சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 31, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 92


ருணின் காதல் பிரச்னை என்ன என்று சஹானாவிடம் அக்‌ஷய்க்கு இரவு உறங்கப் போகும் முன் தான் கேட்க முடிந்தது.

“தெரியவில்லை. வாய்விட்டுச் சொல்ல மாட்டேன்கிறான். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு மூன்று தடவையாவது வந்தனா வீட்டுக்குப் போவான். அந்தப் பெண்ணும் ஒரு தடவையாவது நம் வீட்டுக்கு வருவாள். திடீர் என்று எல்லாம் நின்று விட்டது. என்னடா பிரச்னை என்று கேட்டால் எரிந்து விழுகிறான்... உங்களிடம் ஏதாவது சொன்னானா?”

“அவளைப் பற்றிப் பேச வேண்டாம் என்று மட்டும் சொன்னான்.”

அக்‌ஷய் சொன்னதை சஹானாவால் நம்ப முடியவில்லை. எந்த விஷயமானாலும் வருண் அக்‌ஷயிடம் சொல்லாமல் இருப்பவன் அல்ல. தந்தையாக மட்டுமல்லாமல் நெருங்கிய நண்பனாகவும் அக்‌ஷயை அவன் நினைத்தான். அக்‌ஷயிடமே சொல்ல முடியாத விஷயமாய் இருந்தால் அது சொல்ல முடியாத மிகப்பெரிய பிரச்னையாகவே இருக்க வேண்டும்.... அவளுக்கு வருத்தமாக இருந்தது.

கணவனிடம் வந்தனாவின் குடும்பத்தார் ஆரம்பத்தில் எவ்வளவு அன்பாக அவர்களுடன் பழகினார்கள் என்பதை வருத்தத்துடன் நினைவுகூர்ந்தாள். “அப்படிப்பட்டவர்கள் இப்போது பேசுவது கூட இல்லை. சின்ன வயதுக்காரர்கள் சண்டையில் பெரியவர்கள் ஏன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பது எனக்குப் புரியவே மாட்டேன்கிறது. வந்தனாவின் அம்மா என்னைப் பார்த்தாலே முகத்தை திருப்பிக் கொண்டு போகிறார். வந்தனா இந்தப்பக்கமே பார்ப்பதில்லை. அவள் அப்பா கொஞ்சம் பரவாயில்லை. நேருக்கு நேர் பார்த்தால் லேசாகவாவது புன்னகை செய்கிறார்......”

“என்ன விஷயம் என்று நேரடியாக நீ அவர்களிடமே போய்க் கேட்டிருக்கலாமே?” அக்‌ஷய் கேட்டான்.

“பார்த்தவுடனே முகத்தைத் திருப்பிக் கொள்கிறவர்களிடம் எப்படிப் போய் கேட்பது. ஒரே ஒரு தடவை வந்தனாவிடம் பேசப்போனேன். அந்தப் பெண் ஏதோ தொத்துவியாதிக்காரி நெருங்குவது போல ஓட்டம் பிடித்தாள்... பிறகு நானும் விட்டு விட்டேன்....”

வருத்தப்பட்ட மனைவியை அணைத்துக் கொண்ட அக்‌ஷய் அதற்கு மேல் அது பற்றிப் பேசவில்லை. அவனுக்கு சஹானா கிடைத்தது போல் ஒரு நல்ல நேசம் மிகுந்த மனைவி எதிர்காலத்தில் வருணுக்கும் வர வேண்டும் என்று ஆசைப்பட்டான். அந்தக் காதல் உண்மையாக இருந்தால் காலம் போகப் போக காதல் தேய்வதற்குப் பதில் ஆழப்படும் என்பது அவன் சொந்த அனுபவம். சேகர் தன் கூரிய கவனிப்பில் உணர்ந்ததில் தவறிருக்கவில்லை. இன்றும் சஹானா அக்‌ஷயிடம் ஆரம்ப பாதிப்புகளையே ஏற்படுத்துகிறாள்....

மனைவியை முத்தமிட்ட அவன் அவளை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றான்....


ருணுக்கு மைத்ரேயன் பெருந்தொந்தரவாகத் தோன்றியது. இது நாள் வரையில் அந்த அறை அவனுடையதும், கௌதமுடையதுமாக மட்டும் இருந்தது. ஆனால் மைத்ரேயன் வரவுக்குப் பின் அந்த அறை மைத்ரேயனுடையதுமாக மாறி விட்டது. கௌதம் மிக மகிழ்ச்சியுடன் தன் கட்டிலை மைத்ரேயனுடன் பகிர்ந்து கொண்டான். கௌதம் படுத்தவுடன் உறங்கியும் விட்டான். ஆனால் மைத்ரேயன் உறங்காமல் கட்டிலில் பத்மாசனம் போட்டு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து தியானத்தில் மூழ்கினான்.

எதிர் கட்டிலில் அவன் தியானம் செய்து கொண்டிருக்கும் போது வருணுக்குத் தூக்கம் வரவில்லை. இது என்ன பூஜை அறையா? என்று மனதில் விமர்சித்தான். எப்போதுமே அப்பாவின் ஒரு பக்கத்தில் கௌதம் உட்கார்ந்தால் மறுபக்கம் வருண் உட்கார்வான். இப்போது அந்த இடத்தை மைத்ரேயன் பிடித்துக் கொண்டது வருணுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இப்போது அறையிலும் பங்கு....

அவனைப் பார்த்தாலே ஆத்திரமாக இருந்ததால் வருண் கண்களை மூடிக் கொண்டு உறங்க பலவந்தமாக முயற்சித்தான். தூக்கத்திற்குப் பதிலாக அழைக்காமல் வந்தனா வந்தாள். புன்னகைத்தாள். பழைய நினைவுகளைக் கொண்டு வந்தாள். மனம் வலிக்க வைத்தாள். எல்லாம் அந்தக் கேவலமான மனிதன் உயிரோடு திரும்பி வந்ததால் தான்.... சேகரைப் பற்றி நினைத்ததுமே மனம் கொதித்தது. அப்பாவிடம் வாய் விட்டுச் சொல்லக்கூட முடியாத நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்து விட்டானே பாவி....

கோபத்துடன் கண்களைத் திறந்த போது மைத்ரேயன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது இரவு விளக்கின் மங்கலான ஒளியில் தெரிந்தது. அவன் மனதில் ஓடியதை எல்லாம் படித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. சேகரைப் பற்றி, அதற்கு முன் வந்தனாவைப் பற்றி, அதற்கும் முன் மைத்ரேயனைப் பற்றி எண்ணியதெல்லாம் கூட...

”அவன் இருக்கையில் நீங்கள் என்ன நினைத்தாலும் சரி, அதைச் சொல்லாமலேயே தெரிந்து கொண்டு விடுவான்...” என்று அப்பா எச்சரித்தது இப்படித் தோன்ற வைக்கிறதா இல்லை, நிஜமாகவே இவனுக்குத் தெரிகிறதா என்று சந்தேகத்துடன் அந்த மெல்லிய ஒளியில் மைத்ரேயனை வருண் கூர்ந்து பார்த்தான். மைத்ரேயன் அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான். வருணுக்கு உடல் சில்லிட்டது.....


தே நேரம் எதிர் வீட்டில் இருந்த சேகரும் உறக்கம் வராமல் மைத்ரேயன் நினைவிலேயே இருந்தான். அந்தக் கூரிய பார்வை அவன் நினைவில் இப்போதும் இருந்தது. ’அந்தப் பையன் சூனியக்காரனோ? கூடுதல் சக்தி படைத்தவனோ? இல்லை அவன் ஜன்னல் தாண்டி சாதாரணமாய் பார்த்தது அரண்டு போயிருந்த எனக்கு அப்படித் தோன்றி விட்டதா?’ என்று கேட்டுக் கொண்டவன் மேலும் யோசித்து விட்டு ‘நான் அரண்டு போனதே அவன் அப்படிப் பார்த்துத் தானே’ என்று குழம்பினான். அந்த ஒரு கணம் பார்த்த அந்தச் சிறுவன் அப்புறம் அவன் பக்கமே பார்க்கவில்லை. ஆனாலும் கூட சேகர் அந்தப் பார்வையை உணர்ந்த வண்ணமே இருந்தான். அந்தப் பார்வையே அவனை ஒட்டிக் கொண்டது போல இருந்தது. ஒரு சின்னப் பொடியனைப் பார்த்து ஏன் இப்படி பயப்படுகிறோம் என்று தன்னையே திட்டிக் கொண்டு தைரியமாய் பைனாகுலர் வழியாகப் பார்த்தான். அவர்கள் எல்லாரும் அந்த ஹாலில் இருந்து செல்லும் வரை பார்த்தான். கடைசி வரை அந்தச் சிறுவன் அந்தப்பக்கமே பார்க்கவில்லை.

இரவு உறங்க முயற்சித்தாலும் அந்தப் பார்வையே அவன் மனதில் வந்து நின்றது. என்னக் கொடுமையிது என்று எழுந்து உட்கார்ந்த போது அவன் அலைபேசி அடித்தது. அழைத்தது அவனுடைய சகா தான்.

“எங்கே இருக்கிறாய்?” அவன் சகா கேட்டான்.

“கோயமுத்தூரில் தான். நீ?”

“நான் மைசூர் பக்கம் பைலகுப்பேயில் தான் இருக்கிறேன். எங்களுக்கு அந்தத் திபெத்தியக் கிழவர் இன்னும் வேலை வைத்திருக்கிறார்....”

சேகர் சின்ன எரிச்சலுடன் சொன்னான். “திபெத் நேபாளில் இருந்து எல்லாம் கிளம்பி இங்கே வந்து நம் உயிரை எடுக்கிறார்கள். இங்கே கூட ஒரு பொடியன் இருக்கிறான். நேபாளம் போல் இருக்கிறது. பார்க்க வித்தியாசமாய் இருக்கிறான். நம்மையும் வித்தியாசமாய் பார்க்கிறான்....”

அவன் சகா ஒரு கணம் தாமதித்து விட்டு மெல்லக் கேட்டான். “அந்தப் பையனுக்கு வயது எத்தனை இருக்கும்?”

”பத்து இருக்கும். ஏன் கேட்கிறாய்?”

“அந்தத் திபெத்திய கிழவரோடு ஒரு பத்து வயதுப் பையனை சம்பந்தப்படுத்தி தான் இங்கே பேசிக் கொள்கிறார்கள். அந்தப் பையனைத் தேடித் தான் அந்தக் கிழவரை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். அது தான் கேட்டேன்....”

சேகர் மூளை வேகமாக வேலை செய்தது. இந்தப் பையன் அவர்கள் தேடும் பையனாக இருக்கலாமோ? பார்க்க நேபாளம் என்று நினைத்ததே வருண் அந்த ஆள் நேபாள் போயிருப்பதாய் ஆரம்பத்தில் வந்தனாவிடம் சொல்லி இருந்ததால் தான். சேகர் வாய்விட்டுச் சொன்னான். “அந்தப் பையன் நேபாளியாக இல்லாமல் திபெத்தியனாகக் கூட இருக்கலாம்... இங்கே அவனைக் காவல் காத்துக் கொண்டு கூட சிலர் நிற்கிறார்கள்.....”

சகா பரபரப்பாகச் சொன்னான். “காவல் காக்கிறார்களா? அந்தப் பையனின் புகைப்படத்தை அனுப்பி வையேன்....”

“இப்போது கைவசம் இல்லை.... நாளை அனுப்பி வைக்கிறேன்..... அந்தப் பையனை எதற்காகத் தேடுகிறார்கள் தெரியுமா?”

“சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவனைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் நமக்கு லட்சக்கணக்கில் கிடைக்கும் என்று தலைவர் சொல்கிறார். எதற்கும் நீ முடிந்தால் காலையிலேயே எனக்கு அவன் புகைப்படம் அனுப்பி வை..... அவன் தானா என்று பார்த்து விடுவோம்.”

லட்சக்கணக்கில் என்று கேள்விப்பட்ட பிறகு சேகரின் தூக்கம் முழுவதுமாகத் தொலைந்து போனது. மறுநாள் காலை வரை காலம் அங்குலம் அங்குலமாக நகர்ந்தது. அவ்வப்போது எழுந்து போய் ஜன்னல் வழியே எதிர் வீட்டு இருட்டைப் பார்த்தான். இருட்டில் அந்தக் கண்கள் தன்னைப் பார்ப்பது போல உணர்ந்தான். மெல்லப் பின்வாங்கினான். அந்தப் பையனும் அந்த இருட்டில் ஒளிந்து கொண்டு தன்னைக் கண்காணிக்கிறானோ?

ஒருவழியாக விடிந்தது. ஜன்னல் திரையைப் போட்டு விட்டு ஒரு இடுக்கில் இருந்து எதிர்வீட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தான். ஹாலில் போக்குவரத்து தெரிந்தது. மரகதமும், சஹானாவும் தான் அங்குமிங்கும் போனார்கள்.... அந்தச் சிறுவனும் கௌதமும் காலை எட்டு மணிக்கு ஹாலில் தென்பட்டார்கள். ஆனால் பையனை சரியாகப் படம் எடுக்க முடியவில்லை. காலை ஒன்பதரை மணிக்கு விளையாட அவன் கௌதமுடன் வெளியே வந்த போது சேகர் அவசரமாகவும் ரகசியமாயும் இரண்டு புகைப்படங்களை எடுத்தான். அவன் எடுத்த இரண்டு புகைப்படங்களில் ஒன்றில் அந்தச் சிறுவன் காமிராவையே பார்த்துக் கொண்டிருந்தான். சேகருக்கு வியர்த்தது. அங்கிருந்து அவன் எதிர்வீட்டு மாடியைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லையே. ஏன் பார்க்கிறான்....

கௌதமுடன் அவன் போய் விட்டான். காவலில் இருந்த மூன்று பேர் அவர்களைப் பின் தொடர்ந்ததை சேகர் கவனித்தான். அவசர அவசரமாய் அந்தச் சிறுவன் காமிராவையே பார்க்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்தான்.



ரண்டு மணி நேரத்தில் சீன உளவுத்துறைக்கு அந்தப் புகைப்படம் போய்ச் சேர்ந்தது. உளவுத்துறை அதிகாரி ஒருவன் அந்தப் புகைப்படத்தோடு லீ க்யாங்கை சந்தித்தான். “நாம் தேடும் சிறுவன் இவன் தானா என்று கேட்கிறார்கள்?

அந்தப் புகைப்படத்தைக் கையில் வாங்கிய லீ க்யாங்குக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. அந்தப் புகைப்படத்தில் இருந்த மைத்ரேயன் அவனையே பார்த்தான். எந்த உணர்ச்சியும் இல்லாத ஆழமான பார்வை! இது வரை பார்த்த புகைப்படங்களில் இருந்த மந்தப் பார்வை இதில் இல்லை.

நிமிர்ந்து உட்கார்ந்த லீ க்யாங் கேட்டான். “இவன் இப்போது எங்கிருக்கிறான்?”

(தொடரும்)

என்.கணேசன்

Monday, March 28, 2016

எல்லோரும் என்பது யார் யார்?


“எல்லோரும் சொல்கிறார்கள்”,  “எல்லாருக்கும் தெரியும்”,  “எல்லாரும் என்ன நினைக்கிறார்கள் என்றால்... முதலான வார்த்தைகளைப் பலரும் அடிக்கடி பயன்படுத்துவதை அனைவரும் அடிக்கடி கேட்கிறோம். அப்படி எல்லோரும் சொல்கிறார்கள் என்று ஆரம்பித்துச் சொல்லும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பெரும்பாலும் நல்ல விஷயங்களாய் இருப்பதில்லை என்பதும், நல்லெண்ணத்தில் சொல்லப்படுவதாகவும் இருப்பதில்லை என்பதும் நம் அனுபவமாக இருக்கிறது.

எல்லாரும் உன்னைப் பற்றி இப்படி நினைக்கிறார்கள்”, எல்லாரும் இப்படி எல்லாம் கேவலமாய் பேசுகிறார்கள்”, ”எல்லாரும் சிரிக்கிறார்கள்”  என்று சொல்பவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்தக் கருத்துக்களையே அப்படி நம்மிடம் தெரிவிக்கிறார்கள். அப்படி இல்லாவிட்டாலும் ஓரிருவர் அல்லது அதிகபட்சமாய் ஐந்தாறு பேர் சொன்னதை ஒட்டு மொத்த சமூகமும் சொல்வதாக ஒரு தோற்றத்தை உண்டுபண்ண முயல்கிறார்கள்.

இப்படி எல்லோர் மனங்களையும், கருத்துக்களையும் அறிந்து அவர்களுடைய பிரதிநிதிகளாய்  நம்மிடம் வந்து தெரிவிக்கும் சமூக சேவகர்களிடம் நாம் சில கேள்விகள் கேட்கத் தவறி விடுகிறோம். எல்லோரும் என்றால் குறிப்பாக யார் யார்?, சுமார் எத்தனை பேர்?, அதையேன் உன்னிடம் வந்து சொல்கிறார்கள்?, நீ அதைப்பற்றி அவர்களிடம் கருத்துக் கேட்கப் போனாயா என்றெல்லாம் கேட்டுப் பாருங்கள். உற்சாகம் வடிந்து உஷாராகிப் பின் வாங்கி விடுவார்கள். அது மட்டுமல்ல, இனி ஒருமுறை அந்த வாசகங்களோடு உங்களை நெருங்க மாட்டார்கள்.

 மற்றவர் கருத்துகளை அலட்சியம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ஓரிருவர் கருத்துக்களை சமூகத்தின் கருத்தாக எண்ணி அதன்படி நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி மாற்றிக் கொண்டே போனால் நம் சுயத்தை இழந்து, எவரோ சிலர் கருத்தின்படி இயங்கும் கைப்பாவையாக நாம் மாறிவிடுவோம். எது சரியோ, எது நம் தகுதிக்கு உகந்ததோ, அதைச் செய்ய வேண்டும், மாறானதைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்கிற அளவுகோல் வைத்தே நாம் இயங்குவோமானால் நம் அடையாளத்தையும், மரியாதையையும் நாம் என்றுமே தக்க வைத்துக் கொள்ளலாம்.
  

-என்.கணேசன்

Thursday, March 24, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 91


கௌதமும், மைத்ரேயனும் விளையாட சேர்ந்து போக, அவர்கள் பின்னாலேயே அக்‌ஷய் புறப்பட்டான்.

வருண் கேட்டான். “நீங்கள் ஏன் அப்பா அவர்கள் பின்னாலேயே போகிறீர்கள்?”

அக்‌ஷய் சொன்னான். “மைத்ரேயனை பாதுகாப்பில்லாமல் வெளியே அனுப்ப முடியாது வருண். அவனை ஆசானிடம் சேர்க்கும் வரை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.”

பிரயாணக்களைப்புக்கு அப்பா ஓய்வு கூட எடுக்க முடியாத நிலையை இந்த மைத்ரேயன் உருவாக்கி விட்டானே என்று வருணுக்குக் கோபம் வந்தது.

அக்‌ஷய் சொன்னான். “கூட நீயும் வாயேன். அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே நாம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம்”

வருணின் வருத்தம் உடனே குறைந்தது. தானும் கூடக்கிளம்பினான். வெளியே வந்த போது எதிர் வீட்டில் இருந்து வந்தனா ஸ்கூட்டியுடன் வெளியே வந்து கொண்டிருந்தாள். அக்‌ஷய்க்கு அவளைப் பார்த்தவுடன் வருண் முன்பு சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது. வந்தனாவைக் கூர்ந்து பார்த்தான். நல்ல லட்சணமான பெண். “வருண். இது தானே நீ சொன்ன பெண்” என்று முகம் மலரக் கேட்டான்.

வருண் பரிதாபமாகத் தலையசைத்தான். அக்‌ஷய் அவனிடம் பரபரப்போடு கேட்டான். “என்ன வருண், அறிமுகம் செய்து வைக்க மாட்டாயா?”

வருண் மெல்லக் கேட்டான். “அப்பா, எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?”

“சொல்லு வருண்”

“தயவு செய்து அந்தப் பெண் பற்றி என்னிடம் இனி எதுவும் கேட்காதீர்கள் அப்பா”

மகனின் முகத்தில் தாங்க முடியாத வலியைப் பார்த்த அக்‌ஷய் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட அது பற்றிப் பேச முற்படவில்லை. “சரி வருண் வா போகலாம்” . போகும் போது வந்தனாவை அக்‌ஷய் திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண் ஆரம்பத்தில் இருந்தே இந்தப்பக்கம் திரும்பவில்லை. இருவருக்கும் இடையே காதல் பிணக்கோ?

நடந்து போகும் போது வருண் மனம் மிகவும் கனத்திருந்தது. அவன் இது வரை அப்பாவிடம் இது போல் பேசியதில்லை. இன்று அப்படி அவன் பேசிய பின் கூட “ஏன்?” என்ற சின்னக் கேள்வி கூட கேட்காமல், கோபப்படாமல், அவனுடன் இயல்பாக அக்‌ஷய் நடக்க முடிந்தது அவனை பிரமிக்க வைத்தது. இது போல் ஒரு தந்தையைப் பெற அவன் முற்பிறவியில் பெரும் தவம் செய்திருக்க வேண்டும்!

மைதானத்தை நெருங்குவதற்கு முன் முன்னால் மைத்ரேயனுடன் சென்று கொண்டிருந்த கௌதமை அக்‌ஷய் அழைத்துச் சொன்னான். “யார் கேட்டாலும் இது அப்பாவின் நேபாள நண்பரின் மகன், விடுமுறையைக் கழிக்க இங்கு வந்திருக்கிறான் என்று சொல்ல வேண்டும், புரிந்ததா?”. பலமாகத் தலையசைத்த கௌதம் மைதானம் கண்ணுக்குத் தெரிந்ததும் மைத்ரேயன் கையைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடினான். அங்கே அவன் நண்பர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

மைதானத்தில் கௌதம் மைத்ரேயனை தன் மற்ற நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க அக்‌ஷயும், வருணும் ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டார்கள். கௌதமும், அவன் நண்பர்களுமாகச் சேர்ந்து மைத்ரேயனுக்கு கிரிக்கெட் விளையாடச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.....

“அப்பா நீங்கள் திபெத்தில் இருந்து எப்படித் தப்பித்து வந்தீர்கள்? அதை விவரமாகச் சொல்லுங்கள்” வருண் ஆர்வத்துடன் கேட்டான்.

பார்வையை அதிகமாக மைதானத்தை விட்டு எடுக்காமல் அக்‌ஷய் சொல்ல ஆரம்பித்தான். வருண் பிரமிப்புடன் கேட்டான். கடைசியில் “தயவு செய்து வாரத்திற்கு ஒரு தடவையாவது குளியுங்கள்” என்று நேபாள ராணுவ வாகன ஓட்டி சொன்னதைச் சொன்ன போது வருண் வயிறு குலுங்கச் சிரித்தான். சற்று முன் துக்கமாக இருந்த மகன் இப்போது இப்படிச் சிரிப்பது அக்‌ஷய்க்கு சந்தோஷமாக இருந்தது. வருணின் தோளில் கை போட்டு தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.

இருவரும் சிறிது நேரம் அமைதியாக சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மைத்ரேயன் அவர்களுக்கு இணையாகவே ஆடினான். கௌதமுக்குத் தன் புதிய நண்பன் இவ்வளவு வேகமாக கற்றுக் கொண்டு நன்றாக விளையாடுவதில் பரம சந்தோஷம். மைத்ரேயன் நன்றாக ஆடும் போதெல்லாம் அவனும் அவன் நண்பர்களும் ஆரவாரம் செய்து பாராட்டினார்கள். மைத்ரேயன் அப்போதெல்லாம் சின்னதாய் புன்னகை மட்டும் செய்தான்.

வருண் திடீரென்று கேட்டான். “இனி இவன் இங்கே இருக்கும் வரை இப்படிக் காவலுக்கு நீங்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டுமா?”

“ரகசியமாய் காவல் காக்க ஆட்களை அனுப்பச் சொல்லி இருக்கிறேன்” என்றான் அக்‌ஷய்.

“இங்கே கூட இவன் உயிருக்கு ஆபத்து வரும் என்று சந்தேகப்படுகிறீர்களா?”

“இல்லை. ஆனால் அலட்சியமாக இருக்க விரும்பவில்லை”



சேகர் இருட்டிய பிறகு தான் அக்‌ஷய் வீட்டுப்பக்கம் வந்தான். வரும் போதே அந்த வீட்டுக்கு ரகசியக்காவல் இருப்பதை மோப்பம் பிடித்து விட்டான். அவனையே ஒருவன் சந்தேகக்கண்ணோடு பார்ப்பதையும் கவனித்தான். மிக இயல்பாக நடந்து தன் வாடகை வீட்டை அடைந்தவன் இந்த நேரமாகப் பார்த்து கீழ் வீட்டு அம்மாள் கண்களில் பட்டுவிடுவோமோ என்று பயந்து கொண்டே வெளிக்கதவைத் திறந்து உள்ளே போனான். நல்ல வேளையாக உள்ளே ஜானகி தனக்குப் பிடித்த சீரியலில் ஆழ்ந்து போயிருந்தாள். சத்தம் இல்லாமல் மெல்ல மாடி ஏறி உள்ளே போனான். அவன் உள்ளே போன பிறகு தான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவன் சந்தேகம் தெளிந்தான்.

உள்ளே போனவன் விளக்கைக் கூடப் போடாமல், சத்தமில்லாமல் நடந்து ஜன்னல் அருகே வந்து எதிர் வீட்டை பைனாகுலர் வழியாகப் பார்த்தான்.

ஹாலில் சஹானாவின் இரண்டாம் கணவன் நீண்ட சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தான். அவன் வலது புறம் ஒரு அன்னியச் சிறுவன் அமர்ந்திருக்க, இடது புறம் கௌதம் அமர்ந்திருந்தான். அவன் காலருகே தரையில் வருண் அமர்ந்திருந்தான். வலது புற இடது புற தனி சோபாக்களில் சஹானாவும், மரகதமும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். எல்லார் முகங்களிலும் மகிழ்ச்சி..... சிறுவர்கள் அவனை ஒட்டி அமர்ந்திருந்தபடியே காலருகே வருணும் ஒட்டி அமர்ந்திருந்தது அவனுக்கு ஆத்திரத்தைத் தந்தது. “நாய்” என்று முணுமுணுத்தான்.

வருணும், சஹானாவும் அளவு கடந்து கீழ் வீட்டில் புகழ்ந்து கொண்டிருந்த அந்த ஆளை எல்லையில்லாத வெறுப்போடு சேகர் பார்த்தான். அவர்கள் எல்லாரும் சந்தோஷமாக எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள்.... இடை இடையே சஹானாவும், அவள் இரண்டாம் கணவனும் பார்த்துக் கொண்ட பார்வைகள் காதலர்களின் பார்வையாக இருந்தது. அவள் ஒரு முறை கூட அவனை அப்படிப் பார்த்ததாக சேகருக்கு நினைவில்லை. அப்படிப்பட்டவள் திருமணமாகி பன்னிரண்டு வருடம் முடிந்து கூட இப்போதைய கணவனை அப்படிப் பார்ப்பதும் அவனும் அவளை அப்படிப் பார்ப்பதும் சேகருக்குள் வெறுப்பு கலந்த பொறாமைத் தீயை மூட்டியது. மரகதம் பெருமிதத்துடன் எல்லோரையும் பார்ப்பது எரிச்சலைக் கிளப்பியது. ’இவளெல்லாம் ஒரு தாய்’

திடீரென்று சேகருக்கு ஒரு சந்தேகம் வந்தது. இந்த வீட்டுக்கு எதற்கு ரகசியக் காவல்? காவல் காப்பவர்கள் யார்? யாரைக் காக்கிறார்கள்? காவலுக்குக் காரணம் அக்‌ஷய்க்கு வலது புறம் அமர்ந்திருக்கும் அந்த அன்னியச் சிறுவனாக இருக்குமோ? அந்தச் சிறுவனைக் கூர்ந்து கவனித்தான். நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவனா, இல்லை நேபாள், திபெத் போன்ற வெளிநாட்டைச் சேர்ந்தவனா? கீழ் வீட்டில் வருண் பேசிய போது அந்த ஆள் நேபாள் போயிருந்ததாய் சொன்னதாக நினைவு. நேபாளுக்குப் போனவன் அங்கிருந்து அந்தச் சிறுவனைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டானோ? அந்தச் சிறுவனையே பார்த்துக் கொண்டு இருந்த போது அந்தச் சிறுவனும் அவனைப் பார்த்தான்.

அந்தச் சிறுவனின் கூரிய ஊடுருவிய பார்வையில் சேகர் ஒரு கணம் வெலவெலத்துப் போனான். எதிர் வீட்டில் இருட்டில் நின்று கொண்டு இருக்கும் சேகரை அந்தச் சிறுவன் பார்க்க வழியே இல்லை. சேகரே பைனாகுலர் வைத்துக் கொண்டு தான் இரண்டு ஜன்னல்கள் தாண்டி வெளிச்சத்தில் இருக்கும் அவர்களையே தெளிவாகப் பார்க்க முடிகிறது. அப்படி இருக்கையில் அந்தச் சிறுவன் எப்படி அவனைப் பார்க்க முடியும். ஆனாலும் அந்தச் சிறுவன் நேராகப் பார்த்ததை சேகர் மிகத் தெளிவாகவே உணர்ந்தான். குப்பென்று வியர்க்க சேகர் சுவரோரம் மறைந்து கொண்டான்.



மாரா டோக்கியோவில் இருக்கும் போது அவனுக்கு அந்த அலைபேசி அழைப்பு வந்தது. “மைத்ரேயன் தங்கி இருக்கும் வீட்டுக்கு ரக்சியப் போலீஸ் காவல் இருக்கிறது”

அந்தத் தகவல் மாராவை ஆச்சரியப்படுத்தவில்லை. அமானுஷ்யன் அப்படி அலட்சியமாய் இருக்கக் கூடியவன் அல்ல. ”எத்தனை பேர் காவலுக்கு இருக்கிறார்கள்?”

“வீட்டருகே, தெருமுனை எல்லாம் சேர்ந்து ஐந்து பேர்....”

ஐந்து பேர் என்பதை மாரா குறைத்து மதிப்பிடவில்லை. ஐந்து பேரில் ஒருவனிடமிருந்து ஒரு அழைப்பு போனால் போதும், அங்கு ஐம்பது பேர் உடனடியாகக் கூடிவிடும் ஏற்பாடு கண்டிப்பாக இருக்கும். மாரா கேட்டான். “அவர்கள் இருப்பதை நீங்கள் கண்டுபிடித்ததை அவர்கள் தெரிந்து கொண்டு விடவில்லையே....”

“இல்லை.... நாங்கள் மூன்று பேர் மூன்று நேரங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே அங்கு போய் வந்து கலந்து பேசிக் கண்டு பிடித்த தகவல் இது.....”

“நல்லது.... இனி யாரும் அந்தப் பக்கம் எக்காரணம் வைத்தும் போய் உளவு பார்க்க வேண்டியதில்லை. அப்படிப் போனால் அவர்களுக்கு சந்தேகம் பிறந்து விடும். அதற்கு சிறிதும் இடம் தர வேண்டாம். ஆனால் அந்தப் பகுதியில் இருந்து மைத்ரேயன் வெளியேறினால் அது கண்டிப்பாக நமக்குத் தெரிய வேண்டும். அதனால் அப்பகுதி எல்லைகளில் எப்போதும் நம் ஆட்கள் இருக்கட்டும்....”

அலைபேசியைக் கீழே வைத்த மாரா தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.


(தொடரும்)

என்.கணேசன்



Monday, March 21, 2016

யோகியிடம் பெற்றோர் கேட்ட நேரெதிர் வரங்கள்!


மகாசக்தி மனிதர்கள் - 53

ரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம் அருணாச்சலம் சொன்னான். “ஐயா தங்கள் குழந்தை, வீட்டுத் திண்ணையில் இருந்து கீழே விழுந்து விட்டது. அதனால் அதன் கை ஒடிந்து விட்டது. நீங்கள் உடனே கிளம்புங்கள்

அதைக் கேட்ட ஆசிரியர் பதற்றத்துடன் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றார். வழியிலேயே அவர் வீட்டு வேலையாள் வந்து கொண்டிருந்தான். அவரிடம் அவர் குழந்தையின் கை ஒடிந்த விஷயத்தைச் சொன்னான். வீட்டுக்குச் சென்ற ஆசிரியர் தன் குழந்தையின் சிகிச்சைக்கு ஆக வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டார். மறு நாள் பள்ளிக்கு வந்தது முதல் அவர் அருணாச்சலத்தின் எதிரில் அமரவும் தயங்கினார். மகானாகவோ அல்லது மகேசுவரனாகவோ அவர் நினைக்க ஆரம்பித்து விட்ட பிள்ளை முன் அமர அவருக்குத் தயக்கமாக இருந்தது.  

அருணாச்சலம் “ஏன் ஐயா நிற்கிறீர்கள். அமருங்கள்என்று சொன்ன பின் தான் அவர் அமர்ந்தார்.  மாணாக்கர்கள் வணங்க வேண்டிய ஆசிரியரே இப்படித் தன்னிடம் வணங்கி நிற்கிற மனநிலைக்கு வந்ததைக் கண்ட பின் அருணாச்சலம் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். ஆக அருணாச்சலத்தின் பள்ளிக் காலம் மூன்றே மாதங்களில் முடிந்து விட்டது.  பெற்றோரும், ஆசிரியருமே வணங்க ஆரம்பித்த அருணாச்சலத்தை இனி நாமும் மரியாதையுடனேயே குறிப்பிடுவோம்.

தம்பி நமசிவாயத்தின் படிப்பும் ஒரு வருடத்தில் முடிவுக்கு வந்தது. வீட்டிலேயே இருந்து தந்தை சிவசிதம்பரம் பிள்ளையின் சிவபூஜைக்கு வேண்டிய வில்வம், பூக்கள் முதலானவற்றைச் சேகரித்துக் கொண்டு வருவதும், பூஜைக்கு வேண்டிய மற்ற வேலைகளைச் செய்வதும் நமசிவாயத்தின் வேலையாக இருந்தது.

அவர்கள் வீட்டருகில் ஒரு பிள்ளையார் கோயில் நந்தவனம் இருந்தது. அங்கு சென்று தான் நமசிவாயம் சிவபூஜைக்கு வேண்டிய வில்வ இலைகளையும், பல வகைப் பூக்களையும்  பறித்துக் கொண்டு வருவது வழக்கம். அப்படி நமசியவாயம் செல்கையில் ஒரு நாள் அருணாச்சலம் தன் தம்பியிடம் சொன்னார். “நீ போகும் வழியில் தேங்காய், மாங்காய் கீழே விழுந்து கிடந்தால் அதை எடுக்காதே. அப்படி எடுத்தால் அது தெய்வக்குற்றம் ஆகி விடும்

சரியென்று கிளம்பிய நமசிவாயம் அண்ணன் சொன்னபடியே கட்டுப்பாட்டோடு இருந்து பூஜைப் பொருள்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தான். ஆனால் சிறுவன் அல்லவா? எத்தனை நாட்கள் அப்படி மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும்? ஒரு நாள் வழியில் விழுந்து கிடந்த தேங்காயை உடைத்துத் தின்று விட்டு போய் வழக்கம் போல் வில்வம், பூக்கள் எல்லாம் பறித்துக் கொண்டு வந்தான்.

நடந்ததைத் தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த அருணாச்சலம் தம்பியிடம் சொன்னார். “நமசிவாயம். இன்று நீ செய்த தவறுக்குப் பரிகாரம் கங்கையில் குளித்து விசுவேஸ்வரரைத் தரிசிப்பது மட்டுமே. இனி நீ பூஜைப் பொருள்கள் கொண்டு வரச் செல்ல வேண்டாம்

இக்காலத்தில் இதைப் படிக்கையில் இந்தச் சின்னத் தவறுக்கு இப்படி ஒரு பரிகாரமா, தண்டனையா என்ற கேள்விகள் மனதில் எழுவது இயற்கை. ஆனால் அக்காலத்தில் தினசரி பூஜைகளே வேள்விகள் போல கடும் நியதிகளுடனும், பக்தியுடனும் செய்யப்பட்டன. அந்த நியதிகளை மீறுவதோ, பக்திக்குறைவோ பெரும் குற்றமாகவே பார்க்கப்பட்டன. இறைவனுக்குப் பூஜை முடியாமல் உண்பது கூட ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாக இருந்தது. உண்மையாகவே அது குற்றம் என்கிற பாவனையில் தான் அருணாச்சலம் அப்படிச் சொன்னாரா, இல்லை நமசிவாயத்தின் துறவற வாழ்க்கைக்கான காலம் வந்து விட்டதை உணர்ந்து சொன்னாரா என்பது நமக்குத் தெரியாது.

நமசிவாயம் குற்ற உணர்ச்சியுடன் மிகுந்த மனவருத்தமும் அடைந்தான். சில நாட்கள் கழித்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவன் காசி யாத்திரை புறப்பட்டுச் சென்று விட்டான். பெற்றோரும் உறவினரும் அவனைத் தேடியலைந்து சலித்தனர். சிவசிதம்பரம் பிள்ளையும் மீனாம்பிகையும் கடைசியில் மூத்த மகனிடமே வந்து நின்றனர்.

அருணாச்சலம் “நமசிவாயம் காசி யாத்திரைக்குச் சென்றிருக்கிறான். அவனைக் கண்டுபிடித்துத் திரும்ப வரச் சொன்னாலும் வர மாட்டான். இல்லற வாழ்க்கையை விட்டு விட்டு துறவற வாழ்க்கைக்கு அவன் திரும்பும் காலம் வந்து விட்டதுஎன்று சொன்னார்.

இளைய மகனை நிரந்தரமாகப் பிரிந்திருக்க நேர்ந்தது பெற்றோர்க்குப் பெருந்துக்கத்தைத் தந்தது. அதைக் கண்ட அருணாச்சலம் அமைதியாகச் சொன்னார். “நீங்கள் முற்பிறவிகளில் பெற்றெடுத்த பிள்ளைகள் தற்போது எங்கே? அவர்கள் உங்களுடனா இருக்கிறார்கள்? அவர்களைப் பிரிந்திருக்கும் எண்ணம் கூட தங்களிடம் இல்லையே. அப்படி இருக்கையில் நமசிவாயத்தைப் பற்றி மட்டும் எண்ணி ஏன் வருந்துகிறீர்கள்?

உலக வாழ்வில் நம்முடன் நிரந்தரமாக நிறுத்திக் கொள்ள எந்த உறவும் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட காலம் வரை நம்முடன் இருப்போர் அந்தக் காலம் முடிந்த பின் விலகவே செய்வார்கள். இது தான் இயற்கை. இயற்கையே இதுவாக இருக்கையில் இதற்கு வருந்தி என்ன பயன் என்கிற வகையில் அருணாச்சலம் செய்த உபதேசம் ஒரு வகையில் அவர்களுக்குப் புரிந்தாலும் இன்னொரு வகையில் மாயா பாசம் தன் வேலையைச் செய்தே வந்தது. காலம் நகர்ந்தது. ஒரு கட்டத்தில் தங்களுடைய மரண காலமும் நெருங்குவதை அவர்கள் இருவரும் உணர்ந்தார்கள். ஒருவர் மரணத்தை இன்னொருவர் சந்திக்கிற மனோபலம் இருவரிடமுமே இருக்கவில்லை.

ஒரு நாள் சிவசிதம்பரம் பிள்ளை அருணாச்சலத்திடம் வந்து வேண்டிக் கொண்டார். எனக்கு மீனாம்பிகையின் பிணத்தைப் பார்க்கும் சக்தி இல்லை. அதனால் அவளுக்கு முன்பே நான் இறந்து விட வேண்டும். என் ஈமக்கடன்களை தங்கள் கையாலேயே செய்து முடிக்க வேண்டும். இந்த வரத்தை மட்டும் எனக்குத் தாங்கள் தந்தருள வேண்டும்.

அதே போல மீனாம்பிகையும் மகனிடம் தனியாக வந்து வேண்டினாள். “நான் சுமங்கலியாக இறக்க வேண்டும். என் ஈமக்கடன்களை தங்கள் கையாலேயே செய்து முடிக்க வேண்டும்

இளைய மகனும் தற்போது அருகில் இல்லாததால் தங்கள் ஈமக்கடன்களை மூத்த மகனே செய்து முடிக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்பட்டது இயற்கையே. ஆனால் தங்கள் மரணம் பற்றி மட்டும் பெற்றோர் இருவரும் கேட்ட வரங்கள் ஒன்றுக்கு ஒன்று எதிர் மாறாக இருந்தன.

ஒரு நாள் பெற்றோரை அழைத்து அருணாச்சலம் சொன்னார். “இன்னும் எட்டு நாட்களில் எனது கர்மம் முடிந்து விடும். நீங்கள் இருவரும் இனி சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டும், சிவ தியானம் செய்து கொண்டும் இருங்கள்

பெற்றோர் தங்கள் தலைகளில் இடி விழுந்தது போல் உணர்ந்தார்கள். தங்கள் ஈமக்கடனை முடிக்க மகனை வேண்டி நின்றால் மகன் தன் கர்மம் எட்டு நாளில் முடிவடையும் என்று சொல்கிறாரே, அப்படியானால் எட்டு நாட்களில் சமாதி அடையப் போகிறார் போல இருக்கிறது என்று எண்ணிக் கொண்டார்கள். இறைவன் தங்களைச் சோதிப்பதாக எண்ணிய அந்தப் பெற்றோர் அருணாச்சலம் சொன்னதைத் தங்கள் உற்றார் உறவினருக்கும் தெரிவித்து விட்டு சிவன் வழிபாட்டில் அந்த எட்டு நாட்களையும் கழித்தார்கள்.

எட்டாவது நாள் சுவாமிகளின் கடைசி தரிசனத்திற்காக உறவினர்கள் வந்து விட்டார்கள்.  பெற்றோர் இருவரும் அருணாச்சலத்தின் முன்னால் அமர்ந்து மனமுருக சிவ நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று எழுந்த அருணாச்சலம் தன் கையால் தாய், தந்தை நெற்றியில் திருநீறிட்டார்.  சிறிது நேரத்தில் பெற்றோர் இருவரும் மூர்ச்சையாகி இறைவனடி சேர்ந்தார்கள்.

வந்திருந்த உற்றார், உறவினர்கள் திகைப்படைந்தார்கள். அருணாச்சலம் தன் கர்மம் முடியும் என்று குறிப்பிட்டது பெற்றோருக்குத் தான் செய்ய வேண்டிய கர்மத்தைத் தான் என்பது அப்போது தான் அவர்களுக்குப் புரிந்தது. எதிர்மாறான வரங்களைப் பெற்றோர் கேட்டிருந்தாலும் அவர்களது ஒரே கால மரணத்தில் அதை நிறைவேற்றி விட்டு அவர்களுக்குக் கொள்ளி வைத்து ஈமக்கடன்களை முடித்து விட்டு உடுத்திய ஆடையோடு அங்கிருந்து கிளம்பிய அருணாச்சலம் பின் தேசாந்திரியாய் பல ஊர்களுக்குப் பயணிக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 21.08.2015

  

Thursday, March 17, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 90


க்‌ஷயைப் பார்த்தவுடன் முதலில் ஓடிப்போய் அணைத்துக் கொண்டவன் வருண் தான். அணைத்துக் கொண்டவுடன் அவனையும் மீறிக் கண்ணீர் பொங்கியது. மகனின் கண்ணீர் ஆனந்தக் கண்ணீர் மட்டுமல்ல, அதில் வேறு ஏதோ ஆழமான துக்கமும் இருக்கிறது என்பதை உடனேயே அக்‌ஷயால் உணர முடிந்தது. அப்போதே என்ன என்று ஆராயும் சூழல் இல்லாததால் அது பற்றி எதுவும் கேட்காமல் மகனைப் பாசத்தோடு இறுக்கி அணைத்து தட்டிக் கொடுத்த அக்‌ஷய் “அழாதே.... அப்பா தான் வந்து விட்டேனே...” என்று மட்டும் சொன்னான்.

சஹானாவும், மரகதமும் நிறைந்த மனதுடன் முன் வந்து நிற்க கௌதம் “அப்பா” என்று ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டான். இளைய மகனைத் தூக்கி முத்தமிட்ட அக்‌ஷய் அவனை மைத்ரேயனிடம் அறிமுகப்படுத்த பின்னால் திரும்பினான். மைத்ரேயன் இங்கு வந்து சேரும் வரை அதிகம் கேட்டது கௌதமைப் பற்றித்தான்....

அது வரை அக்‌ஷய் பின்னால் மறைவில் இருந்த மைத்ரேயன் முன்னால் வந்து நின்றான். அக்‌ஷயின் வரவில் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்த அந்தக் குடும்பத்தினருக்கு அப்போது தான் மைத்ரேயனும் வந்திருக்கிறான் என்பது உறைத்தது. அனைவரும் அவனையே ஆர்வத்துடன் பார்த்தனர். புத்தரின் அவதாரம் என்று சொல்லப்படும் அவனை மரகதம் கைகூப்பிக் கொண்டே பார்த்தாள். சஹானாவுக்கு அவன் தோற்றத்தில் புத்தரின் அவதாரமாகத் தெரியவில்லை. சாதாரணமாகவே தெரிந்தான். வருண் அவனை ஒரு பிரச்னையாகவே பார்த்தான். ’அப்பா இவனை ஏன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வர வேண்டும்?’ என்ற கேள்வியே அவனிடம் பிரதானமாகத் தங்கியது. கௌதம் தான் மைத்ரேயனைப் பார்த்து முதலில் புன்னகைத்தவன்.

மைத்ரேயன் எல்லோரையும் ஒரு முறை அமைதியாகப் பார்த்தான் என்றாலும் அவன் பார்வை கௌதம் மீது தான் கடைசியாகத் தங்கியது. ”நீ தான் கௌதமா?” என்று புன்னகையுடன் கேட்டான். கௌதம் ”ஆமாம்” என்றான். எல்லோரையும் மைத்ரேயனுக்குப் புன்னகையுடன் அக்‌ஷய் அறிமுகப்படுத்திய போது மைத்ரேயன் மரியாதையுடன் தலையைத் தாழ்த்தி வணக்கம் சொன்னான். பிறகு அக்‌ஷய் அவனை உள்ளே அழைத்துப் போக கௌதமிடம் சொன்னான்.

மைத்ரேயனைத் தன் அறைக்கு அழைத்துப் போன கௌதம் “நீ கடவுளா?” என்று வெகுளித்தனமாகக் கேட்டான்.

மைத்ரேயன் அதே கேள்வியைப் புன்னகையுடன் கேட்டான். “நீ கடவுளா?”

கௌதமுக்கு சிரிப்பு வந்தது. “நானா.... நான் கடவுள் இல்லை”

மைத்ரேயனும் சிரித்துக் கொண்டே சொன்னான். “நானும் கடவுள் இல்லை....”

கௌதம் நிம்மதி அடைந்தான். ’கடவுள் இல்லை என்றால் இவனையும் விளையாடச் சேர்த்துக் கொள்ளலாம்..... ‘ என்கிற எண்ணம் அவன் மனதில் ஓடியது.

மைத்ரேயன் அவனிடம் கேட்டான். “நீ என்னையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்வாயா?....”

கௌதம் அதை விட இனிமையான வாக்கியத்தை அவனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. “உனக்கும் விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்குமா?” என்று மகிழ்ச்சி பொங்க கேட்டான்.

மைத்ரேயன் புன்னகையுடன் ஆமென்று தலையசைத்தான். கௌதமுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தன் விளையாட்டுப் பொருள்களை எல்லாம் ஆர்வத்துடன் மைத்ரேயனுக்குக் காட்ட ஆரம்பித்தான்....

சஹானா தாழ்ந்த குரலில் அக்‌ஷயிடம் கேட்டாள். “இந்தப் பையன் புத்தரின் அவதாரம் தானா?”

”அப்படித்தான் தோன்றுகிறது.....”

“இங்கே ஏன் அவனைக் கூட்டிக் கொண்டு வந்தீர்கள் அப்பா?” வருண் கேட்டான்.

மைத்ரேயனை ஆசானிடம் ஒப்படைக்க அங்கே நிலைமை சரியில்லை என்றும் அவனைப் பாதுகாப்பாக வைக்க ஒரு இடத்தை அவர்கள் தயார்ப்படுத்தும் வரை அவனை இங்கேயே தங்க வைக்க வேண்டியிருக்கிறது என்றும் அக்‌ஷய் தாழ்ந்த குரலிலேயே தெரிவித்தான்.

“இவரை எங்கே தங்க வைப்பது?...” மரகதம் கேட்டாள். தெய்வாம்சம் பொருந்திய ஒரு அவதார புருஷர் தங்க ஏதாவது சிறப்பு ஏற்பாட்டை வீட்டில் செய்ய வேண்டுமா என்கிற கேள்வி அவள் மனதில்...

“கௌதமுடனேயே தங்குவதைத் தான் மைத்ரேயன் விரும்புகிறான். அவனுடன் நன்றாக விளையாட வேண்டுமாம்.....”

மூவரும் அவனைத் திகைப்புடன் பார்த்தார்கள். வருண் வாய் விட்டே கேட்டான். “புத்தரின் உண்மையான அவதாரம் இப்படி ஆசைப்படுமா?”

“அவதார புருஷர்கள் நம் சராசரி அறிவுக்குள்ளும், எதிர்பார்ப்புகளுக்குள்ளும் அடங்குவதில்லை வருண்.....” என்ற அக்‌ஷய் சம்யே மடாலயத்தில் மைத்ரேயன் காலில் தர்மசக்கரம் ஒளிர்ந்ததையும், சைத்தான் மலையில் ஆபத்தான நீலக்கரடி அவனுக்கு அடங்கி அவனுடன் தங்கியதையும் சுருக்கமாகச் சொன்னான். ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் அவன் கடைசியில் சொன்னான். “அவன் இருக்கையில் நீங்கள் என்ன நினைத்தாலும் சரி, அதைச் சொல்லாமலேயே தெரிந்து கொண்டு விடுவான்.... அவன் தோற்றத்தை வைத்து குறைவாக எடை போட்டு விடாதீர்கள்...!”

அவர்கள் திகைத்தார்கள். வருண் முகத்தில் ஈயாடவில்லை....


”தாங்கள் கேட்டிருந்த பூஜைப்பொருள் சம்பந்தமாக உங்களிடம் பேச ஒருவர் வந்திருக்கிறார்.....” என்று புத்தபிக்கு ஒருவர் ஆசானிடம் வந்து சொன்னார்.

ஒரு தனியறையில் பிரார்த்தனையில் இருந்த ஆசானுக்கு அக்‌ஷயே வந்து விட்டானோ என்கிற சந்தேகம் ஒரு கணம் வந்தது. “அழைத்து வாருங்கள்” என்று சொல்லி விட்டு இருப்பு கொள்ளாமல் காத்திருந்தார். ஆனால் வந்த மனிதனை அவர் இதற்கு முன் பார்த்ததில்லை. உயரமாக, வாட்டசாட்டமாக இருந்த அந்த மனிதன் அவரைக் கூர்ந்து பார்த்து அவர் ஆசான் தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டது போல இருந்தது. பின் ஆசானிடம் வணக்கம் தெரிவித்த அவன் தன் அலைபேசியை எடுத்து ஒரு எண்ணை அழுத்தி விட்டுப் பேசினான். “ஆசானுடன் இருக்கிறேன்” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டு மறுபக்கம் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டான். பின் அவன் ஆசானிடம் மிகத் தாழ்ந்த குரலில் சொன்னான்.

“இந்திய உளவுத்துறையில் இருந்து வருகிறேன். தங்களை சில ஒற்றர்கள் வெளியே இருந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் அலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இந்த நிலையில் மைத்ரேயரைத் தங்களிடம் ஆபத்தில்லாமல் சேர்க்க முடியாது என்றே எங்களுக்குப் படுகிறது. எங்கள் ஆள் ஒருவர் இரண்டு நிமிடத்தில் தலாய் லாமாவைச் சந்திப்பார். அவர் அலைபேசியில் இருந்து தலாய் லாமா என் அலைபேசிக்குத் தொடர்பு கொண்டு உங்களிடம் பேசுவார். இருவரும் சேர்ந்து மைத்ரேயர் விஷயத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்துச் சொல்லுங்கள்.... நான் வெளியே காத்திருக்கிறேன்....”

சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் அவரிடம் தன் அலைபேசியை அவரிடம் தந்து விட்டு அவன் வெளியேறினான். ஆசானுக்கு அந்த ஏற்பாடு மலைப்பைத் தந்தது. என்னமாய் யோசிக்கிறார்கள்! வெளியே இந்த புத்த மடாலயத்தை ஒற்றர்கள் கண்காணிப்பதை அவர் அறிவார். அவருடைய அலைபேசி எண் கண்டுபிடிக்கப்பட்டு ஒட்டுக் கேட்கப்படும் என்று தான் அவர் எண்ணி இருக்கவில்லை. ஆனால் அக்‌ஷய் அன்று அவரிடம் கவனமாகப் பேசிய விதம் பிறகு ஒரு சந்தேகத்தை எழுப்பித் தான் விட்டிருந்தது. மைசூரின் அருகில் குஷால்நகர் என்ற ஊரை அடுத்திருந்த பைல்குப்பா என்ற இடத்தில் உள்ள ஒரு பெரிய திபெத்திய மடாலயத்தில் தங்கி இருந்த அவருக்கு அங்கிருந்த பொதுத் தொலைபேசியிலோ, மற்றவர்களின் அலைபேசியிலோ தலாய்லாமாவிடம் அடுத்த கட்ட ஆலோசனை பற்றி பேசவும் தைரியம் வரவில்லை. அதனால் அமைதியாகக் காத்திருந்த அவருக்கு இந்திய உளவுத்துறை தலாய் லாமாவுடன் பேச ஏற்படுத்தித் தந்திருந்த இந்த வாய்ப்பு பெரிய ஆசுவாசத்தை ஏற்படுத்தியது....

அந்த அலைபேசி இசைத்தது. ஆசான் பேசினார். “ஹலோ...”

“வணங்குகிறேன் ஆசானே!” தலாய் லாமாவின் குரல் மெல்ல கேட்டது.

“சொல் டென்சின். புத்தரின் அருளால் மைத்ரேயர் பத்திரமாய் இந்தியா வந்து விட்டார். அடுத்தது என்ன என்பதை நீ தான் முடிவு செய்ய வேண்டும்.”

”ஆசானே நேற்று அவர் பத்திரமாய் வந்து சேர்ந்த செய்தியைக் கேட்டு நிம்மதி அடைந்தேன். ஆனால் நேற்றிரவு நான் கண்ட துர்சொப்பனம் அந்த நிம்மதியைப் போக்கடித்து விட்டது. மைத்ரேயர் பெரும் ஆபத்தில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டேன். மிகவும் தத்ரூபமான கனவு... அது போன்ற கனவுகள் மெய்யாகாமல் போனதில்லை என்பது என் கடந்த கால அனுபவம்..... நம் குருநாதர் ஓலைச்சுவடிகளின்படி மைத்ரேயருக்கு இன்னும் பதினோரு மாத காலம் ஆபத்துக்காலம் என்பதும் நினைவில் வந்து என்னை பயமுறுத்துகிறது. சம்யே மடாலயத்தில் அவர் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து போல் இந்தியாவில் கூட எப்போது வேண்டுமானாலும் நேரலாம்...” தலாய் லாமாவின் குரல் கவலையுடன் ஒலித்தது.

ஆசான் திகைத்தார். தலாய் லாமா போன்றவர்களுக்கு வரும் கனவுகள் விண் உலகத்திலிருந்து வரும் செய்திகள் அல்லது எச்சரிக்கைகள் என்பதில் அவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.....

”சரி என்ன செய்யலாம்.....?” ஆசான் கேட்டார்.



“அப்பா, நான் இவனையும் விளையாடக் கூட்டிக் கொண்டு போகட்டுமா?”...” கௌதம் மைத்ரேயனுடன் வந்து கேட்டான். அவன் முகத்தில் உற்சாகம் பொங்கி இருந்தது. அவனைப் பொருத்த வரை விளையாட ஒரு நண்பன் கூடுதலாய் கிடைத்து விட்டான். இருவரும் கை கோத்து தான் நின்றிருந்தார்கள்.

“எங்கே என்ன விளையாடப் போகிறீர்கள்?” அக்‌ஷய் மகனைக் கேட்டான்.

“மைதானத்தில் கிரிக்கெட் விளையாடப் போகிறோம். இவனுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாதாம்... சொல்லிக் கொடுக்கச் சொல்கிறான்.....”

அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை தவழ்ந்தது. இவன் நம் மனதைப் படிப்பது போல் இவன் மனதையும் படிக்க முடிந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அக்‌ஷய்க்குத் தோன்றியது.....

திபெத்திலிருந்து நீண்ட தூரம் வந்து விட்ட போதும் மைத்ரேயனுக்கு ஆபத்து முழுமையாக விலகி விடவில்லை என்பதை அவன் அறிவான். அதனால் அவன் தன் எச்சரிக்கை உணர்வை இந்தியா வந்து சேர்ந்த பிறகும் சிறிதும் தளர்த்தவில்லை. புதுடெல்லி விமான நிலையத்தில் கூட மைத்ரேயன் ஒரு ஆளை ஒரே ஒரு கணம் பார்த்த விதம் அவனுக்கு அபாயச்சங்கை ஊதியது. ஆனால் நல்ல வேளையாக அந்த ஆள் ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தவர் அவர்கள் பக்கம் திரும்பக்கூட இல்லை. விமானத்திலும் கூட அப்படித்தான் இருந்தார். கோயமுத்தூரில் கால்டாக்சியில் வரும் போது கூட தங்களை ஏதாவது வாகனம் பின் தொடர்கிறதா என்று அவன் பார்த்துக் கொண்டே இருந்தான். இல்லை. உணர்ந்த ஆபத்து பிரமை என்று வீடு வந்து சேர்ந்த பின் தான் நிச்சயமாகியது.

“அப்பா நாங்கள் போகட்டுமா?” கௌதம் பொறுமை இழந்தான்.

அக்‌ஷய் “சரி போங்கள்” என்றான்.

(தொடரும்)

என்.கணேசன்

Monday, March 14, 2016

முக்காலமும் அறிந்த ஞானக்குழந்தை!

மகாசக்தி மனிதர்கள்-52

மிழகம் ஈன்றெடுத்த தவயோகிகளில் மிக முக்கியமானவர் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள். சாட்சாத் அருணாச்சலேஸ்வரரே மனித வடிவில் பிறவி எடுத்து வந்ததாகப் பலரும் அவரை நம்பி வணங்கினார்கள். இன்றும் அவர் ஜீவசமாதியில் ஆன்மிக அலைகள் பெரும் சக்தியுடன் மையம் கொண்டிருப்பதாக பல பக்தர்கள் அனுபவித்து உணர்ந்து குறிப்பிடுகிறார்கள். அவர் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எந்த விதத்திலும் சாதாரணமாக இருந்து விடாமல் அற்புதங்களின் அணிவகுப்பாகவே இருந்திருக்கிறது. சுமார் 35 ஆண்டு காலமே வாழ்ந்த அந்த யோகியின் வாழ்க்கையையும், அதில் நடந்த சுவாரசியமான அற்புதங்கள் சிலவற்றையும் பார்ப்போம்!  

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் சைவ சமயத்தில் மிகுந்த பற்று கொண்ட சிவசிதம்பரம் பிள்ளை, மீனாம்பிகை என்ற தம்பதியர் புத்திர பாக்கியம் இல்லாமல் மனக்கிலேசத்துடன் திருச்சிக்கு அருகில் கீழாலத்தூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்தார்கள். சில காலம் கழித்து அவர்கள் திருவண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வணங்கி விரதம் இருந்த பிறகு அவர்களுக்கு ஒரு வருடத்திற்குள் (சுமார் கி.பி 1800 ஆம் ஆண்டு) ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அருணாச்சலம் என்று பெயர் வைத்தார்கள். அடுத்த வருடமே இன்னொரு ஆண் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைக்கு நமசிவாயம் என்ற பெயர் வைத்து இரண்டு குழந்தைகளையும் பாசத்துடன் வளர்த்தார்கள்.

இளைய பிள்ளை நமசிவாயம் மற்ற பிள்ளைகள் போலவே இருந்து வளர மூத்த பிள்ளை அருணாச்சலம் மட்டும் வித்தியாசமாக இருந்தான். குழந்தையாக இருக்கும் போதே அருணாச்சலம் பசிக்காக அழவில்லை. தாய் பால் தந்தால் குடித்த அந்தக் குழந்தை, தரா விட்டால் அமைதியாகவே படுத்துக் கிடந்தது. புதிய பொருள்களை அதிசயத்துடன் பார்க்கவோ, விளையாடவோ செய்யாமல், எதைக் கண்டும் பயந்தும் போகாமல், எப்போதும் மோன நிலையிலேயே இருந்தது. எழுந்து நடமாட ஆரம்பிக்கும் பருவம் வந்தவுடனே பத்மாசனத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தது. பேச்சு வர வேண்டிய வயதிலும் அது ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மந்த புத்தி உள்ள தங்கள் மூத்த குழந்தை ஊமையாகவும் இருக்கிறதே என்று அந்தப் பெற்றோர் வருந்தினார்கள். மூத்த குழந்தையின் மழலைச் சொல் கூடக் கேட்க முடியாததைத் தங்களின் பெரிய துர்ப்பாக்கியமாகவே அவர்கள் கருதினார்கள். 

மகனின் இந்த நிலைக்குத் தங்கள் ஊழ்வினையே காரணமாக இருக்க வேண்டும் என்று நம்பிய அந்தப் பெற்றோர் அதைப் போக்க என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று புரியாமல் தவித்தார்கள். அருணாச்சலத்தின் வயது ஐந்தைக் கடந்த போது கீழாலத்தூருக்கு ஒரு சிவனடியார் வந்தார். சிவசிதம்பரம் பிள்ளை அந்தச் சிவனடியாரைத் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார். அவரை வணங்கி வரவேற்று தங்கள் மூத்த மகனைப் பற்றிச் சொல்லி சிவசிதம்பரம் பிள்ளையும், மீனாம்பிகையும் வருத்தப்பட்டார்கள். எங்கள் மகனை எப்படியாவது பேச வைத்து நாங்கள் காதாரக் கேட்டு மகிழ எங்களுக்கு அருள் புரியுங்கள் என்று மனம் உருகி வேண்டிக் கொண்டார்கள்.  

சிவனடியார் உங்கள் மகனைக் காட்டுங்கள் என்று சொன்னார். உள் அறையில் கண்களை மூடிக் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்திருந்த அருணாச்சலத்தைப் பெற்றோர் சிவனடியாருக்குக் காட்டினார்கள். முதல் பார்வையிலேயே அருணாச்சலம் ஊமை அல்ல என்பதைச் சிவனடியார் கண்டு கொண்டார். அவர் சிவசிதம்பரம் பிள்ளையிடம் “உங்கள் மகன் ஊமை அல்ல. அவனிடம் நீங்கள் தாராளமாகப் பேசலாம். ஏதாவது பேசுங்கள்என்று சொன்னார்.

சிவசிதம்பரம் பிள்ளை தன் மகனிடம் கேட்டார். “மகனே, கண்களை மூடி நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

கேள்வி கேட்டாரே ஒழிய அவர் பதிலை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இத்தனை நாட்களாய் ஒரு வார்த்தை கூடப் பேசாத தன் மூத்த பிள்ளை திடீரென்று பேசுவான் என்கிற நம்பிக்கை அவருக்கு உடனடியாக வந்து விடவில்லை. ஆனால் அதிசயமாக அவர் மகன் தெளிவாகப் பதில் சொன்னான். “நான் சும்மா இருக்கின்றேன்

எந்தக் குழந்தையும் முதன் முதலில் சொன்ன வாக்கியம் அதுவாக இருக்க முடியாது. அந்தத் தந்தை திகைத்துப் போனார். சும்மா இருக்க முடிவது எல்லோருக்கும் முடிகிற காரியமா என்ன? அந்தக் குழந்தை சாதாரணக் குழந்தை அல்ல என்பதைப் புரிந்து கொண்ட சிவனடியார் அடுத்த கேள்வியைக் கேட்டார். சும்மா இருக்கிற நீ யார்?

சிவனடியாரின் மெய்ஞானக் கேள்விக்குத் தத்துவார்த்தமாகவே பதில் வந்தது. நீரே நான். நானே நீர்

அத்வைத சித்தாந்தத்தின் உட்கருத்தாகவே பதில் வந்ததும் “சத்தியம், சத்தியம்என்ற சிவனடியார் அங்கிருந்து மறைந்தார். சிவசிதம்பரம் பிள்ளையும், மீனாம்பிகையும் மெய்சிலிர்த்துப் போனார்கள். அருணாச்சலமோ இன்னும் கண்களை மூடியபடியே அமர்ந்திருந்தான். சிவனடியாராக அங்கு வந்து மகன் ஊமை அல்ல என்பதை உணர்த்தி விட்டு மறைந்தது சாட்சாத் அருணாச்சலேஸ்வரரே என்று நினைத்த பெற்றோருக்கு நீரே நான். நானே நீர்என்று பதில் அளித்த தங்கள் மகன் யாராக இருக்கும் என்ற சந்தேகம் வரவில்லை. பெரும் பாக்கியசாலிகளாகத் தங்களை உணர்ந்தார்கள் அவர்கள்.

அந்த நாளுக்குப் பிறகு அருணாச்சலம் மிக அவசியமான நேரங்களில் மட்டும் ரத்தினச்சுருக்கமாகப் பேசினான். ஒரு முறை சிவசிதம்பரம் பிள்ளை வெளியூர் செல்லக் கிளம்பினார். அவரிடம் அருணாச்சலம் சொன்னான். “உங்களைச் சந்திக்க உறவினர் இருவர் இன்னும் பத்து நாழிகையில் வரவிருக்கிறார்கள்”  (ஒரு நாழிகை என்பது 24 நிமிட காலம். அக்காலத்தில் நாழிகை அளவில் தான் காலம் கணக்கிடப்பட்டது. பத்து நாழிகை என்பது நான்கு மணி நேரம்).

மகன் அப்படிச் சொன்னதும் சிவசிதம்பரம் பிள்ளை வெளியூர் செல்வதைத் தள்ளிப்போட்டு அன்று வீட்டிலேயே தங்கினார். அருணாச்சலம் சொன்னது போல் நான்கு மணி நேரத்தில் உறவினர்கள் இருவர் வீட்டுக்கு வந்தனர்.    

அதே போல் இன்னொரு நாள் ஆருத்ரா தரிசனம் பார்க்க சிவசிதம்பரம் பிள்ளை சிதம்பரம் போகக் கிளம்பிய போதும் அருணாச்சலம் சொன்னான். “நாளை காலை இருபது நாழிகை அளவில் உங்கள் தாயார் இறக்கப் போகிறார்கள்”.

சிவசிதம்பரம் பிள்ளை அதிர்ச்சி அடைந்தார். அவருடைய தாயார் நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்தார். அப்படி இருக்கையில் மகன் இப்படிச் சொல்கிறானே என்று எண்ணிய அவர் “என் தாய் நலமாகத்தானே இருக்கிறார்கள். பின் எப்படி இறப்பார்?என்று கேட்டார்.

“புரை ஏறி விக்கல் வந்து இறப்பார்என்று அருணாச்சலம் சொன்னான்.

மறு நாள் காலை எட்டு மணியளவில் சிவசிதம்பரம் பிள்ளையின் தாயார் அருணாச்சலம் சொன்னது போலவே இறந்து போனார். இது போன்ற நிகழ்வுகளால் மூத்த மகனை முக்காலமும் உணர்ந்த தெய்வப்பிறவியாகவே  பெற்றோர் மதிக்கத் தொடங்கினார்கள். இளைய மகனைப் பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அருணாச்சலம் தந்தையிடம் கேட்டான். “ஏன் என்னை மட்டும் பள்ளியில் தாங்கள் சேர்க்கவில்லை

தந்தை சொன்னார். “எல்லாம் அறிந்த உனக்கு பள்ளியில் படித்துத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது என்று நினைத்து விட்டு விட்டேன். நீ விருப்பப்பட்டால் உன்னையும் பள்ளியில் சேர்த்து விடுகிறேன்

அவர் சொன்னபடியே அருணாச்சலத்தையும், நமசிவாயத்தையும் பள்ளியில் சேர்த்து விட்டார். அருணாச்சலமும் தம்பியுடன் பள்ளி செல்லத் தொடங்கினான். பள்ளியில் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடாமல் கையில் சுவடிகளை வைத்துப் பார்த்துக் கொண்டோ, அல்லது சுவடிகளை கட்டி எதிரில் வைத்து விட்டு கண்மூடிக் கொண்டோ அமர்ந்திருப்பது அருணாச்சலத்தின் வாடிக்கையாக இருந்தது.

அப்படி கண்மூடி அமர்ந்திருக்கையில் பள்ளி ஆசிரியர்  அருணாச்சலத்திடம் கேட்டார். “தம்பி கண்களை மூடி உட்கார்ந்திருக்கிறாயே, படிக்க வேண்டாமோ?

“படித்தாயிற்றுஎன்று பதில் அளித்தான் அருணாச்சலம்.

ஆசிரியருக்கு சந்தேகம். அவர் “அப்படியானால் படித்ததைச் சொல் பார்ப்போம்.என்று சொல்ல அருணாச்சலம் சுவடியில் இருந்ததை அப்படியே பிழையில்லாமல் ஒப்பிக்க ஆரம்பித்தான். வியந்து போன ஆசிரியர் இன்னொரு சுவடி எடுத்துப் படிக்கத் தந்தார். அதை ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு அருணாச்சலம் கீழே வைத்து விட்டான்.

திகைப்படைந்த ஆசிரியர் “புதிய பாடமும் படித்தாயிற்றா?என்று கேட்க அருணாச்சலம் படித்தாயிற்று என்று பதிலளித்தான். ஆசிரியர் சொல்லச் சொன்ன போது அருணாச்சலம் அதையும் அப்படியே ஒப்பிக்க ஆசிரியர் பிரமித்துப் போனார். அவருக்கும் அருணாச்சலம் சாதாரண பிள்ளை அல்ல என்பது புரிய ஆரம்பித்தது.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 14.08.2015

Thursday, March 10, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 89


ஹானா வெளியே சென்றிருந்தாள். கௌதம் விளையாடப் போயிருந்தான். பாட்டியிடம் பேச இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்த வருண் மரகதத்தைத் தேடிப் போனான். மரகதம் கந்தர் சஷ்டி கவசம் சொன்னபடி முருகனுக்கு மாலை சார்த்திக் கொண்டிருந்தாள். முருகனிடம் வேண்டியபடி அக்‌ஷய் எந்த ஆபத்தும் இல்லாமல் திரும்பி வரப் போகிறான் என்கிற திருப்தி கலந்த சந்தோஷம் அவளை ஆட்கொண்டிருந்தது. பேரனைப் பார்த்தவுடன் புன்னகைத்தாள்.

“உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது. வருகிறீர்களா?” அவன் புன்னகைக்காமல் கூப்பிட்டான்.

சஹானா இல்லாத போது பேரன் பேசக்கூப்பிடுகிறான் என்றால் அது சேகரைப் பற்றிப் பேசத்தான் என்பதைப் புரிந்து கொண்ட மரகதம் பெருமூச்சு விட்டு அவனைப் பின் தொடர்ந்து ஹாலுக்கு வந்தாள்.

“உட்காருங்கள்” என்றான். அவள் உட்கார்ந்தாள். “என்னடா?”

“உங்கள் மகன் சாகவில்லை....”

“என்னடா உளறுகிறாய்?” மரகதம் சலிப்புடன் கேட்டாள்.

வருண் அமைதியாக மூன்று நாளுக்கு முன் சேகரைச் சந்தித்து பேசியதை விவரித்தான். மரகதம் திகைப்பில் சிலையாய் சமைந்தாள். அவன் அவன் மூச்சிறைக்க ஓடி வந்து தெருநாய் துரத்தி வந்ததாகச் சொன்னதும், அவன் வெளிறிய முகமும் நினைவுக்கு வந்தது.

“அப்படியானால் அன்றைக்குச் செத்துப் போனது யார்?”

“தெரியவில்லை. உங்கள் மகன் ஏதோ சதித்திட்டம் தீட்டி செத்துப் போனதாய் நாடகம் போட்டிருக்கிறான்.....”

“ஏன்...?” இப்படியெல்லாம் கூட யாராவது செய்வார்களா என்கிற திகைப்பிலிருந்து மரகதத்தால் விடுபட முடியவில்லை.

அதற்குப் பதில் சொல்லாமல் வருண் சேகர் அனுப்பி இருந்த கடிதத்தை அவளிடம் படிக்கக் கொடுத்தான். ”இதை ஒரு பையன் மூலம் கொடுத்தனுப்பினான்...”

வாங்கிப்படித்த மரகதத்திற்கு இதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது என்பதே விளங்கவில்லை. அதிர்ச்சியுடன் பேரனைப் பார்த்து மெல்ல கேட்டாள். “அவன் எங்கே குடியிருந்தான்....?”

“வந்தனா வீட்டின் மேல் மாடியில்....”

“அப்படியானால் அவன் மூலமாகத் தான் அவர்களுக்கு அந்தப் புகைப்படம் கிடைத்ததா?”

வருண் தலையசைத்தான்.

“இப்போது போய் விட்டானா....?”

“அப்படித்தான் போல இருக்கிறது. ஆனால் விசாரித்த போது வீட்டைக் காலி செய்து விடவில்லை என்று கேள்விப்பட்டேன். அப்படி காலி செய்ய வீட்டில் பொருள்களும் எதுவுமில்லை......”

மரகதம் அந்தக் கடிதத்தையே வெறித்துப் பார்த்தாள். பின் மெல்ல சொன்னாள். “உன் மேலாவது பாசம் வைத்திருக்கிறானே!”

வருண் பல்லைக்கடித்துக் கொண்டு சொன்னான். “ஒரு கில்லாடிக்குத் தாயாக இருந்தாலும் கூட உங்களுக்கு மூளை வேலை செய்ய மாட்டேன்கிறதே பாட்டி. மகன் மேல் பாசம் இருப்பவன் இப்படி நம்மை அனாதரவாய் விட்டு விட்டு செத்தது போல நாடகமாடிக் காணாமல் போவானா? அப்பா மட்டும் நம் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் நாம் சந்தோஷமாக இருந்திருப்போமா பாட்டி”

மரகதம் கண்கள் தானாகத் தாழ்ந்தன. யோசிக்க யோசிக்க மகனின் அயோக்கியத்தனம் அவளைக் கூனிக்குறுக வைத்தது.

வருணுக்குப் பாட்டியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இந்த அப்பாவி வயிற்றில் எப்படி அந்த ஆள் பிறந்தான்....! பாட்டியிடம் அவன் ஆணித்தரமாய் சொன்னான். “இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். அம்மாவுக்கோ அப்பாவுக்கோ தெரிய வேண்டாம்....”

மரகதம் மெல்ல கேட்டாள். “அக்‌ஷயிடம் சொல்வது நல்லது தானேடா....”

“அப்பாவுக்கும் தெரிய வேண்டாம் என்று நான் சொல்ல இரண்டு காரணம். ஒன்று இந்த ஆள் நான் கண்டிப்பாக கூடப்போக மாட்டேன் என்பது புரிந்து இனி வராமலேயே இருக்கலாம்.... அப்படி ஆனால் அப்பாவிடம் சொல்லி அவர் நிம்மதியையும் கெடுப்பது வீண். இன்னொன்று அப்பா அநியாயத்துக்கு நல்லவர். இந்த ஆள் அவரிடம் அழுது புலம்பி தன் பழைய நடவடிக்கைக்கு ஏதாவது கதை சொல்லி என் மகனை என்னோடு அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சிக் கேட்டால் மனம் இளகி என்னிடம் “என்ன இருந்தாலும் அவர் உனக்கு அப்பா. பாவம் அவருக்கு யாருமில்லை. நீ அவர் கூடப்போ..... எங்களைப் பார்க்கத் தோன்றும் போது வந்து பார்த்து விட்டுப் போ” என்கிற மாதிரி சொல்லவும் செய்யலாம்...”

அதைச் சொல்லும் போது அவன் அழுகிற மனநிலைக்குப் போனது போல் இருந்தது. மரகதத்திற்கு அக்‌ஷய் அப்படி எல்லாம் சொல்வான் என்று தோன்றவில்லை என்ற போதும் பேரனின் திருப்திக்காக சரியெனத் தலை அசைத்தாள்.

வருண் மிக உறுதியாகச் சொன்னான். “அந்த ஆள் கூடப் போகிறதை விட நான் செத்துப் போவது நல்லது பாட்டி. நான் என் அப்பாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன் பாட்டி.....”

மரகதம் கண்கள் கலங்கின. “சாவைப் பற்றி பேசாதேடா”.

வருண் எழுந்து நின்றான். மரகதம் மெல்லக் கேட்டாள். “அவன்... அவன்... என்னைப் பற்றிக் கேட்டானா?

“இல்லை பாட்டி.... “ என்று இரக்கத்துடன் சொல்லி விட்டு வருண் தனதறைக்குப் போய் விட மரகதம் தளர்ச்சியுடன் எழுந்தாள்.


லீ க்யாங் தொலைபேசி மூலமாக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மைத்ரேயனையும், அவன் பாதுகாவலனையும் திபெத்-நேபாள எல்லைப் பகுதிகளில் தேடுவதைக் கைவிடச் சொன்னான். வாங் சாவொவிடமும் அதைச் சொன்ன போது வாங் சாவொ திகைப்புடன் கேட்டான். “தப்பித்துப் போய் விட்டார்களா?”

“ம்”

“எந்த வழியாக?”

“அந்த சைத்தான் மலை வழியாகத் தான்.....”

”அவனே ஒரு சைத்தான் தான் போலிருக்கிறது.....” வாங் சாவொ அங்கலாய்த்தான்.

“அவனை தலீபான் தீவிரவாதிகள் அப்படித்தான் அழைத்தார்களாம்...” லீ க்யாங் அமைதியாகச் சொன்னான்.

“நேபாளத்தில் அவர்களைப் பிடிக்க ஏற்பாடு செய்தீர்களா சார்”

“அது வீண். நேபாளத்தில் இந்திய உளவுத் துறை ஆட்கள் அவர்களுக்கு உதவக்காத்துக் கொண்டிருப்பார்கள்.... அங்கு அவர்கள் நமக்கு அகப்பட மாட்டார்கள்.... இனி நாம் ஆசான் மூலமாகத் தான் அவர்கள் இருப்பிடம் கண்டுபிடிக்க வேண்டும்..... வேறு வழியில்லை...”

மிக அமைதியாக லீ க்யாங் சொன்னாலும் கூட அவன் அவர்களைத் தப்பிக்க விட்டதை எந்த அளவு அவமானகரமாக நினைப்பான் என்பதை வாங் சாவொ நன்றாக அறிவான். இந்த அமைதி அபாயகரமான அமைதி. அடுத்த முறை புயலாக இயங்க வைக்க ஆயத்தமாகும் அமைதி.....!



மாராவின் அலைபேசி இசைத்தது. மாரா அழைத்தது யார் எனப் பார்த்தான். அவர்கள் இயக்கத்தின் உள்வட்டத்து உறுப்பினர். இந்தியாவில் இருப்பவர். உள்ளுணர்வு மைத்ரேயன் சம்பந்தமாகத் தான் அவர் அழைக்கிறார் என்றது. அனாவசியமாக அழைப்பவர் அல்ல அவர். தற்போது பேசும்படியான அவசியமான விஷயங்களும் அவரைப் பொருத்த வரை இல்லை.

மாரா பேசினான். “ஹலோ...”

“மைத்ரேயன் புதுடெல்லி விமான நிலையத்தில் இருக்கிறான்....”

மனதில் எழுந்த உற்சாகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மாரா கேட்டான். “அவன் தானா அது?”

“அவனது அலைகளை நான் தீயாக உணர்கிறேன். அவனே தான்...”

“அவன் உங்களைப் பார்த்தானா?”

“ஒருமுறை பார்த்தான்.... பிறகு என் பக்கம் திரும்பவில்லை....”

“எந்த உடையில் இருக்கிறான்?”

“சாதாரண சிறுவனின் உடையில் தான். ஆனால் எந்த உடையில் அவன் இருந்தாலும் என் அகக் கண்ணிற்கு அவன் காவி உடை புத்தனாகவே தெரிகிறான்....”

மாரா புன்னகைத்தான். அந்த மனிதர் கவிஞர். அதனால் அவர் உணர்வுகள் கூடுதல் தீட்சண்யம் கொண்டவை.

“அவன் பக்கத்தில் இருப்பவன்?”

“அவன் கண்கள் நடனக்காரியின் கண்கள் போல எல்லா பக்கமும் சுழன்று கொண்டிருக்கின்றன.... மிகவும் ஜாக்கிரதையானவன் என்பதில் சந்தேகம் இல்லை.....”

“அவன் அலைகளை எப்படி உணர்கிறீர்கள்?”

“அபாயமாகவே உணர்கிறேன். அவன் அருகில் இருக்கையில் யாரும் எந்தக் காலத்திலும் மைத்ரேயனை நெருங்கி விட முடியாது.....”

சின்ன சந்தேகமும் இல்லாமல் வந்தது பதில். மெல்லிய புன்னகை உதடுகளில் படர மாரா அடுத்த கேள்வியைக் கேட்டான்.

”அவர்கள் எங்கு போகிறவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்ததா?”

“உம்... கோயமுத்தூர் போகிறார்கள். நானும் அங்கு போகத் தான் அதே விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்....”

மாரா தன் வழக்கமான கட்டுப்பாட்டையும் மீறி விசில் அடித்தான். அவர்கள் கடவுள் மாரா தெரிவித்தபடி இது மைத்ரேயனுக்கு பெரிய சோதனைக் காலம் தான். இல்லாவிட்டால் அவர்கள் இயக்கத்து ஆள் அதே விமானத்தில் போக விதி வழி வகுத்திருக்குமா?!

“கோயமுத்தூரில் அவர்கள் எங்கே போகிறார்கள் என்பது எனக்குத் தெரிய வேண்டும். ஆனால் எந்தக் காரணத்தினாலும் நீங்கள் அவர்கள் விஷயத்தில் ஆர்வம் காட்டுவது அவர்களுக்குத் தெரியக்கூடாது....”

“மைத்ரேயனுக்கு நான் யார் என்பது தெரியும் என்றே நினைக்கிறேன். ஆனால் அவன் அந்த பாதுகாவலனிடம் சொல்லும் சிரமத்தைக்கூட எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பாதுகாவலனுக்குச் சிறிதும் சந்தேகம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.... நாளை அதிகாலை விமானம் கோயமுத்தூர் சேர்கிறது. அவர்கள் போகுமிடம் தெரிந்தவுடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.....”

அலைபேசியை தன் சட்டைப்பையினுள் வைத்த பின் அந்தக் கவிஞர் மைத்ரேயன் இருக்கும் பக்கம் விமானம் வந்து சேர்ந்த அறிவிப்பு வரும் வரை திரும்பவேயில்லை. தன் கையில் இருந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த அவர் அறிவிப்பு வந்தவுடன் எழுந்து சோம்பல் முறித்தார். மைத்ரேயனும் பாதுகாவலனும் முன்னால் செல்ல சில ஆட்களுக்குப் பின் அவரும் நடந்தார்.

விமானத்தின் உள்ளும் அனாவசியமாக அவர்கள் இருக்கும் பக்கம் அவர் அதிகம் பார்க்கவில்லை. விமானத்தில் இருந்து இறங்கும் வரை அமானுஷ்யனுக்கு சந்தேகம் எழாமல் பார்த்துக் கொண்டார்.

கோயமுத்தூர் சென்று சேர்ந்த பிறகும் கூட அவர்களை அவர் பின் தொடரவில்லை. மாறாக அவர்கள் ஏறிய கால்டாக்சி எண்ணை மட்டும் குறித்துக் கொண்டார். இரண்டரை மணி நேரம் கழித்து அவருடைய ஆட்கள் அந்த கால்டாக்சி கோவையில் எந்த இடத்தில் எந்த வீட்டின் முன் போய் அந்தப் பயணிகளை இறக்கி விட்டது என்கிற தகவலை அவருக்குத் தெரிவித்தனர்.

உடனடியாக மாராவுக்கு அந்தத் தகவலை அவர் அனுப்பி வைத்தார்.


(தொடரும்)

என்.கணேசன்

Monday, March 7, 2016

விசேஷ மானஸ லிங்கம் விழித்திருக்கிறது!

ணக்கம் வாசக நண்பர்களே!

கதோபநிஷத்தில் “ஈஷா சுப்தேஷூ ஜாக்ரதிஎன்ற வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தமானது. உறங்கிக் கொண்டிருப்பவரிடத்திலும் விழித்திருக்கும் ஈசன்  (இறைசக்தி) என்று அதற்குப் பொருள்.

மூன்றரை வருடங்களுக்கு முன்பு (ஜூலை 2012) விசேஷ மானஸ லிங்கம் என்ற சிவலிங்கத்தை இந்த மூலக்கருத்தை அடிப்படையாக வைத்து தான் நான் பரம(ன்) இரகசியம் என்ற நாவலில் உருவாக்கினேன். நம் ஒவ்வொருவருக்குள் உறைந்திருக்கும் சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கத்தை அந்த நாவல் அடையாளம் காட்டக்கூடும் என்றும் எழுதினேன். எத்தனை பேருக்கு அந்த நாவல் விசேஷ மானஸ லிங்கத்தை அடையாளம் காட்டியது என்று நான் அறியேன். ஆனால் நாவலின் இறுதிக்கட்டத்தில் எனக்கு அந்த விசேஷ மானஸ லிங்கம் ஆத்மார்த்தமாகவே அறிமுகமாகியது.

நான் விசேஷ மானஸ லிங்கம் குறித்து ஏற்கெனவே முடிவு செய்திருந்த இறுதிக்காட்சி பல நாட்கள் பலவிதமாக எழுதியும் எனக்குத் திருப்தியைத் தராத போது நாவலின் இறுதிக்காட்சி ஒரு நாள் அதிகாலைக் கனவாய் வந்து மறைந்தது. இதை நான் நாவல் புத்தகமாக வெளி வந்த போது அதன் முன்னுரையில் தெரிவித்துமிருக்கிறேன். பலப்பல முறைகளில் எழுதி சலித்த எனக்கு என் ஆழ்மனமே தன்வழியில் அந்தக் காட்சியை உருவாக்கித் தந்திருக்கலாம். ஆழ்மனதின் அற்புத சக்திகள் எழுதிய நான் அதை மறுக்கவும் முடியாது.

ஆனால் பரம(ன்) இரகசியம் எழுதி முடித்து இரண்டு வருட காலம் ஓடி விட்ட பின்பும் விசேஷ மானஸ லிங்கம் அந்த நாவலின் கற்பனைக் கதாபாத்திரமாக என்னை விட்டு நகர்ந்து விடவில்லை. அதை இன்றும் சில நேரங்களில் என்னுள்ளே உணர்கிறேன். குழப்பமான நேரங்களில், மனம் சோர்ந்த சமயங்களில், எது நல்லது என்பதை அறிந்த பிறகும் அதன் வழி போக மனம் முரண்டு பிடிக்கும் தருணங்களில் எல்லாம் மனதை விசேஷ மானஸ லிங்கத்தில் லயிக்க விட்டு தெளிவு, மனபலம், அமைதி ஆகியவற்றை அசாத்திய அளவில் பெற்றிருக்கிறேன்.

ஆன்மிக, ஆழ்மன மார்க்கத்தில் கிடைக்கும் என் தனி அனுபவங்களைப் பகிர்வதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படிச் செய்வது அந்த மார்க்கத்தில்  உண்மையான வளர்ச்சியைத் தடுத்து விளம்பரப் பாதைக்கு நம்மை மாற்றி விடும் என்ற அச்சம் எனக்குண்டு. ஆனால் விதிவிலக்காக இந்த மகாசிவராத்திரி நாளில் என் அன்பு வாசகர்களும், ஈசன் அருளுக்குத் தயாரான நிலையில் இருக்கும் ஆன்மிக அன்பர்களும் நான் பெற்ற பேற்றை பெற வேண்டும் என்ற பேராவலில் இந்த விசேஷ மானஸ லிங்கம் குறித்து எழுதுகிறேன்.

அஞ்ஞான உறக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கும் நம்முள்ளே எப்போதுமே விழித்திருக்கும் அந்த ஈசனை இந்த மகாசிவராத்திரி நாளில் உங்கள் இதய சிம்மாசனத்தில் உணருங்கள். உள்ளே அந்த மகாசக்தி வீற்றிருக்கிறது என்ற நினைவே உங்களைத் தவறான பாதையிலிருந்து விலக்கும். எதையும் சந்திக்கவும், சாதிக்கவும் பெரும் வலிமையைத் தரும். அதைத் தொடர்ந்து உங்களுக்குள் உணர முடிந்தால் பின் நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. அதுவே உங்களை இயக்க ஆரம்பிக்கும். அதன் பின் எல்லைகள் உங்களுக்கு இல்லை. தொல்லைகளும் உங்களுக்கில்லை.

விசேஷ மானஸ லிங்கம் உங்களுக்குள் விழித்திருக்கிறது. இந்த சிவராத்திரியில் உங்களுக்குள் அதை உணர்ந்தபடி நீங்களும் சிறிது நேரமாவது விழித்திருங்கள். ஒரு தொடர் விழிப்புணர்வு உங்களுக்குள் தங்கி விட இது நல்ல ஆரம்பமாகட்டும்!

மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்
என்.கணேசன்

Thursday, March 3, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 88


நீ வரவில்லை என்றால் எனக்கு விதித்தது இவ்வளவு தான் என்று போய் விடுவேன். இனி எந்தக் காரணம் கொண்டும் உன்னை வந்து தொந்தரவு செய்ய மாட்டேன்.....என்று சேகர் வருணுக்குக் கடிதம் அனுப்பி இருந்தானே ஒழிய அப்படி நடந்து கொள்ளும் உத்தேசம் அவனிடம் சுத்தமாக இருக்கவில்லை. என்ன தான் அன்று திடீர் என்று அவனை சந்தித்ததில் நிலை தடுமாறி வருண் கடுமையாகப் பேசி இருந்தாலும் பின் யோசித்து மனம் மாறி விட வாய்ப்பு உண்டு என்று சேகர் எதிர்பார்த்தான். வசதியான வாழ்க்கைக்கு வருண் ஆசைப்பட்டால் என்னிடம் நிறைய பணம், நிலம், வசதி இருக்கிறது என்றுஎழுதியதைப் படித்து விட்டு அவனுடன் வந்து விடுவான் என்று சேகர் நினைத்தான். காதலுக்குப் பணிகிறவனாக இருந்தால் வந்தனாவை உனக்குத் திருமணம் செய்து வைப்பேன்என்பதைப் படித்து விட்டு இசைவான் என்று நினைத்தான். அந்த இரண்டுக்குமே ஒத்து வராவிட்டால் எனக்கு விதித்தது இவ்வளவு தான் என்று போய் விடுவேன், இனி எந்தக்காரணம் கொண்டும் உன்னை வந்து தொந்தரவு செய்ய மாட்டேன்....என்று கடைசியாக உருக்கமாய் எழுதியதைப் படித்து விட்டு இரத்த பாசத்தினால் வருவான் என்று நினைத்தான். ஆனால் அவன் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி விட்டு வருண் வராமல் இருந்தது  சேகருக்குப் பெருத்த ஏமாற்றமாகத் தான் இருந்தது.  

நன்றாக யோசிக்கையில் வருண் பேசும் போது ‘என்றாவது போலீஸ் உன்னைத் தேடி வரும்என்று சொன்னதும், என் அப்பா கையில் நீ சிக்கினால் சாவே பரவாயில்லை என்று நினைக்க வேண்டி வரும்என்று சொன்னதும் எச்சரிக்கை உணர்வை அவனுக்குள் ஏற்படுத்தி விட்டது. பையன் அதிகமாய் நெருக்கினால் போலீஸை அணுகவும் வாய்ப்பு இருக்கிறது. வருண் அப்பா என்று சொல்லும் நபர் கொஞ்சம் விவகாரமான நபராகவே அவனுக்கும் தோன்றியது. அதனால் தான் அவன் போய் விட்டான் என்கிற எண்ணத்தை வருணிடம் ஏற்படுத்தி விட்டு அவ்வப்போது போய் கண்காணிக்க சேகர் முடிவு செய்தான்.  எனவே தான் விமான நிலையத்திற்கு வருண் வராமல் போகவே சேகர் கோயமுத்தூரில் வேறு ஒரு பகுதியில் ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினான்.  

ஜானகியிடம் சேகர் முன்பே வருணைப் பார்த்துப் பேச முற்பட்டதையும், மகன் மனதில் சஹானா வளர்த்து வைத்திருந்த வெறுப்பின் காரணமாக அவன் தந்தையை ஏற்றுக் கொள்ள மறுத்ததையும் தனக்கேற்ற விதமாகத் துக்கத்துடன் தெரிவித்து அவளது பூரண இரக்கத்தை சம்பாதித்து விட்டிருந்தான். அவன் இந்த விவகாரம் முடியும் வரை அவளுடைய நல்லபிப்பிராயத்தைத் தக்க வைத்துக் கொள்வது என்று முடிவு செய்திருந்தான். அதனால் கிளம்புவதற்கு முன் ஜானகியிடம் ஒரு வேலையாக சில நாட்கள் வெளியூர் போக வேண்டி இருக்கிறது என்று மட்டும் தெரிவித்தான். அவளும் இடமாற்றம் உங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்று சொல்லி இளகிய மனதுடன் வழியனுப்பி இருந்தாள்.....

சேகர் ஆணாதிக்கமே சரி என்று நினைக்கும் தந்தையாலும், அதைச் சிறிதும் எதிர்க்காமல் அடங்கி ஒடுங்கியே வாழ்ந்த தாயாலும் வளர்க்கப்பட்டவன். அவன் தன் தாயைப் போலவே அடங்கி ஒடுங்கிப் போகும் ஒரு மனைவியையே தனக்கும் எதிர்பார்த்தான். கல்வியறிவு இல்லாத ஒரு பெண்ணை மனைவியாக அவன் ஏற்றிருந்தால் ஒருவேளை எதிர்பார்த்தபடியே எல்லாம் நடந்திருக்கலாம். ஆனால் நன்றாகப் படித்த, தைரியமான, தொலைக்காட்சி ஒன்றில் வேலைக்குப் போகிற ஒரு பெண்ணை மண்ந்து கொண்டது அவன் செய்த பெரிய தவறு என்பதை திருமணத்திற்குப் பின் அவன் புரிந்து கொண்டான். அவளுடன் அவன் சந்தோஷமாக வாழ்ந்ததே சுமார் ஆறுமாத காலம் தான். அவனுடைய ஆதிக்கத்திற்கு அடங்க மறுத்த அவளுடைய சுதந்திரப் போக்கு அவனுக்கு சகிக்க முடியாததாக இருந்தது.  அவன் குளவியாய் வார்த்தைகளில் கொட்டினாலும் அதில் அதிகம் பாதிக்கப்படாமல், சண்டையும் போடாமல்., புழுவைப் போல் அவள் அலட்சியப்படுத்தி விட்டு கண்டு கொள்ளாமல் போகும் விதம் அவனுக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. படுக்கையில் கூட அவனை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்படும் ஜடம் போல் அவள் நடந்து கொள்ள ஆரம்பித்தது வாழ்க்கையை நரகமாகவே ஆக்கியது.

மகன் வருண் மீதும் அவனுக்கு அதீத பாசம் ஒன்றும் இருந்து விடவில்லை. அவன் தாயைப் போலவே ஒரு அடங்காப்பிடாரியாகத் தான் வருவான் என்பது சேகரின் கணிப்பாக இருந்தது. அதனாலேயே மகனிடமும் சேகர் மிகவும் கண்டிப்பாக இருந்தான். அந்தச் சிறுவனும் தன் நன்மைக்குத் தான் தந்தை இப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் புரிந்து கொண்டது போல் தெரியவில்லை. அதனால் மகன் மேலும் வெறுப்பாய் தான் இருந்தது. தாய் மரகதத்தை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

இந்தக் காரணங்களால் ஒரு கட்டத்தில் குடும்பத்தையே கை கழுவி விட அவன் முடிவு செய்தான். விவாகரத்து வாங்கினால் மனைவிக்கு ஒரு பெரிய தொகை தர வேண்டி இருக்கும். மகன் செலவுக்கும் பணம் தர வேண்டி இருக்கும். மனைவி மகனை அப்படி விலக்கி விட்டாலும் கூட மரகதம் அவனை ஒட்டிக் கொண்டு தான் இருப்பாள். எப்போதும் பரிதாபமாக வெறித்த பார்வை பார்த்தபடி இருக்கும் அவளை வாழ்நாள் எல்லாம் தன்னுடன் வைத்துக் கொள்வது நித்திய நரகம் என்று தோன்றியது.

அந்த சமயத்தில் தான் ஒரு பிரபல துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பன் ஒருவன் சுலபமாகத் தப்பிக்கும் வழியைச் சொன்னான். செத்தது போல் நடித்து கழன்று கொள்ளும்படி சொன்ன அவன் வழியையும் சொல்லிக் கொடுத்தான். ஒரு தனியார் மருத்துவமனை டாக்டரும், அங்கு பணி புரியும் ஒரு நர்ஸும் ஒரு பெரிய தொகைக்காக அவனுக்கு உதவ முன் வந்தார்கள். ஒரு விபத்திற்கு உள்ளாகி சிகிச்சைக்காக அந்த மருத்துவமனையில் சேர்ந்தான். ஐந்தாவது நாளில் ஒரு சின்ன தீ விபத்து அங்கு கச்சிதமாக அரங்கேறியது. ஒரு அனாதைப் பிணத்தை எரிக்க வைத்து அதை சேகர் தான் என்று சேகரின் வாட்ச் மற்றும் மோதிரத்தை வைத்து சஹானாவை நம்ப வைப்பது கஷ்டமாக இருக்கவில்லை. வேறொரு வேடம் போட்டுக் கொண்டு வந்து தூரத்தில் இருந்தே தனக்கு நடந்த ஈமக்கடன்களை கவனித்து ரசித்தான். அவன் மரணத்திற்கு மரகதம் அழுதாள். புரிந்தோ புரியாமலோ வருண் கூட சிறிது அழுதான். ஆனால் சஹானாவின் கண்களில் ஈரத்தைக் கூட அவனால் பார்க்க முடியவில்லை. 

தனியாக வாழ்ந்து கஷ்டப்படும் போது தான் நீ அழுவாய்என்று சேகர் மனதில் கறுவிக் கொண்டான். அவன் தன் மரணத்தை அரங்கேற்றுவதற்கு முன்பே இன்சூரன்ஸ் பாலிசி முதற்கொண்டு முடித்து பணத்தை எடுத்துக் கொண்டு விட்டான். அவன் ஆபிசில் பி.எஃப் பணத்தில் கூட கடன் வாங்கி மிகக்குறைந்த பணமே அவளுக்குக் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டான். அவள் கஷ்டப்பட்டு உடைந்து போவதைப் பார்த்து ஆறுதல் அடைய அவன் ஆசைப்பட்டான். ஆனால் உத்தியோகத்தில் இருந்த அவள் கணவனின் பணம் எதுவும் கையில் கிடைக்காததை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. காலம் போகப் போக அவள் கஷ்டப்ப்டாமல் தப்ப முடியாது என்று கணித்து அவன் காத்திருந்தான்.

தன் நண்பன் வேலை செய்யும் அந்தத் துப்பறியும் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்து புதிதான ஒரு வாழ்க்கையை அவன் ஆரம்பித்தான். விபத்தில் மரணத்தை அரங்கேற்றிய அந்த நர்ஸை அடுத்த மாதமே திருமணம் செய்து கொண்டான். அவள் சஹானா அளவுக்குப் படிக்காதவள், எனவே அடங்கி நடப்பாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் ஆறே மாதங்களில் அவன் ஆதிக்க மனப்பான்மையைப் பொறுக்க முடியாமல் அவள் பணம், நகை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடிப் போனாள். அவளைத் தேடிக் கண்டுபிடித்து அவன் மிரட்டிய போது அவனுடைய தில்லுமுல்லுகளைப் போலீஸில் தெரிவிப்பதாகச் சொல்லி அவளும் பதிலுக்கு மிரட்டினாள். அவன் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவன் என்பதால் அவன் பற்றிய அனைத்து உண்மைகளையும் விவரமாக எழுதி ஒரு தோழியிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும், தனக்கு சந்தேகப்படும்படியாக மரணம் சம்பவிக்கும் பட்சத்தில் அது போலீஸ் கைக்குப் போய்ச் சேரும் என்றும் கூடத் தெரிவித்தாள். அவள் உண்மையாகவே சொல்கிறாள் என்பது விளங்கிய பிறகு வேறு வழியில்லாமல் அவனுக்கு அவளிடமிருந்து அமைதியாக விலக வேண்டி வந்தது.

ஆனால் தன் புதிய வேலை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்தவர்களை வேவு பார்க்கிற, அவர்களது ரகசியங்களை அறிகிற அந்த வேலையை ஈடுபாட்டுடன் செய்தான். பணமும் நன்றாகக் கிடைத்தது. வேலை இல்லாத நேரங்களில் அவ்வப்போது போய் சஹானாவை வேவு பார்த்தான். அவள் அவன் எதிர்பார்த்தபடி உடைந்து போகாமல் நிம்மதியாகவே இருந்தது அவனுக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது.

ஒரு முறை ஒரு வேலையாக இரண்டு மாதங்கள் அவன் கான்பூரில் தங்க வேண்டி வந்தது. அவன் திரும்பி வந்த போது சஹானா வீடு காலி செய்து போயிருந்தாள். தன் ஆட்களை அனுப்பி அவள் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஜெய்பால்சிங் என்ற பஞ்சாபிக்காரரை விசாரிக்க வைத்தான். சஹானா ஒரு மிகநல்ல மனிதனைத் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டதாக அவர் சொன்னார். அவனை சஹானாவும், வருணும், மரகதமும் மிகவும் நேசிக்கிறார்கள் என்றும் அவன் சக்தி வாய்ந்த வித்தியாசமான மனிதன் என்றும் அவர் சந்தோஷமாகச் சொன்னார். அவருமே அந்த மனிதனை மிகவும் நேசித்துப் பெருமையாகப் பேசியதாக சேகரின் ஆட்கள் அவனிடம் தெரிவித்த போது அவனுக்கு வயிறெரிந்தது. ஏதோ ஒரு முட்டாள் சஹானாவைத் திருமணம் செய்து கொண்டு அவள் மகனையும், மாமியாரையும் கூட ஏற்றுக் கொள்வான் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. பல விதங்களில் அந்த ஆள் பற்றிய தகவல்களையும், அவர்கள் இருப்பிடத்தையும் அறிந்து கொள்ள அவன் முயற்சி செய்தான். அவனுடைய துப்பறியும் நிறுவன ஆட்கள் கூட அவன் முயற்சியில் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

வருடங்கள் பல கழிந்தபின் தற்செயலாக அவன் தன் தாயைப் பார்க்க நேர்ந்து, அவள் மூலமாக அவர்கள் இருப்பிடத்தையும் பார்க்க முடிந்த போது அது தன் அதிர்ஷ்டமே என்று சேகர் நினைத்தான். நடுத்தர வயதை அடைந்து விட்டிருந்த அவனுக்கு இனி எதிர்காலத்தில் ஒரு நிலையான குடும்பம் வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது. அடக்கி ஆள ஒரு ஜீவனாவது வேண்டும் என்று ஆசை அரும்பு விட ஆரம்பித்தது. சந்தோஷமாகத் தெரிந்த சஹானாவிடம் இருந்து மகன் வருணைப் பிரித்து தன்னுடன் அழைத்துப் போக அவன் எண்ணினான். சஹானா சந்தோஷத்தைக் கெடுத்தது போலவும் ஆகும், வருணைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது போலவும் ஆகுமென்று எண்ணி முயற்சித்தான்.

மகன் அவனை அப்பா என்று ஒருமுறை கூட அழைக்காதது மட்டுமல்லாமல் ஏன் சாகவில்லை என்று ஆத்மார்த்தமாகவே கேட்டது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல இருந்தது. ஆரம்பத்தில் வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பணம், பாசம், காதல் என்று பல விதமாய் ஆசை காட்டியும் வருண் அதில் மசியாமல் போன போது அவனும் சஹானாவுடன் சேகரின் எதிரியின் பட்டியலில் இணைந்து கொண்டான்.

அடிக்கடி இரவு நேரங்களில் மாறுவேடத்திலேயே சஹானாவின் வீட்டருகே உலாவி அங்கிருந்த நிலவரத்தைக் கூர்ந்து கண்காணித்து வந்த சேகருக்கு கௌதம் மூலமாக ஒரு நாள் ஒரு புதிய தகவல் கிடைத்தது. கௌதம் தன் நண்பனைத் தொலைவில் பார்த்து தன் தந்தை நாளை காலை வந்து விடுவார் என்று சந்தோஷமாக கத்தித் தெரிவித்தது சேகர் காதில் விழுந்தது.

அந்த சக்தி வாய்ந்த வித்தியாசமான மனிதனைப் பார்த்து எடைபோடவும், அவனைத் தக்க முறையில் கையாளவும் சேகர் தயாரானான்.



புத்தகயாவில் இருந்து புதுடெல்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போதும் போதி மரத்தருகில் கண நேரமே கண்ட அந்தக் காட்சியே அக்‌ஷய் மனதில் திரும்பத் திரும்ப ஓடியது. ஏதோ அதிநுட்பமான நிகழ்வு நடந்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக விளங்கியது. மைத்ரேயனோ ஒன்றும் நடக்காதது போல் இப்போதும் அமர்ந்திருந்தான்.

அக்‌ஷய் நேரடியாகவே அவனிடம் கேட்டான். “மகாபோதி மரத்தருகில் என்ன நடந்தது?

மைத்ரேயன் புரியாதது போல் விழித்து விட்டு “நாம் தான் நடந்தோம்என்றான்.

அக்‌ஷய் அவனை முறைத்தான். ‘நேபாள எல்லையில் இவனை அறைந்ததில் தப்பே இல்லைஎன்று தோன்றியது.

மைத்ரேயன் புன்னகைத்தான். 

(தொடரும்)


என்.கணேசன்