தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, October 11, 2010
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 49
உயர் உணர்வு நிலைக்கு முதல் பயிற்சி- அடையாளங்கள் நீங்களல்ல
அணுவைப் பிளந்து பார்த்த போது அறிவியல் பிரமித்துப் போனது. அணுவிற்குள் இடை விடாது இயங்கிக் கொண்டு இருந்த சக்திகளின் செயல்பாடுகள் விஞ்ஞானிகளை அசத்தின. அணுவின் சக்திகளுக்கே இப்படி என்றால் பிரபஞ்சத்தின் சக்திகளை ஒட்டு மொத்தமாக ஓரளவுக்காவது அறிவது மனிதனின் அதீத கற்பனைகளுக்கும் கூட எட்டாத பிரம்மாண்டம் என்றே சொல்ல வேண்டும்.
ராஜ யோகிகள் இந்த பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாகவே மனிதனைக் கண்டார்கள். அந்த சக்திக்கு எதிர்மாறாக இயங்காமல், அந்த சக்திகளுக்கு ஏற்ப ஒத்த விதத்தில் தன்னை ’ட்யூன்’ செய்து கொண்டால் அவன் பெறக்கூடிய சக்திகளும் எல்லை அற்றவை என்று உணர்ந்தார்கள். அந்த சக்திகளைப் பெற அவன் பிரபஞ்ச சக்தியின் அங்கமாகத் தன்னை உணர்வது மிக முக்கியம் என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள். அரசனைப் போல அதிகாரங்களை அவன் அமல்படுத்தும் முன் தன்னை அரசன் என்பதை உணர்வது முக்கியம் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. இல்லா விட்டால் அது கற்பனையான கேலிக்கூத்தாகவே இருக்கும் என்று கருதினார்கள்.
தன் உடலையும், தொழிலையும், செல்வத்தையும், மற்றவர்களுடைய அபிப்பிராயங்களையும் வைத்தே தன்னை வரையறுத்துக் கொள்ளப் பழகி இருக்கும் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய, உயர் உணர்வு நிலை பெறுவது அவசியம் என்று ராஜ யோகிகள் கருதினார்கள். அந்த உயர் உணர்வு நிலைக்குச் செல்ல முறையான பயிற்சிகளை ஏற்படுத்தினார்கள். அதில் முதல் பயிற்சியைப் பார்ப்போம்.
1) அமைதியாக ஆரவாரமற்ற ஓரிடத்தில் தனிமையில் அமருங்கள்.
2) இது வரை சொன்ன தியானங்களில் உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தந்த ஒரு தியானத்தைச் செய்யுங்கள். முறையாகச் செய்து முடித்தால் உடலும் இளைப்பாறி இருக்கும், மனமும் அமைதி அடைந்திருக்கும்.
3) முதலில் உங்களை இந்த உடலுக்குள் குடியிருக்கும் பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாக உணருங்கள். இந்த உலகில் நீங்கள் மற்றவர்களால் அறியப்படும் பெயர், தோற்றம், கல்வி, தொழில், சமூக நிலை போன்ற அடையாளங்களால் அல்லாமல் உங்களை நினைத்துப் பாருங்கள். இது ஆரம்பத்தில் மிகவும் கடினமான ஒரு விஷயம் தான். நாம் நம்மைப் பற்றிய அந்த அடையாளங்களை நீக்கி விட்டால் நினைத்துப் பார்க்க எதுவுமில்லை என்பது போலவே தோன்றும். ஆனால் சிந்தனையை ஆழப்படுத்தினால் இந்த அடையாளங்கள் தற்காலிகமாக வந்தவை, மாறிக் கொண்டே இருப்பவை என்பதை உணர்வது சிரமமல்ல. திடீர் என்று உலகில் ஒரு நாள் தோன்றி, வாழ்க்கையில் இந்த அடையாளங்களைப் பெற்று, ஏதேதோ செய்து, திடீரென்று அழிந்து போகும் ஒரு தற்காலிக உயிரல்ல நீங்கள். தோன்றுவதற்கு முன், மறைந்ததற்குப் பின் என்ற இரண்டு பெரிய கேள்விக்குறிகளுக்கு மத்தியில் உள்ள பொருள் இல்லாத குழப்பம் அல்ல நீங்கள். மாறிக் கொண்டே இருக்கும் இந்த அடையாளங்களுக்கு நடுவே மாறாத ஒரு அற்புதமே நீங்கள். இந்த சிந்தனையை மனதில் மையமாக்குங்கள்.
4) இந்த உடல் என்ற கூட்டில் வசிக்கும் பிரபஞ்ச சக்தி நீங்கள் என்ற சிந்தனையை உங்களுக்குள் ஏற்படுத்தி அதை பலப்படுத்துங்கள். இந்த கூட்டை, வெளியுறையை பிரபஞ்ச சக்தியான நீங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினையுங்கள். இந்த புதிய சிந்தனையும் உங்களுள் ஆழமாகப் பதியட்டும். உடல் என்ற கருவியை ஆரோக்கியமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் வைத்திருக்க உங்களால் முடியும் என்பதை நம்புங்கள்.
5) அடுத்ததாக உங்கள் உடலை விட்டு வெளியேறி உங்கள் உடலை நீங்கள் காண முடிவதாக நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் உடலைத் தெளிவாக நீங்கள் வெளியே இருந்து காண்பது போல் காணுங்கள். ஆரம்பத்தில் இது சுலபமாக இருக்காது. அதனால் சிலர் கண்ணாடி முன் அமர்ந்து கண்ணாடியில் தெரியும் தங்கள் பிம்பத்தை உண்மையான உடல் என்றும் தாங்கள் வெளியே இருந்து உடலைக் காண்பதாகவும் எண்ணிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த பயிற்சியைப் பயன்படுத்தி அப்படிக் காண்பதில் தவறில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் கண்ணாடியின் உபயோகத்தைத் தவிர்த்தே இந்த பயிற்சியைச் செய்து தேற வேண்டும்.
6) இனி உங்கள் கவனத்தை உடலில் இருந்து முழுமையாக எடுத்து விடுங்கள். உடலில் இருந்து வெளியேறிய நீங்கள் உங்கள் உடலைப் பார்த்து பின் உங்கள் கவனத்தினை உண்மையான உங்கள் மீது திருப்பிக் கொள்வதாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த உண்மையான உங்கள் தன்மையினை நீங்கள் அமைதியாக, நிதானமாக, சிறிதும் சந்தேகம் இல்லாமல் கீழ்க்கண்டவாறு உணருங்கள்.
7) ”நான் பிரபஞ்ச சக்தியின் மையம். சூரியனை பூமி சுற்றுவது போல என் உலகம் என்னைச் சுற்றியே இயங்குகிறது. என்னுடைய சக்தி எல்லை இல்லாதது. உடல் எனக்கு கூடு தான். அது எனது தற்காலிக வசிப்பிடம் தான். நான் உடலில் அடங்கிக் கிடக்கும் அடிமையல்ல. அந்த உடல் இல்லாமலும் என்னால் இயங்க முடியும். நான் நிரந்தரமானவன்/ நிரந்தரமானவள். எனக்கு அழிவில்லை. எனக்குள் இருக்கும் எல்லை இல்லாத ஆழமான சக்தியை நான் முழுமையாக உணர்கிறேன். இந்த ஞானத்தால் என்னுள்ளே அமைதியைப் பரிபூரணமாக நான் உணர்கிறேன்”.
8) இந்த எண்ணத்தை உங்களுக்குள் வேர் விடச் செய்யுங்கள். வார்த்தைகள் முழுமையாக இப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கிற உண்மை இந்த செய்தியாக இருக்க வேண்டும். இது உயர்வு நவிற்சி போல சிலருக்குத் தோன்றக்கூடும். ஆனால் ராஜ யோகிகள் நம்மை மட்டுப்படுத்திக் கொண்டு, நம்மைக் குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு நாம் எதையும், என்றும் சாதித்து விட முடியாது என்று தெளிவாக அறிந்திருந்தார்கள். இப்படி நினைப்பதால் நமக்கு கர்வம் வந்து விடாதா என்ற கேள்வியும் சிலருக்கு எழலாம். கர்வம் என்பது அடுத்தவர்களை மட்டமாக நினைத்து நம்மை உயர்வாக நினைக்கும் போது மட்டுமே எழக் கூடியது. நமக்குப் பொருந்தும் இந்த உண்மை அடுத்தவருக்கும் பொருந்தும் என்று அறிந்திருக்கும் போது, அடுத்தவரைக் குறைவாக எண்ண முடியாது. எனவே முறையாக உணரும் போது கர்வம் வர வாய்ப்பில்லை.
9) இது ஒருசில நாட்களில் தேர்ச்சி பெறக் கூடிய பயிற்சியல்ல. தாழ்வான உணர்வு நிலையில் இருந்தே வருடக்கணக்கில் பழகி விட்ட நமக்கு மேம்பட்ட உணர்வு நிலைக்குப் பழக்கப்பட பல நாட்கள் பயிற்சி தேவைப்படும். இதில் முன்னேற்றம் கூட சிறிது சிறிதாகத் தான் தெரியும். அதனால் பொறுமையாக இந்தப் பயிற்சியைச் செய்து வரவும்.
இனி அடுத்த பயிற்சிக்குப் பார்ப்போம்.
மேலும் ஆழமாகப் பயணிப்போம்.....
(தொடரும்)
என்கணேசன்
நன்றி: விகடன்
Labels:
ஆழ்மன சக்தி
Subscribe to:
Post Comments (Atom)
நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!
ReplyDelete"அடுத்ததாக உங்கள் உடலை விட்டு வெளியேறி உங்கள் உடலை நீங்கள் காண முடிவதாக நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் உடலைத் தெளிவாக நீங்கள் வெளியே இருந்து காண்பது போல் காணுங்கள்..."
ReplyDeleteCan heart patients do this exercises?
மிகச் சிறப்பான,முற்றிலும்,ராஜயோகிகளின் மிகச் சரியான செயல்பாடுகளை வெட்டவெளிச்சமாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.
ReplyDeleteஎன்ன சொல்லிப் பாராட்டினாலும் தங்களின் கருத்துக்களுக்குத் தகுமா? எனத் தெரியவில்லை.
வாழ்த்துக்கள்... பாராட்டுக்களுடன்...
உடலை விட்டு வெளியேறி என்பதற்கு உடலையும், அதன் உறுப்புகளையும் செயலிழக்கச் செய்து விட்டு என்று பொருள் கொள்ள வேண்டாம். எப்போதும் போல் இயங்கிக் கொண்டு இருக்கும் உங்கள் உடலை, குடியிருக்கும் வீட்டிலிருந்து வெளியே வந்து அதைப் பார்ப்பது போல பாருங்கள். உடல் தான் நீங்கள் என்ற எண்ணத்தைக் களைந்து விட்டிருந்தால் அது சிரமமல்ல. அதனால் எந்த பாதிப்பும் வர வாய்ப்பில்லை.
ReplyDeleteஎல்லாம் கற்பனை கதை. அனுபவமில்லாத கல்வி யாருக்கும் பயன்படாது.
DeleteI cant practice from point3.
ReplyDeleteDear ganesan, very interesting to read this, but, have you ever practiced these things. If so, till what level and also kindly share your experiences
ReplyDeleteI am still a student in this aalmana sakthi practices. I am practicing some exercises in this series and had a few good experiences also. But I am yet to travel a long way in this path. As secrecy is necessary at least till one attains a concrete level I do not prefer talking or writing about my personal experiences. But anyone who practices at least some practices continuously for some period he will definitely feel the difference. This much I can assure.
Delete