சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 9, 2019

இருவேறு உலகம் – 135


ம்யூனிக் நகர விமானநிலையத்தில் க்ரிஷை விஸ்வேஸ்வரய்யா வரவேற்றார், அவரை ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். ”இன்று சாயங்காலம் நான்கு மணிக்கு உங்களை அழைத்துப் போக இல்லுமினாட்டி ஆட்கள் வருவார்கள். முதலில் தன் நோக்கம், வழி, சாதனை பற்றி விஸ்வத்தைப் பேசச் சொல்வார்கள். அவர் பேசி முடித்த பின் உங்களைப் பேச அழைப்பார்கள். இரவு திரும்ப உங்களை இங்கேயே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். நாளை மதியம் நீங்கள் திரும்ப இந்தியா கிளம்பி விடலாம்…..”

க்ரிஷ் சரி என்று தலையசைத்தான்.

அவர் சொன்னார். “நீங்கள் காரில் ஏறியவுடன் கண்களைக் கட்டி விடுவார்கள். திரும்ப இந்த ஓட்டலுக்கு வந்தவுடன் தான் கண்கட்டை அவிழ்ப்பார்கள். தயவு செய்து நீங்களாக கட்டைத் திறந்து அழைத்துப் போகும் இடத்தையோ அங்கிருக்கும் ஆள்களையோ பார்க்க முயற்சி செய்ய வேண்டாம்…..”

அதற்கும் க்ரிஷ் சரி என்று தலையசைத்தான். விஸ்வேஸ்வரய்யாவுக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இவன் எப்படி விஸ்வம் போன்ற சக்திமானை இல்லுமினாட்டியின் பார்வையில் இறக்கி வைக்க முடியும். அவர் மெல்லச் சொன்னார். ”க்ரிஷ் இல்லுமினாட்டிக்கு எப்போதும் அறிவு, சாதனை, சக்தி, தங்களது உயர்வு இதிலெல்லாம் தான் மதிப்பும், மரியாதையும். உலக நன்மை, சமூக நன்மை பற்றி எல்லாம் அவர்களுக்கு அக்கறை கிடையாது. நீங்கள் பேசும் போது அதை மட்டும் நினைவு வைத்துப் பேசுங்கள்.”

இதைக்கூட அவர் சொல்லியிருக்கக்கூடாது. ஆனால் வெகுளியாய்த் தெரியும் இந்த நல்ல மனதுள்ள இளைஞனுக்கு இதைச் சொல்லி எச்சரிக்க ஏனோ அவருக்குத் தோன்றியது.

க்ரிஷ் அதற்கும் தலையசைத்தான். விஸ்வேஸ்வரய்யா போய் விட்டார்.


விஸ்வத்துக்கு க்ரிஷ் ம்யூனிக் வந்து சேர்ந்த தகவல் வந்த போது அவன் இல்லுமினாட்டியில் என்ன எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான். இல்லுமினாட்டிக்காகப் பேசுவதாக மட்டும் தன் பேச்சு இருக்காமல், அடுத்து க்ரிஷ் என்னவெல்லாம் அவனுக்கு எதிராகச் சொல்ல முடியுமோ அதற்கெல்லாம் பதிலையும் தன் பேச்சில் புகுத்தத் தீர்மானித்திருந்தான். க்ரிஷ் பேச எழும் போது அவனுக்கு அதற்கு மேல் சொல்ல  எதுவும் இருக்கக்கூடாது….. நவீன்சந்திர ஷா சொன்னது போல இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு எந்த இல்லுமினாட்டியும் அவனுக்கு எதிராகப் போட்டியில் நிற்கப் பயப்பட வேண்டும். நின்றால் தோல்வி உறுதி என்று நினைக்கும்படியான உணர்வை ஏற்படுத்தி விட வேண்டும். பொதுவாக அவன் செயல்வீரனே ஒழிய திறமையான பேச்சாளன் அல்ல. ஆனால் இன்று அவன் பேச்சு தான் அவனுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது என்பதால் அதிகாலை மூன்று மணியில் இருந்தே என்ன எப்படிப் பேச வேண்டும் என்பதை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான்.

இல்லுமினாட்டிக்காகப் பேச முன்பே தயாராகி இருந்தான். இப்போது அவன் தயாராவதெல்லாம் க்ரிஷ் அவனுக்கு எதிராக என்ன சொல்ல முடியும் என்ற கேள்விகளைக் கண்டுபிடித்து அதற்குப் பதில் சொல்வது தான். அதிகபட்சமாய் க்ரிஷ் என்ன சொல்வான்? என்னைக் கொல்ல முயன்றான், மாஸ்டரின் குருவைக் கொன்றான் என்று சொல்லலாம். அதற்குச் சரியான ஆதாரமும் இல்லை, இல்லுமினாட்டி அதை ஒரு பொருட்டாக நினைக்கப் போவதுமில்லை. அதே போல் இவன் ஆன்மிக இயக்கத்தின் பணத்தைக் கொள்ளையடித்து விட்டான், மாஸ்டரை ஏமாற்றி விட்டான் என்றெல்லாம் குற்றம் சாட்டலாம். அதற்குச் சரியான பதில் விஸ்வம் வைத்திருக்கிறான். ஏலியன் இவனை எதிரி என்று சுட்டிக்காட்டி விட்டது, உலக அழிவுக்கு இவன் காரணமாய் இருக்கலாம் என்றெல்லாம் கூடச் சொல்லலாம். க்ரிஷ் நாணயமானவன் என்பதால் அவன் சொல்வது உண்மையாக இருக்கலாம் என்பதால் அதற்கு மட்டும் பதிலை இல்லுமினாட்டி எதிர்பார்க்கலாம். எர்னெஸ்டோ கிழம் அந்த ஒரு அம்சத்தில் தான் அவன் பக்கத்தையும் கேட்டு விடுவது நல்லது என்று நினைத்திருக்கிறது. சகல ரோகங்களுக்கும் ஒரே நிவாரணி என்பது போல எல்லாவற்றிற்கும் பதிலாக இருக்கவே இருக்கிறது பிரமிடு நெற்றிக் கண். விஸ்வம் திருப்தி அடைந்தான்.


மாலை 3.59க்கு க்ரிஷை அழைத்துப் போக இரண்டு பேர் வந்தார்கள். இருவரும் கட்டுமஸ்தான இளைஞர்கள். சிரிப்பில்லாத முகத்தோடு இருந்தார்கள். ஆனால் மிக மரியாதையாகக் கேட்டார்கள். “போகலாமா? நீங்கள் தயாரா?”

தயார் என்று க்ரிஷ் சொன்னதும் அழைத்துப் போனார்கள். வெளியே விலை உயர்ந்த பெரிய கருப்புக்கார் நின்றிருந்தது. பின்பக்கத்தில் நடுவில் அவனை இருக்க வைத்து இருபக்கமும் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள். டிரைவரைப் பார்த்து அவர்கள் தலையசைக்க, கார் கிளம்பியது. கருப்புத் துணியை எடுத்து “கண்களை மூடிக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார்கள். தலையசைத்த க்ரிஷ் கண்களை மூடிக் கொண்டான். இறுக்கமாக அந்தக் கருப்புத் துணியை வைத்து கண்களைச் சுற்றிக் கட்டினார்கள். சுமார் அரை மணி நேரம் பயணித்த பின் கார் ஓரிடத்தில் நின்றது. அவனை இறக்கி அவசரமில்லாமல் அழைத்துப் போய் ஓரிடத்தில் ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார்கள். “சிறிது நேரம் காத்திருங்கள். பின் உள்ளே அழைத்துப் போகிறோம்” என்றார்கள். க்ரிஷ் தலையசைத்தான்.


ந்த அரங்கில் 123 இல்லுமினாட்டி உறுப்பினர்கள் வந்திருந்தார்கள். மேடையில் எர்னெஸ்டோ, வழுக்கைத்தலையர், ஃப்ராங்க்பர்ட் கலைப்பொருள்பிரியர் உட்பட ஏழு பேர் அமர்ந்திருந்தார்கள். விஸ்வம், நவீன்சந்திர ஷா, விஸ்வேஸ்வரய்யா உட்பட மற்ற உறுப்பினர்கள் கீழ் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். க்ரிஷ் பற்றிய குறிப்புகள் அடங்கிய மூன்று தாள்கள் அனைவர் கையிலும் தரப்பட்டிருந்தன. யார் பேச்சைக் கேட்கப் போகிறார்களோ அவர் பற்றிய பொதுவான தகவல்களை உறுப்பினர்கள் அறிந்திருப்பது முக்கியம் என்று எர்னெஸ்டோ நினைத்ததால் அந்தக் குறிப்புகள் வினியோகப்பட்டிருந்தன. எல்லோரும் சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். விஸ்வமும் படித்தான். க்ரிஷ் பற்றி உள்ளது உள்ளபடியே தரப்பட்டிருந்தாலும் அது உயர்வாகவே தெரிந்ததால் விஸ்வத்துக்குப் பிடிக்கவில்லை… மற்றவர்கள் சுவாரசியமாகப் படித்தது அதைவிடப் பிடிக்கவில்லை….. ஆனால் வெளிக்காட்டிக் கொள்வது பலவீனமாக இருப்பதாகக் காட்டி விடும் என்பதால் போலிப் புன்னகையோடு அமர்ந்திருந்தான்.  ஒரு உறுப்பினர் மேடை ஏறி எர்னெஸ்டோவிடம் ’க்ரிஷ் வந்து விட்டான். வெளியே உட்கார வைக்கப்பட்டிருக்கிறான்’ என்று தெரிவித்து விட்டு இறங்கினார். எர்னெஸ்டோ தலையசைத்து விட்டு மைக்கைக் கையில் எடுத்துப் பேசினார்.  

“மாலை வணக்கங்கள் நண்பர்களே! இல்லுமினாட்டியின் சரித்திரத்தில் இது வரை நடக்காத வகைக் கூட்டம் இது. நாம் என்றுமே அன்னியர்களை நம் கூட்டத்தில் அனுமதித்ததில்லை. இதுவே முதல் விதிவிலக்கு. இக்காலக்கட்டம் இல்லுமினாட்டிக்கு அழிவை ஏற்படுத்த முடிந்த காலக்கட்டம் என்று ஆரகிள் 125 வருடங்களுக்கு முன்பே எச்சரித்திருந்தது பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் ஒருவன் வந்து வழிகாட்டுவான் அந்த வழியில் போனால் இல்லுமினாட்டி அழிவில் இருந்து தப்பிக்கும் என்றும் ஆரகிள் சொல்லி இருக்கிறது. மூட நம்பிக்கைகளைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் நாம். இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால் இதைச் சொன்ன ஆரகிள் அக்காலக்கட்டத்தில் சொன்னது எல்லாமே நடந்திருக்கிறது என்பதால் நம் இயக்கத்து மூத்தவர்கள் இந்தத் தகவலை அலட்சியப்படுத்தாமல் பாதுகாத்து வைத்ததோடு எச்சரிக்கையை வழிவழியாக நினைவு வைத்திருக்கும்படியும் செய்தார்கள். திரு விஸ்வம் இந்த நேரத்தில் நம்மோடு இணைந்தார். அவர் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால், சிறிது சந்தேகம் ஏற்பட்டிருந்தால், கண்டிப்பாக உறுப்பினர் ஆக நாம் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டோம். நம்பிக்கையோடு அவரிடம் நிறைய எதிர்பார்ப்புகளையும் இல்லுமினாட்டி வைத்திருந்தது. வைத்திருக்கிறது”.

“ஆனால் ஏலியன் ஒன்று பூமிக்கு வந்ததும் பதிவாகி, அது ஒரு இளைஞனையும் தொடர்பு கொண்டது இக்காலக்கட்டத்திலேயே பதிவானது.  இதுவும் எப்போதும் நடக்கும் நிகழ்வல்ல. எத்தனையோ பதிவுகள் அங்கும் இங்கும் பதிவாகி இருந்தாலும் சக்தி வாய்ந்த அலைகளின் பதிவோடு மறுக்கவே முடியாத புகைப்படங்களோடு ஒரு மனிதனையும் சம்பந்தப்படுத்தி பதிவானது இதுவே முதல் முறை. அந்த ஏலியன் அந்த இளைஞனிடம் உலக அழிவு சீக்கிரமே நிகழும் சூழல் உருவாகி விட்டது என்று சொல்லி அது நம் உறுப்பினர் விஸ்வம் மூலம் நிகழலாம் என்பது போல் சொன்னதாகவும் நமக்குத் தகவல் வந்தது. மற்ற காலங்களாய் இருந்தால் இதைப் பொருட்படுத்தி இருக்க மாட்டோம். இந்தச் செய்தியும், ஆரகிள் செய்தியும் இதே காலக் கட்டத்தினுடையதாக இருப்பதால் அலட்சியப்படுத்தவும் முடியவில்லை. திரு விஸ்வம் எங்களைத் தவறாக நினைத்து விடக்கூடாது. சந்தேகங்களை அவ்வப்போதே நிவர்த்தி செய்து கொள்ளாவிட்டால் பிற்காலத்தில் தவறான பலநூறு அனுமானங்கள் பிறந்து விடும். அதனால் சம்பந்தப்பட்ட இருவர் கருத்துகளையும், இருவரையும் பேச விட்டுக் கேட்கிற ஏற்பாட்டைச் செய்திருக்கிறோம். அந்த இளைஞன் திரு க்ரிஷ் வெளியே அமர்ந்திருக்கிறார். அவர் உங்கள் குரலைத் தவிர வேறு எந்தக் குரலையும் இங்கே கேட்கப்போவதில்லை. அவரைக் கண்களைக் கட்டிக் கூட்டி வந்து கண்கட்டுடனேயே பேசவும் வைக்கப் போவதால் அவர் யாரையும் பார்க்கவோ, எதையும் தெரிந்து கொள்ளவோ போவதில்லை. திரு விஸ்வம் பேசி முடித்தவுடன் க்ரிஷ் பேசுவார். பேச்சு முடிந்த பின் அனுப்பி வைக்கப்படுவார். இந்த இரண்டு பேச்சுகளின் முடிவில் இல்லுமினாட்டிக்குத் தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன்….. க்ரிஷைக் கூட்டிக் கொண்டு வாருங்கள். அவர் வந்து உட்கார்ந்தவுடன் திரு விஸ்வம் மேடைக்கு வந்து பேச்சை ஆரம்பிக்கலாம்…..”

(தொடரும்)
என்.கணேசன்


3 comments:

  1. ஏலியன் திரும்ப வருவதாக கூறி இருந்தானே.... இப்போது வருவானா???
    அப்படி என்ன தான் பேச போகிறார்களோ...? என்பதை அறிய ஆவலாக உள்ளேன்....

    ReplyDelete
  2. Sema Tension Moment. Great Going.

    ReplyDelete