மகேஷ் சொல்லி முடித்த போது ஈஸ்வர் தலையில் கையை வைத்துக் கொண்டு
அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றி பிரளயமே நடப்பது போலிருந்தது. நடந்ததை அவனால்
ஜீரணிக்கவே முடியவில்லை. பெரிய தாத்தாவின் கொலைக்குத் துணை போக இவனால் எப்படி
முடிந்தது என்று மனம் கதறியது... இது தெரிந்தால் பரமேஸ்வரன் எப்படித் துடித்துப்
போவார்? அவரால் இவனை மன்னிக்க முடியுமா? இவனைப் பற்றி எதுவுமே தெரியாத மீனாட்சி
எப்படி உடைந்து போவாள்? அவளால் தாங்க முடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக ஆனந்தவல்லி....? அவளது மகனைக் கொன்றவர்களை
போலீஸ் இன்னும் பிடிக்கவில்லை என்று அடிக்கடி கோபப்படும் அவளுக்கு அவர்களில் ஒருவன் அவள்
வீட்டிலேயே இருக்கின்றான் என்று தெரிந்தால் என்ன ஆகும்...?
தென்னரசுவும் இதில் இருந்திருக்கிறார்
என்பதுவும் அவனுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் தூண்டுதலால் தான் மகேஷ்
முட்டாள்தனமாக இதில் இறங்கி இருக்கிறான். யாரையும் அதிகம் உண்மையாக நேசித்து
இருக்காத மகேஷிற்கு எதுவுமே தப்பாக தோன்றி இருக்கவுமில்லை... விஷாலிக்குக் கூட
சந்தேகம் வராதபடி தென்னரசு இருந்திருக்கிறார். அவள் இன்னும் அவள் தந்தையைப் போல்
ஒரு நல்ல மனிதர் இருக்க முடியாது என்று ஆழமாக நம்பிக் கொண்டிருக்கிறாள். விசேஷ
மானஸ லிங்கம் யாரை எல்லாம் எப்படி எல்லாம் மாற்றி இருக்கின்றது....? விஷாலி உண்மை
அறிய நேர்ந்தால் எப்படி உணர்வாள்?
அவனை விஷாலியுடன் சேர்த்து வைக்க
ஆனந்தவல்லி ஆடிய நாடகம் கொஞ்சமா என்ன? தன் கொள்ளுப்பேரனுடன், அவளுடைய மகனின்
கொலைக்குத் துணை போன ஒருவனின் மகளைச் சேர்த்து வைக்கத்தான் இவ்வளவு
பாடுபட்டிருக்கிறாள் என்பது அவளுக்குத் தெரிய வந்தால் என்ன ஆகும்...?
நினைக்க நினைக்க ஈஸ்வருக்கு இதயமே வெடித்து
விடும் போல இருந்தது. விஸ்வநாதனும் மகனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
மகன் தவறு செய்யும் போதெல்லாம் கண்டும் காணாதது போல் இருந்து ஊக்குவித்தது எத்தனை பெரிய
குற்றத்தில் அவனைக் கொண்டு போய் விட்டிருக்கிறது என்று வேதனைப்பட்டார்.
வீட்டார்களின் பேச்சு சத்தம் வெளியே கேட்க
அவசரமாக ஈஸ்வர் மகேஷிடம் சொன்னான். “நான் உனக்கு ஃபுட் பாய்சன் ஆயிடுச்சு. அதனால
தான் அட்மிட் செய்திருக்கோம்னு சொல்லி இருக்கேன். அதையே நீயும் சொல்லு”
மீனாட்சியும் மற்றவர்களும் உள்ளே
வந்தார்கள். வாடிய முகத்துடன் மகன் ஆஸ்பத்திரியில் படுத்துக்
கிடப்பதைப் பார்த்த மீனாட்சி கண்கலங்கி விட்டாள். “எப்படிடா இருக்கு இப்ப?” என்று கவலையுடன் கேட்டாள்.
தாயின் கண்ணீர் மகேஷை
என்னவோ செய்தது. “அழாதேம்மா. குணமாயிட்டேன்”
மகேஷ் ஆனந்தவல்லி அவனைப் பார்க்க வருவாள்
என்று சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. விஷாலியையும் தான். தென்னரசு தகனம்
முடிந்த அன்றே அவனைப் பார்க்க வந்திருக்கிறாள். ஆனந்தவல்லி பெயருக்கு அவனிடம் நலம்
விசாரித்தாள்.... விஷாலி அவன் அருகில் வந்து நின்று கொண்டாள். பரமேஸ்வரன்
பாசத்துடன் அவன் அருகில் அமர்ந்து கொண்டார். கனகதுர்காவை மகேஷிற்கு அறிமுகம்
செய்து வைத்தார். கனகதுர்காவும் மகேஷிடம் நலம் விசாரித்தாள். இப்படி எல்லாருமே
அவன் மிது அக்கறை காட்டியது மகேஷிற்கு மனம் நெகிழச் செய்தது. ஆனால் பசுபதியின்
மரணத்தில் அவன் பங்கு தெரிந்தால் இதில் எத்தனை பேர் அவனை மனிதனாகவாவது
நினைப்பார்கள் என்று யோசித்த போது வலித்தது...
ஆனந்தவல்லிக்கு ஈஸ்வர் முகத்தைப் பார்க்க
சகிக்கவில்லை. “என்னடா பேயறைஞ்ச மாதிரி இருக்கே. ஆராய்ச்சி, ஆஸ்பத்திரின்னு அலைச்சல்
அதிகமா? பேசாமல் போய் கொஞ்ச நேரம் தூங்குடா...”
மகேஷிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்த பரமேஸ்வரனுக்கும்
ஈஸ்வரைப் பார்த்த போது அப்படியே தோன்றியது. அவன் முக்கியம் என்று சொன்ன அந்த
ஆராய்ச்சியைக் கூட விட்டு விட்டு இங்கு வந்து இந்த நேரத்தில் மகேஷுடன் இருப்பது
அவருக்குப் பெருமிதமாக இருந்தது. ”அன்பிலும், பொறுப்பிலும் சங்கரின் மகன் தான்....!”
ஈஸ்வருக்கு அங்கே ஆனந்தவல்லி பரமேஸ்வரன்
இருவரின் முன்பு அதிகம் நிற்க முடியவில்லை. ஓரிரு நிமிடங்கள் நின்று விட்டு அனைவர்
கவனமும் மகேஷிடம் இருக்கையில் வெளியே வந்து விட்டான். வராந்தாவில் தூரத்தில்
பார்த்தசாரதி அமர்ந்து கொண்டிருந்தார். அவர்
அருகே வந்து உட்கார்ந்தவனுக்கு வாய் விட்டு அழத் தோன்றியது. அழுதான். அவன் அப்படி
உடைந்து போனது பார்த்தசாரதிக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகவும் உறுதியானவன் அவன்
என்பது தான் அவருக்கு அவன் மீதான அபிப்பிராயம்....! எந்த அளவு உறுதியானவர்களும்
உடைந்து போகும் படியான சந்தர்ப்பங்களை வாழ்க்கையில் விதி சில சமயம் ஏற்படுத்திக்
கொடுத்து விடுகின்றது என்று நினைத்தார்.
ஓரளவு மனதின் பாரத்தை அழுகையால் குறைத்து
விட்ட பின் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு ஈஸ்வர் நிமிர்ந்து உட்கார்ந்தான். கிடைத்த
தகவலை பார்த்தசாரதியிடம் சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் வந்தது. சொன்னதை எல்லாம்
கேட்டு மகேஷை அவர் கைது செய்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்தது.
கனகதுர்கா வெளியே வந்து மகனைத் தேடினாள்.
அதைக் கவனித்த ஈஸ்வர் எழுந்து அவளருகே வந்தான். ”என்னம்மா?”
“திரும்பவும் நீ ஆராய்ச்சி அது இதுன்னு
போகாமல் வீட்டுக்கு வந்து விஷாலி கூட இரு. அவளுக்கு ஆறுதலாய் இருக்கும்”
”எனக்கு இப்போதைக்கு வர முடியாதும்மா. நான் செய்தே ஆக
வேண்டிய வேலைகள் சில இருக்கு. அதை முடிக்காமல் வர முடியாது...”
“அவள் உன்னைப்பத்தி என்னடா நினைப்பா? இந்த
மாதிரி நேரங்கள்ல தாண்டா நீ அவள் பக்கத்துல இருக்கணும்.”
ஈஸ்வர் தற்போதைய நிலைமையை வாய் விட்டுச்
சொல்ல முடியாமல் தவித்தான். இன்று முடிந்த வரை சோதிப்பது என்று இறைவன் முடிவு
செய்து விட்டானோ? மற்றவர்களும் மகேஷைப் பார்த்து வெளியே வர ஆரம்பித்து விடவே
கனகதுர்கா மகனிடம் தர்க்கம் செய்ய நிற்கவில்லை....
ஆனந்தவல்லி பார்த்தசாரதியைப் பார்த்து
விட்டாள். முகத்தைச் சுளித்தபடி அவரிடம் சொன்னாள். “ஏம்ப்பா. என் மகனைக் கொன்னவங்களைக்
கண்டுபிடிச்சீங்களா இல்லையா? எத்தனை நாளாச்சு? சர்க்கார் உங்களுக்கு தர்ற சம்பளமே
தண்டமான்னு எனக்குத் தோணுது”
ஈஸ்வர் பரிதாபமாக பார்த்தசாரதியைப்
பார்த்து “எனக்காக மன்னிச்சுடுங்க ப்ளீஸ்” என்று பாவனையில் கெஞ்சினான். பார்த்தசாரதி ஆனந்தவல்லியிடம்
“கொலைகாரங்களை நெருங்கிட்டோம்” என்றார்.
“என்ன நெருங்கறீங்களோ” என்று சலித்துக் கொண்டே ஆனந்தவல்லி நகர்ந்தாள்...
அறையிலிருந்து கடைசியாக கிளம்பிய
விஷாலியிடம் மகேஷ் சொன்னான். “என்னை மன்னிச்சுடு விஷாலி....”
அவள் அதைப் பற்றிப் பேசாதே என்று சொல்லும்
விதமாய் அவன் கையை அழுத்தி விட்டு சோகத்தின் நடுவேயும் பலவந்தமாய் ஒரு புன்முறுவல்
செய்து விட்டுப் போனாள். மகேஷின் மனம் என்னவோ செய்தது. விசேஷ மானஸ லிங்கம் நினைத்ததை
எல்லாம் தரும் கல்ப வ்ருக்ஷம், அதன் மூலம் என்ன வேண்டுமானாலும் அடையலாம்
என்றெல்லாம் தென்னரசு சொல்லி பின் அவனும் என்னென்னவோ கனவு காண
ஆரம்பித்திருந்தாலும், முதலில் அவர்
சொன்னதை எல்லாம் அவன் கேட்க ஆரம்பித்தது விஷாலிக்காகத் தானே. அவர் விஷாலியின்
தந்தை என்பதற்காகத் தானே? இப்போது அவரும் இறந்து விட்டார். அவளும் அவனுக்கு
இல்லாமல் போய் விட்டாள். சட்டம் அவனைத் தண்டிப்பதற்கு முன்னால் விசேஷ மானஸ லிங்கம்
அவனைத் தண்டித்து விட்டதாய் நினைத்தான். நல்ல மனமும், பெருந்தன்மையும் காரணமாக
ஈஸ்வரும் விஷாலியும் அவனை மன்னித்திருக்கலாம். ஆனால் அவனுடைய விஷாலி காலம்
முழுவதும் இன்னொருவனுடையவளாக வாழ்வதை அவன் பார்த்து வாழ்வதே பெரிய தண்டனை தானே?
வெளியே வந்த விஷாலியின் கைகளைப் பிடித்துக்
கொண்டு ஈஸ்வர் குற்ற உணர்வோடு சொன்னான். “விஷாலி, இந்த நேரத்துல நான் உன் கூட
இருக்கிறது தான் நியாயம். ஆனா முக்கியமான ஒரு வேலை இருக்கு.....”
விஷாலி அவனை மேலே பேச விடவில்லை. மனதார
சொன்னாள். “நீங்க மனசளவுல எப்பவுமே என் கூட இருக்கீங்க. அதனால தான் நான் இன்னைக்கு
அப்பா சாவைத் தாங்கிகிட்டு இருக்கேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க ஈஸ்வர்...”
ஈஸ்வர் நெகிழ்ந்து போனான். ’இப்படி ஒருத்தி கிடைக்க நான் தவம் செய்திருக்க வேண்டும்’
தியான மண்டபத்தில் ஆராய்ச்சி ஆரம்பமானது. ஹரிராம் அமர்வதற்கு முன்பு
மறுபடியும் ஒரு முறை ஈஸ்வரைத் தொடர்பு கொள்ளப் பார்த்தார். அது முடியவில்லை. ஈஸ்வர்
பெரும் துக்கத்துடன் அழுது கொண்டிருப்பது தெரிந்தது. ஹரிராம் அவனைத் தொடர்பு
கொள்வது முக்கியமா, இந்த ஆராய்ச்சி வெற்றி பெறாமல் இருப்பது முக்கியமா என்று
யோசித்தார். ஈஸ்வர் இப்போது விசேஷ மானஸ லிங்க அலைகளுடன் லயிக்கும் வாய்ப்பு இல்லை.
அவன் வேறெங்கோ இருக்கிறான்... பெரும் துக்கத்தில் வேறு இருக்கிறான். அதனால் இந்த
ஆராய்ச்சியைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடப் போவது அவரும், கணபதியும் மட்டுமே.
அப்படி இருக்கையில் கணபதியை மட்டும் அந்த முயற்சியில் விட்டு விட்டு ஈஸ்வரைத்
தொடர்பு கொள்ள முயல்வது புத்திசாலித்தனம் அல்ல என்று தோன்றியது. வரப்போவதாக அவர் உணர்ந்துள்ள அபாயத்தை
முறியடிக்க கவசம் ஏற்படுத்திக் கொள்வதற்குக் கூட அவரிடம் நேரம் இல்லை.....
ஆராய்ச்சியின் போது முந்தைய நாளின் முறையையே
ஹரிராமும், கணபதியும் கடைபிடித்தார்கள். ஹரிராம் மந்திரத் தடுப்பு சுவர்
எழுப்பினார். கணபதியோ நந்தியை வைத்து மறைத்தான். ஆனால் ஆல்ஃபா தீட்டா அலைவரிசையில்
இருந்து கொண்டிருக்கும் ஹரிராம் என்ன செய்கிறார் என்பதும், கற்பனை உலகில்
சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கணபதி என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதும்
ஹோமத்தீயில் உருவமாகவே நம்பீசனுக்குத் தெரிந்து கொண்டிருப்பதை அவர்கள் அறியவில்லை.
நம்பீசன் ஹோமத்தீயைப் பார்த்துக் கொண்டே
பாபுஜியிடம் சொன்னார். “ரெண்டு பேர்ல ஒருத்தன் குடுமி வச்சவன்....
சிவலிங்கத்துக்குப் பக்கத்துல உட்கார்ந்திருக்கான். அவன் கற்பனை நந்தி போல
சிவலிங்கத்தை மறைக்குது. இன்னொருத்தன் வயசானவன். தாடி வச்சிருக்கான். கண்ணாடி
போட்டிருக்கான்.... அவன் மந்திரத்தால தடுப்பு சுவர் எழுப்பி இருக்கான்....”
பாபுஜி வாயைப் பிளந்தார். ’கணபதியும், ஹரிராமுமா’.
நம்பீசன் பார்த்ததைத்
தானும் பார்க்க ஆசைப்பட்டு பாபுஜி ஹோமத்தீயைப் பார்த்தார். புகை மண்டலத்தில் கண்களைத்
திறக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த போதும் கண்களில் எரிச்சல்
வந்ததே தவிர எதுவும் தெரியவில்லை.
ஜான்சன் பிரமித்தார். ஆழ்மனசக்தி அலைகளை
அபூர்வசக்திகளால் பார்க்கும் வித்தையை விஞ்ஞான ரீதியாக அவர் அறிந்திருந்தாரே ஒழிய
அதை ஒரு விசேஷ ஹோமம் செய்து மந்திரங்களின் சக்தியால் அந்த ஹோமத்தீயில் உருவமாகவே
பார்க்கலாம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. இதுவும் ஆராயப்பட வேண்டிய ஒன்று
என்று அவர் நினைத்தார்.
பாபுஜி புகையில் இருந்து விலகி நின்று
கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார். “துரோகிகள்”. பின் நம்பீசனைக்
கேட்டார். “என்ன செய்யலாம்?”
நம்பீசன் சொன்னார். “அவங்க ரெண்டு பேரையும்
செயலிழக்க வச்சுடலாம். கவலைப்படாதீங்க.”
பாபுஜி பரபரத்தார். “உடனே செய்யுங்க”
நம்பீசன் ஒரு காகிதத்தை நீட்டினார். “இதுல
என் அக்கவுண்ட் டீடெய்ல்ஸ் இருக்கு. இந்த அக்கவுண்டுக்கு உடனடியாய் இருபது லட்சம்
அனுப்பிச்சுடுங்க”
பாபுஜி உடனே ”சரி” என்றார். ஆனால் நம்பீசன் அவரையே பார்த்துக்
கொண்டு எதுவும் செய்யாமல் இருக்கவே பாபுஜி பணம் அனுப்ப போனில் உத்தரவு
பிறப்பித்தார். கால் மணி நேரம் கழித்து நம்பீசன் மொபைல் போனில் அவர் கணக்கில் இருபது
லட்சம் ரூபாய் வந்து விட்டது என்று தகவல் வந்தது. பின் தான் நம்பீசன்
செயல்பட்டார். இந்த ஆள் என்னை விடப் பெரிய வியாபாரியாக இருக்கிறானே என்று பாபுஜி
நினைத்துக் கொண்டார்.
நம்பீசனும் அவர்
உதவியாளர்களும் சேர்ந்து அந்த ஹோமத் தீயில் கவனத்தைக் குவித்தபடி சில மந்திரங்களை
உச்சரிக்க ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் கணபதி தூங்க ஆழ்ந்து தூங்க
ஆரம்பித்தான். ஹரிராம் தான் எழுப்பிய மந்திரக் காப்பு சுவர் கியோமி, அலெக்ஸிக்கும் எதிராக நின்று விசேஷ மானஸ லிங்கத்தை மறைத்ததோடு அல்லாமல்
அவருக்கும் மறைத்தது. யாரோ அந்த சுவரை அவர் பக்கமாகவும் நகர்த்தி விட்டு மறைப்பது போல
உணர்ந்தார். இப்போது விசேஷ மானஸ லிங்கத்தோடு அவருக்கிருந்த தொடர்பு அறுபட்டது.
அவர் அதிர்ச்சியடைந்தார். அவர் அதிர்ச்சியில் இருந்து மீளும் முன் அவரை மீறி ஒரு
சக்தி அவரை மெல்ல சூழ ஆரம்பித்தது. அவர் அதை எதிர்க்க முடியாமல், அதை விலக்க
முடியாமல் செயலிழந்து போக ஆரம்பித்தார்.
நம்பீசன் பாபுஜியிடம்
சொன்னார். “ரெண்டு பேரும் இன்னைக்கு முழுசும் உங்கள் ஆராய்ச்சிக்கு தொந்திரவு
செய்ய மாட்டாங்க”
பாபுஜி தியான மண்டபத்திற்குப் போய்
பார்த்தார். கணபதி உறங்கிக் கொண்டிருந்தான். ஹரிராம் சிலை போல் அமர்ந்திருந்தார்.
அவர் EEG மெஷின் சாதாரண விழிப்பு நிலையான பீட்டா அலைகளைக் காட்டியது.
பாபுஜிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இந்த மாதிரி அற்புதத்தை குருஜி கூட
நிகழ்த்தியதில்லையே. ஜான்சனுக்கும் நம்பிக்கை வர ஆரம்பித்தது. ஜான்சன்
அலெக்ஸியையும், கியோமியையும் அங்கிருந்து எழுந்து எதிர்பக்கம் உட்கார்ந்து மறுபடி
ஆரம்பிக்கச் சொன்னார். அவர்கள் அப்படியே செய்தார்கள்.
பாபுஜி வந்து நம்பீசனிடம் சொன்னார். ”தேங்க்ஸ். இதே மாதிரி வெளியே இருக்கிற ஈஸ்வரையும் கட்டுப்படுத்திடுங்களேன்.”
நம்பீசன் சொன்னார். ”அவன் இப்ப இந்த
அலைவரிசையில் இல்லை. ஒரு வேளை இருந்திருந்தால் இப்பவே செய்திருப்பேன். அவன்
அலைவரிசைக்கு வெளியே இருக்கிறான். அவனை அதில் வரவழைத்து கட்டுப்படுத்தறது சுலபம்
இல்லை...”
“என்ன செலவானாலும் பரவாயில்லை.
செஞ்சுடுங்களேன்”
நம்பீசன் ஒத்துக் கொள்வதற்கு முன் மறுபடி
ப்ரஸ்னம் வைத்துப் பார்த்தார். வெளியே இருப்பவன் தற்போது மிகவும் தளர்ந்து
இருப்பது தெரிந்தது. அவனைக் கட்டுப்படுத்துவது கஷ்டமில்லை....
நம்பீசன் சொன்னார். “சரி இன்னொரு இருபது
லட்சத்தை என் அக்கவுண்ட்ல கட்டிடுங்களேன்”
பாபுஜி
யோசிக்கவில்லை. சரியென்றார்.
அக்கவுண்டில் பணம்
வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு நம்பீசன் புதியதொரு ஹோம குண்டலத்தை
அமைக்க ஆரம்பித்தார். கணபதியையும், ஹரிராமையும் செயல் இழக்க வைத்ததை நேரடி
ஒளிபரப்பில் பார்த்த அறுவருக்கும் உற்சாகம் தாங்கவில்லை.... துள்ளிக் குதித்துக்
கொண்டாடினார்கள். அவர்கள் ஒவ்வொருவராக பாபுஜிக்குப் போன் செய்து வாழ்த்துக்கள்
தெரிவிக்க ஆரம்பித்தார்கள். அடுத்த நடவடிக்கைகள் பற்றி ஆலோசனைகள் தர ஆரம்பித்து
விட்டார்கள். பாபுஜியின் செல் போன் மூன்றாம் முறை ஒலித்த போது நம்பீசன்
கோபப்பட்டார். “அதை நம்ம வேலை முடியற வரைக்கும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைங்க. இடைஞ்சலா
இருக்கு. இதுல கொஞ்சம் கவனம் சிதறினாலும் காரியம் கெட்டுடும்....”
பாபுஜி மறு வார்த்தை பேசாமல் செல் போனை
ஸ்விட்ச் ஆஃப் செய்தார்.
ஈஸ்வர்
இனி என்ன செய்வது என்று யோசித்தான். மகேஷ் தெரிவித்த விசேஷ மானஸ லிங்கம் இருக்கும்
இடத்திற்கு நேராகப் போவது தான் ஒரே வழி என்று தோன்றியது. ஆனால் தனியாகப் போக
முடியாது.... போவது பாதுகாப்பும் அல்ல. பார்த்தசாரதி மற்றும் போலீஸ் துணையோடு
போவது தான் புத்திசாலித்தனம். ஆனால்
அவரை அழைத்துப் போவது என்றால் அவருக்கு
அனைத்தையும் சொல்லித் தானாக வேண்டும்... வேறு வழியில்லை!
தயக்கத்துடன் அவன் மகேஷ்
சொன்னதை எல்லாம் அவரிடம் சொன்னான். தென்னரசு பற்றி அறிந்திருந்த பார்த்தசாரதி
மகேஷைப் பற்றி சந்தேகம் கூடக் கொண்டதில்லை. அவனை சந்தேகிக்க வலுவான காரணம் எதுவும்
இருக்கவில்லை. நடந்ததைச் சொல்லும் போதே ஈஸ்வருக்கு கூசியதை அவரால் உணர முடிந்தது.
அவன் சற்று முன் தாளாமல் அழுததற்கான காரணங்கள் புரிந்தன. ஒரேயடியாக பல பாகங்களில்
இருந்தும் பிரச்சினைகள் அவனுக்கு வந்திருக்கின்றன. ஒரு பக்கம் அவன் அத்தை மகனே
கொலைகாரக் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்று தெரிய வந்திருக்கிறது. இன்னொரு பக்கம்
அவன் வருங்கால மாமனாரும் அதே கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய
வந்திருக்கின்றது. இரண்டையும் அவன் யாரிடமும் சொல்ல முடியாது. முக்கியமாய்
வீட்டில் இருக்கும் கிழடுகளிடம் தெரிவிக்கவே முடியாது.
அவன் அமெரிக்காவிலேயே
பிறந்து வளர்ந்திருந்தாலும், சில நாட்களாக மட்டுமே இந்தக் குடும்பத்துடன்
தொடர்பில் இருக்கிறான் என்றாலும், அவனிடம் இருந்த பாசமும், பொறுப்புணர்வும் அவரை
வியக்க வைத்தது.
இந்தக் குடும்பப்
பிரச்சினைகள் போதாது என்று அந்த கணபதி என்கிற பையன் மேல் வேறு அக்கறை எடுத்துக்
கொண்டிருக்கிறான். அது போதாது என்று அந்த சித்தர் வேறு உலகத்தின் பொறுப்பே
உன்னிடம் தான் என்பது போல சொல்லி மேலும் சுமத்தி விட்டுப் போயிருக்கிறார். ஒரு
மனிதன் எத்தனை பொறுப்பைத் தான் சுமக்க முடியும் பாவம்! ஆனால் அவன் கவலையும்,
வருத்தமும் பட்டானே ஒழிய சுயபச்சாதாபப்பட்டு உடைந்து விடவில்லை என்பது அவன் மேல்
இருந்த மதிப்பைக் கூட்டியது.
அவன் மனம் விட்டு
எல்லாவற்றையும் சொன்னதால் பார்த்தசாரதியும் மெல்ல தென்னரசு பற்றி தனக்கு முன்பே சந்தேகம்
இருந்தது என்றும் அவனைக் கொல்ல முயற்சி நடப்பதைப் போன் செய்து சொன்னவர் அவர் தான்
என்றும் தெரிவித்தார். அவன் மருமகனாகப் போகிறான் என்பதைத் தெரிந்த பிறகு அந்தக்
கொலை முயற்சியை அவர் தெரிவித்திருக்க வேண்டும், அதை அவர்கள் கண்டுபிடித்திருக்க
வேண்டும், அதனால் கொன்றிருக்க வேண்டும் என்று தோன்றுவதாக கூறினார்.
ஈஸ்வர் இதயத்தில்
இன்னொரு சுமை கூடியது. அவனைக் காப்பாற்றப் போய் அவர் இறந்து விட்டாரே! ’விஷாலி உங்கப்பாவுக்கு நானே எமனாயிட்டேன்...” மனம் கதறியது.
மனம் அமைதியடைய சிறிது நேரம் எடுத்துக் கொண்டது.
அப்போது தான் ஹரிராம் அனுப்பிய செய்தியை
அவனால் உணர முடிந்தது. ”ஆபத்து நெருங்கியிருக்கிறது...” அந்தத் தகவலே தாமதமாகத் தான்
உணரப்பட்டிருக்கிறது என்றும் அவனுக்குத் தோன்றியது.
திடுக்கிட்ட ஈஸ்வர் மனதை மேலும்
அமைதிப்படுத்தி கவனித்தான். ஆனால் ஹரிராமிடம் இருந்து வேறு தகவல் எதுவும்
வரவில்லை. நேற்று அவன் தோட்ட வீட்டில் இருந்து அவரைத் தொடர்பு கொள்ள முயன்ற போது
அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அது போல் இப்போதும் இருக்கிறாரா என்ன?
அப்படி இருக்காது
என்று தோன்றியது. ஆபத்து நெருங்கியிருக்கிறது என்று சொல்லி விட்டு அந்த ஆபத்தைப்
பற்றிக் கவலைப்படாமல் யாரும் ஆழ்ந்த தியானத்திற்குப் போக முடியாது.... என்ன
ஆபத்தைச் சொன்னார் அவர்? மகேஷ் இன்று காலை அங்கு வரப் போவதாகச் சொன்ன நம்பீசனால்
ஏற்பட்டிருக்கும் ஆபத்தாக இருக்குமோ?
அப்படி நினைக்கும்
போதே திடீரென்று விசேஷ மானஸ லிங்கத்தைப் பிடித்துக் கொண்டே கணபதியும், ஹரிராமும்
ஒரு மலைப் பள்ளத்தாக்கில் குப்புற விழுந்து கொண்டிருப்பது போல் ஒரு காட்சி அவன்
மனக்கண்ணில் வந்து மறைந்தது. பின்னணியில் பௌர்ணமி சந்திரன் ஜொலித்துக்
கொண்டிருந்தது.
இன்று பௌர்ணமி.....
இந்தக் காட்சியையும், ஹரிராம் அனுப்பி இருந்த ஆபத்து செய்தியையும் சேர்த்து
யோசித்த போது பகீர் என்றது.
(தொடரும்)
என்.கணேசன்
இன்று பௌர்ணமி..... இந்தக் காட்சியையும், ஹரிராம் அனுப்பி இருந்த ஆபத்து செய்தியையும் சேர்த்து யோசித்த போது பகீர் என்றது. /
ReplyDeleteபௌர்ணமி நெருங்கும் தினத்தில் கதையைப் படிக்கும் நேரத்தில் மனம் பகீர் என்கிறது..!
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletewonderful
ReplyDeleteNambeesan character is realistic. We also feel the burden of Eswar. Great going.
ReplyDeleteஇது நாவல் அல்ல. கண் முன் நடக்கும் சம்பவங்கள். உயிருள்ள பாத்திரங்கள். ஒன்றிப் போய் விட்டோம். பொன்னியின் செல்வனுக்குப் பிறகு கவர்ந்த நாவல் என்று சில வாசகர் கூறியதை படித்தேன். இதை விட பெரிய பாராட்டு தேவையில்லை. பரமன் ரகசியம்- தமிழ் நாவல் உலகில் மகுடம்.
ReplyDeleteManasa lingam Eswarai kakkatum.
ReplyDeleteமிக அழகாக நகர்ந்து கொண்டிருக்கிறது கதை...
ReplyDeleteகடைசியில் முடித்த விதம் பௌர்ணமிப் பகீர்.... அடுத்த பகுதிக்கான ஆவலைத் தூண்டுகிறது.
சிலிர்க்க வைக்கும் வாசிப்பனுவம் தந்துவிட்டீர்கள் நண்பரே, கதாபாத்திரங்களினிடையில் காணாத சாட்சிகளாக வாசகர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்போது தான் இந்த நாவலை படித்து முடித்தேன். நிச்சயமாக இது போல் ஒரு நாவலை படித்தது இல்லை. வர்ணிக்க வார்த்தை இல்லை. இது போல் இன்னொரு நாவலை நீங்களே எழுத முடியுமா என தெரியவில்லை.
ReplyDeleteசிறந்த படைப்பு. தமிழில் இப்படி ஒரு கதையை நான் சமீபத்தில் படித்து இல்லை. சங்கர் & ரஜினி combination மாதிரி ஒரு பிரமாண்டம் இது.
ReplyDeleteI can't wait for a week. I bought this book. Great
ReplyDeletevery interesting
ReplyDeleteதொடர்கின்றேன்...
ReplyDeleteஅருமை நண்பரே! என்.கணேசன் அவர்களே அருமை!!!
ReplyDelete