சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 3, 2024

யோகி 52

 

டாமி சுகுமாரனைப் போல் வெளியிலேயே நிற்காமல் வேகமாய் தோட்டத்தை நோக்கிப் பாய்ந்து சென்றது. அந்த நாய்க்கு இருக்கும் தைரியம் கூட இல்லாமல் சுகுமாரன் அன்னியர் வீட்டை எட்டிப் பார்ப்பது போல் எட்டிப் பார்த்தது பாண்டியனுக்கு வேடிக்கையாக இருந்தது. காரின் சாவியை எடுத்துக் கொண்டு இறங்கியவருக்கு காரைப் பூட்டிவிட்டுச் செல்ல அவசியம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆவியில்லை என்று பார்த்து விட்டு திரும்பிவர அதிக நேரம் ஆகப் போவதில்லை. காரில் யாரும் திருடி எடுத்துக் கொள்ளும் படியான பொருளும் எதுவுமில்லை...

 

சுகுமாரன் அவரை அழைத்தார். “வாங்க பாண்டியன்

 

இருவரும் உள்ளே சென்றார்கள். இதயம் படபடக்க சுகுமாரன் முதலில் சைத்ராவின் ஆவி தென்பட்ட இடத்தைக் காட்டி, தாழ்ந்த குரலில் சொன்னார். “இங்கே தான் நான் முதல்ல அந்த ஆவியைப் பார்த்தேன்... டாமியும் இந்த இடத்தைப் பார்த்து தான் குரைச்சான்...”

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் இதுஎன்று மனதிற்குள் சிரித்துக் கொண்டாலும் பாண்டியனின் முகத்தில் சிரிப்பு தெரியவில்லை. பாண்டியன் அந்த இடத்தைக் கூர்ந்து பார்த்தார். பின் சுற்றும் முற்றும் பார்த்தார். எங்கிருந்தாவது யாராவது இருந்து கொண்டு எதாவது செய்திருக்க முடியுமா என்று யோசித்தார். அப்படி எதுவும் நடந்திருக்க வாய்ப்பு தெரியவில்லை. “இப்ப ஆவி தெரியலையல்லவா?” என்று சுகுமாரனிடம் மெல்லக் கேட்டார்.

 

இல்லை...”

 

இருவரும் வீட்டைச் சுற்றி வந்தார்கள். எதுவும் வித்தியாசமாக இல்லை.

 

பாண்டியன் கேட்டார். “காவித் துணி எரிஞ்சிருந்ததுன்னு சொன்னீங்களே. அது எங்கே?”

 

சுகுமாரன் அவசரமாகப் போய் காவித்துணி நேற்று எரிந்து கொண்டிருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தார். அங்கே அது காணவில்லை.

 

சுகுமாரனுக்குத் தலைசுற்றியது. நேற்று பாதி எரிந்து கொண்டிருந்த காவித்துணியை கூர்க்கா அணைத்தது நன்றாக அவருக்கு நினைவிருக்கிறது. இப்போது அதைக் காட்டாவிட்டால் இந்தக் காட்டான் ஒட்டு மொத்தமாய் எதையும் நம்ப மாட்டானே என்று அவருடைய மனம் பதறியது. பாண்டியன் அந்தத் துணி வேறெங்காவது விழுந்து கிடக்கிறதா என்று கூடப் பார்க்காமல் சுகுமாரனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்படிப் பார்ப்பதே சுகுமாரனுக்கு அவமானப்படுத்துவது போல் இருந்தது.

 

சுகுமாரன் பாண்டியன் பக்கம் பார்வையைத் திருப்பாமல், கூர்க்காவைத் திரும்பிப் பார்த்தார். கூர்க்காவுக்கு அவர் கூட்டி வந்திருக்கும் ஆள் யாரென்ற யோசனையாய் இருந்தது. நடுராத்திரியில் வீட்டை விட்டுப் போன முதலாளி, தனியாகத் திரும்பி வராமல் இன்னொரு ஆளுடன் வந்திருக்கிறார், அந்த ஆளை வீட்டிற்குள்ளும் அழைத்துப் போகாமல் நேற்று காவித்துணி எரிந்து கொண்டிருந்த இடத்தைக் காட்டுகிறார் என்றால் அந்த ஆள் ஆவியைத் துரத்தக்கூடிய மந்திரவாதியாகத் தானிருக்கும் என்ற முடிவுக்கு அவன் அப்போது தான் வந்திருந்தான். ஆனால் அவருடைய வெள்ளை உடைகள் மந்திரவாதி என்ற அடையாளத்திற்குப் பொருந்தவில்லை. ஒருவேளை மந்திரவாதம் செய்யும் போது மட்டும் அதற்குத் தகுந்த உடைகள் அணிவாரோ என்னவோ?

 

சுகுமாரன் அவனை சைகையால் அழைத்தார். கூர்க்கா உடனே விரைந்து வந்தான். சுகுமாரன் கேட்டார். “நேத்து இங்கே ஒரு துணி எரிஞ்சுகிட்டிருந்துதே. நீ கூட அந்த நெருப்பை அணைச்சியே. அந்தத் துணி எங்கே?”

 

கூர்க்கா சொன்னான். “அந்தத் துணியை அப்புறப்படுத்தாம இருந்தா நீங்க என்னைத் திட்டுவீங்கன்னு, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் குப்பைக்கூடைல போட்டேங்கய்யா

 

இப்பவாவது நம்பறியா?’ என்பது போல் பாண்டியனை ஒரு பார்வை பார்த்து விட்டு சுகுமாரன் கூர்க்காவிடம் சொன்னார். “அதை எடுத்துகிட்டு வா

 

கூர்க்கா விரைந்து போய் குப்பைக்கூடையிலிருந்து அந்தக் காவித்துணியை விரல்நுனியில் பிடித்தபடி எடுத்துக் கொண்டு வந்தான். அவன் அதை சுகுமாரனிடம் நீட்ட, சுகுமாரன் லேசான பயத்துடனும், அருவருப்புடனும் அதை வாங்கத் தயங்கினார். பாண்டியன் அந்தக் காவித் துணியை எந்தச் சங்கடமும் இல்லாமல் வாங்கிக் கொண்டுஇனி போகலாம்என்பது போல் சைகை செய்தார். கூர்க்கா நகர்ந்தான்.

 

பாண்டியனிடம் காவித் துணியைத் தந்தவுடன் திரும்பவும் வந்து கேட் அருகே நின்று கொண்டாலும் கூர்க்காவின் கவனம் எல்லாம் முதலாளி மீதும், அவர் அழைத்து வந்த மந்திரவாதி மீதுமே இருந்தது. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றறியும் ஆர்வத்தில் அவன் தெருவில் அதிகக் கவனம் செலுத்தவில்லை. 

 

தெருவில் இரண்டு இளம் நண்பர்கள் எதோ சுவாரசியமாக பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தார்கள் பாண்டியனின் கார் அருகே வந்தவுடன் ஒருவனின் சட்டைப் பையில் இருந்த ஒரு கடிதத்தை மற்றவன் எடுத்து கொண்டு ஓட, கடிதத்தைப் பறிகொடுத்தவன் துரத்திக் கொண்டு ஓடினான். இருவரும் பாண்டியனின் காரையும், சுகுமாரன் காரையும் விளையாட்டாய் சுற்றிச் சுற்றி வந்தார்கள். அவர்கள் இரண்டு முறை சுற்றுவதைப் பார்த்துக் கொண்டிருந்த கூர்க்கா பின் சுவாரசியம் இழந்து தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டு இருப்பவர்களைப் பார்க்க ஆரம்பித்தான்.  

 

பாண்டியன் தீயில் பாதி கருகி, பெரிய ஓட்டை விழுந்திருந்த அந்தத் துணியை ஆராய்ந்து கொண்டிருந்தார். அது காவி சேலையின் ஒரு பகுதி தான். யோகாலயத்தில் அவர்கள் பயன்படுத்தும் சேலை ரகம் தான் அது. ஆனால் யாரும் பயன்படுத்திய சேலை அல்ல அது என்பது அதைத் தொடும் போதே தெரிகிறது. புதிய சேலையை வாங்கி அதில் ஒரு பகுதியை வெட்டி யாரோ இதைச் செய்திருக்கிறார்கள்… ”ஆவி பழைய துணியைக் கொண்டு வந்து எரிக்கலை. யோகாலயத்துல இருந்த அதோட பழைய துணிகளை எடுக்க முடியல போலருக்கு. அதனால புதிய துணியை வாங்கி, அதுல கொஞ்சம் வெட்டி எடுத்து எரிச்சிருக்கு. ஆவி நிறைய வேலை செய்திருக்கு. அது அந்தத் துணிக்கடையிலயும் காசு குடுத்து வாங்கியிருக்கோ இல்லை, அங்கிருந்தும் ஆட்டைய போட்டுச்சோ தெரியல…” என்று மந்தஹாசப் புன்னகையுடன் பாண்டியன் சொன்னார்.

 

சுகுமாரன் திகைத்தார்.  இந்தத் தகவலை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவருக்குத் தெரியவில்லை. பாண்டியன் இந்தத் தகவலைச் சொன்னது, இது மனிதனின் வேலை தான், ஆவியின் வேலை அல்ல என்ற எகத்தாளத் தொனியில் தான் என்பது புரிந்தது. ஆனால் நேற்றிரவின் மற்ற அனுபவங்களை இந்த ஆள் எப்படி விளக்குவான்?

 

தெருவில் இரண்டு கார்களையும் சுற்றிக் கொண்டு இருந்த நண்பர்களில், கடிதத்தை பறிகொடுத்தவன் மற்றவனைப் பிடித்து விட்டதை கூர்க்கா பார்த்தான். சற்றுத் தள்ளி நிறுத்தப்பட்டிருந்த பாண்டியனின் காரில் நண்பனைச் சாய்த்து அவன் கையில் இருந்த கடிதத்தை அவன் எடுக்க முயற்சிப்பதும், நண்பன் திமிறுவதும் தெரிந்தது. ‘எருமை மாடுகள் மாதிரி வளர்ந்திருக்காங்க. ஆனா சின்னப்பசங்க மாதிரி விளையாடறானுகஎன்று இகழ்ச்சியாக மனதில் நினைத்துக் கொண்ட கூர்க்கா, அவர்களை அதற்கு மேல் கவனிக்க ஆர்வம் காட்டவில்லை. முதலாளியும், மந்திரவாதியும் அடுத்து என்ன செய்கிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தான்.

 

கூர்க்காவின் கவனம் தோட்டத்தில் இருந்த நேரத்தில், பாண்டியனுடைய காரில் சாய்ந்து கொண்டிருந்த இளைஞன், தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு ப்ளாஸ்டிக் கையுறையை எடுத்தான். அவனிடமிருந்து கடிதத்தை பிடுங்க முயற்சிப்பவன் போல் காட்டிக் கொண்டிருந்த இளைஞன் தன் கையை அந்த ப்ளாஸ்டிக் உறைக்குள் நுழைத்தான். பின் அவன் கூர்க்காவைப் பார்த்தான். இப்போதும் கூர்க்கா கேட்டுக்கு உள்ளே நடப்பதை ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

உடனே மின்னல் வேகத்தில், கார் ஜன்னலின் வழியே ப்ளாஸ்டிக் உறையுடன் இருந்த கையை உள்ளே நுழைத்து, டிரைவர் சீட்டு அருகே இருந்த டவலை எடுத்து காரில் சாய்ந்து நின்றிருந்தவனுடைய பேண்ட் பாக்கெட்டில் திணித்தான். உடனே, காரில் சாய்ந்து கொண்டிருந்தவன் அவனைத் தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தான்.  அவனைப் பின் தொடர்ந்து மற்றவனும் ஓட ஆரம்பித்தான். திரும்பிய கூர்க்கா ஓடும் அந்த இளைஞர்களை இகழ்ச்சியாகப் பார்த்தான். ’வயசுக்குத் தகுந்த மாதிரி நடந்து கொள்ளத் தெரியலையே!’


(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. அடுத்த இரவு பாண்டியனுக்கும் ஆவி தெரியும்🤣🤣🤣🤣🤣

    ReplyDelete