சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 9, 2012

பரம(ன்) ரகசியம்! - 4



யானத்தில் இருந்து திரும்பி வந்து நிறைய நேரம் ஆன பின்னும் கூட சகோதரன் மரணத்தை ஜீரணிக்க முடியாதவராய் பரமேஸ்வரன் தவித்தார். நள்ளிரவாகி விட்ட போதும் அவருக்கு உறக்கம் வரவில்லை.

பசுபதியின் மரணம் நிறைய கேள்விக்குறிகளை எழுப்பி இருந்தது. பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு, கைதாகி, சமீபத்தில் சிறையிலிருந்து தப்பி வந்த
ஒரு கொலையாளியின் பிணம் அந்தத் தோட்ட வீட்டின் உள்ளே மதில்சுவர் அருகே விழுந்து கிடந்தது பல குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தது. இன்னும் பிரேத பரிசோதனை மற்றும் கைரேகைத் தடய அறிக்கைகள் எல்லாம் வர வேண்டி இருக்கிறது என்றாலும் அவன் தான் பசுபதியைக் கொன்றிருக்க வேண்டும் என்ற அபிப்பிராயத்தில் தான் போலீசார் இருந்தார்கள். ஆனால் அவனை யாரும் கொன்ற அறிகுறிகள் இல்லை. அவன் எப்படி இறந்தான் என்பதை இனி வரும் பரிசோதனை முடிவுகள் தான் சொல்ல வேண்டும். அவன் முகத்தில் தெரிந்த பயம் தான் போலீசாரை ஆச்சரியப்படுத்தியது போல் இருந்தது. அவனை அறிந்த போலீசார் பயம் என்பது அவன் அறியாத உணர்ச்சி என்றார்கள்.  

அதே போல் போலீசாரை ஆச்சரியப்படுத்திய இன்னொரு விஷயம் பசுபதியின் மரணத்திலும் கலையாத பத்மாசனம். பசுபதியைப் பற்றி அவர்கள் நிறைய கேள்விகள் கேட்டார்கள். எல்லா விதமான யோகாசனங்களும் முறையாக அவர் அறிந்திருந்தார் என்றும் கடைசி வரை அவற்றை செய்து கொண்டிருந்தார் என்று மட்டும் பரமேஸ்வரன் சொன்னார்.

அடுத்தபடியாக போலீசாரின் கேள்விகள் அதிகம் சிவலிங்கத்தைச் சுற்றியே இருந்தன. அந்த சிவலிங்கம் மரகத லிங்கம், ஸ்படிக லிங்கம் போன்ற விலையுயர்ந்த லிங்கமா, இல்லை லிங்கத்திற்குள்ளே ஏதாவது விலை உயர்ந்தவற்றை மறைத்து வைத்திருந்தீர்களா, இல்லை விலை மதிப்பற்ற வரலாற்று சிறப்பு மிக்க புராதன லிங்கமா என்றெல்லாம் கேட்டார்கள். அப்படியெல்லாம் இல்லை என்று அவர் சொன்ன போது போலீசாருக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது அவர்கள் முகபாவத்திலேயே தெரிந்தது. இறந்தவருக்கு எதிரிகளும் கிடையாது, களவு போன பொருள் விலையுயர்ந்ததும் கிடையாது என்றால் கொலை நிகழக் காரணமே இல்லை என்று அவர்கள் நினைத்ததில் பரமேஸ்வரனுக்குத் தவறு சொல்லத் தோன்றவில்லை....

இன்னும் தூங்கலையா- தாயின் குரல் கேட்டு பரமேஸ்வரன் திரும்பினார். ஆனந்தவல்லி அவர் அறைக் கதவைப் பிடித்தபடி நின்றிருந்தாள். இந்த ஒரே நாளில் மேலும் பல வருடங்கள் கூடியது போலத் தளர்ந்து தெரிந்தாள்.

“தூக்கம் வரலம்மா. வா, உட்கார்

ஆனந்தவல்லி அவருடைய படுக்கையில் மெல்ல வந்து உட்கார்ந்தாள். கண்ணீரோடு சொன்னாள். “அவனுக்கு சாகப்போகிறது முதல்லயே தெரிஞ்சுடுச்சு. அதான் என்னை ஒரு தடவை பார்க்கணும்னு சொல்லி இருக்கான். அவனை அன்னைக்கு மட்டும் நான் போய் பார்க்காம இருந்திருந்தா இன்னைக்கு என்னையே என்னால மன்னிச்சிருக்க முடியாது. என் குழந்தை எனக்கு அந்தக் குறை இருந்துடக்கூடாதுன்னு தான் கூப்பிட்டு பேசியிருக்கான்

பரமேஸ்வரனுக்கும் அப்படியே தோன்றியது. இப்போதும் அம்மாவின் திட்டுகளை எல்லாம் மலர்ச்சி சிறிதும் குறையாத முகத்தோடு அண்ணன் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தது அவர் மனதில் பசுமையாக நினைவில் நின்றது. தாயைப் பார்த்தார். அவளும் மூத்த மகனுடன் கழித்த அந்தக் கடைசி கணங்களை மனதில் ஒருமுறை வாழ்ந்து பார்த்தது போல் இருந்தது. கண்கள் ஈரமாக அவள் பிறகு மெல்லக் கேட்டாள். போலீஸ் என்ன சொல்றாங்க?

அந்த சிவலிங்கத்திற்காகத் தான் இது நடந்திருக்கணும்னு நினைக்கிறாங்க

சிவலிங்கத்தைப் பற்றி சொன்னவுடனேயே ஆனந்தவல்லி மௌனமானாள். அம்மா ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்த பரமேஸ்வரன் சிறிது நேரம் பொறுத்திருந்து விட்டுக் கேட்டார்.

“அந்த சிவலிங்கத்தைப் பத்தி நாம நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். அதெல்லாம் உண்மையாய் இருக்குமாம்மா?

அந்தக் கேள்வியே அவளை சங்கடப்படுத்தியது போல் இருந்தது. சிறிது நேரம் பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டு “தெரியலையேடா....என்ற ஆனந்தவல்லி ஆதங்கத்துடன் சொன்னாள். “அந்த சிவலிங்கத்தை ஏதாவது கோயிலுக்குக் கொடுக்காமல் அந்த சித்தர் இங்கே கொண்டு வந்தது என்ன கர்மத்துக்குன்னு தெரியல. அதுவே அவனுக்கு எமனாயிடுச்சு பார்த்தியா

பரமேஸ்வரன் மெல்ல சொன்னார். “அம்மா அந்த சித்தரை இன்னைக்கு நம்ம தோட்ட வீட்டுல நான் பார்த்த மாதிரி இருந்துச்சு

ஆனந்தவல்லிக்கு மயிர் கூச்செறிந்தது. “என்னடா சொல்றே

“அண்ணா பிணத்தைப் பார்க்க வந்த கூட்டத்தோட கூட்டமா அவரும் நின்னிருந்த மாதிரி இருந்துச்சு

ஆனந்தவல்லி திகைப்புடன் மகனைப் பார்த்தாள். பின் சந்தேகத்தோடு சொன்னாள். “நீ பார்த்தது வேற யாரையாவது இருக்கும். நீ அந்த ஆளை சின்னதுல பார்த்தது. இப்ப எப்படி உனக்கு சரியா ஞாபகம் இருக்கும்.

பரமேஸ்வரன் யோசித்தபடியே சொன்னார். “பார்த்தது சின்ன வயசுலன்னாலும் அவரோட கண்களை மறக்க முடியாதும்மா. பிரகாசமா ஜொலிக்கற அந்தக் கண்களை மறுபடி இன்னைக்கு பார்த்த மாதிரி இருந்துச்சு. அந்த நேரமா பார்த்து மேயர் துக்கம் விசாரிக்க வந்தார். மேயர் கிட்ட பேசிட்டு திரும்பிப் பார்த்தா அவர் இருக்கல

ஆனந்தவல்லி திகைப்பு மாறாமல் சொன்னாள். “அந்த ஆள் இப்பவும் உயிரோட இருக்க முடியுமாடா? அப்பவே அந்த ஆளுக்கு வயசு கம்மியா இருக்கல. இப்ப இருந்தா அவருக்கு வயசு நூறுக்கு மேல இருக்குமேடா?

“சித்தர்களுக்கு எல்லாம் ஆயுசு அதிகமா இருக்கும்னு சொல்றாங்க

பரமேஸ்வரனின் கண்கள் மிகக்கூர்மையானவை. அவர் பார்த்தது போல் இருந்தது என்றால் பார்த்தே தான் இருக்க வேண்டும். ஆழ்ந்த யோசனையுடன் மகனைக் கேட்டாள். “அந்த ஆள் எதுக்குடா இப்ப வரணும்?

“தெரியலைம்மா

ஆரம்பத்திலிருந்தே தன் கணவர் ஆதரவு கொடுத்து வந்த சாமியார் கூட்டத்தை ஆனந்தவல்லியால் சகிக்க முடிந்ததில்லை. அதுவும் மூத்த மகன் துறவி போலவே வாழ ஆரம்பித்த பிறகு அது போன்ற ஆட்கள் தன் வீட்டுக்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் நுழையக் கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னவள் அவள். மீறி நடந்தால் நடப்பதே வேறு என்று எச்சரிக்கையும் செய்திருந்ததால் அவள் கணவர் அவள் சொன்னதை சோதித்துப் பார்க்க விரும்பவில்லை. அதன் பின் எந்த சிவனடியாரும் அந்த வீட்டுக்குள் நுழைந்ததில்லை.

ஆனால் ஆனந்தவல்லியால் அதை நினைத்து சந்தோஷப்பட முடிந்ததில்லை. மூத்த மகனை இழந்தது இழந்தது தானே. முதலெல்லாம் மகன் எப்படியானாலும் அவன் வழியில் சந்தோஷமாக இருக்கிறான், நன்றாக இருக்கிறான் என்கிற திருப்தியாவது அவளுக்கு இருந்தது. ஆனால் இப்போதோ முழுவதுமாகப் பறி கொடுத்ததை எண்ணுகையில் அவள் பெற்ற வயிறு பற்றி எரிந்தது.

ஆனந்தவல்லி அந்த சித்தர் அன்று வந்ததையும் இன்று வந்ததையும் எண்ணிப்பார்த்து விட்டு கண்கலங்க விரக்தியுடன் சொன்னாள். “அறுபது வருஷங்களுக்கு முன்னால் அந்த ஆள் வந்தப்ப என் மகன் வீட்டை விட்டுப் போனான். இப்ப வந்தப்ப அவன் உலகத்தை விட்டே போயிட்டான்...


பரமேஸ்வரனும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்திருந்தார். அறுபது வருடத்திற்கு முன்பு வந்த சித்தர் இத்தனை காலம் கழித்து மறுபடி பசுபதியின் மரணத்திற்குப் பின் வந்திருக்கிறார் என்று தான் நினைக்கத் தோன்றி இருந்தது. ஆனால் யோசித்துப் பார்த்த போது அப்படியே இருந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்று தோன்ற ஆரம்பித்திருந்தது. அதைத் தாயிடம் வெளிப்படையாகச் சொன்னார்.



அறுபது வருஷங்களுக்கு முன்னாலயும், இப்பவும் அவரைப் பார்த்திருக்கோம். அதனால தெரிஞ்சுது.  ஆனா அந்த சித்தர் இடையில பல தடவை அண்ணன் கிட்ட வந்து போயிருக்கலாம். தோட்ட வீட்டுல நடக்கற முழுசும் நமக்கு தெரியறதில்லையேம்மா

ஆனந்தவல்லி திகைப்புடன் மகனைக் கேட்டாள். “என்னடா சொல்றே?


ரு கோயிலுக்குள்ள சூழலில் தான் அந்த வீடு இருந்தது. “ஓம் நமச்சிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரம் ஒலித்தகடின் மூலம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. பசுபதி பூஜித்து வந்த சிவலிங்கம் பல விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்தது. வில்வ இலைகளும், மலர்களும் அதை அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஊதுபத்தியின் நறுமணம் வீடெல்லாம் நிரம்பி இருந்தது. பேரமைதி அங்கே நிலவியது.

ஆனால் அதைத் தூக்கிக் கொண்டு வந்து அங்கே வைத்த இளைஞன் தான் அமைதியிழந்து தத்தளித்துக் கொண்டிருந்தான். இன்னமும் அந்த மந்திரத்தை அவன் உச்சரித்துக் கொண்டு தான் இருந்தான். அது தான் அவனை இன்னமும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அவன் இப்போது உறுதியாக நம்பினான். அவன் உடல் இப்போதும் அனலாய் கொதிக்கிறது. பாரஸ்டமால் மாத்திரைகள் பல விழுங்கியும் அவன் ஜூரம் குறைகிற மாதிரி தெரியவில்லை.

அந்த சிவலிங்கம் சாதாரண சிவலிங்கம் அல்ல என்பதை அவன் அனுபவம் சொன்னது. அந்த லிங்கத்தை ஆரம்பத்தில் அந்த தோட்ட வீட்டில் இருந்து தூக்கிய போது அவன் உணர்ந்த கனமே வேறு. அவன் காரில் அதை வைத்த போது உணர்ந்த கனமே வேறு. வினாடிக்கு வினாடி எடை கூடியது போல் இருந்தது. அதே போல காரில் இருந்து அதை மறுபடியும் எடுத்து இங்கே அந்த பூஜையறையில் வைப்பதற்குள் அவன் நிறையவே திணறி விட்டான். நல்ல தேக பலத்துடன் இருந்த அவனுக்கு இந்த சிவலிங்கத்தின் ஆரம்ப கனத்தைப் போல மூன்று மடங்கு சுலபமாகத் தூக்க முடியும். அப்படி இருக்கையில் கடைசியாக எடுக்க பெரும்பாடு பட்டது திகைப்பாகவே இருந்தது.

இரண்டு பிணங்களை இயற்கையில்லாத விதத்தில் பார்த்தது தான் அவனை பயமுறுத்தி விட்டதாக இரண்டு கார்களில் வந்தவர்களும் பேசிக் கொண்டது அவன் காதில் விழாமல் இல்லை. அதில் உண்மையும் இருந்தது. ஆனால் அதையும் மீறி அவனைப் பயமுறுத்தியது அந்த சிவலிங்கம். அந்த சிவலிங்கத்தின் கனம் அவன் கற்பனையல்ல, பிரமையும் அல்ல என்று அவன் உறுதியாக நம்பினான். ஏனென்றால் இப்போதும் அவன் கைகள் பயங்கரமாக வலித்தன. அந்த சிவலிங்கத்திற்கு ஏதாவது சேதம் ஆனால் கொன்று விடுவோம் என்று அவர்கள் பயமுறுத்தி இருந்தார்கள்.  எங்கே கீழே போட்டு உடைத்து விடுவோமோ என்று அதை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும் வரை பயந்தபடியே தான் அவனிருந்தான்.

அதற்கு அபிஷேக பூஜை செய்ய ஆரம்பித்த போது உடலில் லேசாக எரிச்சலும்  ஆரம்பித்தது அவன் திகிலை அதிகரித்திருந்தது. அதையெல்லாம் இப்போது நினைத்து பார்த்து பிரயோஜனமில்லை என்று எண்ணிக் கொண்டான். ஏழ்மையின் அடித்தளத்தில் இருந்த அவனுக்கு அந்த சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு வந்து அங்கே வைக்க இருபதாயிரம் ரூபாயும், தினசரி பூஜை செய்ய தினமும் ஆயிரம் ரூபாயும் தருவதாகச் சொன்ன போது சுலபமாக பணம் வருகிறதே என்று தான் அவன் ஏமாந்து ஒத்துக் கொண்டு விட்டான்.  மாதம் இரண்டாயிரம் சம்பாதிப்பதே பெரிய கஷ்டமான விஷயமாக இருந்த போது இத்தனை பணம் சம்பாதிக்க எத்தனை காலம் கஷ்டப்பட வேண்டி இருக்கும் என்று அவன் கணக்குப் போட்டதன் விளைவு தான் இத்தனைக்கும் காரணம்.

இப்போது ஆழம் தெரியாமல் இதில் இறங்கி விட்டோமோ என்ற சந்தேகம் அவனுள் பலப்பட ஆரம்பித்தது. காரில் அவனை அழைத்து வந்தவர்கள் இது போன்ற பிரச்சினைகளை அறிந்து வைத்திருந்து தானோ என்னவோ சிவலிங்கத்திலிருந்து சில அடிகள் தூரத்திலேயே தான் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை இருந்தார்கள். அவர்கள் இருவரும் இந்த சிவலிங்கத்தைத் தூக்க சக்தி இல்லாதவர்கள் அல்ல. அப்படி இருந்தும் அவர்கள் அவனுக்கு அந்த அளவு பணம் கொடுத்து இதை எல்லாம் செய்யச் சொல்லி இருப்பது அதில் உள்ள ஆபத்தை எண்ணித் தான் போல இருக்கிறது. அது ஆபத்தா  பேராபத்தா...? நல்ல திடகாத்திரமான அந்தக் கொலையாளி முகத்தில் தெரிந்த பீதியும், அவன் செத்துக் கிடந்த விதத்தையும் மறுபடி நினைக்க நினைக்க அவன் இதயத் துடிப்புகள் சம்மட்டி அடிகளாக மாற ஆரம்பித்தன. மாரடைப்பு வந்து தானும் செத்து விடுவோமோ என்று அவன் பயப்பட ஆரம்பித்தான்.


(தொடரும்)

- என்.கணேசன்

17 comments:

  1. மிக அருமை தொடருங்கள், எதிர்நோக்கியுள்ளேன்.

    ReplyDelete
  2. இன்னும் விறுவிறுப்பு கூடுகிறது...

    தொடருங்கள்... நன்றி...

    ReplyDelete
  3. ஸுந்தர்August 9, 2012 at 8:26 PM

    வாரா வாரம் படிக்க இந்த தொடரைப் படிக்க அடிக்‌ஷன் ஆகிறது போல தோணியதால் இனி மாதம் ஒரு முறை தான் படிக்கணும்னு நான் போன வாரம் தீர்மானித்தேன். ஆனால் இந்த வியாழன் என்னையும் அறியாமல் இதை படிக்க வைத்து விட்டது பரம ரகசியம். பிரமாதமாய் போகிறது. பாராட்டுக்கள் சார்

    ReplyDelete
  4. Super ! Thrilling !

    ReplyDelete
  5. நல்ல ஸ்பீடு, திகிலாவும் வேற இருக்கு!

    நடக்கிற சம்பவங்களை பார்த்தா சிவன் சிலை நிச்சயம் ஸ்படிக சிலையாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்! ஏனெனில் ஸ்படிகத்திற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு அதே போல அதனை கையாள்வதிலும் பேராபத்துகள் உண்டு! பொறுத்திருந்து பார்ப்போம்!

    ReplyDelete
  6. தொடருங்கள் , ஆர்வம் அதிகமாகிக்கொண்டே போகின்றது . நல்ல நடை . நன்றி

    ReplyDelete
  7. Pasupathiyin thai paavam....

    Sakthi
    Tiruppur

    ReplyDelete
  8. very very super and thrilling

    ReplyDelete
  9. மிக அருமை
    தொடருங்கள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அந்த சிவலிங்கம் சாதாரண சிவலிங்கம்
      அல்ல என்பதை அவன் அனுபவம் சொன்னது

      சிறப்பான தொடர் !

      Delete
  10. அருமை... ஒரு வாரம் காத்திருக்க முடியாது போலிருக்கிறதே.....

    ReplyDelete
  11. padika padika ..........thigil namaiyum thotrikolgirathu.....
    ungal nadai miga miga arumai.....

    ReplyDelete
  12. பிறர் பொருளுக்கு ஆசைப்பட்ட எவரும் நல்லா இருந்ததாக சரித்திரம் இல்லை.. ராவணன் பிறன் மனையை ஆசைப்பட்டான். அழிந்து போனான். நம் நாட்டின் மேல் படையெடுத்து நம் நாட்டின் பொக்கிஷங்கள் எல்லாம் சுருட்டிக்கொண்டு போன எவரும் நன்றாக இருந்ததில்லை. எப்போதோ படித்தது. சிவலிங்கம் பார்க்க சாதாரணமாக இருந்தாலும் அதன் தெய்வீகம் யாரும் அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. அப்படி அறிந்திருந்தால் அவர்களின் பேராசையில் இருந்து அவர்கள் தப்பித்து இருந்திருப்பார்கள். சிவன் கோயிலுக்கு சென்றாலே தட்டில் பைசா போட்டுவிட்டு தான் விபூதி இட்டுக்கொள்ளவேண்டும் என்று சொல்வார்கள்.. சிவன் சொத்து குல நாசம் சும்மாவா சொன்னார்கள்? பசுபதியின் மறைவு.... அந்த சிவலிங்கத்தை தூக்கிச்சென்ற இளைஞனின் நிம்மதியின்மையும் உடல்நலம் சரிவும் இதை உணர்த்துகிறது. கதை மிக அருமையாக நகர்கிறதுப்பா... தொடர்கிறேன்..

    ReplyDelete
  13. வலைச்சரம் வழியாக உங்கள் தளத்திற்கு வந்து படிக்க ஆரம்பித்தேன்.
    என்ன விறுவிறுப்பு. உடல் சிலிர்க்க படித்துக் கொண்டிருக்கிறேன்.
    மிக அருமையான தொடர். தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்......

    ReplyDelete