பாபுஜி அதிர்ச்சியோடு கேட்டார். ”என்ன சொல்றீங்க?”
“ஆமா. நீங்க சொன்ன வெளியே இருக்கிற
எதிரியும், நான் சொன்ன உள்ளே இருக்கிற எதிரிகளும் மனதளவில் சேர்ந்தாச்சு. அதனால்
தான் அந்த சிவலிங்க சக்தியை உங்களால நேத்து நெருங்க முடியலை...”
பிரளயமே வந்து தன்னை பாதாளத்தில் இழுத்து
அழுத்துவது போல் பாபுஜி உணர்ந்தார். பலவீனமான குரலில் பரிதாபமாக அவர் கேட்டார்.
“இனி ஏதாவது செய்ய முடியுமா?”
நம்பீசன் உடனடியாக எதையும் சொல்லவில்லை.
சில கணக்குகளை மனதில் போட்டு கடைசியில் சொன்னார். “முடியும். ஆனா சுலபமல்ல. செலவு
அதிகம் ஆகும். இன்னைக்கு கார்த்திகை தீபம்... பௌர்ணமி... பௌர்ணமி இன்னைக்கு ராத்திரி
11.42 வரை இருக்கு. அதுக்குள்ளே அதைச் செய்து முடிக்கணும்.. அதுக்குள்ளே ஏதாவது
செய்யலைன்னா பிறகு எப்பவுமே இந்த சிவலிங்கம் உங்களுக்குச் சிக்காது.”
“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என்ன
செய்யணும், எப்படி செய்யணும்னு மட்டும் சொல்லுங்க சுவாமி” பாபுஜி சொன்னார்.
“நாங்க இங்கேயே சில
விசேஷ ஹோமங்கள் செய்ய ஆரம்பிக்கிறோம். நான் சொன்னதுக்கப்புறம் நீங்க எப்பவும்
மாதிரி உங்கள் வழக்கமான ஆராய்ச்சியை இன்னைக்கும் ஆரம்பியுங்க. நான் அந்த ரெண்டு
பேர் யாருன்னு இங்கே இருந்தே கண்டுபிடிக்கிறேன். அப்புறம் என்ன செய்யணும்னு
தீர்மானிப்போம்”
பாபுஜி பரபரப்புடன்
சம்மதித்தார். குருஜி போய் விட்டாலும் தெளிவாகத் தீர்மானித்து செய்ய வேண்டியதைச் சொல்லக்கூடிய
மனிதர் கிடைத்திருப்பது அவர்களது பாக்கியமே!
விஷாலியை
சமாதானப்படுத்துவது ஈஸ்வருக்கு சுலபமாக இருக்கவில்லை. கடைசியாக அவருடன் பேசியதை
ஈஸ்வரிடம் சொல்லி அழுதாள். “அது தான் அவர் கிட்ட நான் கடைசியாய் பேசறதுன்னு
எனக்குத் தெரியாமல் போயிடுச்சே ஈஸ்வர்....”. அதைக்
கேட்டுக் கொண்டிருந்த பார்த்தசாரதிக்கு தென்னரசு ஏன் ஈஸ்வருக்கு ஆபத்து என்பதை
எச்சரித்தார் என்பது புரிந்தது.
தந்தையின் மறைவின்
துக்கத்தை ஈஸ்வர் அறிவான். அதுவும் மிக நேசித்த தந்தையாக இருந்தால் அந்த துக்கம்
எல்லை இல்லாதது. அகால மரணம் என்றால் பின் சொல்லவே வேண்டாம். அவள் அவன் தோளில்
சாய்ந்து குமுறி அழ, அவளை அணைத்துக் கொண்டு மௌனமாக இருந்தான். அவள் துக்கத்தைப்
பார்க்க அவனுக்கும் தாளவில்லை. அவன் கண்களும் கசிந்தன. எல்லா பக்கங்களில்
இருந்தும் இப்படி பிரச்சினைகள் வருகிறதே என்று வேதனைப்பட்டான்.
மகேஷின் தற்கொலை
முயற்சி பற்றி அவன் விஷாலிக்குத் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் அங்கே அவன் என்ன
ஆனானோ என்ற கவலையும் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. விஸ்வநாதனுக்குப் போன் செய்து அவன்
எப்படி இருக்கிறான் என்று மட்டும் மெல்ல விசாரித்தான். விஸ்வநாதன் மகேஷின்
உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர் நம்பிக்கை தெரிவித்ததாய் சொன்னார்.
தென்னரசு ஓடும்
ரயிலில் இருந்து எந்தக் காரணத்திற்காகவோ இறங்க முயற்சி செய்திருக்க வேண்டும் என்று
விசாரணை போலீசார் சந்தேகப்பட்டனர். ஆனால் இது கொலை தான் என்பதையும், அதன்
காரணத்தையும் ஊகிக்க முடிந்திருந்த பார்த்தசாரதி அதை அவர்களிடம் தெரிவிக்கப்
போகவில்லை. விஷாலி மற்றவர்களைப் போலவே இதை ஒரு விபத்தாகவே இப்போதைக்கு
நினைக்கட்டும் என்று தோன்றியது….
மரணத்தில்
இருந்து தப்பித்த மகேஷைப் பார்க்க விஸ்வநாதனுக்கு அனுமதி கொடுத்தார்கள். கண்கள்
கலங்க அவர் மகனைப் பார்க்க உள்ளே போனார். மகேஷ் மிகவும் பலவீனமாக இருந்தான்.
அவனும் கண்கள் கலங்கினான் என்றாலும் வருத்தத்துடன் கேட்டான். “ஏம்ப்பா என்னைக்
காப்பாத்தினீங்க?”
இருக்கும் ஒரே மகன் அப்படிக் கேட்டது
அந்தத் தந்தையின் இதயத்தில் அமிலத்தை ஊற்றியது. ஆனாலும் பொறுத்துக் கொண்டார்.
ஐசியூவிற்கு வெளியே அவருடன் உட்கார்ந்திருந்த போது ஈஸ்வர் மகேஷிற்கு கவுன்சலிங்
தேவைப்படும் என்று சொல்லி இருந்தான். அவன் மனநிலையும், நடவடிக்கைகளும்
விரக்தியானதாகவே இருக்கும், நாம் தான் அதை மாற்ற வேண்டும் என்று சொல்லி இருந்தான். டாக்டரே உயிருக்கு உத்திரவாதம்
கொடுத்திருக்காத போது கூட அவன் அவ்வளவு நம்பிக்கையோடு பேசியது விஸ்வநாதனுக்கு
ஆச்சரியத்தைத் தந்தது. அவன் சொன்னான். “அத்தையோட நல்ல மனசுக்கு மகேஷுக்கு ஒன்னும்
ஆகாது மாமா, கவலைப்படாதீங்க”
மகேஷின் உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர் தெரிவித்தவுடன் ஈஸ்வரின்
அந்த வார்த்தைகள் தான் அவனுக்கு நினைவுக்கு வந்தன. உண்மை தான். மீனாட்சியின்
தர்மம் தான் அவர்கள் மகனைக் காப்பாற்றி இருக்கிறது. நல்லதைத் தவிர வேறு எதையும்
அறியாதவள் அவள்....
விரக்தியுடன் அப்படிக் கேட்ட மகனிடம்
அப்படி எல்லாம் பேசக்கூடாது என்று குரலடைக்கச் சொன்னார் விஸ்வநாதன்.
“தாத்தாவுக்கும் அம்மாவுக்கும் தெரியுமா?” என்று மகேஷ் கேட்டான்.
“சொல்லலை. ஈஸ்வரும் சொல்ல வேண்டாம்னு
சொல்லிட்டான்”
ஈஸ்வர் பெயரைக் கேட்டவுடன் மகேஷ்
திகைப்போடு அவரை ப்பார்க்க அவருக்கு நடந்ததை எல்லாம் சொல்ல வேண்டியதாயிற்று. மகேஷிற்கு தந்தை மேல் கோபம் தான் வந்தது.
“அவனைக் கூப்பிடறதுக்குப் பதிலா நீங்கள் என்னைக் கொன்னே இருக்கலாம்ப்பா”
“அப்படி எல்லாம் சொல்லாதேடா. நல்ல பிள்ளைடா
அவன்... அவன் கூட இருக்கிறப்ப எனக்கே அவன் ஒரு மூத்த பிள்ளை மாதிரி தோணிச்சுடா”
அவன் வாழ்க்கையில் அவனுக்கு யாரெல்லாம்
நெருக்கமாக இருந்தார்களோ அவர்களை எல்லாம் ஈஸ்வர் தன் பக்கம் இழுத்திருக்கிறான்.
அம்மா, விஷாலி, தாத்தா, கடைசியில் இவருமா! என்ன மாதிரி மனிதர்களை அவன் வசியப்படுத்தி
விடுகிறான்....
ஐசியூவினுள்ளே ஈஸ்வர்
நுழைந்தான். போஸ்ட் மார்ட்டம் பார்த்தசாரதி தயவில் வேகமாக முடிந்த பிறகு
தென்னரசுவின் அந்திமக் கிரியைகளை விரைவாக முடித்து விட்டு விஷாலியை வீட்டில்
மீனாட்சி, கனகதுர்கா பொறுப்பில் விட்டு விட்டு, தோட்ட வீட்டுக்கு மீண்டும்
போவதற்கு முன் மகேஷை ஒரு முறை பார்த்து விட்டுப் போக வந்திருந்தான். மிகவும் களைத்துப்
போயிருந்த போதும் மீண்டும் வந்த அவனை விஸ்வநாதன் நன்றியுடன் பார்த்தார். ஆனால் அவனைப்
பார்த்தவுடன் மகேஷ் முகத்தைத் திருப்பிக் கொண்டான். விஸ்வநாதனுக்கே மகன் நடந்து
கொள்வது மகா அநியாயம் என்று பட்டது.
மகேஷ் ஈஸ்வர்
முகத்தைப் பார்க்காமலேயே சொன்னான். “உன் நடிப்புக்கு மத்தவர்கள் எல்லாம்
ஏமாந்துடலாம். நான் ஏமாற மாட்டேன். உனக்கு என் மேல் கோபம் இருக்கு. அதை வெளியே
காட்டாமல் நடிக்கிறேன்னும் எனக்குத் தெரியும். இப்ப எதுக்கு வந்தே? எல்லாத்துலயும்
நீ என்னை ஜெயிச்சுட்டேன்னு காண்பிக்க தானே? ஒத்துக்கறேன்... நீ என்னை ஜெயிச்சிட்டே.
என்னை நீ இனியாவது நிம்மதியா சாக விடுவியா?”
ஈஸ்வருக்கு ஆத்திரம் வந்தது. ”முட்டாளே. எனக்கு உன் மேல கோபம் தான். என் அத்தையை வாழ்நாள் பூரா அழ வைக்க
உனக்கு அவங்க என்னடா கெடுதல் செஞ்சாங்க. உன்னைப் பெத்தது தவிர அவங்க ஒரு தப்பும்
செய்யலையேடா?”
கோபத்தைத் தவிர எந்த உணர்ச்சியை ஈஸ்வர்
காட்டி இருந்தாலும் மகேஷ் அதை நடிப்பு என்று எண்ணி இருப்பான்.... சுவரைப்
பார்த்துக் கொண்டே அவன் சொன்னான். “எங்கம்மாவுக்கு தான் நீ இருக்கியே. பின் ஏன் அவங்க வாழ்நாள் பூரா அழப்போறாங்க”
சில மனிதர்களின் முட்டாள்தனத்திற்கு எல்லையே
இல்லை என்று ஈஸ்வர் நினைத்தான். இவனிடம் கனிவாகவோ, நல்ல விதமாகவோ பேசினால் அதை ஒரு
நடிப்பாகத் தான் நினைப்பான் என்பதால் கோபத்தை மறைக்காமலேயே ஈஸ்வர் சாடினான்.
“உனக்கு கடவுள் அறிவே தரலையா மகேஷ். என்ன தான் நான் இருந்தாலும் அத்தைக்கு நான்
நீயாயிட முடியுமாடா. நான் விருந்தாளிடா. ஒரு மாசம் மட்டுமே இருக்கப் போகிற
விருந்தாளி. அவங்க உயிருக்குயிரா நேசிச்ச அண்ணனோட மகன். இத்தனை வருஷமா பார்க்காதவன். அதனால தான் என்னை அதிகம்
கவனிக்கிறாங்க. உபசரிக்கிறாங்க. அதனாலேயே உன்னை விட என் மேல அதிகம் பாசம்
வச்சிருக்காங்கன்னு ஆயிடுமாடா....”
மகேஷ் மௌனம் சாதித்தான். ஈஸ்வர்
தொடர்ந்தான். “சாகணும்னு முடிவு செஞ்சப்ப ஒரு நிமிஷம் உன் அப்பா, அம்மாவையோ,
தாத்தாவையோ, விஷாலியையோ ஏண்டா உன்னால நினைச்சுப் பார்க்க முடியலை. இவங்க எல்லாம்
தாங்குவாங்களாடா?”
விஷாலியின் பெயரை ஈஸ்வர் சொன்னவுடன் மகேஷ்
அவன் பக்கம் திரும்பினான். தவறி வந்து விட்ட பெயரோ? இவர்களுக்கு இடையே ஊடல்
தீர்ந்திருக்க வேண்டும் என்றால் அவன் சொன்னதெல்லாம் பொய் என்று கண்டிப்பாக
அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் அவன் மீது அவள் கோபமாக
இருக்கிறாள். அப்படி இருக்கையில் அவன் மரணத்தை விஷாலி தாங்க மாட்டாள் என்று ஈஸ்வரே
தன் வாயால் எப்படி சொல்கிறான்?
“விஷாலிக்கு என் மேல் கோபம். சில நாளாய்
என் கிட்ட அவள் பேசறது கூட கிடையாது..” என்று மகேஷ் ஆதங்கத்துடன் சொன்னான்.
“கோபம் இல்லாத நட்பு எங்கேடா மகேஷ்
இருக்கு. ஆனா அவ உன்னைப் பத்தி என் கிட்ட தப்பா ஒரு வார்த்தை கூட சொன்னது
கிடையாது. நல்லது மட்டுமே சொல்லி இருக்கா. சின்ன வயசுல இருந்து எப்பவுமே எதையுமே
விட்டுக் கொடுத்த நல்ல நணபன்னு சொல்லி இருக்கா?”
இத்தனை பொய் சொல்லி அவன் அவளை ஏமாற்றிய
போதும் அவள் அவன் மீது கோபப்பட்டிருக்கிறாளே ஒழிய காதலனிடம் காட்டிக்
கொடுக்கவில்லை என்று நினைக்கையில் அவன் கண்கள் குளமாயின. ஈஸ்வரின் சட்டையைப்
பிடித்து இழுத்து மகேஷ் கேட்டான். “விஷாலி என்னை வெறுக்கலையே ஈஸ்வர்”
முதல் தடவையாக மகேஷிடம் ஒரு ஆத்மார்த்தமான
உணர்வை ஈஸ்வர் அவனிடம் பார்க்கிறான். விஷாலி இவனுடன் வைத்திருந்த உயர்வான
நட்புக்குக் காரணமில்லாமல் இல்லை என்று அந்தக் கணத்தில் ஈஸ்வருக்குப் புரிந்தது. அவன்
அமைதியாகச் சொன்னான். “கண்டிப்பா இல்லை மகேஷ்”
”நீ?”
“எனக்கும் உன் மேல் வெறுப்பில்லை...”
“நீ பொய் சொல்றே” மகேஷால் நம்ப
முடியவில்லை.
ஈஸ்வர் அவன் கண்களைப் பார்த்து சொன்னான்.
“நான் ரொம்பவும் நேசிக்கிற அத்தையோட மகன் நீ. நான் காதலிச்ச, கல்யாணம் செய்துக்கப்
போற பொண்ணோட நண்பன் நீ. உன்னை எப்படி என்னால வெறுக்க முடியும் மகேஷ்? கோபம்
இருக்கு. ஆனா வெறுப்பில்லைடா”
அணை உடைந்து வெளிப்படும் வெள்ளமாய் மகேஷின்
துக்கம் வெளிப்பட்டது. என்ன மனிதனிவன் என்று பிரமிப்பு தோன்றியது. இவனை எல்லாரும்
நேசிப்பதில் ஆச்சரியமே இல்லை என்று தோன்றியது. ஈஸ்வரை கெட்டியாகப் பிடித்துக்
கொண்டு அழ ஆரம்பித்தான். நிறைய அழுதான்.
மகேஷை ஐசியூவில் இருந்து அறைக்கு மாற்றப்
போவதாக நர்ஸ் ஒருத்தி வந்து சொன்னதும் விஸ்வநாதனும், ஈஸ்வரும் வெளியே வந்தார்கள். வெளியே
வரும் போது விஸ்வநாதன் தன் மகனுக்கு இணையாக ஈஸ்வரை நேசிக்க ஆரம்பித்திருந்தார்.
அவரிடம் ஈஸ்வர் சொன்னான். “முதல்ல அவன்
மேல் எல்லாரும் நிஜமாவே பிரியமாய் இருக்காங்கன்னு அவன் நம்பணும் மாமா. அந்த
நம்பிக்கை வந்தா தற்கொலை எண்ணம் இனி அவன் மனசுல வராது. நல்ல விதமாய் மாற
ஆரம்பிப்பான்... இவனை பார்க்க வீட்டுல இருந்து எல்லாரும் வந்தா அவனுக்கு
நம்பிக்கை வரும்னு நினைக்கிறேன்”
விஸ்வநாதன் பயந்தார். ஆனால் மகேஷ் தற்கொலை
செய்து கொள்ள முயன்று ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்று யாரிடமும் சொல்லப்
போவதில்லை என்று உறுதியளித்த ஈஸ்வர் வீட்டுக்குப் போன் செய்து மகேஷ் ஏதோ சாப்பிட்டது
‘ஃபுட் பாய்சன்’ ஆகி அவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியதாயிற்று,
இப்போது நலமாக இருக்கிறான் என்று தெரிவித்தான். கேட்டு பதறியடித்துக் கொண்டு
மீனாட்சியும், கவலையுடன் பரமேஸ்வரனும், கனகதுர்காவும் கிளம்பினார்கள். மகேஷ் மீது
என்றுமே நல்ல அபிப்பிராயம் இல்லாமல் இருந்த ஆனந்தவல்லிக்கு மகேஷை சென்று
பார்க்கும் உத்தேசம் இருக்கவில்லை. ஈஸ்வர் அவளிடம் போன் செய்து தனக்காக வரச்
சொன்னான். ஆனந்தவல்லி வேண்டா வெறுப்பாக ஈஸ்வருக்காக கிளம்பினாள். தந்தையின் மரண
துக்கத்தில் இருந்த விஷாலிக்கு மகேஷ் சாதாரணமாக உடல்நலமில்லாமல் இருக்கிறான் என்ற
நினைப்பும், ஏற்கெனவே அவன் மீது கோபமும் இருந்ததால் அவளும் மகேஷைப்
பார்க்கக் கிளம்பவில்லை. அவளிடம் தயக்கத்துடன் ஈஸ்வர் மகேஷின் தற்கொலை முயற்சியை
ரகசியமாகச் சொல்ல வேண்டியதாயிற்று. அதன் பிறகு அவளுக்கு மனம் கேட்கவில்லை. அவளும்
மற்றவர்களுடன் கிளம்பினாள்.
நம்பீசன் ஹோமம் வளர்த்துக் கொண்டிருந்தார். அவர் எல்லாவற்றையும்
வேகமாகச் செய்தால் தேவலை என்று பாபுஜிக்குத் தோன்றியது. அறுவரும் அடிக்கடி என்ன
நிலவரம் என்று கேட்டு தொல்லை அதிகமாகச் செய்ததால் அவர்கள் பார்க்கும்படி தியான
மண்டபத்தில் காமிராக்கள் வைத்தது போலவே ஹோமம் நடக்கும் இடத்திலும் காமிராக்கள் வைத்து
அவர்கள் அங்கிருந்தே பார்க்க பாபுஜி ஏற்பாடு செய்து விட்டார். அதன் பிறகு
“சீக்கிரம் செய்யச் சொல்” என்று அவர்கள் பாபுஜிக்கு சைகை காட்ட ஆரம்பித்தார்கள்.
இவர்களுக்கு சீக்கிரமே பைத்தியம் பிடித்து விடுமோ என்ற சந்தேகம் ஜான்சனுக்கு
வந்தது. அதற்கான
எல்லா அறிகுறிகளும் பாபுஜியையும் சேர்த்து அவர்கள் ஏழு பேரிடமும் தோன்ற
ஆரம்பித்திருந்ததை மனவியல் அறிஞரான அவர் கவனித்தார். நினைத்ததைக் கொடுக்கும் விசேஷ
மானஸ லிங்கத்தை வைத்து கனவுகளை எல்லாம் நனவாக்க அவர்கள் துடித்துக்
கொண்டிருந்தார்கள்.
ஆனால் அது புரியாமல்
அக்கம் பக்கம் பார்க்காமல், வேறெதிலுமே கவனத்தைச் சிதறடிக்காமல், நம்பீசன் தன்
காரியமே கண்ணாய் இருந்தார். பின் பாபுஜியை அழைத்து ஆராய்ச்சிகளை இனி ஆரம்பிக்கச்
சொன்னார்.
மகேஷ்
விஸ்வநாதனைக் கேட்டான். “தென்னரசு அங்கிள் உங்களுக்கு போன் செய்து பேசினாரா அப்பா?”
விஸ்வநாதன் மகனிடம் வருத்தத்துடன்
சொன்னார். “தென்னரசு அங்கிள் ஒரு விபத்துல இறந்துட்டாருப்பா......”
அதிர்ச்சியுடன் மகேஷ் கேட்டான். “என்ன
விபத்து?’ அவன் குரல் நடுங்கியது. ஈஸ்வர் சொன்னான். மகேஷ் சிறிது
நேரம் பேயறைந்தது போல இருந்தான். அவனையும் அறியாமல் அவன் உதடுகள் முணுமுணுத்தன.
“அது விபத்தல்ல... கொலை...அவங்களுக்கு அவர் மேல ஏதோ
சந்தேகம் வந்திருக்கணும். அதான் கொன்னுட்டாங்க”
திடுக்கிட்ட விஸ்வநாதனும், ஈஸ்வரும்
ஒருசேரக் கேட்டார்கள். “என்ன, கொலையா?”
அவர்கள் வற்புறுத்திக் கேட்ட போது மகேஷிற்கு
மனதின் சுமைகளைச் சொல்லி இறக்கி வைக்கத் தோன்றியது. காலம் முழுவதும் மனதில் இந்த
ரகசிய சுமையை சுமந்து கொண்டிருப்பதை விட வெளியே சொல்லி தண்டனையை ஏற்றுக் கொண்டாலும் தேவலை என்று தோன்றியது. அவன்
எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்தான்...
ஆராய்ச்சிக்கு
வர ஜான்சன் அழைத்ததும் கிளம்பிய ஹரிராமிற்கு ஏதோ ஒரு ஆபத்து வரப் போவதாக
உள்ளுணர்வு எச்சரித்தது. முந்தைய நாளின் அழகான தியான அனுபவத்திற்குப் பின் அவர்
பெரும்பாலும் தியானத்திலேயே மூழ்கி இருந்தார். வேறெதுவும் அவருக்குப்
பிடிக்கவில்லை. அவரிடம் பேசலாம் என்று இரண்டு முறை வந்து அவர் தியானத்தில் மூழ்கி
இருப்பதைப் பார்த்து விட்டு கணபதி போனது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால்
அங்கே அஷ்டமங்கலப் ப்ரஷ்னம் வைத்ததும், அதன் பின் சில விசேஷ ஹோமங்கள் நடந்ததும்
கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
உள்ளுணர்வின்
எச்சரிக்கைக்குப் பிறகு தான் தன் அபூர்வ சக்தியால் நடந்தது என்ன என்று பார்த்தார்.
ஆபத்து என்ன என்று புரிந்தது. ஆனால் அதில் இருந்து தற்காத்துக் கொள்ள செய்ய
வேண்டியதைச் செய்யக்கூட அவரிடம் இப்போது நேரமிருக்கவில்லை. குறைந்த பட்சம்
ஈஸ்வரையாவது எச்சரிக்கலாம் என்று மானசீகமாக அவனுக்குச் செய்தி அனுப்பினார். ஆனால்
மகேஷ் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டு ஈஸ்வர் நிலை குலைந்து போயிருந்ததால் அவர்
செய்தி அவனை எட்டவில்லை. இரண்டு மூன்று முறை முயற்சித்த ஹரிராம் அவனைத் தொடர்பு
கொள்ள முடியாமல் போகவே வேறு வழி இல்லாமல் கிளம்பினார். அவருக்கு நிராயுதபாணியாக
யுத்தத்திற்குப் போவது போல இருந்தது.
எந்தப்
பிரச்சினையையும் அறியாத கணபதி அவர் பின்னால் ஓடி வந்தான். “நான் ரெண்டு தடவை உங்க
கிட்ட பேசலாம்னு வந்தேன். நீங்க நல்லா தியானத்துல மூழ்கி இருந்தீங்க. எனக்கென்னவோ
தியானமே வர மாட்டேங்குது. தியானம்னு உட்கார்ந்தாலே தூக்கம் தான் வருது... அது
எதனால?”
(தொடரும்)
என்.கணேசன்
எனக்கென்னவோ தியானமே வர மாட்டேங்குது. தியானம்னு உட்கார்ந்தாலே தூக்கம் தான் வருது... அது எதனால?”////
ReplyDeleteகணபதியின் குழப்பம் கதையை விறுவிறுப்பாக்குகிறது..!
ஒரு பக்கத்திற்கு மேல் இருந்தால் சிறுகதை கூட படிக்க பிடிக்காத என் கணவர் உங்கள் பரம(ன்) ரகசியத்தை 12 நாள் தொடர்ந்து படித்து முடித்து குடும்பத்தில் எல்லாரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார். உங்கள் தீவிர ரசிகராகி விட்டார்.
ReplyDeleteமதிப்பிற்குரிய கதாசிரியர் என்.கணேசன் அவர்களுக்கு,
ReplyDeleteதங்கள் பரமன் இரகசியம் நாவல் ஒரு வாரத்திற்கு முன்பு படிக்க கிடைத்தது. பின்னட்டை குறிப்பு படித்து இந்திரா சௌந்திரராஜன் நாவல் போல் இருக்கும் என நினைத்தேன். படிக்க படிக்க இது வேறுபட்ட மிக ஆழமான கதை என்பதை உணர முடிந்தேன். இன்று தான் படித்து முடித்தேன். படித்து முடித்த பிறகும் இது போல் ஒரு நாவலை ஒருவர் எழுத முடியுமா என்ற பிரமிப்பு தங்கி விட்டது. எல்லா விதங்களிலும் சிறப்பு மிக்க நாவல் இது. இது வரை இப்படி ஒரு நாவலைப் படித்ததில்லை ஐயா. இது போல் மேலும் நிறைய எழுத வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
அன்பு வாசகி
மதிவதனி
Super(fast) chapter. Very interesting as usual.
ReplyDelete