என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, October 1, 2026

சதுரங்கம் 38

 


கீதாவுக்கு சாவித்திரியின் வீட்டைக் கண்டுபிடிக்க அதிக சிரமம் இருக்கவில்லை. அந்தக் குறுகிய வீதியில் வலதுபுறம் நான்காவது வீடு என்று சொல்லியிருந்தார்கள். கிட்டத்தட்ட பல பத்திரிக்கையாளர்களும், ஊடகவியலாளர்களும் அந்த வீட்டுக்கு வந்து சாவித்திரியிடம் பேட்டி எடுத்து விட்டுப் போயிருந்ததால் சாவித்திரி ஓரளவு பிரபலமாகியிருந்தாள். அவளுக்குத் தெரிந்ததையெல்லாம் அவள் பேட்டி எடுத்தவர்களிடம் சொல்லியிருந்தாலும் சொல்லாததும் இருக்கக்கூடும் என்று அர்ஜுன் நம்பினான். தெரிந்தும், சொல்லக்கூடாது என்று நினைத்து சொல்லாமல் விட்டுப் போனதாக எதுவும் இருக்கா விட்டாலும், சம்பந்தப்பட்ட கேள்வி எழுப்பாததால், சொல்லாமல் விடுபட்ட பதிலாக அது இருக்கலாம் என்று அர்ஜுன் சொன்னான்.

 

நர்மதா வீட்டுக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்த அந்தக் கருப்பு பென்ஸ் கார் மனிதனைப் பற்றி கீதாவிடம் சொன்ன அர்ஜுன் அந்த ஆளைக் குறித்து ஏதாவது தகவலை சாவித்திரி அறிந்திருக்கலாம் என்று நினைப்பதாகவும் சொன்னான்.

 

அதைக் கேட்ட கீதா சொன்னாள். ”நீ சொல்றதைப் பார்த்தா அந்த ஆள் அதிகமாய் நர்மதா வீட்டுக்கு வந்து போன நேரம் ராத்திரி ஒன்பது மணில இருந்து பத்து மணிக்குள். சாவித்திரி நர்மதா வீட்டுக்கு வேலைக்கு வந்து போனதோ காலையில் இருந்து மதியத்திற்குள் தான். அப்படி இருக்கறப்ப சாவித்திரிக்கு எதாவது தெரிஞ்சுருக்கலாம்னு எப்படி சொல்றே அர்ஜுன்?”

 

அர்ஜுன் சொன்னான். “சாவித்திரி மாதிரி வேலைக்காரிகள் எல்லாம் தங்கள் முதலாளிகளைப் பற்றி எப்பவுமே அதிகமாய் தெரிஞ்சு வெச்சிருப்பாங்க கீதா. அவங்க மனநிலை, நர்மதா வீட்டுப் பகுதில இருக்கற மேட்டுக்குடி மக்கள் மனநிலைக்கு எதிர்மாறான மனநிலையாய் தான் இருக்கும். எதையும் கூடுதலாய் கூர்ந்து கவனிப்பாங்க. சம்பந்தமில்லாத விஷயங்களையும் கூடுதலாய் தெரிஞ்சுக்க ஆசைப்படுவாங்க. சொல்லப் போனால், பிரபலங்களோட வேலைக்காரங்கள்ல பலருக்கும் சுவாரசியமான பொழுது போக்கே முதலாளிகளின் அந்தரங்க விஷயங்களைத் தெரிஞ்சுக்கறது தான்…”

 

அப்படி ஏதாவது சாவித்திரி அறிந்திருந்தால் அதை அறிந்து கொள்ளத்தான் கீதா இப்போது இங்கே வந்திருக்கிறாள். சாவித்திரி நான்கு வீடுகளில் வேலை செய்பவள். காலை ஏழு மணியிலிருந்து மதியம் இரண்டரை மணி வரை அவள் அந்த வீடுகளில் வேலை செய்கிறாள் என்பதை அறிந்திருந்ததால் நான்கு மணியளவில் கீதா அங்கே வந்து சேர்ந்திருக்கிறாள்.

 

சாவித்திரி கீதாவைப் பார்த்தவுடனேயே அவள் பத்திரிக்கை அல்லது சமூக ஊடக நிருபர் என்பதைக் கண்டுபிடித்து விட்டாள். இப்போதெல்லாம் அவளுக்குத் தெரியாத யாராவது அவளைத் தேடி வந்தாலே அந்த நபர் நிருபராகத் தான் இருக்க வேண்டுமென்பதை அவள் யூகித்து விடுகிறாள். வேறு யார் அவளைத் தேடி வரப்போகிறார்கள்? அவர்களுக்கு பேட்டி கொடுப்பதில் அவளுக்கு ஆனந்தமே. அவர்கள் வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பதற்கு முன் அவள் சிறிது ஒப்பனை செய்து விட்டு வரவும் கற்றுக் கொண்டிருக்கிறாள்.

 

நர்மதா இறந்த பின் காலை நேரத்தில் அவள் கொடுத்த பேட்டி பல தொலைக்காட்சிகளில் வந்திருந்தது. அதிலெல்லாம் அவள் கலைந்த தலைமுடியோடு இருந்தது, தொலைக்காட்சியில் அவள் தெரிந்த சந்தோஷத்தை, பாதியாகக் குறைத்து விட்டது. அதனால் அவள் இப்போதெல்லாம் மிகவும் கவனமாக இருக்கிறாள். கீதாவிடம் எந்தப் பத்திரிக்கை என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அவளை அமர வைத்து விட்டு உள்ளே போய் அவசர அவசரமாய் ஒப்பனை செய்து கொண்டு அவள் புன்னகையுடன் வெளியே வந்தாள். 

 

மற்ற பத்திரிக்கைகளுக்கும், ஊடகங்களுக்கும் சாவித்திரி தந்த பேட்டிகளை கீதா படித்திருந்தாள். அந்தப் பொதுவான கேள்விகளையே அவளும் ஆரம்பத்தில் கேட்டாலும், சாவித்திரி சொன்ன பதில்களைப் புதிதாய் கேட்பது போல் கேட்டுக் கொண்டாள்.

 

சாவித்திரி நர்மதாவிடம் நான்கு வருடங்களாய் வேலை பார்க்கிறாள். நர்மதா அவளிடம் அன்பாய் இருந்தாள். பெரும்பாலும் காலை எட்டிலிருந்து ஒன்பது மணிக்குள் நர்மதா வீட்டுக்கு வேலைக்குப் போய் விடுவாள். வெளி கேட் சாவியும், உள்ளே பிரதான கதவின் சாவியும் அவளிடமும் இருக்கின்றன. அவளுடைய சாவிகளை வைத்து யாரும் கள்ளச்சாவிகள் தயாரித்திருக்க வழியே இல்லை. அவள்  வீட்டுக்கு வந்தவுடன் பத்திரமாக அந்தச் சாவிகளை பீரோவில் வைத்து பூட்டி விடுவாள். அப்படி வைப்பது பாதுகாப்புக்காக மட்டுமல்ல மறுநாள் அதைத் தேட வேண்டியதில்லை என்பதால் தான் இப்படி ஆரம்பத்திலிருந்து செய்து வருகிறாள்…. இந்தத் தகவல்கள் எல்லாம் தங்கு தடையில்லாமல் சாவித்திரியிடமிருந்து வந்தன.

 

“இது தற்கொலையாக இல்லாமல் கொலையாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறதாய் உங்களுக்குத் தோன்றியிருக்கா?” என்று கீதா கேட்ட போது சாவித்திரி முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த போலீஸ்காரர் நர்மதா கொலை செய்யப்பட்டு இருக்கக்கூடும் என்றெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமாக யாரிடமும் சொல்லக் கூடாது என்று எச்சரித்து விட்டுப் போயிருந்தார். ”அப்படிச் சொன்னால் நீ தான் சாவியைக் கொடுத்து கொலையாளிக்கு உதவியிருக்கிறாய்” என்று சொல்லி விசாரணைக்கு அடிக்கடி அழைப்போம் என்று பயமுறுத்தி விட்டுப் போயிருந்தார். என்னவொரு அநியாயம்!

 

“இல்லைம்மா” என்று சுருக்கமாய் சாவித்திரி சொல்லி விட்டாள்.

 

“நீங்க காலை நேரம் அல்லாமல் சாயங்காலம் அல்லது ராத்திரி நேரங்களில் எப்போதாவது வேலைக்கு வந்திருக்கீங்களா?”

 

“இல்லைம்மா”

 

“நர்மதா ஏன் தற்கொலை செஞ்சுகிட்டாங்கன்னு நினைக்கிறீங்க.?”     

 

“வாழ்க்கைல அவங்களுக்கு விரக்தி வந்திருக்கணும் பாவம்”

 

“சினிமால வாய்ப்பு குறைஞ்ச சமயங்கள்ல அவங்களுக்கு விரக்தி வந்திருக்கலாம். ஆனால் போகப் போக அவங்களுக்கு அது பழகிட்ட மாதிரி தான் எனக்குத் தோணுது. நான் மூனு மாசத்துக்கு முன்னாடி அவங்கள பேட்டி எடுத்தப்ப அவங்க அதைத்தான் சொன்னாங்க. அதுமட்டுமில்லாமல் அவங்க பணத்துக்கு கஷ்டப்படற நிலைமையும் இருக்கலையே”

 

சாவித்திரி மெல்லக் கேட்டாள். “நீங்க மூனு மாசத்துக்கு முன்னாடி அவங்கள பேட்டி எடுத்தீங்களா?”

 

கீதா ஒரு ரகசியத்தை அவளிடம் மட்டும் பகிர்ந்து கொள்வது போல் தாழ்ந்த குரலில் சொன்னாள். “ஆமா. ஆனால் இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்குள்ளே மட்டும் இருக்கட்டும்.  நான் பேட்டி எடுத்தப்போ அவங்க மனசு விட்டுப் பேசினாங்க. சினிமாத் துறையில நடிகர்களுக்கு இருக்கற சலுகைகளும் மரியாதைகளும் நடிகைகளுக்குக் கிடைக்கறதில்லைன்னு என் கிட்ட ஆதங்கப்பட்டாங்க. அது உண்மை தானே. இங்கே நடிகர்கள் ஐம்பது வயசு தாண்டினாலும் கதாநாயகர்கள் தான். ஆனால் நடிகைகள் முப்பது, முப்பத்திரண்டு தாண்டினாலே அக்கா, அம்மா வேஷம் போட வேண்டி வந்துடுது. என்ன செய்யறது? அப்ப தான் ”இப்பவெல்லாம் மனசு எல்லாத்தையும் ஏத்துக்க பழகிடுச்சு”ன்னு என் கிட்ட மனசார சொன்னாங்க. அந்தப் பேட்டியை பாதில நிறுத்த வேண்டியதாய் போச்சு. யாரோ ஒருத்தர் கருப்பு பென்ஸ் கார்ல வந்தார். அவரைப் பார்த்தவுடன நர்மதா “மீதி பேட்டியை இன்னொரு நாள் வெச்சுக்கலாம்”னு என்கிட்டே சொல்லிட்டாங்க.   நானும் பிறகு அடிக்கடி வெளியூர் போயிட்டதால மீதி பேட்டி எடுக்க வர முடியலை. அவங்க இறந்துடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் கண்டிப்பாய் வந்து பேட்டியை எடுத்திருப்பேன்…”  

 

சொல்லி விட்டு கீதா சாவித்திரியைக் கூர்ந்து பார்த்தாள். கருப்பு நிற பென்ஸ் கார் சாவித்திரியிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடவில்லை. அப்படியானால் அந்த நபர் பற்றி அவளுக்குத் தெரியாது போலிருக்கிறது….

 

ஆனாலும் கீதா தொடர்ந்து சொன்னாள். ”அந்தக் கார்ல வந்தவர் கொஞ்சம் லேட்டாய் வந்திருந்தால் நான் பேட்டியை முடிச்சிருப்பேன். நர்மதா கடைசியாய் கொடுத்த பேட்டிங்கற பெருமையும் இருந்திருக்கும்.”

 

சாவித்திரி மெல்லக் கேட்டாள். “அந்த ஆள் பார்க்க எப்படி இருந்தார்?”

 

”பார்க்க பெரிய பணக்காரர் மாதிரி தெரிஞ்சார். கருப்புக் கண்ணாடி போட்டிருந்தார்.” என்று கற்பனையாகச் சொன்ன கீதா திடீரென்று சாவித்திரியைக் கேட்டாள். ”அவரை நீங்க பார்த்திருக்கீங்களா?”  

 

சாவித்திரி “இல்லை” என்றாள். பின் யோசனையுடன் அவள் சொன்னாள். “நீங்க சொல்றதைப் பார்த்தா அன்னைக்கு நான் பார்த்த கோடி ரூபாய் வாட்ச் அந்த ஆளோடதாய் தான் இருந்திருக்கணும்.”

 

கீதா பரபரப்பானாள். “கோடி ரூபாய் வாட்ச்சா?”

 

(தொடரும்)

என்.கணேசன்



1 comment: