என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 6, 2026

சதுரங்கம் 30

 


விமலுக்கு இனி அடுத்த வேலை எதிரியோடு தான். எதிரி என்று சொல்வது கூட ஒரு விதத்தில் தவறு தான். .டி.எம் மெஷின் என்றோ, அள்ளித் தர முடிந்தவன் என்றோ தான் சொல்ல வேண்டும். அவனிடம் பேசுவது தான் விமல் அடுத்த செய்ய வேண்டிய காரியம். ஆனால் இப்போது பேசுவது ஆபத்து. பேசினால் அவன் ரிஷிகேசத்திற்குச் சென்று சேர்வதற்குள் பிடிபட்டு விட வாய்ப்பு இருக்கிறது. அவன் பேசிய சிறிது நேரத்திற்குள் ராஜாசிங்கை போலீஸ் நெருங்கிவிடும். ராஜா சிங்கும், சோனா ஓட்டல் ஆட்களும் அவனை நினைவுபடுத்த முடிந்த காலம் கழிய வேண்டும். அவன் தோற்றத்தைச் சொல்லி போலீஸ் யாரையும் விசாரித்து எதையும் தெரிந்து கொள்ள முடிந்த காலம் கழிய வேண்டும். அதுவரை காத்திருப்பது தான் புத்திசாலித்தனம். இதில் அவசரப்படுவது மரணத்திற்கு அவசரப்படுவது போல் ஆகிவிடும். விமல் முடிந்த அளவு இந்த உலக சுகங்கள் அனைத்தையும் அனுபவித்து விடுமளவு ஆயுளோடு இருக்க ஆசைப்படுகிறான்.

 

இந்த அலைபேசி சரியாக வேலை செய்கிறதா என்று அவன் சோதித்துப் பார்க்க வேண்டும். தெரிந்த யாருக்கும் போன் செய்வதும் ஆபத்து. பிறகு யாருக்குப் போன் செய்வது என்று அவன் ஆலோசித்துக் கொண்டே நடந்த போது எதிரே ஒரு பிரம்மாண்டமான விளம்பரப்பலகை தென்பட்டது. “ரூ.1.10 கோடி முதல் 2.45 கோடி வரை பட்ஜெட்டில் அதிநவீன ஃப்ளாட்டுகள், ஜிம், டென்னிஸ் கோர்ட், ஸ்விம்மிங் பூல் வசதிகளுடன்…. இன்றே புக் செய்ய அழைக்கவும்….” என்று ஒரு அலைபேசி எண்ணைத் தந்திருந்தார்கள்.

 

விமல் புன்னகைத்தான். இந்த அலைபேசியில் முதல் அழைப்பாக, கோடிக்கு மேல் விலைமதிப்புள்ள ஒரு வியாபார விஷயத்தைப் பற்றிப் பேசுவது நல்ல சகுனமாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. அதிர்ஷ்டம் அவனுக்கு அனுகூலமாக இருந்தால் இனிமேல் எப்போதும் கோடி ரூபாய்க்குக் கீழ் பேசுகின்ற நிலைமையே அவனுக்கு வராது…. இந்த எண்ணத்துடன் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டான்.

 

நுனிநாக்கு ஆங்கிலத்தில் ஒருவர் பேசினார். அவரிடம் தன்னை நானாஜி தேஷ்முக் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தனக்கும் ஒரு ஃப்ளாட் தேவைப்படுவதாக அவன் சொன்னான். பணம் எத்தனை வெள்ளையிலேயே தந்தாக வேண்டும் என்று கேட்டான். ”நீங்கள் நேரில் வாருங்கள், பேசுவோம். அட்வான்ஸாக பத்து லட்சம் தந்தால் போதும்….” என்று பவ்யமாக பதில் வந்தது. அடுத்த வாரம் வருவதாகச் சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான். அலைபேசி வேலை செய்கிறது.  இப்போதைக்கு முதல் வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டது.

 

ர்ஜுன் வீட்டுக்கு வந்து ரகசியமாக நித்யாவிடம் தன்னுடைய அத்திவாக்கப் பயணத்தைப் பற்றிச் சொன்னான். மகுடபதிரங்கநாயகி தம்பதியரின் தற்கொலையைப் பற்றி அவன் சொன்ன போது அவள் முதலில் அதிர்ச்சி அடைந்தாள். பின் கண்கலங்கினாள். குரல் தழுதழுக்க அண்ணனிடம் சொன்னாள். “கேட்டுட்டு நமக்கே மனசு அதிருதே. அம்மா அந்த சமயத்துல எப்படியண்ணா அதைத் தாங்கி இருப்பாங்க?”

 

தங்கையை அர்ஜுன் மிகுந்த பாசத்துடன் பார்த்தான். அவளுடைய பேச்செல்லாம் சில சமயங்களில் அடாவடியாக இருக்குமே ஒழிய அவள் மனம் மிக மென்மையானது. யார் கஷ்டப்படுவதையும் அவள் தாங்க மாட்டாள். அதிலும், அவளுடைய அம்மா, அப்பா, அண்ணன் மூவருக்கும் சின்னதாக எதாவது கஷ்டம் வந்தாலும் அவளால் தாங்க முடியாது.

 

ஏன் அவங்க தற்கொலை பண்ணியிருப்பாங்கண்ணா?”

 

தெரியலை. நமக்குப் புரியாத நிறைய புதிர்கள் இதில் இன்னுமிருக்கு. நம்ம தாத்தாவோட பெரிய ஃபோட்டோ மாடசாமி வீட்டில் இருக்கு. தாத்தாவோட அரசியல் வாழ்க்கை பற்றியும் நிறைய பேசறார். நம்ம அப்பா, சித்தப்பா பற்றியும் பேசறார். ஆனா அவருக்கு அவரோட அபிமான அரசியல் தலைவரோட மனைவி மட்டுமல்ல, மூத்த மருமகளும் கூட அவரோட கிராமத்தைச் சேர்ந்தவங்கன்னு தெரியல.  தற்கொலை செஞ்சுட்டு இறந்து போன மகுடபதி அவரோட தலைவரோட சம்பந்தின்னு தெரியல…. தாத்தா வாசுதேவன் அவரோட மாமியார் வீட்டுக்குப் போயிட்டு இருந்த காலங்கள்ல, தாத்தா மகுடபதி அவரைச் சந்திக்கலைன்னு மாடசாமி சொல்றார். நான் முதல்ல நம்ம அப்பா, அம்மாவைச் சந்திச்சது அந்தக் கிராமத்துக்குப் போய்ட்டு வந்துகிட்டு இருந்த சமயத்துல இருக்கும்னு நினைச்சேன். ஆனால் அப்பா, சித்தப்பா எல்லாம் அங்கே அதிகமாய் போனதில்லைன்னு அவர் சொல்றார்…”

 

பார்த்துப் பிடிச்சுப் போறதுக்கு பல தடவை சந்திக்கணும்னு இல்லையே. ஒரே தடவைல கூடப் பிடிச்சுப் போலாமில்லையா?”

 

அது சரி தான். ஆனால் அப்படிப் பிடிச்சுப் போனா திரும்பவும் பார்க்கணும்னு அடிக்கடி போயிருப்பார் தானே. அது நடக்கலைங்கறேன்.”

 

நித்யா சிறிது யோசித்து விட்டுச் சொன்னாள். “எனக்கு ஒன்னு புரியலை அண்ணா. அந்தப் பெரியவர் மாடசாமிக்கு நம்ம அம்மா பெயர் கூட ஞாபகம் இல்லை. நம்ம அம்மா என்ன ஆனாங்கன்னு தெரியலை. தலைவரோட மூத்த மருமகள் தான் நம்ம அம்மான்னு தெரியலைங்கறது எல்லாம் எங்கேயோ இடிக்குதே அண்ணா. நம்ம அம்மா அப்பா கல்யாண காலத்தில் தாத்தா எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சித் தலைவரோட முதல் மகன் கல்யாணம் நடக்கறது பத்திரிக்கைகள்ல ஃபோட்டோவோட வராமயா இருந்திருக்கும். கல்யாணத்துக்கு மாடசாமி போகலைன்னே வெச்சுக்குவோம்., பத்திரிக்கைகள்ல அம்மா ஃபோட்டோவைப் பார்த்தப்ப தெரியாமயா போயிருக்கும்.? பத்திரிக்கைகள்ல பார்த்து அந்தக்  கிராமவாசிகள்ல ஒருத்தர் கூடவா கண்டுபிடிக்காமல் இருந்திருப்பாங்க? கண்டுபிடிச்சிருந்தால் பேசியிருப்பாங்களே.”

 

அவள் சொல்வதும் சரி தான். அர்ஜுன் சொன்னான். “மற்ற கிராமவாசிகளை விடு. பாட்டியோட அண்ணா தம்பிகள் எல்லாம் அதே கிராமத்துல தான் அப்ப இருந்தாங்க? பாட்டியோட அப்பா மட்டும் தான் அப்ப இறந்திருந்தார்னு நினைக்கறேன். அவங்கள்ல்லாம் கல்யாணத்துக்கு வந்து போயிருப்பாங்க. அவங்களும் அதைப் பற்றிப் பேசாமயா இருந்திருப்பாங்க?”

 

இருவரும் பரபரப்புடன் இணையத்தில் பழைய பத்திரிக்கைக்குறிப்பு, அல்லது திருமணப்படங்கள் எதாவது இருக்கிறதா என்று தேடினார்கள். அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. நித்யாவை அம்மா எதோ வேலையாக அழைத்தாள்.

 

போகும் முன்நீ தேடிப் பாருண்ணா. கண்டுபிடிச்சுச் சொல்லு. தெரிஞ்சுக்காம நான் தூங்கப் போக மாட்டேன்….” என்று நித்யா சொல்லிவிட்டுப் போனாள்.

 

பழைய ஆட்கள் யாரிடமாவது கேட்கலாம் என்றால் அவனுடைய குடும்ப விஷயம் அவனுக்கே தெரியாமல் அவன் கேட்கிறான் என்று ஆகிவிடும். பாட்டியிடமும், ராஜாராமிடமும் கேட்பதிலும் அது தான் பிரச்சினை. அவனுடைய அப்பா, அம்மாவிடம் அவனால் நேரடியாகக் கேட்க முடியவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது போல் ஆகிவிடும். அவன் அதை விரும்பவில்லை.

 

இணையத்தில் தேடிய போது ராஜாராமின் திருமணப் புகைப்படங்கள் நிறைய கிடைத்தன. அப்போதைய முதல்வர் தணிகாச்சலம், அமைச்சர் ரத்தினம் (பின்னாள் முதல்வர்) அனைவரும் பங்கு பெற்றிருந்தார்கள். தந்தை இல்லாததால் அவர் ஸ்தானத்தில் நின்று ஞானமூர்த்தி தான் தம்பியின் திருமணத்தை நடத்தியிருந்தார். அக்காலத்தில் அப்பா, அம்மா, பாட்டி, சித்தப்பா, சித்தி எல்லாரும் எப்படி இருந்தார்கள் என்று ஆர்வத்துடன் அந்தப் புகைப்படங்களை அர்ஜுன் பார்த்தான்.

 

ராஜாராமின் திருமணப்படங்கள் பத்திரிக்கைகளில் கிடைத்தது போல ஏன் ஞானமூர்த்தி-பானுமதியின் திருமணப்படங்கள் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு அன்றைய முதல்வர் தணிகாச்சலம் அன்று பேசியதில் அர்ஜுனுக்குப் பதில் கிடைத்தது.

 

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் தலைவர் உயிரோடு இல்லையே என்கிற வருத்தம் என் இதயத்தை அழுத்துகிறது. ஆனால் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தத் திருமண விழா இவ்வளவு சிறப்பாக நடந்திருக்க வழியில்லை என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். தலைவர் குடும்பத்தில் நடக்கும் இரண்டாவது திருமணம் இது. ஆனால் மூத்த மகன் திருமணத்தின் போது அவர் உயிரோடு இருந்தார். சொல்லப்போனால் அந்தத் திருமணத்தில் அவர்கள் குடும்பம் மட்டுமே இருந்தது. திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதில் தலைவருக்கு உடன்பாடில்லை. அந்தத் திருமணத்தை குமரக் கோட்டத்தில் மிக மிக எளிமையாக நடத்தி முடித்து விட்டு வந்த பின் தான் அவர் எங்களுக்கே தெரிவித்தார். நான் அதற்காகத் தலைவரிடம் நன்றாக சண்டை போட்டிருக்கிறேன். அவருடைய தம்பிகளான எங்களையாவது அழைத்திருக்க வேண்டாமா என்று அழாத குறையாகக் கேட்டிருக்கிறேன். திருமணத்திற்குச் செல்ல முடியாத நானும் மற்ற தலைவர்களும் பின்பு அவர் வீட்டுக்குப் போய் தான் மணமக்களை வாழ்த்திவிட்டு வந்தோம்….”    

 

(தொடரும்)

என்.கணேசன்




4 comments:

  1. ஈரோடு புத்தகக் கண்காட்சியில் தங்கள் புத்தகம்' சக்தி 'கிடைக்குமா? கிடைக்குமானால் பதிப்பகம் சொல்லவும்

    ReplyDelete
    Replies
    1. சமீபத்தில் யாரும் வாங்கிச் செல்லவில்லை.

      Delete
  2. I have purchased Shakthi and Viyugam novels of our beloved writer N Ganeshan from Coimbatore books exhibition

    ReplyDelete