சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 28, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-51





மனதை ஒருமுனைப்படுத்துங்கள்

நீங்கள் எஜமானர், உடலும், மனமும் உங்கள் கருவிகள் என்பதை உணர்ந்து அந்த எண்ணத்தை மனதில் வேரூன்றச் செய்வதன் முக்கியத்துவத்தைப் பார்த்தோம். அடுத்த கட்டமாக அந்தக் கருவிகளை உங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்த முடிவது தான் உங்கள் எஜமானத்துவத்திற்கு அத்தாட்சி என்பதை உணருங்கள்.

உடலை முறையாகப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக முக்கியம். அது பழுதடைந்து விட்டால் மனதில் உடலைத் தவிர்த்து வேறு எந்த எண்ணமும் பலமாக எழ வாய்ப்பு குறைவு. உதாரணத்திற்கு கடுமையான தலைவலியோ, பல்வலியோ, வேறு பெரிய உபாதைகளோ இருக்கும் போது வேறு எதைப் பற்றியாவது சீரியசாக எண்ணி செயல்பட முடிகிறதா என்று பாருங்கள். அந்த உபாதைகள் சரியாகும் வரை அது முடியாது. எனவே உடல் பாதிக்கப்படும் போது மனமும் நாம் நினைத்தபடி இயங்க மறுக்கிறது என்பதால் இரண்டுமே நமக்கு எண்ணியபடி பயன்படாமல் போகின்றன. எனவே உடலை நமக்கு இடைஞ்சல் தராத அளவுக்காவது நல்லபடி வைத்துக் கொள்வது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு மிக முக்கியம்.

அடுத்ததாக மனம். சூரிய ஒளியை லென்ஸ் மூலமாக காகிதத்தின் ஒரு புள்ளியில் குவிக்கும் போது அந்தக் காகிதம் பற்றி எரிவதை பெரும்போலோர் சிறு வயதில் செய்து பார்த்திருப்போம். மனம் என்னும் கருவி சக்தி வாய்ந்ததாக மாறுவது நாம் விரும்பும் விதத்தில் அதை ஒருமுனைப்படுத்தும் போது. மனம் அதற்குப் பிடித்த செயலில் ஒருமுனைப்படுவது பெரிய விஷயமல்ல. பிடித்த சினிமா பார்க்கும் போது, நாவல் படிக்கும் போது, இசையைக் கேட்கும் போது எல்லாம் மனம் தானாக ஒருமுனைப்படும். பிடித்த அந்தக் காரியம் முடிந்த பிறகு தான் மனம் வேறு விஷயத்திற்கு நகரும். அப்படி பிடித்த விஷயத்தில் தானாக ஒருமைப்பட முடிந்த மனத்தை நம் கட்டளைப்படி நாம் சொன்ன விஷயத்தில் ஒருமைப்படுத்த முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோர் பெற வேண்டிய அடுத்த பயிற்சி.

ஏதாவது ஒரு சாதாரண பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் தினம் பார்க்கக்கூடிய பொருளாக இருக்கட்டும். உதாரணத்திற்கு பென்சிலை எடுத்துக் கொள்வோம். இனி அடுத்த சில நிமிடங்களுக்கு பென்சிலைத் தவிர நீங்கள் வேறு எதையும் நினைக்காமல் பென்சிலைப் பற்றியே சிந்தியுங்கள். உங்கள் முழுக்கவனமும் அதிலேயே இருக்கட்டும். சில வினாடிகளுக்கு மேல் அதில் கவனத்தைக் குவிப்பது ஆரம்பத்தில் முடியாத செயல். மனம் பென்சிலில் கவனம் வைக்க என்ன இருக்கிறது என்று சொல்லி சுவாரசியமான மற்றவற்றிற்குச் செல்ல அலைபாயும். ஆனால் மனதை திரும்பவும் பென்சிலிற்கே கொண்டு வாருங்கள். அதன் உருவம், நிறம், அளவு, உபயோகங்கள், என்று மனம் பென்சிலை சார்ந்த, பென்சிலை மையமாகக் கொண்ட விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள். சில வினாடிகளில் மனம் இதைப் பற்றி முழுவதும் நான் சிந்தித்து முடித்து விட்டாயிற்று. இனி சிந்திக்க வேறொன்றும் இல்லை என்று சொல்லும். ஆனாலும் விடாமல் பென்சிலுக்கு மனதைக் கொண்டு வாருங்கள். உங்கள் முழுக் கவனமும் பென்சிலைப் பற்றியதாக, பென்சிலிலிலேயே இருக்கட்டும். ஓரளவு மனம் ஒருமுனைப்பட ஆரம்பித்த பின் பயிற்சி நேரத்தை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கூட்டிக் கொண்டே வாருங்கள். புதிது புதிதாக பென்சிலைப் பற்றிய அதிக விவரங்களை அறிய ஆரம்பிப்பீர்கள்.

கவனிக்கும் திறனின் முக்கியத்துவத்துவம் அறிய ஒரு நிகழ்வைச் சொல்லலாம். தாவரம், விலங்கு முதலான உயிரின ஆராய்ச்சியாளரான லூயி அகாசிஸ் (Louis Agassiz) என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் அந்தத் துறையில் தலைசிறந்து விளங்கியவர். அவரிடம் கற்ற மாணவர்கள் கூர்ந்து கவனித்து அறிந்து கொள்வதிலும், நுண்ணிய அறிவிலும் வல்லவர்களாக இருந்தார்கள். ஒரு முறை அவரிடம் கற்க ஒரு புதிய மாணவன் வந்தான்.

அகாசிஸ் மீன் தொட்டியில் இருந்து ஒரு மீனை எடுத்து அந்த மாணவன் முன் வைத்து அதை மிக நுணுக்கமாகக் கவனித்து தன்னிடம் விளக்கமாகச் சொல்லச் சொல்லி விட்டு வெளியே போய் விட்டார். அந்த மாணவன் பல முறை பல விதமான மீன்களைப் பார்த்தவன். இந்த மீனோ மிக சாதாரணமான மீன். இதைக் கவனித்து விளக்கமாகச் சொல்ல என்ன இருக்கிறது என்று எண்ணினான். ஆனாலும் அவர் சொல்லியபடி அந்த மீனைக் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டான். மீனின் கண்கள், வால் பகுதி, வாய், செதிள்கள், பக்கவாட்டில் துடுப்பு போன்ற பகுதி என்று எல்லாவற்றையும் கவனித்து எழுதினான். சிறிது நேரத்தில் எல்லாம் அறிந்தாகி விட்டதாக நினைத்து வெளியே வந்து அகாசிஸைத் தேடினான். அவரைக் காணவில்லை.

மறுபடி உள்ளே வந்தவன் பொழுது போகாமல் அந்த மீனை வரைய ஆரம்பித்தான். வரையும் போது அந்த மீன் குறித்து இதற்கு முன் கவனிக்காத சில அதிகப்படியான தகவல்களை அவன் அறிந்தான். அதையும் குறித்துக் கொண்டான். பல மணி நேரம் கழித்து வந்த அகாசிஸிடம் தன் குறிப்புகளைக் காட்டினான். அகாசிஸ் திருப்தியடையவில்லை. இன்னும் நன்றாகவும் நுணுக்கமாகவும் கவனிக்கச் சொல்லி விட்டுப் போனார். மாணவனுக்கு ஒரே ஏமாற்றம். இந்த ஆளிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று நொந்து கொண்டான். ஆனாலும் மேலும் நுணுக்கமாக அதைக் கவனிக்க ஆரம்பித்தான். இதற்கு முன் சாதாரணமாகத் தெரிந்த ஓரிரு விஷயங்கள் இப்போது மிக நுண்ணிய அளவில் வித்தியாசமாக இருக்கக் கண்டான். அவற்றைக் குறித்துக் கொண்டான். அந்த நாளின் இறுதியில் மறுபடி வந்த அகாசிஸிடம் அவற்றைக் காட்டினான். அப்போதும் அவர் திருப்தியடையவில்லை. அது போல் மூன்று நாட்கள் அவனை அந்த மீனைக் கவனிக்க வைத்தார். மூன்று நாட்களின் இறுதியில் அவன் மேலும் மேலும் கவனித்து அந்த மீனின் தனித்தன்மைகளாக பல பக்கங்கள் எழுதியிருந்தான்.

அந்த மாணவன் பிற்காலத்தில் சிறந்த உயிரியல் வல்லுனராகப் புகழ் பெற்ற போது கூறினான். ”நான் என் வாழ்க்கையில் கற்ற அந்த முதல் பாடம் தான் கற்ற எல்லாப் பாடங்களிலும் உயர்ந்ததென்று இப்போதும் நினைக்கிறேன். அதுவே பிற்காலத்தில் நான் அறிந்த அத்தனை அறிவுக்கும் காரணமாக இருந்தது. வேறு வகைகளில் யாரும் பெற முடியாத, பெற்ற பின் இழக்க முடியாத சிறந்த பாடமாக அதைச் சொல்லலாம்”.

பிரபல விஞ்ஞானியான ஐசக் நியூட்டனும் தான் அறிவியல் இரகசியங்களை அறிந்த விதமாக இதையே கூறுகிறார். “நான் அறிய வேண்டிய விஷயத்தைக் குறித்தே தினமும் என் கவனத்தில் வைத்திருப்பேன். சிறிது சிறிதாக உண்மைகள் விளங்கும். ஒரு நாள் எல்லாம் தெளிவாகத் தெரியும்.” இதையே மற்ற பெரும்பாலான விஞ்ஞானிகளும் அனுபவபூர்வமாகக் கூறுகிறார்கள்.


மனதை நாம் தேர்ந்தெடுக்கும் பொருளில் நூறு சதவீதம் கவனிக்க வைத்தல் தான் ஒருமுனைப்படுத்துதல். குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடித்து, நமக்கு வேண்டியதில் ஒருமுனைப்படுத்துதல் மன உறுதியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். சுவாரசியமில்லாத பொருள்களிலும், சுவாரசியமில்லாத விஷயங்களிலும் தொடர்ந்து கவனத்தைக் குவிப்பதால் என்ன நன்மை விளைந்து விடும் என்று சந்தேகத்துடன் கேட்காதீர்கள். இந்தப் பயிற்சியில் நாம் எடுத்துக் கொள்ளும் பொருளோ, விஷயமோ முக்கியமல்ல. உடலின் பகுதிகளை உடற்பயிற்சி செய்து பலப்படுத்துவது போல மனதின் திறன்களைப் பலப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமும், பயனும். மனம் நம் கருவியாக இருந்து நாம் விரும்பும் இடத்தில் குவிகிறது என்கிற அளவிற்கு பழக்கப்படுத்திக் கொண்டால் அது பல பெரும் சக்திகள் அடங்கிய பொக்கிஷத்தைத் திறக்க உதவும் சாவியாக மாறும்.

எனவே இந்தப் பயிற்சியைத் தவறாமல் செய்து பாருங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதில் மனதைக் குவிக்கும் நேரத்தை நாளுக்கு நாள் அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள். ஆரம்பத்தில் போரடித்தாலும் நீங்கள் தொடர்ந்து செய்து ஒன்றைப் பற்றி புதிது புதிதாக போகப் போக அறியும் போது தானாக அதில் ஈடுபாடும், ஆர்வமும் பிறக்கும்.

அடுத்ததாக மிக முக்கியமான வேறொரு பயிற்சியைப் பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்....

(தொடரும்)
நன்றி: விகடன்

5 comments:

  1. உங்களின் இந்த இடுகைகையினை வாசித்த பின்னர் அது சம்பந்தமாக ஒரு பதிவிட்டிருக்கின்றேன் (http://chummaah.blogspot.com/2010/11/blog-post.html). ஏதாவது காப்புரிமைப் பிரச்சனை இருக்கின்றதென்றால் தயவு செய்து அறியத்தாருங்கள்

    ReplyDelete
  2. arumaiyaana pathivu..manathai nam vasappaduthinaal ulagam thaanal nam vasamppadum

    ReplyDelete
  3. நல்ல பதிவுகள்

    ReplyDelete
  4. very useful. Thank you...

    ReplyDelete