருக்குமாரர்களைக் காண என்று சிவபெருமானுடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளிய அம்பிகை தன் அன்பு செல்வங்களை  வாரி அணைக்க, ஆறு திருமேனிகளும் ஓருருவாகி ஆறு திருமுகங்களுடன் பேரொளிப் பிரகாச ரூபமாய் தேவியின் திருக்கரங்களில்  எழுந்தருளியது.

சிவபெருமானும்,  அம்பிகையும்  கந்தனுடன்  திருக்கயிலாயத்திற்குத் திரும்பும் முன் கந்தனைப் பாசத்துடன் சீராட்டிப் பாலூட்டி வளர்த்த  மங்கையர் அறுவர்க்கும் அருள் பாலித்தனர். “கார்த்திகை பெண்களாகிய  உங்களால் வளர்க்கப்பட்ட  எங்கள் செல்வன் கார்த்திகேயன் என்ற திருப்பெயருடன் மக்களால் வழிபடப்படுவான். நீங்கள் அறுவரும் ஒருங்கிணைந்து கார்த்திகை நட்சத்திரமாகத் திகழ்வீர்கள். கார்த்திகைத் திருநாளில் கார்த்திகேயனை வணங்குவோர் எண்ணியதெல்லாம் ஈடேறும். இக்கார்த்திகை நன்னாளில் கார்த்திகேயனைப் போற்றி விரதமிருந்து  வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிடைக்கும்!" என்று திருவாய் மலர்ந்தருளினர். 

இப்படி பரஞ்சோதியாகிய சிவபெருமானுக்கும், கார்த்திகேயனான முருகப் பெருமானுக்கும் உகந்த கார்த்திகைத் திருநாளை விரதம் இருந்து வரிசையாகத் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடுவார்கள். சிலர் கார்த்திகை மாதம் முழுவதும் விசேஷமானது என்று தினமும் வீட்டு வாசலில் விளக்கேற்றி வணங்குகிறார்கள். அது முடியா விட்டாலும் துவாதசி, சதுர்த்தசி, பெளர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது அகல் விளக்கேற்றி வணங்குவது சிறப்பு. கார்த்திகைதீபத் திருநாளில் நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.


கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தைக் கூற வேண்டும் என்று சொல்வார்கள்.

கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்‌ஷா
ஜலே ஸ்தலயே நிவஸந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.

புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்திப் பிறவி வரையில் உள்ளவர்கள்-இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த தீப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும் ஆனந்தம் பெறட்டும் என்று இந்த மந்திரத்தின் பொருள். தனக்கு மட்டுமல்லாமல் காண்கின்ற அனைவருக்கும் துன்பம் விலகட்டும் என்று வேண்டுவது எவ்வளவு உயர்ந்த நோக்கம் பாருங்கள்! மந்திரம் சொல்ல வரா விட்டாலும் தீபங்கள் ஏற்றும் போது அந்த பாவனை மனதில் இருப்பது சிறப்பு.

இந்த உன்னத நோக்குடனேயே கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில்  மகா தீபம் ஏற்றப் படுகிறது. அங்கு கார்த்திகைத் திருநாளிற்கு பத்து  நாட்கள் முன்பே கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகின்றது. பத்தாம் நாள் முடிவில் கார்த்திகை தீபத் திருநாளன்று அதிகாலை சுமார் நான்கு மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை ஆறு மணியளவில் மலை உச்சியில் மஹா தீபம் தீபம் ஏற்றப்படும்.

மிகப்பெரிய கொப்பரையில் 24 முழம் நீளமுடைய  துணியில்  கற்பூர தூளைச் சேர்த்து வைத்து சுருட்டித்  திரியாக்கி வைத்து கொப்பரையில் பல லிட்டர் நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகிறது. இந்தப் பெருஞ்சுடர் பல மைல்கள்  தூரம் வரை தெளிவாகத் தெரியும். பஞ்சபூதங்களில் அக்னியாக இந்தத் தலத்தில் காட்சி தரும் அருணாச்சலேஸ்வரரை இந்த நாளில் தொழுவது அறியாமை இருட்டை நம்மிடமிருந்து விலக்கி ஞான ஒளியை ஏற்ற வழி செய்யும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  

இந்தத் தீபத்திருநாள் அன்று சொக்கப்பனை கொளுத்துதல் என்றொரு வழக்கம் மற்றபல கோயில்களிலும் உண்டு. பனைமரங்களை நட்டு, அதில் பனை ஓலைகளைச் சுற்றிலும் கட்டி, உள்ளே மத்தாப்பு, வெடிகளை எல்லாம் வைத்து தீயிட்டு எரியச் செய்வது வழக்கம். இதை சுகி சிவம் அவர்கள் ‘எரிவது பனை அல்ல வினை, பல ஜென்மத்து வினை என்ற பாவனையோடு கொளுத்தினால் பலன் உண்டுஎன்று அழகாகக் கூறுவார்.      

இப்படி பண்டிகைகள் ஆன்மிக ஞானத்தில் நம்மை உயர்த்திக் கொள்ளும் பாவனையிலேயே அந்த நாளில் உருவாக்கப்பட்டன. ஞானத்தை மட்டும் சொன்னால் பலருக்கு அது தியரியைப் படிக்கிறது போலத் தான். கூடவே ப்ராக்டிகலாக சிலதைச் செய்தாலே அந்த உயர் பாவனைகள் பாமர மக்களுக்கும் வரும் என்று தான் கதைகளாகச் சொல்லி பண்டிகைகளை உருவாக்கி அடித்தள மக்களையும் அதில் பங்குபெற வைத்தார்கள். அதை நாம் மறந்து விடக் கூடாது.

சிவபெருமான் என்ற பெரும் பரஞ்சோதி நெருப்பில் இருந்து வரிசையாக ஆறு நெருப்புப் பொறிகள் சரவணப் பொய்கை தாமரைகளில் வந்தது போல் நம் வீட்டு அகல்விளக்குகளிலும் கார்த்திகைத் தீபத் திருநாளில் வந்து தங்கட்டும். அறியாமை இருட்டு விலகி மெய்ஞான ஒளி நம் வீடுகளிலும் ஒளிரட்டும். இந்த உணர்வோடு கார்த்திகை தீபங்களை ஏற்றினால் நம் வாழ்வில் ஏற்றம் நிச்சயம்!

-          என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி-ஆன்மிகம்-12-11-2013

                                           


1 comment:

  1. # மந்திரம் சொல்ல வரா விட்டாலும் தீபங்கள் ஏற்றும் போது அந்த பாவனை மனதில் இருப்பது சிறப்பு #
    மிகவும் பயனுள்ள வரிகள்.

    ReplyDelete