சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 21, 2015

பாபா காட்டும் மெய்ஞான வழி!


மகாசக்தி மனிதர்கள்-45  


மெய்ஞானம் அடைந்து விட்ட யோகியோ சித்தரோ தன்னை அறிவிக்கவோ, அறிமுகப்படுத்தவோ அவசியமில்லை. அவரை நேரில் சந்திப்பவர்கள் நுண்ணுணர்வு படைத்தவர்களாக இருந்தால் அவர்கள் சக்தி வாய்ந்த அலைகளை அவரிடமிருந்து உணர்வார்கள். ஷிரடி பாபாவை நேரில் சந்தித்த பல மனிதர்கள் அப்படி சக்தி வாய்ந்த அலைகளை உணர்ந்திருக்கிறார்கள். அளவில்லாத அமைதியையும், ஆனந்தத்தையும் அவர் பார்வை தங்கள் மீது பட்ட போது முழுமையாக அனுபவித்திருக்கிறார்கள். இதை நேரடியாக அனுபவித்த பக்தர்கள் பலர் அதை விரிவாகப் பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

இறையனுபவம் என்கிற பேரானந்தம் எப்படி இருக்கும் என்பதைச் சிறிது நேரமாவது பக்தர்களை அனுபவிக்க வைத்து மெய்ஞான வழியில் நடக்க பாபா தூண்டி இருக்கிறார் என்றே இதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உலகியல் பிரச்னைகளோடு தன்னை நெருங்கியவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து பாபா அவர்களை முதலில் தன்னிடம் இழுத்துக் கொண்டாலும் அவர்களைப் பிற்காலத்தில் பக்குவப்பட வைத்து கடைசியில் அவர்களிடம் மெய்ஞானத்தையே பாபா வலியுறுத்தினார். அதற்கு மிக நல்ல உதாரணமாய் நானா சாஹேப் சந்தோர்க்கர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளையே கூறலாம்.

நானா சாஹேப் சந்தோர்க்கரின் மகள் பிரசவத்தை தன் அருளால் நல்லபடியாக பாபா நடத்தி வைத்ததை முன்பு பார்த்தோம். ஆனால் சில ஆண்டுகளில் அந்தக் குழந்தை இறந்து விட்டது. சிறிது காலத்தில் அவர் மகளின் கணவரும் இறந்து போனார். இது நானா சாஹேப் சந்தோர்க்கரைப் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியது. பாபா இருக்கையில் இப்படி நடந்து விட்டதே என்ற ஆதங்கமும் அவர் மனதில் நிறையவே இருந்தது.

இந்த சோக நிகழ்ச்சிகளுக்குப் பின் ஷிரடி வந்தவர் முகத்தை வாட்டமாக வைத்துக் கொண்டு பாபா முன்னால் அமர்ந்திருந்தார். “ஏன் வாட்டமாக இருக்கிறாய்? என்று பாபா கேட்டதற்கு அவர் பாபாவிடம் வெளிப்படையாகவே சொன்னார். “நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை பாபா. உங்கள் கருணையில் நாங்கள் இருக்கையில் என் பேரக்குழந்தையும் என் மகளின் கணவனும் இறந்து போயிருக்கிறார்கள்.

பாபா சொன்னார். “ஜனன மரணங்கள் அவரவர் கர்மவினைகளின்படி ஏற்படுபவை. அவை என் சக்தியில் அடங்குபவை அல்ல. இறைவனான பரமேஸ்வரனே கூட அதை ஒன்றும் செய்ய முடியாது. கடவுள் என்பதற்காக அவர் சூரிய சந்திரரை சில அடிகள் தள்ளி உதயமாகச் சொல்ல முடியுமா? அவர் அப்படிச் சொல்ல மாட்டார், அப்படிச் சொல்லவும் கூடாது. அப்படி அவர் செய்தால் அது குழப்பத்தையும் ஒழுங்கீனத்தையும் உண்டுபண்ணி விடும்

நானா சாஹேப் சந்தோர்க்கர் விடவில்லை. எத்தனையோ முறை பாபா அற்புதங்கள் நடத்தியதை அவர் நேரில் பார்த்தவராயிற்றே. “அப்படியானால் உனக்கு மகன் பிறப்பான் என்று ஒருவரிடம் சொல்கிறீர்கள். அவருக்கு மகன் பிறக்கிறான். உனக்கு வேலை கிடைக்கும் என்று ஒருவரிடம் சொல்கிறீர்கள். அவருக்கு வேலை கிடைக்கிறது. அதெல்லாம் மட்டும் எப்படி சாத்தியம்?என்று பாபாவிடம் கேட்டார்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை என்னால் பார்க்க முடிந்ததால் நடக்கப் போவதை நான் சொல்கிறேன். அது அப்படியே நடக்கிறது. அதை எல்லாம் நீ என்னுடைய அற்புதங்களாக நினைத்து விட்டால் அது தவறு. என்று பாபா கூறினார். பாபாவின் இந்தக்கூற்று இது வரை நாம் பார்த்த நிகழ்வுகளுக்கு முரண்பாடான ஒன்றாய் வாசகர்களுக்குத் தோன்றலாம்.

பக்தர்களின் உலகியல் பிரச்னைகளைத் தீர்ப்பதிலேயே அவரைப் போன்ற ஒரு மகான் முழுமூச்சாக இருந்தால் அவர்களது ஆசாபாசங்களை அவர்கள் கடந்து மெய்ஞான மார்க்கத்தில் செல்ல ஆரம்பிப்பது சாத்தியமாகாது என்பதும் உண்மையே. ஆன்மிக அன்பர்கள் பந்தபாசங்களை குறைத்துக் கொண்டே போக வேண்டுமே ஒழிய அதை வளர்த்துக் கொண்டே போக உண்மையான குரு உதவி புரிய மாட்டார். மேலும் நடந்தே ஆக வேண்டும் என்று இறைவன் இயற்கையின் விதிப்படி தீர்மானித்திருந்த செயல்களை மாற்ற எந்த யோகியாலும் கூட முடியாது. மாற்ற முடிந்தவை, மாற்ற முடியாதவை என்று இருவகை முன்வினைப் பலன்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. முடிந்ததை மகான்கள் செய்கிறார்கள். முடியாததை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றே நாம் முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

நானா சாஹேப் சந்தோர்க்கர் அதை உணர்ந்திருக்க வேண்டும். கடைசி வரை பாபாவின் பரம பக்தராகவே இருந்து மெய்ஞான வழியில் மேலும் முன்னேறி வாழ்ந்து மறைந்தார்.

பாபா மெய்ஞான வழியை உணர்த்திய வித்தியாசமான வேறொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். கண்பத் ராவ் என்பவர் நானா சாஹேப் சந்தோர்க்கர் டெபுடி கலெக்டராக இருந்த போது அவருடன் காவலுக்கு ஷிரடிக்கு வந்த போலீஸ் கான்ஸ்டபிள். அவரை அனைவரும் தாஸ் கனு என்று அழைத்தார்கள். அவர் கிராமத்து நாடகங்களில் விரும்பி நடித்தும் வந்தார். அவரிடம் வேண்டாத பழக்கங்களும் நிறைய இருந்தன. சிறிதும் ஆன்மிக நாட்டம் இல்லாத அவர் ஆரம்பத்தில் பாபாவிடம் ஈர்க்கப்படவில்லை. நாளடைவில் சிறிது சிறிதாக பாபாவால் மாற்றப்பட்ட அவர் கடைசியில் ஆன்மிகப் பண்டிதராகப் பலராலும் கருதப்பட்டு தாஸ் கனு மகராஜ் என்று அழைக்கப்படும் அளவு உயர்ந்து விட்டார். 

தாஸ் கனு மகராஜுக்கு ஈசாவாஸ்ய உபநிஷத்திற்கு மராத்தியில் உரை எழுதும் ஆசை வந்தது. பதினெட்டே சுலோகங்கள் கொண்டதாக இருந்தாலும் ஈசாவாஸ்ய உபநிஷத்தை அனைத்து உபநிஷத்துகளின் சாராம்சமாகவே மகாத்மா காந்தி போன்றவர்கள் கருதினார்கள். அந்த அளவு மேன்மையும் ஆழமும் கொண்ட ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் சுலோகத்தையே அவரால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைப் புரிந்து கொள்ளாமல் அந்த உபநிஷத்திற்கு உரை எழுதினால் அது வெறுமையாகவே இருக்கும் என்பதை தாஸ் கனு மகராஜ் உணர்ந்தார். அதை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுமாறு அவர் பாபாவிடம் வேண்டினார். 

பாபா சொன்னார். “இதில் என்ன கஷ்டம் இருக்கிறது. விலே பார்லேவில் இருக்கும் காகா தீக்‌ஷித்தின் பங்களாவுக்கு நீ போனால் கூலிக்காரப் பெண் மல்கர்ணி இதன் பொருளை உனக்கு உணர வைப்பாள்

உபநிஷத்தின் உண்மைப் பொருளைக் கூலிக்காரப் பெண்ணிடம் கற்றுக் கொள்வது என்பது வேடிக்கையாக மற்றவர்களுக்குப் படலாம். ஆனால் பாபா காரணமில்லாமல் எதையும் சொல்ல மாட்டார் என்பதை உணர்ந்திருந்த தாஸ் கனு மகராஜ் அவர் சொன்னபடியே சென்றார். அந்தப் பங்களாவில் தங்கி இருந்த போது அதிகாலையில் மல்கர்ணி என்ற அந்தப் பெண் ஆனந்தமாக பாடுவது காதில் விழுந்தது. ஒரு ஆரஞ்சு நிறப் பட்டுச்சேலையின் அழகையும், அதன் ஜரிகையையும், அதன் நேர்த்தியையும் பற்றி மல்கர்ணி அனுபவித்துப் பாடிக் கொண்டிருந்தாள். தாஸ் கனு மகராஜ் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். பட்டுச்சேலையைப் பற்றிப் பாடினாலும் மல்கர்ணி கந்தலைத் தான் உடுத்திக் கொண்டிருந்தாள்.  

தாஸ் கனு மகராஜுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஒரு நண்பர் மூலமாக ஒரு புதிய சேலையை அவளுக்கு வாங்கிக் கொடுத்தார். மறு நாள் ஆனந்தமாக அதை உடுத்திக் கொண்டிருந்த மல்கர்ணி அதற்கும் மறு நாள் அதை வீசி எறிந்து விட்டு பழையபடி கந்தலை உடுத்திக் கொண்டு ஆரஞ்சு நிறப் பட்டுச்சேலையை வர்ணித்து ஆனந்தமாகப் பாட ஆரம்பித்து விட்டாள். அவருக்கு அப்போது தான் புரிந்தது. அந்தப் பெண்ணின் சந்தோஷம் அவள் உடுத்தும் வெளிப்புற ஆடைகளில் இல்லை. அவள் உள்மனதில் தான் இருக்கிறது.

ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் சுலோகமே இந்த உலகம் ஈஸ்வரனின் மாயையால் சூழப்பட்டிருக்கிறது. அதனால் வெளியே இருப்பவற்றை வைத்துக் கொண்டு ஆனந்தம் அடைய முற்படாமல் அவற்றை ஒதுக்கி ஆனந்தம் அடையுங்கள்என்று சொல்வதாகவும் மல்கர்ணி அதற்கு உதாரணமாக இருப்பதாகவும் தாஸ் கனு மகராஜ் உணர்ந்தார். அதன் பின் நீரோடை போல அழகாக உணர்வு பூர்வமாக அந்த உபநிஷத்திற்கு அவர் உரை எழுதினார்.

இப்படி மெய்ஞான வழியையும் தன் வழியில் பாபா காட்டி பலரை ஞான மார்க்கத்தில் உயர்த்தி இருக்கிறார். ஒரு ஞானிக்கு மட்டுமே அல்லவா அது முடியும்!

இனி அடுத்த வாரம் வேறொரு மகாசக்தி மனிதரைப் பார்ப்போம்.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 26.06.20153 comments:


  1. சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. ஞானிகளின் வாழ்க்கையில் நடந்த அரிய பல சம்பவங்களை அறியும்போது உண்மையிலே நாமே அத்தகைய அனுபவத்தை அடைந்ததுபோன்ற மகிழ்வு நமக்கு உண்டாகிறது! நன்றி கணேசன் சார்!

    ReplyDelete