சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 29, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 118

லீ க்யாங் சொன்னதை ஆசான் அக்‌ஷயிடம் தெரிவித்தார். கேட்ட பின் அக்‌ஷய் அப்படியே சிலை போல நின்றான். சொன்னது சரியாகக் கேட்கவில்லையா, இல்லை கேட்டு அதிர்ச்சியில் அப்படி நிற்கிறானா என்று திகைப்புடன் ஆசான் அவனைப் பார்த்தார். உடனே முதல் சந்திப்பில் புத்தகயாவில் அவன் இப்படி ஒரு நிலைக்குப் போனது அவருக்கு நினைவுக்கு வந்தது. ’வாழ்வா சாவா என்பது போன்ற சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்ள நேரிடும் போது நிறைய நேரம் யோசிப்பதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. உடனடியாகத் தீர்மானம் எடுத்து அதைச் செயல்படுத்தினால் தான் நாம் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும். அந்த மாதிரி சமயங்களில் என் அந்தராத்மாவின் குரலைக் கேட்க பயன்படுத்தும் வித்தை இது’ என்று சொல்லி இருந்தான். இப்போது இரண்டு உயிர்களின் வாழ்வா சாவா என்கிற நிலை. அதில் ஒரு உயிர் அவன் மகனுடையது.... ஆசான் கலக்கத்துடன் அவனைப் பார்த்தார்.

சிலையாய் நின்றிருந்த அக்‌ஷயின் அந்தராத்மாவில் ஒரு குரல் ஒலித்தது. ’இந்த உலகில் எதுவும் காரணமில்லாமல் நடப்பதில்லை’. அடுத்த கணம் சைத்தான் மலையில் மைத்ரேயன் பார்வை வழியில் கண்ட ரகசியக் குகை தெரிந்தது. ஒரு காலத்தில் தியானம் செய்ய வந்த இடத்தில் ஆடு சுரங்கப்பாதையில் தவறி விழுந்து வழுக்கிச் சென்று அடுத்த மலையில் ஏறியதைப் பார்த்தது மைத்ரேயனோடு நேபாள எல்லைக்குள் நுழைய உதவியது. அன்று மைத்ரேயன் பார்வையோடு பார்த்த ரகசியக்குகை இன்றைய சூழ்நிலைக்கு உதவுவதற்காக இருக்குமோ? மைத்ரேயனைச் சிறை வைக்க மாராவுக்கு அந்த ரகசியக்குகையை விடச் சிறந்த இடம் திபெத்தில் கிடைக்க முடியாது....

அக்‌ஷய் ஆசானிடம் சொன்ன போது அவர் கவலைப்பட்டார். “சைத்தான் மலை இங்கிருந்து வெகு தொலைவில் அல்லவா இருக்கிறது!...”


மாரா கண்களைத் திறக்காததால் கௌதம் மெல்ல அந்தக் குகையை ஆராய ஆரம்பித்தான். சில மேடான பகுதிகளில் ஏறி தாவிக் கீழே குதித்தான். இப்போதைக்கு அதுவே ஒரு விளையாட்டாகத் தான் அவனுக்குத் தோன்றியது. டோர்ஜேவையும் தன்னுடன் வர சைகை செய்தான். டோர்ஜேக்கு தற்போதையத் தங்கள் நிலையை யோசித்துப் பைத்தியம் பிடிப்பது போலவே ஆகி இருந்தது. அதனால் பயத்தில் இருந்து மனத்தைத் திருப்ப அவனும் கௌதமுடன் சேர்ந்து கொண்டான்...

மாராவுக்கு மைத்ரேயன் எந்த பாதிப்புமே இல்லாமல் தியானத்தில் ஆழ்ந்து போயிருந்தது ஆத்திரத்தை எழுப்பியது. மைத்ரேயன் ஏதோ பெரிய அஸ்திரமோ சக்தியோ வைத்திருக்கிறான் என்ற தகவல் மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால் இப்போதே அவன் மைத்ரேயனைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கலாம்..... அந்த அஸ்திரத்தை அவன் அத்தனை ரகசியமாய் வைத்திருக்க முடிந்தது ஆச்சரியமாகத் தான் இருந்தது. நன்றாக யோசித்துப் பார்த்தால் எல்லாமே திட்டமிட்டு தான் அவன் செயல்பட்டிருக்கிறான். அவன் சம்யே மடாலயம் போய் அவர்கள் முன்பே பலப்படுத்தி இருந்த சக்தி மையத்தைக் கலைத்து பலவீனப்படுத்தாமல் இருந்திருந்தால், திபெத்திலிருந்து அவன் போகும் முன்பே அவனை மாராவால் கொன்றிருக்க முடியும். அப்படி கலைத்ததால் தான் அவர்களது மகாசக்தி அந்த சக்தி மையத்தை நிலை நிறுத்தாமல் அவனை நெருங்க வேண்டாம் என்று அறிவுரை சொன்னது. அவன் திபெத்திலிருந்து இந்தியா போனதும் முதல் வேலையாக புத்த கயாவுக்குச் சென்று ஏதோ அபூர்வசக்தி பெற்று விட்டான். போன ஜென்மத்தில் அதை அங்கு புதைத்தோ மறைத்தோ வைத்திருப்பான் போல இருக்கிறது. அதை எடுப்பதற்காகவே இந்தியா போனது போலவும், அது முடிந்ததும் திரும்பி வந்தது போலவும் தானிருக்கிறது. அதனால் தான் அவன் கடத்தப்படும் போது கூட அமைதியாக வந்திருக்கிறான். அந்த அஸ்திரத்தைப் பெற்று விட்டபடியால் தான் சம்யேவில் மாரா தன் சக்தி மையத்தை உருவாக்கி அலைகளால் அவனுக்கு அறிவித்த போதும் அலட்டாமல் இருந்திருக்கிறான். யோசித்துப் பார்த்தால் எல்லாமே கோர்வையாக கச்சிதமாகப் புரிகிறது. ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டு கவனமாகவே வைத்திருக்கிறான் இந்த அழுத்தக்காரன்.

அவன் அமைதியை முதலில் குலைக்க வேண்டும். அப்படியானால் தான் நிதானம் இழப்பான். அவன் மனதில் மறைத்திருக்கும் ரகசியங்கள் மெள்ள வெளிவரும். அமைதியாக தியானம் செய்து மனதைப் பலப்படுத்தி வைத்துக் கொண்டே இருக்க அவனை விடக்கூடாது....

மாரா கணகளைத் திறந்து கேட்டான். ”நான் யார் தெரியுமா மைத்ரேயா?”

மைத்ரேயனும் கண்களைத் திறந்தான். “அதை நீ தெரிந்து கொண்டாகி விட்டதா?”

அவன் கேட்ட தொனியில் கிண்டல் இருக்கவில்லை என்றாலும் மாரா கிண்டலை உணர்ந்தான். ஆனாலும் த்த்துவ விசாரணைக்குள் நுழைந்து விடாமல் புன்னகையுடன் சொன்னான். “நான் என்னை எப்போதும் தெரிந்தே வைத்திருக்கிறேன் மைத்ரேயா. நான் இன்று உலகப்பணக்காரர்களில் முதல் பத்து பேர்களில் ஒருவன். மீதி ஒன்பது பேரில் இரண்டு பேர் என்னுடைய ஆட்கள். பல உலக நாடுகளில் என் ஆதிக்கம் இருக்கிறது. நீங்கள் கண்டு நடுங்கும் சீனாவே என்னைப் பகைத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் பிடித்து வந்த உன்னை லீ க்யாங் எனக்கு விட்டுக் கொடுத்திருக்கிறான். உலகம் முழுவதும் எத்தனையோ தொலைக்காட்சிகள், எத்தனையோ பத்திரிக்கைகள், எத்தனையோ நிறுவனங்கள், எத்தனையோ லட்சம் ஊழியர்கள் என் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். உலக மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்று தீர்மானிப்பவன் நான்... நான் தீர்மானிக்கும்படியே செய்திகள் திரிக்கப்பட்டு வெளியாகின்றன. அதை வைத்தே பொதுஜன அபிப்பிராயம் உருவாகிறது...”

கவனமாகக் கேட்டு விட்டு மைத்ரேயன் தலையசைத்தான். ஆச்சரியம் இல்லை. பிரமிப்பு இல்லை. அவன் ஏதோ நான்கு எருமைகள், இரண்டு ஆடுகள் வைத்திருப்பதாகச் சொன்னது போல இருந்தது அவன் எதிர்வினை.

பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்ட மாரா சொன்னான். “என் தனிப்பட்ட சக்திகளின் பரிச்சயம் உனக்குக் கண்டிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் சம்யே மடாலயத்தில் இருந்து கொண்டு நீ இருக்குமிடத்தையும் உன்னையும் பார்த்தேன். நீயும் என்னைக் கவனித்தாய்”

மைத்ரேயன் எதுவுமே சொல்லாமல் அவனையே பார்த்தான்.

மாரா சொன்னான். “அன்றைய சக்திகளை விடக் கூடுதலாக பல சக்திகளை நான் இந்த சில நாட்களில் பெற்றிருக்கிறேன் மைத்ரேயா? ஏன் தெரியுமா?

“சொல்”

”உன்னை அழிக்கத்தான்”

அதற்கும் அமைதி மாறாமல் மைத்ரேயன் சரியென்று தலையசைத்ததை மாராவால் தாங்க முடியவில்லை. என்ன சொன்னால் இந்த அழுத்தக்காரன் அதிர்வான் என்று யோசித்து விட்டு மாரா கேட்டான். “உன் கடைசி ஆசை என்ன மைத்ரேயா?”

மைத்ரேயன் புன்னகைத்தபடி கௌதமைக் கண்களால் காட்டி சொன்னான். “இவனுடன் விளையாட ஆசைப்பட்டது தான்”

தான் கேட்ட கேள்விக்கு புத்தனின் அவதாரமாக ‘ஆசையே எனக்கில்லை’ என்கிற பதிலையோ, இல்லை சாதாரண ஒருவனாக ஏதாவது வருங்கால ஆசையையோ தான் மைத்ரேயனிடமிருந்து மாரா எதிர்பார்த்திருந்தான். கடைசி ஆசையாக கடந்த கால ஆசை ஒன்றைச் சொல்லி விட முடிந்த முதல் மனிதன் இவனாகத் தான் இருப்பான் என்று தோன்றியது. சாகும் நாளில் கூட கடைசி ஆசை என்ன என்று கேட்டால் ஒரு ஆசையைச் சொல்லி, அது முடிந்து விட்டால் உடனே இன்னொரு ஆசை எழுந்து அத்துடன் சாகும் பிறவி அல்லவா மனிதன்!

”பாவம் அவன் நாளைக்குள் சாகப்போகிறான்” என்று மாரா கௌதமைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

அவன் திபெத்திய மொழியில் பேசியதால் விளையாடிக் கொண்டிருந்த கௌதமுக்குப் புரியவில்லை. ஆனால் விளையாட்டை நிறுத்தி விட்டு அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த டோர்ஜே அதிர்ச்சி அடைந்தான்.

மைத்ரேயன் அமைதி மாறாமல் மாராவையே பார்த்தானே ஒழிய எதுவும் சொல்லவில்லை. அவன் எதாவது சொல்வான் என்று எதிர்பார்த்து சிறிது தாமதித்து பின் மாரா தானாகவே சொன்னான். “நீ நினைத்தால் அவனைக் காப்பாற்ற முடியும்”

“எப்படி?”

“நீயாக தற்கொலை செய்து கொண்டால் அவனை நான் கொல்லாமல் விட்டு விடுவேன்”

(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Monday, September 26, 2016

உலகப் பழமொழிகள் – 16


151. மனிதனின் கடமை பிரபஞ்சத்தின் பிரச்னையைத் தீர்த்து வைப்பதல்ல. தான் செய்ய வேண்டியதைச் சரியாய் செய்வதே.

152. அற்ப மனிதர்களுக்கு அற்ப விஷயங்கள் பெரிதானவை.

153. ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையில் தான் பெரும்பாலான சாம்ராஜ்ஜியங்கள் மாய்ந்தொழிந்திருக்கின்றன.

154. சில சமயங்களில் இழப்பதே பெரிய ஆதாயம்.

155. உன்னைத் தாழ்த்திப் பேசுகையில் அடக்கமாய் இருப்பதை விட, புகழ்ந்து பேசுகையில் அடக்கமாய் இருப்பதே வெற்றி.

156. தீயவனை விட புத்தி கெட்டவன் ஆபத்தானவன். தீயவன் தன் பகைவனைத் தான் தாக்குவான். புத்தி கெட்டவன் நண்பர், பகைவர் இருவரையும் தாக்கக்கூடியவன்.

157. பனிக்கட்டியில் சிலைகள் செய்து அவை கரைந்து போவதைக் கண்டு கண்ணீர் விடுகிறோம்.

158. ஆலோசனைகளும், கண்டனங்களும் மிகவும் மென்மையாய் இருக்க வேண்டும். வருத்தம் அளிக்கும் உண்மைகளையும் இதமான சொற்களில் கூற வேண்டும். பலன் அளிக்க வேண்டிய அளவுக்கு மேல் எதுவும் கூறலாகாது.

159. ஆத்மார்த்தமாய் உபதேசம் செய்ய பேரறிவு தேவையில்லை. உயிர்த்துடிப்புள்ள ஒரு மனம் போதும்.

160. சம்பாஷணை உலக அறிவை விருத்தி செய்யும். ஆனால் மௌனம் பேரறிவின் பள்ளிக்கூடம்.


தொகுப்பு: என்.கணேசன்

Thursday, September 22, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 117

ன்றிரவு லீ க்யாங்குக்கு உளவுத்துறை தலைவர் போன் செய்தார். “உன் திட்டம் வரும் வியாழக்கிழமை நிறைவேறப் போகிறது லீ க்யாங். அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். டோர்ஜேயை மைத்ரேயனாக அன்று மாரா அரங்கேற்றம் செய்யப் போகிறான். பல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் அவன் கைவசம் உள்ளன. புத்தமத அறிவுஜீவிகளும் கூட அவன் பக்கம் இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து அவனை மைத்ரேயனாக ஆக்கப் போகிறார்கள். அது உன் திட்டம், டோர்ஜே நீ தேர்ந்தெடுத்தவன் என்பதால் நீயே வெற்றி பெற்றதாக உணர்கிறேன்....”

“சரி” என்று மட்டும் லீ க்யாங் சொன்னான்.

மெல்ல தலைவர் சொன்னார். “இது விஷயத்தில் இனி உன் குறுக்கீடு இருக்காதல்லவா என்று அவன் பொதுச்செயலாளரிடம் கேட்டிருக்கிறான். இருக்காது என்று அவரும் வாக்களித்திருக்கிறார். நானும் அவரிடம் உறுதி அளித்திருக்கிறேன்.”

“கவலைப்படாதீர்கள். வாங் சாவொவையும் பீஜிங் வரச்சொல்லி விட்டேன். இனி இந்த விஷயத்தில் என் குறுக்கீடு இருக்காது. எனக்கு என் தேசத்தை விட எதுவுமே முக்கியமல்ல!” சொன்ன லீ க்யாங் பேச்சை வளர்த்தாமல் இணைப்பைத் துண்டித்தான்.

தலைவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ’இப்படி ஒருவனைப் பெற என் தேசம் எத்தனை புண்ணியம் செய்திருக்கிறது!’

லீ க்யாங் அன்றிரவு உறங்கவில்லை. அன்று காலை அவனும் உளவுத்துறையின் முந்தைய தலைவரும் நிறைய மனம் விட்டு பேசியிருந்தார்கள். அவர் நிறைய தத்துவங்கள் பேசினார். காயப்பட்ட மனதுக்கு அவை இதமாக இருந்தன. அவர் மைத்ரேயன் மேல் ஆழமான நம்பிக்கை வைத்திருந்தார். சிறிதும் பயப்படாமல் அவனைப் பார்த்துப் பேசிய அந்தச் சிறுவனைப் பற்றி நிறைய நேரம் லீ க்யாங் நினைத்துக் கொண்டிருந்தான்.....



சைத்தான் மலையில் ரகசிய குகைக்கோயிலின் உள்ளே மைத்ரேயனுடன் நுழைந்த போது மாரா ஒரு சின்னத் திருப்தியை அடைந்தான். அவன் தெய்வத்திடம் நேற்றிரவு தந்த வாக்கின் முதல்பகுதி நிறைவேறி விட்டது. மைத்ரேயனை இங்கு கொண்டு வந்து விட்டான். மைத்ரேயன் முகத்தை வெற்றிக்களிப்புடன் மாரா பார்த்த போது மைத்ரேயனிடம் சலனமேயில்லை. அவன் அந்தக் குகையை நின்ற இடத்திலிருந்தே நோட்டமிட்டான். வரும் வழியிலும் சத்தமோ, சலசலப்போ இல்லாமல் அவன் அமைதியாக வந்தது மாராவை மனதிற்குள் மெச்ச வைத்தது. மாராவின் கண்ணசைவில் துப்பாக்கி வீரர்கள் குகையிலிருந்து வெளியே போய் விட்டார்கள். கௌதமும், டோர்ஜேவும் இன்னும் மயக்க நிலையில் தான் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

மாரா ஒன்றுமே பேசாமல் அங்கே வஜ்ராசனத்தில் அமர்ந்து கண்களை மூடினான். கண்கள் மூடினாலும் அந்த குகைக்கோயிலுக்குள் நடப்பது அவன் மனத்திரையில் தெரிந்து கொண்டே இருந்தது. மைத்ரேயனும் ஒரு மூலையில் பத்மாசனத்தில் அமர்ந்து தியானத்தில் மூழ்க ஆரம்பித்தான். ஒரே நிமிடத்தில் அவன் தியான நிலையை எட்டி விட்டது தெரிந்தது.

கௌதம் தான் முதலில் விழித்தவன். மெல்ல எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கிருந்த தீபங்களின் வெளிச்சத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்த மைத்ரேயன், மாராவையும், பக்கத்தில் படுத்திருந்த டோர்ஜேவையும் பார்த்து தாங்கள் மறுபடி கடத்தப்பட்டு இருப்பதைப் புரிந்து கொண்டான்.

டோர்ஜேயும் மெல்ல கண்விழித்தான். அவன் பயந்து போனான். பக்கத்தில் இருந்த கௌதமிடம் “என்ன ஆனது? நாம் எங்கிருக்கிறோம்” என்று திபெத்திய மொழியில் சைகையோடு கேட்டான். சைகையை வைத்துக் கேள்வியைப் புரிந்து கொண்ட கௌதம் “கடத்திக் கொண்டு வந்து விட்டார்கள்....” என்று தமிழில் சைகையோடு சொல்லிப் புரிய வைத்தான்.

டோர்ஜே அழ ஆரம்பித்தான். கௌதம் சொன்னான். “அழாதே. எங்கப்பா வந்து நம்மைக் காப்பாற்றி விடுவார்” என்றான்.

டோர்ஜேக்கு அவன் அழாதே என்று சொன்னது புரிந்தது. மீதி புரியவில்லை. அவன் தொடர்ந்து அழ ஆரம்பித்தான். கௌதமுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எழுந்து போய் மைத்ரேயனைத் தட்டினான். அவன் கண்விழித்த போது “அவனை அழ வேண்டாம் என்று சொல். என் அப்பா வந்து நம்மை எல்லாம் காப்பாற்றி விடுவார்” என்று சொல்” என்றான்.

மைத்ரேயன் முகத்தில் புன்னகை பூத்தது. கௌதம் சொன்னதை டோர்ஜேக்கு மொழி பெயர்த்துச் சொன்னான்.

டோர்ஜே திகைப்புடன் கேட்டான். “இவன் அப்பா எப்படி வருவார்?”

மைத்ரேயன் இதையும் மொழிபெயர்த்தான். கௌதம் சொன்னான். “எப்படியாவது வருவார். என் அண்ணன் கூடச் சின்ன வயதில் கடத்தப்பட்டானாம். அப்பா போய் காப்பாற்றி இருக்கிறார். என் அப்பாவால் முடியாததே ஒன்றுமில்லை என்று என் அண்ணனே சொல்லி இருக்கிறான்”

மைத்ரேயன் அதையும் மொழிபெயர்த்த போது டோர்ஜே திகைப்புடன் பார்த்தான். அவனுக்கு நம்பிக்கை வராவிட்டாலும் அழுகை நின்றது.

கௌதம் மாராவைப் பார்த்தபடி சொன்னான். “எனக்குத் தெரிந்து கடத்தல்காரர்கள் தியானம் செய்ய மாட்டார்கள். இந்த ஆள் செய்கிறான். ஒரு வேளை கடத்தியது இவனில்லையோ, இவனையும் கடத்திக் கொண்டு வந்து விட்டார்களோ?”

இதை மைத்ரேயன் மொழிபெயர்க்கவில்லை. புன்னகையுடன் கண்களை மூடிக் கொண்டான்.

கௌதம் மெல்ல டோர்ஜேயிடம் சொன்னான். “அந்த ஆள் கண் விழித்தால் இங்கே விளையாட ஏதாவது இருக்கிறதா என்று கேட்போம் பொறு”

மாராவுக்கே சிரிப்பை அடக்குவது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் கண் திறக்கவில்லை. சிரிப்பையும் வெளியே காண்பிக்கவில்லை. இந்தச் சிறுவனைக் கொல்லப் போகிறோம் என்பது இப்போது அவனுக்கே சின்ன சங்கடத்தைத் தந்தது.



“அதோ அந்த வீடு தான்” என்று தொலைவில் இருந்தே ஆசான் கைகாட்டினார். மைத்ரேயன் என்ற பெயருடைய வேறொரு சிறுவனை அந்த வீட்டில் கண்டதாக முன்பே சொல்லி இருந்த ஆசான் அங்கேயே மைத்ரேயனையும் சிறை வைத்திருக்கக்கூடும் என்று சொன்ன போது அக்‌ஷய்க்கும் இருக்கலாம் என்று தோன்றியது. அந்த வீடு இருக்கும் பகுதி லாஸா விமான நிலையத்திற்கும் அருகில் என்பதால் லீ க்யாங் அடிக்கடி வந்து போகவும் வசதி என்பதால் அங்கேயே மைத்ரேயனும், கௌதமும் இருக்க வாய்ப்பு அதிகம் என்று அக்‌ஷயின் உள்ளுணர்வு சொன்னது.

ஆனால் இப்போது நேரில் பார்க்கையில் அக்‌ஷய்க்குச் சந்தேகம் வந்தது. அந்த வீட்டுக்கு முன் காவல் எதுவும் இல்லை. லீ க்யாங் அப்படி காவல் இல்லாத வீட்டில் கண்டிப்பாக மைத்ரேயனை சிறை வைத்திருக்க மாட்டான்.... முடிந்தால் அந்தப் பகுதியையே கூட காவலர்களால் நிரப்புபவன் ஆயிற்றே அவன்... அக்‌ஷய் கேட்டான். “ஒரு வேளை இங்கிருந்து இடம் மாற்றி இருப்பார்களோ? வீட்டுக்குக் காவல் கூட இல்லையே!..”

ஆசானும் அவன் சந்தேகத்தை உணர்ந்தார். என்ன செய்வது என்று கவலைப்பட்டவராக ஒன்றும் சொல்லாமல் அவனுடன் நடந்தார். வீட்டை நெருங்குகையில் வீட்டு ஜன்னல் வழியே ஒற்றைக்கண் பிக்குவின் கவலை நிறைந்த முகம் தெரிந்தது. சென்ற முறை போல் ஒளிந்து நிற்காமல் ஆசானைப் பார்த்தவுடன் ஒற்றைக்கண் பிக்கு வீட்டிலிருந்து கீழே ஓடி வந்தார். தெருவிலேயே ஆசான் முன் மண்டியிட்டு வணங்கிய ஒற்றைக்கண் பிக்குவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் வழிய ஆரம்பித்தது. “ஆசானே.... ஆசானே... ஆசானே.... என்னை மன்னியுங்கள் ஆசானே....”

அவரை ஒருவழியாக எழுப்பி வீட்டுக்கு அழைத்துப் போன போது மண்டையில் கட்டுப் போட்ட சமையல்காரனும் அங்கு இருந்தான். நடந்ததை இருவரும் மாறி மாறித் தெரிவித்தார்கள். ஆசானும், அக்‌ஷயும் சிறுவர்கள் பேராபத்தில் இருப்பதை உணர்ந்தார்கள்....

சமையல்காரன் சொன்னான். “நீங்கள் கண்டிப்பாக வருவீர்கள் என்றும் வந்தால் தன்னிடம் பேசும் படியும் லீ க்யாங் சொல்லி இருக்கிறார்”

அவனே லீ க்யாங்கை அலைபேசியில் அழைத்து ”சார் ஆசானும் அவருடன் நீங்கள் சொன்ன ஆளும் வந்திருக்கிறார்கள்” என்று சொல்லி விட்டு அலைபேசியை ஆசான் கையில் தந்தான்.

லீ க்யாங் உடனடியாக விஷயத்திற்கு வந்தான். “வணங்குகிறேன் ஆசானே. வியாழக்கிழமை டோர்ஜேவை மைத்ரேயனாக மாரா அரங்கேற்றப் போகிறான். மைத்ரேயனைக் கொல்லாமல் அந்த வேலையைச் செய்ய மாட்டான் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் என் திட்டமே அதுவாகத் தான் இருந்தது. உங்கள் மைத்ரேயனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் உடனே ஏதாவது செய்தாக வேண்டும் என்று அமானுஷ்யனிடம் சொல்லுங்கள். நடந்த எதையும் மாற்றும் சக்தி எனக்கில்லை.  முடிந்தால்.... முடிந்தால்... மன்னியுங்கள்”


(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Monday, September 19, 2016

ஜாதி பேசுகிறதா கீதை?


கீதை காட்டும் பாதை 42
  
கவத் கீதையை மேற்போக்காகப் படிக்கையில் சில சுலோகங்கள் பிற்போக்கான, சமத்துவம் அற்ற கருத்துக்களைச் சொல்வது போலவும், பாரபட்சம் இல்லாத பரமாத்மா அதைச் சொல்லி இருக்கக்கூடாது என்பது போலவும் தோன்றும். ஒன்பதாம் அத்தியாய முடிவில் அப்படி இரண்டு சுலோகங்கள் ஸ்ரீகிருஷ்ணரால் சொல்லப்படுகிறது.  

அர்ஜுனா! தாழ்ந்த பிறவிகளென்று கூறப்படுபவர்களும், பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும் கூட என்னை சரணடைந்தால் பரமகதியை அடைய முடியும்.

அப்படியிருக்க புண்ணியப் பிறவிகளான பிராமணர்களும், பக்தர்களான ராஜரிஷிகளும் பரமகதியடைவார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆகவே நிலையற்றதும், சுகம் அற்றதுமான இந்த உலகை அடைந்த நீ எனது அன்புத் தொண்டில் ஈடுபடுவாயாக.

பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் தாழ்ந்தவர்களா? பிராமணர்களும், ராஜரிஷிகளும் உயர்ந்தவர்களா? யாரேயானாலும் என்னைச் சரணடைந்தால் பரமகதி அடைவார்கள் என்று ஒற்றை வாக்கியத்தில் முடித்து விட்டுப் போக வேண்டியதை இப்படி பிரித்துப் பேசி உயர்வு தாழ்வைக் குறிப்பிடுவது சரி தானா? என்ற கேள்விகள் ஒருவருக்கு அறிவுபூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் எழலாம்.

ஆழமாகப் பார்த்தால் மட்டுமே உண்மையை விளங்கிக் கொள்ள முடியும். பிறப்பால் தீர்மானிக்கப்படுவது பற்றி இங்கு பகவான் பேசவில்லை. பொதுவாக அன்பும், பாசமும் பெண்களுக்கு அதிகம். பிரியத்தால் பலவீனப்படும் தன்மை உடையவர்களைத் தான் இங்கு பகவான் பெண்களாகக் குறிப்பிடுகிறார். அதே போல வியாபாரிகள் என்றும் சுய லாப நஷ்டக் கண்ணோட்டத்திலேயே எதையும் அணுகும் தன்மை உடையவர்களை. அந்தத் தன்மை உடையவர்களைத் தான் வைசியர்களாகக் குறிப்பிடுகிறார். அதே போல் உயர்ந்த இலக்குகளோ, ஞானமோ, வேட்கையோ இல்லாமல் அடிமட்ட வாழ்க்கை வாழும் தன்மை உடையவர்களை பகவான் சூத்திரர்களாகக் குறிப்பிடுகிறார்.

அதே போல் பிரம்ம ஞானத்தில் நாட்டம் கொண்டு வாழ்பவர்கள் பிராமணர்கள் என்றும், உயர் பதவிகளில் இருந்தாலும் அந்தப் பதவிகளில் கர்வம் அடைந்து விடாமல் கர்ம யோகிகள் போல் சேவை புரிபவர்கள் ராஜரிஷிகள் என்றும் பகவான் குறிப்பிடுகிறார்.

ஆக இங்கு எல்லாமே அவரவர் தன்மையால் மட்டுமே சொல்லப்பட்டு இருக்கின்றன. பிறப்பினால் அல்ல. பிறப்பினால் பிராமணனாக இருப்பவன் தன்மையால் சூத்திரனாகத் திகழ முடியும். அதே போல பிறப்பினால் சூத்திரனாக இருப்பவன் பிராமணனாகவும் இருக்க முடியும். உயர்வு தாழ்வைத் தீர்மானிப்பது அவரவர் தன்மையே ஒழிய பிறப்பு அல்ல.

அந்த வகையில் தாழ்வான தன்மை உடையவர்களாக இருந்தாலும் கூட இறைவனைச் சரணடைந்தால் தங்கள் தாழ்வான தன்மைகள்,  பலவீனங்கள், நீங்கி பரமகதி அடையலாம். அப்படி இருக்கையில் உயர் தன்மை கொண்டவர்கள் பக்தர்களாய் இருந்தால் சொல்ல வேண்டியதே இல்லை. நீக்கிக் கொள்ளக் கூட பலவீனங்கள் நிறைய இல்லாத அவர்கள் இன்னும் சுலபமாகப் பரமகதி அடைவார்கள்.

இந்த உண்மையை மகாபாரதத்தை ஆழமாகப் படிப்பவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ள முடியும். சில உதாரணங்களையும் பார்ப்போம்.

மகாபாரதத்தில் ஜனக ஸுலபா சம்வாதம்என்ற அத்தியாயம் இருக்கிறது. அதில் சாதாரணப் பெண்ணான சுலபை என்பவளைத் தேடி சக்கரவர்த்தியான ஜனகர் செல்கிறார். ஞானம் தேடிப் போன ஜனகருக்கு அந்தப் பெண் பிரம்ம வித்தை போதிக்கிறாள்.    

துலாதரன் என்ற வைசியனிடம் ஜாஜலி என்ற பிராமணன் ஞானம் பெறுவதற்காகப் போகிறான். என் தராசுக் கோல் என்னிடம் பொருள் வாங்க யார் வந்த போதும் சமநிலையிலேயே இருக்கும்என்று துலாதரன் சொல்கிறான். அறிந்தவர், அறியாதவர், சிறியவர், பெரியவர், என யார் பொருள் கொள்ள வந்தாலும் நேர்மையாக ஒரே போல் தராசுக் கோல் நிறுத்தி வணிகம் செய்வதிலே தன் தர்மமும், ஞானமும் இருப்பதாக துலாதரன் சொல்லி ஜாஜலிக்கு ஞானம் போதிக்கிறான்.

அதே போல் தர்மவியாதன் என்ற கசாப்புக்கடைக் காரனிடம் கௌசிகன் என்ற அந்தணன் ஞானோபதேசம் பெறுகிறான். மாமிசத்தை வெட்டுவதும், கழுவுவதும், கழுவியதை விற்பனைக்கு எடுத்து வைப்பதுமாக இருக்கும் தர்ம வியாதன் தனக்கு விதிக்கப்பட்டிருந்த கர்மத்தை முடிந்த வரை தர்மம் பிறழாமல் செய்வதாகவும், அப்படிச் சம்பாதித்துத் தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதாகவும் கூறுகிறான்.

இப்போது ஸ்ரீகிருஷ்ணர் சொல்லி இருக்கும் சுலோகங்களையும் படித்துப் பாருங்கள். பெண்ணிடம் ராஜரிஷியான ஜனகர் உபதேசம் பெற்றதும், வைசியன், சூத்திரன் ஆகியோரிடம் ஜாஜலி, கௌசிகன் போன்ற பிராமணர்கள் உபதேசம் பெற்றதும் கீதை இடம் பெற்ற மகாபாரதத்திலேயே இடம் பெற்றிருக்கிறதா இல்லையா? பிறப்பால் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுவர்களிடம், பிறப்பால் உயர்ந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் தேடிச் சென்று ஞானம் பெற்றதை நச்சென்று சொல்கிறதல்லவா மகாபாரதம்.

அது மட்டுமல்ல மகாபாரதம் எழுதிய வியாசரே சத்யவதி என்ற மீனவப் பெண் வயிற்றில் பிறந்தவர். கீதை சொன்ன ஸ்ரீகிருஷ்ணரே இடையராக வாழ்ந்தவர். எனவே இறைவன் ஞானம் பெற்றதையே உயர் பிறவியாகவும் ஞானக்குறைவையே தாழ்பிறவியாகவும் சுட்டிக் காட்டுகிறார் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளக் கூடாது.

கடைசியில் ஒன்பதாம் அத்தியாயத்தை இப்படிச் சொல்லி பகவான் முடிக்கிறார்.

என்னிடமே மனதை அர்ப்பித்தவனாக இரு. எனக்கே பக்தனாக இரு. எனக்கே வந்தனை செய்து என்னை வழிபடு. இவ்வாறாக என்னில் முழுமையாக லயித்தாயானால் என்னையே நீ வந்தடைவாய்.

சதாகாலம் ஒரு மனிதன் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ, எதை உத்தமம் என்று கொண்டாடுகிறானோ, எதில் மனம் லயிக்கிறானோ அதுவாகவே மாறி விடுகிறான் என்பது பேருண்மை. அதனால் இறைவனையே எண்ணி, வழிபட்டு, அவனிடமே மனதை அர்ப்பித்து, முழுமையாக மனமும் லயித்தால் அந்த இறைநிலையை எட்டுவது இயற்கை தானே.

இத்துடன் கீதையின் ஒன்பதாம் அத்தியாயமான ராஜவித்தியா, ராஜகுஹ்ய யோகம் நிறைவு பெறுகிறது.

கீதையின் சரி பாதி முடிந்து விட்டது. இனி பத்தாவது அத்தியாயத்திற்குள் நுழைவோம்.

பாதை நீளும்....


என்.கணேசன் 

Thursday, September 15, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 116



லீ க்யாங் உடனே ராஜினாமா கடிதம் எழுதி அதை எடுத்துக் கொண்டு உளவுத்துறை தலைவரைப் பார்க்கக் கிளம்பினான். அவன் கார் காற்றின் வேகத்தில் சாலைகளைக் கடந்து உளவுத்துறைத் தலைவரின் வீட்டின் முன் நின்றது. காரிலிருந்து இறங்கி வேகமாக வெளி கேட்டில் இருந்து உள்ளே நுழைந்த லீ க்யாங்கை நிறுத்தி ‘தலைவர் தூங்குகிறார். பிற்பாடு வருகிறீர்களா?’ என்று கேட்க நினைத்து நெருங்கிய காவலாளி லீ க்யாங்கின் பார்வையிலேயே சுடப்பட்டு பின் வாங்கினான்.

லீ க்யாங் கோபமாக வருவதை உளவுத்துறைத் தலைவர் தனதறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். “கடவுளே இவனிடம் இருந்து என்னைக் காப்பாற்று” என்று வாய் விட்டுப் பிரார்த்தித்த அவர் அறையிலிருந்து வெளியே வரும் போதே லீ க்யாங் முன்னறைக்குள் நுழைந்திருந்தான். அவரைப் பார்த்தவுடன் இறுகிய முகத்துடன் ராஜினாமா கடிதம் நீட்டினான்.

”என்ன இது லீ க்யாங்” என்று கேட்டவரிடம் “ராஜினாமா கடிதம்” என்றான்.

தலைவர் அதைக் கையில் வாங்கவில்லை. “ராஜினாமா செய்கிற அளவுக்கு என்ன நடந்து விட்டது. முதலில் உள்ளே வா. உட்கார்” என்று தனதறைக்குள் அவனை வரவழைத்து இருக்கையில் இருத்தினார்.

வேண்டா வெறுப்பாக உட்கார்ந்த லீ க்யாங் கொதித்தபடி சொன்னான். “நான் மைத்ரேயனுக்கு ஏற்பாடு செய்திருந்த காவலை எனக்குத் தெரியாமல் நீங்கள் அப்புறப்படுத்தினால் பின் எனக்கு இங்கே என்ன மரியாதை இருக்கிறது?”

அவர் அவன் பார்வையைத் தவிர்த்தபடி சொன்னார். “பொதுச்செயலாளரே போன் செய்து சொல்லும் போது நான் என்ன செய்ய முடியும்?”

சீனாவின் அதிகார மையமான கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பெயரைக் கேட்டதும் லீ க்யாங் அதிர்ச்சி அடைந்தான். இன்றைக்கு காலையில் கேட்ட அதிர்ச்சித் தகவலுக்குப் பின் கிடைப்பதெல்லாம் அதிர்ச்சித் தகவல்களாகவே இருக்கின்றன! பொதுச் செயலாளர் தான் ஆரம்பத்தில் மைத்ரேயன் பற்றி அவனிடம் சொன்னவர். அவரிடம் சொல்லி விட்டுத் தான் ”மைத்ரேய புத்தா” என்ற இந்த ரகசியத்திட்டத்தை அவன் மூளை உருவாக்கியது....

லீ க்யாங் திகைப்புடன் கேட்டான். “அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்?”

அவன் அருகில் அமர்ந்த அவர் அமைதியாக விளக்கினார். “சீனாவில் மாரா மற்றும் அவன் ஆட்களின் முதலீடு பல்லாயிரம் கோடிகள் இருக்கின்றன. அவனை அனுசரிக்கா விட்டால் அவன் முதலீட்டை இந்த நாட்டிலிருந்து விலக்கிக் கொள்வான். இந்த நாடு ஒரு பொருளாதார நெருக்கடியைத் தாங்கும் நிலையில் இப்போது இல்லை.....”

லீ க்யாங்கின் திகைப்பு அதிகரித்தது.

“வெளியுலகில் மாராவுக்கு வேறு பெயர். அவன் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவன்....” என்று சொன்ன தலைவர் சமீபத்திய ‘நியூ வீக்லி” (New Weekly) என்ற பிரபல சீனப்பத்திரிக்கையை எடுத்து லீ க்யாங் கையில் கொடுத்தார். அதில் அட்டைப் படத்தில் மாரா இருந்தான். ’வணிக அரசன்’ என்று கொட்டை எழுத்தில் வர்ணனை இருந்தது. லீ க்யாங் அதை முன்பே படித்திருக்கிறான். அழகும் அறிவும் பணமும் எப்படி ஒருவனிடமே சேர்ந்து இருக்கிறது என வியந்தும் இருக்கிறான். அவன் தான் மாரா என்று தான் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

அவர் தொடர்ந்து சொன்னார். “எல்லாம் நீ நினைத்தபடி தான் நடந்திருக்கிறது. மைத்ரேயன் அழிக்கப்பட வேண்டும் என்று தான் நினைத்தாய். அதைச் செய்து தர மாரா முன்வந்திருக்கிறான். டோர்ஜேயை மைத்ரேயனாக அறிவிப்பது உன் மூளையில் உதித்த திட்டம். அப்படியே செய்வதாக மாரா உறுதி அளித்திருக்கிறான்....”

“ஆனால் எல்லாமே அவன் தீர்மானிக்கும் விதங்களில். நாம் அவன் இஷ்டப்படி ஆட வேண்டி இருக்கிறது” லீ க்யாங் வறண்ட குரலில் சொன்னான்.

தலைவர் பொறுமையாகச் சொன்னார். “அதை ஏன் அப்படி எடுத்துக் கொள்கிறாய்? அவன் நம் எதிரியல்ல. நண்பன். இங்கு பெரும் முதலீடு செய்திருக்கிறான். வளர்ச்சிப் பாதையில் போய்க்கொண்டிருக்கும் நமக்கு அவன் முதலீடு தேவை. அவன் இங்கு இதுவரை எந்தக் கெடுதலையும் செய்ததில்லை. பிரச்னை உண்டாக்கியதில்லை....”

லீ க்யாங் கூர்மையாக அவரைப் பார்த்துச் சொன்னான். “ஆனால் அவன் சொல்கிறபடி கேட்காவிட்டால் பிரச்னை உண்டாக்கி விடுவேன் என்று பயமுறுத்தி இருக்கிறான்.... நம் உளவுத்துறைக்குள்ளேயே ஒரு உயரதிகாரியை அவன் உளவாளியாக வைத்திருக்கிறான்....”

அவரால் உடனே எதையும் சொல்ல முடியவில்லை. பின் தர்மசங்கடத்துடன் சொன்னார். “ஆனால் அந்த ஆள் நம் எதிரி நாட்டிடம் நம் தகவல்களை விற்று விடவில்லையே. நம் நாட்டுக்கு எந்த பிரச்னையும் உருவாக்கி விடவில்லையே. மைத்ரேயன் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டும் தான் மாராவுக்கு தந்திருக்கிறான். மைத்ரேயன் விஷயத்தில் நாம் செய்ய நினைத்த காரியத்தை மாரா செய்ய ஆசைப்படுகிறான். நமக்கும் காரியமானால் சரி தானே. இந்த நேரத்தில் இந்த சின்ன விஷயத்தில் “ஈகோ” எல்லாம் பார்த்து அவனை எதிர்க்க முடியாது லீ க்யாங். தயவு செய்து புரிந்து கொள். நன்றாக அமைதியாக யோசி. இது வரை இந்த நாட்டின் நலனே உன் நலன் என்று வாழ்ந்தவன் நீ. அந்த அடிப்படையிலேயே யோசித்தால் இன்று எதுவுமே உன் கொள்கைக்கு எதிர்மாறாக நடந்து விடவில்லை என்பது புரியும்” சொன்னவர் அவன் அமைதியை சாதகமாக்கி மெல்ல அவன் கையில் இருந்த ராஜினாமா கடிதம் பிடுங்கி அவசரமாகக் கிழித்துப் போட்டார்.

லீ க்யாங் ஒன்றுமே சொல்லாமல் தளர்ச்சியுடன் எழுந்தான். அவன் மனதில் பெரியதொரு உணர்ச்சிப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஒன்றுமே சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினான்.

திரும்பிப் போகையில் கார் வேகம் மிகவும் குறைந்து போயிருந்தது. சீன உளவுத்துறையின் முந்தைய தலைவர் சென்ற முறை சந்தித்தபோது சொன்ன வாசகம் நினைவுக்கு வந்தது. “கடவுளிடமும், அவதார புருஷர்களிடமும் நாம் எப்படியும் இருக்கலாம். ஆனால் சைத்தானிடமும், அவன் வாரிசுகளிடமும் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உனக்கும் சேர்த்துத் தான் சொல்கிறேன்”

அவர் சொன்னது உண்மையாகி விட்டது. மைத்ரேயனைச் சிறை பிடித்தான். ஒன்றுமே பிரச்னை இல்லை. ஆனால் சைத்தான் அப்படி இல்லை. சத்தம் இல்லாமலேயே அவனை ஜெயித்திருக்கிறான். நேராக லீ க்யாங்கை சந்திக்கும் சிரமத்தைக் கூட அவன் எடுத்துக் கொள்ளவில்லை.....

லீ க்யாங் காரை சீன உளவுத்துறையின் முந்தைய தலைவரின் வீட்டை நோக்கி ஓட்ட ஆரம்பித்தான். அவன் மனதில் உள்ளதைக் கொட்ட, புரிந்து கொண்டு வழிகாட்ட நம்பகமான நல்ல மனிதர் அவர். சீன உளவுத்துறையின் முந்தைய தலைவர் தன் வீட்டு முன் இருந்த தோட்டத்தில் களைகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தார்.

அவனைப் பார்த்தவுடன் “அன்று நான் தூங்கும் நேரத்தில் வந்தாய். இன்று தூங்கி எழுந்தவுடனே வந்து விட்டாய். உன்னோடு பெரிய தொந்திரவாகப் போய் விட்டது” என்று பொய்க் கோபத்தோடு சொன்னார். அவன் முகம் வெளிறி இருந்ததை அவன் நெருங்கியவுடன் தான் பார்த்தார். உடனடியாக அங்கிருந்த குழாயில் கைகழுவிக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார். “வா உள்ளே. என்ன ஆயிற்று லீ க்யாங். ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?”

உள்ளே சென்றமர்ந்ததும் ’மைத்ரேயா புத்தா’ என்ற தன் திட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து இன்று நடந்தது வரை எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லி மனச்சுமையை இறக்கி வைத்தான். அவர் தன்னை மறந்து அவன் சொன்னதில் ஒன்றிப் போனார்.

கடைசியில் லீ க்யாங் சொன்னான். “எல்லாம் நான் நினைத்தது போலத் தான் நடக்கிறது என்று தலைவர் சொல்கிறார். ஒரு விதத்தில் அது உண்மையும் கூட. ஆனால் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. மைத்ரேயன் அன்று என்னைக் கேட்டான். “அடுத்தவர் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிவதை விட அவரவர் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிவதல்லவா ஒருவருக்கு சிறப்பு?” இப்போது அந்த வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் முழுமையாக விளங்குகிறது. ‘திபெத் விவகாரத்தையும், மைத்ரேயன் வாழ்க்கையையும் நான் தீர்மானிக்க நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் சொந்த வாழ்க்கையும், என் நாட்டு விவகாரமுமே என் தீர்மானத்தில் இல்லை. அதை மாரா தீர்மானிக்கிறான். அவன் பணம் தீர்மானிக்கிறது....”

அவர் அவனை மென்மையாகப் பார்த்தார். கசப்பான உண்மைகளை மகன் கஷ்டப்பட்டு ஜீரணிக்க வேண்டி வரும் போது அவனுக்காக உருகும் ஒரு தந்தையின் மனநிலையாக அது இருந்தது.

சிறிய மௌனத்திற்குப் பின் அவர் சொன்னார். “லீ க்யாங். உலக அரசியலே இன்று பணத்தை மையமாக வைத்து நடக்கிறது. உலகப் பொருளாதாரமும், அரசியலும் இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய சில கார்ப்பரேட் முதலாளிகளின் எண்ணப்படி தான் சென்று கொண்டிருக்கிறது. முடிவில் பார்த்தால் எதையும் தீர்மானிப்பது அவர்களே. அதனால் எந்த நாட்டிலும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் பெரிதாக மாறுவதில்லை. மாற்றம் ஏற்படுத்த புதிய ஆட்சிகள் நினைத்தாலும் அவர்களுக்கு அனுகூலமாய் இருந்தால் ஒழிய அதற்கு அந்த கார்ப்பரேட் முதலாளிகள் அனுமதிப்பதில்லை. இன்று மாரா நினைத்ததை சாதிப்பதும் அந்தக் கார்ப்பரேட் முதலாளியாகத் தான். நாடுகளே அவன் பகடைக்காய்களாய் இருக்கும் போது நம்மைப் போன்றவர்கள் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று வருத்தப்படுவது குழந்தைத்தனம்...”

லீ க்யாங் கரகரத்த குரலில் தலை குனிந்து சொன்னான். “உண்மை சார். ஆனாலும் என்னை மாரா தன் கைப்பாவையாக பயன்படுத்தி இருக்கிறான் என்பதை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அவனுக்காக நான் கஷ்டப்பட்டு மைத்ரேயனைக் கடத்தி அவனிடம் ஒப்படைத்தது போல் இருக்கிறது.”

இது வரை நான் என்று என்றுமே தலைநிமிர்ந்து இருந்த லீ க்யாங் தலை குனிந்ததைப் பார்க்கையில் உளவுத்துறையின் முந்தைய தலைவருக்கு மனவருத்தமாய் இருந்தது. சிறிது நேரம் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

லீ க்யாங் வருத்தத்துடன் சொன்னான். “தலைவர் என்னிடம் சொன்னார். ”மாரா இங்கு இதுவரை எந்தக் கெடுதலையும் செய்ததில்லை. பிரச்னை உண்டாக்கியதில்லை” என்று. ஆனால் அவர் சொல்ல மறந்த ஒரு உண்மை என்னைப் பயமுறுத்துகிறது சார். கெடுதலையும், பிரச்னையையும் எந்த நேரத்திலும் ஏற்படுத்த முடிந்த வல்லமையோடு அவன் இருக்கிறான் என்பதே அபாயம் தானே. இது எதில் கொண்டு போய் முடியும்?”

அவர் மென்மையாக அவனிடம் சொன்னார். “தீய சக்திகள் இப்படி விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம் அதைத் தடுத்து நிறுத்த முடிந்த தெய்வீக சக்திகளும் விஸ்வரூபம் எடுக்கின்றன. இது காலம் காலமாக நடப்பது தான் லீ க்யாங். பௌத்தம் மைத்ரேயனையே அந்த விதமாகத் தான் அடையாளம் காட்டுகிறது....”

லீ க்யாங் விரக்தியுடன் சிரித்தான். “அந்தச் சிறுவன் மாராவுக்கு எதிராய் என்ன செய்ய முடியும்? மாரா கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுவான்”

அவர் புன்னகையுடன் சொன்னார். ”பிறப்பதற்கு முன்பே எதிரி என்று சீனாவின் பலம் பொருந்திய லீ க்யாங்கால் முத்திரை குத்தப்பட்ட அந்தச் சிறுவனைக் கண்டுபிடிக்கவே லீ க்யாங்குக்கு பத்து வருடங்கள் முடியவில்லை. கண்டுபிடித்த பின்னும் அந்தச் சிறுவனை லீ க்யாங்கால் அழிக்க முடியவில்லை”

லீ க்யாங் ரோஷத்தோடு சொன்னான். “எனக்கு முடியாமல் போகவில்லை. நான் டோர்ஜே அவனிடமிருந்து சிலதாவது கற்றுக் கொண்டால் தான் அவனை நான் மைத்ரேயனாக வெளிப்படுத்தும் போது உண்மையின் சாயலாவது இருக்கும் என்று நினைத்தேன். அவனைப் பொறியாக வைத்து மாராவையும் பிடித்து விடலாம் என்றும் நினைத்து தான் விட்டு வைத்தேன்”

“நான் காரணம் கேட்கவில்லை, விளைவை சுட்டிக்காட்டினேன் அவ்வளவு தான். உன்னை சமாளித்தவன், அவனையும் சமாளிப்பான்....”

லீ க்யாங் மனதார சொன்னான். “அப்படி ஆனால் நான் சந்தோஷப்படுவேன். இந்தக்கணம் உண்மையான எதிரியாய் நான் நினைப்பது மாராவைத்தான்.... ஆனால் மைத்ரேயனை மாராவுக்கு இணையான பலசாலியாய் என்னால் நம்ப முடியவில்லை சார்”

“ஆனால் மாரா நம்புகிறான். அதனால் தான் தன் பிரதான எதிரியாய் அவனை நினைக்கிறான். அவனால் உன்னையும், உன் உளவுத்துறையையும், பொதுச்செயலாளரையும் ஆட்டி வைப்பது போல் மைத்ரேயனை ஆட்டிப்படைக்க முடியவில்லை. காரணம் உங்களுக்கு இழப்பதற்கு நிறைய இருக்கின்றது. அதனால் பயப்படுகிறீர்கள். மைத்ரேயனுக்கு இழப்பதற்கு எதுவுமே இல்லை. அவன் அப்படி எதையுமே வைத்துக் கொள்ளவில்லை. அது தான் மைத்ரேயனின் பெரும்பலம். அதில் தான் மாரா அபாயத்தை உணர்கிறான்.”

(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Monday, September 12, 2016

முள்பாதையைக் கடந்து முன்னேறியவர்


அகரம் தொட்ட சிகரம்-5

பிரம்மாண்டமான வெற்றியை நோக்கிச் செல்லும் பாதை என்றுமே ராஜ பாதையாக இருப்பதில்லை. வென்ற பின் தாராளம் காட்டும் உலகம் அது வரை வெற்றிப்பாதையின் பயணிகளைப் பெரும்பாலும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. தனியாகவே அந்தப் பாதையில் பயணிக்கும் மனிதன் மனம் தளர்ந்து திரும்பி விட சந்தர்ப்பங்களோ ஏராளமாக அமைகின்றன. பிரச்னைகளும், சோதனைகளும், அவமானங்களும் மட்டுமே அவன் சந்திக்கும் யதார்த்தங்களாக இருக்கின்றன. இதில் எல்லாம் தாக்குப்பிடித்து பாதையெல்லாம் நிறைந்திருக்கும் முட்களைப் பார்த்து தயங்கியோ, பின் வாங்கியோ விடாமல் தன் கனவுகளைத் தொடர்பவர்களே சாதித்து மகுடம் சூடுகிறார்கள். அப்படி ஒரு சாதனை புரிந்தவர் தான் புகழ்பெற்ற அமெரிக்க நடிகரான சில்வஸ்டர் ஸ்டலோன்.


1946 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் சதா சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோருக்குப் பிறந்தவர் சில்வஸ்டர் ஸ்டலோன். பெற்றோரின் சண்டை காரணமாக அவரது வீட்டில் அமைதி என்பதே காணாமல் போயிருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோர் விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்தார்கள். அதனால் அவர் சில காலம் கருணை இல்லங்களில் வாழ வேண்டி இருந்தது. அவர் தாயார் மறுமணம் செய்து கொண்ட பிறகு அங்கு சென்று சில்வஸ்டர் ஸ்டலோன் வாழ்ந்தார். அங்கும் அமைதியான அன்பான சூழல் இல்லை. அதனால் அவர் சென்று படித்த பள்ளிகளில் சக மாணவர்களுடன் சண்டை போட்டார். பள்ளி விதிகளின் படி அனுசரணையாக நடந்து கொள்ளத் தவறினார். அதனால் சில பள்ளிகளில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். கடைசியில் பிரச்னைக்குரிய மாணவர்கள் இருக்கும் சீர்திருத்தப்பள்ளியில் அவர் படிக்க வேண்டி வந்தது.


எப்படியோ படித்து முடித்து நாடகம், நடிப்பு ஆகியவை படிக்க கல்லூரிக்குச் சென்றார். அங்கும் அவர் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நடிகனாகும் கனவோடு கல்லூரியை விட்டு வெளியே வந்த சில்வஸ்டர் ஸ்டலோனை யதார்த்த உலகம் கசப்பாக வரவேற்றது. திரை உலகை அவரால் சுலபமாக நெருங்க முடியவில்லை. அதனால் எடுபிடி வேலைகள் உட்பட பல சின்ன வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டினார். ஒரு சினிமா தியேட்டரில் வேலை, செண்ட்ரல் பார்க் மிருகக்காட்சி சாலையில் சிங்கங்களின் கூண்டுகளைக் கழுவி விடும் வேலை எல்லாம் செய்து பிழைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வேலை எதுவும் இல்லாமல், தங்க இடமும் இல்லாமல் நியூயார்க் நகர வீதிகளில் வாழ்ந்திருக்கிறார். வீதிகளில் இருந்த குளிர் தாங்க முடியாமல் நூலகத்தின் உள்ளே அடைக்கலம் புகுந்த அவர் காலத்தைப் போக்க வேண்டி படிக்க ஆரம்பித்து வெற்றிகரமான கதை அம்சங்களை ஓரளவு புரிந்து கொண்டார். இதுவே அவருக்கு பிற்காலத்தில் திரைக்கதை அமைக்க உதவியிருக்க வேண்டும்.


பின்னர் ஓரிரண்டு படங்களில் சின்ன வேடங்கள் அவருக்குக் கிடைத்தன. அவையும் சொல்லும் அளவுக்கு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் எல்லா விதங்களிலும் வாழ்க்கையில் சுமை கூடிக் கொண்டே போனதே ஒழிய குறையவில்லை. மனைவியின் நகையைத் திருடி விற்றுச் சாப்பிடும் அளவு வாழ்க்கை மிக மோசமானது. அந்தப் பணமும் தீர்ந்து போன போது அவருடன் அவரது நாயைத் தவிர துணையாக யாருமில்லை. அந்த நாயிற்கும் உணவிட முடியாமல் போன போது அவரால் அதைத் தாங்க முடியவில்லை. தன் நாயாவது எங்காவது நல்லபடியாக பிழைத்துக் கொள்ளட்டும் என்று நினைத்தவராக அவர் ஒரு மதுபானக்கடைக்கு வெளியே அந்த நாயை ஒருவரிடம் 25 டாலருக்கு விற்று விட்டார். விற்று விட்டு அந்த இடத்தை விட்டுச் சென்ற போது பெருகிய கண்ணீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.


இரண்டு வாரங்கள் கழித்து குத்துச்சண்டை வீரர் முகமது அலியும், மற்றொரு வீரரும் பங்கெடுத்த ஒரு குத்துச்சண்டையை சில்வஸ்டர் ஸ்டலோன் பார்த்தார். அந்தக் குத்துச்சண்டை அவருள் ஒரு கதைக்கருவை உருவாக்கியது. இரண்டு நாட்கள் தொடர்ந்து உட்கார்ந்து ராக்கி திரைக் கதையை சில்வஸ்டர் ஸ்டலோன் உருவாக்கினார். அதை எடுத்துக் கொண்டு அவர் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக அணுகினார். இதெல்லாம் விலை போகாது, இந்த மாதிரி திரைப்படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள், இதில் என்ன இருக்கிறது என்பது போன்ற விமர்சனங்கள் தான் அவருக்குக் கிடைத்தன. ஆனாலும் தான் எடுத்துக் கொண்ட பணியில் ஆத்மார்த்தமான நம்பிக்கை வைத்திருந்த சில்வஸ்டர் ஸ்டலோன் இதிலிருந்து பின்வாங்கவில்லை. தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டார்.


ஒரு தயாரிப்பு கம்பெனி மட்டும் அவரது திரைக்கதையில் ஆர்வம் காட்டியது. அது அவருக்கு 1,25,000 டாலர்கள் தருவதாக ஒப்புக் கொண்டது. ஆனால் சில்வஸ்டர் ஸ்டலோன் ஒரு நிபந்தனை விதித்தார். அந்த திரைப்படத்தில் தானே கதாநாயகனாக நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மக்களிடம் பிரபலமாகாத ஒரு நடிகரை வைத்து அந்தப் படத்தை எடுத்து கையைச் சுட்டுக் கொள்ள அவர்கள் விரும்பாமல் பின் வாங்கினார்கள். ஆனால் அந்தத் திரைக்கதையில் வெற்றிக்கான அம்சம் இருப்பதாக உணர்ந்த அவர்கள் ஒரு பிரபல நடிகரை வைத்து அந்தப்படத்தை எடுத்தால் வெற்றிப்படமாக்கலாம் என்று நினைத்து 2,50,000 டாலர்கள், 3,50,0000 டாலர்கள் வரை தர முன்வந்தார்கள். நாயைக்கூட 25 டாலருக்கு விற்க வேண்டிய நிலைக்கு வந்திருந்த போதும் சில்வஸ்டர் ஸ்டலோன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் அவரைக் கதாநாயகனாகப் போடும் பட்சத்தில் வெறும் 35,000 டாலர்கள் மட்டுமே திரைக்கதைக்கும், நடிப்பிற்கும் சேர்த்து தருவோம் என்று அவர்கள் சொன்னார்கள். உடனே சில்வஸ்டர் ஸ்டலோன் ஒத்துக் கொண்டார்.


கிடைத்த பணத்தில் அவர் செய்த முதல் வேலை நாயைத் திரும்பவும் வாங்க முயற்சித்தது தான். எந்த மதுபானக்கடையின் வெளியே தன் நாயை அவர் விற்றாரோ அதே மது பானக்கடையின் வெளியே மூன்று நாட்கள் காத்திருந்து கடைசியில் நாயை வாங்கியவரை அவர் சந்தித்தார். நடந்ததை எல்லாம் தெரிவித்து அந்த நாய்க்கு நூறு டாலர்கள் தருவதாக அவர் சொன்னாலும் அந்த ஆள் திரும்ப நாயை விற்க சம்மதிக்கவில்லை. ஆயிரம் இரண்டாயிரம் என்று ஏற்றிக் கொண்டே போனாலும் சம்மதிக்காத அந்த ஆள் 15,000 டாலர்களும், ராக்கி திரைப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வாய்ப்பும் தந்தால் தான் திரும்ப நாயைத் தருவேன் என்று சொல்லி விட்டார். சில்வஸ்டர் ஸ்டலோன் ஒத்துக் கொண்டார். 1976 ஆம் ஆண்டு வெளிவந்த ராக்கி படத்தில் அந்த ஆளும், அந்த நாயும் கூட நடித்திருக்கிறது.


பத்து ஆஸ்கர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ராக்கி திரைப்படம் முடிவில் சிறந்த திரைப்படம், சிறந்த எடிட்டிங், சிறந்த டைரக்‌ஷன் என்ற மூன்று ஆஸ்கர்களை வென்றது. மீதி வரலாறாகியது. ராக்கியின் பல தொடர் சினிமாக்கள், ஃபர்ஸ்ஃப் ப்ளட், ராம்போ போன்ற பல திரைப்படங்கள் தந்து புகழ், செலவம் இரண்டிலுமே சிகரங்களைப் பிடித்த சில்வஸ்டர் ஸ்டலோன் வேறுபல விருதுகளையும் பெற்றுள்ளார். நியூயார்க் நகரின் வீதிகளில் வசிக்க நேர்ந்த சில்வஸ்டர் ஸ்டலோன் பலநூறு கோடிகளின் அதிபதியாகி அமெரிக்காவிலும் உலகின் பல பகுதிகளிலும் கண்கவரும் மாளிகைகளை வாங்கி இருக்கிறார். உதாரணத்திற்கு பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அவரது மாளிகையை இங்கே பாருங்கள்.




கஷ்ட காலங்கள், முள் பாதைகள் எல்லாம் எல்லார் வாழ்விலும் உண்டு. அவற்றைப் பார்க்காமல் சிகரங்களை அடைந்தவர்கள் மிகவும் குறைவு. அவற்றைக் கடக்கையில் தான் நீங்கள் உங்களையும், உங்களைச் சுற்றி உள்ள உலகத்தையும் தெளிவாக உணர முடியும். பிற்காலத்தில் உங்களைத் தூக்கி நிறுத்துவது அந்த அனுபவங்களின் வலிமையாகவே இருக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.


-என்.கணேசன்

Thursday, September 8, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 115

பாம்பு ஏணி விளையாட்டு அமர்க்களமாகப் போய்க் கொண்டிருந்தது. ஏணியில் ஏறும் போது ஒரு சத்தம், பாம்பில் இறங்கும் போது ஒரு சத்தம் என்று கௌதம் ஆரம்பித்ததை போகப்போக டோர்ஜேயும் பின்பற்ற ஆரம்பித்தான். இரண்டிலுமே இருவரையும் புன்னகையுடன் மைத்ரேயன் ரசிப்பதை ஒற்றைக்கண் பிக்கு கவனித்தார். அதிகாலையிலும், இரவிலும் தியானம் செய்யும் மைத்ரேயன், இப்போது இவர்களுடன் விளையாடும் மைத்ரேயன்- இந்த இரண்டு நிலைகளில் தான் எத்தனை எத்தனை வித்தியாசங்கள்...

சமையல்காரன் சாதாரணமாக வேண்டா வெறுப்பாகத்தான் சமைப்பான். லீ க்யாங்கின் ஒற்றன் என்பதால் அவனை எதுவும் பிக்குவால் கேட்கவும் முடிந்ததில்லை. ஆனால் அவன் ஒரே நாளில் ஒரேயடியாக மாறி விட்டான். இரவு மைத்ரேயனின் தியானத்தின் போது விசித்து விசித்து அழுதவன் அதிகாலை மைத்ரேயன் தியானம் செய்யும் போதும் எழுந்து வந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டான். எல்லோருக்கும் ருசியாய் சமைத்துப் போட்டான். சிறுவர்கள் விளையாடும் போது இடை இடையே சாப்பிட ஏதாவது செய்து கொடுத்தான். டோர்ஜே திகைப்புடன் அவனைப் பார்த்தான்.

கௌதமுக்கு அன்பாய் அவ்வப்போது ஏதாவது கொண்டு வந்து தரும் அந்த சமையல்காரனை மிகவும் பிடித்து விட்டது. மாமா என்று அன்பாக அழைக்க ஆரம்பித்தான். சமையல்காரனுக்கும் எப்போதும் உற்சாகமாக இருக்கும் அந்த சிறுவனை மிகவும் பிடித்து விட்டது. அவனுக்காக இந்திய வகைச் சமையலும் செய்து கொடுத்தான். ”மாமா நீங்களும் விளையாட வாங்க” என்று கௌதம் அழைக்க அவர்களுடன் அவனும் விளையாட சேர்ந்து கொண்டான்.

லீ க்யாங் போன் செய்து கேட்ட போது பையன்கள் சமர்த்தாக இருக்கிறார்கள், அவர்களால் ஒரு தொந்தரவும் இல்லை என்று அவன் சொன்னது ஒற்றைக்கண் பிக்குவுக்குக் கேட்டது. மனிதர்கள் எப்படி தலைகீழாய் மாறி விடுகிறார்கள் என்று அவர் வியந்தார். ‘சரியான மனிதர்களுடன் பழக நேரும் போது மற்றவர்களும் சரியாகி விடுகிறார்களோ!’

இரவு கௌதம் தூங்க ஆரம்பித்து மைத்ரேயன் தியானம் ஆரம்பிப்பதற்கு முன் டோர்ஜே தன் பலத்த சந்தேகத்தை மெல்லக் கேட்டான். “தியானத்திற்கு தம்மபதம், தாமரை சூத்திரம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையா?”

மைத்ரேயன் ஒரு கணம் அவனை மென்மையாகப் பார்த்து விட்டுச் சொன்னான். “அவை எல்லாம் தகவல்கள். நீ ஒரு ஊருக்குப் போகப் போகிறாய் என்று வைத்துக் கொள். அங்கு எந்த வழியாகப் போக வேண்டும், எப்படிப் போக வேண்டும், அங்கே என்னவெல்லாம் இருக்கும் என்ற தகவல்கள் அவசியம் இல்லை என்று சொல்ல முடியாது. அவை நல்லது தான். அங்கே கண்டிப்பாகப் போக வேண்டும் என்கிற ஆவலையும் தூண்டி விடும். அதுவும் நல்லதே. ஆனால் அவை எதுவும் அந்த இடத்திற்குப் போய் நீயாய் நேரில் பார்ப்பதற்கும், உணர்வதற்கும் ஈடாகி விடாது. அதனால் போவதற்கு முன், அனுபவம் பெறுவதற்கு முன் உபயோகமாக இருக்கும் அவை நேரடி அனுபவம் பெற்ற பின் அவசியமில்லை....”

டோர்ஜே அந்த பதிலில் ஒன்றிப் போய் சிந்திக்க, ஒற்றைக்கண் பிக்கு பிரமித்துப் போனார். என்ன அழகான பதில்.....


மைத்ரேயன் தொடர்ந்து சொன்னான். ”பெரும்பாலான மனிதர்கள் தகவல்களைச் சேர்த்துக் கொண்டே போகிறார்கள். அதிலேயே அனைத்தும் அறிந்து விட்டதாய் ஒரு மாயையில் சிக்கி விடுகிறார்கள். அது சுய ஏமாற்று வேலை. அறிந்தவை அனைத்தும் அனுபவமாகி விடாது. அறிந்ததை வாழ்க்கையில் பயன்படுத்தும் போது தான் அது ஞானமாகிறது. அதனால் அறிந்ததை நன்றாக சிந்தி. அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் சிறிதாவது பயணித்துப் பார். அறிதலின் உண்மையான பயன் அது தான். மற்றதெல்லாம் பிரமையே....”

மைத்ரேயன் பத்மாசனத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து விட்டான். அவன் வலது பாத அடியில் தர்மசக்கரம் பொன்னிறத்தில் ஒரு முறை சுழன்று நின்றது. பார்த்ததும் ஒற்றைக்கண் பிக்கு கண்களில் நீர் பெருக மண்டியிட்டு அவனை வணங்கினார். டோர்ஜேயும் பேருண்மை ஒன்றின் தரிசனமும் உபதேசமும் கிடைத்தவனாய் தானும் மண்டியிட்டு வணங்கினான்



று நாள் அதிகாலை அந்த வீட்டுக்குக் காவல் இருந்தவர்கள் அவசர அவசரமாய் கிளம்பிப் போனார்கள். மைத்ரேயன் அந்த நேரத்தில் தியானத்தில் இருந்தான். ஒற்றைக்கண் பிக்கு ஜீப்கள் கிளம்பும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தார். ஜீப்களில் போனது காவல் ஆட்கள் தான். என்ன ஆயிற்று என்று திகைத்தவராய் மெல்ல கதவைத் திறந்தும் பார்த்தார். ஒருவர் கூட இப்போது வெளிக்காவலில் இல்லை. கதவை மறுபடியும் சாத்திக் கொண்டார்.

பத்தாவது நிமிடம் வேறு இரண்டு கார்கள் வந்து வெளியே நின்றன. முதல் காரிலிருந்து கருப்பு நிற ஆடைகள் அணிந்த நான்கு பேர் துப்பாக்கிகளோடு இறங்கினார்கள். இரண்டாவது காரில் இருந்து மாரா கம்பீரமாக இறங்கினான். அவனும் முழுமையான கருப்பாடைகளிலேயே இருந்தான். இரண்டு துப்பாக்கி வீரர்கள் முன்னேயும், இரண்டு துப்பாக்கி வீரர்கள் பின்னேயும் வர, அமைதியாக அவன் படிகளேறினான். அவன் யாரென்று உணர்ந்த ஒற்றைக்கண் பிக்குவின் சப்தநாடியும் ஒடுங்கியது. இது வரை பொய், கற்பனை என்று அவர் எண்ணியிருந்த ஒரு மனிதன், சைத்தான், நிஜமாகவே நேரில் வருவது அவருக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

அவர் ஓடிப்போய் மைத்ரேயனை உலுக்கினார். “மைத்ரேயரே, மாரா... வந்திருக்கிறான்....”

மைத்ரேயன் கண்களைத் திறந்தான். அவர் அவன் பின் ஒடுங்கினார்.

கதவு பலமாகத் தட்டப்பட்டது. சமையல்காரன் தூக்கக்கலக்கத்தில் சென்று கதவைத் திறந்தான். அவன் காவல்வீரர்கள் சென்று விட்டதையோ வேறு ஆட்கள் வந்து விட்டதையோ அறிந்திருக்கவில்லை. கதவைத் திறந்தவன் தலையில் ஓங்கி ஒரு அடி விழ அவன் வாசலிலேயே மயக்கமாய் விழுந்தான். இரண்டு துப்பாக்கி வீரர்களும், மாராவும் உள்ளே நுழைந்தார்கள்.

மைத்ரேயன் அமைதியாக முன்னறைக்கு வந்தான். சில வினாடிகள் மாராவும் மைத்ரேயனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றார்கள். அந்த நேரத்தில் பின்னால் வந்த துப்பாக்கி வீரர்கள் இருவரும் உள் அறையில் உறங்கிக் கொண்டிருந்த டோர்ஜேயையும், கௌதமையும் மயக்க மருந்து தடவிய கைக்குட்டையால் மயங்க வைத்துத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். ஒற்றைக்கண் பிக்குவுக்கு அவர்கள் டோர்ஜேயைத் தூக்கிச் செல்வது சகிக்க முடியாததாக இருந்தது. பதற்றத்துடன் அவர் மாராவிடம் சொன்னார். “அவன்.... டோர்ஜே சம்பந்தமில்லாதவன்.”

மாரா அமைதியாகச் சொன்னான். “தெரியும் பிக்குவே”. கௌதமையும், டோர்ஜேயையும் தூக்கிக் கொண்டு இருவர் வெளியேறிய போது மாரா மைத்ரேயனிடம் ஏதாவது உணர்ச்சி தென்படுகிறதா என்று பார்த்தான். இல்லை. புன்னகையுடன மைத்ரேயனைக் கேட்டான். “உனக்கு மயக்க மருந்து தேவை இல்லை அல்லவா?”

அமைதியாக மைத்ரேயன் சொன்னான். “தேவையில்லை.” பின் அவன் ஒற்றைக்கண் பிக்குவைத் திரும்பிப் பார்த்து விட்டு மென்மையாகச் சொன்னான். “டோர்ஜேக்கு எந்த ஆபத்தும் வராது. பயப்படாதீர்கள் பிக்குவே”

மைத்ரேயன் அமைதி மாறாமல் வெளியேற மாரா அவன் அமைதியை ரசித்தபடியே பின்னால் சென்றான். துப்பாக்கி வீரர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். கார்கள் அருகே வந்த பின் மைத்ரேயன் நின்றான். மாரா மைத்ரேயனிடம் இரண்டாம் காரைக் காட்டினான். மைத்ரேயன் அதில் ஏறிக்கொள்ள மாராவும் ஏறி அவன் அருகில் அமர்ந்து கொண்டான். கார்கள் வேகமாகக் கிளம்பிச் சென்றன.

ஒற்றைக்கண் பிக்கு சிலை போல் சிறிது நேரம் நின்றிருந்தார். பின் அதிர்ச்சியில் இருந்து மீண்டவர் கீழே விழுந்து கிடக்கும் சமையல்காரனைப் பார்த்தார். அவன் இன்னமும் மயக்கத்தில் இருந்து மீளவில்லை. தட்டுத் தடுமாறிச் சென்று அலைபேசியை எடுத்து லீ க்யாங்குக்குப் போன் செய்தார்.


லீ க்யாங் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அலைபேசி அடிக்கவே கண்களை கசக்கிக் கொண்டு எழுந்து கடிகாரம் பார்த்தான். மணி ஆறே கால். அலைபேசி எடுத்துச் சொன்னான். “ஹலோ”

ஒற்றைக்கண் பிக்கு பதற்றமும் கலக்கமுமாகப் பேசினார். “மைத்ரேயரைக் கடத்திக் கொண்டு போய் விட்டார்கள்.... கூடவே டோர்ஜேவையும், அந்த இந்தியப்பையனையும்.....”

“என்ன பிக்குவே உளறுகிறீர்? சமையல்காரன் உங்களுக்கும் ஊற்றிக் கொடுத்து விட்டானா?”

“இல்லை சத்தியமாக”

ஆரம்பத்தில் லீ க்யாங் அமானுஷ்யன் தான் வந்து மகனையும், மைத்ரேயனையும் மீட்டுக் கொண்டு போய் விட்டதாக நினைத்தான். அவனால் தான் அசாதாரணமாக இப்படி எல்லாம் செய்ய முடியும்.”

“காவலில் இருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களில் ஒருவனிடம் போனைக் கொடுங்கள்”

“அவர்கள் யாரும் இல்லை. அவர்கள் முன்பே போய் விட்டார்கள்”

லீ க்யாங்குக்கு ஒற்றைக்கண் பிக்குவின் மேல் கோபம் வந்தது. “காலையிலேயே என்னிடம் விளையாடாதீர்கள் பிக்குவே. வாழ்நாள் எல்லாம் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.”

“சத்தியமாக விளையாடவில்லை”

“சரி சமையல்காரனிடம் போனைக் கொடுங்கள்”

“அவனை அவர்கள் அடித்துப் போட்டு மயக்கமாகக் கிடக்கிறான்...”

லீ க்யாங் ஒற்றைக்கண் பிக்குவுக்கு புத்தி பேதலித்து விட்டது என்றே எண்ணினான். கற்பனைக்கு ஒரு எல்லை இல்லையா? மெல்லச் சொன்னான். “சரி நடந்ததைச் சொல்லுங்கள்”

அவர் சொல்ல ஆரம்பித்தார். மாராவின் வரவைப் பற்றி அவர் சொல்லும் போதே அவர் உண்மையைத் தான் சொல்கிறார் என்பது புரிய ஆரம்பித்து விட்டது.

கோபம் உள்ளே எரிமலையாய் கொதிக்க, தான் காவலுக்கு ஏற்பாடு செய்திருந்த காவலர்களின் தலைவனுக்குப் போன் செய்தான்.

“காவலில் இருந்து யாரைக் கேட்டு விடுபட்டுக் கொண்டீர்கள்?” நேரடியாய் லீ க்யாங் கேட்டான்.

நடுங்கியபடி பதில் வந்தது. “உளவுத்துறை தலைவரே தான் அப்படி ஆணையிட்டார்..... “

தலையில் இடி விழுந்தது போல் லீ க்யாங் உணர்ந்தான். அவனுக்கும் மேலதிகாரியான உளவுத்துறை தலைவரே கூடக் கருப்பு ஆடா? அதனால் தான் இன்னொரு கருப்பு ஆடு பற்றித் தகவல் தெரிந்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறாரா?  அவனுக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.


(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Thursday, September 1, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 114

க்‌ஷயும் ஆசானும் நேபாள நட்பு நெடுஞ்சாலையில் சிறுவியாபாரிகள் வேடத்தில் திபெத்திய எல்லையைக் கடக்க காத்திருந்தார்கள். காத்மண்டுவில் இருந்து வந்திருக்கும் சுற்றுலா வாகனங்களில் இருக்கும் பயணிகளைத் தான் எல்லைப் பகுதி அதிகாரிகள் மிக அதிகமாக சோதனையிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலரின் தாடியைக் கூட இழுத்து உண்மையான தாடி தானா என்று பார்த்ததாக வெளியே பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். புதிய விசாக்களுடன் வரும் புதிய பயணிகள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அந்த அளவு வாடிக்கையாகச் செல்லும் வியாபாரிகள் சோதனைக்கு ஆளாகவில்லை. பழைய நைந்து போன, அதிகமாக அவர்களது முத்திரைகள் முன்பே குத்தியிருந்த, கடவுச்சீட்டுகள், அனுமதிச்சீட்டுகள் சாதாரணமாகத் தான் சோதனைக்குள்ளாயின. 

வாடிக்கையாகச் செல்லும் வியாபாரிகள் மூவரை முன்பே அக்‌ஷயும் ஆசானும் நட்பாக்கிக் கொண்டு அவர்களுடனேயே ஒரு பழைய ஜீப்பில் பயணித்து வந்திருந்தனர். அதிகாரிகள் அவர்களுடைய அனுமதிச்சீட்டுகளைப் பரிசோதித்த போது கூட வாடிக்கையாக வருபவர்கள் காட்டும் அசிரத்தையைக் காட்டியபடியே மற்ற வியாபாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். கொட்டாவியை அடக்கியபடி அவர்களை திபெத்திற்குள்  நுழைய விட்டு, அடுத்த வாகனத்தை அருகே வர அந்த அதிகாரி சைகை காட்டினான். அவசரமில்லாமல் ஜீப் திபெத்தினுள் நுழைந்தது.



லீ க்யாங்குக்கு மைத்ரேயன் என்ற பெயரிட்ட கோப்பு வாசிக்கப்பட்டு, வாசிக்கப்பட்டவர் தகவல் அழிக்கப்பட்டிருக்கிறது என்ற எச்சரிக்கை வந்து சேர்ந்தது. அந்த எச்சரிக்கையுடன் அதைச் செய்த ஆளின் பெயரும், நேரமும் கூட வந்து சேர்ந்தன. கோபம் வேகமாய் ஆட்கொள்ள யாரந்த துரோகி என்று பார்த்தான். உளவுத்துறையில் அவனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஒரு உயரதிகாரி.... இது வரை எந்த கெட்ட பெயரையும் வாங்காதவர். திறமைசாலி. ஆனால் தேசபக்தியும் நாணயமும் தான் குறைச்சலாகப் போய் விட்டது. உண்ணும் வீட்டுக்கே இரண்டகம் செய்யும் இது போன்ற ஆட்களைத் தூக்கில் தான் போட வேண்டும் என்று ஆத்திரத்தோடு நினைத்தான். இந்தத் தகவல் உளவுத்துறைக்கும் போயிருக்கும் அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று காத்திருந்தான்.

வாங் சாவொ இன்னும் அந்தப் பதினாறு பயணிகள் திபெத்தில் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவில்லை. சுற்றுலா நிறுவனம் அவர்களை அழைத்துச் செல்வதாய் ஒப்புக் கொண்டிருந்த அத்தனை இடங்களுக்கும் அவன் ஆட்கள் அனுப்பிப் பார்த்திருக்கிறான். ஆனால் எங்கேயும் அவர்கள் இல்லை என்பது ஒரு தலைவலியாக இருந்தது. அவர்கள் பயணிகள் அல்ல என்பது இப்போது தெளிவாகி விட்டது.....


காபோதி மரத்தடியில் குனிந்து மைத்ரேயன் என்ன எடுத்தான்.....திபெத்தியக் கிழவர் கேட்டார். அவர்களுடைய தெய்வமான மாரா தாழ்ந்த குரலில் “தெரியவில்லைஎன்றது. “அடுத்தவன் மனதைப் படிக்க முடிந்த அவன் தன் மனதில் உள்ளதை மறைக்கவும் முடிந்தவன். அதில் மிகவும் கெட்டிக்காரன். அவன் மனதை ஊடுருவ முடியவில்லை. சம்யே மடாலயத்தில் நம் சக்தி பலமாக நிலைபெற்ற பின் தான் என் சக்திகளைத் திரும்பப் பெற்றேன். பத்மசாம்பவாவின் தில்லுமுல்லை நான் உணர்ந்தேன்..... இப்போது ஒருவன் மேல் மனதில் உள்ளதை என்னால் காண முடியும். எதுவானாலும் இரண்டாவது ஆள் அறிந்தால் அதையும் என்னாலும் அறிய முடியும். இரண்டாவது ஆள் விழித்த நிலையில் மட்டுமல்ல, அரைகுறையாய் உணர்ந்தாலும் அதைத் தெளிவாக்கி நான் காண முடியும். ஆனால் மகாபோதியின் அடியில் அவன் செய்தான் என்பது மைத்ரேயன் மேல்மனதிலும் இல்லை. அவனுடன் போனவனும் பார்க்கவில்லை.....

இப்போது அவர்களுக்குப் புரிந்தது. இரண்டு காட்சிகளும் அமானுஷயனின் மேல் மனமும், ஆழ்மனமும் அறிந்தவை. அதில் அவனுக்குத் தெளிவில்லாமல் இருந்த பகுதிகளையும் மாரா தெளிவாக்கி காட்டி விட்டது.

அடுத்ததாக மூன்றாவது காட்சி மாரா சிலை முன் விரிந்தது. மைத்ரேயன், கௌதம் டோர்ஜே மூவரும் பாம்பு, ஏணி விளையாடிக் கொண்டிருந்தார்கள். பகடையை உருட்டி, வந்த எண்ணுக்கு காயை நகர்த்தி, ஒரு பெரிய ஏணியில் ஏறி வைத்த பின் கௌதம் எழுந்து நின்று ஆரவாரம் செய்ய டோர்ஜேயும், மைத்ரேயனும் அவனைப் புன்னகையுடன் பார்த்தார்கள்.   

திடீரென்று மைத்ரேயன் திரும்பிப் பார்த்தான். அவன் அவர்களையே பார்ப்பது போல் இருந்தது. அமைதியாக சில வினாடிகள் கூர்ந்து பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டான். அதன் பின் திரும்பவேயில்லை. ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல அவன் தொடர்ந்து ஆட ஆரம்பித்தான்.  அவர்கள் அனைவருமே அவன் தங்களைப் பார்த்ததை உணர்ந்தார்கள்.

அந்தக் காட்சி மறைந்தது. கிரீச் குரல் உச்சத்தில் அலறியது. “பார்.... அவனுக்கு பயமே இல்லை..... கவலையும் இல்லை..... அதை உடையுங்கள்.... அவனை பயம் உணர வையுங்கள்.... துக்கம் உணர வையுங்கள்.... பின் அழியுங்கள்...... இனி ஒரு அவதாரம் கூடாது.....

“அவனை எப்படி அழிப்பது உத்தமம் என்று மாரா அறிய விரும்பினான்...திபெத்தியக் கிழவர் சொன்னார்.

சில வினாடிகள் சத்தமே இல்லை. யோசிப்பது போலத் தெரிந்தது. பின் அந்த அமானுஷ்யக் குரல் ஒலித்தது. மைத்ரேயனோடு இரண்டு சிறுவர்களையும் சிறை பிடியுங்கள்..... இந்திய சிறுவனைக் கொல்லுங்கள்..... கண்டிப்பாக மைத்ரேயன் அவனைக் காப்பாற்ற தன்னிடம் மறைத்து வைத்திருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே தீர்வான்.... ஒரு முறை அவன் பயன்படுத்திய பின் அந்த சக்தியையும் அதன் தீவிரத்தையும் மாரா புரிந்து கொள்வான். அந்த சக்திக்கு எதிர்சக்தி என்ன, அதைப் பயன்படுத்துவது எப்படி என்பதை மாராவுக்குக் கண்டுபிடிக்க முடியும். இந்த சில நாட்களில் என் அனைத்து சக்திகளையும் அவனுக்குத் தந்திருக்கிறேன். எல்லாவற்றையும் பயன்படுத்தி அவனை அழிக்கச் சொல்.

அமெரிக்க செனெட்டர் பெண்மணி கேட்டாள். ”அந்த சக்தியை மைத்ரேயன் முதலிலேயே மாரா மீது பயன்படுத்தி மாராவை அழிக்க முற்பட்டால் என்ன செய்வது?”

“மைத்ரேயன் எந்த சக்தியையும் தானாக முதலில் பயன்படுத்த மாட்டான்....” கிரீச் குரலில் மாரா ஆணித்தரமாகச் சொன்னது. “தன்னையோ, மற்றவர்களையோ காக்க வேண்டிய நேரத்தில் மட்டும் தான் சக்தியைப் பயன்படுத்துவான். அதில் சந்தேகம் வேண்டாம்....”

ஜப்பானில் இருந்து வந்தவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. “மாராவிடம் பல சக்திகள் இருப்பது போல் மைத்ரேயனும் மறைத்து வைத்திருப்பது ஒரு சக்தியாக இல்லாமல் பல சக்திகளாக இருந்தால் என்ன செய்வது? அவன் ஒவ்வொன்றாகப் பயன்படுத்தலாமல்லவா?

“அவன் பல சக்திகள் ஒளித்து வைக்கவில்லை. ஒரே அஸ்திரம் தான் வைத்திருக்கிறான். அதை என் சக்தியால் உணர்கிறேன். அந்த ஒன்றில் அவன் பலத்த நம்பிக்கை வைத்திருக்கிறான்.... அதையும் அறிவேன்.....
ஒரு நிமிடம் அங்கே நிசப்தம் குடிகொண்டது. ஒருவர் கேட்டார். “மாரா தவிர்த்து மற்ற நம் ஆட்கள் என்ன செய்ய வேண்டும்....?

உங்கள் இடங்களுக்கு திரும்பிப் போங்கள். இந்த மூன்று நாட்களும் வேறு எதையும் செய்வது தவிர்த்து உங்கள் சக்திகளைக் குவித்து இங்கே அனுப்புங்கள். இந்த இடம் நம் சக்தி மையமாகட்டும். மைத்ரேயன் அழிந்தான் என்று அறிந்த பிறகே உங்கள் கவனம் வேறு பக்கம் நகரட்டும்....

இனி கேட்க எதுவுமே இல்லை என்று அவர்கள் நினைத்த போது மிக மென்மையாக அவர்கள் தெய்வத்தின் குரல் ஒலித்தது. “மாராவிடம் சொல்லுங்கள்.... அவன் இப்போது எல்லா சக்திகளையும் பெற்றிருக்கிறான்.... மைத்ரேயனை அழிப்பது ஒன்றே அவன் செய்ய வேண்டியது..... அதற்காகத் தான் அவன் பிறந்திருக்கிறான் என்பதை ஞாபகப் படுத்துங்கள்... விடை பெறுகிறேன்

மாராவின் உடல் தொய்ந்து போனது. நீல நிற ஒளிவெள்ளத்தில் அவன் அப்படியே அசைவில்லாமல் சரிந்திருந்தான்.

திபெத்தியக் கிழவர் “அமேசான் காடுகள்என்று சொல்ல மாராவைச் சூழ்ந்திருந்த நீல ஒளி மங்க ஆரம்பித்தது. கோரமான மாற்றத்திலிருந்து மாரா இயல்பான அழகான வடிவுக்கு மெல்ல மெல்ல வர ஆரம்பித்தான். அவன் கட்டுகளை அவிழ்த்தார்கள்.

அவனுடைய முழு சக்தியும் உறிஞ்சப்பட்டிருந்த போதும் மாரா தன் மனபலத்தைத் திரட்டிக் கொண்டு நிமிர்ந்தான். “சொல்லுங்கள்என்றான்.

திபெத்தியக் கிழவர் சொல்ல ஆரம்பித்தார். முழுவதும் கேட்டு விட்டு மாரா சொன்னான். “எல்லாரும் போகலாம்”. அவர்கள் எழுவதற்கு முன் அவன் உறங்கி விட்டிருந்தான். ஒரு மணி நேர உறக்கத்திற்குப் பின் அவன் விழித்த போது அனைவரும் போயிருந்தார்கள். தீபங்கள் மட்டும் அந்த குகைக் கோயிலில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

எழுந்து கோயில் சிலை முன் மண்டியிட்ட மாரா சொன்னான். “மைத்ரேயன் நாளை இங்கிருப்பான். மூன்றாவது நாள் இங்கேயே முடிவான். மகாசக்தியே, இது நான் தங்களுக்குத் தரும் வாக்கு!

(தொடரும்)
என்.கணேசன்  


(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)