சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 2, 2024

சாணக்கியன் 107

 

ண்பர்களின் சந்திப்பு உணர்வுபூர்வமாக இருந்தது. நீண்ட காலம் கழித்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதில் இருவருமே இனிமையை உணர்ந்தார்கள். வயதாக ஆக நட்பின் ஆழம் அதிகமாகிறது, சந்திப்புகளுக்கு இடையேயான நீண்ட இடைவெளிகள் அந்த ஆழத்தைச் சிறிதும் குறைத்து விடுவதில்லை என்பதை இருவருமே உணர்ந்தார்கள்.  

 

உபசரிப்பு, பரஸ்பர விசாரிப்புகள் முடிந்த பின் இந்திரதத் சாணக்கியரிடம் புருஷோத்தமன் கொலை செய்யப்பட்ட விதத்தை விவரித்து விட்டுச் சொன்னார். “…. ஆம்பி குமாரன் எவ்வளவோ உத்தமன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு அயோக்கியனைப் பார்ப்பேன் என்று நான் வாழ்நாளில் அன்று வரை நினைக்கவில்லை விஷ்ணு. தரம் கெட்ட யூடெமஸ் ஆம்பி குமாரனை இமயமலைக்கு இணையாக உயர்த்தி விட்டான்…”

 

சாணக்கியர் சொன்னார். “அழிவுகாலம் வரும் போது புத்தி பேதலித்துப் போவதும், மனம் பக்குவம் அடையும் போது திருந்துவதும் எப்போதும் நிகழ்வது தான் இந்திரதத். இருவர் விஷயத்திலும் அது தான் நடந்திருக்கிறது. ஆனால் புருஷோத்தமனைப் போன்ற ஒரு மாவீரன் இப்படி சூழ்ச்சியில் உயிரிழந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இனி என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?”

 

“இளவரசன் மலயகேது வரும் வெள்ளிக்கிழமை அன்று முறைப்படி முடிசூடப் போகிறான். முடிசூடியவுடன் அவன் செய்யத் துடிக்கும் முதல் காரியம் யூடெமஸைக் கொல்வது தான். அது நாங்கள் தனியாகச் செய்ய முடிந்ததாக இல்லை. அதனால் தான் உங்களிடம் உதவி கேட்டு நான் நேரில் வந்திருக்கிறேன் விஷ்ணு.”

 

சாணக்கியர் ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னார். “அப்படியானால் சந்திரகுப்தன் முன்னிலையில் இதைப் பேசுவதே நல்லது இந்திரதத்”

 

சரியெனத் தலையசைத்த இந்திரதத்துக்கு காலம் சக்கரம் போன்றது என்று சொல்வது சரிதானென்று தோன்றியது.  ஒரு காலத்தில் விஷ்ணுகுப்தர் யவனர்களுக்கு எதிராக ஒன்றிணைவது அவசியம் என்று பதறிக் கொண்டு உதவி கேட்டு கேகயம் வந்தது நினைவுக்கு வந்தது. இன்று அதே யவனர்களுக்கு எதிராக அவர் உதவி கேட்டுக் கொண்டு விஷ்ணுகுப்தரிடம் வந்திருக்கிறார். நிலைமை எந்த அளவு தலைகீழாக மாறி விட்டிருக்கிறது!

 

சந்திரகுப்தனின் மாளிகைக்குச் செல்லும் போது இருவரும் மௌனமாகவே இருந்தார்கள். சந்திரகுப்தன் ஆச்சாரியரைக் கண்டவுடன் மிகுந்த மரியாதையுடன் எழுந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கியவன், அப்படியே அவருடைய நண்பரான இந்திரதத்தின் கால்களையும் தொட்டு வணங்கினான். அவனை ஆசிர்வதித்த இந்திரதத் வெற்றிகள் பண்பட்ட மனிதர்களைப் பாதித்து விடுவதில்லை என்று எண்ணிக் கொண்டார்.

 

அவர்களை மரியாதையுடன் ஆசனங்களில் அமர்த்திய சந்திரகுப்தனிடம் சாணக்கியர் சொன்னார். “சந்திரகுப்தா, நாம் கேள்விப்பட்டது உண்மையே. யவனர்களின் சத்ரப்பான யூடெமஸ் சதி செய்து புருஷோத்தமனைக் கொன்று விட்டு ஐநூறு யானைகளை எடுத்துக் கொண்டு போயிருக்கிறான். அவனைப் பழி வாங்க இவர் நம் உதவி கேட்டு வந்திருக்கிறார்.”

 

சந்திரகுப்தன் ஆச்சாரியரை ஆழமாகப் பார்த்தான். பின் அவன் இந்திரதத்திடம் கேட்டான். “நீங்கள் எங்களிடம் எப்படிப்பட்ட உதவியை எதிர்பார்க்கிறீர்கள் கேகய அமைச்சரே?”

 

சந்திரகுப்தனுக்கும் சாணக்கியருக்கும் இடையே பார்வையிலேயே கருத்துப் பரிமாற்றம் நடந்து முடிந்தது போல் தனக்குத் தோன்றுவது பிரமையா அல்லது உண்மை தானா என்று இந்திரதத்துக்குத் தெரியவில்லை. அவர் சந்திரகுப்தனிடம் சொன்னார். ”யூடெமஸை உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என்று இன்றைய இளவரசரும், நாளைய அரசருமான மலயகேது உறுதியாக நினைக்கிறார். இப்போதைய நிலைமையில் எங்களால் தனியாக அது சாத்தியப்படும் என்று தோன்றவில்லை. அதனால் தான் தங்களின் உதவி நாடி வந்திருக்கிறேன் அரசே”

 

சந்திரகுப்தன் யோசனையுடன் சொன்னான். “இப்போது கேகயம் யவனர்களின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதி. அப்படி இருக்கையில் நீங்கள் யூதிடெமஸை எதிர்ப்பது உங்களுடைய உட்பூசலாகத் தான் இருக்கும். அதனால் உதவி செய்ய நாங்கள் வருவது, நாங்கள் உங்கள் உள்விவகாரத்தில் தலையிடுவது போல் அல்லவா ஆகிவிடும்?”

 

இந்திரதத் இதை முன்பே எதிர்பார்த்திருந்து மலயகேதுவிடமும் சொல்லி இருந்தார். சந்திரகுப்தன் தலைமையை ஏற்றுக் கொண்டால் ஒழிய அவன் உதவ முன்வர மாட்டான் என்பதை யூகிக்க பேரறிவு தேவையிருக்கவில்லை. அவர் சொன்னார். “சத்ரப் யூடெமஸ் எங்கள் அரசரைச் சதிசெய்து கொன்ற பிறகும் நாங்கள் யவனர்களின் அதிகாரத்திற்குட்பட்டே இருப்பது எங்கள் சுயகௌரவத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். அதனால் யவனர்கள் அதிகாரத்திலிருந்து எங்களை விடுவித்துக் கொள்ள விரும்புகிறோம். இந்த விஷயத்தில் எங்களுக்கு நீங்கள் உதவியாக இருந்து யூடெமஸை ஒழித்துக் கட்டினால் என்றும் உங்கள் நட்பிலேயே இருக்க விரும்புகிறோம்”

 

சந்திரகுப்தன் சாணக்கியரைப் பார்த்து விட்டு இந்திரதத்திடம் சொன்னான். “ஆச்சாரியரிடம் நீங்கள் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு நம் இரு பிரதேசங்களுக்குள்ளும் நீண்டதில் மகிழ்ச்சி கேகய அமைச்சரே. நாம் இணைந்து எதிரிகளை வீழ்த்துவோம்”

 

இந்திரதத் நிம்மதியடைந்தார். அடுத்து அவரும் சந்திரகுப்தனும் யூடெமஸை எதிர்த்துப் போரிட்டு வெல்லும் வியூகங்களைப் பற்றிக் கலந்தாலோசித்துப் பேசினார்கள். சாணக்கியர் அவர்கள் பேசிக் கொள்வதை மிகவும் கூர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தாரேயொழிய ஒன்றும் சொல்லவில்லை. சாணக்கியர் அதிகம் வாய்திறந்து பேசாதது இந்திரதத்துக்கு வியப்பை அளித்தது.  ஆரம்பத்தில் சாணக்கியருக்கும் சந்திரகுப்தனுக்கும் இடையில் பிணக்கு ஏதாவது இருக்கிறதோ என்று கூட அவர் சந்தேகப்பட்டார். ஆனால் நண்பரை மிக நன்றாக அறிந்த அவர், சாணக்கியர் ஒதுங்கி இருந்து தன் மாணவன் எப்படி எல்லாம் யோசிக்கிறான், முடிவெடுக்கிறான் என்பதைக் கண்காணித்து மனதிற்குள் மதிப்பிடுகிறார் என்று பின் புரிந்து கொண்டார். சாணக்கியரின் மதிப்பீடு அவர் முகத்தில் தெரிந்த திருப்தியில் வெளிப்பட்டது.

 

சந்திரகுப்தனின் அறிவுகூர்மை இந்திரதத்தையும் வியக்க வைத்தது. சாதக, பாதகங்களை அவன் மிக ஆழ்ந்து யோசித்து சிறிய விஷயங்களிலும் சிறப்பான முடிவுகள் எடுத்து அவரை அசத்தினான். அதே போல் அவன் கேகயத்திலிருந்து புஷ்கலாவதி வரை விரிந்திருந்த பிராந்தியத்தைக் குறித்தும் தெளிவான அறிவு படைத்தவனாக இருந்ததும் அவரை ஆச்சரியப்படுத்தியது. ஆசிரியனுக்குப் பொருத்தமான மாணவன் என்று சந்திரகுப்தனை அவர் மனம் மெச்சியது.

 

முடிவில் சந்திரகுப்தன் சாணக்கியர் பக்கம் திரும்பிக் கேட்டான். “நாங்கள் சிந்தித்ததில் எதாவது விடுபட்டிருக்கிறதா ஆச்சாரியரே?”  

 

சாணக்கியர் கேட்டார். “இப்போது கேகயப்படையில் இருக்கும் யவன வீரர்கள், மற்ற பகுதி வீரர்கள் ஆகியோரை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்? அவர்கள் உங்களுக்கு எதிராக இயங்காமல், உங்களுக்கு ஒத்துழைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”

 

யூடெமஸ் கேகயத்திலிருந்து அவன் ஓட்டி வந்திருந்த யானைப் படையை ரசித்துக் கொண்டிருந்தான். இப்போது தான் சத்ரப் என்ற பதவிக்கு அர்த்தம் இருக்கும் சூழ்நிலையை அவன் உருவாக்கியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவன் மகிழ்ச்சியைக் கெடுக்கும் தகவல் ஒன்றை அந்த வேளையில் அவனுடைய ஒற்றன் கொண்டு வந்தான். “சத்ரப். தங்களுக்கு எதிராக கேகய அரசன் மலயகேதுவும், சந்திரகுப்தனும் சேர்ந்து படையெடுத்து வரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறார்கள். கேகய அமைச்சர் இந்திரதத் நேரடியாகச் சென்று சந்திரகுப்தனுடன் ஒப்பந்த்ததை உறுதி செய்து வந்திருக்கிறார்”

 

யூடெமஸ் திகைத்தான். புருஷோத்தமனின் மரணத்தில் அவன் மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் கூட அவர்கள் அதிகபட்சமாக ஆம்பி குமாரனிடம் புகார் செய்வதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது என்று திடமாக நம்பியிருந்த அவனுக்கு அவர்கள் எதிரியுடன் இணையத் தயங்க மாட்டார்கள் என்று தோன்றியிருக்கவில்லை. ஆனால் ஆரம்ப அதிர்ச்சி பின் குறைய ஆரம்பித்தது. கேகயத்தில் அவன் வீரர்களும் இருக்கிறார்கள், மற்ற வீரர்களும் இருக்கிறார்கள். கேகய வீரர்கள் கேகய மன்னனை தங்கள் தலைவனாக நினைத்தாலும் மற்ற வீரர்கள் தங்கள் உண்மையான தலைவன் யூடெமஸுக்கு எதிராகப் போரிடத் தயாராக இருக்க மாட்டார்கள். அதனால் கேகயத்தில் பாதிப்படை தான் அவனுக்கு எதிராகக் கிளம்பும்.

 

இன்னொரு விஷயமும் அவனைத் தைரியமூட்டியது.  அவனுக்கு எதிராக அவர்கள் படையெடுத்து வந்தால் ஆம்பி குமாரன் முன்பு போல விலகி இருக்க முடியாது. இன்னொரு சத்ரப்பான அவன் யூடெமஸை ஆதரித்தே ஆக வேண்டும்.  அப்படி ஆதரிக்கா விட்டால் அவன் சத்ரப்பாக இருப்பதற்குப் பொருளில்லை என்றாகி விடும். அவனுடன் ஆம்பி குமாரனும் இணைந்தால் எதிரிகளை வெல்வது பெரிய விஷயமல்ல.

 

யூடெமஸ் உடனடியாக எதிரிகள் தனக்கெதிராகப் போருக்கு ஆயத்தமாவதைத் தெரிவித்து ஆம்பி குமாரனுக்கு ஒரு தூதன் மூலம் செய்தி அனுப்பினான். அத்துடன் உடனடியாக அவர்களை எதிர்கொள்ள அவனுடன் இணைந்து கொள்ள வரும்படி ஆம்பி குமாரனுக்குக் கோரிக்கையும் விடுத்து விட்டுச் சற்று நிம்மதி அடைந்தான்.   

 

(தொடரும்)

என்.கணேசன்




4 comments:

  1. I don't think Aambi joining. He would join chandragupta now as they don't have the great Alexander to save them.

    ReplyDelete
  2. ஆறாம் பத்தியில் காலச் சக்கரம் பொன் போன்றது என வந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. காலம்,சக்கரம் போல் ஓரிடத்தில் நில்லாதது என்று பொருள் கொள்ளுங்கள்..

      Delete
  3. ஆம்பிகுமாரன் தற்போது சிந்திக்க தொடங்கி விட்டான்... அழியப் போகும் யூடெமஸ்க்கு ஆதரவாக இருக்கும்...முட்டாள்தனத்தை செய்ய மாட்டான்.... யூடெமஸ் அழிந்த பின் அவனுடைய சத்ரப் பதவி எதற்கும் பயன் தராது....

    ReplyDelete