சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, October 9, 2009

தெருவில் படித்த பாடம்

அறிஞர்களிடமிருந்து பாடங்கள் பெறுகிறோம். அறிவு சார்ந்த நூல்களில் இருந்து பாடங்கள் பெறுகிறோம். இது பெரிய விஷயமில்லை. சில சமயங்களில் தெருக்களில் கூட சில பாடங்களை, அறிஞர்களல்லாத சாதாரண மனிதர்களிடமிருந்து பெறும் சந்தர்ப்பங்கள் உண்டு. சாதாரண மனிதர்களாகத் தோன்றுபவர்களிடமிருந்து கிடைக்கும் பாடங்கள் பக்கம் பக்கமாக படிக்கும் புத்தகங்களில் இருந்தும், மணிக்கணக்கில் பேசும் அறிஞர்களிடமிருந்தும் கிடைக்கும் பாடங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை மிக எளிமையாகவும் ஆழமாகவும் நம் மனதில் பதிந்து விடுவதுண்டு.

அப்படி நானும் ஒரு பாடம் படித்தேன். சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது. சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.

குப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது. மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டு வர வேண்டி இருந்தது. அவர்களில் ஒருவன் தான் சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவன். மற்ற இரு ஊழியர்களும் சுரத்தே இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க இவனோ அந்த வெயிலையும், செய்யும் வேலையின் பளுவையும் பொருட்படுத்தாமல் ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தான்.

எனக்கு முதலில் தோன்றியது அவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று தான். ஏனென்றால் வேறு யாரும் அந்த வெயிலில், அந்த சூழ்நிலையில் அப்படிப் பாடிக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் குரல் சாதாரணமாக இருக்கிறதே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கூச்சமெல்லாம் இல்லாமல் அவன் பணி செய்த விதம் வித்தியாசமாக இருந்தது. அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, பாடலில் திளைத்த விதம் எல்லாம் என்னை சிந்திக்க வைத்தது.

அடிக்கும் வெயிலையோ, செய்யும் தொழிலையோ அவன் மாற்ற முடியாது. ஆனால் செய்யும் விதத்தையும், செய்யும் மனநிலையையும் அவன் தேர்ந்தெடுக்க முடியும் அல்லவா? அவன் அதைத்தான் செய்து கொண்டிருந்தான். மற்றவர்கள் வெயிலை உணர்ந்த நேரத்தில் அவன் பாடல்களின் இனிமையை உணர்ந்தான். அவர்களுக்கு வேலை நேரம் அவனுக்கு பாட்டு நேரம் ஆகியது. அதே நேரத்தில் அவன் வேலையும் நடந்து கொண்டிருந்தது. முதலில் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று தோன்றியது போய் அவன் தான் மனநிலை சரியானவன் என்று தோன்றியது. லாரியும் அந்தப் பணியாளர்களும் சென்று நிறைய நேரம் என்னை சிந்திக்க வைத்தது அந்த சம்பவம். கல்வியறிவில்லா விட்டாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் அந்த அசாதாரணமான அறிவு அவனிடம் இருந்ததாகத் தோன்றியது.

இன்னொரு நிகழ்ச்சி. 1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது. இரண்டு நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை. தெருக்களைக் வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது. அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன. ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள் நின்று கொண்டிருந்த கார்களின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். "இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாக மாறி விட்டது. முதலில் தீ பரவியது... பிறகு வெள்ளம்... இப்போதோ பூகம்பம். காலையில் எத்தனை சீக்கிரம் வீட்டை விட்டுக் கிளம்பினாலும் அலுவலகம் சென்று சேர தாமதம் தான் ஆகிறது. சே... என்ன தான் செய்வது?" என்று மனிதர் பொரிந்து தள்ளினார்.

அந்த நிருபர் அடுத்த காரின் ஜன்னலைத் தட்டிக் கேட்டார். அந்தக் காரோட்டி சிரித்துக் கொண்டே சொன்னார். "காலையில் ஐந்து மணிக்கே வீட்டில் இருந்து கிளம்பி விட்டேன். ஆனால் இந்த போக்குவரத்து நெரிசலில் நான் வேலைக்குப் போய் சேர கண்டிப்பாய் தாமதம் தானாகும். ஆனால் ஐந்து மணிக்கே கிளம்பி விட்ட நான் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் என்னை என் முதலாளி திட்ட முடியாது. அவருக்கும் போக்குவரத்து நெரிசல் தெரியும். நான் கிளம்பும் போதே படிக்க புத்தகம், கேட்க பாட்டு கேசட்டுகள், ·ப்ளாஸ்கில் காபி எல்லாம் எடுத்துக் கொண்டு வந்திருப்பதால் பிரச்னையில்லை. போய் சேர்கிற போது போய் சேர்ந்தால் போதும். அதுவரை பாட்டையும், புத்தகத்தையும் ரசிக்கலாம்."

பல பேர் கோபத்துடனும், எரிச்சலுடனும் இருக்க அந்தத் தெருவின் போக்குவரத்து நெரிசலில் அந்த மனிதர் மட்டும் பாதிக்கப்படாமல் இருந்த விதத்தை சிந்தித்துப் பாருங்கள். நிலநடுக்கமும், அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலும் தவிர்க்க முடியாதவை. ஆத்திரப்படுவதாலோ, புலம்புவதாலோ அவற்றை மாற்றி விட முடியாது. அந்த சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வந்து அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்த மனிதர் எவ்வளவு பெரிய பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறார் பாருங்கள். காத்திருக்கும் அந்த நேரத்தைக் கூட அவருக்கு மட்டும் பயனுள்ளதாய் மாற்றிக் கொண்டது புத்திசாலித்தனமே அல்லவா?

உலகில் இயற்கை நிகழ்வுகளை நாம் மாற்ற முடியாது. நம் சூழ்நிலைகள் பலவற்றையும் மாற்றும் சக்தியும் நம்மிடம் இல்லை. அழுவதாலோ, புலம்புவதாலோ, ஆத்திரப்படுவதாலோ, வேறு விதமாய் இருந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாலோ எதுவும் மாறிவிடப் போவதில்லை. ஆனால் எதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது மட்டும் நம் கையிலேயே இருக்கிறது. நடப்பதை எப்படிக் காண்பது என்பதையும், எப்படி உபயோகப்படுத்திக் கொள்வது என்பதையும் நாமே தீர்மானிக்கிறோம். மேலே குறிப்பிட்ட துப்புரவுப் பணியாளரும், காரோட்டியும் பெரிய மேதைகள் அல்ல. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறும் சிந்தனையாளர்களும் அல்ல. ஆனால் அவர்கள் கற்றுக் கொடுக்கும் இந்தப் பாடம் மகிழ்ச்சிக்கான மகத்தான ரகசியம் அல்லவா?

என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

9 comments:

  1. நாம் வாழ்க்கைப் பாடத்தை யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்பதை இருவேறு நிகழ்வுகள் மூலம் தெளிவாக புரியவைத்த அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  2. Nalla pathivu. anything in life as we take it! Rishaban

    ReplyDelete
  3. nalla pathivu congratulations

    ReplyDelete
  4. Great Lessons..., Thanks for your information

    ReplyDelete
  5. Super Boss.. In some times I am also like that... But my friends are advice in sometimes they are beat me..

    ReplyDelete
  6. Great article. If we keep an open mind, we can learn even from a uneducated person. :-)

    ReplyDelete
  7. Superb Sir. Very good and simple examples from the day to day life. Keep it up .....You are doing a good job .....

    Dhigash
    Sydney, Australia

    ReplyDelete
  8. Romba arumai sir...!

    ReplyDelete