சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 27, 2014

ஆசையும் ஆண்டவனாவது எப்போது?


கீதை காட்டும் பாதை 29

ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகச் சொல்கிறார். தனஞ்செயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என்னைப் பற்றிக் கொண்டு நிற்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் “என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லைஎன்பது ஸ்ரீகிருஷ்ணரின் சுயபுராணம் போலத் தோன்றலாம். அது அல்ல என்பது அடுத்த சுலோகங்களைப் படிக்கையில் தெரியும். இந்த சுலோகத்தில் சொல்லப்படுகிற அடுத்த உவமை மிக அழகான பொருத்தமான உவமை. ஒரு நூலில் விதவிதமான மணிகளை முழுமையாகக் கோர்த்தால் அந்த மணிகள் தெரியுமே ஒழிய நூல் தெரியாது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத அந்த நூல் தான் அத்தனை மணிகளையும் சேர்த்து வைத்திருக்கிறது. மணிமாலை தோற்றத்தை அந்த நூல் தான் ஏற்படுத்துகிறது. அந்த நூலில்லா விட்டால் மணிமாலை இல்லை.

அந்த மணிகள் அந்த நூலைப் பற்றிக் கொண்டிருப்பது போல இந்த உலகங்கள் எல்லாம் இறைவனைப் பற்றிக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சம் இப்போதைய வடிவில் நமக்குப் புலப்படுகிறது என்பது இதில் காட்டப்படுகிறது. அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர்  சொல்கிறார்.  

குந்தி புத்திரனே, நான் நீரில் சுவையாகவும், சூரிய சந்திரர்களில் ஒளியாகவும்,  எல்லா வேதங்களிலும் ஓங்காரமான பிரணவமாகவும், ஆகாயத்தில் ஒலியாகவும், ஆண்களிடத்தில் ஆண்மையாகவும் இருக்கிறேன்.

மண்ணில் தூய மணமாகவும், தீயில் ஓளியாகவும், எல்லா உயிரினங்களிலும் உயிராகவும்,  தவம் செய்வோரின் தவமாகவும் நான் இருக்கிறேன்.

அண்டசராசரங்களுக்கும் நான் சநாதனமாகிய (நிலையான) விதையென்று உணர்ந்து கொள் பார்த்தா. நான் அறிவாளிகளின் அறிவாகவும், தேஜஸ் படைத்தவர்களின் தேஜஸாகவும் இருக்கிறேன்.

பரதகுலச் செம்மலே. ஆசையும், பற்றும் நீங்கிய பலசாலிகளின் பலம் நான். தர்மத்திற்கு மாறுபடாத ஆசையும் நானாக இருக்கிறேன்.

சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொன்றின் சாராம்சமாகவும், மூல சக்தியாகவும் இறைவனே இருக்கிறார். தேவகி மைந்தனாக, அர்ஜுனனின் நண்பனாக ஸ்ரீகிருஷ்ணர் இந்த வார்த்தைகளை முழங்கவில்லை. அண்ட சராசரங்களுக்கும் சனாதன விதை என்று, பிறப்பும், இறப்பும் கொண்ட, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்து முடிந்த கண்ணன், கண்டிப்பாகச் சொல்ல முடியாது. கீதோபதேச கட்டத்தில் அந்த அவதாரத்திற்குப் பின் இருந்த பரம்பொருளாகவே ஸ்ரீகிருஷ்ணர் அந்த வார்த்தைகளைச் சொல்லி இருக்கிறார்.

ஒவ்வொன்றின் உயிராகவும், சாராம்சமாகவும், மூலமாகவும் இருக்கிற பரம்பொருள் என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறொன்றுமில்லை என்று சொல்வதில் தவறென்ன இருக்க முடியும்.

இதில் கடைசியாக ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது சிந்திக்கத் தக்கது. வெறுமனே பலசாலியின் பலம் நான் என்று சொல்லவில்லை.  ஆசையும் பற்றும் நீங்கிய பலசாலியின் பலம் நான் என்று கூறுகிறார். பலசாலி போல் தோன்றுபவனிடம் ஆசையும் பற்றும் இருக்குமானால் அவன் பலசாலி அல்ல. ஆசையும், பற்றும் இருந்தால் அதுவே பலவீனம் அல்லவா? பார்வைக்குத் தெரியும் பலம் வெறும் தோற்றமே அல்லவா? ஆசைக் கடலின் அலைகளில் சிக்கியவன் யாரேயானாலும் அவன் அலைக்கழிக்கப்படும் பரிதாபமே அல்லவா? அதனால் தான் ஸ்ரீகிருஷ்ணர் உண்மையான பலம் ஆசையும் பற்றும் நீங்கிய பின் மிஞ்சுவதே என்கிறார்.

அடுத்ததாக தர்மத்திற்கு மாறுபடாத ஆசையாக நான் இருக்கிறேன்என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்வதும் மிக முக்கியமான பிரகடனம். ஆசையினால் சங்கிலித் தொடர் போல வரும் பிரச்சினைகளை கணித கோட்பாடுகள் போலச் சொன்ன ஸ்ரீகிருஷ்ணர் திடீர் என்று இப்படி ஏன் கூறுகிறார்?

ஒரு மனிதன் எதற்காகப் பிறந்தானோ அதை நிறைவேற்றுவதே அவன் தர்மம். அதைச் செய்து முடிக்கும் வரை அவனுக்கு நிம்மதி இருக்காது. அதற்கான அவன் துடிப்பு ஆசை போல் தோன்றினாலும் அது தர்மமானது, இதயத்துடிப்பு போல இயல்பானது.

ஒரு கலைஞன் தன் கலையில் முன்னேறி சாதிக்க ஆசைப்படுவது, ஒரு விஞ்ஞானி கண்டுபிடிக்கத் துடிப்பது, ஞானவழியில் ஈடுபாடு உள்ளவன் மெய்ஞானம் அடைய ஆழமாய் ஆசைப்படுவது, ஒரு நல்ல மனிதன் உயர்ந்த நோக்கம் ஒன்றை ஆத்மார்த்தமாக உணர்ந்து அதை நிறைவேற்ற ஆசைப்படுவது போன்றவற்றை அந்த வகையில் சேர்க்கலாம். இந்த ஆசைகளும் தவறு என்றால் இந்த உலகின் அத்தனை அழகும், நன்மைகளும் சாத்தியப்பட்டிருக்குமா?

சங்கீத மேதைகளும், ஓவிய மேதைகளும், எழுத்துலக மேதைகளும் தங்களுக்குள் இருந்த திறமையை படைப்புகளாகப் படைக்க ஆசைப்பட்டதனால் ஏற்பட்ட விளைவுகளின் உன்னதங்கள் தான் எத்தனை? மின்சாரம் கண்டுபிடிக்க பல ஆயிரம் முறை தோற்றும் தன் ஆசையை விலக்கிக் கொள்ளாத ஒரு தாமஸ் ஆல்வா எடிசனின் ஆசையின் பலனை அல்லவா அவருக்குப் பிந்தைய தலைமுறைகளான நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ரமண மகரிஷியின் ஞானத்தேடலும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானத்தேடலும் எத்தனை லட்சம் பேருக்கு இன்று வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.  அன்னை தெரசா கல்கத்தா வீதிகளில் ஆதரவற்று அலைந்து கொண்டிருந்த தொழுநோயாளிகளுக்கு தொண்டாற்ற ஆசைப்பட்டாரே அந்த் ஆசையின் விளைவில் எத்தனை பேருடைய வாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்கிறது. இது போன்ற ஆசைகளில் நாம் இறைவனைப் பார்க்க முடியா விட்டால் வேறு எதில் தான் அவரைக் காண முடியும்? அது போன்ற தர்ம நெறியில் இருக்கும் உயர்ந்த ஆசைகளில் தான் இருப்பதாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். உலகம் சீரழியாமல் ஓரளவாவது நல்ல முறையில் இயங்குவதே இந்த வகை மேலான ஆசைகளாலும், அவற்றை நிறைவேற்ற எதையும் செய்யத் துணியும் அந்த மனிதர்களின் மன உறுதியாலும் அல்லவா?

ஆனால் இந்த வாக்கியத்தில் இருக்கும் தர்மம் தவறாத என்ற சொற்கள் மிக முக்கியமானவை. மேலே சொன்ன மேன்மைகளின் போர்வையில் மனிதன் தன் ஈகோவையும், பேராசையையும் முன்னிலைப்படுத்தி இறங்கும் செயல்களில் இறைவன் இருக்க முடியாது. தன் மொழியையும், மதத்தையும், இனத்தையும் காப்பாற்றுவதாக காட்டிக் கொண்டு தங்கள் வழிகளில் இருந்து வேறுபட்டவர்களை அழிக்கத் துணிபவர்கள், தங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக உள்ளே ஆசைப்பட்டு, வெளியே ஒரு குறிக்கோளுக்காக இயங்குவதாய் காட்டிக் கொள்ளும் ஏமாற்றுப் பேர்வழிகள் எல்லாம் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் வகையில் சேரமாட்டார்கள்.

தர்மம் தவறாத ஆத்மார்த்தமான ஆசைகளில் மட்டுமே ஆண்டவன் இருக்கிறான். அந்த ஆசைகளினால் தூண்டப்படுபவர்கள் இறைவனால் தூண்டப்படுபவர்கள். இது வரை உலகில் நடந்த அனைத்து நன்மைகளும் சரி, இனி உலகில் நடக்க இருக்கும் அனைத்து நன்மைகளும் சரி இது போன்ற ஆசைகளாலேயே சாத்தியமாகும். இந்த ஆசைகள் செயற்கையாய் ஒருவர் ஏற்படுத்திக் கொள்பவை அல்ல. இவை இயற்கையாய் இதயத்தின் ஆழத்தில் இருந்து எழுபவை. அதனால் அனைவருமே பலன் அடைவார்கள். இவற்றை அலட்சியப்படுத்த முடியாது, அலட்சியப்படுத்தவும் கூடாது.  அது நம் பிறப்பின் நோக்கத்தையும், இறைவனையுமே அலட்சியப்படுத்துவது போன்றது.

பாதை நீளும்.....

-          என்.கணேசன்


6 comments:

 1. புரிந்து உணர்ந்து கொள்பவர்களுக்கு தவறாக படுவதில்லை...

  ReplyDelete
 2. சித்தார்த்தனின் அதிருப்தியே கௌதமபுத்தரை உலகிற்கு தந்தது என்று "வாழ்ந்து படிக்கும் பாடங்கள்" நூலில் "அர்த்தமுள்ள அதிருப்தி" என்ற தலைப்பில் கூறியிருந்தீர்கள். அதுபோல ஆண்டவனின் (அர்த்தமுள்ள) ஆசை பற்றிய விளக்கம் அருமை.
  ஆண்டவனின் ஆசையை எங்களுள் கண்டுணர உதவியதற்கு நன்றி .
  https://www.facebook.com/groups/nganeshanfans

  ReplyDelete
 3. wonderful explanation... Thanks a lot sir

  ReplyDelete
 4. பஞ்ச பாண்டவர்கள் எமது ஐம்புலன்களையும் கௌரவர்கள் நூற்றுக்கணக்கான எண்ண அலைகளையும் அல்லவா குறிப்பிடுகின்றன. அந்த எண்ண அலைகளை பஞ்ச இந்திரியங்களின் மூலம் மனிதன் வென்று இறைவணக் காணலாம் என்ற தத்துவமே இங்கு கூறப்படுகின்றது.

  ReplyDelete
 5. ஆசைகளின் ஆண்டவன் இருக்கும் விதம் பற்றி கூறியது..அருமை

  ReplyDelete