சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 13, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 120

”உன் நண்பன் விஷம் கலந்த உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். அது அவனை உடனே கொன்று விடாது. சிறிது சிறிதாகத் தான் கொல்லும். அவனைக் கொல்ல நாளை வரை நேரம் எடுத்துக் கொள்ளும்.” என்று மாரா மைத்ரேயனிடம் தெரிவித்தான். மைத்ரேயன் அமைதியை முறியடிப்பதன் அவசியத்தை அவன் மறுபடியும் உணர்ந்தான்.

மைத்ரேயன் இந்த முறை கண்களைத் திறக்கவும் இல்லை.

மாரா தொடர்ந்து சொன்னான். ”ஏன் அவனைத் தடுக்க மாட்டேன்கிறாய்?”

“இதைத் தடுத்தால் வேறு விதத்தில் அவனைக் கொல்லப் பார்ப்பாய். அவன் இறக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை யாரும் தடுக்க முடியாது....” கண்களைத் திறக்காமலேயே மைத்ரேயன் சொன்னான்.

“நண்பன் என்றால் உன்னைப் போல் இருக்க வேண்டும். நண்பனையே காப்பாற்ற முடியாதவன் உலகைக் காப்பாற்றுகிறானாம். என்ன ஒரு வேடிக்கை” மாரா ஏளனமாகச் சொன்னான்.

மைத்ரேயன் மௌனமாக இருந்தான். மாரா விடுவதாய் இல்லை. “உன் நண்பன் இப்படிச் சாவதில் உனக்கு வருத்தமே இல்லையா?”

“அவன் சட்டை மாற்றும் போது வருத்தப்படும் அவசியத்தை நான் உணராதது போலவே உடலை மாற்றும் போதும் உணரவில்லை. அவனைப் போன்ற தூய்மையானவன் மீண்டும் மிக நல்ல பிறப்பையே அடைவான்.”

மாராவுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. ’அடப்பாவி நீ என்னையே மிஞ்சி விடுவாய் போலிருக்கிறதே’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட மாரா அன்று மிகப்பெரிய பாடத்தை மைத்ரேயனிடமிருந்து கற்றான். இவனை யாரும் பேசி அமைதி இழக்கச் செய்ய முடியாது. அதற்கு முயற்சி செய்பவன் தான் மன அமைதி இழந்து தவிக்க வேண்டி வரும்.

இனி ஒரு வார்த்தை இவனிடம் பேசப்போவதில்லை என்று மனதில் திடமாய் மாரா முடிவெடுத்தான். இனி மனதை அமைதியாகவும், அறிவைக் கூர்மையாகவும் வைத்திருந்தால் தான் திட்டங்கள் நிறைவேறும். மாரா திடமாக முடிவெடுத்தபின் அவன் மனம் எந்தக் குறுக்கீட்டையும் ஏற்படுத்துவதில்லை. அவன் அனுமதித்ததுமில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்த கௌதம் அரைமயக்கத்தில் அப்படியே சாய்ந்ததை உணர்ச்சியே இல்லாமல் கவனித்து விட்டு மாரா கண்களை மூடினான்.

இந்த சில நாட்களில் மாரா பெற்று விட்டிருந்த சக்திகளின் காரணமாக அவன் உணர்வுகள் மிகவும் கூர்மையாகி விட்டிருந்தன. எந்த நவீனக் கருவிகளாலும் கூடக் கண்டுபிடிக்க முடியாத அதிநுட்பமான அலைகளையும் அவனால் ஆல்ஃபா, தீட்டா அலைகளில் சஞ்சரிக்கையில் கண்டுபிடிக்க முடியும். அவன் கண்களை மூடி இரண்டு நிமிடங்களில் ஆல்ஃபா அலைகளில் சஞ்சரிக்க ஆரம்பித்தான்....


சானும் அக்‌ஷயும் சைத்தான் மலை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். மிக விரைவாகக் கொண்டு போய் சேர்த்தால் இரண்டு மடங்கு பணம் தருவதாக அவர்கள் சொல்லி இருந்ததால் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த ஜீப் அதிகபட்ச வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. ஆசான் தலாய் லாமாவுக்கும், திபெத்தின் அனைத்து முக்கிய மடாலயங்களுக்கும் போன் செய்து தகவல் தெரிவித்து விட்டிருந்ததால் அவர்கள் ஆளுமைக்கு உட்பட்ட எல்லா மடாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை ஆரம்பமாகி இருந்தது.

லீ க்யாங்கின் திடீர்  தலைகீழ் மாற்றத்தை ஆசானால் இன்னமும் நம்ப முடியவில்லை. மைத்ரேயர் பிறந்த காலம் முதல் சிலமணி நேரங்கள் முன்பு வரை பரம எதிரியாக இருந்து மைத்ரேயரை அழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வந்த லீ க்யாங் எப்படி மாறினான் என்று அவருக்கு விளங்கவில்லை. ஆனால் எச்சரிக்கை விடுத்து காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவு மாறியதற்குக் காரணம் மைத்ரேயரை அவன் சந்தித்தது தான் என்று முடிவுக்கு வந்தார்.

தற்போதைய நிலவரம் குறித்து மௌனலாமாவிடம் கேட்கச் சொல்லி அவர் மௌனலாமா இருக்கும் மடாலயத்தைக் கேட்டிருந்தார். சிறிது நேரத்திலேயே பதில் வந்தது. ’நாளை இரவுக்குள் மைத்ரேயரின் உயிர் பிரியாமல் பார்த்துக் கொண்டால் பின் எந்தக் கவலையும் இல்லை’ என்று மௌனலாமா எழுதிக்காட்டினாராம். அதிர்ந்து போன ஆசான் அதையும் உடனே தலாய் லாமாவுக்குத் தெரிவிக்க, தலாய் லாமா உடனே உணவு நீரின்றி முழு நேரப் பிராத்தனையில் இறங்கி விட்டார்.

ஆசானுக்கு அதிகபட்ச வேகத்துடன் ஜீப் போய்க் கொண்டிருந்தாலும் அந்த வேகமும் போதவில்லை. ‘இந்த வேகத்தில் போனால் தாமதமாகி விடாதா?’ என்று அக்‌ஷயிடம் குழந்தைத்தனமாய் கேட்டார். அக்‌ஷய் புன்னகையோடு சொன்னான். “அங்கே ஆபத்தில் இருப்பது மைத்ரேயன் மட்டுமல்ல ஆசானே, என் மகனும் தான். ஆனால் இதை விட வேகமாகப் போகச் சொன்னால் நாம் சைத்தான் மலைக்குப் போவதற்குப் பதிலாக நேராக சைத்தானிடமே போய்ச் சேர வேண்டி இருக்கும்”

ஆசான் அதைக்கேட்டு சிரித்தார். பின் மெல்லக் கேட்டார். “உங்களால் எப்படி இந்த நேரத்திலும் அமைதியை அதிகமாய் இழக்காமல் இருக்க முடிகிறது அன்பரே!”

அக்‌ஷய் சொன்னான். “ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும் ஆசானே. அந்த விதி எழுதும் கை நம் கதையை இப்போது எழுதிக் கொண்டிருக்கவில்லை. எப்போதோ எழுதி முடித்து விட்டது. அது நல்லதோ, கெட்டதோ நாம் இப்போது பதற்றப்படுவதால் மாறிவிடப்போவதில்லை”மாரா மைத்ரேயனின் அலைவரிசைகளை ஆராய்ந்தான். மைத்ரேயன் டெல்டா அலைகளில் இருந்தான். ஆல்ஃபா அலைகளை விட தீட்டா அலைகள் நுட்பமானவை என்றால் டெல்டா அலைகள் அதைக்காட்டிலும் அதிநுட்பமானவை. பெரும்பாலும் யோகிகள் சித்தர்கள் மட்டுமே சஞ்சரிக்கும் அலைகள் அவை. அந்த டெல்டா அலைகளுக்குப் போவது மாராவால் முடியாத காரியம் இல்லை. ஆனால் டெல்டா அலைகளுக்குப் போகும் போது மனம் தன் சொந்த அடையாளத்தைச் சுத்தமாக மறந்து விடுகிறது என்பது மாராவின் பழைய அனுபவம். சொந்த அடையாளத்தை மறந்தால் அவன் மாரா அல்ல. அவன் மாராவாக இல்லாமல் போனால் மைத்ரேயனைக் கொல்வது சாத்தியமல்ல. மேலும் அது செயலற்ற நிலை. எனவே அவன் டெல்டா அலைகளில் சிக்குவதைத் தவிர்த்தான். தீட்டா அலைகளில் இருந்து கொண்டே மைத்ரேயனை ஆராய்ந்தான். ஏதோ ஒன்று சரியில்லை என்று அவன் உள்மனம் சொன்னது.

அக்‌ஷய் மைத்ரேயனை தன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றியவன். அக்‌ஷயின் மகன் கௌதமோ மைத்ரேயனின் நண்பன். அவனோடு சேர்ந்து விளையாட ஆசைப்பட்டது தான் தன் கடைசி ஆசை என்று மைத்ரேயனே ஒப்புக் கொண்டிருக்கிறான். எல்லாரிடத்திலும் பட்டும் படாமலும் இருந்த மைத்ரேயன் சிறிதாவது நெருக்கத்தைக் காண்பித்தான் என்றால் அது கௌதமிடம் மட்டும் தான். மைத்ரேயனின் தாய், சகோதரர்கள் எல்லாம் திபெத்திலேயே இருந்தாலும் கூட அவர்களைப் பயன்படுத்த அறிவுறுத்தாமல் கௌதமைப் பயன்படுத்திக் கொள்ள மாராவின் தெய்வம் அறிவுறுத்தியது அதை வைத்து தான். அதனால் தான் கௌதமைக் கொல்ல முயற்சித்து, அதை மைத்ரேயன் என்ன சக்தியால் தடுக்கிறான் என்று கண்டுபிடித்து, அந்த சக்திக்கு எதிர்சக்திகளைத் தேர்ந்தெடுத்து அவனை அழிக்கச் சொன்னது. அப்படிப்பட்ட நண்பனைக் காப்பாற்றுவதற்கு சின்ன முயற்சி கூட எடுக்காமல் உடலை மாற்றுவது சட்டையை மாற்றுவது போலத் தான் என்று தத்துவம் பேசியது மாராவுக்கு யதார்த்தமாய் தெரியவில்லை.

வேகமாக கௌதமைக் கொல்லாமல் நிதானமாகக் கொல்ல முற்பட்டதே மைத்ரேயன் தன் சக்தியைப் பயன்படுத்துவதும் அதே நிதானத்தில் இருக்கும், அந்த சக்தியை ஆராய்வதும் தனக்கு எளிதாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான். ஆனால் நண்பனைப் பற்றிய கவலையோ, துக்கமோ சின்ன அளவில் இருந்தால் கூட மைத்ரேயனால் டெல்டா அலைகளுக்குப் போக முடியாது என்பதால் எந்த சக்தியும் பயன்படுத்தும் எண்ணமே இல்லாமல் இருப்பது தெரிந்தது. தன் அறிவுக்கு எட்டாத ஏதோ ஒரு சூழ்ச்சி இதில் இருக்கிறது என்று மாரா நினைக்க ஆரம்பித்தான்.

தன் நுட்பமான சக்திகளை ஒன்று திரட்டி மனதைக்குவித்து மேலும் ஆழமாக மைத்ரேயனுக்குள்ளே என்னென்ன இருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தான். அமைதி, அன்பு, கருணை போன்ற அலைகளை ஒதுக்கி விட்டு சக்தி, அறிவு வடிவில் இருப்பவைகளை ஆராய்ந்தான். அடுத்தவர் எண்ணங்களைப் படிக்க முடிந்த சக்தி, அடுத்தவர் மூளைகளில் பதிந்திருந்த தகவல்களை அறியவும் பயன்படுத்தவும் முடிந்த சக்தி இரண்டும் தென்பட்டன. இரண்டாவது சக்தியை வைத்து தான் கௌதமிடமிருந்தோ, அக்‌ஷயிடமிருந்தோ தமிழறிவை அப்படியே எடுத்துக் கொண்டிருப்பான். இந்த சக்தி தனக்கு அபாயமானது என்பதை மாரா உணர்ந்தான். இதை உபயோகித்து மாராவிடம் உள்ள எந்த சக்தியையும் கூட அவன் நகல் எடுத்துக்கொண்டு விட முடியும். ஆனால் அந்த சிரமத்தைக் கூட மைத்ரேயன் எடுக்கவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அலட்சியமா, அகங்காரமா? மேலும் மாரா ஆழமாய் போனான். வெறும் சூனியம் மட்டும் தெரிந்தது. எண்ணங்களின் பதிவுகள், நினைவுகள் எதுவுமே இல்லாத சூனியம்..... இனியும் எதாவது சக்தி இருக்கிறது என்றால் அது அந்த சூனியத்தையும் தாண்டி ஒளித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.... அதையும் ஆராய்ந்தான். அமைதியாக இருக்கிற நீரிலே எட்டிப்பார்ப்பவர் பிம்பம் தெரிவது போல கடைசியில் அவனே தெரிந்தான்.

இனி பார்க்க ஒன்றுமில்லை. மாரா மெல்ல பின் வாங்கினான். ஒன்றுமே இல்லையே. இப்போதே கூட மைத்ரேயனைக் கொன்று விடலாம் தான். ஆனாலும் அவன் அவசரப்பட விரும்பவில்லை. நாளை மைத்ரேயன் மிகப் பலவீனமாக இருக்கும் நாள். நாளை அலட்டிக் கொள்ளாமல் அவனை அழித்து விடலாம்.

ஆனாலும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது என்று தங்கள் இருவருடைய சக்தி நிலைகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் அளந்து பார்த்தான். அவனது இயக்கத்தினர் அவரவர் இடங்களில் இருந்து தங்கள் சக்திகளைக் குவித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அவை எல்லாம் பெரும் பலமாக அவன் உணர்ந்தான். அவன் தனி சக்திகளோ உச்ச நிலையில் இருந்தன. அவன் வாழ்நாளில் இது வரை இந்த உச்சத்தை அடைந்ததில்லை. இது மைத்ரேயனுக்காகவே அவன் அடைந்த உச்சம்.....

மைத்ரேயனைச் சுற்றியும் நிறைய பிரார்த்தனை அலைகள் தெரிந்தன. பிக்குகள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை. மைத்ரேயனின் தனிப்பட்ட சக்தி மங்கலாகவே தெரிந்தது. அவன் சம்யே மடாலயத்திலிருந்து பார்த்ததை விட பலவீனமாக இருந்தது. அவன் மலையில் இருக்கிறான் என்றால் மைத்ரேயன் பாதாளத்தில் இருக்கிறான்.....

மாரா மனதில் இப்போது அதீத உற்சாகத்தை உணர்ந்தான். கண்களைத் திறந்து பார்த்தான். கௌதம் இப்போது சுயநினைவில் இல்லை. மைத்ரேயனோ செயலற்ற சூனியவெளியில் திளைத்திருந்தான். இப்போதைக்கு மைத்ரேயனுக்கு அது ஒருவிதத்தில் உதவியே என்று நினைத்தான். சக்தி விரயம் ஆகாது. இருக்கின்ற உடல் சக்தியும் விரயம் ஆகி நீங்கி விட்டால் அவனிடம் மீதி எதுவும் மிஞ்சி இருக்காது..... மைத்ரேயன் அங்கேயே படுத்துக் கொண்டான். உறங்கியும் போனான்.

ஆனால் மாரா உறங்கவில்லை. இளைப்பாறிய நிலையில் இருந்தாலும் எந்த நேரமும் மின்னல் வேகத்தில் இயங்கும் தயார் நிலையில் இருந்தான்.  அப்போது தான் மைத்ரேயனின் வலது பாத அடிப்பகுதியில் தர்மசக்கரத்தைப் பார்த்தான். அவன் பார்க்கையில் அந்த தர்மசக்கரம் மங்கலாக ஒளிர்ந்து ஒரு முறை சுற்றி நின்றது. இதுவே கடைசி சுற்றாக இருக்கும் என்று மாரா நினைத்தான்....

காலம் நகர்ந்தது. மாரா பொறுமையாகக் காத்திருந்த அடுத்த நாள் பிறந்தது. அப்போது மாரா புதியதொரு சக்தியின் வரவை உணர்ந்தான். நாகசக்தி. அமானுஷ்யன் சைத்தான் மலையை நெருங்கிக் கொண்டிருக்கிறான்....

மாரா முகத்தில் புன்னகை அரும்பியது. மகன் சவத்தைக் காண வந்திருக்கிறான்.


(தொடரும்)

என்.கணேசன்

(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

8 comments:

  1. //அமைதியாக இருக்கிற நீரிலே எட்டிப் பார்ப்பவர் பிம்பம் தெரிவது போல கடைசியில் அவனே தெரிந்தான்.// வரிகள் மிக நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. Deepavali Double Bonas unda Ganasan sir

    ReplyDelete
  3. Please don't kill gautam. story is thrilling. After so many years, I have read a long story with such intent that I was looking forward for Thursday, it is amazing. The exchanges between Maitreyan and Mara are terrific. Kudos to you.

    ReplyDelete