சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 15, 2012

பரம(ன்) ரகசியம் – 18



கார் வந்து நின்ற சத்தம் கேட்டு மூன்று பேர் தங்கள் தங்கள் அறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்கள். அவர்கள் பரமேஸ்வரன், விஸ்வநாதன் மற்றும் மகேஷ். மூவருக்கும் நேரடியாக ஈஸ்வரை முதலில் சென்று சந்திக்கத் தயக்கம் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் அவன் நேரில் பார்க்க எப்படி இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ளும் பரபரப்பும் அவர்களிடம் இருந்தது.

காரிலிருந்து இறங்கிய ஈஸ்வரைப் பார்த்த பரமேஸ்வரன் திகைத்தே தான் போனார். என்ன தான் முன்பு போட்டோக்களில் பார்த்து அவருடைய தந்தையைப் போலவே இருக்கிறான் என்று தெரிந்திருந்தாலும் நேரில் பார்க்கையில் உருவம் மேலும் நுணுக்கமாக அதை அறிவித்ததை அவர் உணர்ந்தார். காரிலிருந்து இறங்கிய மீனாட்சி சொன்னாள். “இது தான் நம்ம வீடு...

ஈஸ்வர் அந்த வீட்டைப் பார்த்தான். அரண்மனை போன்ற வீடு என்று அவனுடைய தந்தை வர்ணித்தது அதிகப்படி இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. அவனுடைய தந்தை பிறந்து வளர்ந்த வீடு என்று எண்ணிய போது மனம் லேசானது. மீனாட்சியைப் பார்த்து அவன் புன்னகைக்க அவளும் புன்னகைத்தாள். பார்த்துக் கொண்டிருந்த பரமேஸ்வரனுக்கு மகன் நினைவுக்கு வந்தது. அண்ணனும் தங்கையும் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொள்வார்கள்...

விஸ்வநாதன் ஈஸ்வரை மிக உன்னிப்பாகப் பார்த்தார். இவன் கண்டிப்பாக அவருடைய மகனுக்கு இந்த வீட்டில் பெரிய போட்டியை ஏற்படுத்துவான் என்பது முதல் பார்வையிலேயே அவருக்குப் புரிந்தது. அதிருப்தி அவரை ஆட்கொண்டது.

மகேஷ் ஈஸ்வரைப் பொறாமையுடன் பார்த்தான். பிரயாணக் களைப்பில் கூட அவன் அழகாய் தெரிந்ததும், வீட்டின் மதிப்பு என்னவாக இருக்கும் என்பது போல பார்வையால் வீட்டை அளந்ததும் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. மீனாட்சியுடன் ஈஸ்வர் மிக நெருங்கி விட்டது போலத் தெரிந்ததும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மீனாட்சியைப் போலவே பரமேஸ்வரனும் ஈஸ்வருடன் மிக நெருக்கமாகி விட்டால் என்று நினைத்த போது அவனுக்கு வயிற்றைக் கலக்கியது.

ஆனந்தவல்லி அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே ஹாலில் வந்து அமர்ந்திருந்தாள். அதிகாலையில் எழுந்து குளித்து கொள்ளுப் பேரனை முதலில் பார்த்துப் பேசுவது தானாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவளாக ஹாலில் அமர்ந்திருந்தவள் கார் வந்து நின்ற சத்தம் கேட்டவுடன் ஆவலுடன் வாசலைப் பார்த்தாள். வெளியே இருந்து பேரன் உள்ளே நுழைய ஆன தாமதம் அவளை இருப்பு கொள்ளாமல் தவிக்கச் செய்தது.

மருமகனுடன் உள்ளே நுழைந்த மீனாட்சி ஹாலில் பாட்டியைப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டாள். ஆனந்தவல்லி ஹாலிற்கு வருவது மிக அபூர்வம். அதிகமாக அவள் அறையிலேயே இருப்பவள் சில சமயங்களில் பரமேஸ்வரன் அறைக்குச் செல்வதுண்டு. மற்றபடி தன் அறை வாசலில் நின்று கொண்டு மற்றவர்களை நோட்டமிடுவாளே தவிர ஹால் வரை அதிகம் வருவதில்லை.

பேத்தியின் முகத்தில் தெரிந்த ஆச்சரியத்தைக் கவனிக்கும் மனநிலையில் ஆனந்தவல்லி இருக்கவில்லை. அவளுடைய கணவரின் அச்சில் அழகாக வந்து நின்ற ஈஸ்வரைப் பார்த்த போது அவள் ஒரு கணம் தன் இளமைக் காலத்திற்கே சென்று விட்டாள். அந்த அழகில் மயங்கி கட்டினால் இவனைத் தான் கட்டுவேன், இல்லா விட்டால் எனக்குக் கல்யாணமே வேண்டாம்என்று பிடிவாதம் பிடித்து திருமணம் செய்து கொண்டவள் அவள். ஜமீன்தாரான அவள் தந்தை அந்தஸ்தில் தங்களை விட சற்று குறைந்தவரான சாந்தலிங்கத்திற்கு அரைமனதோடு தான் மகளைக் கட்டிக் கொடுத்தார்....

“இது தான் உன்னோட கொள்ளுப்பாட்டிஎன்று மீனாட்சி ஈஸ்வரிடம் ஆனந்தவல்லியை அறிமுகப்படுத்தினாள்.

மனதில் என்ன தான் அவன் மீது தனிப்பாசம் பிறந்திருந்தாலும் தன் முகத்தில் அதை ஆனந்தவல்லி காட்டவில்லை. அவனைத் தன் வழக்கமான அலட்சியப் பார்வையே பார்த்தாள். ஆனந்தவல்லி பற்றி தந்தையிடம் நிறையவே கேட்டுத் தெரிந்து வைத்திருந்த ஈஸ்வருக்கு அவள் மேல் நல்ல அபிப்பிராயம் எதுவும் பெரிதாக இருக்கவில்லை. சங்கரும் மீனாட்சியும் தாயில்லாப் பிள்ளைகளாக இருந்த போதும் அவர்களை தாயின் ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொள்ள அவள் முன்வரவில்லை என்பது மட்டுமல்ல குழந்தைகள் என்றால் இருக்கும் இடம் தெரியாமல் இருக்க வேண்டும். வீட்டில் சத்தமிட்டு ஓடியாடி விளையாடுவதோ, பெரியவர்களைத் தொந்திரவு செய்வதோ கூடாது என்ற கொள்கையில் அவள் என்றும் இருப்பவள் என்று சங்கர் மகனிடம் சொல்லி இருந்தார். அதனால் அவனும் அவளை அலட்சியப் பார்வையே பார்த்தான்.

இதை எதிர்பார்த்திராத மீனாட்சி இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு ஈஸ்வரிடம் சொன்னாள். “உட்கார் ஈஸ்வர்

ஈஸ்வர் ஆனந்தவல்லிக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து சோம்பல் முறித்தான். அவனாக வணக்கம் தெரிவிப்பான், பேசுவான் என்று எதிர்பார்த்து ஏமாந்த ஆனந்தவல்லி சிறிது பொறுத்துப் பார்த்தாள். அவன் பார்வையோ ஹாலில் மாட்டியிருந்த பெரிய பெரிய புகைப்படங்களில் தங்கியது. ஆனந்தவல்லி-சாந்தலிங்கம், பரமேஸ்வரன்-அவர் மனைவி விசாலாட்சி, மீனாட்சி-விஸ்வநாதன் ஜோடிப் புகைப்படங்களும், தனித்தனியாக பசுபதி, மகேஷ் புகைப்படங்களும் அலங்கரித்துக் கொண்டிருந்தன. அவன் தந்தையின் படம் அங்கிருக்கவில்லை. அதைக் கவனித்த பின் அவன் முகம் இறுகியது. அவன் பார்வை போன இடமும், அவன் சிந்தனை போன விதமும் புரிந்த போது மீனாட்சியின் மனம் சங்கடப்பட்டது. அவனை ஆனந்தவல்லியும் கவனிக்கவே செய்தாள்.  இவனை சமாளிப்பது கஷ்டம் தான் என்பது புரிய சிறிது யோசித்து விட்டு அனந்தவல்லி திடீரென்று கேட்டாள். ஏண்டா கல்யாணம் ஆயிடுச்சா?

பார்வையை அவள் மீது திருப்பியவன் அலட்சியமாகச் சொன்னான். “இல்லை

“ஏதாவது பொண்ணு பார்த்து வச்சிருக்கியாடா?

இந்தப் பாட்டிக்கு என்ன ஆயிற்று, இந்தக் கேள்விகளை பார்த்த முதல் நிமிடத்திலேயே கேட்கிறாள் என்று மீனாட்சி திகைத்தாலும் அவன் கவனத்தைத் திருப்புவதற்கு இது உதவும் என்று திருப்தி அடைந்தாள். பார்த்தவுடனே முதலில் கேட்கப்படும் இந்தக் கேள்விகள் ஈஸ்வரையும் ஆச்சரியப்படுத்தியது. அவள் குடும்ப கௌரவம், அந்தஸ்து போன்றவற்றில் எல்லாம் ஆழ்ந்த கருத்துக்கள் உடையவள் என்று கேள்விப்பட்டிருந்த ஈஸ்வர் அவளுக்கு அலட்டிக் கொள்ளாமல் பதில் தந்தான்.

இல்லை. இந்தியாவில் தான் ஒரு பெண்ணைப் பார்க்கணும்னு இருக்கேன். ஒரு சேரிப் பெண்ணாய் பார்த்து கல்யாணம் செய்துகிட்டு இங்கேயே செட்டில் ஆயிடலாம்கிற எண்ணம் இருக்கு. கல்யாணம் செய்துட்டு நாலஞ்சு பெத்துகிட்டு இந்த வீடெல்லாம் இஷ்டத்துக்கு சுத்தி ஜாலியா விளையாட விடணும்னு நினைச்சுகிட்டிருக்கேன்....
மீனாட்சி சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். பாட்டியிடம் இந்த மாதிரி யாரும் பேசியது இல்லை. அவ்வளவு தைரியம் யாருக்கும் வந்ததும் இல்லை....

ஆனந்தவல்லி ஈஸ்வரை முறைத்துப் பார்த்தாள். அவன் அவளையே சலனமே இல்லாமல் பார்த்தான். அவள் பார்வையை நீண்ட நேரம் சந்திக்க முடிந்தவர்கள் யாரும் இருந்தது  இல்லை. ஆனால் விதிவிலக்காய் அவன் வந்திருக்கிறான்.

“நீ திமிர் பிடிச்சவன் தான்....ஆனந்தவல்லி சொன்னாள்.

“அங்கே எப்படி?அவன் அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்.

ஆனந்தவல்லி தன்னையுமறியாமல் புன்னகைத்தாள். ஆரம்பத்திலேயே இடக்கு முடக்காக அவன் பேசினாலும் அவனை அவளுக்குப் பிடித்திருந்தது. கல்யாணம் ஆன புதிதில் அன்னியோன்னியமான ஒரு நேரத்தில் கணவனிடம் அவள் சொல்லி இருக்கிறாள். “நீங்க இந்த அளவு பொறுமையா சாதுவா இருக்கிறது எனக்கு அவ்வளவா புடிக்கலை... இதுக்கு பதிலா கொஞ்சம் திமிர், கோபம் இருந்தால் கூட தேவலை...

அவர் சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கிறார். என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது. அதுக்கு நான் இன்னொரு ஜென்மம் எடுத்து தான் வரணும்

இந்தக் கணத்தில் அவளுக்கு அன்று அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.  ‘அவர் தான் இவனாய் ஜென்மம் எடுத்து வந்திருக்கிறாரோ?என்று தோன்றவே அவள் முகத்தில் இது வரை இல்லாத கனிவு பிறந்தது.

அவளது முகத்தில் கோபம் போய் லேசான புன்னகை அரும்பியதும், அதுவும் போய் கனிவு தோன்றியதும் மனோதத்துவ நிபுணனாகிய ஈஸ்வரையே குழப்பியது. ‘கிழவிக்கு காது சரியாகக் கேட்கவில்லையோ?

மீனாட்சியும் திகைப்புடன் பாட்டியைப் பார்த்தாள். பாட்டியின் இந்த அவதாரம் அவளுக்குப் புதிது. இதே போல் ஒரு அதிசயத்தை அவன் பரமேஸ்வரனிடமும் நிகழ்த்தி விட்டால் எல்லாமே சரியாகி விடும்....

மீனாட்சி ஈஸ்வரிடம் சொன்னாள். “சரி நிதானமாய் பாட்டி கிட்ட பேசு. உங்க தாத்தாவைப் பார்த்துட்டு வரலாம். வா

அவன் மறுபடி ஏடாகூடமாய் ஏதாவது சொன்னாலும் சொல்லலாம் என்று பாட்டிக்கும் பேத்திக்கும் தோன்றினாலும் அவர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக அவன் தலையசைத்து விட்டு எழுந்து நின்றான். மீனாட்சிக்கு சந்தோஷமாக இருந்தது. எல்லாமே சுமுகமாகப் போலத் தான் தெரிகிறது... ஆனால் மனிதர்களை எடை போடுவதில் அவளை விடக் கெட்டிக்காரியான ஆனந்தவல்லி ஏமாந்து விடவில்லை. நேரடியாக எந்தவித மனவருத்தங்களும் இல்லாத அவளிடமே இப்படி நடந்து கொள்பவன் பரமேஸ்வரனிடம் அவ்வளவு சுலபமாக நல்ல விதமாக நடந்து கொள்வான் என்பதை அவள் நம்பி விடவில்லை.... அவளும் அவனுடன் பரமேஸ்வரன் அறைக்குக் கிளம்ப யத்தனித்தாள். யத்தனிக்கையில் அவளுக்குக் குழந்தைத் தனமான ஒரு ஆசை எழுந்தது. கொள்ளுப் பேரனைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
வேண்டுமென்றே எழ கஷ்டப்படுபவள் போல நடித்தாள். ஈஸ்வர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாலும் கைத்தாங்கலாய்ப் பிடிக்க முன் வரவில்லை.

“ஏண்டா பார்த்துட்டே மரம் மாதிரி நிக்கறே? கொஞ்சம் பிடியேன்என்று ஆனந்தவல்லி அவனிடம் உரிமையோடு அதட்டிக் கேட்டுக் கொண்டாள். வேறு வழியில்லாமல் ஈஸ்வர் அவள் எழ உதவி செய்ய ஆனந்தவல்லி எழுந்தவள் அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்... “..ம்... நடஎன்றாள்.

நிஜமாகவே கிழவிக்கு முடியவில்லை என்று நினைத்த ஈஸ்வருக்கு அவள் மீது சிறிது இரக்கம் பிறந்தது. மீனாட்சி பாட்டியைத் திகைப்புடன் பார்த்தபடி தந்தையின் அறை நோக்கி நடந்தாள். மகேஷ் குழந்தையாக இருந்த போது ஓரிரு முறை ஆனந்தவல்லி தொட்டுத் தூக்கி இருக்கலாம்... பின் எந்தக் காலத்திலும் அவனை அருகில் கூட அவள் நெருங்க விட்டதில்லை.... அவளுக்குத் தெரிந்து ஆனந்தவல்லி தன் மகன் பரமேஸ்வரன் ஒருவரிடம் மட்டும் தான் சிறிதாவது நெருக்கமாக இருப்பாள். மற்றவர்கள் எல்லாரும் அவளிடமிருந்து சில அடிகள் தள்ளியே தான் இருக்க வேண்டும். அவளுக்கு உதவுவதற்காகக் கூட அவளை ஆண்கள் யாரும் நெருங்குவதை அவள் தள்ளாத இந்த வயதிலும் சகித்ததில்லை.  இப்போதோ எல்லாம் தலை கீழாக நடக்கிறது....

பரமேஸ்வரன் தனதறையில் நாளிதழ் ஒன்றைப் படிப்பதாய் பாவனை செய்து கொண்டிருந்தார். முதலில் நுழைந்த மீனாட்சி மகிழ்ச்சி, பதட்டம் இரண்டும் கலந்த குரலில் அறிவித்தாள். “அப்பா ஈஸ்வர் வந்தாச்சு

ஆனந்தவல்லியுடன் வந்து நின்ற ஈஸ்வரைப் பார்த்த பரமேஸ்வரன் பேச்சிழந்து போனார். அவருடைய பெற்றோர் ஒரு சேர வந்தது போல் இருந்தது. இளமைக் கால தந்தை-இன்றைய தோற்றத்தில் தாய் சேர்ந்து வந்து நின்றது போல அவருக்குத் தோன்றியது. ஆனால் அவருடைய தந்தையின் தோற்றத்தில் இருந்த பேரன் பார்வையோ பாசப் பார்வையாக இல்லாமல் பனிப்பார்வையாக இருந்தது. அப்பாவின் ஸ்பெஷல்அப்பாவை அவன் அன்னியனாக நின்று ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்.

ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்திருந்த போதும் பேரன் வெறுப்பைக் கடந்து வந்து விடவில்லை என்பதை அந்தப் பார்வையிலேயே படிக்க முடிந்த பரமேஸ்வரன் ஒரு பெரிய அழுத்தத்தை தன் இதயத்தில் உணர்ந்தார்.

ஆனந்தவல்லியிடம் கூடத் தானாகப் பேச்சை ஆரம்பிக்காத ஈஸ்வர் இங்கு பேச்சை ஆரம்பித்து விடப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்ட மீனாட்சி இருவருக்கும் இடையே பாலமாக இருக்க முயற்சித்து ஈஸ்வரிடம் சொன்னாள். “அப்பாவுக்கு உன்னைப் பார்த்தவுடனே அவங்கப்பா ஞாபகம் வந்திருச்சு போல இருக்கு

“நான் எங்கப்பா ஞாபகம் வரும்னு நினைச்சேன்....அவரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஈஸ்வர் கண்ணிமைக்காமல் சொன்னான்.

என்ன நாக்கு இந்தப் பையனுக்குஎன்று ஆனந்தவல்லி மனதினுள் வியக்க மீனாட்சி தந்தையைத் தர்மசங்கடத்துடன் பார்த்தாள். பரமேஸ்வரன் மிகுந்த சிரமத்துடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அவன் எதுவும் பேசவே இல்லை, தான் அதைக் கேட்கவே இல்லை என்பது போல் பேரனிடம் கேட்டார். பிரயாணம் எப்படி இருந்துச்சு?

உங்கம்மா எப்படி இருக்கா?ன்னு அவர் கேட்டிருந்தால் ஈஸ்வரின் இறுக்கம் குறைந்திருக்கும். சம்பிரதாயமாக அவர் பேச வேண்டுமே என்று கேட்ட கேள்விக்கு ஈஸ்வரும் சம்பிரதாயமாகவே பதில் சொன்னான். “சௌகரியமா இருந்துச்சு

அதற்குப் பிறகு பேச்சைத் தொடரும் மனநிலையில் இருவருமே இல்லை என்பதைப் புரிந்து கொண்ட மீனாட்சி அவசரமாகச் சொன்னாள். “சரி சரி தாத்தாவும் பேரனும் அப்புறமா பேசிக்குங்க. நீ வா ஈஸ்வர் உன் ரூமைக் காமிக்கறேன்...

ஆனந்தவல்லி கொள்ளுப் பேரனைப் பிடித்திருந்த பிடியை விட்டாள். ஈஸ்வர் இருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அத்தையைத் தொடர்ந்தான்.

மீனாட்சி பரபரப்போடு அறையைக் காண்பித்தாள். “இது தான் உங்கப்பா ரூம்”.  அறையில் நூற்றுக் கணக்கில் பதக்கங்கள், கோப்பைகள், பல விதங்களில் அலமாரிகளில் வைக்கப் பட்டிருந்தன. இதெல்லாம் உங்கப்பா வாங்கினது...மீனாட்சி பெருமிதத்துடன் சொன்னாள். அப்பா அத்தனை பதக்கங்களும், கோப்பைகளும் வாங்கியது அவனுக்கு ஆச்சரியமில்லை. ஆனால் இத்தனை வருடங்கள் கழிந்த பின்னும் அதைப் பாதுகாத்து அவள் வைத்திருப்பது தான் அவனுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அறையில் அவன் அப்பாவின் இளமைக் காலப் பெரிய போட்டோ ஒன்று சந்தனமாலையுடன் இருந்தது. அப்பாவுக்கு இந்த வீட்டில் இன்னும் இடம் இருக்கிறது. நினைவு வைத்துக் கொண்டாடும் ஒரு தங்கை இன்னும் இருக்கிறாள்... அவன் கண்கள் ஈரமாயின.

“ஒரே நிமிஷம் இரு.. நான் மகேஷை எழுப்பிட்டு கூட்டிகிட்டு வர்றேன்...என்று மீனாட்சி அவசரமாகச் சென்றாள். மருமகன் வந்த பிறகு கூட வரவேற்க மகனும், கணவரும் வராதது அவளுக்கு அநாகரிகமாகப் பட்டது. அவள் போன பிறகு அறையை சுற்றிப் பார்த்தான். இது அப்பா வாழ்ந்த அறை என்ற நினைவு அவன் மனதை லேசாக்கியது... அப்போது தான் அந்த அறையில் இருந்த இன்னொரு பெரிய போட்டோவைப் பார்த்தான். சங்கரின் கல்லூரி நாட்களில் எடுக்கப்பட்ட போட்டோ போலத் தோன்றியது. பரமேஸ்வரன் சங்கரையும், மீனாட்சியையும் இறுக்கி அணைத்தபடி நின்றிருந்தார். அவர் கண்களில் எல்லையில்லாத பெருமிதம்... மற்றவர் இருவர் கண்களிலும் எல்லையில்லாத சந்தோஷம்.... சாசுவத அடையாளமாகிப் போன ஒரு சந்தோஷத் தருணம்... நிறைய நேரம் அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருந்து விட்டு அவன் மாலையுடன் இருந்த அப்பாவின் படத்தின் அருகே வந்தான். மிக நெருக்கமாக வந்து தந்தையிடம் சொன்னான். “நான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்ப்பா... உங்க “ஸ்பெஷல் அப்பா”,  திமிரான பாட்டி, பாசமான தங்கை எல்லாரையும் பார்த்தேன்....

அவன் அப்பா சந்தோஷப்பட்டது போல இருந்தது. அவர் புன்னகையையே பார்த்துக் கொண்டு நின்றான் ஈஸ்வர். திடீரென்று அந்தப் போட்டோவில் அவன் அப்பா மறைந்து போனார். அந்தரத்தில் நின்றிருந்த ஒரு சிவலிங்கம் தத்ரூபமாகத் தெரிந்தது. திடுக்கிட்டுப் போன ஈஸ்வர் இரண்டடி பின் வாங்கினான். ஓரிரு வினாடிகள் கழித்து பழையபடி போட்டோவில் அப்பாவே தெரிய ஈஸ்வருக்கு வியர்த்தது....

(தொடரும்)
-          என்.கணேசன்

21 comments:

  1. கதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. திடீரென்று அந்தப் போட்டோவில் அவன் அப்பா மறைந்து போனார். அந்தரத்தில் நின்றிருந்த ஒரு சிவலிங்கம் தத்ரூபமாகத் தெரிந்தது. திடுக்கிட்டுப் போன ஈஸ்வர் இரண்டடி பின் வாங்கினான்//

    திடுக்கிடும் திருப்பம் !

    ReplyDelete
  3. “அப்பாவுக்கு உன்னைப் பார்த்தவுடனே அவங்கப்பா ஞாபகம் வந்திருச்சு போல இருக்கு”

    “நான் எங்கப்பா ஞாபகம் வரும்னு நினைச்சேன்....” Super and natural dialogues. The story moves very interestingly. I love the you write. Congrats.

    ReplyDelete
  4. கடைசி வரியைப் படித்தவுடன் சிலீரென்று சிலிர்த்து விட்டது. ரொம்ப பீதியக் கெளப்புனா என்ன பன்றது?

    ReplyDelete
  5. திருப்பங்கள் சுவாரஸ்யம்...

    ReplyDelete
  6. நன்றாகப் போகிறது.

    ReplyDelete
  7. Writing style is pleasant, Medley of emotions especially Minakshi, Eswar's charisma made others submissive :-)

    /PK Pillai

    ReplyDelete
  8. It is nice Mr.Ganesan, very emotional and real feelings... after a long time I am reading a nice story. Wish you all the best..

    ReplyDelete
  9. சார்! இந்த தொடரிலேயே இந்த பாகம் தான் சிறப்பாக எழுதியுள்ளதாக கருதுகிறேன். நல்ல எழுத்து நடை, என்ன ஒரு பாசப்போராட்டம், படிக்கும் போது அப்படியே மனத்திரையில் படம் பார்த்து கண்ணில் நீர் கோத்துக்கொண்டது.

    கடைசியில் வழக்கம் போல சஸ்பென்ஸ் வைத்திருக்கிறீர்கள். தொடருங்கள் உங்கள் பாணியை.

    தொடரின் அடுத்த பாகத்திற்காக....

    I AM WAITING................

    நன்றி

    ReplyDelete
  10. சுந்தர்November 16, 2012 at 6:36 PM

    ஆனந்தவல்லி, பரமேஸ்வரன், மீனாக்‌ஷி, ஈஸ்வர் நான்கு பேரையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். ஈஸ்வர் நல்ல அழுத்தமான பாத்திரம். அடுத்தது என்ன என்று பரபரப்போடு காத்திருக்க வைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள் கணேசன் சார்! (அமானுஷ்யனை மிஞ்சி இந்த தொடர் பிரபலமடைய வாழ்த்துக்கள்)

    ReplyDelete
  11. // பரமேஸ்வரன் சங்கரையும், மீனாட்சியையும் இறுக்கி அணைத்தபடி நின்றிருந்தார். அவர் கண்களில் எல்லையில்லாத பெருமிதம்... மற்றவர் இருவர் கண்களிலும் எல்லையில்லாத சந்தோஷம்.... சாசுவத அடையாளமாகிப் போன ஒரு சந்தோஷத் தருணம்... நிறைய நேரம் அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருந்து விட்டு அவன் மாலையுடன் இருந்த அப்பாவின் படத்தின் அருகே வந்தான். மிக நெருக்கமாக வந்து தந்தையிடம் சொன்னான்.“நான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்ப்பா... உங்க “ஸ்பெஷல் அப்பா”, திமிரான பாட்டி, பாசமான தங்கை எல்லாரையும் பார்த்தேன்....”//

    these lines makes different feeling inside.. no words... great...

    ReplyDelete
  12. Sir, nice going...one question...when comes the "Seri ponnu" ..heroine of the novel then??? only romance is missing from hero`s (as well as from novel's)side!!!

    ReplyDelete
  13. சுவாரஸ்யமாக போய்க் கொண்டு இருக்கின்றது . தொடருங்கள்

    ReplyDelete
  14. நினைவு வைத்துக் கொண்டாடும் ஒரு தங்கை இன்னும் இருக்கிறாள்... அவன் கண்கள் ஈரமாயின.//////////
    படிக்கும் எங்கள் கண்களிலும் கண்ணீர் வர வைத்துவிட்டீர்கள்........!!

    ReplyDelete
  15. ஒவ்வொருவரின் உணர்ச்சிகளையும் அப்படியே நேரில் பார்ப்பது போன்று உணர்வு ஏற்படுத்தும் உங்கள் எழுத்துக்கு வாழ்த்துகள்......

    ReplyDelete
  16. இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.என்ற உங்கள் வார்தைக்கு தகுதியான சிந்தனையாக இந்த வார்தை இல்லை"ஒரு சேரிப் பெண்ணாய் பார்த்து கல்யாணம் செய்துகிட்டு இங்கேயே செட்டில் ஆயிடலாம்கிற எண்ணம் இருக்கு. கல்யாணம் செய்துட்டு நாலஞ்சு பெத்துகிட்டு இந்த வீடெல்லாம் இஷ்டத்துக்கு சுத்தி ஜாலியா விளையாட விடணும்னு நினைச்சுகிட்டிருக்கேன்....”" யாரும் யாரையும் விட பிறப்பால் கீழ் இல்லை

    ReplyDelete
  17. "ஆனந்தவல்லியுடன் வந்து நின்ற ஈஸ்வரைப் பார்த்த பரமேஸ்வரன் பேச்சிழந்து போனார். அவருடைய பெற்றோர் ஒரு சேர வந்தது போல் இருந்தது. இளமைக் கால தந்தை-இன்றைய தோற்றத்தில் தாய் சேர்ந்து வந்து நின்றது போல அவருக்குத் தோன்றியது."

    - நீங்கள் யார் அய்யா உங்கள் எழுத்து என்னை கடுமையாக பாதிக்கிறது. எழுத்தின் சுவாரசியம் , சிவம் , சித்தர் இதை தாண்டி உறவுகளின் அன்பு, வலி, ஏக்கம் , ஏமாற்றம் மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறீர்கள். மிகவும் அருமை.

    ReplyDelete
  18. ஈஸ்வரனின் வருகை, மீனாக்‌ஷியின் சந்தோஷம், மகேஷ் விஸ்வநாதன் இருவரின் க்ரோதம், ஆனந்தவல்லியின் அடங்கிய திமிர், பரமேஸ்வரனின் மன அழுத்தம் ஈஸ்வரனின் மன ஆராய்ச்சி எல்லோரைப்பற்றியும் எல்லாமே மிக துல்லியமாக அவர்கள் உணர்வுகளை வரிகளாக்கி இருக்கீங்கப்பா...

    கடைசி வரி படிக்கும்போது சில்லிட்ட உணர்வு...

    அப்பா முகம் மறைந்து அந்த சிவலிங்கம் தோன்றியதா....

    அங்கே தெய்வம் ஈஸ்வருக்கு சொல்ல வரும் சேதி என்ன ?

    ReplyDelete
  19. கொள்ளுபாட்டி, தாத்தா,பேரன் உரையாடல்கள் அவர்களின் மனநிலையை பிரதிபலிக்கின்றது ....பளிச்,பளிச் வசனங்கள்,....

    ReplyDelete