சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 17, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 77


ன் வெண்தாடியை வருடிக் கொண்டே மாராவை அந்த முதியவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். “அவன் நம் குகைக்கோயிலைப் பார்த்த பின்னும் எந்த ஆர்வத்தையும் காட்டாமல் நகர்ந்து போனது உன்னை நிறையவே பாதித்து விட்டது போல் இருக்கிறது மாரா”


மாரா புன்னகை மாறாமல் சொன்னான். “உண்மை தான். எதிரியின் அலட்சியத்தை விட வேறெதுவும் ஒருவனை அதிகம் அவமானப்படுத்தி விட முடியாது....”


அவனால் உண்மையை ஒத்துக் கொள்ள முடிந்தது அவர் அவன் மேல் வைத்திருக்கும் மதிப்பை இன்னும் உயர்த்தியது. வலிமையானவர்களுக்கே தங்கள் பலவீனமான சமயங்களையும் ஒத்துக் கொள்ள முடியும்.


அவர் தொடர்ந்து சொன்னார். “அது தான் மைத்ரேயனை சந்தித்து இரண்டில் ஒன்று இப்போதே பார்த்து விட வேண்டும் என்று உன்னைத் தூண்டுகிறது. அந்த முடிவு உசிதமானதல்ல என்று உனக்கே தெரியும். அதனால் தான் என் அபிப்பிராயத்தையும் கேட்க வந்திருக்கிறாய். உசிதமானது என்று உனக்கு உறுதியாகத் தோன்றி இருந்தால் இன்னேரம் நீ மைத்ரேயனை சந்திக்கப் பாதி தூரம் சென்றிருப்பாய்”


அவன் அவர் சொன்னதை உடனடியாக ஆமோதிக்கவோ மறுக்கவோ செய்யாமல் “ஏன் உசிதமானதல்ல என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்” என்றான்.


”அவமானப்படுத்த்ப்பட்டதாய் எண்ணி கோபத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதுமே நம்மை கட்டுப்பாட்டை இழக்கவே செய்கின்றன மாரா. அது நீ அறியாததல்ல....”


“கோபம் கூட ஒரு மகாசக்தியே. அது எப்பேர்ப்பட்டவனையும் செயல்படத் தூண்டி விடும். கோபத்தில் எல்லோருமே தன்னிலையை இழந்து விடுவதில்லை. கோபத்தை புத்திசாலித்தனமாய் பயன்படுத்தி எதிரிகளை அழித்தவர்கள் இருக்கிறார்கள்.... ஏன் நானே அப்படி தன்னிலை இழக்காமல் இருப்பதால் தான் உடனே செயலில் இறங்கி விடாமல் உங்களைச் சந்திக்க இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்....”


அவருக்கு அது புரிந்தே இருந்தது. ஆனால் மைத்ரேயனைக் குறைவாக மதிப்பிட்டு செயல்படத்துணிவது புத்திசாலித்தனம் அல்ல என்று அவர் நினைத்தவராய் சொன்னார்.


”எதிரியின் பலம், பலவீனம் இரண்டையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் சந்திப்பது புத்திசாலித்தனம் அல்ல. மைத்ரேயன் நம்மைப் பொருத்த வரையில் ஒரு மூடிய புத்தகமாகவே இருக்கிறான். அவனுடைய மந்தபுத்திக்காரத் தோற்றத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. சம்யே மடாலயத்தின் சுற்றுப்புறங்களில் முன்பு சுற்றிக் கொண்டிருந்தவன் ஒருமுறை கூட அதன் உட்புறத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை. அவனைக் காப்பாற்ற முடிந்த ஒருவன் வந்த பிறகு தான் அவன் அந்த ஆளையும் கூட்டிக் கொண்டு சம்யே மடாலயம் நுழைந்திருக்கிறான். நம்முடைய இரவு நேர வழிபாடுகள் ரகசியமாய் அங்கு சில காலமாய் நடந்து வருகிறது. நாம் சற்று அதிக சக்திகளை நம் வசமாக்கிக் கொள்ளும்படியான ஒரு சூழ்நிலை உருவாகும் போது உள்ளே நுழைந்ததும் அல்லாமல் அந்த சக்தி அலைகளை முழுமையாக இல்லா விட்டாலும் கூட ஓரளவு கலைத்தும் விட்டிருக்கிறான். அடுத்தபடியாக போக எத்தனையோ இடம் இருக்க சரியாக நம் குகைக்கோயில் இருக்கும் இடத்திற்கே இப்போது போயும் விட்டிருக்கிறான். அங்கும் நம் சக்தி மையத்தில் அவன் பார்வையின் தாக்கம் எந்த அளவில் இருக்கிறது என்பதை நாம் அங்கு சென்று தான் முழுமையாகக் கணிக்க முடியும்.....”


மாரா தலையசைத்தான். மைத்ரேயன் சில நாட்களுக்கு முன் சம்யே மடாலயம் போனதும், இப்போது அவர்களது குகைக் கோயில் மலைக்குப் போயிருப்பதும் மைத்ரேயனின் தீர்மானமாக இருந்திருக்க முடியாது என்பதை மாரா உணர்ந்தே இருந்தான். அதைத் தீர்மானித்திருப்பது மைத்ரேயனின் பாதுகாவலனாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர் சொல்வது போல் அதன் விளைவுகள் தங்களுக்கு அனுகூலமாய் இல்லை என்பதை மாராவால் மறுக்க முடியவில்லை. சம்யே மடாலய நிகழ்வுகள் லீ க்யாங்கின் சந்தேகத்தைக் கிளப்பி பின் அந்த சந்தேகம் அதிகரித்து அதன் பலனாக அவர்கள் இயக்கம் அவன் கவனத்தை எட்டி விட்டது. கடைசியில் வாங் சாவொ அவர்களுடைய குகைக்கோயிலைத் தேடி வரும் அளவுக்குச் செய்து விட்டது. இப்போது அவன் குகைக்கோயில் இருக்கும் மலைக்குப் போனதன் விளைவுகள் எதாவது இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஒரு யதார்த்த உண்மை எல்லாவற்றையும் விட மேலாக நின்று அவனை அவசரப்படுத்துகிறது.


அதை அவன் வாய் விட்டே சொன்னான். “இப்போது மைத்ரேயன் எங்கிருக்கிறான் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவன் ஒரு வேளை திபெத்தில் இருந்து தப்பித்துச் சென்று விட்டான் என்றால் பரந்த இந்தியாவில் அவனைக் கண்டுபிடிப்பது கஷ்டம். தும்பை விட்டு வாலைப் பிடிக்கப் பாடுபடுவது போல் ஆகி விடக் கூடாது. அவனைப் பின் தொடர்ந்தவனிடம் தப்பி விட்டுச் சென்றவன் அந்த மலைக்கே போய் என் கவனத்திற்கும் வந்திருப்பது நம் அதிர்ஷ்டம் என்றே எனக்குத் தோன்றுகிறது.... அதை உபயோகப்படுத்தாமல் விட்டு விடுவது முட்டாள்தனம் அல்லவா”?


அவன் சொல்வதில் இருக்கும் உண்மையையும் அவரால் அலட்சியப்படுத்த முடியவில்லை. அவரும் குழம்பினார். அசட்டுத் துணிச்சலாகவும் இருந்து விடக்கூடாது, அதே சமயம் அலட்சியமாகவும் போய் விடக்கூடாது என்கிற இந்த எதிர்மறை நிலைகளில் எந்த நிலையை மேற்கொள்வது என்பதை அவராலும் தீர்மானிக்க முடியவில்லை.


கடைசியில் மாரா சொன்னான். “நம் மகாசக்தியிடமே கேட்டு அதன்படியே நடப்பது நல்லது.....”

அவர் திகைப்புடன் கேட்டார். “எப்போது?”

“இப்போதே….”

“எங்கே?”

“இங்கேயே தான்”

முதியவர் திகைத்தார். அவர்கள் தெய்வமான மாராவை வரவழைத்து ஆலோசனை கேட்கும் அபூர்வ ரகசியச் சடங்கு ஒன்று அவர்கள் இயக்கத்தில் இருக்கிறது. அது அவர்களது குகைக் கோயிலிலோ, அவர்கள் கூடும் குறிப்பிட்ட இடங்களிலோ மட்டும் நடக்கும். இயக்கத்தின் தலைவனும், உள்வட்டத்து உறுப்பினர் ஒருவராவதும் அந்த சடங்கிற்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும். உள்வட்ட உறுப்பினர்கள் ஐந்து பேர் வரை கலந்து கொள்வது உண்டு. அந்த முதியவர் இதற்கு முன் இரு முறை தான் இந்த வகை ரகசிய சடங்குகளில் கலந்து கொண்டிருக்கிறார். இரண்டும் முந்தைய தலைவருடன் நடந்தவை. அந்த இரண்டாவது முறையில் தான் இந்த மாராவின் பிறப்பு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.


அந்த அளவு மிக முக்கியமான சடங்கு இது போன்ற ஒரு கலைப்பொருள் அங்காடியில் எப்படி நடக்க முடியும்? புத்தி சுவாதீனம் இல்லாதவன் போல இவன் பேசுகிறானே என்ற திகைப்போடு அவர் சொன்னார். “இது போன்ற இடத்தில் அந்த சடங்கு இது வரை நடந்ததில்லை மாரா”


அவன் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான். “நேற்றைய எல்லையை இன்று தாண்டாமல் இருந்தால் இன்று வாழ்வதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது?”


“எல்லையைத் தாண்டுவது மட்டுமே சாதனை அல்லவே மாரா. வேண்டிய விளைவையும் பெற்றால் மட்டுமே அல்லவா அது சாதனையாகிறது!”


அவன் சின்னச் சிரிப்புடன் கேட்டான். “என்னால் முடியாதென்றா சொல்கிறீர்கள்?”


அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சடங்கு முறைகளைத் திடீரென்று தலைகீழாக மாற்றுவதில் அசௌகரியத்தை உணரும் தலைமுறையைச் சேர்ந்த அவர் சாதுரியமாகச் சொன்னார். “அப்படி சொல்லவில்லை. உன்னால் இந்த சடங்கில்லாமலேயே ஆழ்மன நிலைக்குச் சென்று எது சரியான முடிவு என்று கண்டுபிடிக்க முடியுமே என்று தான் நினைக்கிறேன்”


அவன் சொன்னான். “மைத்ரேயன் சம்பந்தமில்லாத எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் நான் அப்படி முடிவெடுக்க முடியும். ஆனால் அவன் விஷயத்தில் என் விருப்பு வெறுப்புகள் என் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி விடுமோ என்று பயப்படுகிறேன்.”


அவரால் அவனைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் மேல் இருந்த மரியாதையும் கூடியது. “அப்படியானால் இங்கே வரும் போது அதற்கும் தயாராகவே வந்திருக்கிறாயா?”


”ஆமாம் ஏனென்றால் காலம் நம் வசமில்லை. நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு கணமும் இப்போது மிக முக்கியமானது....” மாரா அமைதியாகச் சொல்லி விட்டு வெளியே சென்றான். காரில் இருந்து ஒரு பழங்கால மரப்பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தான்.


அந்த ரகசியச் சடங்கு பல மணி நேரம் நீளக்கூடியது என்பதால் இன்று இரவு வீட்டுக்குச் செல்ல முடியாது என்பது அவருக்குப் புரிந்தது. மெல்ல எழுந்து மனைவிக்குப் போன் செய்து அன்றிரவு வீட்டுக்கு வர முடியாதென்றும் முக்கிய வேலை ஒன்று வந்து விட்டிருக்கிறது என்றும் தெரிவித்து விட்டு கடையின் வெளிக்கதவை பூட்டியே விட்டு, கடையின் பிரதான வெளியறை விளக்குகளை அணைத்து விட்டுத் திரும்ப உள்ளே வந்தார்.



மாரா அந்த உள் அறை மேசையை ஒரு துணியால் துடைத்து விட்டு அந்த மரப்பெட்டியை அந்த மேசை மேல் வைத்தான். ஒரு தங்கச்சாவியை எடுத்து மரப்பெட்டியைத் திறந்து அதன் உள்ளே இருந்து ஒரு கருப்புத்துணி, அவர்கள் வணங்கும் மாராவின் சிறிய சிலை, ஒரு பழங்கால ஓலைச்சுவடி, ஒரு மிகத்தடிமனான நீளமான கயிறு ஆகியவற்றை எடுத்து மேசையில் வைத்தான். அந்தச் சிலை மிகப் புராதனமானது. அவர்கள் குகைக்கோயில் சிலையின் சிறிய நகல் அது. எப்போதும் தலைமைப் பொறுப்பில் இருப்பவனிடமே இருக்கக்கூடியது. அந்தக் கருப்புத் துணி அந்தத் தலைவன் மட்டுமே புனிதச்சடங்குகளின் போது உடுக்கக்கூடியது.....


மாரா மண்டியிட்டு அந்த சிலையை வணங்கினான். முதியவரும் அவனுடன் சேர்ந்து மண்டியிட்டு வணங்கினார்.


பிறகு மாரா அருகில் இருந்த நாற்காலியை இழுத்து மேசைக்கு முன் இருத்தி விட்டு அதில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான். சரியாக இரண்டரை நிமிடங்கள் கழித்துக் கேட்டான். “என்ன இங்கே சோக அலைகள்....”


”இன்று காலை என்னுடைய நீண்ட கால நண்பர் ஒருவர் இங்கு வந்திருந்தார். இங்கு தான் அமர்ந்து கொண்டு, விபத்தில் சமீபத்தில் பறிகொடுத்த தன் மகளின் நினைவுகளை என்னோடு பகிர்ந்து விட்டுப் போனார்.”


அதற்கு அவன் அதிக முக்கியத்துவம் தரவில்லை. கண்களை மெல்லத் திறந்து அவன் கேட்டான். “ஆரம்பிக்கலாமா?”


அவர் தலையசைத்தார். அவன் பின் மெல்ல எழுந்து தன் ஆடைகளைக் களைந்து அந்தக் கருப்புத் துணியை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு மறுபடி அந்த நாற்காலியில் அமர்ந்தான். பின் அவரிடம் சொன்னான். “எனக்கு என்ன உத்தரவு வருகிறதோ அது முழுமையாகத் தெரிய வேண்டும். சின்ன வார்த்தை கூட விடுபட்டு விடக்கூடாது.....”


அவர் சரியென்று தலையசைத்து விட்டுக் கேட்டார். “உன்னைத் திரும்ப வரவழைக்க என்ன குறிச்சொல் சொல்லட்டும்?”


அவன் யோசித்து விட்டுப் புன்னகையுடன் சொன்னான். “அமானுஷ்யன்” அவரும் புன்னகைத்தார்.


(தொடரும்)


என்.கணேசன்

14 comments:

  1. வரதராஜன்December 17, 2015 at 6:37 PM

    பிரமிக்க வைக்கும் கதை மற்றும் பாத்திரங்கள். கதையோடு ஒன்றிப் போய் விட்டேன். நன்றி

    ReplyDelete
  2. Arumai... soga alaigal, santhosa alaigal nu pirichu paaka mudiyuma? konjam sollunga sir.

    ReplyDelete
    Replies
    1. A person with developed psychic powers will have the sensitivity to read the nature of human thought waves. There is no doubt in it.

      Delete
  3. Not only the plot, the dialogues between the characters are also super.

    ReplyDelete
  4. Ganesan sir, how to develop our psychic abilities ? Through Meditation ?

    ReplyDelete
    Replies
    1. Read my book "Aalmanathin arputha sakthigal" book. Entire book is on that subject only.

      Delete
  5. Today s episode is classic! Each n every dialogue has in depth meaning! Hats off brother!

    ReplyDelete
  6. Anna I wish every day is thursday to read new episode of this. Awesome novel....

    ReplyDelete
  7. Going great .. Waiting for next episode !!!

    ReplyDelete
  8. Dear sir, your stories are worth waiting for...selection of words in the dialogues reminds k.balachander sirs movies...thanks for sharing.

    ReplyDelete