ஈஸ்வர் மிக வேகமாக விஷாலியின் அறைக்குப் போவதைப் பார்த்த
பரமேஸ்வரனுக்கு என்னவோ அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டதாகத் தோன்றியது. என்ன என்று
விசாரிக்க கனகதுர்காவிடம் சென்றார். கனகதுர்கா கவலையுடன் இருக்க ஆனந்தவல்லி
சாவதானமாக அமர்ந்திருந்தாள்.
என்ன ஆயிற்று என்று விசாரித்த மாமனாரிடம் கனகதுர்கா
ஆனந்தவல்லி சொன்னதைச் சொன்னாள். கேட்டு அவரும் கவலைப்பட ஆனந்தவல்லி அவர்களிடம்
கவலைப்பட வேண்டாம் என்று சொன்னாள்.
“நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணு ஏடாகூடமா
ஏதாவது செய்துகிட்டா என்ன பண்றதும்மா. நீ சுலபமா கவலைப்பட வேண்டாம்னு சொல்றே.”
“அந்தப் பொண்ணு அப்படி எதுவும் செய்துக்காது. அது அப்படியெல்லாம் சொல்லவே
இல்லை. நான் சும்மா தான் சொன்னேன்....” ஆனந்தவல்லி அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள்.
கனகதுர்கா
விழிபிதுங்க நின்றாள். ‘இப்படியும் கூட சும்மா சொல்வார்களா?’ பரமேஸ்வரன் தாயிடம் கோபத்துடன் கேட்டார். “அம்மா உன் வயசுக்கு இதெல்லாம்
கௌரவமா? நீ என்ன காரியம் செய்திருக்கே. பைத்தியம் பிடிச்சுடுச்சா?”
ஆனந்தவல்லி மகன்
கோபத்தைப் பொருட்படுத்தவில்லை. கனகதுர்காவிடம் சொன்னாள். ”இப்படித் தான் என்
மூத்த மகனும் சில நாள்னு அந்த தோட்ட வீட்டுக்குப் போனான். சிவலிங்கம் அவனைத் தன்
பக்கம் இழுத்துகிச்சு. போனவனைத் திரும்ப கூட்டிகிட்டு வர பெத்தவ பாசம் பத்தலை...
இவன் போகிறவன் ஒரேயடியாய் சிவலிங்கம் பின்னால போயிடாமல் திரும்ப வரணும்னா அந்தப்
பொண்ணால தான் முடியும். அதுக்கு அவங்க ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசணும்.... சுமுகமாயிடணும்... அதுக்கு இது தான் ஒரே வழின்னு
தோணுச்சு...”
கனகதுர்காவிற்கு என்ன நினைப்பது என்று
தெரியவில்லை. மகன் அதை எப்படி எடுத்துக் கொள்வான் என்று பயந்தாள்.
நேரம் போய்க் கொண்டிருந்தது. ஆனந்தவல்லி
முகத்தில் லேசாய் புன்னகை அரும்ப ஆரம்பித்தது. நீண்ட நேரம் கழித்து ஈஸ்வர்
கோபத்துடன் வந்த போது சங்கரின் பதக்கங்களை எல்லாம் முதல் தடவை பார்ப்பது போல் ஆனந்தவல்லி
பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஈஸ்வர் பரமேஸ்வரனைக் கேட்டான்.
“உங்கம்மாவுக்கு அறிவே இல்லையா?”
கனகதுர்கா மகனைக் கடிந்து கொண்டாள். “என்னடா
பெரியவங்களை இப்படி எல்லாம் பேசிகிட்டு..”
“நீ சும்மா இரும்மா. பெரியவங்க மாதிரியா
இவங்க நடந்துக்கிறாங்க. எனக்கு அப்படியே கழுத்தை நெறிச்சுடலாம் போல இருக்கு”
பரமேஸ்வரன் சொன்னார். “செய். பல பேர் பல
தடவை நினைச்சது தான் அது.” ஆனந்தவல்லி மகனை முறைத்தாள்.
ஈஸ்வருக்கு, குறும்பு செய்து விட்டு
ஒன்றும் தெரியாத சாது போல் நடிக்கும் குறும்புக் குழந்தையை ஆனந்தவல்லி
நினைவுபடுத்தினாள். அவள் இல்லா விட்டால் இன்னேரம் விஷாலியுடன் இருந்த பிணக்கு
இன்னும் சரியாக வாய்ப்பு இல்லை என்றாலும் சில நிமிஷங்களுக்காவது அவனைக் கதிகலங்க
வைத்த ஆனந்தவல்லியை சின்னக் கோபத்தோடு ஈஸ்வர் நெருங்கினான்.
“ஏண்டா சாக வேண்டாம்னு சொல்லிட்டு வர
இவ்வளவு நேரமா?” ஆனந்தவல்லி கேட்க ஈஸ்வர் அவள் கழுத்தை நெறிப்பது போல்
நடித்துக் கை வைக்க ஆனந்தவல்லி சளைக்காமல் கேட்டாள். “விஷாலி போட்டுட்டிருக்கற
செண்ட் மணம் உன் கிட்ட இருந்து எப்படி வருது?”
ஈஸ்வர் முகம் வெட்கத்தில் சிவந்தது. அவள்
கழுத்தை செல்லமாக நெறிக்க, ஆனந்தவல்லி கொள்ளுப் பேரனைக் குறும்புப் பார்வை பார்த்தாள்.
பரமேஸ்வரனுக்கு மீண்டும் தந்தை நினைவுக்கு வந்தார். மகன் வெட்கத்தை ரசித்த
கனகதுர்காவிற்கு ஈஸ்வர் ஆனந்தவல்லியிடம் அவ்வளவு உரிமை எடுத்துக் கொள்வது
ஆச்சரியமாக இருந்தது. சங்கர் தன் பாட்டியை யாரும் நெருங்க முடியாத கண்டிப்பான
நபராக விவரித்திருந்தார். அவர் மகன் இந்த வீட்டில் எப்படிப்பட்ட மாற்றங்களை
வரவழைத்திருக்கிறான்!...
மீனாட்சி சந்தோஷம் தாளாமல் கணவரிடம் ஓடி வந்தாள். “என்னங்க உங்களுக்கு
விஷயம் தெரியுமா?”
“என்ன மீனாட்சி?”
“நம்ம ஈஸ்வரும் விஷாலியும்
காதலிக்கிறாங்களாம்... பாட்டி அவங்க ரெண்டு பேர் கல்யாணத்தை சீக்கிரமாவே
செஞ்சுடணும்னு அப்பா கிட்ட சொல்லிகிட்டு இருக்காங்க... தென்னரசு அண்ணன் டெல்லியில
இருந்து திரும்பி வந்ததும் பேசலாம்னு அப்பா சொல்றார். எனக்கு ரொம்பவே சந்தோஷமாய்
இருக்குங்க”
விஸ்வநாதனுக்கு மகன் நினைவு வந்தது.
அவனுக்காக மனம் கதறியது. எந்தப் பெண்ணை அவன் திருமணம் செய்வதற்கு அவன் தாத்தா
சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்று நினைத்து இத்தனை காலம் அதைத் தெரிவிக்காமலேயே
இருந்தானோ, அதே பெண்ணை இன்னொரு பேரனுக்குத் திருமணம் செய்து வைக்க அந்தத் தாத்தா
முடிவெடுத்திருக்கிறார். அவன் எப்படித்
தாங்குவான் என்று அவர் வேதனைப்பட்டார். அது தெரியாமல் மீனாட்சி சந்தோஷப்பட்டுக்
கொண்டிருக்கிறாள்.
மகேஷ் இப்போது இங்கு இல்லாமல் இருப்பது
துரதிர்ஷ்டமே என்று தோன்றியது. மிக முக்கியமான நேரங்களில் எல்லாம் அவன்
இங்கிருப்பதில்லை. பரமேஸ்வரனுக்கு மாரடைப்பு வந்த போதும் அவன் இங்கு இல்லை. அவன்
காதலிக்கு அவன் வெறுக்கும் நபருடன் திருமணம் தீர்மானமாகிக் கொண்டிருக்கிறது.
இப்போதும் அவன் இங்கு இல்லை.
வரலாறு திரும்பத் திரும்ப ஒரே மாதிரி
வருகிறது என்று நினைத்துக் கொண்டார். கல்லூரி நாட்களில் அவர் சங்கரைப் பார்த்து
நிறைய பொறாமைப்பட்டிருக்கிறார். நல்ல குணம், அசாத்திய அறிவு, தன்னடக்கம்,
அளவில்லாத செல்வம் அத்தனையும் இருந்த சங்கரை கல்லூரி ஆசிரியர்களும், சக
மாணவர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடாத குறை தான். சங்கர் முன்னால்
மற்றவர்கள் எல்லாரும் களையிழந்து போனார்கள். அதனால் நண்பனாகப் பழகினாலும் உள்ளூர
சங்கர் மீது தீராத வயிற்றெரிச்சல் அவருக்கு இருந்தது.
சங்கர் காதல் திருமணம் செய்து கொண்டு
நிரந்தரமாய் சென்ற பின், சங்கரின் தங்கையைத் திருமணம் செய்து கொண்டு வந்த பிறகு,
சங்கரை வென்று விட்டது போல் ஒரு எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. அவருக்கு ஒரு
மகன் பிறந்து அவன் மீது பரமேஸ்வரன் பாசமழை பொழிந்த போது ஒரு தைரியம்
பிறந்திருந்தது. இனி பயப்படத் தேவையில்லை என்று நினைத்திருந்தார். ஆனால் ஈஸ்வரின்
வரவில் எல்லாம் மாறி சரித்திரம் திரும்பி விட்டது. அவர் மகனும் அவரைப் போலவே உயர
முடியாத அளவுக்கு ஒரு எதிரியை சம்பாதித்து விட்டிருக்கிறான். அறிவு, பாசம்,
சொத்து, காதல் என்று எல்லா விதங்களிலும் அவன் ஈஸ்வரால் தோற்கடிக்கப்
பட்டிருக்கிறான்....
மகேஷிற்கு நிறைய சம்பாதிக்க வேண்டும்,
புகழ் பெற வேண்டும் என்கிற ஆசை நிறைய இருக்கின்றது. சமீப காலங்களில் பல முறை
விஸ்வநாதனிடம் அவன் சொல்லி இருக்கிறான். “அப்பா! தாத்தா சொத்தெல்லாம் ஒன்னுமே
இல்லைன்னு சொல்ற அளவுக்கு நான் சம்பாதிச்சுக் காட்டறேன் பாருங்க...”
அப்படிச் சொன்னானே ஒழிய பெரியதாய்
அவனுக்குத் தொழில் நுட்பங்கள் தெரிந்திருக்கவில்லை. கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர்
ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தானே ஒழிய மற்றபடி பெரிய சாமர்த்தியம்
எதிலும் இருக்கவில்லை. அடிக்கடி நண்பர்களிடம் போவது, இரவு வேளைகளிலும்,
நாட்கணக்கிலும் எங்கேயோ கழிப்பது எல்லாம் அவருக்கு கவலையைத் தந்தது. ஆனால்
அவனுக்கு பெரிய இடத்து நண்பர்கள் இருப்பதாகச் சொன்னான். இந்தியாவிலேயே மிகப் பெரிய
பணக்காரர்களில் ஒருவரான பாபுஜி கூடத் தனக்கு நண்பர் என்று சொன்னான். அவருக்கு
நம்பக் கஷ்டமாக இருந்தபோது தன் செல் போனில் இருந்த பாபுஜியின் எண்ணைக் கூடக்
காட்டினான். அவர் முன்னாலேயே போனில் பாபுஜியிடம் பேசினான்....
சில நாட்களாக ஆகாயக் கோட்டை கட்டி அதில்
வாழ்ந்து கொண்டிருக்கும் மகேஷின் அஸ்திவாரத்தையே
ஈஸ்வர் கலைத்துக் கொண்டிருக்கிறான். மற்றவற்றையாவது அவன் தாங்கிக் கொள்ள முடியலாம்.
ஆனால் காதல் விஷயத்தில் அவனால் தாங்க முடியும் என்று தோன்றவில்லை. உடனடியாகப் போன்
செய்து விஷயத்தைச் சொல்லலாமா என்று நினைத்த விஸ்வநாதன் பிறகு எண்ணத்தை மாற்றிக்
கொண்டார். அவனாகப் போன் செய்தால் சொன்னால் போதும் என்று தோன்றியது. கோவாவில்
ஜாலியாக இருக்கும் இந்த சில நாட்களாவது அவனுக்கு மிஞ்சட்டும்.
குருஜி தன்னை விதியின் நாயகனாக உணர்ந்தார். இது வரை
அவர் அறிந்ததும் அனுமானித்ததும் விசேஷ மானஸ லிங்கத்தைப் பொறுத்த வரையில்
மிகச்சரியாகவே இருக்கிறது. ஆர்க்கிமிடிஸ் சொன்னது அவருக்கு நினைவுக்கு வந்தது. ”நான் நிற்க ஒரு இடமும், ஒரு சரியான நெம்புகோலும் எனக்குக் கிடைத்தால் நான்
இந்த பூமியையே அசைத்துக் காட்டுவேன்”
குருஜிக்கு சரியான ஒரு இடமும்
கிடைத்திருக்கிறது. விசேஷ மானஸ லிங்கம் என்ற நெம்புகோலும் கிடைத்திருக்கிறது. அவர்
இந்த உலகத்தையே நகர்த்தி சரியான விதத்தில் நிறுத்தப் போகிறார். சரித்திரத்தில்
நிரந்தரமான இடத்தைப் பிடித்து விடப் போகிறார்....
முதல் முதலில் விசேஷ மானஸ லிங்கம் பற்றி
பாபுஜியிடமும், மற்ற அறுவரிடமும் அவர் சொன்ன போது அவர்கள் அதை இந்தியாவில்
சொல்லப்படும் எத்தனையோ கற்பனைக் கதைகளில் ஒன்று என்று தான் அதை நினைத்தார்கள்.
இந்திய சித்தர்கள் விஞ்ஞானத்திற்கு யூகிக்கவும் முடியாத எத்தனையோ சித்திகளை
விளையாட்டாகச் செய்து விடக் கூடியவர்கள் என்பதை விளக்கினார். சிறு வயதில் இருந்து
அவர் அறிந்திருந்த ஒருசில சித்தர்களின் அபூர்வ சக்திகள் பற்றியும் சொன்னார். கேட்ட
பின் அவர்கள் பிரமித்தார்கள். அப்படிப்பட்ட பல நூறு சித்தர்கள் தங்கள் சக்திகளை
ஆவாகனம் செய்து உருவாக்கிய அந்த விசேஷ மானஸ லிங்கத்தின் சக்திகளின் அளவு, ஒரு
மனிதன் காண முடிந்த கற்பனையின் அளவு தான் என்று அவர் சொன்னார்.
சித்தர்களின் சக்தியையாவது அவர்களில்
சிலரால் ஒத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் சித்தர்கள் உருவாக்கிய விசேஷ மானஸ
லிங்கத்தின் சக்தியை அவர்களால் நிஜம் என நம்ப முடியவில்லை. பின் தான் அவர்களிடம்
சில ஆராய்ச்சிகள் மூலம் அதை நிரூபிப்பதாக அவர் சொன்னார். பின் அன்று அவர்களிடம்
உணர்ச்சி பூர்வமாக குருஜி சொன்னார்.
“நண்பர்களே நீங்க அட்லாண்டிஸ் என்ற தீவைப்
பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? அது 11000 வருஷங்களுக்கு முன்னாடியே சிறப்பாய் இருந்ததாய் ப்ளேடோங்கிற கிரேக்க ஞானி
சொல்லி இருக்கார். உலகத்துல மத்த பகுதிகள்ல மனிதர்கள் காட்டு மிராண்டிகளாய்
வாழ்ந்துட்டு இருந்த காலத்துல அந்தத் தீவில் வாழ்ந்த மனிதர்கள் மட்டும் அந்த காலத்துலயே அறிவாளிகளாவும்,
நாகரிகத்துல சிறந்தவங்களாவும் இருந்ததா சொல்லிக்கிறாங்க. அந்தத் தீவு பிற்காலத்துல
கடல்ல மூழ்கி அழிஞ்சுடுச்சுன்னு சொல்றாங்க. அய்ன் ரேண்ட் எழுதின “அட்லாஸ் ஷ்ரக்டு”ல கூட அந்த அட்லாண்டிஸ் தீவு ஞாபகார்த்தமா எல்லா அறிவாளிகளும் சேர்ந்து அட்லாண்டிஸ்
என்கிற இடத்தை உருவாக்கி அங்கே வாழற மாதிரி கற்பனையில் எழுந்தியிருந்ததை நீங்க
படிச்சிருக்கலாம். அந்தக் கற்பனையை நிஜமாக்கணும்னு நான் ஆசைப்படறேன்....”
”அந்தக் காலத்து ஞானிகள் இந்த காலத்தை அழிவையோ, பெரிய
மாற்றத்தையோ உலகம் காணப்போகிற காலமாய் குறிச்சுட்டுப் போயிருக்காங்க. எச்சரிக்கையாய்
இருக்கிறதா நினைச்சு விசேஷ மானஸ லிங்கம்கிற ஒரு மஹா சக்தியை ரகசியமாய் மறைச்சு
வச்சுட்டு இருக்கிற முட்டாள்தனத்தை அந்த சிவலிங்கத்தை வச்சுகிட்டு இருக்கிறவங்க
செய்றாங்க. நிறைய செய்ய வேண்டிய காலத்துல அதை முடக்கி வச்சுகிட்டு இருக்கறது என்ன
புத்திசாலித்தனம்னு எனக்குத் தெரியலை. உலகம் அழிவை நோக்கிப் போய்கிட்டு இருக்கிற
இந்தக் காலத்துல கூட விசேஷ மானஸ லிங்கத்தை உபயோகப்படுத்தலைன்னா அது முட்டாள்தனம்னு
நான் நினைக்கிறேன். அதுக்காகத் தான் அதை முதல்ல என் வசமாக்கிக்கப் போறேன். இந்த
உலகத்தை வழிநடத்தப் போறேன்...”
“உலகத்துல எப்பவுமே முட்டாள்கள் தான்
அதிகம்.. ஆட்டு மந்தைக் கூட்டம்... அவங்களை வழி நடத்த எப்பவுமே புத்திசாலிகள்
தேவை... ஒருசில பேர் புத்திசாலித்தனத்துல தான் எல்லா நல்லதும் உலகத்துல இது
வரைக்கும் நடந்திருக்கு. சிந்திக்கத் தெரிஞ்ச அறிவாளிகள் இல்லைன்னா எந்த
முன்னேற்றமும் இங்கே இல்லை. நீங்க எல்லாம் அறிவாளிங்க. உங்க நாடுகள்ல நல்ல
செல்வாக்கோடவும் இருக்கீங்க. சக்தி வாய்ந்தவங்களா இருக்கீங்க. அதனால என்னோட
முயற்சில உங்களையும் பங்கெடுக்க கூப்பிடறேன்....”
அன்று குருஜி தொடர்ந்து நிறைய நேரம்
பேசினார். விசேஷ மானஸ லிங்கத்தின் உதவியோடு உலக அளவில் எதிர்பார்க்கும்
மாற்றங்களைச் செய்ய அவருக்குத் துணையாக இருக்க உலக நாடுகளில் பிரதிநிதிகள் தேவை
என்று கருதினார். ஆரம்பமாய் ஆறு நாடுகளின் பிரதிநிதிகளாய் அவர்களை அவர்
நினைத்தார். முதலிலேயே சக்தி வாய்ந்தவர்களாக இருக்கும் இவர்கள், விசேஷ மானஸ
லிங்கத்தின் உதவியும் கிடைத்து விட்டால் பல அற்புதங்களை நிகழ்த்தலாம், வரலாற்றில்
இடம் பெறலாம் என்பதை சக்தி வாய்ந்த வார்த்தைகளில் சொன்னார். அவர்களை விதியின்
பிரதிநிதிகளாய் மாறத் தயாராக இருக்கச் சொன்னார். அவர் பேசும் போது அங்கிருந்த
பாபுஜி தானும் அதில் பங்கு பெற ஆசைப்பட்டு தன்னை இணைத்துக் கொண்டார். ஆழ்மன
ஆராய்ச்சிகளுக்கு ஆகும் செலவை, தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்.
அவர்கள் அறுவரும் மந்திரத்தால்
கட்டுப்பட்டவர்கள் போல குருஜி சொன்னதைக் கேட்டார்கள். கேட்க நன்றாக இருந்தாலும்
அது எந்த அளவு சாத்தியமாகும் என்பது அவர்களுக்கு கேள்விக்குறியாகவே இருந்தது
என்பது அவர்கள் முகபாவத்தில் இருந்தே தெரிந்தது. அதில் அவர் தவறு காணவில்லை. அவர்
அளவுக்கு அவர்களுக்கு பிரபஞ்ச ரகசியங்களில் ஞானம் இல்லை. அவருடைய அனுபவங்களும்
அவர்களுக்கு இல்லை. ஒரு நாள் அவர்களுக்குப் புரியும் என்ற நம்பிக்கை அவருக்கு
இருந்தது.
அந்த நாள் தற்போது
நெருங்கி விட்டதாக குருஜி நினைத்தார். அவர் கணக்கு சரியே என்று விசேஷ மானஸ லிங்கம்
இப்போது நிரூபித்து விட்டது. நான் வந்து விட்டேன். என்னை வைத்து நீ என்ன
செய்கிறாயோ செய்து கொள் என்று அது அனுமதியும் கொடுத்து விட்டது என்று அவருக்குத்
தோன்றியது. இந்த நல்ல சந்தர்ப்பம் வர அவரும் சில தவறுகள் செய்ய வேண்டி வந்தது.
ஆனால் அவருக்கு வேறு வழியை விசேஷ மானஸ லிங்கத்தின் பாதுகாவலர்கள் விட்டு
வைக்கவில்லை. உலகத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காக ஒருசிலருக்குத் தீமைகள் செய்ய வேண்டி
தான் வருகிறது, என்ன செய்வது?.....
சிறிது நேரத்தில் குருஜியின் அறைக்கு ஜான்சன்,
பாபுஜி, தென்னரசு, மகேஷ் நால்வரும் வந்தார்கள். குருஜியும், ஜான்சனும் அடுத்த
ஆராய்ச்சிக்கு எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று விவாதிக்க ஆரம்பித்தார்கள். பாபுஜி,
தென்னரசு, மகேஷ் மூவரும் பரபரப்புடன் அதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். நடந்து
முடிந்த ரோஜா மணம் ஆராய்ச்சிக்குப் பின் ஒரு பெரிய எதிர்பார்ப்பு அவர்களிடமும்
ஏற்பட்டிருந்தது.
ஜான்சன் நடந்ததற்கு அடுத்த மேல் நிலையில் உள்ள
சின்ன ஆராய்ச்சி செய்யலாம் என்று அபிப்பிராயப்பட்டார். ஆனால் குருஜியோ இந்த தடவை
பெரியதாகச் செய்து எல்லாரையும் அசத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். பல்லாயிரம்
கோடி ரூபாய் அக்கவுண்டில் இருக்கையில் கஞ்சத்தனமாய் சில ஆயிரம் ரூபாய்க்கு செக்
எழுதி அதைச் செலவழிப்பதில் திருப்தி இல்லை என்று சொன்னார். அவர் அளவுக்கு நம்பிக்கை
ஜான்சனுக்கு இருக்கவில்லை. கடைசியில் ஜான்சன் குருஜி வழிக்கே வந்தார். முயன்று பார்ப்பதில்
தவறில்லை. ”சரி குருஜி நீங்கள் சொல்ற மாதிரியே கொஞ்சம் பெரிய
ஆராய்ச்சியே செய்யலாம். என்ன செய்யலாம்னு நீங்களே
சொல்லுங்கள்”
“என்ன செய்கிறோமோ அது உலக அளவுல எல்லோருக்கும்
தெரிகிற சம்பவமாய் இருக்கணும்...” என்று சொல்லி விட்டு குருஜி
யோசித்தார், அவர் பார்வை பக்கத்தில் இருந்த தினசரிப் பத்திரிக்கையின் தலைப்புச்
செய்தியில் தங்கியது.
சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கேட்ட பணயத்
தொகையைத் தந்து தங்கள் கப்பலையும், அதிலிருந்த 64 இந்தியர்களையும் மீட்க இந்தியா
ஒப்புக் கொண்டது என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிவதாகவும், அந்தப்
பணயத் தொகை எவ்வளவு என்று தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டதாகவும் எழுதி
இருந்தார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு தான் செங்கடல் அருகே சோமாலியக்
கடற்கொள்ளையர்களால் இந்தியக் கப்பல் கைப்பற்றப்பட்டிருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன் உலகநாடுகள் பலவும்
சேர்ந்து அந்தப் பகுதியில் ஒரு கூட்டு கடல் ரோந்துப்படையை உருவாக்கி இருந்ததன்
காரணமாக, சோமாலியக் கடற்கொள்ளையர்கள் இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் இயங்காமல்
மறைவாக இருந்தார்கள். அதனால் கூட்டு கடல் ரோந்துப்படையில் இருந்த ஆட்கள் கணிசமாகக்
குறைக்கப்பட்டிருந்தனர். அதைப் பயன்படுத்திக் கொண்டு அந்தக் கடற்கொள்ளையர்கள்
துணிகரமாக இப்போது செயல்பட்டிருக்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா
உட்பட பல நாடுகள் அதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தன.....
குருஜி புன்னகையுடன் கேட்டார். “அந்தக்
கடற்கொள்ளையர்களைத் தண்டிக்க நாம் முயற்சி எடுக்கலாமா?”
அவர்கள் புரியாமல் குருஜியைக்
குழப்பத்துடன் பார்த்தார்கள். குருஜி சொன்னார். “நம் விசேஷ மானஸ லிங்கத்தின் சக்தி
செங்கடல் வரை போய் சோமாலியக் கடற்கொள்ளையர்களைத் தண்டிக்கிறதா என்று ஆராய்ந்து
பார்க்கலாமா?”
ஜான்சனுக்கும் மற்றவர்களுக்கும் விசேஷ மானஸ
லிங்கத்திடம் இருந்து அநியாயத்திற்கு அதிகமாய் குருஜி எதிர்பார்ப்பதாகத்
தோன்றியது.
(தொடரும்)
என்.கணேசன்
Cool :) Let's wait for the next episode :)
ReplyDeleteஆனந்தவல்லி-ஈஸ்வர் காம்பினேஷன் சூப்பர் சார். குருஜியின் நெம்புகோல் உதாரணம் பிரமாதம். சோமாலியக் கொள்ளைக்காரர்களை இதில் புகுத்தியது புதுமை. அருமையாய் போகிறது நாவல்.
ReplyDeleteசாக வேண்டாம்னு சொல்லிட்டு வர இவ்வளவு நேரமா? விஷாலி போட்டிருக்கிற செண்ட் மணம் உன் கிட்ட இருந்து எப்படி வருது என்று ஆனந்தவல்லி கலாய்ப்பதை ரசித்தேன்.
ReplyDeleteHi sir,thank you for your update.wiah you a happy new year. kuruji ninaikarathu nadakkuma? waiting for the update
ReplyDeleteGuruji seems to be in good confidence. He seems to be sincere also. Will he win easily?
ReplyDeleteகதை அருமையாகப் போகிறது...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக அருமையான குடும்பம், அற்புதமான பாச பிணைப்புகள், எதிர்பாராத திருப்பு முனைகள், பிரம்மிப்பூட்டும் வசனங்கள், திகைப்பூட்டும் உதாரணங்கள். ... .
ReplyDeleteமிக மிக அருமை. ... .
Hi
ReplyDeleteExpecting experiment will be too big. seven days too big for me.
Muthu nk
வில்லன் ஹீரோவாகிறாரா? Waiting for next twist...
ReplyDeleteGoing Good !!!!
ReplyDeleteகுருஜி நல்லவர கெட்டவர ?
ReplyDeletebeautiful picture showing guruji's confidence. we miss ganapathi.
ReplyDeletewe miss ganapathi and manasalingam...
ReplyDelete#குருஜி புன்னகையுடன் கேட்டார். “அந்தக் கடற்கொள்ளையர்களைத் தண்டிக்க நாம் முயற்சி எடுக்கலாமா?”#
ReplyDeleteகுருஜி இதுபோன்ற நல்ல விஷயத்திற்கு முயற்சி எடுப்பது கூட அக்னிநேத்ர சித்தரின் விளையாட்டாக இருக்குமோ?
www.facebook.com/groups/nganeshanfans/
வில்லன், நாயகன் ஆகிறாரா? கொளுத்துங்கள்...
ReplyDeleteகணேசன் சார்..,
ReplyDeleteஅருமை அருமை...., மிக மிக நேர்த்தியாக .., அனனவரது யுகத்திற்க்கும் அப்பாற்பட்டு இந் நாவலை நகர்த்தி செல்கிறீர்கள்.... வர்ணிக்க வார்த்தைகளில்லை..... பாராட்டுக்கள் . வாழ்த்துக்கள் .......
ஆஹா...அருமையோ...அருமை...வாழ்த்துக்கள்.
ReplyDeleteEllaiyila parvasam inda paraman raghasiyum!!!
ReplyDeleteHappy New Year 2014 wishes to all and to Mr. Ganesan sir.
ஆஹா ஆஹா கடற்கொள்ளையர்கள் அடுத்து ராஜபக்ஷேவா.
ReplyDelete