ஈஸ்வர் மனதில் குருஜி ஏற்படுத்திய சந்தேகங்கள் மறு நாள் பார்த்தசாரதியை
அவன் தோட்ட வீட்டில் சந்திக்கும் வரை நீடித்துக் கொண்டு இருந்தன. எனவே அவன்
பார்த்தசாரதியை சந்தித்த போது கேட்டான். “நீங்கள் குருஜி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
பார்த்தசாரதி கேட்டார். “ஏன் கேட்கறீங்க?”
”நேற்று நான் வேதபாடசாலைக்குப் போயிருந்தேன். அப்போது
அவரையும் நான் சந்தித்துப் பேசினேன்...”
பார்த்தசாரதி சொன்னார். “அவர் மாதிரி ஒரு
ஆளைப் பார்க்கிறது கஷ்டம். நம் நாட்டிற்கே அவர் ஒரு பெரிய வரப்பிரசாதம். ஆன்மிகம்
என்கிற போர்வையில் எத்தனையோ ஏமாற்று வேலைகள் நடக்கிற இந்த காலத்தில் ’நான் கடவுள்’ என்று
சொல்லிக் கொள்ளாமல், தன்னை முற்றும் துறந்த சாமியாராகக் கூடக் காட்டிக் கொள்ளாமல்
அவர் செய்து வருகிற ஆன்மிக சேவை சாதாரணமானதல்ல. பேசுவது, எழுதுவது மட்டுமல்லாமல் ஆன்மிக
ஞானத்தை நாடு முழுவதும் பரப்ப அவர் எத்தனையோ அமைப்புகள் நடத்துகிறார்....”
ஈஸ்வர் அவரையே பார்த்துக் கொண்டிருக்க,
அவன் பார்க்கும் விதத்தில் இருந்து பார்த்தசாரதிக்கு சந்தேகம் வந்தது. “நான்
சொன்னதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையோ?”
ஈஸ்வர் மெல்ல சொன்னான். “நானும் அவரை
மனதில் பெரிய உயரத்தில் தான் நிறுத்தி இருந்தேன். அவர் எழுதிய புத்தகங்கள்
படித்திருக்கிறேன். பேசியதை நிறைய கேட்டிருக்கிறேன். அவர் ஆன்மிக ஞானம், சேவைகள்
பற்றி எனக்கும் மிக நல்ல அபிப்பிராயம் தான் இருக்கிறது. ஆனால் நேற்று அவரை
சந்தித்துப் பேசியதில் இருந்து ஏனோ ஒரு உள்ளுணர்வு அவருக்கும் இந்த சிவலிங்க விவகாரத்திற்கும்
சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது”
பார்த்தசாரதி இது என்ன முட்டாள்தனமான
அபிப்பிராயம் என்பதைப் போல ஈஸ்வரைப் பார்த்தார். இவனுக்கு என்ன சொல்லிப் புரிய
வைப்பது என்று யோசித்து பிறகு சொன்னார். “ஈஸ்வர் பணம், புகழ், அதிகாரம், அங்கீகாரம்
இதில் எதுவுமே அவருக்குக் குறைவில்லை. இன்று அவர் ஒரு வார்த்தை சொன்னால் கோடி
கோடியாய் பணம் கொண்டு வந்து கொட்ட எத்தனையோ கோடீசுவரர்கள் தயாராக இருக்கிறார்கள்.
பிரதமர், ஜனாதிபதி, மந்திரிகள் முதற்கொண்டு
அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டுப் போவதைப் பெருமையாக நினைக்கிறார்கள்.
வெளிநாட்டு பிரபலங்கள் கூட அவரை வந்து பார்த்து விட்டுப் போவதை பாக்கியமாக
நினைக்கிறார்கள். அவருக்கு எதிலும் குறையில்லை. அவர் மறைமுகமாக ஏதாவது மோசமான
வழியில் போபவராக இருந்தால் எங்கள் போலீஸ் டிபார்ட்மெண்டுக்குத் தெரியாமல் இருக்க
வாய்ப்பே இல்லை. இது வரை சின்ன வதந்தி கூட அவரைப் பற்றி மோசமாக வந்ததில்லை. அப்படி
இருக்கையில் அவர் போய் இந்த திருட்டு, கொலையில் எல்லாம் ஈடுபடுவார் என்று
நினைப்பதே அபத்தம்....”
ஈஸ்வருக்கு அவர் வாதத்தில் குறை
கண்டுபிடிக்க முடியவில்லை. ஆழ்ந்து யோசித்தபடியே அவன் தலையசைத்தான். ஆனால்
அறிவுக்கு எட்டிய அந்த வாதம் அவன் உள்ளுணர்வை சிறிதும் மாற்றவில்லை.
பார்த்தசாரதிக்கு ஈஸ்வரின் அறிவுகூர்மையில்
சந்தேகம் இருக்கவில்லை. குருஜியைத் தவிர அவன் யாரைப் பற்றிச் சொல்லி இருந்தாலும் அவர்
அப்படியே தீவிர ஆலோசனைக்கு எடுத்துக் கொண்டிருப்பார். ஆனால் அவன் குருஜியைச்
சந்தேகத்துடன் சொன்னது அவரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது. அவர் வாழ்நாள்
முழுவதும் பக்தியுடன் பார்த்த மனிதர் என்பது மட்டுமல்லாமல் இது வரை குருஜியைப்
பற்றி யாரிடம் இருந்தும் தவறாக அவர் கேள்விப்பட்டிருக்கவில்லை. முதன் முதலாக
ஈஸ்வர் வாயில் இருந்து வந்த இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து அவன் ”நான்
சந்தேகப்பட்டது தவறு” என்று சொல்லிக் கேட்டால் தான் மனம் சமாதானம் அடையும்
என்று தோன்றியது. “நீங்கள் சந்தேகப்படக் காரணம் என்ன?” என்று கேட்டார்.
ஈஸ்வர் சிறிது
தயக்கம் காட்டி விட்டு குருஜியுடனான தன் சந்திப்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.
அவர் பேசியதையும், தான் பேசியதையும் சொன்னானே ஒழிய தன் சந்தேகத்தைப் பற்றி
ஆரம்பத்தில் அவன் எதுவும் சொல்லவில்லை. கேட்ட பார்த்தசாரதிக்கு எல்லாம்
இயல்பானதாகத் தோன்றியது. ”இதில் சந்தேகப்பட என்ன இருக்கிறது. சிவலிங்கம் பற்றி
அவர் பேசினது எதுவும் அவரை சந்தேகப்பட வைக்கும் படி இல்லையே ஈஸ்வர்”
ஈஸ்வர் தன் சந்தேகங்களை ஒவ்வொன்றாகச் சொல்ல
ஆரம்பித்தான். ”சார். முதல் முதலில் என்னை சந்தேகப்பட வைத்தது ’கண்கள் தீ மாதிரி ஜொலிக்கிற சித்தர் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா?’ என்ற என் கேள்விக்கு அவர் காட்டிய ரியாக்ஷன்... ’இல்லை ஆனால்
கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று சொன்ன பதில் பொய் என்பதில் எனக்கு இப்போதும்
சந்தேகமில்லை. அப்புறமாக சிவலிங்கம் பற்றி பேசிய போதெல்லாம் அவர் முகத்தில் தெரிந்த
உணர்ச்சிப் பிரவாகம் சம்பந்தப்படாத ஆளுக்கு வர வாய்ப்பே இல்லை... சார் மனோதத்துவத்தின்
மிக முக்கிய விதி ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா? ஒரு மனிதன் வார்த்தைகளில்
பொய் சொல்லலாம். ஆனால் அந்தப் பொய்யிற்கு அவன் உணர்ச்சிகள் ஒத்துழைப்பது அபூர்வம்.
அந்த உணர்ச்சிகள் வேறு விதமாய் உண்மையைப் பேச முடிந்தவை. மனோதத்துவம் நன்றாகத்
தெரிந்தவன், பேசும் வார்த்தைகளுடன் காட்டப்படும் உணர்ச்சிகள் ஒத்துப் போகிறதா
என்று பார்த்து தான் எதையும் உறுதி செய்வான்....”
பார்த்தசாரதி ஈஸ்வரையே கூர்ந்து பார்த்துக்
கொண்டிருந்தார். ஈஸ்வர் தொடர்ந்தான்.
”குருஜியின் அப்பாயின்மெண்ட் கிடைப்பதே குதிரைக் கொம்பு
என்பது போல் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவராக யாரையாவது பார்க்க
ஆர்வம் காட்டியதை நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
யோசித்து விட்டு பார்த்தசாரதி சொன்னார்.
“இல்லை”
“வேதபாடசாலைக்கு நான் வருவதாகச் சொன்னவுடன்
குருஜி இருக்கிறார், விருப்பம் இருந்தால் சந்திக்கலாம் என்று அவர்களாகவே சொன்னார்கள்.
அவர் வேதபாடசாலையில் தங்கினால் முடிவில் அவரை ஒரு சொற்பொழிவில் தான் யாரும் பார்க்க
முடியும் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் யாரையும் அங்கே சந்தித்ததே இல்லையாம்.
அவர் சொல்லாமல் வேதபாடசாலை நிர்வாகிகள் அதற்கு ஏற்பாடு செய்திருக்கவே
வாய்ப்பில்லை. நான் அங்கு போய் இறங்குவதற்கு முன் அந்த மண்ணைத் தொட்டு வணங்கினேன்.
அவர் அதைத் தற்செயலாகப் பார்த்தது போல் சொல்லிக் காரணம் கேட்டார். நான் கிளம்பி
வரும் போதும் என்னையே ஜன்னல் வழியாக அவர் பார்த்துக் கொண்டிருந்தார். நான்
திரும்பிப் பார்த்த போது சடாரென்று விலகி விட்டார். பொதுவாக நம்மிடம் பேசி
விட்டுப் போபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தோமானால் அவர்கள் திரும்பினால் என்ன
செய்வோம். கை காட்டுவோம், புன்னகை செய்வோம், இது போல ஏதாவது ஒரு செய்கை தான்
செய்வோம். திடீரென்று விலகுவது ஒருவருக்குத் தெரியாமல் பார்க்க நினைப்பவர்கள் செய்யும்
காரியம் தான். நான் உள்ளே நுழையும் போதும் பார்த்து, கிளம்பும் போதும் பார்த்துக்
கொண்டிருந்தது அதை மறைக்க அவர் முயலாமல் இருந்திருந்தால் இயல்பாக இருந்திருக்கும்.
ஆனால் மறைத்தது இயல்பாய் இல்லை....”
பார்த்தசாரதி அந்தக் காட்சிகளை மனக்கண்ணில்
பார்த்து ஈஸ்வரின் வார்த்தைகளை அதனுடன் சேர்த்து புரிந்து கொள்ள முயற்சி செய்து
கொண்டிருந்தார்.
“நான்
ஆராய்ச்சியாளன் என்று அவரிடம் சொல்லவே இல்லை. அவராகவே என்னை ஆராய்ச்சியாளன்
என்று தெரிந்து வைத்திருந்து பேசினார். அதே போல் சித்தர்கள் பூஜித்த சிவலிங்கம்
என்றும் என்ன நோக்கத்திற்கு சக்திகளை ஆவாகனம் செய்து வைத்தார்களோ தெரியவில்லை
என்று நான் சொன்ன போது அதை முதல் முதலில் கேட்பவர்கள் ”என்ன சித்தர்கள் பூஜித்த சிவலிங்கமா,
சக்திகளை ஆவாகனம் செய்தார்களா’ என்றெல்லாம் கண்டிப்பாகக் கேட்காமல் இருக்க
மாட்டார்கள். ஆனால் அதை அவர் செய்யவில்லை.....”
பார்த்தசாரதி சொன்னார். “சிவலிங்கம் பற்றின
இந்த விவரங்களை அவரிடம் சொன்னது நான் தான். இந்தக் கேஸில் அவர் அபிப்பிராயம் என்ன
என்று கேட்க நான் போயிருந்தேன். அப்போது இதைச் சொல்லி அதோடு உங்களைப் பற்றியும்
சொல்லி இருந்தேன் என்று நினைக்கிறேன் ஈஸ்வர்...”
”அப்படியானால் அவர் புதிதாகக் கேட்பது போல் ஏன் கேட்க
வேண்டும் சார்?”
“அது சில பேரின் சுபாவம் ஈஸ்வர். ஒருவர்
சொன்னதை இன்னொருவரிடம் சொல்லாமல் புதிதாய் கேட்கிற மாதிரி கேட்டு அவர்
சொன்னதற்கும் இதற்கும் ஒத்து வருகிறதா என்று பார்ப்பார்கள்.”
”நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் குருஜி என்னிடம்
சிவலிங்கம் ப்ரோகிராம் பற்றி பேசின பேச்சுகள் எதுவும் சம்பந்தமில்லாத, வெறுமனே
தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிற ஒரு மனிதர் பேசின பேச்சாய் எனக்குத் தோன்றவில்லை
சார். நான் அவர் தான் சிவலிங்கத்தைத் திருடவும், என் பெரிய தாத்தாவைக் கொல்லவும்
ஏற்பாடு செய்தார் என்று சொல்லவில்லை. அந்த அளவு நினைக்க என்னாலும் முடியவில்லை.
ஆனால் அவர் ஏதாவது விதத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார், அதனால் தான் என்னை
சந்தித்தார், பேசினார், நான் என்ன நினைக்கிறேன் என்பதிலும், எனக்கு என்னவெல்லாம்
அது பற்றித் தெரியும் என்பதிலும் ஆர்வம் காட்டினார் என்று எனக்கு உள்ளுணர்வு
சொல்கிறது சார்”
பார்த்தசாரதிக்கு அவன் சொல்வதை ஏற்றுக்
கொள்ளவும் முடியவில்லை. அலட்சியப்படுத்தவும் முடியவில்லை.... மதில் மேல் பூனையாய்
மனம் முடிவெடுக்க முடியாமல் தடுமாறியது. நாளை சந்தித்து மீண்டும் பேசலாம் என்று
சொல்லி ஈஸ்வரை அனுப்பி விட்டு நிறைய நேரம் அவர் யோசித்தார். ஈஸ்வர் சந்தேகம்
உண்மையாக இருக்காது தான்.... ஆனால் ஒருவேளை உண்மையாக இருந்து விட்டால் என்ற கேள்வி
மெல்ல எழுந்தது. மூளை தீவிரமாய் வேலை செய்ய ஆரம்பித்தது.
இந்த வழக்கை அவர் எடுத்துக் கொண்டதற்குப்
பின் அவர் அலுவலகத்தில் மேல் மட்ட சிபாரிசினால்
ஒருவன் சேர்ந்திருந்தான். அவனுக்கு ஏதோ இட சௌகரியங்கள் இருப்பதாகச் சொல்லி
இருந்தார்கள். சீர்காழி கோயில் விவரமும், நூலகத்தில் ஆன்மிக பாரதம் புத்தக
விவரமும் அவன் மூலமாகவே வெளியே கசிந்திருக்க வேண்டும் என்று சந்தேகம் அவருக்கு வர
ஆரம்பித்திருந்தது.
இப்போது ஈஸ்வரும் வந்து இந்த சந்தேகப்
புயலைக் கிளப்பி விட்ட பிறகு உள்ளுணர்வு உந்த அவர் போலீஸ் மேல் மட்டத்தில் உள்ள
தன் நெருங்கிய நண்பர் ஒருவருக்குப் போன் செய்து அவர் அலுவலகத்தில் வந்து
சேர்ந்தவன் யார் சிபாரிசில் வந்திருக்கிறான் என்று ரகசியமாய் விசாரித்துச் சொல்லச்
சொன்னார்.
அரை மணி நேரத்தில் பதில் வந்தது. “சிபாரிசு
செய்தது கவர்னர் ஆபிஸ். அங்கு அந்த சிபாரிசிற்கு வேண்டுகோள் விடுத்தது குருஜி”
தகவல் பார்த்தசாரதி தலையில் இடியாய்
இறங்கியது.
விஷாலியின் செல் போனிற்கு ஒரு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வந்த போது
அதை எண் மூலம் புரிந்து கொண்ட அவள் ஆச்சரியத்துடன் பேசினாள். “ஹலோ. விஷாலி
பேசறேன்.”
”மேடம் அமெரிக்காவில் இருந்து பாலாஜி பேசறேன். ஈஸ்வரின் ஃப்ரண்ட்”
ஈஸ்வர் பெயரைக் கேட்டவுடனேயே அவளை அறியாமல்
அவளுக்குச் சிலிர்த்தது. நண்பன் மூலமாக சமாதானம் பேசுகிறானோ?
அமைதியாகச் சொன்னாள். “சொல்லுங்கள்”
“நீங்கள் வரைந்த “இருவேறு உலகங்கள்” ஓவியம் விலைக்கு வாங்க ஆசைப்படுகிறேன். என்ன விலை சொல்கிறீர்கள்?”
விஷாலி இதை எதிர்பார்த்திருக்கவில்லை.
ஈஸ்வர் ஓவியங்களில் ஈடுபாடு உள்ள அவன் நண்பன் பாலாஜி என்பவனைப் பற்றிச் சொல்லி
இருந்தது நினைவுக்கு வந்தது....
விஷாலி வேண்டுமென்றே அதிக விலை சொன்னாள்.
“இருபதாயிரம் எதிர்பார்க்கிறேன்”.
இது வரை அதிகபட்சமாக அவள்
ஓவியம் பத்தாயிரம் வரை தான் விலை போயிருக்கிறது.
“ஓகே மேடம். உங்கள்
அக்கவுண்ட் டீடெய்ல்ஸ் சொல்லுகிறீர்களா?”
விஷாலி திகைத்தாள். “நீங்கள் அந்த ஓவியம்
பார்த்தது கூட இல்லையே”
“ஈஸ்வர் ஒன்றைப் பார்த்து பெஸ்ட் என்றால்
அதற்குப் பிறகு நான் பார்க்கத் தேவை இல்லை மேடம். அது பெஸ்டாகத் தான் இருக்க
வேண்டும். அவன்
அதில் எக்ஸ்பர்ட்”
விஷாலிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்படியானால்
மகேஷ் ஈஸ்வருக்கு ஓவியங்களில் ஈடுபாடு சுத்தமாக இல்லை என்றும் அவளை வலையில்
வீழ்த்த ஈடுபாடு இருப்பதாகப் பொய் சொன்னான் என்றும் சொன்னது...?
எந்திரத்தனமாக தன் அக்கவுண்ட் விவரங்களை
அவள் சொன்னாள்.
பாலாஜி சொன்னான். “தேங்க் யூ. நான் இப்போதே
இருபதாயிரம் ரூபாய் உங்கள் அக்கவுண்டிற்கு அனுப்புகிறேன். நீங்கள் என் அட்ரஸ் நோட்
செய்து கொள்கிறீர்களா.....”
அவன் சொல்ல சொல்ல அவள் குறித்துக்
கொண்டாள். மனம் மட்டும் கொந்தளிக்க ஆரம்பித்திருந்தது.
அவன் எப்படி அனுப்ப வேண்டும் என்று
விவரமாகச் சொல்லி விட்டுத் தொடர்ந்தான். “நான் ஈஸ்வரையே உங்களிடம் வாங்கி அனுப்பச்
சொன்னேன். அவன் தான் உங்களிடமே நேரடியாக என்னையே பேசச் சொன்னான். உங்கள் மற்ற
ஓவியங்கள் பற்றியும் சொன்னான். உங்கள் ஓவியங்களின் போட்டோக்களை அனுப்ப முடியுமா?
என்னிடம் நிறைய கலெக்ஷன் இருக்கிறது. உங்களுக்கு இண்ட்ரஸ்ட் இருந்தால்
சொல்லுங்கள். நானும் அனுப்பி வைக்கிறேன்.....”
அவன் வார்த்தைகளில் உற்சாகம் இருந்தது.
அவனிடம் யார் வரைந்த ஓவியங்கள் எல்லாம் இருக்கின்றன
என்று மனக்கொந்தளிப்பின் நடுவே கேட்ட போது அவன் சொன்ன பெயர்கள் எல்லாம் அவளைப்
பிரமிக்க வைத்தன. அத்தனை புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுக்கு இணையாக அவள்
ஓவியத்தையும் அவன் வாங்குகிறான், அதுவும் பார்க்காமலேயே, தன் நண்பன் ஈஸ்வரின் மதிப்பீட்டில்
முழு நம்பிக்கையும் வைத்து .....
அவனிடம் பேசி முடித்து விட்டு அவள் தலையை
இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டாள். ஓவியங்களில் ஈடுபாடு உள்ளவன் போல் ஈஸ்வர்
நடிக்கவில்லை. உண்மையில் அவனுக்கு ஈடுபாடு இருந்திருக்கிறது. அவள் அவனைப் புழுவை
நடத்தியது போல் நடத்தினாலும் அவள் ஓவியத்தைப் பற்றிய நல்ல வார்த்தைகளை அவன் தன்
நண்பனிடம் சொல்லத் தயங்கவில்லை....
ஒருவேளை மகேஷ் ஈஸ்வரைப் பற்றிச் சொன்ன மற்ற
விஷயங்களும் பொய்யாக இருந்தால்.....? அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...
கோபம் கொண்டவுடன் அவனுடன் உடனடியாகப் பேசத்
தோன்றியதைப் போலவே அவளுக்கு இப்போதும் உடனடியாகப் பேசத் தோன்றியது. பேசினாள்.
ஈஸ்வர் குரல் கேட்டது.
“ஹலோ”
அவன் குரல் அவளை என்னவோ செய்தது. முழு தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு
பேசினாள். “நான் ......விஷாலி ...பேசறேன்”
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
அவளாகவே சொன்னாள். “உங்கள் ஃப்ரண்ட் பாலாஜி
பேசினார். என் ’இருவேறு உலகங்கள்” ஓவியம்
பற்றி நீங்கள் சொன்னதால் விலைக்கு வாங்கறதாக சொன்னார். விலை கூட அவர் பேரம் பேசலை....”
அப்போதும் அவன் ஒன்றும் பேசவில்லை.
அவள் அவன் ஏதாவது சொல்வான் என்று காத்து
விட்டுச் சொன்னாள். “தேங்க்ஸ்”
ஈஸ்வர் சொன்னான். “நான் உங்களுக்காக அதை
அவன் கிட்ட சொல்லலை. அவனுக்காக தான் சொன்னேன். சிறப்பான ஒரு ஓவியம் ஒன்று பார்த்து
விட்டு அவனிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை.....”
அவன் ஒருமையில் அழைக்காமல் பன்மையில் அவளை
அழைத்தது அவன் பழைய நெருக்கத்தில் இருந்து தூர விலகி விட்டதைத் தெரிவித்தது. அவன்
சொன்ன விஷயத்தின் பெருந்தன்மையையும் அவளால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அவள்
மனம் கனமாக ஆரம்பித்தது. அவனிடம் எத்தனையோ சொல்ல நினைத்தாள். அதை எப்படிச் சொல்வது
என்று தெரியவில்லை. சொன்னாலும் அவன் அதைக் கேட்டுக் கொள்வானா என்றும் தெரியவில்லை.
எல்லாவற்றிற்குமாகச் சேர்ந்து அவள்
சொன்னாள். “சாரி...”
அவன் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான். “சரி”.
போனை வைத்து விட்டான்.
போனை வைத்து விட்டான்.
விஷாலிக்கு கண்கள்
குளமாயின. அவன் அவளை மன்னிக்கத் தயாராக இல்லை. என்றென்றைக்கும் அவன் தனக்கு
இழைக்கப்பட்ட அநீதியை மன்னிக்க மாட்டான். அன்பாலயத்தில் பரமேஸ்வரனை அப்பாவின்
அப்பா என்று அவன் சொன்னதும் தாத்தா என்று சொல்லுங்கள் என்று கணபதி சொன்ன பிறகு கூட அப்படிச் சொல்லாததும் அவளுக்கு நன்றாக
நினைவிருக்கிறது....
அவன் வெறுப்பவர்களின்
பட்டியலில் தானும் சேர்ந்து விட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்ட போது அவள் உடைந்து
போனாள்.....
(தொடரும்)
-என்.கணேசன்