சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 21, 2024

சாணக்கியன் 136

 

ர்வதராஜன் சொன்னான். “ஆச்சாரியர் என் நெருங்கிய நண்பர். நெருங்கிய நண்பர்களிடம் எப்போதும் சரியாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்பவராக இருந்தாலும் அவர்  மற்றவர்களிடமும் அப்படியே இருப்பார் என்று என்னால் உறுதியளிக்க முடியாது. எத்தனையோ பேர் அவர் சூழ்ச்சிகளில் ஏமாந்து போயிருப்பதை நான் அறிவேன்.”

 

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள காஷ்மீர மன்னன் சொன்னான். “எனக்கு மிகவும் நன்றாகப் பரிச்சயமுள்ள ஒருவன் தட்சசீலத்தில் அவரிடம் படித்தவன். அவர் அந்தக் காலத்திலேயே மந்திர தந்திரங்களை மிக நன்றாக அறிந்தவர் என்றும், அதிகாலையில் எழுந்து அது சம்பந்தமான பயிற்சிகளை இரகசியமாகச் செய்பவர் என்றும் என்னிடம் சொல்லியிருக்கிறான்.”

 

பர்வதராஜன் சொன்னான். “உண்மை தான். அதை நானும் அறிவேன். அவரைப் பற்றி இன்னும் எத்தனையோ நான் அறிவேன் என்றாலும் என் நெருங்கிய நண்பரைப் பற்றிய கூடுதல் இரகசியங்களை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவனாய் இருக்கிறேன். அதெல்லாம் சேர்ந்து தான் அவர் ஒன்றைக் குறி வைத்தால் வெல்லாமல் இருக்க மாட்டார், அதற்கான ஒவ்வொரு அடியையும் முன்கூட்டியே மிக நன்றாய் யோசித்திருப்பார் என்ற நம்பிக்கையையும், அவர் மகதத்தை வெல்வார் என்ற நம்பிக்கையையும்,  எனக்களித்திருக்கிறது. ஆனால் நண்பர்கள் அல்லாத உங்களிடம் அவர் நேர்மையாக நடந்து கொள்வார் என்ற உத்திரவாதத்தை என்னால் அளிக்க முடியாது. அதே நேரத்தில் என்னை நம்பி வந்திருக்கும் உங்களை அவர் சூழ்ச்சியால் ஏமாற்றும் சாத்தியக்கூறை என்னால் அனுமதிக்க முடியாது. அதனால் உங்கள் அனைவருக்கும் பிரதிநிதியாக நானே அவரிடம் பேசுவேன் என்று சொல்லியிருக்கிறேன். அதற்கு அவர் சம்மதித்திருக்கிறார். வெற்றிக்குப் பின் உங்களுக்குச் சேர வேண்டிய பெருஞ்செல்வத்தை அவரிடம் வாங்கி உங்களுக்குத் தருவது என் தனிப்பொறுப்பு. என்ன சொல்கிறீர்கள்?”

 

அவர்கள் மூவரும் சம்மதிக்க, மலைகேது தன் தந்தையின் திறமையை எண்ணி வியந்தான்.

 

 

ந்திரகுப்தன் சாணக்கியரிடம் சொன்னான். “மூன்று தேச மன்னர்களும் வந்து விட்ட தகவல் நம் காவல் வீரர்களிடமிருந்து கிடைத்தது. ஆனால் பர்வதராஜன் அவர்களை நம்மிடம் பேச இன்னும் அழைத்து வரவில்லையே, ஆச்சாரியரே

 

சாணக்கியர் சொன்னார். ”அவர்கள் வந்தவுடனேயே அவர்களை இங்கே அழைத்து வந்தால் நம்மிடம் பேசும் போது எல்லா உண்மை நிலவரங்களும் அவர்களுக்குத் தெரிந்து விடும். பர்வதராஜன் உண்மைகளை வளைத்து வேறு விதமாகத் தோன்றச் செய்து அதில் பலன் அடையும் வித்தகன். அதனால் அவர்களிடம் முதலில் அவன் பேசி அவனுக்கு வேண்டியது போல் அவர்கள் மனநிலையைத் தயார் செய்து விட்ட பிறகு தான் நம்மிடம் அழைத்து வருவான்

 

அவர் சொன்னபடியே அதைச் செய்து விட்டுத் தான் பர்வதராஜன் அவர்களை அவரிடம் அழைத்து வந்தான். சக்தி வாய்ந்த யவன சத்ரப் பிலிப்பையே சூழ்ச்சி செய்து கொன்ற மனிதராக சாணக்கியரை அவன் சித்தரித்திருந்ததால், நண்பர்களிடமல்லாது மற்றவர்களிடம் அவர் நேர்மையாக நடந்து கொள்ள மாட்டார் என்பதை அவன் சூசகமாகத் தெரிவித்தும் இருந்ததால் அவரிடம் நேரடியாக விவகாரங்களை வைத்துக் கொள்ளாமலிருப்பது நல்லது என்று மூன்று மன்னர்களுக்கும் தோன்றியிருந்தது. பர்வதராஜன் மகா உத்தமன் என்றோ, அரிச்சந்திரன் என்றோ அவர்களும் நம்பவில்லை என்றாலும் சாணக்கியரை விட அவன் தேவலை என்றும் பாதுகாப்பாக அணுக முடிந்தவன் என்றும் அவர்கள் நினைத்தார்கள். மகதத்தின் எல்லையற்ற செல்வத்தில் சிறு சிறு பகுதிகள் கிடைத்தாலும் கூட அவர்கள் தற்போதிருக்கும் நிலைக்கு அது பெருநிதியே. அந்தச் செல்வம் கிடைப்பது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். அதனால், தான் மட்டும் கூட்டு சேர்ந்து பலனை அனுபவிக்க நினைக்காமல் தங்களையும் பெருந்தன்மையுடன் கூட்டுச் சேர்த்திருக்கும் பர்வதராஜனிடம் அவர்கள் கூடுதல் விவரங்களை அறியவோ, பேரம் பேசி எதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவோ முனையவில்லை....

 

மூன்று மன்னர்களையும் தன் மிக நெருங்கிய நண்பர்களாக பர்வதராஜன் சாணக்கியரிடமும், சந்திரகுப்தனிடமும் அறிமுகப்படுத்தினான். முதல் முறையாக இருவரையும் சந்திக்கும் மூன்று மன்னர்கள் முகங்களிலும் லேசான பயம் கலந்த ஆர்வம் தெரிந்தது. அவர்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்கள். சாணக்கியரும், சந்திரகுப்தனும் அவர்களுக்கு மறுவணக்கம் செய்ய, பர்வதராஜன் அவர்களை அமர வைத்தான்.

 

பின் சாணக்கியரிடம் அவன் சொன்னான். “ஆச்சாரியரே. நாம் ஏற்கெனவே பேசிக் கொண்டபடி நான் என் நண்பர்களை வரவழைத்திருக்கிறேன். அவர்களிடம் எல்லா விவரங்களையும் சொல்லியுமிருக்கிறேன். மகதத்திற்கு எதிராகப் போர் புரிய நம்முடன் தங்கள் படைகளுடன் வருவதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.  நீங்கள் ஒரு இலக்கை எடுத்து, அதற்கான திட்டங்கள் வகுத்து, செயல்படுத்த ஆரம்பித்த பின் எதிலும் வெற்றியைத் தவிர வேறு முடிவு சாத்தியமல்ல என்று அவர்களுக்குப் புரிய வைத்தும் இருக்கிறேன். வெற்றி பெற்ற பின் ஆதாயங்களைப் பங்கிடுவது குறித்து பேச என்னைத் தங்களது பிரதிநிதியாக அவர்கள் நியமித்திருக்கிறார்கள். நானும் அவர்கள் சார்பில் வெற்றியின் பங்கைப் பெற்று அவர்களுக்கு நியாயமாகப் பிரித்துத் தரும் பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.”

 

சொல்லி விட்டு பர்வதராஜன் மூன்று மன்னர்களையும் பார்க்க மூவரும் ஆமாம் என்று தலையசைத்தார்கள். திருப்தியுடன் பர்வதராஜன் சாணக்கியர் பக்கம் திரும்பினான். ”அதனால் வெற்றிக்குப் பின்னான பங்கீட்டைப் பற்றி பின்னர் நாம் பேசிக் கொள்வோம். போருக்குச் செல்லும் காலம், ஆயத்தம் குறித்த விவரங்களைப் பற்றி இனி பேசுவோம்

 

பர்வதராஜனின் பேச்சு சாமர்த்தியத்தை எண்ணி சாணக்கியரால் வியக்காமல் இருக்க முடியவில்லை. சாணக்கியர் சிறு புன்முறுவலுடன் சந்திரகுப்தனைப் பார்த்தார்.

 

சந்திரகுப்தன் அவர்களிடம் சொன்னான். “நீங்கள் முதலில் ஒவ்வொருவரும் பங்களிப்பு தரும் படைவிவரங்களைச் சொன்னால் நலமாக இருக்கும்

 

பர்வதராஜன் மூன்று மன்னர்கள் பக்கமும் திரும்பினான். “நண்பர்களே. நாம் நால்வரும் அதிகபட்ச படைகளோடு செல்வது நம் வெற்றியை மகத்தானதாக்கும். அண்டை தேசத்துக் காரர்களான நாம் நால்வருமே சேர்ந்து போருக்குச் செல்வதால் நமது தேசங்களில் அதிக படைகளை வைத்து விட்டுப் போகும் அவசியம் இல்லை. ஆச்சாரியருடன் நட்புடன் இருப்பதால் காந்தாரம், கேகயம் இரண்டும் நம் தேசங்கள் மீது போர் தொடுக்கப் போவதில்லை. அதனால் நம் தேசங்கள் மீது வேறு யாரும் படையெடுத்து வரும் சாத்தியம் இல்லை. அதை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் அழைத்துக் கொண்டு வரும் படைவிவரங்களைச் சொல்லுங்கள். படைவீரர்கள், குதிரைகள், யானைகள் என்று தனித்தனியாகச் சொன்னால் அதைக் குறித்துக் கொண்டு போர் வியூகங்களை சந்திரகுப்தன் எட்ட வசதியாக இருக்கும். முதலில் நானே அதை ஆரம்பித்து வைக்கிறேன்.” என்று சொன்ன பர்வதராஜன் தன் தலைமையில் வரும் படைவீரர்கள், குதிரைகள், யானைகள் ஆகிய விவரங்களைச் சொன்னான்.

 

அவன் சொன்னதை சாணக்கியர் குறித்துக் கொள்ள மற்றவர்களும் அவன் சொன்ன பாணியிலேயே சொல்ல ஆரம்பித்தார்கள். அதையும் சாணக்கியர் குறித்துக் கொண்டார்.  

 

சந்திரகுப்தன் கேட்டான். “உங்களுக்கு ஆயத்தமாக குறைந்த பட்சம் எவ்வளவு காலம் வேண்டும்?”

 

நால்வரில் இருவர் ஒன்றரை மாதம், இருவர் இரண்டு மாதம் என்று சொன்னார்கள். சந்திரகுப்தன் சொன்னான். “அப்படியானால் இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நல்ல நாளை ஆச்சாரியர் குறித்துச் சொல்வார். அந்த நாளே நாம் ஒவ்வொருவரும் கிளம்புவோம். நீங்கள் தந்திருக்கும் படைவிவரங்களை வைத்து, போர் வியூகங்களைப் பின்னர் முடிவு செய்வோம்...”

 

பர்வதராஜன் சொன்னான். “அப்படியானால் நான் ஏற்பாடு செய்திருக்கும் விருந்தில் கலந்து கொள்ளுங்கள். விருந்துண்டு கொண்டே பேசுவோம். நான் அழைத்தவுடன் என் நட்பு மன்னர்கள் மூவரும் உடனடியாகக் கிளம்பி வந்திருப்பதால் அவர்கள் வழக்கமான வேலைகள் தடைப்பட்டிருக்கும். அவர்கள் விருந்து முடிந்தவுடன் சென்றால் தான் அவற்றைத் தொடர முடியும். பின் போருக்கு ஆயத்தமாகும் பணியும் அவர்களுக்கு இருக்கிறது..”

 

விருந்தில் உபசார வார்த்தைகள், நலம் விசாரிப்புகளுக்கு மேல் காஷ்மீர, நேபாள, குலு மன்னர்கள் சாணக்கியரிடமும், சந்திரகுப்தனிடமும் பேசாதபடி பர்வதராஜன் பார்த்துக் கொண்டான். அவன் சாணக்கியரிடம் யாரும் அதிகம் பேசி விடாமல் பார்த்துக் கொள்ள, மலைகேது சந்திரகுப்தனிடம் யாரும் அதிகம் பேசி விடாமல் பார்த்துக் கொண்டான். பேச்சு எங்காவது கூடுதலாகப் போவது போல் தெரிந்தால் அவனும், மலைகேதுவும் அந்தப் பேச்சில் இடைமறித்து பேச்சைத் திசை திருப்பினார்கள்.

 

(தொடரும்)

என்.கணேசன்   



Monday, November 18, 2024

யோகி 77

 

நாளை யோகாவின் இரண்டாம் நிலை பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆட்களின் விவரங்கள் அன்றிரவு பாண்டியனின் மேசையில் இருந்தன. நாளை வரப்போகிறவர்கள் மொத்தம் 23. ஆண்கள் 11 பெண்கள் 12. ஆண்களில் இளைஞர்கள் மூவர். பெண்களில் இளம் பெண்கள் நான்கு பேர். முதியவர்கள் ஏழு பேர். மீதமுள்ளவர்கள் நடுத்தர வயதினர். பாண்டியனின் கவனம் அந்த மூன்று இளைஞர்கள் மேல் நிலைத்தது. எதிரியைப் பற்றி இதுவரை கிடைத்திருக்கும் ஒரே தகவல் எதிரி இளைஞன் என்பது தான். அதனால் ஒவ்வொருவரையும் எதிரியாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் பார்ப்பது அவருக்குப் புத்திசாலித்தனமாகத் தோன்றியது. எதிரி நேரடியாக இங்கு வர வாய்ப்புண்டு என்று அவர் உள்ளுணர்வு எச்சரித்திருந்தது. அதனால் இந்த விஷயத்தில் சிறிய அலட்சியத்தையும் அவர் காட்ட விரும்பவில்லை.   

 

மூன்று இளைஞர்களும் இதற்கு முன்பே இங்கு முதல் நிலை வகுப்புக்கு வந்தவர்கள். மூவர் மேலும் அவர்களுடைய முந்தைய நடவடிக்கைகளின்படி சந்தேகப்பட எதுவுமில்லை. மூவரில் ஒருவனுடன் தங்கிய இளைஞன் தான் சந்தேகத்தைக் கிளப்பியிருந்தான். திருச்சிக்காரன். பெயர் ஸ்ரீகாந்த் என்று பாண்டியனுக்கு ஞாபகம். அவன் அதிகப்பிரசங்கித்தனமாக தேவையில்லாத கேள்விகள் கேட்டவன். ஆனால் அவனுடன் ஒரே அறையில் தங்கியிருந்த இந்த இளைஞன் ஷ்ரவன் எந்தப் பிரச்சினையும் செய்யவில்லை. இருந்தாலும் இவன் மேலும் ஒரு கண் வைத்திருப்பது நல்லது என்று பாண்டியனுக்குத் தோன்றியது. இவன் ஸ்ரீகாந்துடன் இப்போதும் தொடர்பில் இருக்கலாம். அவனுக்குப் பதிலாக அவன் இவனை அனுப்பி வைத்திருக்கலாம்.  எதையும் நிச்சயமாக இருக்காது அல்லது இல்லை என்று சொல்வதற்கில்லை.

 

ஷ்ரவனின் விலாசம் என்னவென்று பாண்டியன் பார்த்தார், ஹைதராபாத் விலாசம் இருந்தது. எதோ சிறிய ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை, சுமாரான சம்பளம் என்று தகவல்கள் இருந்தன. அதைப் பார்க்கையில் அவன் பெரிய புத்திசாலியாகவோ, பணக்காரனாகவோ இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது. இருந்தாலும் குறைந்த பட்ச காலத்திலேயே இரண்டாம் நிலை வகுப்புக்கு அவன் வந்திருப்பது பாண்டியனை சற்று யோசிக்க வைத்தது. யோகா கற்றுக் கொள்வதில் பேரார்வமா இல்லை வேறு எதாவது காரணமா?

 

மற்ற இரண்டு இளைஞர்கள் மூன்று மாதங்களுக்கு முன் முதல்நிலை யோகா வகுப்பை முடித்தவர்கள். அவர்கள் இருவரில் ஒருவன் சென்னை, இன்னொருவன் பெங்களூர்.

 

பாண்டியன் சற்று யோசித்து விட்டு அந்தத் தாளில் குறிப்பு எழுதினார். அந்த இரண்டு இளைஞர்களையும் ஒரே அறையிலும், ஷ்ரவனை தனியறையிலும் தங்க வைக்கும்படி எழுதினார். ஆண்கள் ஒவ்வொரு அறையிலும் இருவர்   என்றாலும் மொத்தம் 11 ஆண்கள் என்றால் ஒரு ஆண் தனியாகத் தான் தங்க வேண்டியிருக்கும். எனவே அந்த இளைஞனும் சந்தேகப்பட வழியில்லை. மூவருமே கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்றாலும், தனியாக இருப்பவனைக் கூடுதலாகக் கண்காணிக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். 

 

அந்த இரண்டு அறைகளிலும் அதிநவீன ரகசியக் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தவும் ஏற்பாடு செய்தார். மூவரில் யாராவது எதிரியாகவோ, அல்லது எதிரியின் ஆளாகவோ இருந்தால், இந்த ஒரு வாரத்தில் கண்டிப்பாகக் கண்டுபிடித்து விடலாம்.

 

ஷ்ரவன் தனக்கு யோகாலயத்தில் தனியறை ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் காட்டினான். ரிசப்ஷனில் இருந்த துறவி புன்னகையுடன் சொன்னார். “இந்த தடவை 11 ஆண்கள் வந்திருக்காங்க. ஒற்றைப் படையில இருக்கறதால உங்க ஒருத்தருக்குத் தனி அறை கிடைச்சிருக்கு.”

 

ஷ்ரவன் முகத்தில் திருப்தியைக் காட்டினான். புன்னகையுடன் அந்தத் துறவியிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “ஒருவிதத்துல நல்லது தான். போன தடவை எனக்குக் கிடைச்ச அறை நண்பர் பேசியே என்னை ஒரு வழியாக்கிட்டார்.”

 

அந்தத் துறவி லேசாகச் சிரித்தார்.

 

இந்த முறை அவனுக்கு அறை எண் 6 ஒதுக்கப்பட்டு இருந்தது. அறைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே அந்த அறையில் ரகசியக் கண்காணிப்பு காமிரா இருப்பதை அவன் கண்டுபிடித்து விட்டான். சென்ற முறை வராந்தாக்களிலும், முக்கிய இடங்களிலும் மட்டும் தான் ரகசியக் காமிராக்கள் இருந்தன. இந்த முறை ரகசியக் கண்காணிப்பு காமிரா எல்லா அறைகளிலும் இருக்கின்றதா, இல்லை அவன் அறையில் மட்டுமா என்பது தெரியவில்லை.

 

அறையில் இருக்கும் ரகசியக் காமிராவை உற்றுப் பார்த்து அதைக் கண்டுபிடித்து விட்டதாகக் காட்டிக் கொள்ளும் தவறை அவன் செய்யவில்லை. இயல்பாக இருந்தான்.

 

இந்த முறை இங்கு தங்குவது சுவாரசியமாக இருக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டான். அவன் எதிர்பாராத இன்னொரு சுவாரசியம் அவனுக்குக் காத்திருந்தது.

 

ஷ்ரவன் தனதறையைப் பூட்டிக் கொண்டு காலை உணவுக்காகக் கிளம்பிய போது தான் அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவளும் அப்போது தான் பக்கத்து அறையைப் பூட்டிக் கொண்டிருந்தாள். பூட்டி விட்டு, அவளுடன் தங்கியிருக்கும் மூதாட்டியின் பேச்சைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டே, அந்தப் பெண்ணும் அவன் பக்கம் திரும்பினாள்.

 

காலம் அந்த ஒரு கணத்தில் ஸ்தம்பித்து நின்று விட்டதைப் போல் ஷ்ரவன் உணர்ந்தான்.   அவள் கண்களுடன் பிணைந்து நின்ற தன் கண்களை அவனால் திருப்ப முடியவில்லை. பரசுராமன் சொல்லியிருந்த பெண் இவள் தான் அவன் மணம் ஆணித்தரமாகச் சொன்னது. எத்தனையோ அழகான பெண்களை அவன் இதற்கு முன்பும் பார்த்திருக்கிறான். இவளை விட அழகானவர்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவளிடம் இப்போது உணர்வதை அவன் இதுவரையில் யாரிடமும் உணர்ந்ததில்லை.

 

கிட்டத்தட்ட அந்தப் பெண்ணின் நிலைமையும் அதுவாகவே இருந்தது. அவளும் எத்தனையோ அழகான ஆண்களைப் பார்த்திருக்கிறாள். அவனை விட அழகானவர்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்த இளைஞன் அவளை ஈர்த்த அளவு யாரும் அவளை ஈர்த்ததில்லை.

 

அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல் மீண்டவன் ஷ்ரவன் தான். வராந்தாவில் ரகசியக் காமிராக்கள் இருக்கின்றன. அவனுடைய உண்மையான விருப்பு வெறுப்புகள் எதிரிகளுக்குத் தெரிவது எதிர்காலத்தில் பிரச்சினைகளை உண்டாக்கலாம். இந்தப் பெண்ணுக்கும் சேர்த்து பிரச்சினைகளை ஏற்படுத்துவது சரியல்ல...

 

புன்னகையுடன் அவர்களை நெருங்கி வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த மூதாட்டி, அந்தப் பெண் இருவருடைய கைகளையும் குலுக்கினான். அந்தப் பெண்ணின் ஸ்பரிஷம் அவனை என்னென்னவோ செய்ததால் சில விநாடிகள் கூடுதலாக அவள் கையைப் பிடித்திருந்தான். காமிராப் பதிவில் இந்த நுணுக்கமான வித்தியாசமும் பதிவாகலாம் என்பதால்    சர்வ மனோ பலத்தையும் திரட்டி தான் அவளுடைய கையை அவன் விடுவிக்க வேண்டியிருந்தது. முதல்நிலை தியான வகுப்புக்கு வந்த போது இப்போது அவர்கள் தங்கியிருக்கும் ஏழாம் எண் அறையில் தான், தான் தங்கியிருந்ததாய்ச் சொன்னான்.

 

அவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அந்தப் பெண் பெயர் ஸ்ரேயா என்பதும், அவள் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜீனியர் என்பதும், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவள் என்பதும் தெரிந்தன. உடனிருந்த மூதாட்டி கமலம்மாவாம். அடையாரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியராம்.

 

முந்தைய முறையும் ஆண்கள், பெண்கள் இருபாலாரிடமும் நன்றாகவே அவன் பழகி வந்ததால், வெளியே கூடுதல் நெருக்கம் காண்பிக்காமல் இயல்பாய் அவர்களிடமும் பேசுவதென்று ஷ்ரவன் தீர்மானித்தான். அவர்களும் தியான வகுப்புகள் ஆரம்பமாவதற்கு முன்பு காலை உணவுக்காகச் செல்லத் தான் கிளம்பியது தெரிந்தது. அவர்களுடன் அவன் பேசிக் கொண்டே நடந்தான்.

 

ஆனால் கமலம்மா அவர்கள் இருவரையும் பேச விடவில்லை. தானே தன்னைப் பற்றி அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தார். குடும்பத்தைப் பற்றி, கல்லூரி பற்றி, பென்ஷனைப் பற்றி, உறவுகளின் சுயநலத்தைப் பற்றி, அதனால் அவருக்கு ஏற்பட்ட ஆன்மீக நாட்டத்தைப் பற்றி எனப் பேச்சு தொடர்ந்தது. சாப்பிட அமரும் போதும் கமலம்மா ஷ்ரவனுக்கும், ஸ்ரேயாவுக்கும் நடுவில் அமர்ந்து கொண்ட போது ஷ்ரவன் மனம் நொந்தான்.  அவனுடைய பார்வையும், ஸ்ரேயாவின் பார்வையும் சந்தித்துக் கொண்ட போது ஸ்ரேயா புன்முறுவல் பூத்தது, பேரழகாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

 

கூடவே விதி விளையாடுகிறது என்றும் அவனுக்குத் தோன்றியது. இல்லா விட்டால் முதல் காதல் உணர்வு, இத்தனை வருடங்கள் வராமல், இந்த ஆபத்தான இடத்தில், பிரச்சினையான சூழலில் அரும்புமா?

 

(தொடரும்)

என்.கணேசன்





Thursday, November 14, 2024

சாணக்கியன் 135

 

ர்வதராஜன் சொன்னான். “கண்டிப்பாக நீ சந்திக்கத்தான் போகிறாய் நண்பனே. அவர்களை இங்கே வரவழைத்திருக்கும் நான் இப்போது உன்னை இங்கே வரவழைத்திருப்பதும் அதற்குத் தானே

 

அவர்களையும் நீங்கள் தான் இங்கே வரவழைத்தீர்களா? ஏன்? புதிர் போடாமல் விஷயத்தைச் சொல்லுங்கள் நண்பரே”   

 

பர்வதராஜன் மிக இரகசியமான தொனியில் தாழ்ந்த குரலில் சொல்ல ஆரம்பித்தான். “யவன சத்ரப் பிலிப்பைக் கொன்று வாஹிக் பிரதேசத்தை யவனர்களிடமிருந்து கைப்பற்றிய ஆச்சாரியர் அடுத்தபடியாக கேகயத்திற்கு உதவுகிறேன் என்று சொல்லி இன்னொரு யவன சத்ரப் யூடெமஸையும் போரில் கொன்று விட்டு கேகயத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார். அது உனக்குத் தெரிந்திருக்கும்

 

நேபாள மன்னன் ஆச்சரியத்தோடு கேட்டான். “கேகயத்தை அவர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டாரா? இப்போதும் புருஷோத்தமனின் மகன் மலயகேதுவல்லவா கேகய அரசன்?”

 

பர்வதராஜன் ஒன்றுமறியா குழந்தையைப் பார்ப்பது போல் நேபாள மன்னனைப் பார்த்து விட்டுச் சொன்னான். “நண்பனே. இப்போது நேபாளத்திற்கு நீ தான் அரசன். ஆனால் உனக்கு முழு சுதந்திரம் இருக்கிறதா? இப்போதும் நீ தனநந்தனுக்குக் கப்பம் கட்டிக் கொண்டல்லவா இருக்கிறாய்? ஹிமவாதக்கூடத்துக்கு நான் தான் அரசன். ஆனால் அலெக்ஸாண்டர் பாரதக் கண்டத்துக்கு வந்து கேகயத்தை வென்றவுடன் முதல் முதலில் போய் பெரிய நிதியைத் தந்து நான் நட்பு பாராட்டி வர வேண்டியிருந்தது. அவன் இந்தப் பக்கம் வந்து விடப்போகிறானே என்ற பயம் அப்படி என்னைச் செய்ய வைத்தது. கேகயத்துக்கு உதவிய பிறகு அது யவனர் கையிலிருந்து நழுவி ஆச்சாரியர், சந்திரகுப்தன் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. ஆக நாம் மன்னர்களே என்றாலும் முழு சுதந்திரத்துடன் இல்லை, எல்லையற்ற செல்வத்துடனும் இல்லை என்பது நம் துர்ப்பாக்கியமாக இருக்கிறது. உண்டா இல்லையா?”

 

நேபாள மன்னன் தலையசைத்தான். “உண்டு?”    

 

நம்முடைய இந்த நலிந்த நிலை என்னை எப்போதும் உறுத்திக் கொண்டே இருந்தது. அதனால் ஏதாவது செய்து நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். அந்தச் சமயத்தில் தான் சந்திரகுப்தனும், ஆச்சாரியரும் அடுத்த இலக்காக மகதத்தைக் குறி வைத்திருக்கிறார்கள் என்றும், அதற்குத் தேவையான படைவலிமை போதாதென்று சற்று தயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒற்றர்கள் மூலம் நான் கேள்விப்பட்டேன். உடனே என் அறிவில்  மின்னலாய் ஒரு யோசனை உதித்தது. அவர்களை இங்கே வரவழைத்தேன்

 

மலைகேது தன் தந்தையின் கதை சொல்லும் திறமையைக் கண்டு வியந்தான்.

 

சமீப காலமாக வெற்றி மேல் வெற்றி கண்டு வரும் சாணக்கியர் மீதும், சந்திரகுப்தன் மீதும் எல்லா மன்னர்களுக்குமே வியப்பு கலந்த மரியாதை இருந்தது. அப்படிப் புகழ் பெற்ற இருவரையும் தானிருக்கும் இடத்திற்கு வரவழைக்கும் அளவு பர்வதராஜன் வலிமை வாய்ந்தவனாக இருப்பான் என்று நேபாள மன்னன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் மெல்லக் கேட்டான். “உங்களுக்கு அவர்களை முன்பே தெரியுமா நண்பரே?”

 

ஆச்சாரியரை தட்சசீல ஆசிரியராக இருந்த காலம் முதல் தெரியும். அவர் என் நெருங்கிய நண்பர். அவரிடம் மாணவனாக இருக்கும் போதே சந்திரகுப்தனையும் தெரியும். அதனால் அல்லவா அவர்களை இங்கே என்னால் வரவழைக்க முடிந்தது?”

 

நேபாள மன்னன் முகம் வியப்பில் விரிய மலைகேது சிரிக்காமல் இருக்க முயன்றான். ஆனால் பர்வதராஜன் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவன் தொடர்ந்து சொன்னான். “அவர்கள் இருவரும் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்கள். காந்தாரம், கேகயம் இரண்டின் படைகளையும் பெற்று போதுமான பலத்துடன் மகதத்தை வெல்ல முடியும் என்றாலும் யவனர் தாக்குதல் எந்த நேரத்திலும் அந்த இரண்டு தேசங்களிலும் வரலாம் என்பதால் தயங்குவதாய்ச் சொன்னார்கள். நான் அவர்களுக்கு இனியும் எந்த அளவு படைபலம் தேவை என்று கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். கணக்குப் போட்டுப் பார்த்தேன். என் படைபலம், உன் படைபலம், காஷ்மீரம், குலு ஆகிய இரண்டு தேசங்களின் படைபலம் என நான்கும் சேர்ந்தால் அவர்கள் தேவையின் அளவு வந்தது. உடனே உன்னையும், காஷ்மீரம், குலு அரசர்களையும் வரச் சொல்லி ஆளனுப்பினேன். எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றே தீரும் அளவு சூழ்ச்சியான திட்டங்கள் போடும் ஆச்சாரியருடன் சேர்ந்து கொண்டால் நம் அத்தனை பேர் பற்றாக்குறையும், பிரச்சினைகளும் தீரும். உதாரணத்துக்கு நேபாளத்திற்கு கப்பம் கட்டத்தேவையில்லாத  முழு சுதந்திரம் கிடைக்கும், கூடவே மகதத்தின் எல்லையில்லாத செல்வத்தில் ஒரு பகுதியும் கிடைக்கும். என்ன சொல்கிறாய்?”

 

நேபாள மன்னன் கண்கள் மின்னின.

 

டுத்து  காஷ்மீர அரசனும், குலு அரசனும் சேர்ந்து வந்தார்கள். அவர்களையும் பேரன்புடன் கட்டியணைத்து வரவேற்றுத் தனியாகத் தங்க வைத்து பர்வதராஜன் பேசினான். “என் நெருங்கிய நண்பர் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரையும், சந்திரகுப்தனையும் இங்கே ஒரு முக்கிய விஷயமாய் பேச வரவழைத்திருக்கிறேன். அதே முக்கிய விஷயமாய் பேசத் தான் உங்களையும் வரவழைத்திருக்கிறேன்.”

 

காஷ்மீர அரசன் கேட்டான். “ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் உங்கள் நெருங்கிய நண்பரா?”

 

ஆம் அவர் தட்சசீல ஆசிரியராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு மிக நெருக்கமானவர். அவரிடம் அப்போது படித்துக் கொண்டிருந்த சந்திரகுப்தனையும் அந்தக் காலத்திலிருந்தே நன்றாக அறிவேன்

 

குலு மன்னன் சொன்னான். “ஏதோ முக்கிய விஷயம், மாபெரும் பலன் என்று எங்களை வரவழைத்தீர்கள். அவர்களுக்கும் அப்படித் தானா?”

 

பர்வதராஜன் சொன்னான். “ஆம் நம் அனைவருக்கும் பெரும் பலன்கள் அளிக்கக்கூடிய முக்கிய விஷயம் தான்…”

 

என்ன அது?”

 

மகதம்.”

 

அவர்கள் இருவரும் புரியாமல் விழித்தார்கள். பர்வதராஜன் தொடர்ந்தான். “என் நண்பர் ஆச்சாரியர் பார்வை இப்போது மகதத்தின் மீது திரும்பியிருக்கிறது. அவர் மகதத்தை வெற்றி கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார். பேரறிவைத் தவிர எந்த மூலதனமும் இல்லாமல் யவன சத்ரப் பிலிப்பைக் கொன்று வாஹிக் பிரதேசத்தின் அரசனாக சந்திரகுப்தனை ஆக்கிய அவர் யூடெமஸைக் கொன்று யவனர்களை இங்கே பூஜ்ஜியமாக்கி விட்டார். இப்போது அவர் பார்வை மகதம் பக்கம் திரும்பி இருக்கிறது.  அங்கே தனநந்தன் நிலையைப் பலவீனமாக்க பல வேலைகளை ஏற்கெனவே செய்திருக்கும் அவர் இப்போது கடைசி அஸ்திரமாக அவன் மீது போர் தொடுக்க நிச்சயித்திருக்கிறார். அவருக்குப் படைபலம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. நான் நெருங்கிய நண்பன் என்பதால் முதலில் என்னைத் தொடர்பு கொண்டார். நான் கணக்குப் போட்டு என் படை வலிமை போதாதென்றும் கூட காஷ்மீரம், குலு, நேபாளம் தேசங்களின் படைவலிமை தேவையென்றும் சொல்லி உங்கள் மூவரையும் வரவழைத்தேன்.  மகத சாம்ராஜ்ஜியத்தின் கணக்கிலடங்காத செல்வத்தின் ஒரு பகுதி தான் நான் உங்களுக்குச் சொல்லியிருந்த மாபெரும் பலன். என்ன சொல்கிறீர்கள்?”

 

குலு மன்னன் சிரித்துக் கொண்டே சொன்னான். ”தனநந்தனின் செல்வம் பற்றி அனைவரும் அறிவார்கள். அதில் ஒரு பகுதி கிடைக்கிறது என்றால் அதற்கு ஆசைப்படாமல் இருக்க நாங்கள் துறவிகள் அல்லவே நண்பரே!”


காஷ்மீர மன்னன் மட்டும் சிறு சந்தேகத்துடன் கேட்டான். “மகதத்தின் படை வலிமையும் அவன் செல்வத்திற்கு இணையாக மிக அதிகம் தான். நாம் இத்தனை பேர் சேர்ந்தாலும் அவனை வெல்ல அது போதுமா?”

 

பர்வதராஜன் புன்னகைத்தபடி சொன்னான். “என் நண்பர் படை வலிமையோ, பண வலிமையோ இல்லாத காலத்திலேயே தன் சூழ்ச்சித்திறனாலும், திட்டமிடும் திறனாலும் வாஹிக் பிரதேசத்தை வென்றவர். இப்போது படைவலிமையும், பணவலிமையும் சேர்ந்து கொண்ட பின் அவரால் முடியாதது எதுவுமிருக்க முடியாது நண்பர்களே

 

சொல்லி விட்டு ஒரு காவலனை அழைத்து நேபாள மன்னனையும் அழைத்து வரக் கட்டளையிட்டான். பின் அவர்களிடம் தொடர்ந்தான். “யவனர்களை வெல்ல முடிந்த வலிமை மன்னர்களாகிய நமக்கே இல்லாத போதே அறிவின் வலிமையால் அதைச் சாதிக்க முடிந்த ஆச்சாரியர்  ஒரு இலக்கைக் குறி வைத்து விட்டால் அதை அடையாமல் இருக்கக்கூடியவர் அல்ல. அவருக்குப் படையுதவி செய்வதன் மூலம் நாம் பெறப் போகும் செல்வம் குபேரனின் செல்வத்திற்கு இணையானது நண்பர்களேஅந்தச் செல்வம் வேண்டுமா வேண்டாமா?”

 

இது என்ன கேள்வி நண்பரே? வேண்டும்….வேண்டும்….” என்று குலு மன்னன் சொன்னான்.

 

நேபாள மன்னனும் வந்து சேர அவனைத் தழுவி காஷ்மீர மன்னனும், குலு மன்னனும் நலம் விசாரித்தார்கள். ஓரளவுக்கு மேல் அவர்கள் அதை நீட்டித்த போது பர்வதராஜன் இடைமறித்துச் சொன்னான். “உங்கள் அன்பை பின்பு பகிர்ந்து கொள்ளுங்கள். இப்போது முக்கிய விஷயத்தைப் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.”

 

அவர்கள் அமர்ந்தவுடன் பர்வதராஜன் ஒரு நீதிமானைப் போல் பேச ஆரம்பித்தான். “மகதத்தின் பெருஞ்செல்வத்தைப் பகிர்ந்து கொள்ள உங்களை இங்கு வரவழைத்த நான் என் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் உங்களிடம் எந்த உண்மையையும் மறைக்க விரும்பவில்லை. மறைத்தால் என் மனசாட்சி என்னை உறங்க அனுமதிக்காது. இதை நான் தனியாக நீங்கள் இருக்கும் இந்த சமயத்தில் தான் சொல்ல முடியுமேயொழிய பொதுவில் வெளிப்படையாகப் பேச முடியாது

 

அவன் குரலில் தெரிந்த இரகசிய தொனி அவர்களை முழுக் கவனத்துடன் கேட்க வைத்தது. 

 

(தொடரும்)

என்.கணேசன்