சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 1, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-5

எட்கார் கேஸ் குறிப்பிட்ட ஆகாய ஆவணங்களை முழுமையாக நம்பிய ஒரு அமைப்பு தியோசோபிகல் சொசைட்டி. அதன் நிறுவனர்கள் ரஷியாவைச் சேர்ந்த எச்.பி.ப்ளாவட்ஸ்கீயும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் எச்.எஸ்.ஓல்காட்டும். கர்னல் ஓல்காட் தன்னுடைய அனுபவங்களை 'பழைய டைரித் தாள்கள் (Old Diary Leaves)' என்ற நூலில் எழுதியுள்ளார். அதில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆகாய ஆவணங்களைப் பயன்படுத்தி 'முகத்திரை அகற்றப்பட்ட ஐசிஸ்' (Isis Unveiled) எழுதிய விதத்தை சுவைபட விவரித்துள்ளார்.


"ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதும் விதத்தைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மேசையில் பக்கம் பக்கமாக மிக வேகமாக எழுதிக் கொண்டே போவார். திடீரென்று ஏதாவது வேறு நூலில் இருந்து குறிப்புகள் தேவைப்பட்டால் கண்களை சுருக்கிக் கொண்டு வெட்ட வெளியைப் பார்ப்பார். பின் அந்த இடத்தையே பார்த்து பார்த்து சில வரிகள் எழுதுவார். தேவைப்பட்ட குறிப்பை எழுதி முடித்தவுடன் மறுபடி மின்னல் வேகத்தில் எழுத ஆரம்பிப்பார்... மறுபடி வேறு குறிப்புகள் தேவைப்படும் போது மறுபடியும் கண்களை சுருக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்ப்பார்..."

பின் அந்தக் குறிப்பு நூல்களைத் தேடி எடுத்து அந்த அம்மையார் எழுதியதையும் சரிபார்த்தால் அவை வரிக்கு வரி அப்படியே இருந்ததாக கர்னல் ஓல்காட் கூறுகிறார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தனக்கு 'மஹாத்மா'க்கள் என்று அவர் அழைத்த உயர்நிலை சக்தி வாய்ந்த மனிதர்கள் அரூபமாக வந்து சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் காண்பிப்பதாகக் கூறினாலும் ஆகாய ஆவணங்களை அவர் பயன்படுத்தியதாகவே பலர் கருதினர். அப்படி அந்த அம்மையார் எழுதிய பல நூல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.

விவேகானந்தருக்கும் இளமையில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டதை 8-1-1900 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

மனதில் நினைத்த கேள்விகளுக்கு வாய் விட்டுக் கேட்காமலேயே பதில் சொல்லும் ஒரு சாதுவைப் பற்றிக் கேள்விப்பட்ட விவேகானந்தர் தன் இரண்டு நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றார். குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி மூவரும் ஒவ்வொரு கேள்வியை மனதில் நினைத்து அதை எழுதியும் வைத்துக் கொண்டு அந்த சாதுவைப் பார்க்கச் சென்றனர். அந்த மூன்றையும் அவர் சொல்லி அதற்கான பதிலையும் சொல்லி விட்டார். விவேகானந்தர் சிறு வயதிலிருந்தே எதையும் எளிதாக நம்பி விடாதவராக இருந்தார். அவரும் அவர் நண்பர்களும் அந்த சாது கேள்வியையும் பதிலையும் சொன்னாலும் இன்னும் சங்தேகம் நீங்காதவர்களாக இருந்தனர்.

அதைக் கண்ட அந்த சாது அவர்கள் மூவரிடமும் ஒவ்வொரு தாளில் ஏதோ எழுதி அதை அப்போது படிக்க வேண்டாம் என்று சொல்லி அவரவர் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். அவர்களும் அவற்றை அப்படியே படிக்காமல் சட்டைப்பையில் வைத்துக் கொண்டனர். பின் சிறிது நேரம் அவர்கள் மூவருக்கும் அவர்களுடைய எதிர்காலப் பலன்களையெல்லாம் சொல்லிய சாது மறுபடி மூன்று பேரிடமும் "ஏதாவது ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அது எந்த மொழியிலாக இருந்தாலும் பரவாயில்லை" என்றார்.

உள்ளூர் மொழியைத் தவிர வேறெந்த மொழியையும் அறிந்தது போல் தெரியாத அந்த சாது அப்படி சொன்னவுடன் விவேகானந்தரும் அவரது நண்பர்களும் தனியாகச் சென்று கூடிப் பேசி கஷ்டமான மொழிகளில் வார்த்தை அல்லது வாக்கியம் நினைக்க முடிவு செய்தார்கள். விவேகானந்தர் சம்ஸ்கிருத மொழியில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்தார். விவேகானந்தருடன் வந்த ஒரு நண்பர் முஸ்லீம். அவர் குரானிலிருந்து ஒரு வாக்கியத்தை அரபு மொழியில் நினைத்தார். மற்ற நண்பர் மருத்துவர். அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவச் சொல்லை நினைத்தார். 'இந்த முறை அந்த சாதுவால் முன்பு சொன்னது போல் சரியாகச் சொல்ல முடியாது' என்று திடமாக நம்பினார்கள் விவேகானந்தரும் அவர் நண்பர்களும்.

நினைத்து முடித்தவுடன் அந்த சாதுவை உற்சாகமாக அணுக அந்த சாது அவர்களை அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கச் சொன்னார். அவர்கள் எடுத்துப் பார்த்த போது அவரவர் நினைத்தது அந்தந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் 'நான் எழுதிய இந்த வார்த்தைகளை இந்த இளைஞன் நினைப்பான்' என்று
ஒவ்வொன்றிலும் எழுதியிருந்தார். விவேகானந்தரும் அவர் நண்பர்களும் மலைத்துப் போனார்கள்.

இவர்கள் நினைத்ததை அவர் சொல்வார் என்பதற்கு ஒருபடி மேலே போய் அவர் எழுதியதை இவர்கள் அதிசாமர்த்தியமாகத் தாங்கள் நினைத்ததாய் தேர்ந்தெடுக்க வைத்தது பேரதிசயமே அல்லவா? அதுவும் அவரவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் அவரவர்கள் கஷ்டமானது என்று நினைத்த வார்த்தைகளை அவர்கள் நினைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே எழுதி வைத்தது எப்படி சாத்தியம்?

பதில் ஆகாய ஆவணங்களில் இருக்கலாம் என்பது பலருடைய அபிப்பிராயம். எல்லாமே அலைகளாக பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்கிறார்கள். மற்றவர்களுடைய எண்ண அலைகளைப் படிக்க முடிவதும், அவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடிவதும் என்றோ சித்தர்களும், ஞானிகளும் அறிந்திருந்தனர் என்பதற்கு எட்கார் கேஸ், ப்ளாவட்ஸ்கீ, விவேகானந்தர் சந்தித்த அந்த சாது எல்லாம் சாட்சிகள். இந்த மூன்று நபர்களும் 19 ஆம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் இதை விடப் பெரிய சாதனைகளும் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்து, பயிற்றுவித்தால் சாத்தியம் தான் என்பதை தன் "யோக சூத்திரங்களி"ல் எழுதியிருக்கிறார்.

இன்று விஞ்ஞானத்தில் எத்தனையோ முன்னேறி, எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்திருக்கும் நாம் முன்னொரு காலத்தில் அறியப்பட்டும் பெரிதும் உபயோகப்படுத்தியும் வந்த மனோசக்தியை அலட்சியப்படுத்தி விட்டோமோ?

இனியும் ஆழமாய் பயணிப்போம்.

-என்.கணேசன்

நன்றி:விகடன்

9 comments:

  1. படிக்க படிக்க ஆச்சரியமாக இருந்தது. உலகில் இப்படியெல்லாம் கூட நடந்திருக்கிறதே என்று நினைக்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கு. அருமையான பதிவை படித்த திருப்தியுடன்,

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  2. Ganesan,
    Romba nalla iruku.. thodar..

    ReplyDelete
  3. எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
    பிடித்திருந்தால் பின்தொடருங்கள்.

    ReplyDelete
  4. என்ன ஒரு சாது என முடித்து விட்டீர்கள்! அவர் சாது அல்ல, கும்பகோணத்தில் வாழ்ந்த ஒரு அம்பபாள் பக்தர். சென்னை விவேகானந்தா ஆசிரமத்தில் சான்றுகள் இருப்பதாக படித்த ஞாபகம். நன்றி

    ReplyDelete
  5. please verify that letter from vivekanada.org

    link: http://www.vivekananda.org/newSVLetters.asp

    ReplyDelete
  6. தாங்கள் சொன்ன அந்த நிகழ்ச்சி குறித்த கடிதம் தமிழ்நாட்டில் நடந்ததைக் குறிக்கிறது. அதுவும் இந்த ஆழ்மன சக்தி சம்பந்தப்பட்டதே. நான் மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி வேறு இடத்தில் விவேகானந்தர் நரேந்திரனாக இருக்கும் போது நடந்தது. இதை 8-1-1900 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேசிய போது விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். அந்த உரையை என் ஆங்கில வலைப்பூவில் அப்படியே தந்துள்ளேன்.
    http://n-ganeshan.blogspot.com/2010/08/power-of-mind.html
    இன்னொரு தகவலையும் லிங்க் தந்து சுட்டிக் காட்டியதற்கு நன்றி ரியாத்ராஜா அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. அருமை. ஏதோ கடன் வாங்கிய அறிவினை கொண்டு எழுதாமல், உண்மையிலியே பல விசயங்களை படித்து , உணர்ந்து எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்.

      Delete
  7. இது எல்லாம் உண்மையே, எனகும் இது போல் அனுபவம் கெடைதது . . .

    நன்றி . . .

    தொடரட்டும் உங்கள் பணி . . .

    வாழுதுகள்.

    ReplyDelete