சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 10, 2013

கோவில் வழிபாடு ஏன்?



அறிவார்ந்த ஆன்மிகம்-8

ங்கும் இறைவன் நிறைந்திருக்கின்றான் என்று கிட்டத்தட்ட அனைத்து மதங்களுமே சொல்கின்றன. அப்படி இருக்கையில் வழிபாட்டுத்தலங்கள் சென்று வழிபட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி அறிவு சார்ந்ததாகவே இருக்கின்றது. இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் முன்னோர்கள் செய்தார்கள், அதனால் நீயும் செய்என்ற பதில் ஆன்மிகத்தை மேம்படுத்தாமல் அலட்சியத்தையே அதிகப்படுத்தும்.  எனவே அந்தக் கேள்விக்கு அறிவுபூர்வமான பதிலையே பார்ப்போம்.

சிவஞானப் பிரகாச வெண்பா இதற்கு ஒரு பதில் கூறுகிறது.
பசுவின் உடல் முழுவதும் பால் மறைந்திருந்தபோதிலும், மடியின் மூலமாகவே பால் வெளிப்படுவதுபோலவும், சூரியன் எங்கும் பரவியிருந்த போதிலும், கண்ணாடிகள் மூலமே கிரணங்கள் வெளிப்படுவதுபோலவும், நிலத்துக்கு அடியில் நீர் இருந்தபோதிலும் தோண்டிய இடத்தில் தானே நீர் தோன்றுவதுபோலவும், இறைவன் எங்கும் வியாபித்திருந்தபோதிலும் பெரியோர்கள் அமைத்த ஆலயங்களில் உள்ள மூர்த்திகளின் மூலமாகவே அவன் வெளிப்பட்டு அன்பர்களுக்கு அருள் செய்வான்.”

எங்கும் சிவனிருப்பன் ஆனாலும் ஏசற்ற
சங்கமத்தும் சற்குருவின் தன்னிடத்தும்-லிங்கத்தும்
ஆவினுடன் பெல்லாமும் ஆவரித்து நிற்கினும்பால்
பரவுமுலைக் கண்மிகுதிப் பார்.

முன்பெல்லாம் கோயில்களை எங்கே கட்ட வேண்டும் என்பதை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்து தான் கட்ட ஆரம்பிப்பார்கள். இப்போது போல் கிடைத்த இடத்தில் எல்லாம் கோயில் கட்டும் பழக்கம் முன்பு இருக்கவில்லை. ஒரு புனிதத்தன்மை வாய்ந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறம், மலைப்பகுதிகள், அமைதி தவழும் இடங்களில் தான் கோயில் அமையும்.   அந்தக் கோயிலில் ஸ்தாபிக்கப்படும் முக்கிய சிலைகள் சாமுத்திரிகா லட்சணங்களைக் கருத்தில் கொண்டு அமைக்கப்படும். ஸ்தாபிக்கும் போது சொல்லப்படும் மந்திரங்களும், நடத்தப்படும் ஹோமங்களும்  சிலை என்ற நிலையிலிருக்கும் கல்லில் தெய்வத்தை வரவழைக்கும் அர்த்தமுள்ள சடங்குகளே. மேலும் ஆன்மிகத்தைப் பெருக்கும் எல்லா விதமான வழிகளையும், நுட்பங்களையும் கவனத்தில் வைத்துத் தான் கோயில் கட்டுவார்கள்.

அப்படி அமைக்கப்படும் கோயிலில் மூலவர் இருக்கும் கர்ப்பக்கிரகம் சக்தி வாய்ந்த காந்த அலைகள் நிரம்பிய இடமாக இருக்கும். சில கோயில்களில் மூலவர் விக்கிரகத்திற்குக் கீழே செப்புத் தகடுகள் பதிக்கப்பட்டிருக்கும். அவை அந்த காந்த சக்தி அலைகளைப் பன்மடங்காக வெளிப்படுத்தும் தன்மை உடையவையாக இருக்கும்.

ஒரு வட்டத்தை மையப்புள்ளி இன்றி நாம் வரைய முடியாது. இறைவன் தான் நம் வாழ்வின் மையம், ஆதாரம் எல்லாம். அந்த இறை மையத்தை ஆதாரமாகக் கொண்டே நாம் இயங்குகின்றோம் என்பதை உணர்த்துவதே இந்த பிரதக்ஷிணம் என்ற வலம் வருதல். வலம் வருவதும் நாம் இடமிருந்து வலமாகத் தான் செய்கிறோம். இப்படி வலம் வருகையில் இறைவன் எப்போதும் நமக்கு வலப்பக்கமாகவே இருக்கிறான். நம் நாட்டில் வலப்பக்கத்தை மங்கலமாகக் கருதுகிறார்கள். ஆங்கிலத்தில் கூட அது right side என்றே அழைக்கப்படுகிறது. 

மேலும், கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் சக்தியின் சுற்று பாதை அது தான் என்பதற்காகவே. அதே பாதையில் பயணிப்பது சிறிது காலத்திற்காகவாவது நம்மையும் அந்த சக்தி இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளவே. எனவே கர்ப்பக்கிரகத்தை வலம் வருகையில் எல்லாம் வல்ல இறைவன் என்ற சக்தி வாய்ந்த மையத்தை வைத்தே நாம் நம் வாழ்வில் இயங்குகிறோம் அவன் அருளைப் பெறவே கோயிலிற்கு வந்துள்ளோம் என்ற பாவனை நமக்குள் இருக்க வேண்டும். அந்தப் பாவனையில் கோயிலைச் சுற்றி வரும் போது, நமக்குள்ளே பக்தி தூய்மையாக இருக்கும் போது அந்த காந்த சக்தி அலைகள் நமக்குள் நுழைய நாம் வழி செய்து கொள்கிறோம்.

அப்படி அந்த சக்தி அலைகளில் தோய்ந்து கர்ப்பக்கிரகம் முன் வந்து வணங்குகிற போது மூலவர் விக்கிரகத்திலிருந்து வெளிப்படும் தெய்வீக சக்தி அலை வீச்சினை முழுவதுமாகப் பெற்றுக் கொள்கிற அளவுக்கு நாம் தூய்மை அடைந்து இருப்போம். கர்ப்பக்கிரகமும் மூன்று புறமும் அடைபட்டு சக்திகளைத் தேக்கி வைத்துக் கொண்டிருப்பதால் வாசல் வழியாக முழு வீச்சில் வெளிப்படும் சக்திகள் தொழுதபடி முன்னால் இருபக்கமும் நிற்கும் பக்தர்கள் மீது நன்றாக விழுகின்றன. அப்படி கிடைக்கும் தெய்வீக அலைகளை உள்வாங்கிக் கொண்டால் நாம் அடையும் பலன்கள் எல்லையற்றவை.  அதனால் தான் கோயில் விளங்கக் குடி விளங்கும் என்றும் ஆலயம் தொழுவது சாலவும்  நன்று”  என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் எண்ணங்கள் வேறெங்கோ இருந்து எந்திரத்தனமாய் நாம் சுற்றினால் சுற்றியும் சக்தி இருந்தால் கூட அது உள்ளே நுழைய முடியாதபடி நாம் நம் மனக்கதவை மூடி வைத்திருக்கிறோம் என்று பொருள்.  எத்தனையோ பேர் பல கோயில்களுக்குப் போனாலும், கோயில்களிலேயே அதிக நேரம் இருந்தாலும் கூட மனத்தையும், எண்ணத்தையும் வேறெங்கோ அனுப்பி விடுவதால் தான் அந்த ஆன்மிக சக்தி அலைகளைப் பெற்று பலனடையத் தவறி விடுகிறார்கள். உடல் மட்டும் அங்கு தங்குவது போதாது. முக்கியமாக மனம் அங்கு தங்க வேண்டும். அப்போது தான்  கோயில் வழிபாட்டில் அமைதியும், நன்மைகளும் கிடைக்கும்.

முன்பு போல கோயில்கள் இன்று ஆன்மிகப் பரிபூரணத் தன்மையுடன் கட்டப்படுகின்றனவா என்பது கேள்விக்குரிய விஷயமே. படாடோபம் மற்றும் மற்ற நோக்கங்கள் பிரதானமாகப் போய் ஆன்மிகமும், பக்தியும் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை இன்று அதிகம் இருக்கிறது. தெய்வீக சக்தி சூரியனாய் ஒளி வீசிக் கொண்டு இருந்தாலும் அஞ்ஞானப் போர்வைக்குள் நம்மைக் கட்டிக் கொண்டு காரிருளில் மூடங்கிக் கிடக்கும் அவலம் அதிகம் இருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் கூட பக்தியுடனும், மனத்தூய்மையுடனும் கோயிலுக்குச் சென்றால் அஞ்ஞானப் போர்வை விலகி தெய்வீக அருளை முழுமையாகப் பெற முடியும்.

இப்படி முழுமையாக தெய்வீக அருளைப் பெற்றவர்கள் நாளாவட்டத்தில் தங்கள் உள்ளத்தையே கோயிலாக்கிக் கொள்ள முடியும். அப்படி திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

உள்ளமே சிவன் உறையும் கருவறையாகும். ஊனாகிய உடம்பே கோயிலாகும். அக்கோயிலில் வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசலாகும். இதனை உணர்ந்து, தெளிந்து ஞானம் அடைவதற்குச் சீவனே சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுவோர்க்கு வஞ்சனை செய்யும் ஞானேந்தியங்கள் ஐந்தும் பெரிய ஒளி பொருந்திய விளக்காகும் என்றும் திருமந்திரம் விளக்குகிறது.

ஆனால் அப்படி அகக்கோயில் அமையும் உயர்நிலை ஏற்படும் வரை தெய்வீக அருளைப் பரிபூரணமாகப் பெற புறக்கோயில்களில் முறையாகத் தொழுதல் மனிதர்களுக்கு அவசியமாகிறது.

-      என்.கணேசன்
-      நன்றி: தினத்தந்தி-ஆன்மிகம்-30-04-2013

4 comments:

  1. Nice article, beautiful explanations. Thanks.

    ReplyDelete
  2. In the planned place for temple, people will dug the land and fill it with the same dugged sand. If the filled place is bump, then they will build temple, else not.
    Also one doubt. Samudhrika lakshanam is for humans, i think ?
    -Rajaram

    ReplyDelete
  3. Govindaswamy NagarajanJune 17, 2013 at 11:00 AM

    Those who live in places where there is no temple may engage themselves in "Naamasmaranam" by internally reciting the mantras and slokas on their favourite Gods. In doing so sincerely and faithfully for some months and years, they will slowly and slowly feel and see the Parabrahmam within themselves, and worship or do archana on themselves.

    A jungle thief who became immortal gave to this world a priceless "Kaaviyam" by simply sitting and repeatedly reciting the word, Maraa, Maraa, Maraa.....

    A little boy who became immortal, by reciting the word, Narayana, Narayana, Narayana.....forced the Parabrahmam to be delivered by a pillar in order to destroy his own father. The same little boy, later on, became the father of Maha Lakshmi and father-in-law of the Parabrahmam.

    Yatho Yatho Yami Thado Nrusimah.

    Ugram Veeram Maha Vishnum, Jwalantham Sarvatho Mukham, Nrusimham Bheeshanam Bhadram, Mrithu Mrithum Namaam Yaham.

    The late Smt. M. S. Subbulakshmi used to sing as "Narayana Enru Sollaatha Naavum Oru Naavaa.........."

    We can see the Parabrahmam in us by simply repeatedly reciting the word, Narayana, Narayana, Narayana...........

    Om Ganeshaya Namah, Om Namah Shivaya, Om Namo Narayanaya. Om Sharavanabhava Om,....... Choose any mantra or sloka from internet.

    Though we do not have a temple in a place where we live, we still can engage ourselves in "Naamasmaranam" by choosing any mantra or sloka and repeating the same, and become immortal.





    ReplyDelete