சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, February 27, 2008

இலையுதிர்காலம்


பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ்.
""ஏன் இப்படி பயந்து சாகறீங்க?'' என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா.

""இல்லை... அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்!''


""இதப்பாருங்க... மாமியாரைப் பார்த்துக்கலாம். அது என் டியூட்டி. ஆனா, மாமியாரோட மாமியாரைப் பார்த்துக்கறதெல்லாம் டூ மச்...''

அவன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாய் இருந்தான்.

""அடுத்த வாரம் அனுப்பணும்ன்னா இப்பவே சொன்னாத் தான் அவங்களுக்குப் பேக் பண்ண டைம் கிடைக்கும். சைக்காலஜிக்கலா தயாராகவும் முடியும். கிழவி இப்ப கோவிலுக்குப் போயிருக்கா. அதனால, இப்பவே போய் உங்க அம்மாவிடம் சொல்றீங்க, நீங்க!''

மனைவியிடம் வழக்கம் போல் தலையசைத்தான் சதீஷ். தயக்கத்துடன் ஹாலில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த அம்மா முன் சோபாவில் உட்கார்ந்தான்.

புத்தகத்திலிருந்து பார்வையை எடுத்து மகனைப் பார்த்தாள் ஜானகி.

""அம்மா... நான் பாட்டி பேரை முதியோர் இல்லத்தில் பதிவு செஞ்சிருக்கேன், அட்வான்சும் கொடுத்துட்டேன்!''

ஜானகியின் கையில் இருந்த புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது. அவள் அதிர்ச்சியுடன், ""என்னடா சொல்றே?'' என்றாள்.

தர்ம சங்கடத்துடன் தங்கள் அறைக் கதவு அருகே நின்ற சத்யாவைப் பார்த்தான் சதீஷ். அவள், "தைரியமாய் பேசுங்கள்!' என்று சைகை காண்பித்தாள்.

கீழே விழுந்த புத்தகத்தை மேஜை மீது வைத்து அதைப் பார்த்தபடியே சொன்னான் சதிஷ்...

""இவ்வளவு வருஷமாய் பாட்டியை நாம பார்த்துகிட்டாச்சும்மா, இனிமேயும் பார்த்துக்கறது கஷ்டம்மா!''

""பாட்டி நல்லாத் தானே இருக்காங்க! அவங்கள பார்த்துக்கிறதில் கஷ்டம் என்னடா இருக்கு?''

அவன் பதில் சொல்லவில்லை.

தன் கோபத்தை அப்படியே விழுங்கிக் கொண்டு சொன்னாள் ஜானகி...

""சதீஷ்! என் சித்தி கொடுமைக்காரின்னு, உன்னை பிரசவிக்க அவங்க எங்க வீட்டுக்குக் கூட என்னை அனுப்பாம தானே பிரசவம் பார்த்தவங்கடா!''

""அதுக்காக தான் அப்பா செத்தப்பறம் கூட அவங்களை வெளியே அனுப்பாம நீயே இத்தனை வருஷம் பார்த்துகிட்டியேம்மா...''

""உன்னோட பி.ஈ., படிப்புக்கு பீஸ் கட்ட தன்கிட்ட இருந்த கடைசி நகையைக் கூட வித்தவங்கடா அவங்க!''

""அதுக்காக தான் மாசா, மாசம் முதியோர் இல்லத்தில் ஆயிரத்து 500 ரூபாய் கட்ட ஒத்துக்கிட்டேன்மா!''

""நாம இருக்கறப்போ ஒரு அனாதை மாதிரி அவங்களை ஏண்டா அங்க சேர்க்கணும்?''

""பாட்டிக்கு நாம மட்டும் இல்லையேம்மா. அத்தை கூட இருக்கா இல்லையா? வேணும்ன்னா, பெத்த பொண்ணு கூட கொஞ்ச நாள் இருக்கட்டுமே...''

""அவ அவங்களுக்கு ஒரு வேளை சோறு ஒழுங்கா போட மாட்டாடா!''

""அது தெரிஞ்சு தான் முதியோர் இல்லத்தில் சேர்க்க நாங்க முடிவு செஞ்சோம்!''

"பொறுமையாக இரு!' என்று தனக்குள் பல முறை சொல்லிக் கொண்டு மகனைக் கேட்டாள் ஜானகி...

""பாட்டியால உங்களுக்கு என்னடா தொந்தரவு? ஏன் அனுப்ப முடிவு செஞ்சீங்க?''

தங்கள் அறைக் கதவைப் பார்த்தான் சதீஷ். உள்ளே போயிருந்தாள் சத்யா.

வேறு வழியில்லாமல் உண்மையை அவன் சொன்னான்...

""பாட்டி இங்க இருக்கறது சத்யாக்கு பிடிக்கலைம்மா!''

மகனை அருவெறுப்புடன் பார்த்தாள் ஜானகி. அவளுக்குள் ஏற்பட்ட பூகம்பம் அடங்க சிறிது நேரம் பிடித்தது.

பின் உடைந்த குரலில் மகனிடம் சொன்னாள்...

""சதீஷ் நல்லா யோசிடா... இது சரியில்லைடா!''

""நாங்க நல்லா யோசிச்சாச்சும்மா!''

மவுனமாக கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் ஜானகி.

""உனக்கு அவங்க கிட்டே சொல்ல கஷ்டமாய் இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். பக்குவமாய் நானே அவங்க கிட்ட சொல்றேன்மா!''

ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தாள் ஜானகி.

சிறுவயதிலேயே தாயை இழந்து சித்தியிடம் பல கொடுமைகளை அனுபவித்த ஜானகி, தன் திருமணத்திற்குப் பிறகு மாமியார் விசாலத்திடம் ஒரு தாயையே பார்த்தாள். சூது, வாது தெரியாத, நேசிக்க மட்டுமே தெரிந்த விசாலமும் தன் மருமகளை மகளாகவே பாவித்தாள்.

ஜானகியின் நாத்தனார் கிரிஜா, தன் தாயைப் போல யதார்த்தமானவளாக இருக்கவில்லை. அவள் ஜானகியைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் தன் தாயிடம் சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறாள் ஜானகி.

அப்போதெல்லாம், "சும்மா வாயிற்கு வந்தபடி பேசாதேடி!' என்று மகளை விசாலம் அடக்கினாளே தவிர, என்றுமே அது பற்றி அவள் மருமகளிடம் விசாரித்தது கூட கிடையாது. மகள், மருமகளின் பிரசவத்தை தான் ஒருத்தியே பார்த்துக் கொண்டாள்.

ஒரு விபத்தில் கணவன் அற்ப ஆயுசில் இறந்து போகும் வரை ஜானகியின் வாழ்வு சந்தோஷமாகவே இருந்தது. அண்ணனின் சாவிற்கு வந்த கிரிஜா, தன் தாயைத் தன்னுடன் அனுப்பி விடுவரோ என்று பயந்து பிணத்தை எடுத்த மறுகணம் அங்கிருந்து மாயமாகி விட்டாள்.

பெரிய சேமிப்போ, சொத்தோ இல்லாத அவர்கள் குடும்பத்திற்கு உதவ உறவினர்கள் யாரும் இருக்கவில்லை நிராதரவாக நின்ற ஜானகிக்கு, அவள் மன உறுதியும், அவளது ருசியான சமையலும் கை கொடுத்தன. அவள் ஒரு கல்லுõரிக்கு அருகே மெஸ் ஒன்றை ஆரம்பித்தாள். மாமியாரும், மருமகளும் ஓடாய் உழைத்தனர்.

சில வருடங்களுக்குப் பிறகு விசாலத்தின் முதுமை அவளை உழைக்க ஒத்துழைக்கவில்லை. மாமியாரை உட்கார வைத்து ஜானகி ஒருத்தியே மெஸ்ஸை நடத்தினாள்.

"உனக்கு நானும் பாரமாய் இருக்கேன் ஜானகி!' என்று புலம்பினாள் விசாலம்.

"சும்மா பாரம், கீரம்ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க அத்தை. என்னை பிறந்த வீட்டுக்குக் கூட அனுப்பாம நீங்களே பிரசவம் பார்த்தீங்க. அப்போ நீங்க என்னைப் பாரம்ன்னு பார்த்தீங்களா!'

"ஒரு பிரசவத்தைப் பார்த்ததைப் பத்தி நீ இன்னும் பேசறே... என் பொண்ணுக்கு மூணு பிரசவம் பார்த்தேன். பெத்து வளர்த்த தாயை இப்ப அவ எட்டிக் கூட பார்க்க மாட்டேன்ங்கிறா!'

விசாலம் என்ன சொன்னாலும் ஜானகிக்கு மாமியார் ஒரு பாரமாய் தோன்றவில்லை. விசாலம் வெற்றிலை பாக்கு சாப்பிட்டுக் கொண்டும், பக்கத்து வீட்டு லட்சுமிப் பாட்டியிடம் பழங்கதைகள் பேசிக் கொண்டும் உட்கார்ந்திருக்க, சிரமம் சிறிதும் தோன்றாமல் கடுமையாய் உழைத்து குடும்பத்தை நடத்தினாள் ஜானகி.

சதீஷ் கல்லுõரிக்குப் போகும் வரை அந்த மெஸ் வருமானம் அவர்களுக்குப் போதுமானதாகவே இருந்தது. அவன் என்ஜினியரிங் சேர்ந்த பிறகு தான் பற்றாக்குறை ஏற்பட்டது. மாமியாரும், மருமகளும் தங்கள் நகைகளை எல்லாம் விற்று சதீஷைப் படிக்க வைத்தனர். அவன் பி.ஈ., முடித்து அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்த போது, மெஸ்ஸை அவர்கள் மூடினர்.

பல ஆசிரியர்களும், மாணவர்களும் உண்மையாகவே வருத்தப்பட்டனர். அவ்வளவு ருசியான சமையல் வேறு எங்கும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று பின்பு ஜானகியைச் சந்திக்கும் போதெல்லாம் கூறினர்.

சதீஷிற்கு திருமணமாகும் வரை அவர்கள் குடும்பம் சுமுகமாகவே இருந்தது. அவன் மனைவி சத்யா ஒரு வங்கியில் வேலை பார்த்தாள். அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே உரத்த குரலில், "டி' போட்டுப் பேசும் விசாலத்தைப் பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்த அவளது சிநேகிதிகளின் எதிரிலும் அதே போலப் பேசியது அவளுக்கு பெருத்த அவமானமாக இருந்தது.

ஒரு வேலையும் செய்யாமல், ஒரு பைசாவிற்கும் பிரயோஜனம் இல்லாமல் தண்டமாக இருக்கும் விசாலத்தை, "சுத்த நியூசன்ஸ்' என்று அவள் கணவனிடம் சொல்லாத நாளில்லை.

ஒருமுறை ஏதோ ஒரு வேலையை விசாலத்திடம் சத்யா சொல்ல, அந்த வேலையைத் தானே செய்து விட்டு தன் மருமகளிடம் சொன்னாள் ஜானகி...

"அவங்க காலத்தில் அவங்க வேணும்ங்கிற அளவு வேலை செஞ்சிருக்காங்க. இனிமே உனக்கு ஏதாவது செய்ய ணும்ன்னா நீ என்கிட்டே சொல்லு. நான் செய்யறேன். இந்த வயசான காலத்தில் அவங்க கிட்டே நாம வேலை வாங்கக் கூடாது!' அதிலிருந்து ஜானகி இருக்கையில் விசாலத்திடம் பேசுவதை தவிர்த்தாள் சத்யா.

அவர்கள் புதிய வீட்டுக்கும், பக்கத்து வீதியில் இருந்த லட்சுமிப் பாட்டி தினமும் விசாலத்திடம் பேச வருவதை நிறுத்தவில்லை. அந்தக் கிழவியைப் பார்த்தாலும் சத்யாவிற்குப் பிடிக்கவில்லை. தனக்குப் பிடிக்காததை எல்லாம் ஜானகி இல்லாத போது அவள் விசாலத்திடம் முகத்தில் அடித்தாற் போல சொல்லத் துவங்கினாள்.

விசாலம் சப்தமாய் பேசுவது, வெற்றிலை பாக்கு போடுவது, லட்சுமி பாட்டி அவர்கள் வீட்டுக்கு வருவது எல்லாம் ஒரு காலத்தில் நின்று போயின. சத்யா இருக்கும்போது தானிருக்கும் அறையை விட்டு வெளியே வரக் கூடப் பயந்தாள் விசாலம். ஆனாலும், சத்யாவின் வெறுப்பு ஏனோ குறையவில்லை.

விசாலம் வாய்விட்டு ஒன்றும் சொல்லா விட்டாலும், ஜானகிக்கு எல்லாம் தெரிந்து தானிருந்தன. ஏதோ ஒரு கைதியைப் போல அடங்கி, ஒடுங்கி, பயந்து வாழும் தன் அத்தையைப் பார்க்க அவளுக்கு வேதனையாக இருந்தது.

இன்று சதீஷ் திடீரென்று முதியோர் இல்ல குண்டை போடுகிறான். பிடிக்கவில்லை என்ற வெற்றுக் காரணம் சொல்லி நெருங்கிய சொந்த, பந்தங்களை இவர்களால் எப்படி உதறித் தள்ள முடிகிறது என்பது தான் அவளுக்கு விளங்கவில்லை.

கோவிலிலிருந்து விசாலம் வந்ததும் பாட்டியை சோபாவில் உட்கார வைத்து, மெல்லிய குரலில் சிறிது நேரம் பேசினான் சதீஷ். அவள் அறைக்கு வந்த போது பத்து வயது கூடியது போலத் தளர்ந்திருந்தாள். அந்த முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தி ஜானகிக்கு இருக்கவில்லை.

நிறைய நேரம் பேசாமல் கட்டிலில் பிரமை பிடித்தது போல உட்கார்ந்திருந்தாள் விசாலம். பின்பு மருமகளிடம் சொன்னாள்...

""பரவாயில்லை! அவன் என்னை நடுத்தெருவில் விட்டுடலியே... பணம் குடுத்து ஒரு இடத்தில் தங்கத் தானே வைக்கிறான்... என்ன பிரச்னைன்னா நான் இத்தனை நாள் உன் நிழல்லேயே இருந்துட்டேனா ஜானு, உன்னை விட்டு பிரியறதுன்னா மனசுக்கு ரொம்பவே கஷ்டமாய் இருக்குடி!''

கண்களில் பெருகிய நீரைக் காண்பிக்க விரும்பாமல் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டாள் ஜானகி. அன்றிரவு அவளும், விசாலமும் உறங்கவில்லை. முதியோர் இல்ல வாழ்க்கையை எண்ணி விசாலம் பயந்து கொண்டிருந்தாள் என்றால், ஜானகியோ வேறு பல சிந்தனைகளில் இருந்தாள். மறுநாள் காலை சீக்கிரமாகவே சமையலை முடித்து வெளியே போன ஜானகி, மாலை மகனும், மருமகளும் வருவதற்கு சற்று முன் தான் வந்தாள்.

""ஏண்டி ஜானு இவ்வளவு நேரம்? எங்கே போயிட்டே? நான் என்னென்னவோ நினைச்சு பயந்தே போயிட்டேன்,'' என்ற விசாலத்தைப் பார்த்து அவள் புன்னகை செய்தாளே ஒழிய பதில் ஏதும் சொல்லவில்லை.

அன்று இரவு கீழே உட்கார்ந்து தங்கள் இருவருடைய துணிமணிகளையும் சூட்கேஸ்களில் அடுக்கிய ஜானகியை கட்டிலில் உட்கார்ந்திருந்த விசாலம் திகைப்புடன் பார்த்தாள்...

""என் துணிமணியை எடுத்து வைக்கிறது சரிதான்; உன்னோடதை ஏண்டி ஜானு எடுத்து வைக்கிற?''

""உங்களை விட்டுட்டு நான் எப்படி அத்தை தனியாய் இருப்பேன். சாப்பிட்டா, எனக்குத் தொண்டையில் சோறு இறங்குமா? அதனால, நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் இங்கிருந்து போறோம்!''

""என்னடி சொல்றே ஜானு? நீயும் என் கூட முதியோர் இல்லத்துக்கு வர்றியா?''

""இல்லை அத்தை! நாம் முதியோர் இல்லத்துக்குப் போகப் போறதில்லை. நான் பழையபடி மெஸ் ஆரம்பிக்கப் போகிறேன். நாம ரெண்டு பேரும் நம்ம அந்தப் பழைய வீட்டுக்கே போகப் போகிறோம்!''

விசாலம் அதிர்ச்சியில் இருந்து மீள சிறிது நேரம் தேவைப்பட்டது. பின் அவள் கண்கள் கலங்க சொன்னாள்...

""ஜானு, என் ராசாத்தி, வேண்டாண்டி... எனக்காக நீ இந்தப் பைத்தியக்காரத்தனம் செஞ்சுடாதே. நான் உன்னை விட்டுப் போய் ரொம்ப நாள் இருக்க மாட்டேண்டி. சீக்கிரமே செத்துடுவேன்.

""என்னோட இந்தக் கொஞ்ச நாள் கஷ்டத்துக்காக நீ இந்த முடிவு எடுத்துடாதேடி... நீ, இது நாள் வரைக்கும் எனக்கு செஞ்சதுக்கே நான் ஏழு ஜென்மத்துக்கு உன் கால் செருப்பாய் இருந்தாக் கூட உன் கடன் தீர்க்க முடியாதுடிம்மா...''

மாமியாரின் காலடியில் வந்து உட்கார்ந்த ஜானகி பாசத்துடன் அவளைப் பார்த்தாள்...

""உங்களுக்காக நான் இந்த முடிவெடுத்தேன்னு யார் சொன்னது? அத்தை... எனக்கு இப்ப உழைக்கத் தெம்பிருக்கு. அதனால தான் என்னைக் கூட வச்சிருக்காங்க. ஒரு நாள் நானும், உங்க மாதிரி ஓய்ஞ்சுடுவேன். அப்போ, எனக்கும் முதியோர் இல்லம் தான் போக வேண்டி வரும்.

""அது புரிஞ்சு இப்ப நான் முழிச்சுகிட்டேன். அதான், இந்த முடிவு. நல்ல வேளையா, அந்த மெஸ் வீடு இப்ப காலியாத்தான் இருக்கு. நான் மெஸ் ஆரம்பிக்கப் போறேன்னு அங்கே சொன்னதும், சந்தோஷமா அந்தக் காலேஜ் வாத்தியாருங்க, பசங்க எல்லாம் சேர்ந்து பேசி அட்வான்ஸ் கூட கலெக்ட் பண்ணி என்கிட்ட கொடுத்துட்டாங்க.

""அத்தை... நமக்குப் பெரிய செலவில்லை! உடுக்க துணி, இருக்க கூரை, வயத்துக்கு சோறு இதைத் தவிர வேற என்ன வேணும்! சொல்லுங்க. மீதமாகிற காசை நான் சேர்த்து வைக்கப் போறேன். என் கடைசி காலத்தில் நான் முதியோர் இல்லம் போக வேண்டி வந்தாக் கூட என் சொந்தக் காசில் போய் இருக்க ஆசைப்படறேன்...''

""உன்னையெல்லாம் சதீஷ் அப்படிக் கை விட்டுட மாட்டான் ஜானு. அவன் நல்லவன்டி''

""சுயமாய் முடிவெடுக்கவும், செயல்படவும் முடியாதவங்க, நல்லவங்களா இருந்தாலும் பிரயோஜனம் இல்லை அத்தை!''

தாங்க முடியாத துக்கத்துடன் மருமகளை வெறித்துப் பார்த்தாள் விசாலம்.

""அத்தை... எல்லாத்துக்கும் மேல நாம நம்ம வீட்டில் சுதந்திரமாய் இருக்கலாம்; நீங்க சப்தமாய் பேசலாம். வெத்திலை, பாக்கு போடலாம்; லட்சுமி பாட்டியோட மணிக்கணக்கில் பேசலாம்!''

மருமகள் சொல்லச் சொல்ல, அவளைக் கட்டிக் கொண்டு நிறைய நேரம் அழுதாள் விசாலம். அதற்குப் பிறகு பேச அவளுக்கு வார்த்தைகள் இருக்கவில்லை.

மறுநாள் கால்டாக்சிக்குப் போன் செய்து விட்டு மகனிடம் தன் முடிவைச் சொன்னாள் ஜானகி.

அவன் எரிமலையாக வெடித்தான்...

""அம்மா, உனக்குப் பைத்தியம் பிடிச்சுடுச்சா? உனக்கென்ன இப்ப வேலை பார்க்கிற வயசா?''

""நான் இங்கே மட்டும் சும்மாவா உட்கார்ந்திருக்கேன்?''

""அம்மா நான் அந்த முதியோர் இல்லத்தில் பாட்டிக்காக அட்வான்ஸ் கூட கொடுத்துட்டேன்!''

தங்கள் சூட்கேஸ்களை எடுத்து டாக்சி டிரைவரிடம் கொடுத்து விட்டு மகனிடம் சொன்னாள் ஜானகி...

""அது வீணாப் போகாதுடா! அப்படியே வச்சிருக்கச் சொல்லு. 30 வருஷம் கழிச்சு நீங்க போறப்ப உபயோகமாகும்!''

""திடீர்ன்னு இப்படிக் கிளம்பினா எப்படி? நான் வேலைக்கு வேற ஆள் கூட ஏற்பாடு செய்யலை!'' என்றாள் சத்யா.

பதில் பேசவில்லை ஜானகி. அதிர்ச்சியிலிருந்து மீளாத மகனையும், திகைப்பில் ஆழ்ந்த மருமகளையும் பொருட்படுத்தாமல், தன் மாமியாரை கைத் தாங்கலாய் பிடித்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் ஜானகி.

-என்.கணேசன்

(இச்சிறுகதை தினமலர்-வாரமலர் போட்டியில் பரிசு பெற்றது)

Monday, February 25, 2008

படித்ததில் பிடித்தது-Little Eyes Upon You


நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் சிலருக்கு சில சந்தர்ப்பங்களில் முன் மாதிரியாகி விடுகிறோம். நமது செயல்களைப் பார்த்து நாமும் இப்படிச் செய்தால் என்ன என்று சிலரை நினைக்க வைத்து அப்படி நடக்க நம்மை அறியாமலேயே தூண்டியும் விடுகிறோம். பொதுவாகவே இப்படியென்றால் நாம் பெற்றோராகவோ, ஆசிரியராகவோ, மூத்த சகோதர சகோதரிகளாகவோ இருந்து விட்டால் பின் கேட்கவே வேண்டாம். பிஞ்சு உள்ளங்கள் நம்மை எல்லாவற்றிலும் முன்மாதிரியாக வைத்து நம்மைப் போலவே மாறக்கூடும். எனவே நாம் மிக ஜாக்கிரதையாக பொறுப்பு உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிற வகையில் அமைந்த இந்த ஆங்கிலக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. நீங்களும் படியுங்களேன்.

-என்.கணேசன்


Little Eyes Upon You


There are little eyes upon you
and they're watching night and day.
There are little ears that quickly
take in every word you say.

There are little hands all eager
to do anything you do;
And a little boy who's dreaming
of the day he'll be like you.

You're the little fellow's idol,
you're the wisest of the wise.
In his little mind about you
no suspicions ever rise.

He believes in you devoutly,
holds all you say and do;
He will say and do, in your way
when he's grown up just like you.

There's a wide-eyed little fellow
who believes you're always right;
and his eyes are always opened,
and he watches day and night.

You are setting an example
every day in all you do;
For the little boy who's waiting
to grow up to be like you.

~~ Author Unknown

Monday, February 18, 2008

உங்களைத் தொலைத்து விடாதீர்கள்!

ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனை மற்றவர்கள் போல் மாற்றும் முயற்சி ஆரம்பிக்கிறது. "அந்தப் பாப்பாவப் பாரு எப்படி சமத்தா இருக்கு". குழந்தையில் இருந்தே மற்றவர் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அவன் திணிக்கப் பெறுகிறான். "அவனைப் போல் இரு. இவனைப் போல ஆகு....." என்ற கட்டளைகள் வார்த்தைகளாகவும், சூட்சுமமாகவும் அவன் மனதில் ஏற்றப்படுகின்றன. இது தான் சிறந்தது, இது பிரயோஜனமில்லாதது என்பதை மற்றவர்கள் அவனுக்காக தீர்மானித்து விடுகிறார்கள். மற்றவர் வகுத்த பாதையில் பயணம் நடக்கிற வரையில் அவன் விமரிசனங்களை சந்திக்க வேண்டியதில்லை.

தனித்துவம் என்பதை பொதுவாக சமூகம் சகித்துக் கொள்வதில்லை. தப்பித் தவறி ஒருவன் தன் தனித்துவத்தில் சாதனை புரிந்து வெற்றி பெற்ற பின் அவனை ஓஹோ என்று போற்றுகிற சமூகம் அவனுடைய ஆரம்பகாலக் கட்டங்களில் அவனுக்கு உதவும் விதமாக இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை. எத்தனையோ துறைகளில் தங்கள் தனித் திறமையால் முத்திரை பதித்தவர்கள் வாழ்க்கை சரிதத்தைப் படிக்கையில் நாம் இதை உணர முடியும்.

ஆனால் கடவுள் படைப்பில் எதுவுமே இன்னொன்றின் நகலாக இருப்பதில்லை என்பதே மகத்தான உண்மை. ஒரு பெற்றோருக்கு இலட்சக்கணக்கில் குழந்தைகள் பிறக்க முடிந்தால் கூட எதுவும் இன்னொன்றின் நகலாக இருக்க முடியாது என்று விஞ்ஞானம் சொல்கிறது. இறைவன் அவ்வளவு நுணுக்கமாக வேறுபடுத்திப் படைக்கும் மனிதனை ஒரே மாடலில் வார்த்து மாற்றி விட சமூகம் விடாமல் முயற்சி செய்வது ஆச்சரியமே அல்லவா?

ஆனால் சோகம் என்ன என்றால் இந்த சமூகத்தின் முயற்சி பெரும்பாலானவர்கள் விஷயத்தில் வெற்றி பெற்று விடுவது தான். ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித் திறமையோடு தான் படைக்கப்படுகிறான். அதை விருத்தி செய்து சாதிக்கவே அவன் இயல்பு அவனைத் தூண்டும். ஆனால் எத்தனை பேரால் தங்கள் அந்தராத்மாவின் குரலைக் கேட்க முடிகிறது? அதன்படி நடக்க முடிகிறது? சமூகம் தன் இரைச்சலால் அந்த சின்னக் குரலை மூழ்கடித்தல்லவா விடுகிறது.

"என்ன இந்தக் கோர்ஸா எடுத்திருக்கிறாய்? முடிச்சா என்ன சம்பாதிக்க முடியும். பேசாம பி.ஈ பண்ணா மாசம் குறைந்த பட்சம் ஐம்பதாயிரமாவது சம்பாதிக்கலாம்"

"என்ன எழுத்தாளராகணுமா? அவனவன் எழுதின பேப்பருக்கான செலவு கூட திருப்பிக் கிடைக்காம கஷ்டப்படறான். அதெல்லாம் விட்டுட்டு இப்படி செய்தா காலம் பூரா கஷ்டப்படாம இருக்கலாம்"

இப்படி எத்தனையோ லாஜிக்கான, மறுக்க முடியாத வாதங்கள். மாறுபட்டு நடக்கவும் விமரிசனங்களைத் தாங்கவும் முடியாமல் போகும் போது, இத்தனை பேர் சொல்வது தப்பாக இருக்க முடியுமா என்று குழப்பம் வரும் போது, நம்முள் ஒலிக்கும் குரல் நிஜமா, பிரமையா என்ற சுய சந்தேகம் வரும் போது பெரும்பாலானவர்கள் சமூகம் வார்க்கும் வார்ப்புகளாக, இயந்திரங்களாக மாறி விடுகிறார்கள். தங்களைத் தொலைத்துக் கொண்டு மற்ற நிழல்களின் நிழல்களாக வெறுமையாகக் கரைந்து போகிறார்கள்.

நீங்கள் நீங்களாக இருக்கும் வரை நிறைவைக் காண்பீர்கள். மற்றவர்களின் நகல்களாக மாற முயற்சிக்கும் போது இயற்கையில் இருந்து விலகி செயற்கையாக வாழத் துவங்கும் போது நிறைவு மறைய ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.

வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனை சந்திக்கும் போது கடவுள் "நீ ஏன் பில் கேட்ஸ் போல் ஆகவில்லை என்று கேட்கப் போவதில்லை. நீ ஏன் நீயாக வாழவில்லை? உன் வாழ்க்கை வாழத் தானே உன்னைப் படைத்தேன். நீ ஏன் அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறாய்" என்று தான் கேட்கப்போகிறார். மாறாக மற்றவர்களின் நகல்களாக ஆக்கத் துடிப்பது சைத்தானின் வேலை. இதை நான் ஒரு கவிதையாக இன்னொரு பதிவில் தந்திருந்தேன்.

எனக்கென்று ஒரு வரம்

சாத்தான் நேரில் வந்தது
வரமொன்று கேள் என்றது
பொன்னும் பொருளும் போகங்களும்
போதிய வரை தர நின்றது
நான் நானாக வேண்டும்
எனக் கேட்டேன்.
நீ நீயானால் உன்னிடம்
எனக்கென்ன வேலை என்றது
ஏமாற்றத்துடன் சென்றது

எனவே உங்கள் உள்ளே ஒலிக்கும் குரலை உன்னிப்பாகக் கேளுங்கள். உங்களுக்கு இயற்கையாக உள்ள திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்ளுங்கள். இயற்கையாக உள்ள ஈடுபாடுகளை ஆராயுங்கள். இயற்கைக்கு ஒத்து கட்டுப்பாட்டுடன் வாழுங்கள். அடுத்தவர் செய்கிறார்களே என்று உங்களுக்கு ஒவ்வாத எதையும் செய்ய போகாதீர்கள். மற்றவர்கள் மெச்ச வேண்டுமென்று செயற்கையாக நடந்து கொள்ளாதீர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட வெட்கப்படாதீர்கள்.

திருபாய் அம்பானியும், நரசிம்ம மூர்த்தியும் தங்கள் துறையில் சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்திக் கொண்டார்கள், கொடி கட்டிப் பறந்தார்கள் என்று அவர்களைக் காப்பியடிக்க ஜேசுதாசும், குன்னக்குடி வைத்தியநாதனும் முயன்று இருந்தால் நாம் இரு துறைகளின் மேதைகளைப் பார்ப்பதற்கு பதிலாக இரு அனாமதேயங்களை அல்லவா பார்க்க வேண்டி இருந்திருக்கும்.

எனவே இந்தத் துறை தான் சிறந்தது, இந்த தொழில் தான் உயர்ந்தது, இந்த முறை தான் சரி என்று முன்கூட்டியே கணித்து உங்கள் மீது திணிக்க முனைபவர்களை அலட்சியம் செய்யுங்கள். உங்களுக்கு இயற்கையாக உள்ள ஈர்ப்பும் திறமையும் எதன் மீது உள்ளதோ அதில் உங்களுக்கு இருக்கும் தனித் தன்மையோடு ஆர்வத்தோடு முனையுங்கள்.

மற்றவர்கள் சொல்வது எல்லாம் முட்டாள்தனம், அலட்சியப்படுத்துங்கள் என்று சொல்ல வரவில்லை. அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள். அவர்கள் அனுபவ அறிவின் வாக்குகளை சிந்தியுங்கள். ஆனால் முடிவு மட்டும் உங்களுடையதாக இருக்க வேண்டும். உங்கள் உண்மையான தேடலையும், குணாதிசயங்களையும் ஒட்டியே அமைய வேண்டும். அதுவே உங்களுக்கு நிறைவைக் கொடுக்கும்.

மற்றவர் வாழ்வில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர் வாழ்க்கையில் இருந்து ஊக்கம் பெறுங்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையின் நகலாக வாழ்ந்து விடாதீர்கள்.

Francis Bacon எழுதிய வரிகளில் ஒன்று உலகப் புகழ் பெற்றது-"Character is Destiny". அதன் கூடவே வரும் இன்னொரு வாசகமும் அர்த்தம் பொதிந்த அருமையான உண்மை. - "Imitation is Suicide". இந்த வாசகத்தை நம் மனதில் பதித்துக் கொள்வது மிகவும் நல்லது. பிறரது நகல்களாக வாழ்வது தற்கொலை செய்து கொள்வது போன்றது.

முதலில் உங்களைக் கண்டறியுங்கள். மற்றவர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு உங்களை அமைதியாக ஆழமாக ஆராய்ந்தால் மட்டுமே உங்களை நீங்கள் கண்டறிய முடியும். இல்லா விட்டால் மற்றவர்கள் உங்களைப் பற்றிச் சொல்வதன் தொகுப்பையே "நாம்" என்று தவறான கணிப்பில் வாழ்ந்து விடுவீர்கள். உண்மையான உங்களைக் கண்டறிந்த பின், உள்ளே ஒலிக்கும் அந்தக் குரலைக் கேட்க ஆரம்பித்த பின் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ ஆரம்பியுங்கள். மற்றவர்கள் கண்களுக்கு அது சிறப்பென்று தோன்றாமல் இருக்கலாம். ஆனால் ஆத்ம திருப்தியை நீங்கள் உங்கள் வாழ்வில் உணர ஆரம்பிப்பீர்கள்.

உங்களைக் கண்டறிந்த பின் எக்காரணம் கொண்டும் உங்களைத் தொலைத்துக் கொள்ளாதீர்கள். அப்படித் தொலைத்து விட்டால் கூடவே வாழ்வின் எல்லா நன்மைகளையும் தொலைத்து விடுவீர்கள் என்பது மட்டுமல்ல, கடவுள் உங்களைப் படைத்ததன் அர்த்தத்தையே அனர்த்தமாக்கி வாழ்வை வீணடித்து விடுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

- என்.கணேசன்

Wednesday, February 13, 2008

படித்ததில் பிடித்தது - The Most Beautiful Flower



கண்கள் இருக்கிறது என்பதால் நம் பார்வையும் சரியாக இருக்கிறது என்று அர்த்தமில்லை. கண்ணிருந்தும் குருடராய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கணங்கள் எத்தனை என்பது கணக்கெடுக்க முடியாத எண்ணிக்கையே. அதைச் சுட்டிக் காட்டும் விதமாக ஒரு அழகான சிறு சம்பவத்தை கவிதையாக பெயர் தெரியாத ஒருவர் எழுதியிருந்ததை சமீபத்தில் படித்தேன். படித்து முடித்த போது மனம் நெகிழ்ந்து போயிற்று. மிகப் பெரிய பாடம் ஒன்றை இதய பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் உணர முடிந்தது. நீங்களும் படித்து ரசித்துப் பயன் அடையுங்களேன்.

- என்.கணேசன்



The Most Beautiful Flower

The park bench was deserted
as I sat down to read
Beneath the long, straggly branches
of an old willow tree.


Disillusioned by life
with good reason to frown,
For the world was intent
on dragging me down.


And if that weren't enough
to ruin my day,
A young boy out of breath
approached me, all tired from play.


He stood right before me
with his head tilted down
And said with great excitement,
"Look what I found!"


In his hand was a flower,
and what a pitiful sight,
With its petals all worn -
too little rain, too little light.


Wanting him to take his dead flower
and go off to play,
I faked a small smile
and then shifted away.


But instead of retreating
he sat next to my side
And placed the flower to his nose
and declared with surprise,


"It sure smells pretty
and it's beautiful, too.
That's why I picked it;
here - it's for you."


The weed before me
was dying or dead,
Not vibrant of colors,
orange, yellow or red.


But I knew I must take it,
or he might never leave.
So I reached for the flower, and replied,
"Just what I need."


But instead of him placing
the flower in my hand,
He held it mid-air
without reason or plan.


It was then that I noticed
for the very first time
That weed-toting boy could not see;
he was blind.


I heard my voice quiver,
tears shone like the sun
As I thanked him for picking
the very best one.


"You're welcome," he smiled,
and then ran off to play,
Unaware of the impact
he'd had on my day.


I sat there and wondered
how he managed to see
A self-pitying woman
beneath an old willow tree.


How did he know of
my self-indulged plight?
Perhaps from his heart,
....blessed with true sight.


Through the eyes of a blind child,
at last I could see
The problem was not with the world;
the problem was me.


And for all of those times
I myself had been blind,
I vowed to see the beauty in life,
and appreciate every second that's mine.


Then I held that wilted flower
up to my nose
And breathed in the fragrance
of a beautiful rose


And smiled as I watched that young boy,
another weed in his hand
About to change the life
of an unsuspecting old man.

-Author unknown

Saturday, February 9, 2008

இதில் நீங்கள் எந்த வகை?

சில ஆண்டுகளுக்கும் முன் உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியை நடத்தினார்கள். optimism, pessimism என்ற இருவகைப் பண்புகளும் மனிதர்களின் மனநிலையையும் அவர்களது நடவடிக்கையையும் எப்படியெல்லாம் தீர்மானிக்கின்றன என்பது தான் அந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். அதற்கு ஆரம்பத்தில் பள்ளிக் குழந்தைகளை ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுத்தார்கள். ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமியருள் optimism வகைக்கு ஒரு சிறுவனும், pessimism வகைக்கு ஒரு சிறுமியும் கடைசியில் முதல் நிலைக்குத் தேர்ச்சி பெற்றார்கள்.

அந்த இருவரையும் விரிவான கடைசி ஆராய்ச்சிக்குத் தங்கள் ஆராய்ச்சிக் கூடத்திற்கு வரவழைத்தார்கள். முதலில் அந்த சிறுமியை புத்தம் புதிய விளையாட்டுப் பொருட்கள் நிரம்பிய ஒரு அறைக்கு அனுப்பினார்கள். "இந்த அறையில் நிறைய புதிய விளையாட்டு சாமான்கள் இருக்கின்றன. உனக்கு அரை மணி நேரம் தருகிறோம். நீ எதில் எல்லாம் விளையாடுகிறாயோ அதெல்லாம் உன்னுடையவை. அவற்றை நீ உன் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்" என்று சொல்லி அனுப்பினார்கள். அறையினுள் வீடியோ காமிரா இருந்தது. தங்கள் ஆராய்ச்சி அலுவலகத்தில் இருந்து அந்தச் சிறுமியின் நடவடிக்கையை அவர்கள் கண்காணித்தனர்.

அந்தச் சிறுமி அந்த அறைக்கு உற்சாகமே இல்லாமல் தயக்கத்தோடு நுழைந்தாள். பின் ஒவ்வொரு பெட்டியையும் பிரித்து அதில் உள்ள விளையாட்டுப் பொருளை வெளியே எடுத்துப் பார்த்து அதை சுவாரசியமில்லாமல் தள்ளி வைக்க ஆரம்பித்தாள். "இதெல்லாம் புது விளையாட்டு சாமான் இல்லை. புதியதென்று சும்மா சொல்கிறார்கள்", "இதில் பேட்டரியே இல்லை. இதில் எப்படி விளையாடுவது", "எல்லாம் பழைய மாடல் விளையாட்டு சாமானாக இருக்கிறது. ஒன்று கூட ஹேரி பாட்டர் விளையாட்டு சாமான் கிடையாது", "இதில் கலரே சரியில்லை", "விளையாடியதை எல்லாம் வைத்துக் கொள்ளக் கொடுப்பேன் என்று சும்மா சொல்கிறார்கள். அப்படியெல்லாம் தர மாட்டார்கள்"...... என்றெல்லாம் அந்தச் சிறுமி சொல்லிக் கொண்டே ஒவ்வொன்றாக நிராகரித்ததைக் கண்டார்கள். அரை மணி நேரம் கழித்து அந்தச் சிறுமி ஒரு விளையாட்டு சாமானுடனும் விளையாடாமல் வெறுங்கையோடு வெளியே வந்தாள்.

ஆராய்ச்சியாளர்களால் தாங்கள் கண்டதை நம்ப இயலவில்லை. அத்தனை புதிய விளையாட்டு சாமான்களில் அந்தச் சிறுமியால் ஒன்றில் கூட விளையாட முடியவில்லை என்பது விசித்திரமாக இருந்தது.

அடுத்ததாக ஒரு அறையில் குதிரைச் சாணத்தை மலையாகக் குவித்து அந்த optimist சிறுவனை அந்த அறைக்குள் அனுப்பினார்கள். அனுப்பும் முன் "இந்த அறையில் நீ அரை மணி நேரம் விளையாடலாம்" என்று மட்டும் சொல்லி உள்ளே அனுப்பினார்கள். அந்த அறையினுள்ளும் வீடியோ கேமிரா வைத்திருந்ததால் அவர்களால் தங்கள் ஆராய்ச்சி அலுவலகத்தில் இருந்து அவனது நடவடிக்கையை கவனிக்க முடிந்தது.

சிறுவனுக்குக் குதிரைச் சாணத்தைப் பார்த்தவுடன் குஷி கிளம்பி விட்டது. ஒரே தாவலில் அந்தச் சாண மலைக்குள் பாய்ந்தான். அடுத்த அரைமணி நேரமும் பையன் சாணத்தை அறையெங்கும் இறைத்து பம்பரமாகச் சுழன்று சாணத்தில் விளையாடினான். பையனின் குதூகலச் சிரிப்புச் சத்தம் காதைப் பிளந்தது. அரை மணி நேரம் கழித்து பையனை வெளியே அழைத்து வந்தார்கள். சிறுவன் உடலெல்லாம் சாணம் ஒட்டியிருக்க, முகமெல்லாம் பல்லாக வெளியே வந்தான்.

ஆராய்ச்சியின் தலைவர் அந்தப் பையனிடம் ஆச்சரியத்துடன் கேட்டார். "உள்ளே அந்த சாணத்தில் அப்படி என்ன தான் விளையாடினாய்?"

அந்தச் சிறுவன் சொன்னான். "அத்தனை குதிரைச் சாணம் அங்கே இருக்கணும்னா கண்டிப்பா ஒரு குதிரையும் அங்கே எங்கேயாவது இருக்கணும். அதைத் தான் அந்த சாணத்துல தேடிகிட்டு இருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் என்னை விட்டிருந்தால் அந்தக் குதிரையை எப்படியாவது கண்டுபிடிச்சிருப்பேன்"

நிறையிலும் குறை காணுவது pessimissm என்றால் குறையிலும் நிறை காணுவது optimism.

பிரபஞ்சம் பூரணத்துவத்துடன் இயங்கினாலும் அது நமது மனக்கணிப்பில் உள்ள பூரணத்துவம் அல்ல. நமது கற்பனையின் படியோ, ஆசைப்படியோ உலகம் எப்போதும் இயங்குவதில்லை. நமது திருப்தியையோ, அதிருப்தியையோ உலகம் என்றுமே பொருட்படுத்தியதில்லை. இனி பொருட்படுத்தப் போவதுமில்லை. அப்படி இருக்கையில் உள்ளதை உள்ளபடியே ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம். உள்ளபடியே ஏற்றுக் கொண்டு அதை மெருகுபடுத்தியோ, நமக்கு வேண்டியபடி மாற்றிக் கொண்டோ நிறைவு காண்பது optimism. உள்ளதில் உள்ள சொத்தைகளைக் கண்டு சோர்வடைந்து சோகமடைவது pessimism.

நாம் எப்படியிருந்தாலும் காலச் சக்கரம் சுழன்று கொண்டு தான் இருக்கிறது. உலகம் தன் வழியில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. கடைசியில் எல்லாம் மண்ணோடு மண்ணாக சுவடில்லாமல் முடியத் தான் போகிறது. இங்கு இருக்கிற வரையில் நாம் இருக்கக் கூடிய இந்த இரண்டு வகைகளில் நீங்கள் எந்த வகை?

-என்.கணேசன்

Tuesday, February 5, 2008

படித்ததில் பிடித்தது - ஒழுக்கம் ஒரு குதிரைச் சவாரி


ரஜினிகாந்த் உட்பட பலர் தங்களது ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டிருந்த சுவாமி சச்சிதானந்தா அவர்களின் அருளுரைகளை சமீபத்தில் படித்தேன். ஒழுக்கம் பற்றி அவர் கூறி இருந்த கருத்துகள் எளிமையாக இருந்ததோடு ஆணியடித்தாற்போல் மனதில் பதிந்தது. அதுவும் அவர் குதிரைச் சவாரி உதாரணம் சொல்லி விளக்கியிருப்பது மிக அருமை. மாபெரும் உண்மை.

இன்றைய கால கட்டத்தில் கல்விக்கோ, பணத்திற்கோ நம் சமூகம் தரும் மதிப்பில் பத்தில் ஒரு பங்கு கூட ஒழுக்கத்திற்கு தருவதில்லை என்பது கசப்பான உண்மை. ஆனால் ஒழுக்கமில்லாத கல்வியும், பணமும் இன்று எப்படியெல்லாம் சீரழிவை ஏற்படுத்தி வருகின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கின்ற இக்கால கட்டத்தில் இந்த அருளுரையை நாம் படிப்பதும், பின்பற்றுவதும், மற்றவர்களுக்கு வலியுறுத்துவதும் மேன்மையைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒழுக்கம்

மிகச்சிலரே உண்மையில் ஓர் உயர்ந்த உன்னதமான நிலையை அடையவும், அதற்கான விலையைக் கொடுக்கவும் விரும்புகின்றனர். ஒழுக்கமே அந்த உயர்ந்த விலை.

ஒரு மனிதனை நிலவுக்கு அனுப்ப எவ்வளவு ஒழுங்கு தேவைப்படுகிறது? ஒரு ஒலிம்பிக் வீரனாக உருவாக எவ்வளவு ஒழுங்கு தேவைப்படுகிறது? வீரர்கள் புகைபிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு உள்ளது. அவர்களுக்குத் தடைச்சட்டங்கள் உள்ளன. இடைவிடாது அவர்கள் பயிற்சி செய்ய வேண்டும். ஆம், இவையெல்லாம் பதக்கம் என்ற ஒரு சிறு தங்கத் துண்டுக்காகத் தான்.

ஒரு சாதாரண மலை மீது ஏறுவதற்கே எவ்வளவு பயிற்சி அவசியம்? அவ்வாறானால் எவரெஸ்டின் மீது ஏறுவதற்கு எவ்வளவு அதிகமான ஒழுக்கம் அவசியம். இங்கு நாம் ஏற முயற்சிக்கும் மலையின் பெயர் Everest என்னும் அமைதி.

பலர் ஒழுக்கம் என்றால் ஏதோ சுதந்திரக் குறைவு, மகிழ்ச்சியற்ற அல்லது புழுங்கி வாழும் வாழ்வு என பயப்படுகிறார்கள். மிக வேகமாகத் தாவிச் செல்லும் ஒரு குதிரையின் சேணத்தின் மேல் கட்டப்பட்டு உங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியோ குதிரை உங்கள் மேல் அனுதாபப்பட்டு ஓடுவதை நிறுத்தும் என நீங்கள் பயணம் செய்வதாக உங்கள் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.

இதுவா ஆனந்த அனுபவம். அது நமது மனதின் மேல் நமக்குக் கட்டுப்பாடு இல்லாத போது உள்ள நிலை. அதே சமயம் எப்போது வேண்டுமோ அப்போது குதிரையை நிறுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி அதன் முதுகின் மேல் சவாரி செய்பவர் யாரோ அவரே உண்மையில் குதிரைச் சவாரியை ஆனந்தமாக அனுபவிக்க முடியும். உலகைக் கையாள்வது எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ளும் போது உலக வாழ்வை இனிமையாக அனுபவிப்பீர்கள். உங்கள் நாவின் மேலும், கண்களின் மேலும் கட்டுப்பாட்டை வைத்து ஆளத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையை உண்மையிலேயே ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்.

- சுவாமி சச்சிதானந்தா

Friday, February 1, 2008

உங்களுக்குப் பிரச்சினையா?-இதை அவசியம் படியுங்கள்

பல வருடங்களுக்கு முன்பு ரீடர்ஸ் டைஜஸ்டில் ஒரு கட்டுரை படித்தேன். அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர் "நான் படித்த மிகப்பெரிய பாடம்" என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதி இருந்த கட்டுரை அது.

அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த ஒரு கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வேலைப் பளு அதிகம் இருந்த ஒரு நாள் வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தினார். "முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது இது போல் கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை(problem) தருகிறீர்கள்." என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளினார். அவர் பேசியதில் பிரச்சினை என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப்பட்டது.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னார். "நீ பேசும் போது பிரச்சினை என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை (problem) என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு முதுகுத் தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது பிரச்சினை. உன் வீடு எரிந்து போய் இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது பிரச்சினை.... ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே அது பிரச்சினை. இது போன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்".

"மற்றபடி நீ பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள்(inconveniences). இது போன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்த சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக் கணக்கிலோ நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அற்ப விஷயமாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது."

"நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக் கொள். நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இது போன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது"

அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு எல்லாவற்றையும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் துவங்கியதாய் அந்த அதிகாரி அந்தக் கட்டுரையில் பின்னாளில் எழுதினார். "அவர் சொன்னது மிகப்பெரிய பாடமாக எனக்கு இருந்தது. அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும் போதெல்லாம் அது உண்மையான பிரச்சினையா, இல்லை அப்போதைய அசௌகரியமா என்று என்னையே கேட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விஷயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது. கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது"

அந்தக் கட்டுரை எனக்கும் பெரிய விழிப்புணர்வை படித்த அன்று ஏற்படுத்தியது. அன்றிலிருந்து அசௌகரியமா, பிரச்சினையா என்று ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலைகளில் நானும் என்னைக் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். சரியான பெயரில் அணுகும் போதே அதை சமாளிப்பது எளிதாகிறது. அசௌகரியத்தின் சக்தி எல்லாம் அந்தந்த நேரத்திற்குத் தான். நிதானம் இழக்காமல் இருந்தால் தூசைத் தட்டுவது போல் அதைத் தட்டிக் களைய முடியும். அப்படி முடியாததை அந்த நேரத்தில் சற்றுப் பொறுமையாக தாக்குப் பிடித்தால் அந்தக் கட்டத்தை சுலபமாக கடக்க முடியும். அந்தக் கேப்டன் சொன்னது போல வாழ்க்கையில் நாம் பிரச்சினையாகக் கருதுவதில் பெரும்பாலானவை அசௌகரியங்களே.

நம்மில் எத்தனை பேர் அசௌகரியங்களை பூதக்கண்ணாடி மூலம் பார்த்து அதற்குப் பிரச்சினை என்று பெயரிட்டு தேவைக்கும் அதிகமாக கொந்தளித்து, நிஜமாகவே பிரச்சினை ஆக்கி, மற்றவர்கள் மன அமைதியையும், நம் மன அமைதியையும் இழந்து அல்லல் படுகிறோம். பல சமயங்களில் நாம் அப்படிப்பட்ட 'பிரச்சினை'யைக் கைவிடுவது எப்போதென்றால் அடுத்த 'பிரச்சினை' ஒன்று வரும் போது தான்.

நீங்களும் நிதானமாக யோசியுங்கள்- உங்கள் பிரச்சினை உண்மையில் பிரச்சினை தானா? இல்லை இப்போதைய அசௌகரியமா? இப்போதைய அசௌகரியம் என்றால் அப்படி உணரும் போதே மன உளைச்சல் தானாகக் குறையக் காண்பீர்கள். அதை சரி செய்யப் பாருங்கள். அல்லது அலட்சியப்படுத்துங்கள். அதை சிறிது காலம் தாக்குப் பிடியுங்கள். அப்படிச் செய்தால் அவை சீக்கிரமாகவே விலகுவதைக் காண்பீர்கள். அவற்றிற்கு நீங்கள் தரும் நேரமும், கவனமும், சக்தி விரயமும் குறையும் போது உண்மையான ஓரிரு பிரச்சினைகளுக்கோ, தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்களுக்கோ அந்த நேரத்தையும், அந்த கவனத்தையும், அந்த சக்தியையும் நீங்கள் தர முடியும். பிரச்சினைகள் இருந்தால் தீர்க்கவும், சாதனைகள் புரியவும் இந்த சிறிய பாகுபாடும், பக்குவமும் நிறையவே உங்களுக்கு உதவி புரியும்.

-என்.கணேசன்