சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 30, 2012

பரம(ன்) ரகசியம்! – 7



ந்த மனிதனுக்கு அந்த முதியவரின் மர்மப் புன்னகைக்குப் பொருள் விளங்கவில்லை. ஏதோ ஒரு தனிப்பட்ட நகைச்சுவையான விஷயத்தை அவர் நினைத்துக் கொண்டது போலத் தோன்றியது. மிகவும் இக்கட்டான நிலைமையைச் சொல்லும் போது இந்த விதமான எதிர்கொள்ளல் இயல்பான ஒன்றாய் அவனுக்குத் தோன்றவில்லை. யோசித்துப் பார்த்தால் அவரிடம் எதுவுமே இயல்பாக இல்லை என்பதையும் அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. பல விஷயங்களில் அவர் முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருந்தார்.

வஜ்ராசனமும், ஆழ்நிலை தியானமும் சாத்தியப்பட்ட அந்த மனிதருக்கு தெய்வ நம்பிக்கை இருந்தது போலத் தோன்றவில்லை. அவர் அறையில் ஆன்மிகச் சின்னங்களோ, அடையாளங்களோ இல்லை. எண்பதிற்கு மேற்பட்ட வயது இருந்தாலும் அவர் நடை, உடை, பாவனை, இருப்பு எதிலுமே முதுமையின் தாக்கம் இல்லை. அதிகார வர்க்கம், கோடீஸ்வரர்கள், மேதைகள் எல்லாம் அவரைத் தேடி வருவதும் ஆலோசனைகள் கேட்பதும் தினசரி நடப்பவை. அதே போல அடித்தள மக்கள், பரம ஏழைகள், மந்த புத்திக்காரர்கள் போன்ற எதிர்மாறானவர்களும் அவரைத் தேடி வருவதுண்டு. இந்த இரண்டு கூட்டங்களுக்கும் ஒரே வகையான வரவேற்பு அவரிடம் இருக்கும். ஒருசில நேரங்களில் மேல்மட்ட ஆட்களைக் காக்க வைத்து விட்டு அடித்தள மக்களை உடனடியாக அழைத்துப் பேசுவதும் உண்டு. தொடர்ந்து சில நாட்கள் ஆட்களை சந்தித்துப் பேசுபவர் திடீர் என்று சில நாட்கள் முழுவதும் தனிமையில் கழிப்பதுண்டு. எல்லோராலும் பொதுவாக “குருஜிஎன்றழைக்கப்பட்ட அந்த முதியவர் எந்தக் கணிப்பிற்கும் அடங்காத புதிராகவே இருந்தார்....

திடீரென்று குருஜி சொன்னார். “நான் நாளைக்கே நித்ய பூஜை செய்ய ஒரு ஆளை அனுப்பி வைக்கிறேன். கவலைப்படாதே

அந்த மனிதன் சிறிது நிம்மதி அடைந்தவனாகத் தலையசைத்தான். அப்புறம்... இன்னொரு விஷயம்..

”என்ன

“இந்தக் கேஸை திறமைசாலியான ஒரு போலீஸ் அதிகாரி கிட்ட ஒப்படைச்சிருக்காங்க. பணம், பதவி, அதிகாரம், பயம்ங்கிற இந்த நாலுக்கும் வளைஞ்சு கொடுக்காத ஆளுன்னு பெயரெடுத்தவராம்....சொல்லும் போது அவன் குரலில் கவலை தெரிந்தது.

அப்படிப்பட்ட ஆளுங்க சிலர் எப்பவுமே எங்கயும் இருக்கத்தான் செய்வாங்க. அது இயற்கை தான்.... அவர் சர்வ சாதாரணமாகச் சொன்னார்.

பார்க்க கதாகாலட்சேபம் பண்றவர் மாதிரி தெரிஞ்சாலும் அழுத்தமான ஆளு, ரொம்பவும் புத்திசாலின்னு சொல்றாங்க. அவர் எடுத்துகிட்ட கேஸ் எதையும் கண்டுபிடிக்காமல் விட்டதில்லைன்னு போலீஸ் டிபார்ட்மெண்டுல பேசிக்கிறாங்க....

“அந்த போலீஸ் அதிகாரி பெயர் என்ன?

“பார்த்தசாரதியாம்....

குருஜி புன்னகையுடன் சொன்னார். “அந்த ஆள் அடிக்கடி என்கிட்ட வர்றவர் தான்


முனுசாமிக்கு போலீஸின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே சலித்து விட்டது. பசுபதியின் தோட்ட வீட்டில் ஒரு அதிகாரி கேள்விகள் கேட்டார். அவன் பதில் சொன்னான். அடுத்ததாகப் போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து இன்னொரு அதிகாரி அவனிடம் கேள்விகள் கேட்டார். அதற்கும் அவன் பதில் சொன்னான். இப்போது இன்னொரு முறை அவனிடம் கேள்வி கேட்க அந்த தோட்ட வீட்டிற்கு புதிய அதிகாரி வரப் போகிறார் என்று தெரிவிக்கப்பட்ட போது அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. ஒரே விதமான கேள்விகளுக்கு எத்தனை தடவை தான் பதில் சொல்வது?. அதிலும் அவர்கள் “நீயே ஏன் கொன்றிருக்கக் கூடாது? என்ற வகையில் கேட்டது அவனை மனதை மிகவும் நோகடித்து விட்டது. இனி இந்த ஆளும் அதையே தான் கேட்பாரோ?

அவனை காலை பத்து மணிக்குத் தோட்ட வீட்டுக்கு வரச் சொல்லி இருந்தார்கள். அவன் ஒன்பதே முக்காலுக்குப் போன போதே தோட்டத்தில் ஒரு நாற்காலியில் அவன் இது வரை பார்த்திராத அந்த புதிய போலீஸ் அதிகாரி அமர்ந்து தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். முதலில் விசாரித்த இரண்டு போலீஸ் அதிகாரிகளிடம் தெரிந்த ஒருவித முரட்டுத்தனம் இவரிடம் அவனுக்குத் தெரியவில்லை. நீண்ட காலம் பழகியவர் போல அவனைப் பார்த்துப் புன்னகைத்த அவர் அவனை எதிரில் உள்ள நாற்காலியில் உட்காரச் சொன்னார். “வா முனுசாமி, உட்கார்...

பரவாயில்லைங்க ஐயா. நான் நிக்கறேன்....

“உனக்கு மூலம் எதுவும் இல்லையே?

“ஐயோ அதெல்லாம் இல்லைங்க...

“அப்ப உட்கார்

பார்க்க கனிவாய் தெரிந்தாலும் இந்த ஆள் வில்லங்கமான ஆளாய் இருப்பார் போலத் தெரிகிறதே என்று நினைத்தவனாக அவசரமாக நாற்காலியின் நுனியில் முனுசாமி உட்கார்ந்தான்.

பார்த்தசாரதி முனுசாமியை ஆழமாகப் பார்த்தார். இந்தக் கொலை வழக்கு ஒரு சவாலாகவே அவருக்கு அமைந்திருந்தது. கொன்றவனும் செத்து விட்டது, தடயங்கள் எதுவும் இல்லாதது, கொலை செய்யப்பட்ட பசுபதிக்கு வெளி உலகத் தொடர்புகள் இல்லாதது, சிவலிங்கம் பற்றி அதிகத் தகவல்கள் கிடைக்காதது எல்லாமாகச் சேர்ந்து ஆரம்பத்திலேயே விசாரணைக்கு அனுகூலமாக இல்லை. எடுத்தவுடன் பசுபதியின் தம்பி பரமேஸ்வரன் மேல் தான் சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. மொத்த சொத்தையும் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முன்பே தம்பிக்கு பசுபதி எழுதிக் கொடுத்து விட்டார் என்ற தகவல் சந்தேகத்தை ஆதாரம் இல்லாததாக்கி விட்டது.

அடுத்ததாக பசுபதியிடம் அதிகமாய் வந்து போய்க் கொண்டிருந்த வேலைக்காரன் முனுசாமி மேல் போலீசுக்கு சந்தேகம் வந்தது. ஆனால் விசாரணையில் அவன் மேல் சந்தேகப்படவும் எந்த முகாந்திரமும் இருப்பதாகப் போலீசாருக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் அந்தக் கிழவரை மிகவும் நேசித்ததாகத் தெரிகிறது என்று முந்தைய இரண்டு போலீஸ் அதிகாரிகள் பதிவு செய்து வைத்திருந்தனர். அவனிடமிருந்தும் அவர்களுக்கு கொலையாளியைக் கண்டுபிடிக்க எந்தத் துப்பும் கிடைக்கவில்லை ....

பார்த்தசாரதியின் பார்வையால் முனுசாமி தர்மசங்கடத்துடன் நெளிந்தான்.
பார்த்தசாரதி பார்வையின் தீட்சண்யத்தைக் குறைக்காமல் கேட்டார். “முனுசாமி நீ இங்கே எத்தனை வருஷமாய் வேலை பார்க்கிறாய்?

“வர்ற ஆவணிக்கு இருபத்தியாறு வருஷம் முடியுதுங்கய்யா

பசுபதி இங்கே வந்து கிட்டத்தட்ட அறுபது வருஷங்கள் ஆகுதுன்னு கேள்விப்பட்டேன். உனக்கு முன்னால் இங்கே யார் வேலைக்கு இருந்தாங்க

என் தாய் மாமன் இருந்தாருங்கய்யா. அவருக்கு வயசாயிட்டதால அப்புறம் என்னை இங்கே வேலைக்கு சேர்த்து விட்டார்...

“அவர் இப்ப இருக்காரா?

“இல்லை ஐயா அவர் செத்து இருபத்திஅஞ்சு வருஷம் ஆயிடுச்சுங்க

பசுபதி ஆள் எப்படி?

“அவரு மனுசரே இல்லைங்க மகானுங்க. இத்தனை வருஷத்துல அவர் ஒரு தடவை கூட கடுமையா பேசினது இல்லைங்க... ஏன் கோபமா என்னைப் பார்த்தது கூட இல்லைங்க... அன்பைத் தவிர அவருக்கு வேறெதுவும் தெரியாதுங்க..

ஆத்மார்த்தமாக வந்தது பதில்.

“முனுசாமி அந்த சிவலிங்கத்தைப் பத்தி சொல்லேன்

“அது சாதாரண சிவலிங்கம் தான் ஐயா. நாம கோயில்கள்ல எல்லாம் பார்ப்போமே அந்த மாதிரி தான் இருக்கும்....

பார்த்தசாரதி ஒரு நண்பனிடம் சந்தேகம் கேட்கிற தொனியில் தன் சந்தேகத்தைக் கேட்டார். “ஏன் முனுசாமி, ஒரு சாதாரண கல் லிங்கத்திற்காக யாராவது ஒரு ஆளைக் கொல்வாங்களா?

முனுசாமி குழப்பத்துடன் சொன்னான். “அது தான் எனக்கும் புரிய மாட்டேங்குது ஐயா

அந்த சிவலிங்கத்துக்குள்ளே ஏதாவது தங்கம், வைரம் மாதிரி ஏதாவது வச்சிருந்திருக்கலாமோ?

முனுசாமி உறுதியாகச் சொன்னான். “அப்படி வச்சிருந்தா பசுபதி ஐயா அதுக்கு பூஜை செய்துகிட்டிருக்க மாட்டாருங்க ஐயா. காசு, பணம் எல்லாம் அவருக்கு தூசிங்க ஐயா.

“நீ அந்த சிவலிங்கத்தைத் தொட்டுப் பார்த்திருக்கிறாயா?

“இல்லைங்கய்யா

“அந்த பூஜை அறைக்குள்ளே போய் அதைப் பக்கத்தில் பார்த்திருக்கிறாயா?

“இல்லைங்கய்யா

“ஏன், பசுபதி ஜாதி எல்லாம் பார்ப்பாரோ

“சேச்சே அப்படிப் பார்க்கற ஆள் அவரில்லைங்க. எத்தனையோ தடவை என் கூட சரிசமமா இருந்து தோட்ட வேலை செஞ்சிருக்காரு. என் வீட்டுல இருந்து கொண்டு வந்து எப்பவாவது பலகாரம் கொடுத்தா மறுக்காமல் வாங்கி சாப்பிடுவாரு. என்னை வீட்டு ஆளா தான் நடத்தி இருக்காருங்க ஐயா. மாத்தி சொன்னா என் நாக்கு அழுகிடும்

பின்னே எதனால நீ சிவலிங்கத்துக்குப் பக்கத்துல போனதோ, தொட்டுப்பார்த்ததோ இல்லை...

“ஏன் ஐயா, கோயிலுக்குப் போறோம். அங்க சாமிய தொட்டா பார்க்கறோம். கொஞ்ச தூரத்துல இருந்தே தானே கும்பிடறோம். அப்படித்தான்னு வச்சுக்கோங்களேன்... ஒரு வேகத்தில் சொல்லி விட்டாலும் அந்த போலீஸ் ஐயா கோபித்துக் கொண்டு விடுவாரோ என்று அவனுக்கு சிறிது பயமும் வந்தது.

ஆனால் அவர் கோபித்துக் கொள்வதற்குப் பதிலாக லேசாக புன்னகை செய்தார்.

“அவரைப் பார்க்க யாரெல்லாம் வருவாங்க?

“அவங்க வீட்டுல இருந்து அவரோட தம்பி அடிக்கடி வருவாரு. மத்தவங்க எல்லாம் எப்பவாவது அபூர்வமா வருவாங்க

“அவர் வெளியே போகிறதுண்டா

“போனதில்லைங்கய்யா

“ஏன்?

“அவரு ஒரு சாமியார் மாதிரி தான் வாழ்ந்தாருங்கய்யா. வெளியே போறதுலயும், மத்தவங்க கூட பழகறதுலயும் அவருக்குக் கொஞ்சமும் விருப்பம் இருக்கலை. அவருக்கு ஏதாவது வேணும்னா நான் தான் கொண்டு வந்து தருவேன்...அவராய் எங்கேயும் போக மாட்டார்

வேற யாராவது நீ போன பிறகு அவரைப் பார்க்க வந்தால் உனக்குத் தெரியுமா முனுசாமி

முனுசாமிக்கு அந்தக் கேள்வி ஏதோ ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகத் தோன்றியது.  சற்று யோசனை செய்தவனாகச் சொன்னான்.  “அப்படி அவரைப் பார்க்க வரக்கூடிய ஆள் வேற யாரும் இல்லைங்களே. அவரும் வெளியாள்கள் கிட்ட பேசக் கூடியவரில்லைங்கய்யா. நான் வெளியே இரும்புக் கதவைப் பூட்டிகிட்டு போனா மறு நாள் காலைல நான் வர்ற வரைக்கும் பூட்டித் தான் இருக்கும்...

அந்த வெளி இரும்புக்கதவோட பூட்டுக்கு ஒரு சாவி தான் இருக்கா?

“இல்லைங்கய்யா. மூணு சாவி இருக்கு. ஒண்ணு பரமேஸ்வரன் ஐயா கிட்டயும், ஒண்ணு என் கிட்டயும், ஒண்ணு பசுபதி ஐயா கிட்டயும் இருக்கு. பசுபதி ஐயா அதை சுவரில் ஒரு ஆணியில தொங்க வச்சிருப்பார். ஆனா அவரு அதை இது வரைக்கும் உபயோகப்படுத்துன மாதிரி தெரியலை... ஒவ்வொரு நாளும் நான் வந்து தான் திறந்திருக்கேன். ஒரு நாள் கூட நான் வர்றப்ப கதவு திறந்திருந்து பார்த்ததில்லை....

“அவர் செத்த நாள் தவிர...என்று பார்த்தசாரதி நினைவுபடுத்தினார்.

ஆமா...என்று அவன் குரல் வருத்தத்துடன் பலவீனமாய் வந்தது.

“நீ அந்த நாள் சரியா கதவைப் பூட்டினதா நினைவிருக்கா?

“இருக்குங்கய்யா

அவனையே ஒரு நிமிடம் உற்று பார்த்துக் கொண்டிருந்து விட்டு திடீரென்று பார்த்தசாரதி கேட்டார். இந்த தோட்ட வீட்டுக்குள்ள ராத்திரியில ஆவிகள் நடமாட்டமும், அமானுஷ்யமா சிலதெல்லாம் நடக்கறதும் உண்டுன்னு ஒருசில பேர் சொல்றாங்களே அது உண்மையா முனுசாமி

ஒரு கணம் முனுசாமிக்கு மூச்சு நின்றது போலிருந்தது. அவன் முகம் வெளுத்துப் போனது.

(தொடரும்)


Monday, August 27, 2012

யார் தலைவன்?




ஒரு மிகப் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஓய்வு பெறும் ஆகும் காலம் வந்தது. அது அவரது சொந்தக் கம்பெனி. அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்த அவர் சிறியதாக ஆரம்பித்த அந்தத் தொழிலை தன் கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் மிக லாபகரமான கம்பெனியாக வளர்த்திருந்தார். தனக்குப் பின் அந்தக் கம்பெனியின் நிர்வகிக்க யாரை நியமிப்பது என்று நிறைய யோசித்தார். தன் பிள்ளைகளில் ஒருவரையோ, இருக்கும் டைரக்டர்களில் ஒருவரையோ தலைமை ஏற்கச் சொல்வதற்குப் பதிலாக, நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

தன் கம்பெனியில் எல்லாத் துறைகளிலும் அதிகாரிகளாக இருக்கும் திறமையான இளைஞர்களையும் அழைத்து சொன்னார். “அடுத்த வருடம் நான் சேர்மன் பொறுப்பில் இருந்து விலக்ப் போகிறேன். உங்களில் தகுதி வாய்ந்த ஒருவரை அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுத்து என் கம்பெனியின் சேர்மனாக நியமித்து விட்டு ஓய்வு பெற நினைக்கிறேன்...

அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. அவர் தொடர்ந்தார்.

“உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தரப் போகிறேன். அது ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை. அதை நீங்கள் விதைத்து நீருற்றி ஒரு வருடம் வளர்க்க வேண்டும். சரியாக ஒரு வருடம் கழித்து, அடுத்த வருடம் இதே நாளில் ஒவ்வொருவரும் வளர்த்த செடியைக் கொண்டு வர வேண்டும். நீங்கள் கொண்டு வரும் செடிகளை வைத்து உங்களை எடை போட்டு அதில் சிறந்த ஒருவரை சேர்மனாகத் தேர்ந்தெடுப்பேன்

சொல்லி விட்டு அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தந்தார்.  அந்த இளைஞர்களில் மிக நல்லவனும், நாணயமானவனுமான ஒரு இளைஞன் அதை மிகுந்த் ஆர்வத்துடன் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். நல்ல பெரிய மண்சட்டியை வாங்கி அதில் நல்ல வளமான மண்ணைப் போட்டு அந்த விதையை விதைத்து நன்றாகத் தண்ணீர் ஊற்றி வந்தான்.

மூன்று வாரங்களான பின்னும் அந்த விதை முளைக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் மற்றவர்களோ கம்பெனியில் தங்கள் விதைகள் துளிர்க்க ஆரம்பித்து விட்டது என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சைக் கேட்ட போது அவனுக்கு கவலையாக இருந்தது. சேர்மன் ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை என்றாரே அதை சரியாகப் பராமரிக்காமல் விட்டு விட்டோமோ என்று அவனுக்கு சந்தேகம் வந்தது. நல்ல உரம் எல்லாம் வாங்கிப் போட்டான். ஆனால் காலம் போன பின்னும் எந்த மாற்றமும் அவன் விதையில் இல்லை.
கம்பெனியிலோ அவரவர்களின் விதைகளின் வளர்ச்சியைப் பற்றியதாகவே பேச்சு இருந்தது. அவன் மேலும் பல முயற்சிகள் எடுத்துப் பார்த்தான். ஆனாலும் பயனில்லை.

ஒரு வருடம் கழித்து அந்த முக்கிய நாளும் வந்தது. பலரும் நன்றாக செழிப்பாக வளர்ந்திருந்த செடிகளோடு வந்திருந்தார்கள். போட்டி கடுமையாக இருக்கும் போலத் தான் அவனுக்குத் தெரிந்தது. அவன் ஒருவன் தான் வெறும் சட்டியைக் கொண்டு வந்தவன். பலரும் அவனை இரக்கத்துடன் பார்த்தார்கள். அவனுக்கு அவமானமாக இருந்தது. எல்லோருக்கும் பின்னால் கடைசியாக நின்றான்.

சேர்மன் வந்தவர் ஒவ்வொரு செடியின் வளர்ச்சியையும் பார்த்து பாராட்டிக் கொண்டே வந்தார்.  வெறும் மண்சட்டியோடு நின்ற அவனைப் பார்த்தவுடன் அவர் கேட்டார். “என்ன ஆயிற்று?

அவன் கூனிக் குறுகிப் போனாலும் நடந்ததைச் சொன்னான். தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளை எல்லாம் சொல்லி, அத்தனை செய்தும் பலனில்லாமல் போயிற்று என்று ஒத்துக் கொண்டான்.

சேர்மன் அவனையே அடுத்த சேர்மனாக அறிவித்தார். அவன் உட்பட அனைவரும் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தார்கள். அவர் சொன்னார்.
“நான் உங்கள் அனைவருக்கும் தந்தது நன்றாக வேக வைத்துப் பின் உலர வைத்த விதைகள். அவைகள் கண்டிப்பாக செடிகளாக வளர வாய்ப்பே இல்லை. உங்கள் விதைகள் துளிர்க்காமல் போன போது அதற்கு பதிலாக வேறு புது விதைகள் போட்டு வளர்க்க ஆரம்பித்து விட்டீர்கள். இவர் ஒருவர் மட்டும் தான் அப்படி ஏமாற்றப் போகாமல் நேர்மையாக இருந்திருக்கிறார்.

“நீங்கள் அனைவரும் திறமையானவர்களே. அதில் எனக்கு சந்தேகமில்லை. அந்தத் திறமை இல்லாதிருந்தால் உங்களுக்கு என் கம்பெனியில் வேலையே கிடைத்திருக்காது. ஆனால் தலைவனாக ஆவதற்குத் திறமையுடன் இன்னொரு தகுதி கண்டிப்பாக வேண்டும். அவன் எதற்குத் தலைவனாக இருக்கிறானோ, அதற்காவது உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பவன் தலைமையில் தான் ஒரு நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைய முடியும். அப்படிப்பட்ட ஒருவராவது என் கம்பெனியில் இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இவர் கையில் இந்தக் கம்பெனியை ஒப்படைத்தால் இந்தக் கம்பெனி கண்டிப்பாக நல்ல வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அவனிடம் தலைமைப் பொறுப்பைத் தந்து விட்டு திருப்தியுடன் அவர் ஓய்வு பெற்றார்.

இது ஒரு நிறுவனத்திற்கு மட்டுமல்ல, கட்சி, அமைப்பு, கூட்டம், நாடு எல்லாவற்றிற்கும் பொருந்தும். அவன் அரிச்சந்திரனாக எல்லா விஷயங்களில் இருக்கிறானோ இல்லையோ, யாருக்குத் தலைவராக ஆகிறானோ அவர்களுக்காவது உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருப்பவன் தான் அவர்களுக்கு நல்லது செய்ய முடியும். அவனே தலைவன், அப்படி இருக்க முடியாதவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளே!

- என்.கணேசன்   

Thursday, August 23, 2012

பரம(ன்) ரகசியம்! - 6




யார் போன்லகனகதுர்கா மகனிடம் கேட்டாள்.

“ராங் நம்பர்ம்மாஎன்று அலட்டிக் கொள்ளாமல் ஈஸ்வர் சொன்னான்.

மகன் பேசியதை எல்லாம் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்த கனகதுர்காவிற்கு அவன் யாரிடம் பேசி இருப்பான் என்பதை ஊகிக்க முடிந்தது. கம்ப்யூட்டரில் ஏதோ வேலையாக இருந்த மகனையே சிறிது நேரம் பார்த்தாள்.
பின் ராங் நம்பர் என்ற அவன் பதிலைப் பொருட்படுத்தாதவளாக மீண்டும் கேட்டாள். “என்ன விஷயமாம்?

கம்ப்யூட்டரில் இருந்து கண்களை எடுக்காமல் அவன் சொன்னான். “தெரியலை

என்ன சொல்ல வந்தாங்கன்னாவது நீ கேட்டிருக்கலாம்

“நமக்கு சம்பந்தமில்லாதவங்க பேச்சை நாம எதுக்கும்மா கேட்கணும்?

கனகதுர்கா மகனுக்கு பதில் சொல்ல முடியாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். அவள் தன் மாமனாரை இது வரையில் சந்தித்ததில்லை. என்றாலும் அவரைப் பற்றி அவள் கணவர் மூலம் நிறையவே அறிந்து வைத்திருந்தாள். கணவரின் மரணத்தை அவரிடம் தெரிவித்த போது அவர் பேசிய பேச்சில் அவரைப் பற்றி முழுமையாகவே புரிந்து விட்டிருந்தது. அவர் எந்த விதத்திலும் அவர்களோடு உறவு கொண்டாட விரும்பவில்லை என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் இப்போது அவராகவே ஏன் போன் செய்ய வேண்டும்?

ஈஸ்வர்... மறுபடி தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.

“என்ன?

“உனக்கு ஈஸ்வர்னு உங்கப்பா ஏன் பேர் வச்சார்னு தெரியுமா?

“தெரியும்

“அந்த அளவுக்கு அவர் அவங்கப்பாவை நேசிச்சார்டா....

“அந்த அளவு நேசிச்ச மகனோட சாவுல கூட அந்த ஆள் கோபம் போகலைன்னா அந்த ஆள் என்ன மனுஷன்மா. நீ அந்த ஆள் பேசின பேச்சுல ரெண்டு நாள் அழுதது மறந்துடுச்சா?

மறக்கலைடா. அவர் அப்ப பேசினது தப்பு தான். ஆனா தப்பு செஞ்ச ஆள்கள் திருந்தவே மாட்டாங்களாடா? அதுக்கு நாம சந்தர்ப்பம் கொடுக்காட்டி அதுவே தப்பாயிடாதாடா?

முதல் முறையாக கம்ப்யூட்டரிலிருந்து பார்வையைத் தாயின் பக்கம் திருப்பிய ஈஸ்வர் புன்னகைத்தான். அந்த ஆள் அன்னைக்கு பேசினதுக்கு மன்னிப்பு கேட்கத்தான் போன் செய்யறாருன்னு நினைக்கிறியா. நல்ல கற்பனைம்மா உனக்கு. அதுக்கெல்லாம் அந்த ஆளோட ஈகோ விடாது. வேறெதுக்கோ போன் பண்ணியிருக்கார்

ஈஸ்வர் ஆணித்தரமாகச் சொன்னான். அவளுக்கு அவன் சொன்னதை சந்தேகிக்கத் தோன்றவில்லை. மனித மனத்தை அவன் ஆழமாக அறிந்தவன். இது வரை அவன் கணித்த மனிதர்களின் குணாதிசயங்கள் பொய்த்ததில்லை.  அவன் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கிறான். உளவியலில்  Parapsychology என்று சொல்லப்படும் அதீத உளவியல் மற்றும் அதீத புலனாற்றல் குறித்து அவன் எழுதிய சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக உளவியல் அறிஞர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றிருந்தன....

மறுபடி போன் மணி அடித்தது. காலர் ஐடியில் தெரிந்த எண்ணைப் பார்த்து விட்டு ஈஸ்வர் சொன்னான். “அந்த ஆள் தான் மறுபடி கூப்பிடறார்....

கனகதுர்காவிற்கு அவர் முதல் தடவை போன் செய்து பேசியதே ஆச்சரியமாகத் தான் இருந்தது. அவன் பேசிய பேச்சுக்கு இரண்டாவது முறை அவர் கூப்பிடுவார் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. மிக முக்கியமாய் ஏதோ இருக்க வேண்டும்.... அவள் மகனைப் பார்த்தாள். அவன் போனை எடுப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தன் கம்ப்யூட்டரில் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர ஆரம்பித்தான்.

கனகதுர்கா கைகள் லேசாக நடுங்க போன் ரிசீவரை எடுத்து மகன் காதில் வைத்தாள். அவன் முறைத்த போது “ப்ளீஸ்என்று உதடுகளை அசைத்தாள். வேறு வழியில்லாமல் ஈஸ்வர் சொன்னான். “ஹலோ

“நான் பரமேஸ்வரன் பேசறேன். நான் மறுபடி தொந்திரவு செய்யறதுக்கு மன்னிக்கணும். எந்த உறவு முறையும் வச்சு நான் பேச வரலை. இறந்து போன ஒரு நல்ல மனுஷன் கடைசியா உனக்கு சொல்லச் சொன்ன ஒரு விஷயத்தைத் தெரிவிக்கிற ஒரு சாதாரண ஆளா என்னை நீ நினைச்சுகிட்டா போதும்...

இறந்த தந்தை மூலமாகக் கேட்ட தகவல்களை வைத்தே தாத்தாவை மிகத் துல்லியமாக அறிய முடிந்த ஈஸ்வருக்கு அவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுவது சாதாரண விஷயம் அல்ல என்பது புரிந்தது. தன் ஈகோவையும், சுய கௌரவத்தையும் ஒதுக்கி விட்டுத் தாழ்ந்து வருவது அவருக்கு முதல் முறையாகக் கூட இருக்கலாம். அமைதியாக அவன் சொன்னான். “சொல்லுங்க

பசுபதி கடைசியாகச் சந்தித்த போது சொன்னதை அப்படியே ஈஸ்வரிடம் பரமேஸ்வரன் ஒப்பித்து விட்டு சொன்னார். “எங்கண்ணா நேத்து இறந்துட்டார்.. அதனால தான் உன்னை நான் தொந்திரவு செய்ய வேண்டியதாய் போச்சு...

பசுபதி சொன்னதாக பரமேஸ்வரன் சொன்ன விஷயங்கள் ஈஸ்வருக்குத் திகைப்பைத் தான் ஏற்படுத்தின. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இயல்பாகக் கேட்டான். உங்கண்ணா எப்படி இறந்தார்?

“அவரைக் கொன்னுட்டாங்க... சொல்லும் போது பரமேஸ்வரன் குரல் கரகரத்தது.

“என்ன?...ஈஸ்வருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“ஆமா. அவரைக் கொன்னுட்டு அந்த சிவலிங்கத்தை எடுத்துட்டு போயிட்டாங்க

ஈஸ்வருக்கு அதிர்ச்சி அதிகரித்தது. பெரிய தாத்தாவைப் பற்றியும், அந்த சிவலிங்கத்தையும் பற்றியும் அவன் தந்தை நிறையவே அவனிடம் சொல்லி இருக்கிறார். அந்த சிவலிங்கத்தைப் பற்றி சின்ன வயதில் கேள்விப்பட்ட சில தகவல்களை அப்போது அவனால் நம்பக்கூட முடிந்ததில்லை. ஆனால் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் அவன் நடத்தின சில ஆராய்ச்சிகளிற்குப் பிறகு கேள்விப்பட்டதில் சிலதெல்லாம் உண்மையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு என்று உறுதியானது. ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் அவன் மனதில் பலமுறை எழுந்ததுண்டு. கேள்விப்பட்டதும், ஆராய்ச்சிகள் சொன்னதும் உண்மை தானா என்று நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததுண்டு.....

திகைப்புடன் ஈஸ்வர் பரமேஸ்வரனிடம் சொன்னான். “எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அந்த சிவலிங்கத்தை அப்படி சாதாரணப்பட்ட யாரும் தூக்கிட்டு போக முடியாதே. அதுவும் அவரைக் கொலை செய்தவன் அதைக் கண்டிப்பாக தூக்கிட்டு போக முடியாதே.

பரமேஸ்வரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர் மனதில் கற்பனை செய்திருந்த அந்த அமெரிக்கப் பேரன் அந்த சிவலிங்கத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்தவன் போல் கேட்பான் என்று அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. திகைப்பு நீங்காதவராகச் சொன்னார். அவரைக் கொலை செய்ததாக போலீசார் நினைக்கிற ஆள் வெளியே செத்துக் கிடந்தான். அவன் எப்படி செத்தான்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால் தான் தெரியும்....

ஈஸ்வர் தனக்குள் பேசிக் கொள்பவன் போல சொன்னான். “அப்படின்னா இந்தக் காரியத்தை செஞ்சவங்க அந்த சிவலிங்கத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சவங்களா தான் இருக்கணும். அதனால தான் அவரைக் கொலை செய்ய ஒரு ஆளையும், அந்த சிவலிங்கத்தை எடுத்துகிட்டு போக வேறு ஒரு ஆளையும் ஏற்பாடு செய்திருக்காங்க....

பரமேஸ்வரனுக்கு பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. அவரை விட அதிகமாக அவன் அந்த சிவலிங்கத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருந்ததாகத் தோன்றியது. அவர் சொன்னார். “எனக்கு ஒன்னுமே புரியலை. போலீஸ்காரங்க அந்த சிவலிங்கத்துக்குள்ளே ஏதாவது விலைமதிக்க முடியாத பொருளை  நான் ஒளிச்சு வச்சிருக்கேனான்னு கூட சந்தேகப்படற மாதிரி இருக்கு. அதைத் தெரிஞ்சுக்க பலவிதமா என்னைக் கேள்வி கேட்டாங்க

“அதுல ஒளிஞ்சிருக்கறது விலைமதிக்க முடியாத பொருளில்லை, விலை மதிக்க முடியாத சக்தின்னு சிலர் நம்பறாங்க...

பரமேஸ்வரனுக்கு லேசாக எரிச்சல் வந்தது. “நான் அந்த சிவலிங்கம் எங்க கிட்ட வந்த நாள்ல இருந்து பார்த்துட்டு வந்திருக்கேன். அதுல நான் ஒரு சக்தியையும் இதுவரைக்கும் பார்த்ததில்லை. நீ சொல்றத பார்த்தா அந்த வதந்திகளை நம்பிட்டு தான் யாரோ அந்த சிவலிங்கத்தைக் கடத்திட்டு போயிருக்காங்கன்னு தோணுது....

ஈஸ்வர் அவருக்கு விளக்கப் போகவில்லை. அவர் சொல்வதும் பொய்யில்லை. அவர் எந்த சக்தியையும் உணர்ந்ததில்லை தான். ஒரு மரக்கட்டை எத்தனை காலமானாலும் மின்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது. மின்சாரம் எதிலெல்லாம் ஊடுருவ முடியுமோ அதனால் மட்டுமே அதன் சக்தியைப் புரிந்து கொள்ள முடியும்....

அவன் ஏதாவது சொல்வான் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவன் பேச்சை முடிக்கும் விதமாக “வேறொண்ணும் இல்லையே? என்று கேட்டான்.

அவருக்கு வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை. இல்லை...என்றார்.

அவன் போனை வைத்து விட்டான்.
                            
                                    ***********

அந்த முதியவர் கண்களை மூடிக் கொண்டு வஜ்ராசனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு எண்பதிற்கும் மேற்பட்ட வயதிருக்கும். அவர் வயது நரைத்த தலைமுடியிலும், தாடியிலும் தெரிந்ததே ஒழிய ஒடிசலான உறுதியான உடலில் தெரியவில்லை.  அவர் கண்களைத் திறக்கும் வரை அந்த மனிதன் மிகப் பொறுமையாகக் காத்திருந்தான். இந்த அரை மணி நேரத்தில் அவன் எட்டு தடவை உட்கார்ந்திருந்த நிலையை மாற்றிக் கொண்டு விட்டான். அவன் அங்கு வந்து அரை மணி நேரம் ஆகி விட்டிருந்தது. ஆனால் இந்த அரை மணி நேரத்தில் அவர் உட்கார்ந்த நிலையிலிருந்து கொஞ்சம் கூட அசையவில்லை என்பதைக் கவனித்த அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை ஒவ்வொரு முறை அவன் பார்க்கும் போதும் ஏதாவது ஒரு விஷயத்திற்காகவாவது அவனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிந்ததில்லை....

அவர் கண்களை மெல்லத் திறந்தார். அவனைப் பார்த்தவுடன் கேட்டார். “என்ன?

அந்த மனிதன் தயங்கித் தயங்கி சொன்னான். “அந்தப் பையன் ஓடிட்டான்... சிவலிங்கத்தை நாம சொன்ன இடத்துல வச்ச பிறகும் அவன் ஜுரமும் குறையலை, மந்திரம் ஜபிக்கறதை அவன் விடவும் இல்லை... ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்னு நினைச்சு அவனைத் தனியா ரூம்ல விட்டோம். இன்னைக்கு காலைல பார்க்கறப்ப அவன் இல்லை....அவன் போகக் கூடிய இடம் எல்லாம் தேடிப் பார்த்துட்டோம். ஆனா அவனைக் கண்டுபிடிக்க முடியல

கண்களை மூடி சிறிது நேரம் இருந்த அவர் அமைதியாகச் சொன்னார். “அவனைப் பத்தி கவலைப்பட வேண்டியதில்லை. விட்டுடு

அவன் தலையசைத்து விட்டு அவனுக்கு இப்போதுள்ள பெரிய பிரச்சினையைச்  சொன்னான். .... அந்தக் கொலைகாரன் மர்மமா செத்ததாலயும், இவன் இப்படி ஆகி ஓடிட்டதாலயும் மத்தவங்க யாரும் அந்த சிவலிங்கம் பக்கம் போகவே பயப்படறாங்க. நித்ய பூஜை செய்யக்கூட முன்வர மாட்டேங்குறாங்க...

அந்த முதியவர் யோசிக்க ஆரம்பித்தார். அந்த சிவலிங்கத்தைப் பற்றி கேள்விப்பட்ட சில விஷயங்கள் கற்பனை இல்லை என்பதை நடக்கின்றது எல்லாம் உறுதிப்படுத்துவது போலத் தோன்றியது.... அவர் முகத்தில் ஒரு மர்மப் புன்னகை வந்து போனது.


(தொடரும்)

- என்.கணேசன்

Monday, August 20, 2012

இயக்குவது இறைவனா, ஈகோவா?


கீதை காட்டும் பாதை 19
இயக்குவது இறைவனா, ஈகோவா?

கர்மம் இன்னொரு விதத்திலும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பெற்ற ஞானம் உண்மையானது தானா என்று பரிட்சித்துப் பார்க்க உதவும் உரைகல்லாகவும் கர்மம் விளங்குகிறது. செயல் புரியும் போது போது தான் பெற்றிருப்பது ஞானமா இல்லை வெறும் பிரமையா என்று புரியும். ஆசிரமத்திற்கு சென்று தியானம் கற்றுக் கொண்டு அந்த அமைதியான சூழ்நிலையில் தங்கி இருக்கும் போது மனம் அமைதி அடையலாம். அதை வைத்து ஞானம் பெற்று விட்டதாக ஒருவருக்குத் தோன்றலாம். ஆனால் வெளியுலகிற்கு வந்து செயல்படும் போது தான் வெளியுலக ஆரவாரத்திலும், நிர்ப்பந்தங்களிலும் கூட அந்த அமைதி தங்குகிறதா, இல்லை காணாமல் போகிறதா என்பது புரியும்.

இமயமலையில் இயற்கையின் பேரமைதியில் தியானம் கைகூடுவது பெரிய விஷயமல்ல. அந்த தியானம் ஒரு குழந்தையின் அழுகுரலில் கலைந்து மனதில் எரிச்சல் கிளம்பினால் தியான மார்க்கத்தில் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று அர்த்தம். சத்சங்கத்திலும், எதிர்ப்புகள் அற்ற சூழலிலும் மனம் அமைதியாக இருப்பது பெரிய விஷயமல்ல. கோபத்தோடு ஒருவன் வந்து திட்டினாலோ, சிறுமைப்படுத்தினாலோ மனம் கொதிக்க ஆரம்பித்தால் பெற்ற ஞானம் இன்னும் போதவில்லை என்று அர்த்தம். இது போல கர்மம் புரிகையில் தான், வெளியுலக வாழ்க்கையில் பங்கு கொள்ளும் போது தான், ஞானம் பரிட்சிக்கப்படுகிறது. அதில் குறைபாடு இருந்தால் அது சுட்டிக் காட்டப்படுகிறது. எனவே இந்த வகையிலும் ஞான மார்க்கத்திற்கு கர்மம் உதவுகின்றது.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

கர்மயோகத்தைக் கடைபிடித்து ஆத்மசுத்தியை அடைந்து மனத்தையும், மற்ற புலன்களையும் வெற்றி கொண்டு அனைத்து உயிர்களிலும் உள்ள ஆத்மாவைத் தன் ஆத்மாக உணர்கிறவன் கர்மங்களைச் செய்தாலும் அவைகளில் ஒட்டுவதில்லை.

உண்மையை உணர்ந்த யோகி பார்த்தாலும், கேட்டாலும், தொட்டாலும்,  முகர்ந்தாலும், சாப்பிட்டாலும், நடந்தாலும், தூங்கினாலும், மூச்சு விட்டாலும் புலன்கள் தங்களுக்குரிய விஷயங்களில் இருக்கின்றன என்பதையும், செயல்புரிவது தானல்ல என்பதையும் அறிவான்.

கர்மயோகத்தினால் மனம் தூய்மையாகும். மனம் தூய்மையாகும் போது ஆத்ம ஞானம் சுலபமாகக் கைகூடும். புலன்கள் ராஜாங்கம் செய்யாமல் பார்த்துக் கொள்வது எளிதாகும். நான்என்ற ஈகோ அழிந்து போகும். அதன் பின் அனைத்து உயிர்களிலும் தன்னிடம் உள்ள ஆத்மாவையே ஒருவனால் காண முடியும். இது தான் ஞானம்.

இன்று “நான் கடவுள்என்று சொல்லிக் கொள்ளும் துறவிகள் அதிகமாகி விட்டார்கள். சிலர் வாய் விட்டுச் சொல்லா விட்டாலும் கிட்டத்தட்ட கடவுள் போலவே காட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் கடவுள் தன்மை எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் அது தன்னிடம் மட்டும் உள்ள தனித்தன்மை என்று நினைப்பது அஞ்ஞானமே. “நான் கடவுள்என்று சொல்லிக் கொள்பவர்களில் 99% பேர் அந்த இரு சொற்களில் கடவுளைக் காட்டிலும் “நானிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அஞ்ஞானிகளே. தன்னிடம் உள்ள கடவுளை அடுத்தவனிடம் காண முடியாத அஞ்ஞானக் குருடர்களே. சாதாரண மனிதர்களிடம் உள்ள ஈகோவை விட, அறியாமையை விட இவர்களின் ஈகோவும், அறியாமையும் பல மடங்கானவை என்றே சொல்ல வேண்டும்.

உண்மையான கர்மயோகி ஞானத்தையும் இயல்பாகவே பெற்று விடுவதால் அவன் செய்யும் செயல்களில் “நான்என்ற அகந்தை இருப்பதில்லை. செயல்கள் செய்யும் போது அதைத் தான் செய்வதாக நினைப்பதில்லை. செயல்களில் “நான்பின்னிப் பிணைந்திருக்காததால் அதன் விளைவுகளாலும் அவன் அலைக்கழிக்கப்படுவதில்லை. எல்லாம் அவன் செயல் என்று வார்த்தைகளால் மட்டுமல்லாமல் நிஜமாகவே உணர்ந்து அமைதியாக அவனால் வாழ முடிகிறது.

கனவில் வரும் நிகழ்வுகள் பாதிப்பது விழிப்படைந்தவுடன் நின்று விடுகின்றது. அதே போல அறியாமை உறக்கத்திலிருந்து விழிப்படைந்த நிலையில் உள்ளவனை அவன் பங்கு பெறும் உலகவாழ்க்கை பாதிப்பது நின்று விடுகிறது. 

கர்மயோகத்தின் சிறப்பைச் சொல்லி சலிக்காத ஸ்ரீகிருஷ்ணர் மேலும் சொல்கிறார்.

யார் தனது கர்மங்களை எல்லாம் பிரம்மத்திற்கு அர்ப்பணம் செய்து, பற்றின்றி செயல் புரிகிறானோ அவன் தாமரை இலையிலுள்ள தண்ணீர் போல பாவத்தால் களங்கப்படுவதில்லை.

சரீரத்தாலும், மனத்தாலும், புத்தியினாலும், புலன்களாலும், பற்றுதலில்லாமல் ஆத்ம சுத்திக்காகவே யோகிகள் கர்மத்தை மேற்கொள்கிறார்கள்.

கர்மயோகி கர்மபலனைத் துறந்து நிலையான சாந்தியை அடைகிறான். அப்படி இல்லாதவன் ஆசையால் தூண்டப்பட்டு பலனில் பற்று கொண்டு கர்மங்களால் கட்டுப்படுகிறான்.

ஒரு நீர்நிலையில் உள்ள நீரின் அளவு எந்த அளவில் இருந்தாலும் கூட அந்த நீரால் தாமரை இலையை ஈரப்படுத்தி விட முடிவதில்லை. தண்ணீரிலேயே இருந்தாலும் அதில் பாதிக்கப்படாமல் இருக்கும் தாமரை இலை போல உலக வாழ்க்கையிலேயே இருந்தாலும் கூட கர்மயோகி பாதிக்கப்படுவதில்லை. காரணம் அவன் எந்த செயலையும் தன் தனிப்பட்ட லாப நஷ்டக் கணக்கை வைத்துக் கொண்டு செய்வதில்லை. செய்பவன் இறைவன், தான் ஒரு கருவி மாத்திரமே என்ற எண்ணத்தில் அத்தனையையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பற்றில்லாமல் செயல்படுகிறான்.

உடல், மனம், அறிவு, புலன்கள் இவை எல்லாமே சும்மா இருக்க முடியாதவை. ஏதாவது வகையில் செயல்படத் துடிப்பவை. எதற்காகப் பிறந்தோம் என்பதை உணர்ந்து அதற்கான செயல்களாக அவை இருக்கும்படி பார்த்துக் கொள்பவன் தான் கர்மயோகி. அப்படி செயல்படும் போது செய்கின்ற எல்லாமே இறைவன் ஏற்படுத்தித் தந்தவை, செய்பவன் இறைவனே, விளைவுகள் இறைவனின் திருவுள்ளத்தின் படியே ஏற்படுகின்றன என்கிற மனப்பக்குவம் வந்து விடுகிறது. சந்தோஷப்படவோ, துக்கப்படவோ “நான்என்ற ஈகோவிற்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. அதனால் தான் அவன் நிலையான சாந்தியை அடைகிறான்.

கர்ம யோகம் பிடிபடவில்லையானால், ஒருவன் செயல்களில் “நான்என்ற ஈகோ புகுந்து விட்டால் அதனுடன் விருப்பு, வெறுப்பு முதலான அனைத்து இரட்டை நிலைகளும் புகுந்து விடுகின்றன. அலைக்கழித்தல் ஆரம்பமாகி விடுகின்றது. நினைத்தபடி நடக்கிற போது கர்வத்தோடு கூடிய ஆர்ப்பரிப்பு, எதிர்மாறாக நடக்கும் போது துக்கத்தோடு கூடிய அழுகை என்று மாறி மாறி மனிதன் அலைக்கழிக்கப்பட ஆரம்பிக்கிறான். விளைவுகளால் அவன் கட்டுப்பட நேரிடுகிறது. ஒரு கணமும் நிம்மதியாக இருக்க அவனை அந்த “நான்அனுமதிப்பதில்லை. சாங்கிய யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது போல ஆசையிலிருந்து அழிவு வரை மனிதன் பெருவெள்ளத்தில் சிக்கிய துரும்பாக பயணிக்க நேர்ந்து விடுகிறது.

நான்என்ற அகந்தைக்கு எல்லாமே அறிந்தது போலவும், எல்லாமே தன்னால் முடியும் என்பது போலவும், எல்லாவற்றிற்கும் தன்னிடம் பதில் இருப்பது போலவும் அபிப்பிராயம் இருக்கும். எதுவும் எப்படி நடக்க வேண்டும் என்ற முடிவான அபிப்பிராயமும் இருக்கும். அதனாலேயே அதன் செயல்பாட்டில் இறைவனைக் கூட அனுமதிக்க அதனால் முடிவதில்லைமுழுவதுமாக அந்த நானின் கட்டுப்பாட்டில் நடக்கும் செயல்கள் எத்தனை தான் துக்கத்தைக் கொடுக்கும் விதமாக அமைந்தாலும் அதனால் விலக முடிவதில்லை. இந்த விலக முடியாத தன்மையிலேயே அத்தனை பிரச்சினைகளும் இருக்கிறது என்பதை அது உணர்வதில்லை.

மெத்தப்படித்த ஒரு பண்டிதர் ஒரு ஞானியைப் பார்க்கச் சென்றார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது பண்டிதர் தான் அறிந்ததையெல்லாம் கர்வத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். உலகில் இருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவரிடம் பதில் இருந்தது. எது எது எப்படிச் செய்ய வேண்டும், எப்படி நடைபெற வேண்டும் என்று எல்லாம் பல மேற்கோள்கள் காட்டி ஞானிக்கு விளக்கினார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஞானி சொன்னார். “நீங்கள் பிறப்பதற்கு முன் இறைவன் எப்படி இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருந்தான் என்பது தான் எனக்கு வியப்பாக இருக்கிறது

பாதை நீளும்.....

- என்.கணேசன்




Thursday, August 16, 2012

பரம(ன்) ரகசியம்! - 5


ரமேஸ்வரன் தாயிற்கு விளக்க ஆரம்பித்தார்.

தோட்ட வீட்டிற்கு அவர்கள் ஒரு வேலையாள் வைத்திருந்தார்கள். அவன் காலை வந்து இருந்த வேலைகள் செய்து விட்டு மதியம் சென்று விடுவான். எப்போதாவது கூடுதல் வேலை இருந்தால் மட்டுமே அவன் மாலை வரை இருப்பான். அந்த வேலைக்காரன் சம்பளம் வாங்க மட்டும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி பரமேஸ்வரனிடம் வருவான். அவனிடம் பரமேஸ்வரன் அதிகம் பேசியதோ, விசாரித்ததோ இல்லை. அதற்கான அவசியம் இருந்ததாக அவர் நினைத்ததில்லை. இன்று காலையில் முதலில் பிணத்தைப் பார்த்து விட்டு அழைத்தவன் அவன் தான். குடும்பத்தினரை விட அதிக நேரம் பசுபதியுடன் இருந்தவன் என்பதால் இன்று போலீசார் அவனிடம் இரண்டு மணி நேரமாவது விசாரணை நடத்தி இருப்பார்கள். அவன் அவர்களிடம் என்ன சொன்னான் என்பது தெரியாது. ஆனால் அவன் வேலையை முடித்து விட்டுப் போன பிறகு யாராவது வந்து போனால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. 


யாரெல்லாம் வந்து போவார்கள் என்று போலீசார் கேட்டதற்கு யாரும் வந்து போக வாய்ப்பில்லை என்று அவர் பதில் சொல்லி இருந்தாலும் இப்போது அதில் அவருக்கும் சந்தேகம் வர ஆரம்பித்தது. அண்ணனாக எதையும் சொல்லவில்லை. அவராக எதையும் கேட்டதும் இல்லை......

உன் கிட்ட எப்பவாவது பசுபதி அந்த சித்தரைப் பத்தி பேசி இருக்கானா?ஆனந்தவல்லி கேட்டாள்.

“இல்லை. அவரைப்பத்தின்னு இல்லம்மா எதைப்பத்தியும் அதிகம் அவன் பேசினதில்ல. எப்ப போறப்பவும் பேசறது நான் தான். அமைதியா அண்ணா நான் சொல்றதை எல்லாம் கேட்டுகிட்டு மட்டும் இருப்பான். அதிசயமா அவன் அதிகம் பேசினது கடைசி ரெண்டு தடவை தான். உன்னைக் கூட்டிகிட்டு போனப்பவும், அதற்கு அடுத்ததா நான் கடைசியா அவனை சந்திச்சப்பவும்....

ஆனந்தவல்லி ஆர்வத்துடன் கேட்டாள். “கடைசியா நீ சந்திச்சப்ப அவன் என்ன சொன்னான்.....

பரமேஸ்வரன் உடனடியாக பதில் சொல்லவில்லை. அவர் பின் பேசிய போது அவர் குரல் கரகரத்தது. “அண்ணா சாவு வரும்னு அப்பவே எதிர்பார்த்திருந்த மாதிரி இருந்துச்சும்மா. அவன் தன்னோட சாவைப் பத்தியும், அந்த சிவலிங்கத்தைப் பத்தியும் பேசினான்....

ஆனந்தவல்லி திகைப்புடன் இளைய மகனைப் பார்த்தாள். “அப்புறம் ஏண்டா என் கிட்ட அன்னைக்கே சொல்லல...

அப்ப நான் அதை சீரியஸா நினைக்கலம்மா என்றார் பரமேஸ்வரன்.

எழுபது வயதானாலும் சர்க்கரை, இரத்த அழுத்தம், வேறு உடல் பிரச்சினைகள் எதுவும் இல்லாத பசுபதி அந்த கடைசி சந்திப்பில் அபூர்வமாக தன் மரணத்தைப் பற்றி தம்பியிடம் பேசினார். இனி அதிக காலம் வாழ்வது சந்தேகம் என்று சொன்னார். 

“எல்லா வியாதியும் இருக்கிற நானே இன்னும் சாவைப் பத்தி யோசிக்கல. நீ ஏன் அதைப் பத்தி பேசறே அண்ணா

“மரணம் வியாதி மூலமாய் தான் வரணும்கிற கட்டாயம் இல்லடா

அன்று அந்த வாக்கியத்திற்குப் பெரிய அர்த்தத்தைப் பார்க்க வேண்டும் என்று பரமேஸ்வரன் நினைக்கவில்லை.

பசுபதி பரமேஸ்வரனிடம் கேட்டார். “உன் பேரன் என்ன செய்யறான்?

மகளின் மகனைத் தான் கேட்கிறார் என்று நினைத்த பரமேஸ்வரன் “மகேஷ் எம்பிஏ செய்யறாண்ணாஎன்றார். அண்ணன் இது வரை அவருடைய குடும்ப நபர்களை விசாரித்ததில்லை. எனவே அவர் கேட்டது ஆச்சரியமாய் இருந்தது.

நான் அவனைக் கேட்கல. உன் மகனோட மகனைக் கேட்டேன்....

பரமேஸ்வரனுக்குத் திகைப்பு கூடியது. அவரே அந்த பேரனைப் பற்றி நினைத்ததில்லை. நினைக்க விரும்பியதுமில்லை. என்றைக்கு அவர் மகன் தன் சக விஞ்ஞானியான ஒரு தெலுங்குப் பெண்ணை அவருடைய விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டானோ அன்றே அவரைப் பொருத்தவரை இறந்து விட்டான் என்றே நினைத்தார். மகன் அமெரிக்காவிற்கு சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டதும், அவனுக்கு அங்கே ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் அவர் காதில் விழுந்தது. ஆனால் சம்பந்தமில்லாத நபர்களைப் பற்றிய தகவல்கள் போல அவர் அதை எடுத்துக் கொண்டார். அதனால் மகனுக்கு மகன் பிறந்த விஷயத்தைக் கூட அவர் அண்ணனுக்குத்  தெரிவிக்கவில்லை. சென்ற வருடம் அவர் மகன் இறந்து விட்டதாக அவர் மருமகள் போனில் தெரிவித்தாள். அப்போது அவர் சொன்னார். “என் மகன் செத்து இருபத்தி ஆறு வருஷம் ஆச்சு. நீங்க யாரைச் சொல்றீங்கன்னு எனக்குத் தெரியல

அந்த அளவு மனதால் அறுத்து விட்ட உறவை அண்ணன் ஏன் கேட்கிறார் என்று நினைத்தவராய் “தெரியல அண்ணா. இப்ப அவங்களோட எனக்கு எந்த தொடர்புமே இல்லை என்றார். கூடவே அப்படி ஒரு பேரன் அமெரிக்காவில் இருக்கிறான் என்பதை இவருக்கு யார் சொல்லியிருப்பார்கள் என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. ஆனால் அவர் அதை வாய் விட்டு அண்ணனிடம் கேட்கவில்லை.

ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னா இந்த சிவலிங்கத்தை அவன் கிட்ட சேர்த்துடு. இது இனி அவனுக்கு பாத்தியப்பட்டது... ஒரு வேளை இந்த சிவலிங்கத்துக்கு ஏதாவது ஆனாலும் கூட அவனுக்குத் தெரிவிச்சுடு

பரமேஸ்வரனுக்கு அண்ணன் அன்று பேசுவதெல்லாம் விசித்திரமாக இருந்தது. அண்ணனுக்கு என்ன ஆயிற்று. என்னென்னவோ பேசுகிறானே? என்று நினைத்தவராய் சொன்னார். “அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து செட்டிலானதால ஒரு அமெரிக்கனாவே அவன் வாழ்ந்துட்டு இருப்பான் அண்ணா. அவன் இந்த சிவலிங்கத்தை வச்சு என்ன பண்ணப் போறான்

“இருக்கிற மண் எதுவானாலும் விதை நம் வம்சத்தோடதுடா. எப்படியாவது இதை அவன் கையில சேர்த்துடு...

மகன் இறந்ததைச் சொன்ன மருமகளிடம் “என் மகன் செத்து இருபத்தி ஆறு வருஷம் ஆச்சு. நீங்க யாரைச் சொல்றீங்கன்னு எனக்குத் தெரியல என்று சொன்னதையும், மகனின் மகன் பெயர் என்ன என்று கூடத் தெரியாது என்பதையும் பரமேஸ்வரன் அன்று அண்ணனிடம் சொல்லப் போகவில்லை.

உனக்குப் பிறகு பேசாமல் இதை ஏதாவது கோயிலுக்குக் கொடுத்துடறது நல்லது அண்ணா..என்றார் பரமேஸ்வரன். சிலைக்கு ஏதாவது ஆனாலும் என்பதற்கு அவர் அன்று பெரிய முக்கியத்துவம் தரவில்லை. அந்தக் கல் சிலைக்கு என்ன ஆகப் போகிறது?

இது அவன் கைக்குப் போகணும்கிறது விதி. அவன் கிட்ட போனதுக்கப்புறம் அவன் அதை என்ன வேணும்னாலும் செஞ்சுக்கட்டும்.... பசுபதி சொன்னார்.

மறுபடி மறுக்க பரமேஸ்வரன் முற்படவில்லை. முதலில் அண்ணாவிற்கு ஏதாவது ஆனால் தானே இத்தனையும் என்று நினைத்தவராய் அந்தப் பேச்சை அத்துடன் விட்டார்.

கிளம்பிய போது பசுபதி எப்போதுமில்லாத வாத்சல்யத்துடன் தம்பியின் முதுகைத் தடவிக்கொடுத்தார். அதுவே அண்ணனுடன் இருந்த கடைசி தருணம்... இப்போதும் அண்ணன் கை தன் முதுகில் இருப்பது போல பரமேஸ்வரன் உணர்ந்தார். அண்ணனுடனான கடைசி சந்திப்பைத் தாயிடம் தெரிவிக்கையில் பரமேஸ்வரன் கண்கள் லேசாகக் கலங்கின. 

எல்லாம் கேட்ட ஆனந்தவல்லிக்கு நிறைய நேரம் பேச முடியவில்லை. கேட்டதெல்லாம் அவளுக்கு மலைப்பையும் துக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தன.

பரமேஸ்வரன் தாயிடம் கேட்டார். “நான் என்ன செய்யணும்னு நினைக்கறம்மா நீ

“என் குழந்தை சாக யாரெல்லாம் காரணமா இருந்தாங்களோ அவங்கள நீ சும்மா விட்டுடக்கூடாது. அவங்களுக்கு தண்டனை கிடைச்சா தான் இந்த பெத்த வயிறுல பத்தி எரியற நெருப்பு அணையும்டா

“நான் போலீஸ் கமிஷனர் கிட்ட பேசிட்டேன்மா. ஒரு திறமையான ஆள் கிட்ட இந்தக் கேஸை ஒப்படைக்கறதா சொல்லியிருக்கார். கண்டிப்பா சீக்கிரமே குற்றவாளிகளைப் பிடிச்சுடலாம்னு சொல்லியிருக்கார். நான் உன் கிட்ட கேட்டது அந்த சிவலிங்கத்தைப் பத்தி...

ஆனந்தவல்லி சிறிதும் யோசிக்காமல் சொன்னாள். “அந்த சிவலிங்கம் இத்தனை நாள் நம்ம குடும்பத்துக்கு செஞ்சதெல்லாம் போதும். தொலைஞ்சு போனது நல்லதே ஆச்சு. அது இன்னும் திரும்பக் கிடைச்சாலும் அதை வச்சு கொண்டாட வேண்டாம்டா...

அம்மா சொல்வது பரமேஸ்வரனுக்கு சரி என்றே பட்டது. அந்த முடிவுக்கு வந்தால் அமெரிக்காவில் வசிக்கிற அந்தப் பையனிடம் அது பற்றி பேச வேண்டியதில்லை. புதியதாய் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளத் தேவை இல்லை.... ஆனால் ....

பரமேஸ்வரன் ஆழமாய் யோசிப்பதைப் பார்த்த ஆனந்தவல்லி மெல்ல கேட்டாள். “நீ என்ன யோசிக்கிறே?

“அண்ணன் இத்தனை காலம் என் கிட்ட எதையுமே கேட்டதில்லை அம்மா. கடைசியா கேட்ட இதைக் கூட நான் செய்யலேன்னா நான் என்னையே மன்னிக்க முடியும்னு தோணலைம்மா

ஆனந்தவல்லிக்குப் புரிந்தது. அந்த சிவலிங்கம் அவ்வளவு சுலபமாய் அவள் குடும்பத்தை விட்டு நிரந்தரமாகப் போகப் போவதில்லை. அவள் கணவர் வாழ்ந்த வரை அடிக்கடி ஒன்று சொல்வார். “எல்லாம் சிவன் சித்தம்”. இப்போது நடப்பதும் அவன் சித்தமோ?

ஒன்றும் சொல்லாமல் தளர்ச்சியுடன் எழுந்தவள் சுவரைப் பிடித்தபடி தனதறைக்குச் சென்றாள்.

மறு நாள் காலை  பரமேஸ்வரன் தன் மகனின் நெருங்கிய நண்பர் தென்னரசுக்குப் போன் செய்து தன் அமெரிக்கப் பேரனுடைய போன் நம்பரை வாங்கினார். தென்னரசு கல்லூரிப் பேராசிரியராக இருக்கிறார். அவர் பரமேஸ்வரன் திடீரென்று கேட்டதற்கு மிகவும் ஆச்சரியப்பட்டது போல இருந்தது. ஒரு கணம் பேச்சிழந்த அவர் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் போன் நம்பரைத் தந்தார்.

பரமேஸ்வரன் தயக்கத்துடன் கேட்டார். “அவனுக்கு....தமிழ் தெரியுமா. நான் தமிழில் பேசினா அவனுக்குப் புரியுமா...

“அவனுக்கு தமிழ் நல்லாவே தெரியும் சார். அவன் தமிழ்ல பேசறதைக் கேட்டா அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பையன்னு யாரும் சொல்ல மாட்டாங்க

பரமேஸ்வரன் மீண்டும் தயக்கத்துடன் கேட்டார். “அவன்...அவன்.. பெயர் என்ன?

“ஈஸ்வர் சார்

ஈஸ்வர்.... அவருடைய மகன் தன் மகனிற்கு அவருடைய பெயரைத் தான் வைத்திருக்கிறான்....மகனின் நினைவுகளும், பழைய கோபமும் மனதில் ஒன்றை ஒன்று மேலோங்க சிறிது நேரம் கனத்த மனத்துடன் உட்கார்ந்திருந்து விட்டு பேரனுக்குப் போன் செய்தார்.

“ஹலோ- பேரனின் குரல் கம்பீரமாய் கேட்டது.

“ஹலோ... நான் உன் தாத்தா....பரமேஸ்வரன் இந்தியாவில் இருந்து பேசறேன்...

ஒரு சில வினாடிகள் மௌனம் சாதித்த ஈஸ்வர் சொன்னான். “ஹலோ நீங்க தப்பான ஆளுக்கு போன் பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன். எனக்குத் தெரிஞ்சு உங்க மகன் 27 வருஷங்களுக்கு முன்னாடியே இறந்துட்டார்னு நினைக்கிறேன். அவர் இறந்து ஒரு வருஷம் கழிஞ்சு பிறந்தவன் நான். அதனால நான் உங்க பேரனாய் இருக்க வாய்ப்பில்லை

ஈஸ்வர் போனை வைத்து விட்டான். பரமேஸ்வரன் ஓங்கி அறையப்பட்டது போல உணர்ந்தார்.

(தொடரும்)

- என்.கணேசன்