தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, July 31, 2017
Thursday, July 27, 2017
இருவேறு உலகம் – 40
புதுடெல்லி
உயரதிகாரிக்கு அவன் நடவடிக்கைகளை யாரோ கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது போன்ற
பிரமை இப்போது ஏனோ அடிக்கடி வருகிறது. அதுவும் வெளியிலிருந்து அல்ல. அவனுக்கு
உள்ளேயிருந்து அவனைக் கண்காணிப்பது போல் தோன்றுகிறது. அந்தப்
பிரமை அந்த சர்ச்சின் பாவமன்னிப்புக் கூண்டில் இருந்து வெளியேறியதிலிருந்தே
அவனுக்குள் இருந்து வருகிறது. அவன் அந்தப் பாவமன்னிப்புக் கூண்டில் சற்று
அசந்திருந்த நேரத்தில் அவனுக்குள் யாரோ ஒரு கண்காணிப்புக் கருவியை வைத்து விட்டுப்
போனது போல் அவன் அடிக்கடி உணர்கிறான். அந்தப் பிரமை பைத்தியக்காரத்தனமானது
என்பதும், அவனுள் எந்தக் கண்காணிப்புக் கருவியையும் யாரும் அந்தக் குறுகிய
காலத்தில் வைத்து விட்டிருக்க முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனாலும்
அந்த உணர்வை அவனால் உதற முடியவில்லை. என்னமோ நடக்கிறது.... குழப்பமாக
இருக்கிறது....
சங்கரமணியைப்
பலரும் சகுனி என்றழைத்ததில் இம்மியளவும் தவறில்லை என்று நம்பியவர்களில்
செந்தில்நாதனும் ஒருவர். அவர் அந்த
முதியவரை நீண்ட காலமாய் கவனித்து வருகிறார். லாபம் கிடைக்கும் என்றால் எந்தத்
தவறையும் துணிந்து செய்யக்கூடியவர் அவர். தனக்கு லாபம் இல்லை என்றாலும் கூட
அடுத்தவருக்கு நஷ்டமோ, கஷ்டமோ வரும் என்றாலும் அந்தத் தவறை சந்தோஷமாகச் செய்து
மற்றவர் படும் அவஸ்தையை ரசிப்பவர் அவர். எந்தக் கெட்டதிலும் அவர் பங்கெடுக்கும்
சாத்தியம் உண்டு என்றால் கண்டிப்பாகப் பங்கெடுக்கும் ரகம் அந்த ஆள். அதனால் அந்தத்
தொழிற்சாலையின் தொழிலாளி இரவில் பார்த்த வெள்ளை முடி ஆள் சகுனியாகவே இருக்க
வாய்ப்பு இருக்கிறது. க்ரிஷ் இருப்பிடம் கண்டுபிடிக்க ஒரு ஆளை க்ரிஷ் வீட்டுக்கே
கூட்டி வந்ததும் கிழவரின் மருமகன் மந்திரி மாணிக்கம் தான். அப்படிக்கூட்டி வந்த
ஆளோ இன்னொரு இரவில் அந்த மலையடிவாரத்திற்கு வந்து போலீஸ் ஜீப்பைப் பார்த்து விட்டு
வேகமாகப் போன ஆளாக இருக்கும் வாய்ப்பும் இருக்கிறது. எல்லாம் பார்க்கையில் ஏதோ ஒரு தொடர்பு
இருக்கும் போலத் தெரிகிறதே என்று யோசித்த செந்தில்நாதன் மறுநாள் காலையிலேயே
சகுனியை நேரில் பார்த்து விட்டு வருவது என்று முடிவு செய்தார்.
சதாசிவ
நம்பூதிரி இரண்டு ஜாதகங்களிலும் மூழ்கிப் போயிருந்தார். எத்தனையோ விசேஷத் தன்மைகள்
இரண்டு ஜாதகங்களிலும் பொதுவாக இருந்தன. கோட்டு சூட்டுப் போட்டவன் விசேஷ ஜாதகங்கள்
என்று சொன்னதில் தவறே இல்லை. ஒரு கற்றைக் காகிதங்களில் ஏதோ கணக்குகள் போட்டுக்
கொண்டே போன சதாசிவ நம்பூதிரி கடிகாரத்தின் ஓட்டத்தைக் கவனிக்கவில்லை. எப்போதும்
இரவு ஒன்பதரை மணிக்கு உறங்கப் போகும் அவர் இப்போது நள்ளிரவு இரண்டு மணியும் தாண்டி
விட்டிருக்கிறது என்பதை அறியவில்லை.
ஒருவழியாக அவருடைய ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தை எட்டிய பின்னர் தான் கடிகாரத்தைப்
பார்த்தார். மணி இரவு இரண்டரை. ‘இவ்வளவு நேரமாகி விட்டதா?’ என்று ஆச்சரியப்பட்டவர் மறுபடி இரண்டு
ஜாதகங்களில் இருந்த விசேஷ அம்சங்களில் இருந்த ஒற்றுமைகளைப் பார்க்க ஆரம்பித்தார்.
பேரறிவு, மிக நல்ல மனம்.... நடுத்தர வயதான ஜாதகர் இப்போது அபூர்வ சக்திகள் பல
அடைந்திருப்பார்.... இளைஞனின் ஜாதகமோ
எதையும் ஆழம் வரை ஊடுருவும் சக்தி படைத்தவன் என்று சொல்கிறது.... அவனுக்கு இப்போது
கண்டம்..... பிழைக்கலாம்..... இறக்கவும் செய்யலாம்...... அந்த நடுத்தர வயதான
ஜாதகருக்கும் இப்போது கண்டம்.... அவருக்கும் உயிருக்கு ஆபத்து
காத்திருக்கிறது..... இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது
தெரிந்தது. இந்த இரண்டு ஜாதகங்களையும் கொண்டு வந்தவனின் முதலாளியும் ஜோதிடத்தில்
விற்பன்னனாம். அவனுக்கும் இந்த இரண்டு ஜாதகர்களுக்கும் என்ன சம்பந்தம்.... இரண்டு
ஜாதகங்களில் ஒன்று அந்த முதலாளியுடையதாகக் கூட இருக்குமோ....? இல்லை அந்த
முதலாளிக்கு வேண்டப்பட்டவர்களுடையதாய் இருக்குமோ? ’எதற்காக இந்த இரண்டு ஜாதகங்களை என்னிடமே கொண்டு வந்தான்?’ என்று தனக்குள்
கேட்டுக் கொண்டபடி கண்களை மூடியவர் உட்கார்ந்தபடியே உறங்கிப் போனார்.
புதுடெல்லி
விமானநிலையத்தில் திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்காக அந்த மர்ம மனிதன்
காத்திருந்தான். நாளைய விமானத்தில் போனாலும் கூட போதும் என்றாலும் ஒரு நாள்
முன்பாகவே அவன் திருவனந்தபுரம் செல்கிறான். சதாசிவ நம்பூதிரியைச் சந்தித்துப்
பேசும் முன் சில தயார் வேலைகள் அவன் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த மனிதரின் அலைகளை அவன் படிக்க
வேண்டியிருக்கிறது....
அவன் உண்மையான தோற்றத்தைக் கடந்த சில ஆண்டுகளில் பார்த்தவர்கள் யாருமில்லை.
மனோகர் கூட அவருடைய ஓரிரண்டு அவதாரம் மட்டுமே அறிந்திருக்கிறான். மனோகர்
நம்பத்தகுந்தவன் தான் என்றாலும் கூட அவனுக்கே அதிகம் தெரிய வேண்டியதில்லை என்று
மர்ம மனிதன் எச்சரிக்கையாக இருந்தான். தினம் ஒரு வேஷம், தினம் ஒரு அவதாரம் என்று
அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனிடம் இருந்த ஒரு தனித்தன்மை என்ன என்றால் எந்த
ஒரு வேஷம் போடும் போதும் அவன் உண்மைச்சாயலோ, வேறு வேஷங்களின் சாயலோ சிறிதும்
எட்டிப் பார்க்காது. அந்த வேஷமாகவே தேவையான காலம் வரை வாழ்ந்து அடுத்த கணம்
பச்சோந்தியாக வேறு ஒரு வேஷத்திற்குப் போய் விடுவான். பெரும் சக்தி படைத்தவர்கள்
கூட அவன் உண்மையில் யார் என்று கண்டுபிடித்ததில்லை. கண்டுபிடித்தவர்கள்
உயிரோடிருந்ததில்லை. சில நாட்களுக்கு முன் இறந்து போன ஆன்மீக சக்தி ரகசிய
இயக்கத்தின் தலைமைக்குரு அதற்கு சமீபத்திய உதாரணம்....
அவரை நினைக்கையில் ஒரு பக்கம் கோபமாகவும் இருந்தது. ஒரு பக்கம்
வேடிக்கையாகவும் இருந்தது. அந்த முட்டாள் குரு அவனைத் தன் வாழ்வின் கடைசி மணி
நேரங்களில் தான் கண்டு பிடித்தார். அந்த மனிதரின் ஒரு குறிப்பிட்ட தவம் அவனைக்
காட்டிக் கொடுத்து விட்டது. அவர் கண்டுபிடித்து விட்டார் என்பது தெரிந்ததுமே அவன்
மின்னல் வேகத்தில் இயங்கி அவர் கதையை முடித்து விட்டான். வாழ்வின் கடைசி
நிமிடங்களில் அவர் முயற்சியெல்லாம் தன் பிரிய சிஷ்யனுக்கு எச்சரிக்கை
விடுப்பதிலேயே இருந்திருக்கிறது.... ஆனால் அவர் பயன்படுத்திய உபாயம் மட்டும் சிறிய
வாண்டுப்பயல்களின் புத்தியாக இருந்தது. அவரை முடிப்பதற்கு அவர் குடிசைக்குள் அவன்
நுழையும் முன் அவர் ஒரு காகிதத்தைப் பேனாவில் சுற்றி வெளியே வீசியிருக்கிறார். தன்னை
இவ்வளவு குறைவாக அவர் மதிப்பிட்டதில் அவனுக்குச் சிறிது கோபம் தான். அவரை முடித்து
விட்டு வெளியே வந்து அவன் அந்தப் பேனாவைக் கண்டுபிடித்து சுருட்டியிருந்த
காகிதத்தில் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் படித்து விட்டு தான் அதே நிலையில்
கீழே வைத்து விட்டு வந்தான்.
இப்போது நினைத்தாலும் அவனுக்குச் சிரிப்பாய் வந்தது. ‘பிரிய
சிஷ்யனே, எதிரி உள்ளே ஊடுருவி விட்டான்...’ என்கிற
வாக்கியத்தை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்..... அதனால் தான் பிரிய
சிஷ்யன் எப்படி எடுத்துக் கொள்கிறான் என்று பார்ப்போம் என்று கிழவரின்
வாண்டுப்பயல் விளையாட்டை கலைக்காமல் அப்படியே விட்டு விட்டு வந்தான்....
திருவனந்தபுரம் விமானம் வந்து சேர்ந்த தகவலை விமான நிலையத்தில்
அறிவித்தார்கள். நினைவுகள் கலைந்து மர்ம மனிதன் மெல்ல எழுந்தான்.
அறியாத எண்ணிலிருந்து வந்த அழைப்பை
சந்தேகக் கண்ணோடு சங்கரமணி பார்த்தார். அந்த வாடகைக் கொலையாளியின் செல்போனில்
இருந்து அழைப்புகள் வர ஆரம்பித்ததில் இருந்து எல்லா அழைப்புகளும் மனதில் லேசாகக்
கிலியைக் கிளப்புகின்றன. சில நாட்களாய் அந்த பாழாய் போனவன் செல்போனில் இருந்து
அழைப்பு இல்லை..... ஒருவேளை அதே ஆள் வேறு போனில் இருந்து அழைக்கிறானோ? தன்
பயத்திற்காகத் தன்னையே கடிந்து கொண்டவர் செல்போனை எடுத்துப் பேசினார். “ஹலோ”
“ஹலோ சார் நான் போலீஸ் டிபார்ட்மெண்டில் இருந்து செந்தில்நாதன்
பேசறேன். ஒரு முக்கிய விஷயமா உங்களைப் பார்த்துப் பேசணுமே”
சங்கரமணிக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இந்தச் சனியன் என்வரைக்கும்
எப்படி வந்தான்?’
நாக்கு நகர மறுத்தாலும் பிரம்மப்பிரயத்தனம் செய்து நகர்த்தினார்.
“ரொம்ப பிசியாய் இருக்கேனே.... என்ன விஷயம்?”
“வந்து நேரடியா சொல்றேனே சார். உங்க வீட்டுக்கு வெளியே தான்
இருக்கிறேன்....”
’அடப்பாவி
வீடு வரைக்கும் வந்துட்டானே!’ என்று மனதில் படபடத்த சங்கரமணி “என் மருமகன், மந்திரி மாணிக்கம்,
என்னை உடனடியா வரச்சொல்லியிருக்கான். நான் கிளம்பிகிட்டிருக்கேன்.....” தான் மந்திரி
மாணிக்கத்தின் மாமன், அவன் அவசரமாய்க் கூப்பிட்டு போய்க்கொண்டிருக்கிறேன் என்று
செந்தில்நாதனுக்குப் புரிய வைப்பது வீண் முயற்சி என்று தெரிந்தும் முயற்சி
செய்யாமல் இருக்க அவரால் முடியவில்லை.
ஆனால் செந்தில்நாதன் அசராமல் சொன்னார். “ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு மேல
எடுத்துக்க மாட்டேன் சார்....”
’இந்த ஆள் கிட்ட இருந்து இப்ப தப்பிச்சாலும் சாயங்காலமோ, ராத்திரியோ,
நாளைக்கு காலைலயோ வந்து நிப்பான். பேசி அனுப்பிச்சுடறது உத்தமம்” என்ற முடிவுக்கு
வந்த சங்கரமணி “சரி வாங்களேன்” என்றார்.
செந்தில்நாதன் உள்ளே வந்தார்.
வழக்கமாய் அவரைச் சந்திக்கும் அதிகாரிகள் கூழைக்கும்பிடு போடுவது வழக்கம். அதற்கு
காவல்துறை அதிகாரிகளும் விலக்கல்ல. ஆனால் செந்தில்நாதன் வழக்கமாய் ஒருவர் காணும் நபர்
அல்ல. அவர் சங்கரமணியைப் பார்த்து வணக்கம் செலுத்தாததுடன், அனுமதிக்காகக்
காத்திருக்காமல் தானே எதிர் நாற்காலியில் அமர்ந்தார்.
சங்கரமணியைக் கூர்மையாய் பார்த்தபடியே
சொன்னார். “சார். மந்திரி கமலக்கண்ணன் மகன் க்ரிஷ் காணாமல் போன விவரம்
உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நான் தான் அது சம்பந்தமான விசாரணை
செஞ்சிட்டிருக்கேன். அவர் காணாமல் போன நாள் நடுராத்திரில அந்த மலைக்குப் போற
பாதைக்கு முன்னால் உங்களைப் பார்த்ததா ஒருத்தர் சொன்னார்.....”
(தொடரும்)
என்.கணேசன்
Monday, July 24, 2017
வூடூ மோசடியா? உண்மையா?
அமானுஷ்ய ஆன்மிகம் - 12
வூடூவின் மீதான விமர்னங்களைப் பார்த்தோம். அவை அனைத்தும் வூடூ
சக்திகளால் எதுவும் நடப்பதில்லை, அது குறித்த பயங்களாலேயே எல்லாம் நடக்கின்றன என்ற
அடிப்படையிலேயே இருக்கின்றன. வூடூ சாவுகள் மனிதனின் பயத்தினாலேயே நிகழ்கின்றன என்ற
வாதம் உண்மை என்பது போல் அலபாமாவின் வான்ஸ் வேண்டர்ஸ் உதாரணமும் நடந்திருக்கிறது.
எதாவது நல்லது நடந்திருந்தாலும் அது வூடூ பொருள்களாலோ, சடங்குகளாலோ இல்லாமல்,
நல்லது கண்டிப்பாக நடக்கும் என்கிற நம்பிக்கையாலேயே கூட நடந்திருக்கலாம் என்ற
வாதமும் விமர்சகர்களிடம் இருக்கிறது. அப்படி இருக்கவும் கூடும் என்றே
நடுநிலைமையாளர்கள் கருத வேண்டி இருக்கிறது. ஆனால் ஒன்றுமே இல்லாத ஒரு கற்பனை
அஸ்திவாரத்தில் இத்தனை காலம் வூடூ தாக்குப் பிடித்திருக்க முடியுமா என்ற
கேள்வியையும் கேட்டால் சற்று யோசிக்கத்தான் வேண்டி இருக்கிறது.
இன்று மூன்று வகையான வூடூ வழிமுறைகள் உலகில் பின்பற்றப்படுகின்றன.
முதலாவது, மேற்கு ஆப்பிரிக்க வூடூ. கானா, பெனின் முதலான நாடுகளில் சுமார் மூன்று
கோடி மக்களால் பின்பற்றப்படும் இந்த வூடூ இருப்பதிலேயே அதிக கலப்படமில்லாத வூடூ
என்று சொல்லப்படுகிறது. இந்த வூடூவில் சடங்குகள் மிக முக்கியமானவை. ஆனால் இந்த
வூடூவின் மந்திரங்கள் எல்லாம் பழங்காலத் தூய மொழியில் இருந்திருக்கின்றன. காலப்
போக்கில் மொழியில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத மாற்றங்களால், புதிய மக்களுக்கு அதன்
மூல அர்த்தங்களை முழுமையாகப் புரியாமல் போனது. சடங்குகளும் காலப்போக்கில் மாற்றங்கள்
கண்டன. அரைகுறையாகப் பின்பற்றப்பட்டன.
இரண்டாவது வகை வூடூ, லூசியானா வூடூ. இது அமெரிக்காவில் குடியேறிய
ஆப்பிரிக்க மக்களால் பின்பற்றப்படுவது. இது வியாபாரமாகி விட்ட வூடூவாகவே
சொல்லப்படுகிறது. வூடூ பொருள்கள் அதிகமாய் விற்பனையாவது இங்கே தான். சடங்குகளை விட
அதிக முக்கியத்துவத்தை இங்கு இந்த வூடூ விற்பனைப் பொருள்கள் பெற்று
விட்டிருக்கின்றன.
மூன்றாவது வகை வூடூ ஹைத்தி வூடூ. இது மேற்கு ஆப்பிரிக்க வூடூவாகவே
ஹைத்தி சென்றிருந்தாலும், காலப்போக்கில் ஸ்பெயின், பிரெஞ்சு மக்களின் தாக்கம்
காரணமாக கிறிஸ்துவ மத அம்சங்களை நிறையவே தன்னுடன் இணைத்துக் கொண்ட வூடூவாக
பிற்காலத்தில் மாறி விட்டது.
இப்படி மூன்று வூடூகளிலுமே உருவான காலத்திய வூடூவைக் காண்பதே அபூர்வம்
என்ற நிலை இருக்கிறது. உருமாறிய வூடூவையாவது தெரிந்த வழியில் சரியாகப்
பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. அதனால் போலிகள்
பெருகி அவர்களே அதிகம் தென்படுகிறார்கள். இந்தக் காரணங்களால் தான் வூடூவை வைத்து
ஏமாற்று வேலைகள் அதிகம் நடக்கின்றன. இக்காலத்தில் ஆன்மீகம் உட்பட எல்லா
துறைகளிலும் போலித்தனமும், ஏமாற்று வேலைகளும் அதிகம் என்பதைக் காணும் போது அதை மட்டும் வைத்து வூடூவை மோசடி என்று சொல்வது
சரியல்ல அல்லவா?
மைக்கேல் எட்வர்ட் பெல் (Michael
Edward Bell) என்பவர் எழுதிய Pattern, Structure, and Logic in
Afro-American Hoodoo Performance என்ற ஆராய்ச்சி நூலை 1980 ஆம் ஆண்டு
இண்டியானா யூனிவர்சிட்டி
வெளியிட்டுள்ளது. நோய்களைக் கண்டறிதல், குணமாக்குதல், பழிவாங்குதல், தீமைகளில்
இருந்து தற்காத்துக் கொள்தல், சுபிட்சம் வேண்டுதல் ஆகிய முக்கிய ஐந்து
காரணங்களுக்காக வூடூ பின்பற்றப்படுகிறது என்று கூறும் அவர் அதற்கு அடிப்படையாக
இருந்த சடங்குகளும், வழிமுறைகளும் ஆழமான அர்த்தங்களையே கொண்டிருந்தன என்று
கூறுகிறார்.
ஒருவருக்கு எதிராக, அவருக்குத்
தெரியும் படியாகவே வூடூவைப் பயன்படுத்தும் போது அவர் பயத்தினாலோ, நம்பிக்கையாலோ
பாதிக்கப்படலாம் என்று சொல்கிறார்கள். சரி. அவர்களுக்குத் தெரியாமலேயே பயன்படுத்தி
அதன் வெற்றிகளையும் ஏராளமான மக்கள் கண்டிருக்கிறார்கள். அதை என்னவென்று சொல்வது?
உதாரணத்திற்கு ஜப்பானிய டாக்டர்
டாகாசாகி (Dr.
Tagasaki) தலைமையில் ஒரு
குழு செய்த ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியைப் பார்ப்போம். நூறு பேர் சேர்ந்து
விளையாடிய ஒரு பகடை விளையாட்டு அது. அதில் பிரத்தியேகத் திறமைக்கு எந்த வேலையும்
இல்லை. ஒருவர் இரண்டு பகடைகளையும் சேர்த்து உருட்டி வரும் எண்ணை மீண்டும் எத்தனை
முறை கொண்டு வருகிறார்கள் என்பதே போட்டி. இரண்டு பகடைகளும் சேர்ந்து எண் ஏழு வரும்
வரை அவர்கள் பகடைகள் உருட்டலாம். இரண்டு மணி நேர விளையாடிய பின் இந்தப் போட்டியில்
மிகவும் பின் தங்கி இருந்த இருபது பேரை அழைத்து வூடூ முறைப்படி அதிர்ஷ்டம்
ஏற்படுத்தி விடலாம் என்று சொல்லி இரண்டு பிரிவாகப் பிரித்து ஜீன் எம்மானுவல் (Jean Emmanuel) என்ற பெயருடைய ஹைத்தி வூடூ பயிற்சியாளரிடம் அழைத்துச்
சென்றார்கள். அவர்களில் பத்து பேருக்கு உண்மையாக வூடூ அதிர்ஷ்ட ஏவல் வேலையை ஜீன்
எம்மானுவல் செய்தார். மற்ற பத்து பேருக்கு சாதாரண நன்மை ஏவல் செய்தார்.
பார்ப்பவர்களுக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதபடி இருந்தது அவர் செயல்முறைகள்.
அது வரை தோல்வியின் அடிமட்டத்தில்
இருந்த இரண்டு கோஷ்டிகளும் தங்களுக்கு அதிர்ஷ்ட ஏவல் செய்யப்பட்டிருப்பதாகவே
நினைத்து விளையாட மறுபடியும் சென்றார்கள். தொடர்ந்து விளையாடிய விளையாட்டுக்களில் சாதாரண
நன்மை ஏவல் செய்யப்பட்டவர்கள் 44
சதவீதம் வெற்றி பெற்றார்கள். அதிர்ஷ்ட ஏவல் செய்யப்பட்டவர்கள் 84 சதவீதம் வெற்றி
பெற்றார்கள். ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே இரண்டு பிரிவினர் யார் யார் என்று
குறித்து வைத்துக் கொண்டவர்கள். அந்த இருபது பேரைப் பொருத்த வரை அத்தனை பேருமே ஒரே
உற்சாக மனநிலையில் விளையாடப் போனவர்கள் தான். இரு பிரிவினருமே முந்தைய ஆட்டத்தை
விட நன்றாக ஆடி வெற்றிப் பாதையில் பயணித்தார்கள் என்றாலும் அதிர்ஷ்ட ஏவல்
செய்யப்பட்டவர்கள் சாதாரண நன்மை ஏவல் செய்யப்பட்டவர்களை விட கிட்டத்தட்ட இரு
மடங்கு வெற்றி பெற்றார்கள் என்பது தான் வியப்பு. இந்த ஆராய்ச்சி வூடூவின் சக்தியை
உறுதியாக்கி இருப்பதாக டாக்டர் டாகாசாகி குழு முடிவுக்கு வந்தது.
1932 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த
ஒரு நிகழ்வைப் பார்ப்போம். லூசிலி வில்லியம்ஸ் (Lucille Williams)
என்ற பெண்மணியை அவளுடைய காதலன் எலிஜா வீட்லீ (Elijah Wheatley)
என்பவன் ஒரு கால்வாயில் தள்ளி மூழ்க வைத்துக் கொன்று விட்டான். அவன்
கால்வாயிலிருந்து ஓடுவதை இரவு நேரக் காவலாளி பார்த்துவிட்டான். அவன் போலீஸில்
சொல்லி விட்டதால் எலிஜா வீட்லீ தலைமறைவாகி விட்டான். லூசி வில்லியம்ஸின்
குடும்பத்தினர் அவனைப் பழிவாங்க வூடூ முறையை நாடினர்.
அதன்படி சவத்தின் இரு கைகளிலும்
ஒவ்வொரு முட்டையை வைத்து இரண்டு கைகளையும் கயிறால் கட்டி சவப்பெட்டியில்
குப்புறப்படுக்க வைத்து சவப்பெட்டியின் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும்
மந்திரிக்கப்பட்ட இரண்டு சிவப்பு மெழுகுவர்த்திகளை எரிய விட்டு பிரார்த்தித்தார்கள்.
கடைசியில் சவப்பெட்டியைக் கல்லறையில் புதைத்து முட்டைகளை உடைத்து கல்லறையில் மேல்
பாகத்தில் தூவி விட்டார்கள்.
மறுநாள் காலை லூசி வில்லியம்ஸ் இறந்து
கிடந்த அதே இடத்தில் எலிஜா வீட்லீயின் பிணமும் மிதந்து கொண்டிருந்தது. போலீஸார்
அவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாய் நினைக்க, லூசி வில்லியம்ஸின்
குடும்பத்தார் வூடூ தன் வேலையைச் செய்து விட்டதாகத் திருப்தி அடைந்தார்கள்.
லின்னே மெக்கார்ட் (Lynne McTaggart) என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் எழுதி 2007 ஆம் ஆண்டு வெளியான The Intention Experiment என்ற நூலில் அவர் மனித எண்ணங்களின் சக்தி எப்படி அவர்களது வாழ்க்கையையும், உலகத்தின் போக்கையும் தீர்மானிக்கிறது, மாற்றி அமைக்கிறது என்பதை விவரித்துள்ளார். அந்த விளக்கங்களின் ஊடே அந்த நூலில் பத்தாவது அத்தியாயத்தில் வூடூ விளைவுகள் பற்றியும் அவர் விளக்கி உள்ளார்.
இதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் சரியாகத் தெரிந்து கொள்ளாதவர்களும், ஏமாற்றும் நோக்கத்தோடிருப்பவர்களும் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காகவே வூடூவை ஒருவர் புறக்கணித்து விட முடியாது என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியிருக்கிறது. வூடூவின் அடிப்படை அம்சங்கள் வலுவானவை என்பதும், முறையாக நல்ல நோக்கத்துடன் பயன்படுத்தினால் வூடூ பலனளிப்பதாகவே இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அடுத்த வாரம் முதல் அகோரிகள் பற்றிய சுவாரசியமான விவரங்களைப் பார்ப்போம்.
என்.கணேசன்
நன்றி : தினத்தந்தி 23.5.2017
Friday, July 21, 2017
சென்னை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 159ல் என் நூல்கள்!
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
ஜுலை 21 முதல் 31 வரை சென்னை இராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடக்கும் புத்தகத்திருவிழாவில் என் நூல்கள் அனைத்தும் அரங்கு எண் 159 ல் சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கும். அருகில் இருக்கும் வாசக அன்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வேண்டும் நூல்களை வாங்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மேலதிக விவரங்களுக்கு - பதிப்பாளரின் தொலைபேசி எண்.9600123146.
அன்புடன்
என்.கணேசன்.
Thursday, July 20, 2017
இருவேறு உலகம் – 39
மறுநாள் க்ரிஷ் கல்லூரிக்குப் போகவில்லை.
அவள் முகத்தின் வலியைப் பார்க்கும் தெம்பை அவன் பெற்று விடவில்லை. திரும்பத்
திரும்பப் பயிற்சிகள் மனதில் எடுத்துக் கொண்டு, சொல்லப் போனால் மனம் மரத்துப்
போகும்படி செய்து கொண்டு, இரண்டு நாள் கழித்து தான் அவன் கல்லூரிக்கே போனான். ஒவ்வொரு நாளும் முதல் முறை சந்திக்கும் போது
எப்போதுமே இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்விக் கொள்ளும். எத்தனையோ தகவல்கள்
பரிமாறிக் கொள்ளும். சில வினாடிகள் கழிந்த பிறகு தான் மெல்ல விடுபடும். ஆனால்
அன்று கல்லூரியில் அவளைப் பார்த்த போது அவன் மேலோட்டமாகவே பார்த்தான். இரண்டு
நாட்கள் முன்பாவது ஆராய்ச்சியில் அவன் தன்னை மறந்து போனதாக அவள் நினைத்திருந்தாள்.
இன்று அதை நினைக்கவும் அவளுக்கு வழியில்லை. திகைப்புடன் ஒன்றும் புரியாமல் அவள்
அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையை படிக்காதது போல அவன் நகர்ந்தான். பிறகு அவன் பேசிய போது அவள் இறுக்கமான
முகத்துடன் பதில் அளித்தாள். அவன் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இயல்பாகவே
இருந்தான். அவள் வலியுடன் ‘என்ன ஆயிற்று உனக்கு?’ என்பது போல அவனைப்
பார்த்த போது உள்ளே அவன் பெரும் சித்திரவதையை அனுபவித்தான். அந்தப் பார்வைக்குப்
பதில் சொல்லாமல் இருப்பதை விட செத்தே போகலாம் என்று கூட அவனுக்குத் தோன்றியது.
ஆனால் முகத்தை மிக இயல்பாக வைத்துக் கொண்டு மற்ற எல்லோரையும் போல் தான் அவளும்
என்பது போல் நடந்து கொண்டான்.
வீட்டிற்கு
வந்த பின் பல முறை அவள் படத்தைப் பார்த்து “என்னை மன்னிச்சுடு ஹரிணி. என்னை
மறந்துட்டு யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரு ஹரிணி” என்று
அழுதிருக்கிறான். சில நாட்கள் இரவு அவனால் உறங்க முடியவில்லை. அவன் சரியாகப்
பேசவில்லை என்றானவுடன் ஹரிணி சற்று அதிகமாக மணீஷிடம் பேசினாள். மணீஷ் அவளுக்கு நல்ல
கணவனாவான் என்று கூட க்ரிஷுக்குத் தோன்றியது. மணீஷுக்கு அவள் மீது அதிக ஈர்ப்பு
இருந்ததை க்ரிஷ் கவனித்திருக்கிறான். ஆனால் இப்போதும் ஹரிணி எத்தனை அதிகம்
பேசினாலும் அவனிடம் நண்பன் என்ற எல்லையை என்றுமே தாண்டத் தயாராக இருக்கவில்லை
என்பது தூரத்திலிருந்து கவனிக்கையில் தெளிவாகத் தெரிந்தது. அவன் மனம் மேலும்
ரணமானது. கடைசியில் ‘எல்லா மனக்காயங்களையும் காலம் ஆற்றி வைக்கும்’ என்ற ஒரு நம்பிக்கையில் தான் அவன் சிறிதாவது ஆறுதல் அடைந்தான்.
அதிகமாகக்
கடவுளைக் கும்பிடாதவன் தினமும் “கடவுளே என் ஹரிணிக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்
கொடு” என்று மானசீகமாக வேண்டுவதை மட்டும் அவன்
நிறுத்தவில்லை.....
வேற்றுக்கிரகவாசி
அவனிடம் அடுத்த அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை தொடர்பு கொள்ளவில்லை.
அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பு க்ரிஷின் லாப்டாப்பில் கேள்வி மின்னியது.
“முடிவெடுத்து விட்டாயா?”
அவன்
மனப்போராட்டத்தையும், முடிவையும் கண்டிப்பாக வேற்றுக்கிரகவாசியால் அறிய
முடிந்திருக்கும். ஆனாலும் கேட்கிறான் என்று நினைத்தவனாக க்ரிஷ் பதிலளித்தான்.
“முடிவெடுத்து விட்டேன். சம்மதம்”
“மகிழ்ச்சி. அமாவாசை
அன்று அதே மலையில் சந்திப்போம்” என்ற பதில் மின்னியது.
அதோடு
மாஸ்டருக்குக் கிடைத்திருந்த நிகழ்வலைகள் முடிந்து போயின. எதிரி அதற்கு மேல்
இருந்த நிகழ்வலைகளை அழித்து விட்டிருந்தான். வேற்றுக்கிரகவாசி என்ற போர்வையில்
எதிரி வந்ததால் தான் க்ரிஷ் எதிரி வலையில் விழுந்திருக்கிறான் என்பதில் அவருக்குச்
சந்தேகமில்லை. எந்தப் புது அறிவையும் பேரார்வத்துடன் வரவேற்கும் க்ரிஷுக்கு ஒரு
ஏலியனுடன் நட்பை விடக் கவர்ச்சிகரமான தூண்டில் வேறு இருக்க முடியாது. பூமி அழிவு,
நல்லவர்கள் பொறுப்பு என்று கூடுதல் செண்டிமெண்டுகளையும் சேர்த்து எதிரி தன்
வலையில் இழுத்து விட்டான். இனி எதிரி என்ன செய்வான்?.... பறவை வடிவம் எடுப்பது,
வழக்கமான முறைகளில் அல்லாமல் கம்ப்யூட்டரில் தொடர்பு கொள்வது, பழைய தடய அலைகளை
அழிப்பது மட்டும் அல்லாமல் இனி என்ன வித்தைகள் எல்லாம் எதிரி வைத்திருக்கிறானோ?
திடீர்
என்று தன்னுடைய ஜாதகத்தை யாரோ ஒரு முதியவர் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி
ஒன்று மாஸ்டரின் மனத்திரையில் வந்து போனது. மாஸ்டர் திகைத்தார்... அந்த முதியவரை
இதற்கு முன் எப்போதும் பார்த்த நினைவில்லை..... ’யாரந்த ஆள்? ஏன்
என் ஜாதகத்தைப் பார்க்கிறார்?’
”ஜாதக பலன்களை நான் உங்க முதலாளி கிட்ட நேரடியாய்
தான் சொல்வேன். சம்மதமா?” என்று கேட்ட சதாசிவ நம்பூதிரியிடம் மனோகரால் உடனே
சம்மதம் தெரிவிக்க முடியவில்லை. “என் முதலாளியைக் கேட்டுச் சொல்கிறேன்” என்று சொல்லி விட்டு வெளியே வந்து மர்ம மனிதனுக்குப் போன் செய்து
விஷயத்தைச் சொன்னான்.
“விலையைக் கூட்டிப் பாரேன்”
“கோடி கொடுத்தாலும்
அந்த ஆள் சொன்னதில் இருந்து மாறும் ரகம் அல்ல. இப்பவே பணத்துக்காக பார்க்க அந்த
ஆள் ஒத்துக்கலை. விசேஷ விசித்திர ஜாதகம்னு படம் போட்டு பின் தான் ஒத்துக்க
வெச்சிருக்கேன்”
மறுமுனை பெருமூச்சு
விட்டது. “நீ படம் போடவில்லை. உண்மையாகவே அந்த ரெண்டு ஜாதகமும் விசேஷ விசித்திர
ஜாதகம் தான். அது சரி, நீ என்ன நினைக்கிறாய்? அந்த ஆள் என்னை நேரில் பார்த்து
விட்டால் பின்னால் நமக்குப் பிரச்னை வர வாய்ப்பிருக்கா?”
“அப்படி வர
வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கிறேன். அந்த ஆள் திங்கக்கிழமை சிவன் கோயிலுக்கும்,
சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கும் போறதைத் தவிர வேறெங்கேயும், யார் வீட்டுக்கும்
போகிற ஆள் அல்ல. கோயில்லயும் யார் கிட்டயும் பேச மாட்டார். வீட்டுலயும் அவர்
பேசறது குறைவு. ஆன்மீக புஸ்தகம் படிச்சுட்டு காலத்தை ஓட்டறவர்....”
”உன் முதலாளின்னு வேற யாரையாவது அனுப்பினா?”
“என் முதலாளி ஜோதிடத்தைக்
கரைச்சுக் குடிச்சவர்னு அவர் கிட்ட சொல்லியிருக்கேன்... அதனால ஜோதிடத்துல நல்ல ஞானம் இருக்கற ஆளை அனுப்பறதானா அனுப்பலாம். ஏன்னா
அவர் ஜாதக சம்பந்தமான நுணுக்கங்கள் எதாவது பேசினா பதிலுக்கு சரியா சொல்லத் தெரிஞ்ச ஆளா இருக்கிறது நல்லது....”
ஒரு நிமிடம் யோசித்து
விட்டு மறுமுனை சொன்னது. “வேண்டாம். நானே போறேன்....”
மனோகர் மறுபடி சதாசிவ
நம்பூதிரியிடம் வந்து பவ்யமாக நின்றான். “என் முதலாளி சரின்னு சொல்லிட்டார்...”
”சரி போய்ட்டு வியாழக்கிழமை சாயங்காலம் அவரைக்
கூட்டிகிட்டு வாங்கோ”
பணிவுடனே தலையாட்டி
விட்டு இருபதாயிரம் ரூபாயை அவன் அவரிடம் நீட்டினான். அவர் அதை வாங்கவில்லை. “என்
பிள்ளை கிட்டயே குடுத்துட்டுப் போங்கோ.” என்றார்.
கீழே
வந்து சங்கர நம்பூதியிரிடம் அந்த ஆள் அந்தப் பணத்தைத் தந்தான். “உங்கப்பா
ஒத்துகிட்டார். இந்தப் பணத்தை உங்க கிட்டயே தரச் சொன்னார்.....”
சங்கர நம்பூதிரி
திகைப்புடன் பணத்தை வாங்கிக் கொண்டார். ‘இந்த ஆள் நிஜமாவே கைதேர்ந்த வியாபாரி
தான். அவரையே ஒத்துக்க வெச்சுட்டானே!’
செந்தில்நாதன் இரண்டு நாட்கள் இரவு நேரத்தில் அந்த
மலைப்பாதைக்குப் பிரிகிற தெருமுனையில் இருட்டில் நின்று கொண்டிருந்தார். மலையடிவாரத்தில்
இப்போதும் அவர்கள் ஆட்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்றாலும் இந்த இடத்தில் சில
மணி நேரங்கள் தடுப்புகள் வைத்து விலக்கிக் கொண்ட மனிதர்கள் பற்றி ஏதாவது புதிய
தகவல் கிடைக்கும் வரை அவரால் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை.
அந்த
வழியாகப் போகிறவர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அவ்வப்போது தெரு விளக்கின்
வெளிச்சத்துக்கு வந்து அவர்கள் தினமும் இந்த நேரத்தில் இந்த வழியாகப் போகிறவர்களா
என்று கேட்டு, ஆமென்றால் அமாவாசை இரவு அன்று இங்கே ஏதாவது வித்தியாசமாகப்
பார்த்தார்களா என்று விசாரித்தார். பழைய பதில்களே கிடைத்தன.
திடீரென்று
வேறு ஒரு யோசனை வந்தவராய் அருகே இருந்த தொழிற்சாலைக்கே சென்று லேட் நைட்
ஷிஃப்டிலிருந்து அந்த மலைப்பாதைப் பிரிவுப் பகுதியைத் தாண்டிச் செல்பவர்கள், லேட்
நைட் ஷிஃப்டுக்கு அந்த வழியாக தொழிற்சாலைக்கு வருபவர்கள் யாரெல்லாம் என்று
விசாரித்துத் தெரிந்து கொண்டு அவர்களிடமும் அந்தப் பகுதியில் அமாவாசை இரவு ஏதாவது
வித்தியாசமாய் பார்த்தார்களா என்று கேட்டார்.
அங்கும்
பழைய பதில்களே கிடைத்தன என்றாலும் ஒரே ஒருவன் மட்டும் வித்தியாசமான தகவல்
சொன்னான். “நான் இந்த லேட் நைட் ஷிஃப்டுக்கு வந்திட்டிருந்தப்ப வண்டிய ஒரு இடத்துல
நிறுத்திட்டு தம்மடிச்சுட்டுப் போலாம்னு நினைச்சு பைக்க நிறுத்தினப்ப ஒருத்தன்
வேகமா கார்ல க்ராஸ் பண்ணிட்டுப் போனான்.
என்ன இந்த வேகத்துல போறானேன்னு நினைச்சா ஒரு ரெண்டு நிமிஷத்துல
இன்னொரு காரும் அப்படியே வேகமா க்ராஸ்
பண்ணிப் போச்சு...”
“அந்த ரெண்டு
காரையும் விவரிக்க முடியுமா?”
“அத அவ்வளவு சரியா
கவனிக்கல.....
”அந்தக் கார்ல இருந்தவங்க பத்தி ஏதாவது சொல்ல முடியுமா?”
“முதல் கார்ல
ஓட்டிகிட்டுப் போனவன் மட்டும் தான் இருந்தான். இரண்டாவது கார்ல ரெண்டு பேர்
இருந்தாங்க. ரெண்டு கார்ல போனவங்க முகமும் சரியா தெரியல. ஆனா டிரைவருக்குப்
பக்கத்துல உட்கார்ந்திருந்தவர் முடி வெள்ளையா இருந்துச்சு. இந்தியன் சினிமால கமல்
வெச்சிருந்தாரே. அந்த மாதிரி வெள்ளைமுடி...”
“அந்த ஆளை நேர்ல
பார்த்தா அடையாளம் காமிக்க முடியுமா?”
“இல்லை சார். முடி
தான் பளிச்சுன்னு தெரிஞ்சுதே தவிர முகம் அந்த இருட்டுல சரியாத் தெரியல....”
செந்தில்நாதன் அந்த
ஆளையே கூர்ந்து பார்த்துக் கேட்டார். “நீங்க இன்னைக்கு அந்த வழியா இங்கே வந்த
மாதிரி தெரியலையே...”
“மூணு நாளா நான் என்
சகலை வீட்ல இருந்து வேலைக்கு வர்றேன் சார். அதனால அந்தப் பக்கமா வராமல்
இந்தப்பக்கமா வந்துட்டுருக்கேன்....”
இந்தியன் தாத்தா
மாதிரி வெள்ளைமுடி இருக்கிற ஆட்கள் யாராவது தனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா
என்று அவர் யோசித்துப் பார்த்தார். சடாரென்று நினைவுக்கு வந்தது சகுனி தான்.
மந்திரி மாணிக்கத்தின் மாமன்!...
(தொடரும்)
என்.கணேசன்
(ஜுலை 21 முதல் 31 வரை சென்னை, இராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் அரங்கு எண் 159 ல் என் நூல்கள் சிறப்புத் தள்ளுபடியுடன் கிடைக்கும். - என்.கணேசன்)
Monday, July 17, 2017
வூடூவுக்கு எதிரான விமர்சனங்கள்!
வூடூ பற்றிய சுவாரசியமான தகவல்கள் பலவற்றை இது வரை பார்த்த நாம்
அதற்கு எதிராக வலுவாக சொல்லப்படும் விமர்சனங்களையும் கவனிக்காமல் விட்டால்
வூடூவை முட்டாள்தனமாக நம்புகிற கூட்டத்தில் சேர்ந்து விட நேரிடும். எனவே அதையும்
பார்ப்போம்.
மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்த ராபர்ட் எல்.பார்க் (Robert L. Park) என்பவர் 2000 ஆம் ஆண்டு எழுதிய வூடூ அறிவியல்: முட்டாள்தனத்தில் இருந்து மோசடிக்கான பாதை (Voodoo Science: The Road from Foolishness to Fraud) என்ற நூலில் வூடூவை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்த அறிஞர்களை சாடியிருக்கிறார். அப்படி அறிவியல் ரீதியான அற்புதங்கள் இல்லவே இல்லை என்று பல உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறார். பலரும் பார்க்க விரும்பியதையே பார்த்து அதற்கு சாமர்த்தியமாக அறிவியல் சாயம் பூசுகிறார்கள் என்பது அவரது வாதமாக இருந்தது. ஆனால் அவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் “அவர் பார்க்க விரும்பாததைப் பார்க்கவில்லை. சில குறிப்பிட்ட நிகழ்வுகளையும், தகவல்களையும் அலசியிருக்கிறாரே ஒழிய வூடூவின் அனைத்து அம்சங்களையும் திறந்த மனதுடன் ஆராயத் தவறிவிட்டார்” என்று அவரைக் குற்றம் சாட்டுகிறார்கள்.
மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்த ராபர்ட் எல்.பார்க் (Robert L. Park) என்பவர் 2000 ஆம் ஆண்டு எழுதிய வூடூ அறிவியல்: முட்டாள்தனத்தில் இருந்து மோசடிக்கான பாதை (Voodoo Science: The Road from Foolishness to Fraud) என்ற நூலில் வூடூவை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்த அறிஞர்களை சாடியிருக்கிறார். அப்படி அறிவியல் ரீதியான அற்புதங்கள் இல்லவே இல்லை என்று பல உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறார். பலரும் பார்க்க விரும்பியதையே பார்த்து அதற்கு சாமர்த்தியமாக அறிவியல் சாயம் பூசுகிறார்கள் என்பது அவரது வாதமாக இருந்தது. ஆனால் அவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் “அவர் பார்க்க விரும்பாததைப் பார்க்கவில்லை. சில குறிப்பிட்ட நிகழ்வுகளையும், தகவல்களையும் அலசியிருக்கிறாரே ஒழிய வூடூவின் அனைத்து அம்சங்களையும் திறந்த மனதுடன் ஆராயத் தவறிவிட்டார்” என்று அவரைக் குற்றம் சாட்டுகிறார்கள்.
ராபர்ட் பார்க்கைப் போலவே வால்டர் பி. கேனன் (Walter B. Cannon) என்ற ஆராய்ச்சியாளர் 1942 ஆம் ஆண்டு வூடூ சாவு (Voodoo’ Death) என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். அதில் வூடூ
சாவுகள் சிலவற்றை ஆராய்ச்சியில் எடுத்துக் கொண்டு அந்த சாவுகள் வூடூ சக்திகளால்
ஏற்பட்டவை என்பதை விட வூடூ குறித்து மக்கள் மனதில் இருந்த பயத்தினால் ஏற்பட்டவை
என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். அவர் காலத்தில் மருத்துவ
விஞ்ஞானம் இன்றைய அளவு முன்னேறி இருக்கவில்லை என்றாலும் அவர் அன்று அனுமானித்தவை
சரியே என்று இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர் எடுத்துக்
கொண்ட நிகழ்வுகளின் அலசலில் அவருக்குப் புரியாத சில அம்சங்களுக்கு இன்றைய
விஞ்ஞானம் பதிலை எட்டியிருக்கிறது என்பதை இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
வூடூ மரணம் குறித்து வால்டர் பி. கேனன் மற்றும் இன்றைய மருத்துவர்கள்
கருத்துக்கு ஆதாரமாக எண்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை ந்யூ
சயிண்டிஸ்ட் (New Scientist) என்ற பத்திரிக்கை 2009 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்டிருக்கிறது. அந்த சம்பவத்தை நான்கு மருத்துவர்கள் நேரடி சாட்சிகளாகக் கண்டிருந்து அதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த சுவாரசியமான உண்மை நிகழ்வைப் பார்ப்போம்.
அமெரிக்காவில் அலபாமாவின் ஒரு மயானத்தில் ஒரு நள்ளிரவில் வான்ஸ் வேண்டர்ஸ் (Vance Vanders) என்பவருக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. ஒரு சூனியக்காரன் ஒரு பாட்டிலில் வைத்திருந்த நாற்றமெடுத்த ஒரு திரவத்தை அவர் முகத்தருகே கொண்டு வந்து ஊதி “இனி நீ சில நாளில் இறந்து விடுவாய். யாருமே உன்னைக் காப்பாற்ற முடியாது” என்று சொல்லி விட்டான். அவர்களுக்குள் முன் பகை எதாவது இருந்ததா, ஏன் அவன் அப்படிச் செய்தான் என்ற தகவல்கள் அந்தப் பத்திரிக்கையில் தரப்படவில்லை.
வீட்டுக்கு வந்த வான்ஸ் வேண்டர்ஸ் படுத்த படிக்கையாகி விட்டார். அவர் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. மிகவும் ஒல்லியாகி விட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு போனார்கள் எல்லா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகளில் ஒரு பிரச்னையும் தெரியவில்லை. மருத்துவர்களே குழம்பினார்கள். நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டே வந்த வேண்டர்ஸ் கிட்டத்தட்ட இறந்தே போய் விடுவார் என்ற நிலை வந்து விட்டது. ”காரணம் இல்லாமல் இப்படியாக வாய்ப்பே இல்லையே, இது மருத்துவத்திற்கே சவாலாக இருக்கிறதே” என்று ட்ரேடன் டொஹெர்ட்டி (Drayton Doherty) என்ற தலைமை மருத்துவர் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்திய போது வேண்டர்ஸின் மனைவி டொஹெர்ட்டியிடம் அலபாமா மயானத்தில் சூனியக்காரன் ஒருவன் சூனியம் செய்த விவரத்தைத் தயக்கத்துடன் தெரிவித்தார்.
அமெரிக்காவில் அலபாமாவின் ஒரு மயானத்தில் ஒரு நள்ளிரவில் வான்ஸ் வேண்டர்ஸ் (Vance Vanders) என்பவருக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. ஒரு சூனியக்காரன் ஒரு பாட்டிலில் வைத்திருந்த நாற்றமெடுத்த ஒரு திரவத்தை அவர் முகத்தருகே கொண்டு வந்து ஊதி “இனி நீ சில நாளில் இறந்து விடுவாய். யாருமே உன்னைக் காப்பாற்ற முடியாது” என்று சொல்லி விட்டான். அவர்களுக்குள் முன் பகை எதாவது இருந்ததா, ஏன் அவன் அப்படிச் செய்தான் என்ற தகவல்கள் அந்தப் பத்திரிக்கையில் தரப்படவில்லை.
வீட்டுக்கு வந்த வான்ஸ் வேண்டர்ஸ் படுத்த படிக்கையாகி விட்டார். அவர் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. மிகவும் ஒல்லியாகி விட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு போனார்கள் எல்லா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகளில் ஒரு பிரச்னையும் தெரியவில்லை. மருத்துவர்களே குழம்பினார்கள். நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டே வந்த வேண்டர்ஸ் கிட்டத்தட்ட இறந்தே போய் விடுவார் என்ற நிலை வந்து விட்டது. ”காரணம் இல்லாமல் இப்படியாக வாய்ப்பே இல்லையே, இது மருத்துவத்திற்கே சவாலாக இருக்கிறதே” என்று ட்ரேடன் டொஹெர்ட்டி (Drayton Doherty) என்ற தலைமை மருத்துவர் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்திய போது வேண்டர்ஸின் மனைவி டொஹெர்ட்டியிடம் அலபாமா மயானத்தில் சூனியக்காரன் ஒருவன் சூனியம் செய்த விவரத்தைத் தயக்கத்துடன் தெரிவித்தார்.
டொஹெர்ட்டி
மனித மனத்தையும் அதன் நம்பிக்கைகளின் வலிமையையும் நன்றாக உணர்ந்தவர். அவர் ஆழமாக
யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். மறுநாள் அவர் வேண்டர்ஸின் படுக்கைக்கு அருகே
அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்தார். அவர்களிடம் பரபரப்புடன்
சொன்னார். “நேற்று இரவு அந்த சூனியக்காரனை நான் தந்திரமாக அதே மயானத்திற்கு
வரவழைத்தேன். அவன் கழுத்தை நெறித்து ஒரு மரத்தோடு அவனை நசுக்கி நிறுத்தி வைத்துக்
கேட்டேன். “நீ வேண்டர்ஸுக்குச் செய்த சூனியம் என்ன? அது எப்படி வேலை செய்கிறது?” என்று கேட்டேன்.
அவன் உண்மையைக் கக்கி விட்டான். அவன் அப்படி ஊதிய போது சூனிய மந்திரத்தைச் சொல்லி
ஒரு பல்லியின் கால்களை வேண்டர்ஸின் வயிற்றில் தடவி இருக்கிறான். அந்த சூனியப் பல்லியின் முட்டை ஒன்று
வேண்டர்ஸின் வயிற்றிற்குள் போயிருக்கிறது. அந்த முட்டை பொறித்து வேண்டர்ஸின்
வயிற்றில் பல்லி உருவாகி அவர் உடலின் உட்பகுதிகளைச் சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறதாம்....”
வேண்டர்ஸின்
குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்கள் என்றால் வேண்டர்ஸ் நிலைமை எப்படி இருக்கும்
என்பதைச் சொல்லவே வேண்டாம். மிக பலவீனமான நிலையிலும் அவர் வாயைப் பிளந்தார்.
டொஹெர்ட்டி
சொன்னார். “இவரைப் பிழைக்க வைக்க ஒரே வழி அந்தப் பல்லியை வெளியே எடுப்பது தான்.” குடும்பத்தினர்
சம்மதித்தார்கள்.
டொஹெர்ட்டி
ஒரு ஊசியை வேண்டர்ஸுக்குப் போட்டார். அடுத்த சில நிமிடங்களில் வேண்டர்ஸ்
வாந்தியெடுக்க ஆரம்பித்து விட்டார். அவரால் வாந்தியை சிறிதும் கட்டுப்படுத்த
முடியவில்லை. எல்லோரும் வேண்டர்ஸையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில்
யாரும் பார்க்காத தருணத்தில் முன்பே ஒரு கருப்புப் பையில் கொண்டு வந்திருந்த பச்சை
நிறப் பல்லியை வாந்தி வெள்ளத்தில் நழுவ விட்டார்.
பின்
உற்சாகத்துடன் கத்தினார். “வேண்டர்ஸ் உங்கள் வயிற்றில் என்ன இருந்திருக்கிறது
என்று பாருங்கள். உங்கள் உடலில் இருந்து சூனியம் வெளியேறி விட்டது”. வேண்டர்ஸ்
பேராச்சரியத்துடன் கண்களைத் திறந்து பலவீனமாக அந்தப் பல்லியைப் பார்த்தார். பின்
மிகவும் களைப்புடன் கண்களை மூடிய அவர் நிம்மதியாக உறங்கினார். மறு நாள் தான் கண் விழித்தார்.
பின் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. மருந்துகளும், ஒழுங்காய்
உணவு உட்கொண்டதும் அவரைப் பழைய ஆரோக்கிய நிலைக்குத் திரும்ப வைத்தது. ஒரு
வாரத்தில் வீடு திரும்பினார்.
டொஹெர்ட்டி தந்திரமாய் அந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கா
விட்டால் வேண்டர்ஸ் வீடு திரும்புவதற்குப் பதிலாக மயானத்திற்கே சென்று
புதைக்கப்பட்டிருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. மனித மனதில் பயம் ஆழமாக வேரூன்றி
விடும் போது அந்தப் பயமே ஒருவரை மரணம் வரை அழைத்துச் செல்ல வல்லது என்பதற்கும்,
அந்தப் பயம் வேரோடு அழிக்கப்பட்டு நம்பிக்கையை உணர்ந்தால் அதுவே அவரைக் காப்பாற்றி
விடுகிறது என்பதற்கும் இதுவே நல்ல உதாரணம்.
இந்த அடிப்படையில் பார்க்கையில் வால்டர் பி கேனன் வூடூ
சாவுகள் குறித்து எழுப்பியிருக்கும் சந்தேகங்கள் ஆதாரமற்றவை அல்ல என்பதை நம்மாலும்
உணர முடிகிறது. வூடூ
சூனியம் வைத்த பின் இறப்பு நிச்சயம் என்று ஒருவன் நம்ப ஆரம்பிக்கையில் அவன்
நம்பிக்கையே அவனைச் சாகடிக்க ஆரம்பித்து விடுகிறது. அவன் மரணத்திற்காகக்
காத்திருக்கையில் அவனைச் சுற்றி இருப்பவர்களும் நம்ப ஆரம்பித்து
இறுதிச்சடங்குகளுக்குக் கூட ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இதைப்
பார்த்துக் கொண்டே இருக்கும் அந்த நபர் பிழைக்க வழி இருக்கிறதா என்ன?
வூடூ
சாவுகள் குறித்து தென்னமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் வெளிவந்த செய்திகள் எல்லாம்
வூடூ சக்தியின் விளைவே என்று சொல்ல முடியாது என்றும் அவை சாதாரண விஷமூட்டப்பட்டதன்
விளைவாகக் கூட இருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். அக்காலங்களில் வூடூ
சாவுகளுக்கு முறையான பிரேத பரிசோதனைகள் கூட சரியாக செய்யும் வழக்கம் இல்லாமல்
இருந்ததால் பல கொலைகள் அடையாளம் காணப்படாமலே போயிருக்கவும் வாய்ப்பிருக்கிறது
என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
- என்.கணேசன்
- நன்றி: தினத்தந்தி 16.5.2017
Thursday, July 13, 2017
இருவேறு உலகம் – 38
படபடக்கும் இதயத்துடன் க்ரிஷ் கேட்டான். ”என்ன நிபந்தனை?”
“உன் உணர்வுநிலையின்
உள்ளே நுழைய என்னை அனுமதிக்க வேண்டும்...”
”எனக்குப் புரியவில்லை”
“உன் கம்ப்யூட்டரில்
புதிய சாஃப்ட்வேர் போட்டுக் கொள்வது போலத் தான் இது....”
“அதை எப்படிச் செய்வது....”
“அதை நான் செய்து
கொள்கிறேன். ஆனால் மன அளவில் உன் எதிர்ப்பு சிறிதளவு இருந்தாலும் என்னால் உன்
மனதுக்குள் புக முடியாது...”
மனிதனின் மனம்
அவனுடைய தனிச் சொத்து. அவன் அந்தரங்கமாய் நினைக்கும் விஷயங்களை அடுத்தவர் புகுந்து
காண்பதை எப்படி சகிக்க முடியும் என்று க்ரிஷ் யோசித்தான்.
அதற்கு உடனே
வேற்றுக்கிரகவாசியின் மறுமொழி வந்தது. ”நீ நினைப்பதை என்னால் இப்போதும் அறிய முடியும்.
ஆனால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள உன் உணர்வுநிலை போதாது. அதற்கு உனக்குக்
கூடுதல் திறன் தேவை. அதற்குத் தான் உன் அனுமதி கேட்கிறேன். அதற்கு அனுமதி
தந்தாயானால் இந்தக் கம்ப்யூட்டர் இல்லாமலேயே நாம் இருவரும் நம் எண்ணங்களைப்
பகிர்ந்து கொள்ளலாம்.”
க்ரிஷ்
யோசித்தான். எல்லாம் மாயாஜாலக்கதை போல் இருக்கிறதே!
உடனே
மறுமொழி வந்தது. “இது எதுவுமே மாயாஜாலம் அல்ல. உங்களுக்குப் புரியாத இன்னொரு
இயற்கை விதியே. இதை உங்கள் சித்தர்களும், யோகிகளும் அறிந்திருந்தார்கள். இப்போதும்
சில அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் உன்னிடத்தில் இணைக்கப் போவது, உங்கள்
பாஷையில் சொன்னால் மிகவும் அட்வான்ஸ்டு வெர்ஷன்....”
க்ரிஷ் கேட்டான்.
“நாம் இருவரும் ஏன் அப்படிப் பேசிக்கொள்ள வேண்டும்?”
மிகவும்
வெளிப்படையாக, தயக்கமில்லாமல் அவன் கேட்டவுடன் வேற்றுக்கிரகவாசி சிறிது யோசித்தது
போலிருந்தது. பின் பதிலுக்கு ஒரு கேள்வி வந்தது.
“உன்
பூமி அழிவுப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது தெரியுமா?”
அழிவுப்பாதை என்றதும்
க்ரிஷ் மனதில் உடனே நினைவுக்கு வந்தது அணு ஆயுதங்கள் தான். பயன்படுத்த மாட்டோம்
என்று எல்லா முக்கிய நாடுகளும் சத்தமாகச் சொல்கின்றன. ஆனால் எல்லா நாடுகளும் அது
குறித்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. பயன்படுத்தப் போகாத ஒன்றிற்கு
ஆராய்ச்சிகள் எதற்கு?
அவன் எண்ணி முடிவதற்குள்
வேற்றுக்கிரகவாசியின் கருத்து லாப்டாப்பில் மின்னியது. “பிரச்னை அணு ஆயுதங்களில்
இல்லை. அழிவுக்கான சாத்தியக்கூறுகளில் ஒன்று தான் அணு ஆயுதங்கள். இன்னும் நீ
ஆழமாய்ப் போக வேண்டும். அதற்காகத் தான் நான் உன்னிடம் வந்திருக்கிறேன்.....”
க்ரிஷ் கேட்டான். “பூமி
அழியப் போவதில் வேற்றுக்கிரகவாசிக்கு என்ன அக்கறை?”
இந்த இடத்தில்
மாஸ்டருக்கு க்ரிஷை மெச்சாமல் இருக்க முடியவில்லை. அவனைப் பொருத்த வரை எதையும்
வெளிப்படையாகவும், தயக்கமில்லாமலும் கேட்டிருக்கிறான். ’நாம் இருவரும் ஏன்
அப்படிப் பேசிக் கொள்ள வேண்டும்?’ என்று கேட்டதும் சரி ’இதில் உனக்கு என்ன
அக்கறை?’ என்று கேட்டதும் சரி ’பளார்’ கேள்விகள் தான். ஆனால் எதிரி அவனைக் கச்சிதமாக அறிந்து எல்லாவற்றிற்கும் தயாராகத்
தான் வந்திருக்கிறான்....
“நீங்கள்
அழியப் போகிற உயிரினங்கள் என்று சில விலங்குகளை காப்பாற்ற சகல முயற்சிகளையும் எடுத்துக்
கொண்டிருக்கிறீர்களே. ஏன்? மனிதன் எதற்கு ஏதோ சில விலங்குகள் அழிவதற்கு வருத்தப்பட
வேண்டும்? ஏன் அவற்றைக் காப்பாற்றவும் பெருக்கவும் முயற்சிகள் எடுக்க வேண்டும்?”
க்ரிஷ்
ஒரு கணம் யோசித்து விட்டுக் கேட்டான். “சரி, இதில் என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
நான் என்ன செய்ய முடியும்?”
”அறிவும்,
நல்ல மனமும் சேர்ந்திருக்கும் மனிதர்களாலேயே எந்த ஒரு சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கிறது.
அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லாமல் போகும் போது, அப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தும்
அவர்கள் பொது நலனில் அக்கறை காட்டாத போது அழிந்திருக்கிறது. நல்ல மனிதர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும்
போது எல்லாமே நாசமாகிப் போகிறது...”
க்ரிஷுக்கு என்ன
சொல்வதென்று தெரியவில்லை. பல சமயங்களில் உண்மைக்கு மறுமொழி மௌனமாகவே அல்லவா இருக்கிறது.
வேற்றுக்கிரகவாசி
கேட்டான். “உன் உள்ளுணர்வில் புக இப்போதாவது என்னை அனுமதிக்கிறாயா?”
உடனே ஆமாம், இல்லை
என்று சொல்வதில் எப்போதுமே சிக்கல் உண்டு என்பதால் க்ரிஷ் எச்சரிக்கையோடு
சொன்னான். “எனக்கு யோசிக்க சிறிது காலம் வேண்டும்”
“யோசி. அடுத்த
அமாவாசைக்கு முன் ஒரு முடிவுக்கு வா. நீ சரி என்றால் நான் சில மாதங்கள் இந்தப்
பூமியில் இருப்பேன். மாட்டேன் என்றால் அடுத்த அமாவாசை அன்றே போய் விடுவேன்.... இனி
திரும்ப மாட்டேன்”
“ஏன்?”
“அழியப்போகும்
பூமியில் அதிக காலம் தங்குவதில் அர்த்தமில்லை..... உனக்கு சம்மதம் என்றால் அடுத்த
அமாவாசை அன்று இந்த மலைக்கே திரும்பி வா? இல்லை என்றால் வீட்டில் இருந்தே உன்
லாப்டாப்பில் தெரிவித்தால் போதும்.... நான் கிளம்பட்டுமா?”
அடுத்த கணம்
தீப்பந்தமாய் ஒரு வினாடி தோன்றிய ஒளி மறுகணம் மறைந்து கரிய பெரிய பறவை பறக்க
ஆரம்பித்தது தெரிந்தது. அந்தக் கரிய பறவை போவதையே பிரமிப்போடு பார்த்து நின்று
கொண்டிருந்த க்ரிஷ் சில வினாடிகளில் அது இருட்டில் கரைந்து காணாமல் போன பிறகு களைப்புடன்
கீழே சாய்ந்தான். எல்லாமே கனவு போலவும், கற்பனை போலவும் இருந்தது.
தொடர்ந்த நாட்களிலும்
க்ரிஷால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. முதலில் அவனுக்கு இப்படியொரு சம்பவம்
நடந்திருக்கிறது என்பதையே கூட ஜீரணிப்பதில் சிறிது சிரமம் இருந்தது. அவன் ஏலியன்ஸ்
பற்றி இது வரை கிடைத்திருக்கும் ஆதாரங்களைத் தேடித் தேடிப் படித்தான். எதுவுமே
அவன் அனுபவம் போல் இல்லை. வேற்றுக்கிரகவாசி சொன்னதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை
அவன் நினைவில் பதிந்திருந்தது. திரும்பத் திரும்ப யோசித்தான். முன்பின் தெரிந்தராத
அந்த சக்தி ஏதோ ஒரு ’சாஃப்ட்வேரை’ அவனுக்குள் புகுத்த அவன் அனுமதிக்க வேண்டுமா? அது அதோடு நிற்குமா? அதன்
பின் அவனுக்கு முழு சுதந்திரம் இருக்குமா? முக்கியமாய் அவன் அவனாக இருக்க
முடியுமா? எதற்கும் உத்திரவாதமில்லை.
அம்மாவும்,
அப்பாவும் அடிக்கடி சொல்லும் அவனுக்கு ‘கண்டம்’ இருக்கும் காலமும்
நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் கண்டத்தைக் கொண்டு வருவதே அந்த வேற்றுக்கிரகவாசியாக
இருக்கலாமோ?
இந்த
எண்ணத்தில் விடாப்பிடியாக நின்று யோசித்து முடிவெடுத்திருந்தால் கண்டிப்பாக க்ரிஷ்
ஆபத்திலிருந்து தப்பித்திருப்பான் என்று மாஸ்டர் நினைத்தார். ஆனால் விதி வலியதாக
இருந்ததால் க்ரிஷ் வேறு பலவும் யோசித்தான்.
புதிய
அனுபவங்கள், புதிய சாதனைகள் காணாத வாழ்க்கையில் அர்த்தம் என்ன இருக்கிறது?
எல்லைகளை நீட்டிக் கொண்டு போகாமல் ஒவ்வொரு கணமும் உண்மையாக வாழாமல் பயந்து பயந்து
சாவதிலும், நேற்றைய சாதனைகளிலேயே திருப்தி அடைந்து தேக்கநிலை வாழ்க்கை வாழ்வதிலும்
என்ன பெருமை இருக்கிறது.
ஒரு ஏலியனின் தொடர்பு எத்தனை பேருக்குக்
கிடைக்கும்? அதன் மூலம் புதிய பரிமாணங்களைக் காணும் வாய்ப்பு யாருக்கு வாய்க்கும்.
இதை எல்லாம் விட்டு விட்டு பாதுகாப்பான வாழ்க்கை வாழ முடிவெடுத்தால் வாழ்க்கையில்
பாதுகாப்பு இருக்கலாம், நிறைவு இருக்குமா? ஒரு பொன்னான வாய்ப்பை இழந்து விட்டோமே
என்ற ஒரு ஏக்கம் இருந்து கொண்டே அல்லவா இருக்கும்? பரமேசுவரப் பணிக்கர் கணித்தது
போல அவனுக்கு மரணமே வந்தால் தான் என்ன? சாகச
முயற்சியில் செத்தால் தான் என்ன? என்றேனும் ஒரு நாள் எல்லோரும் சாக வேண்டியவர்களே
அல்லவா? கடைசியில் பிறந்ததற்கு புதிய பரிமாணங்களையும், புதிய அனுபவங்களையும்
பெற்றுவிட்டு மடிவதே உத்தமம் என்று தோன்றியது.
இந்த
எண்ணம் வலுப்பட்ட போது அவன் குடும்பமும், ஹரிணியும் தான் அதற்கு எதிரணியில் அவன் மனதில் இருந்தார்கள்.
அவர்களுடைய துக்கம் தான் அவனை நிறைய யோசிக்க வைத்தது. அம்மாவுக்கும்,
அப்பாவுக்கும் உதய் இருக்கிறான். துக்கப்படும் நாட்கள் அதிகமானாலும் ஒருநாள்
அவர்கள் அவன் மரணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெறுவார்கள். உதய்க்குத்
திருமணமாகி குழந்தைகள் பிறந்தால் பேரக்குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பிக்கும் போது
அவர்கள் மனக்காயம் கண்டிப்பாக ஆறும். உதயும் தன் குடும்பம், குழந்தைகள் என்று
ஆனவுடன் கண்டிப்பாய் தம்பியை நினைப்பது குறைந்து போகும். ஆனால் ஹரிணி? அவன் அவளை
அறிவான். அவள் கண்டிப்பாக இன்னொரு திருமணம் செய்து கொள்ள மாட்டாள். அவன் மனதில்
அவளைத் தவிர வேறொருத்திக்கு எப்படி இடம் தர முடியாதோ அதே போல் அவளாலும் அவனைத்
தவிர வேறொருவனுக்கு இடம் தர முடியாது. அவன்
அறிவான். அவள் வாழ்க்கையில் நிரந்தர வெறுமை தங்குவதை மட்டும் தான் அவனால் சகிக்க
முடியவில்லை.
பல
ஆழமான சிந்தனைகளுக்குப் பின் தான் அவள் மனதில் தன் இடத்தை வலுவாக்காமல், அழிக்கும்
முடிவை எடுத்தான். அவள் அவன் வீட்டுக்கு வந்த நாளில் அலட்சியப்படுத்தி
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது போல் காட்டிக் கொண்டான். அவள் அவமானத்தை உணர்ந்தவளாய்
அவன் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது அவன் இதயத்தில் இரத்தம் கசிந்து
கொண்டிருந்தது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் எதிலேயோ மூழ்கி இருப்பதாய்
காட்டிக் கொள்வதற்கு அவன் படாதபாடு பட்டான். பதினைந்து நிமிட அலட்சியத்திலேயே அவள்
போக வேண்டும் என்று எதிர்பார்த்தான். பாவம் அவள் மிக நல்லவள். அவன் மேல் இருந்த
காதல் காரணமாக மேலும் தங்கினாள். ஒவ்வொரு வினாடியும் அவள் உணர்ந்த வேதனைக்குப்
பத்து மடங்கு அதிக வேதனையை அவன் அனுபவித்தான்.
”ப்ளீஸ் ஹரிணி போயிடு....” என்று ஒரு மணி
நேரம் கழிந்த பின் க்ரிஷ் மனதினுள் கதற ஆரம்பித்தான். ஆனால் அவள் அதற்கு மேலும்
ஒரு மணி நேரம்- அறுபது நிமிடம்- 3600 வினாடிகள் தங்கி அவன் இதயத்தைப் பிழிந்து
விட்டுத் தான் போனாள். அவள் போனவுடன் கதவைச் சாத்திக் கொண்டு அவன் நாள் முழுவதும்
அழுதான்.
காதல்,
லௌகீக வாழ்க்கை என்று எதிலும் சிக்காமல் வாழ்ந்த மாஸ்டருக்கே அவன் அழுத காட்சியை
மறு ஒளிபரப்பில் பார்த்த போது மனம் உருகியது. ’காதலைக்கூடத்
தியாகம் செய்து எதிரியிடம் ஏமாந்து விட்டாயே க்ரிஷ்!’
(தொடரும்)
என்.கணேசன்
Subscribe to:
Posts (Atom)