சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 25, 2021

இல்லுமினாட்டி 91



சிந்துவின் நோக்கத்தை க்ரிஷ் அறிந்து விட்டான் என்பதையும், ஏதோ காரணத்தால் அவளை ஒன்றும் செய்யாமல் இருக்கிறான் என்பதையும், சிந்துவின் மனதை இப்போதும் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கிறான் என்பதையும் விஸ்வம் அறிந்து விட்டால் என்ன ஆகும் என்று யோசித்த போது சிந்து அடிவயிற்றிலிருந்து அச்சத்தை உணர்ந்தாள். அடுத்ததாக க்ரிஷை அவன் என்ன செய்வான் என்பது தெரியா விட்டாலும் அவளை என்ன செய்வான் என்பது சிந்துவுக்குத் தெரிந்தே இருந்தது. இனி அவள் மூலம் க்ரிஷுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்றும், இனி அவளால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவனுக்கு உறுதியாகத் தெரியுமானால் உடனடியாக அவளைக் கொன்று விட அவன் தயங்க மாட்டான்.  இது தெளிவாகத் தெரிந்த பின் அவளால் உறங்க முடியவில்லை. அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். இந்த இரண்டு மனோசக்தி மனிதர்களுக்கு இடையில் இப்படி வசமாக மாட்டிக் கொண்டோமே என்று அவள் மனம் புலம்பியது.


இப்படியொரு இக்கட்டான நிலையைச் சரிசெய்ய எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அவளுக்கே அவள் மேல் கோபத்தை வரவழைத்தது. ஏதாவது செய்தேயாக வேண்டும் என்கிற அவசரத்தை அவள் தீவிரமாக உணர்ந்தாள். என்ன செய்வது, எப்படிச் செய்வது என்பதைத் தீர்மானிக்கும் முன் தன் பக்கம் இருக்கும் சாதக, பாதகங்களைத் தெளிவாக அறிந்திருப்பது நல்லது என்று நினைத்த அவள் ஒரு வெள்ளைத் தாளையும், ஒரு பேனாவையும் எடுத்துக் கொண்டாள்.

தாளில் சாதகம் என்று எழுதி அடிக்கோடிட்டாள். பின் கீழே எழுத ஆரம்பித்தாள்.


·    உதய் என்னை ஆழமாகக் காதலிப்பது.

·   என்ன ஆனாலும் சரி என்னையே கல்யாணம் செய்வதாய் சத்தியம் செய்திருப்பது.  
    
·  பத்மாவதியும் என்னை மருமகளாகவே நினைக்க ஆரம்பித்திருப்பது.

· என் மேல் அவர்கள் கண்டுபிடிக்கிற மாதிரி எந்தப் போலீஸ் ரிகார்டும் இல்லை.

·  விஸ்வத்தின் ஆள் நான் என்று கண்டுபிடிக்கவும் அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை.

· அதனால் கடைசி வரை எந்தக் குற்றச்சாட்டு வந்தாலும் அரசியல்வாதிகள் போல “பொய், பொய், பொய்” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

தாளில் பின்பக்கத்தில் பாதகம் என்று எழுதி அடிக்கோடிட்டு எழுத ஆரம்பித்தாள்.

· க்ரிஷ் மீது அவன் குடும்பத்தாருக்கு இருக்கும் அன்பும், நம்பிக்கையும் என்னால் கூட மாற்ற முடியாதது.

· விஸ்வத்தைப் போலவே க்ரிஷும் சில அபூர்வ சக்திகளை வைத்திருப்பது. அதற்கு உதாரணம் என்னைக் கண்டுபிடித்தது.

·      ஒருவேளை க்ரிஷ் என்னைக் குற்றவாளியாகச் சொன்னால் அவன் தந்தை அவன் பக்கம் தான் நிற்பார். அவர்  ஆரம்பத்தில் இருந்தே என்னிடம் ஒரு இடைவெளி விட்டே தான் பழகுகிறார். முதலமைச்சர் பதவியில் இருக்கும் அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடிந்தவராக இருக்கிறார்.

·   க்ரிஷ் என்னைக் குற்றவாளியாகச் சொன்னால் உதய் தம்பியை வெறுத்து என் பக்கம் வந்து விட மாட்டான். பெரும்பாலும் இருபக்கமும் விடமுடியாதபடி தான் இருப்பான்.

·     அப்படி ஒரு நிலை வந்தால் பத்மாவதி எனக்காக வருத்தப்படலாம். ஆனால் சின்ன மகனை எதிர்க்கும் நிலையைக் கண்டிப்பாக எடுக்க மாட்டாள்.

·  கண்டிப்பாக இங்கிருந்து தப்பித்துப் போக முடிகிற வாய்ப்பு இல்லவே இல்லை.


இரண்டு பக்கத்திலும் எழுதியதை ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு சிந்து யோசித்தாள். குழப்பத்தில் ஸ்தம்பித்து விடுவதைப் போல முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்வது? முதலில் க்ரிஷ் மனதில் என்ன உள்ளது, என்ன கண்டுபிடித்து வைத்திருக்கிறான் என்பது உறுதியாகத் தெரிய வேண்டும். வெறும் அனுமானங்கள் இதுபோன்ற வாழ்வா சாவா என்கிற சூழ்நிலையில் உதவாது. துணிச்சலாக க்ரிஷை எதிர்கொள்ள வேண்டும்... அது அவளைப் பற்றிய உண்மையை அவன் சொல்லி விடுவதில் கூட முடியலாம். ஆனால் அவன் கடவுள் அல்ல. அவன் சொன்னது எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்பதைக் கேட்பவர்கள் மனதில் பதித்து விட முடியும். அது பொய் என்று அவள் தைரியமாக மறுக்க முடியும். பல முறை பொய் என்று சொன்னால் எப்படிப்பட்டவனுக்கும் அப்படித் தானிருக்குமோ என்ற சந்தேகம் வரும்.

இந்த முடிவு எடுத்தவுடன் மனம் சற்று அமைதியடைந்தது. இதை எப்படிச் செயல்படுத்துவது என்று யோசித்து அவள் ஒரு முடிவுக்கு உடனடியாக வந்தாள். உதயை வைத்துக் கொண்டே அவள் க்ரிஷை எதிர்கொள்வது என்று முடிவெடுத்தாள். க்ரிஷ் அவளை எதிர்த்து அப்புறப்படுத்தாதற்குக் காரணம் உதய் அவள் மீது வைத்திருந்த காதலாக இருக்குமானால் அவன் உதயை அருகில் வைத்துக் கொண்டு சொல்லத் தயங்குவான். அப்படி இல்லாமல் அவன் தன் எந்த சந்தேகத்தைச் சொன்னாலும் சரி. நிலைமை என்ன என்று தெரியாமல் குழப்பத்துடன் இருப்பதை விடத் தெளிவாய் புரிந்து கொள்வதே நல்லது.

அவள் அதன் பின் நிம்மதியாக உறங்கினாள். மறுநாள் அதிகாலையிலேயே வழக்கம் போல் உதய் அவளுக்குப் போன் செய்த போது பேச்சினிடையே  கேட்டாள். “உங்கள் தம்பி என்னைப் பற்றி என்ன சொன்னார்?”

உதய் குழப்பத்துடன் கேட்டான். “ஒன்றும் சொல்லவில்லை. ஏன் அப்படிக் கேட்கிறாய்?”

சிந்து சொன்னாள். “அவர் எதோ என்னைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் என்று நேற்று சொன்னீர்களே. பின் நீங்கள் என்ன இருந்தாலும் உங்களிடம் சொல்லக்கூடச் சொன்னீர்களே. அதனால் தான் அவர் உங்களிடம் தனியாக என்னைப் பற்றிக் கண்டுபிடித்ததை எதாவது சொன்னாரா என்று கேட்டேன்”

உதய் சிரித்தான். “அதைச் சொல்கிறாயா? அவனாக எதையும் சொல்லவில்லை. நானும் அவனிடம் எதையும் கேட்கவில்லை”

சிந்து சொன்னாள். “எனக்கு அதைத் தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறது. அவர் மாதிரி புத்திசாலி என்னைப் பற்றி எனக்கே தெரியாத எதாவது ஒன்றைக் கூடக் கண்டுபிடித்திருக்கலாம். நான் எப்போதுமே பத்திரிக்கைகளில் வரும் சைக்காலஜி க்விஸ் எல்லாம் படித்து பதில் குறித்துக் கொண்டு என்னைப் பற்றி கணிப்பு என்ன சொல்கிறது என்று படிப்பேன்... அதனால் தான் அவர் என்ன கணித்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...”

உதய் சொன்னான். “நீயே வந்து அவனிடம் கேள்...”

சிந்து குரலில் முழு ஆர்வத்தைக் காட்டிச் சொன்னாள். “அப்படியானால் நான் இன்றைக்கு சாயங்காலமே வரட்டுமா?

உதய் சந்தோஷமாகச் சொன்னான். “சரி வா?”

சிந்து சொன்னாள். “ஆனால் நான் அவரிடம் கேட்க வருகிறேன் என்பதை அவரிடம் சொல்லி விடாதீர்கள். திடீரென்று வந்து கேட்டால் தான் அவருக்கு யோசிக்க நேரம் இருக்காது. அப்போது தான் அவர் உள்ளதை உள்ளபடியே சொல்வார்” உதய் சம்மதித்தான்.


ர்னீலியஸின் மனம் அன்று சலனங்கள் அதிகமில்லாமல் இருந்தது. அது அபூர்வமாகத் தான் அமையும் என்பதால் அப்படி உணர்ந்தவுடன் அந்தப் பயிற்சியை ஆரம்பித்தார்.  சிறிது நேரத்தில் அந்த ரகசிய ஆவணத்தை முதல் முதலில் படித்த கணத்திற்கே போனார். அந்த ஆவணத்தைக் கையில் பிடித்த உணர்வை இப்போதும் தத்ரூபமாக அவரால் உணர முடிந்தது. பிரித்துப் பார்க்கிறார்.... அவருக்கு வேண்டியிருந்த அந்த பக்கத்திற்கு வந்தார். வாசகங்களை அவரால் தெளிவாகவும், தங்குதடையில்லாமலும் படிக்க முடிந்தது....

முன்கூட்டிக் கணக்கிட்டு, காலம் நிர்ணயித்து ஓருடல் விட்டு மறு உடல் போவது யாம் அறிந்ததே, பல முறை கண்டதே! ஓருடல் நஷ்டப்பட்டு அழியும் போது வெளியேறி மறு உடல் கண்டு சேர்ந்து நிரந்தரமாய்த் தங்கும்  புதிய முயற்சி அரங்கேறும் போது ஆபத்துக் காலம் உச்சம் சென்றதென்று அறிக. இது நீங்கள் அறியாது நடக்க வழியில்லை. நடந்த பின் அறிவது உறுதி. மறு உடல் கண்ட மனிதன் மறைய உதவி கிடைக்கும். நீங்கள் தொழுத இடம் போய்ச் சேரும். உங்கள் மகாகவி ஒருவன் அற்புதக் கவிதை ஒன்றை எழுதிய அவ்விடம் இரு தளம்  கொண்டது.....”

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Eagerly waiting to read Krish-Sindhu meeting. Since both are dear to Uday who will win and how?

    ReplyDelete
  2. தட்டச்சுப் பிழையைச் சுட்டிக் காட்டிய நண்பர்களுக்கு நன்றி. சரி செய்து விட்டேன்.

    ReplyDelete
  3. இருதளம் கொண்ட அந்த இடம் தான் விஸ்வம் தற்போது ஒளிந்து கொண்டுள்ள...இடமாக இருக்கும்னு நினைக்கிறேன்...

    ReplyDelete