“அவன் யாரையாவது
கொன்னுட்டானா என்ன?” சாதுவின் கேள்வி செந்தில்நாதனின் எண்ண ஓட்டத்தைக் கலைத்தது.
”தெரியலை சந்தேகம் இருக்கிறது”
“அப்படி
அவன் கொன்னிருந்தால் கூட நீங்க யாரும் அவனைப் பிடிக்க முடியாது. தடயம் கூட
இருக்காது. அவன் நினைத்தால் உங்களையே கூடத் தடயம் இல்லாமல் கொன்னுடுவான்......”
சாது
சொன்னது உண்மையானால் எதிரி சட்டம் தொட முடியாத பயங்கரவாதி என்றாகிறது. அது போன்ற
சட்டம் தொட முடியாத ஆட்களை செந்தில்நாதனால் சகிக்க முடிந்ததில்லை. சாது கையை நீட்ட
இன்னொரு பொட்டலத்தை செந்தில்நாதன் சாது கையில் கொடுத்தார். இன்னும் ஒரு சிறு
பொட்டலம் செந்தில்நாதன் கையில் மிஞ்சி இருப்பதைக் கவனித்த சாது
“உங்களுக்கு அவன் படித்த புத்தகம் வேணுமா?” என்று கேட்டார்.
‘என்ன புத்தகம்?”
“அவன் டெல்லி போய்
வந்த போது ஒரு புத்தகம் கொண்டு வந்து இடையிடையே படித்தான் என்று சொன்னேனே அந்தப்
புத்தகம்..... அவன் போகும் போது விட்டு விட்டுப் போய் விட்டான்..... அது என்னிடம்
தான் இருக்கிறது. வேண்டுமானால் தருகிறேன்...” என்று சொன்ன சாது
செந்தில் நாதன் கையில் இருந்த அந்த இன்னொரு பொட்டலத்தை அர்த்தத்துடன் பார்த்தார். செந்தில்நாதன் சரியெனத்
தலையசைத்தார்.
“இருங்கள்.
வந்து விடுகிறேன்” என்ற சாது உடனடியாக வேகமாக எழுந்து போனார். அது வரை மிகவும் சோம்பலாக அமர்ந்து
கொண்டிருந்த இந்த மனிதனால் இவ்வளவு வேகமாகவும் நடக்க முடிகிறது ஆச்சரியம் தான்
என்று செந்தில்நாதன் நினைத்துக் கொண்டார்.
ஐந்து நிமிடங்களில்
அந்த சாது திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு வெளிறிப்போன ஒரு தடிமனான புத்தகம்
இருந்தது. Mind Programming by Stephen Thomson என்று எழுதியிருந்தது.
புத்தகம் தண்ணீரில் பல முறை நனைந்து காய்ந்தது போலத்
தோன்றியது. அந்தப் புத்தகத்தைத் தருவதற்கு முன் சாது அந்த மூன்றாவது
பொட்டலத்தையும் வாங்கிக் கொண்டார்.
செந்தில்நாதன் விடை
தெரிந்தும் கடமையாக ஒரு கேள்வியைக் கேட்டார். “அந்த ஆளை மறுபடி எப்போதாவது
பார்த்தீர்களா?”
சாது
சொன்னார். “இல்லை....”
மாஸ்டர்
க்ரிஷிடம் அடுத்து சில பயிற்சிகளைச் சொல்லித்தந்திருந்தார். அடுத்து அவன் கற்றுத் தேற வேண்டிய பாடத்தையும் சொல்லித்
தந்திருந்தார். “எல்லா நேரங்களிலேயும் இறைசக்தியின் அங்கம் என்கிற அந்தத் தெளிவான உணர்வுநிலையைத் தக்க வைத்துக் கொள்வது தான் முதல்நிலை, முதல் பாடம். இனி அந்த மேலான உணர்வுநிலையோடு உன் மனதில் எழும் ஒவ்வொரு எண்ணத்தையும் பரிசீலித்து சரியாக இருந்தால் அனுமதிக்கவும், தவறாக இருந்தால் அந்தப் புரிதலோடு பொய்யென விலக்கவும் வேண்டும். இதில் ஆராயாமல் எதையும் அடக்கவோ, உள்ளே அமுக்கிக் கொள்ளவோ கூடாது, அப்படி எதையும் அடக்கி உள்ளே அழுத்தி வைப்பது வீண். மேற்பார்வைக்குத் தெரியா விட்டாலும் அடக்கி வைக்கப்பட்டது தன் சமயத்திற்காக, தகுந்த சந்தர்ப்பத்திற்காக எப்போதுமே காத்துக் கொண்டிருக்கும். எதுவும் புரிந்து தெளியாமல் உன்னிடமிருந்து விலகி விடுவதில்லை…. மனம் உனக்கு உதவும் நண்பனாக இருக்க வேண்டும். அது உன்னை வலிமையாக்குபவற்றையும், சரியாக வழிநடத்துவதையும் மட்டுமே எடுத்துக் கொண்டு மாறானவற்றை எல்லாம் தவிர்த்து விலக்கி வாழும் போது மட்டுமே சாத்தியம். மனம் பகைமையானால் வீழ்ச்சி நிச்சயம்….”
ஆரம்பத்திலிருந்தே
சுதந்திரமாக இருந்து பழகிய மனதுக்கு இப்போது கண்காணிப்பின் கீழ் வருவது சிறிதும் பிடிக்கவில்லை.
அது பலவிதங்களில் முரண்டு பிடித்து தன் அதிருப்தியை க்ரிஷுக்குத் தெரிவித்தது. இப்படி
மனதோடு மல்லுக்கட்டி நிற்கும் போது தான் செந்தில்நாதன் போன் செய்து சாது மூலம் கிடைத்த
தகவல்களைத் தெரிவித்தார். எதிரியின் பல பரிமாணங்கள் க்ரிஷை வியக்க வைத்தது. ‘இவன் விட்டு
வைக்காதது எதாவது இருக்கிறதா? என்று திகைத்தான்.
ஸ்டீபன்
தாம்சன் எழுதிய Mind Programming நூலை அவனும் படித்திருக்கிறான். இந்த நூற்றாண்டின்
மிகச்சிறந்த மனோதத்துவ அறிஞர் அவர். அமானுஷ்ய சக்திகளில் இருந்து ஆழ்மன ப்ரோகிராமிங்
பற்றிப் படிக்க எதிரி முற்பட்டதன் ரகசியம் அவனுக்கு விளங்கவில்லை. இது வரை அவன் எதிரியைப்
பற்றிக் கேள்விப்பட்டதில் ஒரு விஷயத்தை அவன் தெளிவாகவே கவனித்திருக்கிறான். எதிரி எதையும்
சும்மா செய்வது கிடையாது. சும்மா என்ற சொல்லே அவன் வாழ்க்கையில் இருந்திருக்க முடியாது
என்றே தோன்றியது. அப்படி இருக்கையில் நோக்கு வர்மம் படிக்கையில் இடையில் அந்த அறிஞரை
எதிரி ஏன் பார்த்து விட்டு வரவேண்டும்.
ஸ்டீபன் தாம்சன் இந்தியா வந்தது பற்றி கூகுளில் தேடினான். ஐந்து
வருடங்களுக்கு முன்பு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையை அவர் இந்தியாவில் கொண்டாடி
இருக்கிறார். டில்லி, ஆக்ரா, மதுரா, ஹரித்வார், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், உதய்ப்பூர்
நகரங்களில் சுற்றுலா சென்றிருக்கிறார். சரியாகப் பதிமூன்று நாட்கள் இந்தியாவில் அவர்
இருந்திருக்கிறார். இப்போதும் அவர் புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்று பிரபலமாக உள்ளன.
அவரிடம் எதிரி ஏதோ கற்றிருக்கிறான்…… அது என்ன?
க்ரிஷ் இந்தச் சிந்தனையில் ஆழ்ந்திருக்கையில் செந்தில்நாதன்
உதயிடம் எதிரியின் நோக்குவர்மம் குறித்தும், ராஜதுரை மரணத்தில் தனக்கெழுந்த சந்தேகத்தைக்
குறித்தும் தெரிவித்து யோசிக்கச் சொன்னார். அவர் எதிரி பற்றி மவுண்ட் அபு, தார்ப்பாலைவனம்
ஆகியவற்றில் கிடைத்த செய்திகளை உதயிடம் தெரிவித்திருக்கவில்லை. க்ரிஷிடம் மட்டும் தான்
சொல்லி இருந்தார். இந்த நோக்குவர்ம சமாச்சாரம் மட்டும் தமிழக அரசியல் சம்பந்தமானதாக
இருந்ததால் உதய் காதில் போட்டு வைப்பது நல்லது என்று நினைத்து தான் சொன்னார்.
உதய் தம்பியளவு பலதுறைகளில் சிறந்தவன் அல்ல என்றாலும் அரசியலில்
அவன் கூர்மையான அறிவு படைத்தவனாகவே இருந்தான். தந்தையைப் போல அவன் ’செண்டிமெண்ட்’ ஆள்
அல்ல. அவனுடைய எல்லா ‘செண்டிமெண்டும்’ குடும்பத்தை விட்டு வெளியே சென்றதில்லை. ராஜதுரையின்
மரணத்திற்குப் பிறகு மிக வேகமாக அரங்கேறிய அரசியல் நிகழ்வுகள் அவனை திகைக்க வைத்திருந்தன.
அத்தனை குறுகிய காலத்தில் மாணிக்கம் அத்தனை கோடிகளை வாரியிரைத்து எம்.எல்.ஏக்களை வாங்கிய
விதம் அவசரமாக ஒருவன் தீர்மானித்துச் செய்ய முடிந்ததல்ல. முதல்வர் எதிர்பாராமல் இறந்த
அதிர்ச்சியில் இருந்து மீண்ட பின் சுதாரித்துக் கொண்டு செயல்பட்ட மாதிரித் தெரியவில்லை.
முதல்வர் சாவார் என்பதை முன்கூட்டியே அறிந்து தயாராக இருந்தவர் செயல்பட்டது போலத் தான்
இருந்தது. ஆஸ்பத்திரியில் மாணிக்கம் இருக்கையில் அவரது மாமன் தீவிரமாக வெளியில் செயல்பட்டது
பற்றிப் பின் அவனுக்குத் தெரிய வந்திருந்தது. இப்போது செந்தில்நாதன் சொன்னதை யோசிக்கையில்
ஒரு மிகப்பெரிய சதியே என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது.
உடனே தம்பியின் அறைக்குப் போய்ச் சொன்னான். “டேய் உண்மையைச்
சொல்லு. என்ன நடக்குது. எதிரி எமகாதகனாய் இருப்பான் போல் இருக்கு. உன் ஆராய்ச்சி சம்பந்தமானதாய்
மட்டும் இருந்திருந்தா நான் எதுவும் கேட்டிருக்க மாட்டேன். இப்ப பிரச்னை உனக்கு, நம்ம
குடும்பத்துக்கு, நம்ம அரசியலுக்குன்னு எல்லா இடத்துலயும் நுழைய ஆரம்பிச்சிருக்கேடா…”
அண்ணனிடம் என்ன சொல்வது என்று க்ரிஷ் யோசித்தான். உதய் தம்பியிடம்
கறாராய் சொன்னான். “பொய் சொன்னா கொன்னுடுவேன் ஜாக்கிரதை…”
க்ரிஷ் சொன்னான். “உன் கிட்ட உண்மை சொல்ல எனக்கொன்னும் பிரச்னை
இல்லை. ஆனா கேட்டா உனக்கு பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கும். பரவாயில்லையா?”
தம்பி தெளிவாகப் பேசும் போதே பல சமயங்களில் அவர்களுக்குப் பைத்தியம்
பிடிப்பது போலத் தான் இருக்கும். அதனாலேயே உதய் அவனிடம் சில கேள்விகள் கேட்பதைத் தவிர்த்து
வந்தான். இப்போது அவனே பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கும் என்றால் நிஜமாகவே தலை சுத்த
வைக்கிற ஆராய்ச்சியாகத் தான் இருக்கும் என்பதை உதய்க்குப் புரிந்தது. “எனக்கு எதிரி
பற்றி மட்டும் உனக்குத் தெரிஞ்சது எல்லாத்தையும் சொல்லு போதும்” என்றான்.
க்ரிஷ் வேற்றுக்கிரகவாசி சம்பந்தமாக எதையும் சொல்லி விடாமல்
எதிரி சம்பந்தமாகத் தெரிய வந்த அனைத்தையும் விவரமாகச் சொன்னான். “அவன் அமானுஷ்ய சக்திகளில்
அற்புதமான தேர்ச்சி பெற்றவன் என்று முதலிலேயே எனக்குத் தகவல் கிடைத்தது. வேறு எதுவும்
தெரியவில்லை. அதனால் தான் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள செந்தில்நாதன் சாரை அனுப்பினோம்…….”
என்று ஆரம்பித்து அவர் மூலம் அவனைப் பற்றித் தெரிய வந்த எல்லாத் தகவல்களையும் சொன்னான்.
சதானந்தகிரி, பக்கிரி, சாது மூவரும் சொன்ன தகவல்களைக் கேட்டு
உதய்க்குத் தலைசுற்றியது. சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “அடுத்து என்ன செய்வதாய்
உத்தேசம்…..?”
“அமெரிக்காவில் இருக்கும் ஸ்டீபன் தாம்சனிடம் பேசணும். போனில்
பேசறதை விட நேரில் போகறது தான் நல்லதுன்னு தோணுது…..”
உதய் சிறிது யோசித்து விட்டுத் தீர்மானமாகச் சொன்னான். “செந்தில்நாதன்
அரசாங்க அனுமதி இல்லாமல் அமெரிக்கா போக முடியாது. அனுமதி கேட்டா மாணிக்கம் கோஷ்டி காரணத்தைக்
கண்டுபிடிச்சுட வாய்ப்பு இருக்கு. அதனால நீயே போறது நல்லதுன்னு தோணுது…..”
(தொடரும்)