சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 29, 2012

பரம(ன்) ரகசியம் – 20ந்த மனிதன் மூன்று முறை அழைப்பு மணியை அழுத்திய பிறகே அந்த நடுத்தர வயது பழந்தமிழ்மொழி ஆராய்ச்சி வல்லுனர் வந்து பதட்டத்துடன் கதவைத் திறந்தார். அவர் கதவைத் திறந்து அந்த மனிதன் பின்னால் யாராவது இருக்கிறார்களா என்று சந்தேகத்துடன் பார்த்ததும் அல்லாமல் அந்த மனிதனைத் தன் வீட்டினுள்ளே விட்டு வெளியே எட்டி இருபக்கமும் பார்த்தார். யாரும் அந்த மனிதனைப் பின் தொடர்ந்து வந்திருக்கிற அறிகுறி இல்லை. தமிழ் ஆராய்ச்சியாளர் ஓரளவு பதட்டம் குறைந்தவராகக் கதவைத் தாளிட்டு விட்டு அந்த மனிதனைத் தன் தனியறைக்கு அழைத்துச் சென்றார். அந்த மனிதனை அமரச் சொல்லி விட்டு அவனையே அவர் எதிர்பார்ப்போடு பார்க்க அந்த மனிதன் ஒரு உறையில் வைத்திருந்த ரூ.25000/-ஐ அவரிடம் தந்தான். அந்த மனிதர் அதை வாங்கிக் கொண்டு ‘இதோ வந்துடறேன்என்று சொல்லி விட்டுப் போனார்.

அந்த மனிதன் அமைதியாகக் காத்திருந்தான். தான் தேடி வந்த விடைகள் இந்த மனிதரிடம் எந்த அளவு கிடைக்கும் என்று யோசித்தான். தேவையான தகவல்கள் எல்லாம் கிடைத்தால் தான் அடுத்த அடியை தைரியமாக எடுத்து வைக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. குருஜி அளவுக்கு அவனால் தைரியமாக இருக்க முடியாததற்குக் காரணம் அவனுடைய சகாவின் ஒருவித கிலி அவனையும் தொற்றிக் கொண்டது தான் என்றே சொல்லலாம். சிவலிங்கத்தை எடுத்து வந்த அன்று அந்தக் கொலைகாரன் இறந்த விதம், சிவலிங்கத்தை எடுத்தவன் பயந்தது, பின் ரகசியமாய் ஓடிப்போனது, அவர்களுக்குத் தெரியாமல் சிவலிங்கத்தின் மீதிருந்த அபூர்வ மலர்களின் அலங்காரம் என ஒவ்வொன்றும் அவனுடைய சகாவின் பயத்தை அதிகப்படுத்தி இருந்தது. இமயமலைச் சாரலின் பூக்களைக் கொண்டு சிவலிங்கத்தை அலங்கரித்துப் பூஜை செய்தது யார் என்ற கேள்வியும் எழுந்த போது அவன் கிலி உச்சத்தை எட்டியது என்றே சொல்லலாம்.

சகா வாய் விட்டே அவனிடம் சொன்னான். “இதுல நமக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய இன்னும் இருக்குன்னு தான் எனக்குத் தோணுது... எல்லாம் தெரிஞ்சுகிட்ட பிறகே இதுல இறங்கி இருக்கலாம்....

“குருஜி இருக்கறப்ப நீ ஏன் கவலைப்படறே?

“இதுல குருஜிக்கும் முழுசா தெரியலை

“ஆனா அவருக்கு ஒவ்வொரு இக்கட்டான கட்டத்திலும் என்ன செய்யணும்கிறது சரியாவே தெரியுது. அந்த சிவலிங்கத்துக்குப் பூஜை செய்ய கணபதியை எப்படி கண்டுபிடிச்சு ஏற்பாடு செய்தார் பார்த்தியா?

“ஆனா அவர் இது வரைக்கும் அந்த சிவலிங்கத்தைப் பார்க்கக் கூட வரலைங்கறதை மறந்துட வேண்டாம்

அது அவனுக்கும் நெருடலாகவே இருந்தது என்றாலும் அதை வெளியே காண்பித்து சகாவை மேலும் அதிகமாய் பயமுறுத்தி விட வேண்டாம் என நினைத்தவனாய் அமைதியாய் சொன்னான். “அதுக்கு வேற எதாவது காரணம் இருக்கும். இன்னும் சிவலிங்கம் நம்ம கைல தான் இருக்கு. நீ பயப்படற மாதிரி சிவலிங்கமோ, அதுக்கு வேண்டியவங்களோ நிஜமாவே சக்தி வாய்ஞ்சவங்களா இருந்தா நம்ம கிட்ட சிவலிங்கம் இப்ப இருந்திருக்காது என்பதை மறந்துடாதே

சகா ஓரளவு தைரியமடைந்தான். ஆனாலும் சிவலிங்கம் பத்தி முழுசா தெரிஞ்சுக்க வேண்டியதை தெரிஞ்சுக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன். அந்த சிவலிங்கத்துக்கும் சோழர்கள் காலத்துக்கும் இருக்கிற தொடர்பு பத்தி இப்ப போலீஸ் காதுக்கும் விழுந்திருக்கு... கண்டிப்பா விசாரிக்க ஆரம்பிப்பாங்க...

அதை வச்சு அவங்களுக்கு பெரிசா எதுவும் கிடைச்சுட வாய்ப்பில்லை... திருப்பதில மொட்டையன் இருக்கான்னு தகவல் கிடைச்ச மாதிரி தான் அது... இப்ப அந்த ஓலைச்சுவடியும் நம்ம கைல இருக்கு. அதுல என்ன இருக்குன்னு முழுசா தெரிஞ்சுக்க நான் நாளை காலைலயே தஞ்சாவூர் போறேன். சிவலிங்கம் பத்தி மேலும் அதிகமா தெரிஞ்சுகிட்டு வர்றேன். கவலைப்படாதே

என்ன தான் தைரியம் சொன்னாலும் கூட அறுபது வருடங்கள் வாயை மூடிக் கொண்டிருந்த பசுபதியின் தாய் சோழர்கள் கால சம்பந்தத்தை இப்போது திடீர் என்று சொல்லித் தொலைத்தது அவனுக்கும் அதிருப்தியையே தந்தது. இன்னும் அந்தக் கிழவிக்கு என்ன எல்லாம் தெரியுமோ என்ற கேள்வியும் எழ ஆரம்பித்தது. தெரிந்ததை எல்லாம் கிழவி சொல்லி விடும் ரகம் அல்ல என்பது அவனுடைய கணிப்பாக இருந்தது. கிழவி நம்பா விட்டாலும் அந்தக் காலத்திலேயே கேள்விப்பட்டிருந்த சிவலிங்கத்திற்கும் சோழர் காலத்திற்கும் இடையே உள்ள சம்பந்தம் அவர்கள் கவனத்திற்கு வந்தது ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு தான்.

தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் போது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் பொது மக்களிடம் இருந்து தஞ்சை கோயில், ராஜராஜ சோழன் சம்பந்தப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள் சேகரிக்க ஆரம்பித்தது. தென் மாவட்டங்களில் ஒருசிலரிடம் இருந்து நிறைய ஓலைச்சுவடிகள் கிடைத்தன. அரசாங்கத்தின் உதவியுடன் நடந்த இந்த சேகரிப்பில் கிடைத்த ஓலைச் சுவடிகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பண்டைய தமிழர் பண்பாடு, வரலாறு குறித்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டன. அப்போது கிடைத்த ஒரு ஓலைச்சுவடி அவன் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. சித்தர்கள் வழிபட்ட சக்தி வாய்ந்த ஒரு சிவலிங்கம் பற்றி அந்த ஓலைச்சுவடி சொல்லி இருந்தது. பசுபதி குடும்பத்தின் சிவலிங்கம் கதையை முன்பே கேள்விப்பட்டிருந்த அவனுக்கு அதற்கும் இதற்கும் முடிச்சுப் போட அதிக நேரம் ஆகவில்லை. அந்த ஓலைச்சுவடியில் கிடைத்த சில தகவல்கள் அவன் அறிந்ததை உறுதிப்படுத்தியது. ஆனால் அந்த ஓலைச்சுவடியில் உள்ள சில பகுதிகள் அவன் நண்பர் தஞ்சை ஆராய்ச்சியாளருக்கும் பிடிபடவில்லை. அடுத்ததாக அந்த ஓலைச்சுவடியை முழுவதும் புரிந்து கொள்ள டெல்லியில் உள்ள ஓலைச்சுவடிகள் ஆராய்ச்சி மையத்திற்குத் தான் அனுப்ப வேண்டி வரும் என்றும் அங்கு அனுப்பினால் அந்த விசேஷ ஓலைச்சுவடியை முக்கியமான வரலாற்று ஆவணமாக டெல்லி ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையம் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்றும் அவன் நண்பர் சொன்னார்.

அந்த ஓலைச்சுவடி ஒரு வரலாற்று ஆவணமாக மாறுவதும், அதில் உள்ள தகவல்கள் வெளியே கசிவதும் விரும்பாத அவன் குருஜியிடம் ஆலோசனை கேட்ட போது அவர் அவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி டெல்லியில் உள்ள ஓலைச்சுவடி ஆராய்ச்சி மைய முக்கிய அதிகாரியும், தமிழ்மொழி ஆராய்ச்சி வல்லுனருமான ஒருவரைத் தொடர்பு கொண்டு அவரைத் தஞ்சாவூருக்கு வரவழைத்து அவர் கையில் அந்த ஓலைச்சுவடி கிடைக்க ஏற்பாடு செய்தார். வாடகைக்கு ஒரு வீடும் ஏற்படுத்திக் கொடுத்து ஆராய்ச்சிக்குத் தேவையான கருவிகளையும் தருவித்துக் கொடுத்து ஓலைச்சுவடியைப் படித்துப் பொருள் சொல்ல ஏற்பாடு செய்தார். அந்த ஆராய்ச்சி வல்லுனரிடம் இருந்து அந்தத் தகவல்கள் பெறத் தான் அவன் வந்திருக்கிறான்.....

அந்த ஆராய்ச்சி வல்லுனர் ஓலைச்சுவடியையும் அத்துடன் பல பக்கங்களில் எழுதிய விளக்கங்களையும் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார். கொடுத்து விட்டு முதலில் தன் சந்தேகத்தை அவனிடம் கேட்டார். “இந்த ஓலைச்சுவடி தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் ஆவணமாகத் தான் இன்னும் இருக்கிறது...

“இல்லை இதற்குப் பதிலாக இன்னொரு ஓலைச்சுவடியை வைத்து விட்டோம்... அதற்குத் தகுந்த மாதிரி அதன் குறிப்பையும் மாற்றி விட்டோம்.

தமிழாராய்ச்சி வல்லுனர் சற்று நிம்மதி அடைந்தது போலத் தெரிந்தது. இது மாதிரி ஓலைச்சுவடிகள் கிடைப்பது அபூர்வம். வைத்தியம், ஜோதிடம், இலக்கியம் சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடிகள் நிறைய இருக்கின்றன. ஆனால் இது போன்ற ஓலைச்சுவடி நான் பார்த்ததில்லை. கிட்டத்தட்ட 950 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த ஓலையை யார் எழுதி வைத்தார்கள், ஏன் எழுதி வைத்தார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை.... ஆனாலும் எழுதி வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து எழுதியது போலத் தான் இருக்கிறது.....

அந்த மனிதன் ஓலைச்சுவடியுடன் தந்த காகிதங்களில் என்ன எழுதி இருக்கிறது என்பதை மேலோட்டமாகப் பார்த்து விட்டு அவரிடம் கேட்டான். “இதில் என்ன இருந்ததுன்னு சுருக்கமாக நீங்கள் சொல்லுங்களேன்... அவர் வாயால் ஒரு முறை கேட்க அவன் ஆசைப்பட்டான். எழுதி உள்ளதை எத்தனை முறை வேண்டுமானாலும் பின் படித்துக் கொள்ளலாம். ஆராய்ந்து கண்டு பிடித்தவர் வாயால் உணர்வு பூர்வமாகக் கேட்கும் சந்தர்ப்பம் இன்னொரு முறை வாய்க்குமா?

அவர் சொன்னார். “ராஜராஜ சோழனின் பேரன், ராஜேந்திர சோழனின் மகன் முதலாம் ராஜாதி ராஜன். அவனுக்கு விஜய ராஜேந்திர சோழன் என்ற பெயரும் உண்டு. அவன் மிகச்சிறந்த வீரன். பாராக்கிரம சாலி. அவன் சோழ நாட்டை ஆண்ட காலத்தில் அவனும் அவன் தம்பி இரண்டாம் ராஜேந்திர சோழனும் ஒரு சமயம் காட்டு வழியில் பயணம் செய்த போது சில சித்தர்கள் கூடி ஒரு சிவலிங்கத்தை வணங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். சிறந்த சிவபக்தர்களான ராஜாதி ராஜ சோழனும் அவன் தம்பியும் பயணத்தை நிறுத்தி சிவலிங்கத்தைத் தாங்களும் வணங்கினார்கள். வணங்கி நிமிர்ந்த போது ஒரு கணம் சிவலிங்கம் ஜோதிமயமாக ஒளிர்ந்தது. பரவசப்பட்டுப் போன முதலாம் ராஜாதிராஜ சோழன் அந்த சிவலிங்கத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டான். தன் தாத்தா ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலிற்கு இணையாக ஒரு பிரம்மாண்டமான கோயிலைத் தன் காலத்தில் கட்ட நீண்ட காலமாக ஆசைப்படுவதாகவும் அதற்கான சிவலிங்கமாகவே அந்த சிவலிங்கத்தைத் தான் காண்பதாகவும் அந்த சித்தர்களிடம் தெரிவித்தான்...

சித்தர்கள் அந்த சிவலிங்கம் சாதாரணமானதல்ல என்றும் அதை பூஜிப்பதும் வணங்குவதும் எல்லோருக்கும் முடியக்கூடியதல்ல என்றும் சொல்ல மன்னன் அதை விளக்குமாறு கேட்டான். சித்தர்கள் விளக்கினார்கள். ஆனால் அந்த விளக்கங்கள் சூட்சும வார்த்தைகளால் இருக்கவே முதலாம் ராஜாதி ராஜ சோழனுக்கு அது தெளிவாக விளங்கவில்லை.. அவன் மீண்டும் தன் ஆசையை வெளிப்படுத்தி அந்த சிவலிங்கத்திற்கு தகுந்த இடத்தில் கோயில் கட்ட ஆசைப்படுவதாகவும், சித்தர்கள் எப்படிக் கூறுகிறார்களோ அப்படியே பூஜை முறைகளைப் பின்பற்ற சம்மதிப்பதாகவும் கூறினான். சாளுக்கியர்களிடம் போர் புரிய சில நாட்களில் செல்லப் போவதாகவும் வந்து கோயில் வேலைகளை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறினான். முக்காலமும் அறிந்த அந்த சித்தர்களில் ஒருவர் மன்னரிடம் புன்னகையுடன் சொன்னார். “போர் முடிந்து நீ வந்தால் அது குறித்து யோசிக்கலாம்

மகிழ்ச்சியுடன் சித்தர்களை வணங்கி போரில் வெல்ல ஆசி வழங்குமாறு முதலாம் ராஜாதி ராஜ சோழன் கேட்க அவர்கள் சோழர் வெல்வர் என்று ஆசி வழங்கினர். மன்னன் மகிழ்ச்சியுடன் சென்றான். அவன் சாளுக்கியருடன் கொப்பம் என்ற இடத்தில் போரிட்டான். போரில் யானை மீது அமர்ந்து போரிட்ட அவன் எதிரிகளின் அம்பு பட்டு படுகாயமுற்று இறந்து போனான். ஆனால் அவன் தம்பி இரண்டாம் ராஜேந்திர சோழன் தொடர்ந்து போரை நடத்தி போரைச் சோழர்கள் வென்றார்கள்.

அடுத்ததாக அரியணை ஏறிய இரண்டாம் ராஜேந்திர சோழன் சித்தர்கள் அண்ணனிடம் “போர் முடிந்து நீ வந்தால் அது குறித்து யோசிக்கலாம்என்று சொன்னதையும், நீ வெல்வாய்என்று ஆசி வழங்காமல்சோழர் வெல்வர்என்று ஆசி வழங்கியதையும் யோசித்து நடப்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தார்கள் என்று முடிவுக்கு வந்தான். சித்தர்கள் என்ன சொல்லியும் கேட்காமல் அந்த ஒளிரும்சிவலிங்கத்தை அவன் அடைய விரும்பியது தான் அவனுக்கு எமனாய் வந்து விட்டது என்று நினைத்தான். மீண்டும் அந்த சித்தர்களையும் சிவலிங்கத்தையும் சந்திக்க இரண்டாம் ராஜேந்திரச் சோழன் விரும்பா விட்டாலும் அந்தக் காட்டு வழியில் இன்னும் சித்தர்கள் சிவலிங்கத்தைப் பூஜித்தபடி இருக்கிறார்களா என்றறிய ஒற்றர்களை அனுப்பினான். ஆனால் அந்த இடத்தில் சிவலிங்கம் இருந்ததற்கோ, சித்தர்கள் அங்கு பூஜை செய்ததற்கோ எந்த சுவடும் கூட இருக்கவில்லை

அவர் முடித்து விட்டு அவனையே கூர்ந்து பார்த்தார். முன்பு அரைகுறையாய் ஓலைச்சுவடியைப் படித்துச் சொன்ன நபர் இவ்வளவு தெளிவாய் அந்த சம்பவத்தைச் சொல்லவில்லை என்பதை அந்த மனிதன் நினைவு கூர்ந்தான். சிவலிங்கத்தின் தன்மை குறித்து சித்தர்கள் விளக்கினார்கள் என்பதைச் சொன்ன அவர் அதை விளக்காமல் விட்டதையும் அவன் கவனித்தான். முன்பு படித்த மனிதர் அந்தப் பகுதி சுத்தமாய் விளங்கவில்லை என்பதை ஒத்துக் கொண்டு இருந்தார்.

அந்த சிவலிங்கம் தன்மையை அந்த சித்தர்கள் எப்படி விளக்கினாங்கன்னு நீங்க சொல்லலியே

அதை அப்படியே மொழி பெயர்த்திருக்கிறேன். நீங்களே அதைப் படிச்சுக்கலாம். எனக்கும் வார்த்தைகள் தெளிவாய் கிடைச்சாலும் பொருள் தெளிவாய் விளங்கலை

யாருக்கு விளங்கா விட்டாலும் குருஜிக்குப் பொருள் தெளிவாய் விளங்கும் என்று நினைத்த அந்த மனிதன் ஓலைச்சுவடியையும், அந்தக் காகிதங்களையும் தன் சூட்கேஸில் பத்திரப்படுத்தி விட்டுக் கேட்டான். “அந்தப் போர், ராஜாதி ராஜ சோழன் இறந்தது எல்லாம் நிஜம் தானா

அதெல்லாம் உண்மை தான். அந்தப் போர் 1054 ஆம் ஆண்டு நடந்தது. யானை மேல் இறந்ததும் உண்மை தான். “யானை மேல் துஞ்சிய தேவர்என்ற பெயரை முதலாம் ராஜாதி ராஜ சோழனுக்கு வாங்கிக் கொடுத்தது. அவனுக்குப் பின் அவன் மகன்கள் யாரும் ஆட்சிக்கு வரவில்லை. தம்பி இரண்டாம் ராஜேந்திர சோழன் தான் ஆட்சிக்கு வந்தான். அதுவும் உண்மை தான்...தமிழாராய்ச்சி வல்லுனர் சொன்னார்.

சிறிது நேரம் மௌனமாய் இருந்து விட்டு அந்த மனிதன் கேட்டான். இந்த ஓலைச்சுவடி நிஜமாகவே 950 வருஷங்களுக்கு முந்தினதாக தான் இருக்குமா? பிற்காலத்துல எழுதப்பட்டதாக இருக்காதா?

அவர் சொன்னார். “நான் அந்த ஓலையின் காலத்தையும் ஆராய்ச்சி செய்து விட்டேன். இது அந்தக் காலத்தோடது தான்.

“இது மாதிரி ஓலைச்சுவடியைப் பார்த்ததில்லைன்னு சொன்னீங்களே ஏன்?

“இது மாதிரியான ஒரு தனி சம்பவத்தை இத்தனை விரிவாக அந்தக் காலத்தில் ஒரு ஓலைச்சுவடியில் யாரும் எழுதி வைத்து நான் பார்த்ததில்லை. இந்த சம்பவம் குறித்து அரைகுறையாகக் கூட வேறெங்கும் நான் கேள்விப்பட்டதில்லை....

சொல்லி விட்டு எதையோ அந்த தமிழ் வல்லுனர் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிப்பது போல அவனுக்குப் பட்டது. அந்த நேரத்தில் அவர் முகத்தில் லேசாக ஒரு இனம் புரியாத பயத்தையும் அவன் கவனித்தான்.

(தொடரும்)

-என்.கணேசன்

15 comments:

 1. தமிழாராய்ச்சி வல்லுனர் முகத்தில் லேசாக ஒரு இனம் புரியாத பயத்தையும் கவனிக்கும் போது கதை இன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது..

  ReplyDelete
 2. Thanks for connecting olden days with modern era. Nice fabrication Mr. Ganesan.

  ReplyDelete
 3. தொடர் விறு விறுவென செல்கிறது. தொடர்கிறேன்...

  ReplyDelete
 4. பிரமாதம் கணேசன் சார். டாவின்சி கோட் போன்ற ஆங்கில நாவலுக்கு இனையான தமிழ் படைப்பு என்றே சொல்லலாம். நல்ல விறுவிறுப்பு. சுவாரசியம். பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 5. நன்றாகச் செல்கிறது.

  ReplyDelete
 6. விறுவிறுப்பு மேலும் பெருகுகிறது... தொடர்கிறேன்...

  நன்றி...

  ReplyDelete
 7. Going good...Keeping us in suspense every week.

  ReplyDelete
 8. அழகு........விறுவிறுன்னு போகுது...

  ReplyDelete
 9. "Yaanai mel thunchiya devar" Raja Raja cholanukku munnadai vanthavarnu "Ponniyin Selvan" book la padichen... atha konjam sari paaka mudiyuma? Nijamaana varalatra aadharathoda than ezhuthuringa nu namburen.

  ReplyDelete
  Replies
  1. Please read in this link (especially the para of dealth on the battlefield)
   http://en.wikipedia.org/wiki/Rajadhiraja_Chola

   Delete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. யானை மேல் துஞ்சிய தேவர் 1:
  பெயர்: இராஜாதித்யர்
  உறவு முறை: ராஜ ராஜ சோழனின் பெரிய தாத்தா
  போர்க்களம்: தக்கோலம்
  வருடம்: கி.பி. 949

  யானை மேல் துஞ்சிய தேவர் 2:
  பெயர்: ராஜாதி ராஜன்
  உறவு முறை: ராஜ ராஜ சோழனின் பேரன்
  போர்க்களம்: கொப்பம்
  வருடம்: கி.பி. 1054

  ReplyDelete
 12. 950 வருடங்களுக்கு முன்பு எழுதிய ஓலை...

  சித்தர்கள் வணங்கி பூஜித்த சிவலிங்கம் அடைய நினைத்த மன்னன் போரில் இறந்தார்..

  அதை சித்தர்கள் முன்பே அறிந்துவைத்திர்ந்தது ஆச்சர்யமான விஷயம்..

  அரிய விஷயங்கள் எல்லாம் இந்த பாகத்தில் சொல்லி இருக்கிறீர்கள்பா...

  ReplyDelete
 13. Thanks for Manju Ramesh for clarifying clearly about two Rajadhi Rajan. Fortunately both the Rajadhi Rajan had the demise in the same way.

  ReplyDelete