என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, April 13, 2017

இருவேறு உலகம் – 25

   
 செந்தில்நாதனுக்கு மனம் சமநிலை அடைய சிறிது நேரம் தேவைப்பட்டது. அந்த நேரம் கடந்த பின் அவர் என்ன செய்வதென்று யோசித்து விட்டு முதலில் உதய்க்குப் போன் செய்தார்.

உதய் மிக ஆர்வத்துடன் கேட்டார். “ஏதாவது தெரிஞ்சதா சார்?

“க்ரிஷோட மொபைல் போன் எங்கே ஸ்விட்ச் ஆன் ஆயிருக்கு, அந்த மெசேஜ் எங்கேயிருந்து செய்யப்பட்டிருக்குன்னு தெரிஞ்சுது. ஆனா அது குழப்பத்தை அதிகப்படுத்தியிருக்கே ஒழிய நமக்கு ஆறுதலா இல்லை..

“ஏன் சார்?

க்ரிஷ் மொபைல் தென்னமெரிக்கால தான் ஆன் ஆயிருக்கு. அங்கே இருந்து தான் மெசெஜ் வந்துருக்கு

உதயும் பேச்சிழந்து போனது தெரிந்தது. சிறிய மௌனத்திற்குப் பின் அவன் சொன்னான். “சார்.... எதாவது டெக்னிகல் மிஸ்டேக் இருக்குமோ?

அதைத்தான் நானும் கேட்டேன். அவங்க இல்லைங்கறாங்க

உதய்க்குத் தலை சுற்றியது. இப்போது தான் வீட்டில் சந்தோஷம் திரும்பி வந்திருக்கிறது. அவன் பெற்றோர் இன்று தான் ஒழுங்காகச் சாப்பிட்டார்கள். அம்மா அழுகையை நிறுத்தி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறாள். இந்தத் தகவல் பழைய கேள்விக்குறி நிலைமையையே உருவாக்கி விடும் போல் இருக்கிறதே என்று எண்ணியவனாக அவன் மெல்லச் சொன்னான். “சார் நீங்க உங்க விசாரணையத் தொடர்ந்து செய்யுங்க.... உண்மை என்னன்னு தெரியற வரைக்கும் இந்த விஷயம் எங்க அப்பா அம்மாவுக்குத் தெரிய வேண்டாம்.... ப்ளீஸ்

“சரி  என்ற செந்தில்நாதன் “உங்க தம்பியோட பாஸ்போர்ட் இருக்கான்னு ஒருதடவை செக் பண்ணிப் பார்த்துடுங்களேன்என்றார். அவன் ஆராய்ச்சிக்குப் போவதாகச் சொல்லி வெளிநாட்டுக்கு விமானத்தில் போயிருப்பானோ என்கிற சந்தேகம் அவருக்கு வந்திருந்தது.

“அவன் பீரோல அவன் பாஸ்போர்ட், க்ரெடிட் கார்டு எல்லாம் இருக்கறத நான் நேத்து கூடப் பாத்தேன் சார்என்று உதய் சொன்னான்.

செந்தில்நாதன் அந்த சாத்தியக்கூறும் விலகியதை உணர்ந்தார். பின் மெல்லச் சொன்னார். “சரி இந்தத் தகவல் நமக்குள்ளேயே இருக்கட்டும். எத்தனை நெருங்கியவங்களானாலும் சரி மத்தவங்களுக்குத் தெரிய வேண்டாம்...

“சரி சார்என்றான் உதய்.


வார்த்தைகள் இல்லாமல் மாணிக்கத்தின் வீட்டில் மூவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர்.  சங்கரமணிக்கு க்ரிஷின் செல்போனில் இருந்து வந்திருந்த தகவல் சகிக்க முடியாததாய் இருந்தது. என்ன தான் மாணிக்கம் வாடகைக் கொலையாளியின் செல்போனை உபயோகிப்பவனே க்ரிஷின் செல்போனையும் உபயோகித்து மெசேஜ் அனுப்பியிருக்க வேண்டும் என்று அறிவுபூர்வமாக விளக்கி இருந்தாலும் அவருக்கு அந்த ஆள் ஆறுதல் செய்தியை க்ரிஷ் குடும்பத்திற்கு அனுப்பியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. எனக்கு மட்டும் திகிலை ஏற்படுத்தி விட்டு அங்கே மட்டும் ஆறுதலா?

மணீஷ் மெல்லச் சொன்னான். “க்ரிஷ் செல்போன் எங்கே ஆன் ஆயிருக்குன்னு இன்னேரம் கண்டுபிடிச்சிருப்பாங்க. அது எங்கேன்னு விசாரிங்களேன்

தன் செல்போனை எடுக்கப் போன சங்கரமணியை மாணிக்கம் சைகையால் தடுத்தார். “இதுல நாம அதிக ஈடுபாடு காட்டறதே வீண் சந்தேகத்தை ஏற்படுத்திடும்.... செந்தில்நாதன் லேசுப்பட்ட ஆள் இல்லை.... இப்போதைக்கு க்ரிஷ் விஷயத்துல நம்மள சந்தேகப்பட எதுவுமே இல்லை. அப்படியே அதை வச்சுக்கறது நல்லது. நாம கமலக்கண்ணன் குடும்பத்துல விசாரிக்காம தனியா இதை விசாரிக்கறோம்னு தெரிஞ்சா செந்தில்நாதன் கவனம் நம்ம பக்கம் திரும்பும். அது நல்லதல்ல.....

மணீஷ் ஏமாற்றத்துடன் தலையாட்டினான். அந்த சமயத்தில் மாணிக்கத்தின் உதவியாளர் வந்து சொன்னார். “நடராஜன் வந்திருக்கார்...

மாணிக்கம் அவரை உள்ளே அனுப்பச் சொன்னார். நடராஜன் செல்வாக்கு மிக்க காண்டிராக்டர். அவர் மூலம் மாதம் தோறும் மிகப்பெரியதொரு தொகை மாணிக்கத்துக்கு வந்து கொண்டிருந்ததால் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் வந்து மாணிக்கத்தைச் சந்திக்க அனுமதி இருந்தது....

நடராஜன் உள்ளே வந்தார். வணக்கம் ஐயாஎன்று பெரியதாக மூவருக்கும் கும்பிடு போட்டார். சங்கரமணியைப் பார்த்துக் கண்களைச் சுருக்கிச் சொன்னார். “என்ன பெரிய ஐயா உங்களுக்கு உடம்பு சரியில்லையா. ரொம்பவே இளைச்சுட்ட மாதிரி தெரியுதே

“எல்லாம் என் நேரம் நட்ராஜ் வேறென்ன சொல்றதுஎன்று சங்கரமணி சொல்லி நிறுத்திக் கொண்டார்.

அவர் மேலும் ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்து விட்டுப் பின் மாணிக்கத்திடம் பரபரப்புடன் “ஐயா நீங்க ஒருத்தர சந்திச்சே ஆகணும்என்று சொன்னபடியே உட்கார்ந்தார்.

“யாரை?மாணிக்கம் கேட்டார்.

“அற்புதமான மகான் அவர். உங்க மனசுல என்ன நினைக்கிறீங்கன்னு நீங்க சொல்லாமலே அவர் சொல்லிடுவார்....

பஞ்சுத்தலையர் பழைய சங்கரமணியாய் மாறினார். “ஆமா இந்த மாதிரி ஆள்கள நான் நிறைய பாத்திருக்கேன். நெத்தில குங்குமம் வச்சுட்டு, ஜோல்னா பையை தோள்ல வச்சுட்டு ஜோசியம் பார்க்க வருவானுங்க. முதல்ல ரெண்டு பூவை நினையுங்கன்னு சொல்வானுங்க. நம்ம ஆளுகளுக்கு ரோஜா, மல்லி, தாமரைன்னு நாலஞ்சத் தவிர வேற எந்தப் பூ ஞாபகமும் வராது. நினைச்சத கரெக்டா சொல்லிடுவானுங்க. பின்ன ஜோசியம் பாக்கறேன்னு சொல்லி பழையதெல்லாம் கரெக்டா சொல்லி, எதிர்காலத்த பத்தி நாம ஆசைப்படறத சொல்லி பெரிய தொகையா கறந்துட்டு போயிடுவாங்க... அப்படி ஒருத்தன் என்கிட்டயும் போன வருஷம் வந்தான். ரெண்டு பூ நினைக்கச் சொன்னான். நான் நாகலிங்கப்பூவும் எருக்கம்பூவும் நினைச்சேன். அதைத் தவிர அத்தனை பூவும் சொல்லிட்டு அவன் ‘என்ன தான் நினைச்சீங்கன்னு கேட்டான். போடா போக்கத்தவனேன்னு சொல்லித் துரத்திட்டேன்

நடராஜன் அதிருப்தியுடன் முகத்தைச் சுளித்தார். பெரிய ஐயா நான் மகானப் பத்தி பேசறேன். நீங்க தெரு ஜோசியனப் பத்திப் பேசறீங்கஎன்றவர் மாணிக்கம் பக்கம் திரும்பினார். “ஐயா நான் முக்கியமான டாக்குமெண்ட் ஒன்னு காணோம்னு ரெண்டு மாசமா தேடாத இடமில்லைன்னு சொன்னேன். ஞாபகம் இருக்கா. இவர் கிட்ட போய் நின்னேன். நான் எதுவும் சொல்லலை. அவராவே சொன்னார். முக்கியமான பத்திரம் காணோம்னு வந்திருக்கேன்னார். நான் ஆமா சாமி வீடு முழுக்க தேடிட்டேன்னேன். அவர் கண்ணை மூடிட்டு ஒரு நிமிஷம் இருந்துட்டு சொன்னார். உன் மனைவியோட அரக்கு நிற பட்டுப்புடவைக்கு நடுவுல இருக்கு. போய்ப்பாரு” . உடனே வீட்டுக்கு ஓடிப் போய் பார்த்தா அந்த சனியனோட பீரோல மடிச்சு வச்சிருந்த அவளோட அரக்கு கலர் பட்டுப்புடவைக்குள்ள தான்  அந்த டாக்குமெண்ட் இருந்துச்சு”. அதை பத்திரமா என் பீரோல வெக்கச் சொல்லி அவ கிட்ட எப்பவோ குடுத்திருக்கேன். அவ ஏதோ யோசனைல மடிச்சுகிட்டிருந்த பட்டுப்புடவைக்குள்ளே வச்சிட்டா போல இருக்கு.... அப்புறமா ஓடிப்போய் அவர் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். அப்புறமா விசாரிச்சா அவருக்கு இதெல்லாம் சாதாரணம்னு தெரிஞ்சுது. முக்காலமும் பார்க்கற சக்தி இருக்கறவராம். காணாமல் போன ஆள்கள், தொலைஞ்சு போன பொருள்கள் எல்லாம் இருக்கற இடம் சொல்வாராம். வெளியே தெரியாத மர்மங்கள் எல்லாம் அவர் கண்ணுக்குத் தெரியுமாம். ஆனா மனசு வந்தா தான் வாயத் திறந்து எதாவது சொல்லுவாராம். மனசில்லாட்டி கோடி ரூபா தந்தாலும் வாயத் திறக்க மாட்டாராம்...

நடராஜன் தன் தந்தையின் உயில் பத்திரம் காணாமல் போய் படாதபாடு பட்டுத் தேடியதை மாணிக்கம் அறிவார். யாருமே வழக்கமாக யூகிக்க முடியாத இடத்தில் இருப்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் என்றால் அந்த மகான் சக்தி வாய்ந்தவர் தான்.... மாணிக்கம் தன் மாமனை அர்த்தமுள்ள பார்வை பார்த்தார்.

சங்கரமணி நடராஜனைக் கேட்டார். “நட்ராஜ். எல்லாமே தெரிஞ்ச ஆள்னா அது வில்லங்கமாச்சே. நம்ம மனசுல எத்தனையோ இருக்கும்.... அதெல்லாம் ஒரு ஆள் தெரிஞ்சுக்கறத ரசிக்க முடியலையே

நடராஜன் சங்கரமணியிடம் சொன்னார். “ஐயா நாம எதைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படறோமோ அதை மட்டும் தான் அவர் தெரிஞ்சுகிட்டுச் சொல்வார். மனசுல ஆயிரம் குப்பை வச்சிருப்போம். அத்தனையும் அவர் கிளற மாட்டார். அதுவும் அவர் ஒருத்தர் கிட்ட பேசறப்ப சம்பந்தமில்லாத ஆள்க யாரும் பக்கத்துல இருக்கக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிடுவார். தனியா ரகசியமா தான் எதையும் சொல்வார்....

சங்கரமணி சொன்னார். “எனக்கென்னவோ இன்னும் நம்பிக்கை வரலையே நட்ராஜ்...

“அப்படின்னா நீங்களே வந்து ஒரு தடவை அவரை நேரா பாருங்களேன்.... உங்களத்தவிர வேற யாருக்குமே தெரியாத ஏதாவது ஒரு விஷயம் கேட்டுப் பாருங்களேன்... நம்பிக்கை வந்துச்சுன்னா உங்களுக்கும் தெரியாத முக்கியமான விஷயம் இருந்தா கேட்டுத் தெரிஞ்சுக்கோங்களேன்.... என்ன நான் சொல்றது

மாணிக்கத்தையும் மணீஷையும் சங்கரமணி பார்த்தார். மூவருக்குள் பார்வையாலேயே கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

கடைசியில் சங்கரமணி கேட்டார். “அவர் எங்கே இருக்கார் நட்ராஜ்புதுடெல்லி அதிகாரி பயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பாவமன்னிப்புக் கூண்டில் அமர்ந்தான். அதன் அடுத்த பகுதியில் அமர்ந்திருந்த மனிதன் கறுப்பு நிற உடை அணிந்திருந்தான். அவன் தலையில் பெரிய கருப்பு நிறத் தொப்பி இருந்தது. அது அவன் முகத்தை மறைத்தது.  அவன் இளைஞனா, முதியவனா, கருப்பா, சிவப்பா, உடலமைப்பு எப்படி என்பது எதுவும் தெரியவில்லை.

“சொல்லுங்கள், புதிதாக என்ன தகவல்?என்று அந்த ஆள் கேட்டான். குரல் இயல்பானதாய் இல்லை. தொண்டையில் ஏதோ பிரச்னை போல் இருந்தது. அடித்தளக் குரலாய் இருந்தது. போனில் பேசும் போது ஆரம்பத்தில் ஹலோவும், கடைசியில் சரி என்றும் இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டுமே சொல்வதால் அந்த அடித்தளக் குரலின் வினோதம் தனக்கு தெரிய வரவில்லையோ என்று யோசித்தான் புதுடெல்லி மனிதன்.

பின் மெல்ல புனேயில் இருந்து டைரக்டர் சொன்னதைத் தெரிவித்தான்.  பாம்பு கடித்து இறந்தவன் சாவுக்கும், இந்த ஆராய்ச்சிக்கும் சம்பந்தம் இருக்கலாம்கிறதை நான் ரகசியப் போலீசுக்கோ, உளவுத் துறைக்கோ தெரிவிக்க முகாந்திரம் இருக்குன்னு அவர் நினைச்ச மாதிரி இருக்கு..... மேலிடத்துல பேசி முடிவு செஞ்சுக்கோங்கன்னு மெயிலும் அனுப்பி இருக்கார்.... நான் உங்க கருத்தைத் தெரிஞ்சுகிட்டு முடிவெடுக்கலாம்னு தான் போன் செஞ்சேன்....

“அந்த ஆள் சாவுல எங்களுக்கு சம்பந்தமில்லை.... ஆனாலும் போலீஸோ, உளவுத்துறையோ இதுல நுழையறத நாங்க விரும்பல....என்றது அந்த அடித்தளக்குரல்.

சரி நான் அவங்களுக்குத் தெரிவிக்கலைஎன்றான் புதுடெல்லி மனிதன்.


அடுத்த கணம் தன்னை ஏதோ ஒரு பெரும்சக்தி சூழ்வதை புதுடெல்லி மனிதன் உணர்ந்தான். பயத்தில் சிலையானவனை அந்தச் சக்தி ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. 


(தொடரும்)
என்.கணேசன்


6 comments:

 1. Moving excellently. Feel like seeing thriller movie.

  ReplyDelete
 2. I guess that mahan is that master...rite

  ReplyDelete
 3. சுஜாதாApril 13, 2017 at 7:00 PM

  செமயா போகுது. சங்கரமணி வில்லன் கேரக்டராக இருந்தாலும் சுவாரசியம். நாகலிங்கப்பூ, எருக்கம்பூ நினைத்து விட்டு போடா போக்கத்தவனே என்று விரட்டியது சூப்பர் எகத்தாளம்.

  ReplyDelete
 4. Lot of characters, some even without names... I am losing track...

  ReplyDelete
  Replies
  1. This technique is used in many English thrillers. Very often we have to refer the earlier pages to keep track. Since this novel is weekly updated we tend to forget easily and we need to go back to earlier chapters. When we read this as full book the confusion will not be there. Any how, this novel is unique in many ways.

   Delete
  2. I agree... I appreciate the overall plot. Number of characters without names is causing the confusion. Though I liked Amanushyan novel very much, I saw the same pattern there also. Just my opinion...

   Delete