சர்ச்
பாதிரியார்களிடம் விசாரிக்கும் எண்ணம் எழுந்த வேகத்திலேயே புதுடெல்லி
உயரதிகாரிக்கு அடங்கி மடிந்தது. அப்படி விசாரிப்பது அந்த ஆளுக்குக் கட்டாயம்
தெரியாமல் போகாது. பாதிரியார்கள் உட்பட இங்குள்ளவர்கள் பலரும் அந்த ஆளின் ஆட்களாக
இருப்பார்கள். இல்லா விட்டாலும் விசாரிக்கும் ஆளே அந்த ஆளாக இருந்தாலும் அந்தக்
கருப்பு அங்கியை அந்த ஆள் அகற்றி விட்டிருந்தால் அடையாளம் தெரியாது. இப்படி
இருக்கையில் விசாரிக்கச் செல்வது ஆபத்தை விலைக்கு வாங்குவது போலத் தான் ஆகி
விடும்.
தெளிவு பெற்ற
புதுடெல்லி உயரதிகாரி தன் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அங்கிருந்து காரில்
போகையில் சர்ச்சுக்குள் அவனுக்கு ஏற்பட்ட அனுபவத்தை மனம் அசைபோட்டது. பாவ
மன்னிப்புக் கூண்டின் உள்ளே அவனை ஆக்கிரமித்த சக்தி அந்த ஆளின் சக்தியா இல்லை வேறு
ஏதாவது சக்தியா என்பதை அவனால் யூகிக்க முடியவில்லை.
இப்போது நேரில்
சொன்ன தகவலை அந்த ஆள் அவனிடம் போனிலே கேட்டு இருக்கலாமே. அப்படி இருக்கையில் அதைத்
தவிர்த்து இங்கு வரவழைக்கக் காரணம் என்னவாக
இருக்கும். யோசித்துக் கொண்டே செல்கையில் அவன் செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்து
சேர்ந்தது. அவனுக்கு வர வேண்டிய தொகை அக்கவுண்டில் வரவு வந்ததைத் தான் அந்தத்
தகவல் சொன்னது. வழக்கத்தை விடக் கூடுதலாகவே பணம் வரவாகி இருந்தது.
திருப்தியில்
அனைத்துக் கேள்விகளையும் மறந்து போனான் அவன்.
க்ரிஷ் உயிரோடிருக்கிறான் என்று
கேள்விப்பட்டு திகைத்த அவர்கள் அவன் எங்கே இருக்கிறான் என்பதைப் பார்த்துச்
சொல்லச் சொன்னதும் மாஸ்டர் தன் கவனத்தை மேலும் குவித்துப் பார்ப்பது போலத்
தெரிந்தது. மேலும் இரண்டு நிமிடங்கள்
கழித்து மெல்லச் சொன்னார். “அவன் இந்த தேசத்தில் இல்லை. தொலைதூரத்தில்
இருக்கிறான்..... உயிர் இருந்தாலும் மிகவும் பலவீனமாக இருக்கிறான்..... அவனைச்
சுற்றிலும் இருட்டாக இருக்கிறது.....”
சங்கரமணி
பதற்றத்துடன் கேட்டார். “வேறென்ன தெரியுது
சுவாமி?”
மாஸ்டர் உடனே பதில் சொல்லாமல் தீவிர கவனக்குவிப்பில் இருந்தார். இது
வரை பார்த்ததைச் சொன்ன அவர் இப்போது அறிந்ததைச் சொல்லவில்லை. கண்களைத் திறந்து
அவர்களை வெறித்த பார்வை பார்த்து விட்டுச் சொன்னார். ”இதற்கு மேல்
எதுவும் தெரியவில்லை. எல்லாம் மங்கலாய் இருக்கிறது. மணீஷ் மூலமாகப் பார்த்து இனி
கூடுதலாக எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. இவனிடம் தங்கியிருக்கும் க்ரிஷின்
அலைகள் போதவில்லை….”
மாணிக்கம் ஆவலுடன் கேட்டார். “வேறெதாவது
வழியிருக்கா சுவாமி?”
மாஸ்டர் அதிக ஈடுபாட்டைக் காண்பிக்காமல் ஒரு தகவல் சொல்வது போலச்
சொன்னார். “க்ரிஷ் வீட்டுக்குப்
போய் அவன் அறையில் இருந்து அந்த அலைகளோடு லயித்தால் தெளிவாகத் தெரிந்து கொள்ள
வாய்ப்பிருக்கு....”
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
மாஸ்டர் கைகூப்பி விட்டுச் சொன்னார். “உங்களைச் சந்தித்ததில்
மகிழ்ச்சி. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு...”
அவர்கள் திகைத்து நிற்கையில் அவர் புன்னகையுடன் தலையசைத்து விட்டுப்
பழையபடி தன் அறைக்குள் போய் விட்டார். திடுதிப்பென்று அந்தச் சந்திப்பு முடிவுக்கு
வந்து விட்டதில் ஏமாற்றத்துடன் அவர்கள் நிற்கையில் சுரேஷ் எங்கிருந்தோ வேகமாக அங்கு வந்து சேர்ந்தான். அவர் நுழைந்த அறையின் கதவை வெளியிலிருந்தே
சத்தமில்லாமல் சாத்தினான்.
நடராஜன் தான் அழைத்து வந்தவர்களின் ஏமாற்றத்தை நன்றாகப் புரிந்து
கொண்டு மெல்ல சுரேஷ் அருகில் சென்று சொன்னார். “அவங்க அவர் கிட்ட இன்னும் பேச ஆசைப்படறாங்க. இனி எப்ப பேச முடியும்?”
அவன் சொன்னான். “அவர்கிட்ட இனி இன்னைக்குப் பேச முடியாது. இன்னொரு
நாள் பேசலாம். வேணும்னா நான் அவர் கிட்ட அப்புறமா கேட்டு சொல்றேன்”
நடராஜன் பவ்யமாகத் தலையசைத்து கைகூப்பி வணங்கி விட்டு வந்தார்.
மாணிக்கத்திடம் போகலாம் என்று அவர் தலையசைத்து விட்டு வெளியேற வேறு வழியில்லாமல்
மூவரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.
சங்கரமணி வெளியே வந்தபின் தன் அதிருப்தியைச் சத்தமாய்த் தெரிவித்தார்.
“என்ன இந்த ஆள் கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவராய் இருக்கார்.
பேசிகிட்டிருக்கறப்பவே அவரா அதை முடிச்சுகிட்டு போறார்”
”மரியாதையைப்
பற்றி இந்த ஆள் பேசறார்” என்று ஏளனமாய் மனதில் எண்ணிக் கொண்ட நடராஜன்
வழக்கத்திற்கு மாறாக வெளிப்படையாகவே சொன்னார். “பெரிய ஐயா. துறவிக்கு வேந்தன்
துரும்புன்னு சொல்வாங்க. இவர் இத்தனை நேரமா அவர் சக்தியை வெளிப்படுத்திக்
காட்டினாலும் ஒரு ரூபா உங்க கிட்ட இருந்து தட்சிணை வாங்கினாரா? இல்லை ஏதாவது
காரியத்த நம்மகிட்ட சாதிச்சுகிட்டாரா? நமக்கு இனியும் ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா
திரும்ப போகலாம். இல்லாட்டி விட்டரலாம்....”
சங்கரமணி மௌனமானார். வீடு வந்து சேர்ந்து நடராஜன் விடைபெறும் வரை
காத்திருந்து விட்டுப் பின் மாணிக்கத்திடம் கேட்டார். “அந்த ஆள் சொல்றதை வச்சு
க்ரிஷ் எங்கே இருக்கான்னு உனக்கு யூகிக்க முடியுதா?”
“இல்லை. எனக்கு அவன் இந்த தேசத்தில் இல்லைங்கறதையே நம்ப முடியல.
பலவீனமா இருக்கறதா வேற சொல்றார். பலவீனமா இருக்கறவன் எப்படி நாட்டை விட்டே போயிட
முடியும்?” என்றார் மாணிக்கம்.
சங்கரமணி மண்டைக் குடைச்சலைத் தெறிக்க வைப்பது
போல் வேகமாக இரண்டு முறை தலையை ஆட்டி விட்டு பேரனைக் கேட்டார். ”ஏன் மணீஷ் உன் ஃப்ரண்ட் மாயாஜாலம் எதாவது கத்துகிட்டானா என்ன?”
மணீஷுக்கு அவர் கேள்வியே அபத்தமாய் பட்டது. அவன் சிறிது யோசித்து விட்டு உதயிற்குப் போன் செய்தான். “அண்ணா நான் மணீஷ்
பேசறேன். க்ரிஷ் கிட்ட இருந்து அப்பறமா எதாவது மெசேஜ் வந்துதா? அவன் எங்கே
இருக்கான்கிற தகவல் எதாவது கிடைச்சுதா?”
உதய்க்கு மணீஷைச் சிறிதும் சந்தேகிக்க முகாந்திரம் இருக்காததால்
அவன் தன் தம்பி மேல் அக்கறையும் அன்பும் கொண்ட, தம்பிக்கு நெருங்கிய நண்பனிடம்
உண்மையைச் சொல்லத் தயங்கவில்லை. செந்தில்நாதன் சொன்னதைத் தெரிவித்து விட்டு “இதை
நான் அம்மா அப்பா கிட்ட கூடச் சொல்லலை. அதனால விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்” என்றான்.
மணீஷுக்குச் தலைசுற்றியது. ’தென்னமெரிக்காவா?’ என்று அசந்தவன் உதய்
இதுபற்றி என்ன நினைக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டி சொன்னான். “என்னண்ணா ஒரே
குழப்பமாய் இருக்கு”
“எனக்கு என்ன நினைக்கிறதுன்னே தெரியல. இன்னொரு தடவை அவன் கிட்ட
இருந்து மெசேஜோ, போன்காலோ வந்தா தான் எதையும் நாம உறுதிப்படுத்திக்க முடியும். ஆனா
நேர்ல வந்து சேர்ந்தா தான் நிம்மதி”
“நீங்க சொல்றது சரி தான்ணா. நானும் அப்படியே தான் நினைக்கிறேன். ஏதாவது
தகவல் கிடைச்சா சொல்லுங்க” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்த மணீஷ் தந்தை, தாத்தா
இருவருக்கும் அந்தத் தகவலைச் சொன்னான்.
இருவரும் திகைப்பின் உச்சிக்கே போனார்கள்.
அப்படியானால் மாஸ்டர் என்றழைக்கப்பட்ட அந்த மகான் சொன்னது சரி தான். சங்கரமணி
புலம்பினார். “இதே போக்குல போச்சுன்னா நான் சீக்கிரமே நெஞ்சு வெடிச்சோ மண்டை
வெடிச்சோ போய்ச் சேர்ந்துடுவேன் போல இருக்கு. என்ன தான் நடக்குதுன்னு ஒரு இழவும்
தெரியலையே”
மணீஷ் சொன்னான். “தெரிஞ்சுக்க ஒரே வழி அந்த மாஸ்டரை க்ரிஷ்
வீட்டுக்குக் கூட்டிகிட்டுப் போறது தான்”
“அந்த ஆள் ராங்கி புடிச்ச ஆளாயிருக்காரே.
கூப்பிட்டா வருவாரா? பேசிகிட்டிருக்கறப்பவே திடீர்னு ரூமுக்குள்ள போயிடறார். கஞ்சா
கிஞ்சா அடிக்கற கேஸ் மாதிரி தெரியுது. அபூர்வ சக்தி இருக்கற சில ஆளுங்களுக்கு
போதைப்பழக்கம் இருக்கும்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். எந்த மாதிரி ஆள்க வீட்டு
வாசல்ல எல்லாம் போய் நிக்கவேண்டியிருக்கு பார்த்தியா? எல்லாம் நம்ம நேரம்” என்று சங்கரமணி அங்கலாய்த்தார்.
மாணிக்கம் சொன்னார். “நட்ராஜ் சொன்ன மாதிரி
நமக்கு வேலையாகணும்னா அவர் எப்படி இருந்தாலும் பணிஞ்சு தான் போகணும்...!”
மாஸ்டர்
தன் ஞானதிருஷ்டியில் தெரிந்த காட்சியை உடனடியாகத் தன் குருவிற்குத் தெரிவிக்கவே
உடனடியாக அந்த அறைக்குள் போயிருந்தார். ஆனால் குருவைத் தியான அலைகளில் அவரால்
தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் அனுப்பிய அழைப்புகள் சுவரில் மோதி விட்டுத்
திரும்பி வருவது போல அவருக்குத் தோன்றியது. அதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்க
முடியும். அந்த அர்த்தம் அவரைப் பயமுறுத்தியது. நிலைமை தங்கள் கட்டுப்பாட்டை
மீறிப் போய் விட்டதாய்த் தோன்றியது. ஞான திருஷ்டியில் குருவைப் பார்க்க முயன்றார்.
சில நிமிடங்கள் கழித்து மங்கலாய்ப் புலப்பட்ட காட்சி மேலும் சில நிமிடங்கள்
கழித்து தெளிவாய்த் தெரிந்த போது ஒருகணம் மனம் பதறியது. நினைத்தபடியே தான்
ஆகியிருந்தது. அவரது குருவின் சடலம்
தெரிந்தது.... அருகில் யாரும் இல்லை..... மாஸ்டரின் கண்கள் லேசாகக் கலங்கின. இந்த
மரணம் இயற்கையில்லை....
ரிஷிகேஷின் அருகே இருக்கும் காட்டில் தனியாக வசித்து வரும் அவர் குரு
பரிபூரண ஆரோக்கியத்துடன் இருந்தார். பத்து நாட்களுக்கு முன் தான் அவரை மாஸ்டர்
சந்தித்திருந்தார். ஒரு இரவெல்லாம் தூங்காமல் இருவரும் பேசியிருக்கிறார்கள்.
அதிகாலையில் மாஸ்டர் கிளம்பும் போது ஏதோ உள்ளுணர்வால் உந்தப்பட்டவராய் அவர் குரு, மாஸ்டரிடம் தனக்கு திடீர் மரணம் நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்
என்று சொல்லி இருந்தார். அவரை அவர் உள்ளுணர்வு அன்று எச்சரித்திருக்கும்
போலிருக்கிறது....
அதைக் கேட்டுவிட்டு மாஸ்டர் விளையாட்டாய் சொன்னார். “அப்படியெல்லாம்
நீங்கள் சீக்கிரம் போய்ச் சேர்ந்து விட முடியாது குருவே! உங்களால் செய்து முடிக்க
வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன”
”எதையும் நானே நடத்தி முடிக்க வேண்டும் என்று நாம் யாருமே நினைக்கக் கூடாது.
எதை யாரை வைத்து நடத்த வேண்டும் என்று தெய்வசித்தம் இருக்கிறதோ, நமக்கு என்ன
தெரியும்”
என்று குரு புன்னகையுடன்
சொன்னார்.
அவர் சொன்னது போல் தெய்வசித்தம் வேறாக
இருந்திருக்கிறது. இல்லையில்லை.... அது தெய்வசித்தம் இல்லை. சைத்தானின் சித்தம். எதிரிகள்
நேரடியாகவே அவர்கள் பாதையில் குறுக்கிட்டிருக்கிறார்கள்..... குருவை அப்புறப்படுத்தி,
மீண்டும் காயை நகர்த்தி இருக்கிறார்கள்.... வேகமாக இயங்க ஆரம்பித்து
விட்டார்கள்...
(தொடரும்)
என்.கணேசன்